பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

பொழிப்புரை :

இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக./n

குறிப்புரை :

இதனுள், `விளக்கு` முதலியனவாகக் கூறப்பட்டவை உவமையாகுபெயர்கள். ஒளிவளர் விளக்கு என்றதில், வளர்தல், முடிவின்றி விளங்குதல். எனவே, `நெய், திரி, அகல் என்பவற்றைக் கொண்டு ஏற்றப்பட்ட செயற்கை விளக்காகாது இயற்கையில் விளங்கும் விளக்கு` என்றதாயிற்று. இதனையே, `நந்தா விளக்கு` எனவும், `தூண்டா விளக்கு` எனவும் கூறுவர். மாணிக்கமும், வயிரமும் போன்ற மணிவிளக்குக்கள் இங்ஙனம் அமைவனவாம். எனினும், `அவற்றினும் மேம்பட்ட விளக்கு` என்பதையே, `உலப்பிலா ஒன்றே` என்பதனாலும், `அவ்வாறாதல் அறிவே உருவாய் நிற்றலாலாம்` என்பதை, உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே என்பதனாலும் குறித்தருளினார்./n உணர்வு இரண்டனுள் முன்னையது உயிரினது அறிவு. சூழ் - எல்லை. இறைவன் உயிர்கள் அனைத்தையும் தனது வியாபகத்துள் அடக்கி நிற்பவன் ஆதலின், அவனை `அவற்றது அறிவின் எல்லையைக் கடந்தவன்` என்றார். `கடவுள்` என்னும் சொற்கும் இதுவே பொருளாதல் அறிக. தெளிவளர் - தூய்மை மிக்க. `பளிங்கின் திரளாகிய அழகிய குன்றே` என உரைக்க. மணி - அழகு. சிவபெருமான் பளிங்குமலைபோல விளங்குதல், திருநீற்று ஒளியினாலாம். அளி - அன்பு. ஆனந்தக் கனி - இன்பமாகிய சாற்றை யுடைய பழம். `இன்பம்` என்பது, தலைமை பற்றி, வரம்பில் இன்பமாகிய பேரின்பத்தையே குறித்தது. முன்னர், `சித்தத்துள் தித்திக்கும் தேன்` என்றது துரியநிலைக்கண் நிகழும் அனுபவத்தை யும், பின்னர், அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனி என்றது, அதீத நிலைக்கண் நிகழும் அனுபவத்தையும் குறித்தனவாம். வெளிவளர் கூத்து - காட்சிப் புலனாய், முடிவின்றி நிகழும் நடனம். `வெளியாகி` என ஆக்கம் வருவிக்க. தெய்வக் கூத்து - அருள் நடனம். அஃதாவது உயிர் கட்கு `பெத்தம்`, `முத்தி` என்னும் இருநிலைகளிலும் ஏற்ற பெற்றியால் அருள்புரியும் நடனம். அவ்விருவகை நடனங்களின் இயல்பையும், தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்/n சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா/n ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோ தம்முத்தி/n நான்ற மலர்ப்பதத்தே நாடு./n (உண்மை விளக்கம் - 36)/n எனவும்,/n மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு,மலம்/n சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால்/n ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்/n தான்எந்தை யார்பரதந் தான்./n (உண்மை விளக்கம் - 37)/n எனவும் போந்த வெண்பாக்களால் முறையே உணர்க./n விளம்புதல் - துதித்தல். விளம்புமா விளம்பு என்பதற்கு, `யான் விளம்புதற்பொருட்டு, நீ விளம்புவாயாக` எனவும், இதனுள் இனி வரும் திருப்பாட்டுக்களிலும், `பணியுமா பணியே, கருதுமா கருதே` முதலியவற்றிற்கும் இவ்வாறேயாகவும் உரைக்க. இவற்றால், இறைவனது காணும் உபகாரத்தின் இன்றியமையாமை விளக்கப் படுகின்றது. `காட்டும் உபகாரம், காணும் உபகாரம்` என்பவை பற்றி இங்குச் சிறிது கூறற்பாற்று./n அறிவிக்க அன்றி அறியா உளங்கள் (சிவஞானபோதம் சூ. 8, அதி. 2) என்றபடி, உயிர்களின் அறிவு, அறிவிக்கும் பொருளின்றி ஒன்றை அறியும் தன்மையைப் பெறாது. ஆகவே, உயிரினது அறிவு, பிறிதோர் ஒளியின்றித் தானே உருவத்தைக் காணமாட்டாத கண்ணின் ஒளிபோன்றதாம். அதனால், கதிரவன் ஒளி கண்ணொளியிற் கலந்து உருவத்தைக் காணச்செய்யும் முறைபோல, இறைவன் உயிரறிவிற் கலந்து பொருள்களை அறியச் செய்வான். இவ்வாறு செய்வதே, `காட்டும் உபகாரம்` எனப்படும்./n இனிக் கதிரவன் ஒளி கலந்தமையால் விளக்கம் பெற்ற பின்னும் கண்ணொளிதானே சென்று உருவத்தைக் காணமாட்டாது அதனோடு ஆன்மாவினது அறிவும் உடன்சென்று அறிந்தால்தான், கண் உருவத்தைக் காணும் அதுபோல, இறைவனது கலப்பால் விளக்கம் பெற்ற பின்பும் உயிரினது அறிவு, தானே சென்று ஒன்றை அறியமாட்டாது அதனோடு இறைவனும் உடன்சென்று அறிந்தால் தான் உயிர், பொருளை அறியும். ஆகவே, உயிர்கள் அங்ஙனம் அறிதற் பொருட்டு அவற்றோடு தானும் உடன்நின்று அறிதலே, `காணும் உபகாரம்` எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்களாலும், உரைகளாலும் இனிது உணரற்பாலன./n

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.

பொழிப்புரை :

என்னுடைய துயரங்களைப் போக்கி என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு, என் உள்ளத்தில் உள்ள அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தை அடியோடு போக்குதலால் வெளிப்பட்டு விளங்கும் தூய்மையான அழகிய விளக்குப் போன்ற ஆன்ம அறிவினுள் ஒளிமயமாகக் காட்சி வழங்கும் மேம்பட்ட சோதியே! பகைவர்களை அழிக்கும் காளையை வாகனமாக உடையவனே! பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! பிரமனும் திருமாலும் உன் உண்மை உருவத்தை அறியமுடியாதபடி எங்கும் பரவும் ஒளியைப் பரவச்செய்து எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கும் உன்னை உன் அடியவனாகிய நான் வணங்கும்படியாக நீ திருவுள்ளம் கொண்டு செயற்படுவாயாக./n

குறிப்புரை :

இருட்பிழம்பு என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தை. சுடர்மணி விளக்கு என்றது, அம்மலத்தின் நீங்கி விளங்கும் ஆன்ம அறிவினை. தூயநற் சோதி எனப்பட்டதும் அதுவே. `ஒளியாய்` என ஆக்கம் வருவிக்க. சோதியுட் சோதி என்றது, வாளா பெயராய் நின்றது. எனவே, `சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்கும்` என்றது, இப்பெயர்ப் பொருளை விரித்தவாறாம். பரஞ்சுடர்ச் - சோதியுட் சோதி யாய்நின்ற சோதியே (தி.5. ப.97. பா.3) என்றும், சோதியாய் எழும் சோதியுட் சோதிய (தி.12. தடுத் - 192) என்றும் வருவனவற்றால், இறைவன், `சோதியுட் சோதி` எனப்படுதல் அறிக. `எறிந்து விளங்கும் சோதி` என முடிக்க. அடல் - வலிமை. பாகன் - நடத்துபவன்./n அறியாமை - அறியாதபடி. `அறியாமை நின்றாயை` என இயையும்./n

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

தற்பரம் பொருளே சசிகண்ட சிகண்டா
சாமகண் டா அண்ட வாணா
நற்பெரும் பொருளாய் உரைகலந் துன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
தந்தபொன் னம்பலத் தரசே
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே.

பொழிப்புரை :

`தத்` என்ற சொல்லால் குறிக்கப்படும் மேம்பட்ட பொருளே! சந்திரனைச் சூடிய முடியினை உடையவனே! சாமவேதம் பாடும் குரல்வளையை உடையவனே! சிதாகாசத்தில் வாழ்கின்ற வனே! அங்கு மேம்பட்ட பரம்பொருளாய் இருப்பவனே! எனக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு உன்னை என் நாவினால் புகழும்படி என் சிறிய உள்ளத்தில் எல்லை காணமுடியாத உன்னைத் தங்கச் செய் துள்ள பொன்னம்பலத்துக் கூத்தாடும் அரசே! ஊழிக் காலங்களாக வும், அந்தக் கால எல்லைக்குள் தோன்றி மறையும் பொருள்களாக வும், அவற்றின் வேறுபட்டவனாகவும் உள்ள உன்னைத் தொண்ட னாகிய நான் தியானிக்குமாறு என்திறத்து நீ செயற் படுவாயாக!/n

குறிப்புரை :

தத் பரம்பொருள் - வேதத்துள், `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள். `தன் பரம்` எனப் பிரித்து, தனக்கு மேலான - உணர்கின்ற பொருட்கு (உயிர்கட்கு) மேலாய பொருள் என உரைத்தலும் உண்டு. சசிகண்டன் - நிலாத் துண்டத்தை யணிந்தவன். இப்பெயர் விளியேற்றது - சீகண்டன் என்பது முதல்குறுகி, விளியேற்றது. சிகண்டம், முடி என்பாரும் உளர். சாமகண்டன் - கருமையான கழுத்தை உடையவன் `சாமவேதம் முழங்கும் குரலை உடையவன்` என்றலும் உண்டு. அண்டம் என்றது, சிதாகாசத்தை. நற்பெரும்பொருள் என்றதில், பொருள், சொற்பொருள். உரைகலந்து - எனது சொல்லிற்சேர்த்து. அற்பன் - சிறியன். கற்பம் - ஊழிக்காலம். உலகு - அக்கால எல்லைக்குள் தோன்றி நின்று ஒடுங்கும் பொருள்கள்./n

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே.

பொழிப்புரை :

பெருமையாய் உள்ள நிலையிலேயே சிறுமையாக வும், பெண்ணாய் இருக்கும் நிலையிலேயே ஆணாகவும் இவ்வாறு உலகியலுக்கு வேறுபட்டவனாய் இருந்து என்னுடைய பிறப்பு இறப்புக்களைப் போக்கிய பெரிய ஞானவடிவினனே! கருமையாய் இருக்கும் நிலையிலேயே வெண்மையாய் இருப்பவனே! கயல்மீன் போன்ற கண்களையுடையவளாய், இமயமலைத் தலைவனான இம வானுடைய மகளான உமாதேவிக்குப் பற்றுக்கோடாக உள்ளவனே! மேம்பட்டனவாகிய நான்கு வேதங்களும் உன்னை உள்ளவாறு அறியமுடியாமல் பேரொலி செய்து புகழும் தலைவனே! அம்பலத்தில் காட்சி வழங்கும் அமுதே!நீ ஒருவனாகவே இருந்து எல்லாப் பொருள் களிலும் அந்தர்யாமியாய் ஊடுருவி நிற்கும் உன்னை அடியவனாகிய யான் பலவாறு என்சொற்களால் புகழுமாறு நீ என்னுள் இருந்து செயற்படுவாயாக.

குறிப்புரை :

பெருமையின் - பெருமையாய் உள்ளநிலையிற்றானே. கருமையின் ஒருமையின் என்பவற்றிற்கும் இவ்வாறு உரைக்க. ஆய் என்றதனை, `சிறுமை` என்றதற்கும் கூட்டுக. வெளி - வெண்மை. களைகண்ணே என்பதில் ணகர ஒற்று விரித்தல். களை கண் - பற்றுக்கோடு `கொழுநன்` என்பதும் இப்பொருட்டு. மறை என்றது பெயராகலின், சாரியை உள்வழித் தன்னுருபு கெட்டது. (தொல். எழுத்து 157) எனவே, `அருமையையுடைய மறை` என்பது பொருளாயிற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

கோலமே மேலை வானவர் கோவே
குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே.

பொழிப்புரை :

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பிய வடிவம் கொள்பவனே! மேம்பட்ட தேவர்களின் தலைவனே! பண்புகளும் வடிவங்களும் இல்லாமையையே பண்பாக உடையவனே! காலத்தை உன் வயத்தில் அடக்கி இருப்பவனே! கங்கையின் தலைவனே! எங்களுக்குத் தலைவனாக அமைந்தவனாய்க் காலனுக்குக் காலனாக இருப்பவனே! மன்மதனை அழித்தவனே! விடத்தையே அமுதம் போல உண்டு, கூத்தாடும் இடத்தைப் பொன்மயமான கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே! உலகமே வடிவானவனே! தன்னுணர்வு இல்லாத அடியேன் பெரிய தவத்தை உடைய உனக்குத் தொண்டனாகி உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

கோலம் - உருவம். குணம் குறி இறந்ததோர் என்பது, தாப்பிசையாய் இதனோடும் இயையும். குணம் குறிகள், ஆண்மை பெண்மைகளை அறிய நிற்பவனவாம். உருவமும், குணமும் உடைய வனை அவையேயாகவும், காலத்தின்கண் ஒற்றித்து நிற்பவனை, `காலம்` எனவும் கூறியவை, பான்மை வழக்கு. கோலமே முதலிய மூன்றாலும் உலகின் வேறுபட்ட தன்மையைக் கூறியவாற்றால், அத்தன்மையானே யாவர்க்கும் முதல்வனாதலைக் குறிக்க, மேலை வானவர் கோவே என்றார். இது, காலமே என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்கற்பாலது. `அமுதாக` எனவும், `கோயிலாக` எனவும் ஆக்கச்சொற்கள் வருவிக்க. ஞாலமே - உலகத்தில் அதுவாய்க்கலந்து நிற்பவனே. `தமியேன் தவம்` என இயையும். நற்றவம், சரியை, கிரியா யோகங்கள். தவத்தாயை - தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை. நணுகுதல் - சார்தல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே.

பொழிப்புரை :

திருநீற்றை அணிந்த செந்நிறமான பவளமலை போல்பவனே! நிலைபெற்ற நெற்றிக்கண்ணை உடைய, நெருப்பின் நிறத்தினனே! பல்வேறுவகைப்பட்டனவாய் வரிசையாக அமைந்த இவ்வுலக இன்பங்களே வடிவானவனே! முத்தி இன்பம் தரும் வெள்ளம் போல்பவனே! மேருமலையை வில்லாக வளைத்த வீரனே! கங்கையை அணிந்த சடையை உடைய, எங்களுடைய வியக்கத்தக்க கூத்து நிகழ்த்துபவனே! அழகிய பொன்னம் பலத்து அரசே! காளையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உயர்த்திய, எம்மை அடக்கி ஆள்பவனே! உன்னை, அடியவனாகிய நான் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

நீறு அணி பவளக்குன்றம், நெற்றிக்கண் உடையதோர் நெருப்பு என்ற இரண்டும் இல்பொருள் உவமைகள். நின்ற - நிலை பெற்ற. `நின்ற நெருப்பு` என இயையும். நெருப்பு என்றது, அஞ் ஞானத்தால் அணுகலாகாமைபற்றி, வேறு அணி புவனபோகம் - வேறு பட்ட நிரையாகிய உலகங்களில் உள்ள நுகர்ச்சிகள். யோகம் என்றது, `முத்தி` என்னும் பொருட்டாய் அந்நிலையில் விளையும் இன்பத்தைக் குறித்தது; எனவே, இவ்விரண்டாலும், இறைவன் பந்தமும், வீடுமாய் நிற்றலைக் குறித்தவாறாதல் அறிக. அற்புதம் - வியப்பு; புதுமை. `அம் பொன்னால் செய்த` என மூன்றாவது விரிக்க; தூயசெம் பொன்னினால் - எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்று அப்பரும் அருளிச்செய்தார். இசைதல் - கூடுதல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

தனதன்நற் றோழா சங்கரா சூல
பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே.

பொழிப்புரை :

குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனே! சூலத்தைக் கையில் ஏந்தியவனே! என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன் மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பக மரத்தின் கொழுந்தினை ஒப்பவனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் தேவர்கள் தலைவனாக உள்ளவனே! உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அடியேன் அநுபவிக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

தனதன் - குபேரன். தாணு - நிலைபெற்றிருப்பவன். கனகநற் றூணே என்றதை, மாசொன்றில்லாப் - பொற்றூண்காண் (தி. 6. ப.8. பா.1) என்றதனோடு வைத்துக் காண்க. கொழுந்து - தளிர்; இஃது அழகு மிக்கதாய் இன்பம் தருவது. கண்கள் - கணுக்களைக் குறித்த சிலேடை. அனகன் - பாவம் இல்லாதவன்; என்றது. `வினைத் தொடக்கு இல்லாதவன்` என்றதாம். குமரன் - முருகன். `குமர விநாயகர்` என்னும் உயர்திணை உம்மைத் தொகை ஒரு சொல் லாய்ப்பின், சனகன் என்பதனோடு, நான்காவதன் தொகைபடத் தொக்கது. சனகன் - தந்தை. அமரர் சேகரன் - தேவர் கூட்டத்திற்கு மகுடம்போல விளங்குபவன். இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, `அம்பலத்து` என்றதனோடு தொகைச் சொல்லாயிற்று. `அமரசேகரன்` எனவும் பாடம் ஓதுப. `நின்` என்பது, திருமுறைகளில், `நுன்` என வருதலை அறிந்துகொள்க. நுகருமா நுகரே என்றது நுன என்றதற்குரிய மோனை நோக்கியாகலின், `உன கழலிணை` என்பது பாடம் ஆகாமை அறிக. இணை என்றமையின். இனிதா என ஒருமையாகக் கூறினார். நுகர்தல் - அநுபவித்தல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் றனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே
அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
ஆலின்கீழ் இருந்தஅம் பலவா
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே

பொழிப்புரை :

மாறி வருகின்ற பிறவிகளில் அகப்படும் சில தெய்வங்களைப் பரம்பொருளாகக் கருதி அவற்றை அடைவதற்குரிய வழிகளிலே உள்ளம் மயங்கும் அடியேனை, மயங்காதவாறு நல்ல நிறத்தை உடைய பொன் போலவும் மின்னல் போலவும் ஒளி நிறைந்த உன் திருவடிகளின் கீழே ஈடுபடச்செய்த ஒப்பில்லாத மணி போல்பவனே! அறத்தின் பல கூறுபாடுகளையும் ஆராய்ந்த சனகர் முதலிய மேம்பட்ட தவத்தோர்கள் தலைவனாய் ஆலமரத்தின்கீழ்க் குருமூர்த்தியாய் அமர்ந்த பொன்னம்பலவனே! வைதிக சமயத்துக்குப் புறம்பான சமணர், புத்தர் என்பவர்களுடைய மயக்க நெறிகளையும் உண்டாக்கிய உன்னை அடியனேன் அடையுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

திறம்பிய - மாறி வருகின்ற. சில என்றது, இழிபு கருதி. `நெறிக்கண்ணே` என்பது `நெறிக்கே` என வந்தது உருபு மயக்கம். `நெறிக்கே நின்று` என்றுஒருசொல் வருவிக்க./n பிறவியுடைய தெய்வங்களைப் பிறவி இல்லாத கடவுளாகக் கருதுதல் மயக்க உணர்வாதலின், திகைக்கின்றேன் என்றார். நிறைந்த என்றதற்கு நிறைந்தாற்போன்ற என உரைக்க. நிகழ்வித்த - வாழச் செய்த. திறம்-வகை. `திறமாக, புறமாக` என ஆக்கம் வருவிக்க. கண்டு - வகுத்து. `அருந்தவர், நால்வர்` என்க. என்னை?/n நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடி/n (தி.8. திருச்சாழல் - 16) என்பது முதலாக அருளிச் செய்யப்படுதலின். அருந்தவர்க்கு அரசு, ஆசான் மூர்த்தி. புறம் - வேதாகமங்கட்குப் புறமாம்படி. சமண் என்றது, குழூஉப் பெயர். பொய்கள் - மயக்க நெறிகள். கண்டாயை - உளவாக்கிய உன்னை. சமண புத்த மதங்களையும் சிவபெருமானே உண்டாக்கினான் என்பதை, துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்கள் சொல்லீர் பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி இணையில்இரும் பூளை இடங்கொண்ட ஈசன் அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே. (தி. 2 ப.36 பா.9)/n என ஞானசம்பந்தர் அருளிச்செய்தமையான் அறிக. `தெய்வக் கொள்கையற்ற சமயங்களையும் உன்னை அடைதற்குப் படிவழியாக அமைத்த நீ, சில தெய்வக்கொள்கையுடைய பிற நெறியில் நின்ற என்னை உன்னை அடையுமாறு செய்தல் கூடாதோ` என்பது கருத்து. இத்திருப்பாட்டு, `இவ்வாசிரியர் முதற்கண் மாயோன் நெறியில் நின்று, பின்னர்ச் சிவநெறியை எய்தினார்` எனக் கூறுவாரது கூற்றிற்குத் துணைசெய்யும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே.

பொழிப்புரை :

தக்கனுடைய மேம்பட்ட மனிதத் தலையும், வேள்வித்தலைவனுடைய வலிய தலையும், தாமரை மலரில் உள்ள நான்கு முகத்தவனாகிய பிரமனுடைய ஐந்தாம் தலையும், ஒரு சேரத் துண்டமாகி உருளுமாறு ஒளி பொருந்திய அழகிய புருவத்தை நெறித்து வெகுண்ட, அழித்தற்றொழில் உடையவனே! சங்குமணிகள் மேலே அணியப்பெற்ற புலித்தோலை ஆடையாக அணிந்து, அம்மணிகளும் தோலாடையும் பலபடியாக அசையுமாறு பொன்னம்பலத்தில் ஆடும் அழகனே! எத்தகைய தவ வலிமை உடையவரும் தம் முயற்சியால் அணுகமுடியாதபடி உள்ள உன்னை உன் அடியவனாகிய நான் தொடர்ந்து வருமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை, தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ/n (தி.8 திருச்சாழல் - 5)/n எனவும்,/n நாமகள் நாசி சிரம்பிர மன்பட (தி.8 திருவுந்தியார் - 13)/n எனவும் திருவாசகத்துள்ளும் போந்தமை காண்க. `எச்ச வன்தலை` எனவும் பாடம் ஓதுப. புருவம் நெறித்தருளிய என்றது, `வெகுண்ட` என்றவாறு. `புலித்தோல் ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும் சொக்கன்` என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன் - அழகன். தொடர்தல் - இடை விடாது பற்றுதல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே.?

பொழிப்புரை :

நரசிம்ம மூர்த்தியாய் இரணியகசிபுவினுடைய மார்பை நகத்தால் பிளந்த திருமாலுக்கு அருள் செய்த வள்ளன்மையை உடையவனே! மயக்கமாகிய அஞ்ஞானத்தை உடைய அசுரர்கள்தம் இருப்பிடமாகக் கொண்ட மூன்று மதில்களும் வெந்து சாம்பலாகுமாறு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இவர்ந்த, காளையை வாகனமாக உடைய வீரனே! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய செருக்கு அழியுமாறு மேம்பட்ட கயிலைமலைக்கீழ் அவனை வருத்திய பொன்னம்பலத்து அரசனே! விடம் தங்கிய நீலகண்டத்தையுடைய எங்கள் அழகனே! உன்னைத் தொண்டனாகிய அடியேன் விரும்புமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

மடங்கல் - சிங்கம்; நரசிங்கம். கனகன் - `இரணிய கசிபு` என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார் - மருட்சியையுடையவரது. திரிபுரத்தசுரர் துர்போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர் - வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன் - மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன் - இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை - பெரிய மலை. `அருட்டிரு வரைக்கீழ்` எனவும் பாடம் ஓதுவர். விடங்கன் - அழகன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.?

பொழிப்புரை :

வேதங்களும், தேவர்கள் குழாமும், பிரமனும், திருமாலோடு உள்ளம் மயங்கித் தம் முயற்சியால் உன்னை அறிய இயலாமல் தாம் உன்னை வழிபடும் முறையாலே பலவாறு வேண்டி யும் உன்னை உள்ளவாறு அறியமாட்டதவராய் இருப்பவும், அறிவற்ற வனாகிய அடியேன் சொல்லிய இந்த அற்பமான சொற்களை, வீரக்கழல்கள் ஒலிக்கும் திருவடிகளை உடைய உன் சிறப்புக்களைச் சிறிதும் அறியாது இகழ்ந்து உரைக்கின்ற கொடிய சொற்களைப் பொறுக்கும் உனக்கு, பொறுத்துக்கொள்ளுதல் இயல்பாக உள்ளது. அத்தகைய, அம்பலத்துள் நிறைந்து காணப்படும் கருணைக்கு இருப்பிடமானவனே! உன்னை உன் தொண்டனாகிய அடியேன் விருப்புற்று நினைக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

ஓர்வரியாய் எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, மாட்டாது என்றார். முறை முறை என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. முறையிட்டும் என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலா யிற்று. `ஓர்ப்பரியாயை` என்பதும் பாடம். அரன் என முன்னிலையிற் படர்க்கை வந்தது. அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையிற் பொறுக்கும் என்றது, `உனது பெருமையைச் சிறிதும் அறியாது இகழும் அறிவிலிகளது இகழுரையைப் பொறுத்துக் கொள்ளுதல் போலப் பொறுத்துக் கொள்கின்ற` என்றபடி. வெறுமை- அறிவின்மை. சிறுமை - இகழ்ச்சி. இவ்விரண்டும் ஆகுபெயர்களாய் அவற்றை உடைய மக்கள்மேலும், சொற்கள்மேலும் நின்றன. `சிறிதும் அறியாது இகழ்ந்துரைக்கின்ற வன் சொற்களைப் பொறுப்பவனுக்குச் சிறிது அறிந்து புகழ்கின்ற புன் சொல்லைப் பொறுத்தல் இயல்பே என்றற்கு அவ்வன்சொற் பொறுத்தலை உவமையாக்கினார். `பொறுக்கும் கருணாநிலயமே` என இயையும். நிலயம் - இருப்பிடம். இறுதித் திருப்பாட்டுக்களில் தம்மைப்பற்றிக் குறிக்கின்ற இவ்வாசிரியர், அவற்றைத் திருக்கடைக்காப்பாக அருளாது, தமது பாடலை இறைவன் ஏற்றருள வேண்டிக் கூறுகின்றார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள் என் மனத்துவைத் தருளே.
 

பொழிப்புரை :

உயர்ந்த துணிகளாலாகிய கொடிகளின் தொகுதி களின்மேல், வேள்வியில் எழுந்த புகைப் படலமும், அதன் மீது பெரிய மாடவீடுகளிலிருந்து வெளிவரும் அகிற்புகைப்படலமும் மிகுதியாகக் காணப்படும் பெரும்பற்றப் புலியூரில், மேம்பட்ட ஒளியை உடைய மணிகள் வரிசையாகப் பதிக்கப்பெற்ற தங்கம் நிறைந்திருக்கும் சிற்றம் பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமானே! அஞ்ஞானமாகிய மயக்கம் நீங்கிய தேவர்களின் முடிகள் தங்கப் பெறும் தாமரைப் பூப்போன்ற உன் சிவந்த திருவடிகளை அடியேனுடைய உள்ளத்தில் நீ வைத்தருளு வாயாக.

குறிப்புரை :

`நெடுமாடத்து` என்பதனை முதலிற் கூட்டுக, மிடை - நெருங்கிய. படலம் - கூட்டம். தூமம் - புகை. பியர், `பியல்` என்பதன் போலி, `பிடர்` என்பது பொருள், இதனைக் கொடிப்படலத்திற்கும் கூட்டுக, ``பியர்`` என்பதை, `பெயர்` எனவும் பாடம் ஓதுவர், ஓங்கி யுள்ள மேல்மாடங்களில் உயர்த்தப்பட்டுள்ள கொடிச் சீலைகளின் கூட்டத்தின்மேல் ஓமத்தின் புகையும், அவ்வோமப் புகைப்படலத்தின் மேல் அகிற்புகைப் படலமும் நிறைந்திருக்கின்ற பெரும்பற்றப் புலியூர்` என்றவாறு. சியர் ஒளி - விளக்கத்தை யுடைய ஒளி, மயர் - மயக்கம், `மயர்வு` என்பதும் பாடம். சேவடிகளையே கூறினாராயினும், திரு வுருவம் முழுவதையும் கூறுதல் கருத்தென்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
திரண்டசிற் றம்பலக் கூத்தா
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்அடிக் கீழதென் உயிரே.

பொழிப்புரை :

நீரை மிகுதியாக முகந்த மேகத்தின் வயிற் றிடத்தைத் தொடும் சிகரத்தை உடைய பொன் மயமான பேரில்லங் களில் எங்கும் பரவி மிக்கவளத்தை நல்கும் நான்மறை விதிப்படி நிகழ்த்தப் பெறும் முத்தீக்களை ஓம்பும் தொழிலால் பொலிவு மிகுந் துள்ள பெரும்பற்றப் புலியூர் ஆகிய செல்வம் மிகுந்த தெய்வம் உகந் தருளியிருக்கும் திருத்தலத்தில் முறைப்படி செய்யும் தெய்வ வழி பாடாகிய செல்வம் நிறைந்து காணப்படும் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! அழகு மிகுந்த சிலம்பின் இனிய ஒலியை வெளிப் படுத்தும் உன் திருவடிகளின் கீழ் அடியேனுடைய ஆன்மா உள்ளது.

குறிப்புரை :

கருவளர் - சூல் மிகுந்த. அகடு - வயிற்றின்கண், `மகுடம்` என்றது, சிகரத்தை, கலந்து - கலக்கப்பட்டு. பெரும் பற்றப் புலியூராகிய `தெய்வப்பதி` எனவும், `தெய்வப் பதிச் சிற்றம்பலம்` எனவும் இயையும். திரு - அழகு, விதி நிதியம் - முறைப்படி செய்யும் வழி பாடாகிய செல்வம்.
உரு - அழகு, `உருவளர் சிலம்பு` என்க. அன்றி, `உருவளர் அடி` எனலுமாம், நான்மறைத் தொழில்சால்` எனவும், தெய்வப்பதி வதி` எனவும் பாடம் ஓதுப.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே.
 

பொழிப்புரை :

கரைக்குமேலே அஞ்சிப்பாய்கின்ற வாளைகள் கீழ் மேலாகப் பிறழ்கின்ற மடுக்களில் வளர்ந்த தாமரைகளை வயல்களில் விளையும் கரும்போடு வயிறார உண்ட எருமைகளை உடைய, பிரம்பிரி என்ற செந்நெற் பயிர்கள் வளரும் வயல்களில் செங்கழுநீர் களையாகக் காணப்படும் மருத நிலத்தால் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலே தலையின் கண் உயர்ந்த முடியினை அணிந்த தேவர்கள் தங்களுக்கு உரிய முறைப்படி வந்து திருவடிகளை வணங்குகின்ற, சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! எப்பொழுதும் முனிவர்கள் விருப்புற்றுத் தியானம் செய்யும் உன் அழகிய கணைக்கால்களை விருப்புற்று நினைத்து என் உள்ளம் அவற்றிலேயே தங்கிவிட்டது.

குறிப்புரை :

வரம்பு இரி - கரைக்குமேல் பாய்கின்ற, மிளிர் - பிறழ் கின்ற. கரும்பு, பின்னர்க் கூறப்படுகின்ற செந்நெல் வயலில் உள்ளது. மாந்திடும் - உண்கின்ற. மேதி - எருமை, பிரம்பு இரி - பிரப்பம்புதரில் செல்கின்ற. `செந்நெற் கழனியையுடைய பழனம்` என்க. பழனம் - மருத நிலம். `சிரம் புரைமுடி - தலையின்கண் உயர்ந்த முடியை அணிந்த, முறையால் - தமக்கேற்ற வரிசையில். `மாந்து மேதிகள் சேர்` `பரம்பிரி` `கழனிசெங்கழுநீர்`, `சிரம்புணர்முடி` என்பனவும் பாடங்கள். பிரம்பிரி-செந்நெல் விசேடம் என்பதும் ஆம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

பொழிப்புரை :

தேர்கள் மிகுதியாக உலவும் விழாக்காலங்களில் வேய்ங்குழல் ஒலியும், தெருவில் கூத்துக்கள் நிகழ்த்துதலால் ஏற்பட்ட ஒலியும், அடியார்கள் இறைவனைப் புகழ்கின்ற ஒலியும், வேதங்களை ஓதுதலால் வெளிப்படும் பெரிய ஒலியும் பரவிக்கடல் ஒலியைப் போலப் பொலிவு பெறுகின்ற பெரும்பற்றப் புலியூரில், சிறப்புடைய தாளத்திற்கு ஏற்ப மேம்பட்ட கூத்தின் இயற்கையிலே சிறந்து விளங்கிய, சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! கச்சணிந்த முலை யினை உடைய உமாதேவி மெதுவாக அழுத்திப் பிடிக்கும் திரட்சியை உடைய மேம்பட்ட அழகினை உடைய துடைகளில் அடியேனுடைய உள்ளம் பொருந்தியுள்ளது.

குறிப்புரை :

`தெருவில்` என்பதனை முதலிற் கொள்க. ஓத்து - வேதம். `கடல் ஒலி போல` என உவம உருபு விரிக்க, `பெரும்பற்றப் புலியூரின்கண் திகழும்` என்க. `சீர்` என்பது தாள அறுதி. இலயம் - தாளம். `இயல்பின்`` என்றதில் இன், சாரியை. `இயல்பினோடு` என மூன்றாவது விரிக்க. மா - சிறந்த. மணிக் குறங்கு - அழகிய துடை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்
கிளங்கமு குளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற்சிற் றம்பலக் கூத்தா
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே.
 

பொழிப்புரை :

தழைத்து நிறைந்த வாழைகள், நிழல் ஒழுங்கினை வழங்குகின்ற உயரிய தென்னைகள், இளைய பாக்கு மரங்கள், மனத்தைக் கவரவல்ல இனிய, பழங்களை உடைய நீண்ட பலா மரங்கள், மாமரங்கள் ஆகியவற்றை உடைய வானளாவிய சோலை களால் சூழப்பட்ட கிடங்கினைத் தன்னைச் சூழுப்பெற்ற கொண்டுள்ள மேடைகளை உடைய பழைய மதில்களால் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலே அணையால் தடுக்கப்பட்ட நீர்த்தொகுதியிலே, தரளம், நித்திலம் என்ற முத்துவகைகள் தோன்ற, செம்பொன் மயமான சிற்றம் பலத்திலே கூத்து நிகழ்த்துபவனே! இருப்பு உறுப்பிலே புலித்தோல் ஆடை நெகிழாதபடி அதற்குக் காப்பாக அணிந்துள்ள கச்சு நூலிலே அடியேனுடைய விருப்பம் பொருந்திவிட்டது.

குறிப்புரை :

`நிறைந்த, தழைத்த வாழை` என்க. `வாழை தெங்கு, கமுகு, பலா, மா என்பவற்றின் மேல் பிறை தவழ் பொழில்` என்றவாறு, இவற்றோடு இயைபில்லாத துகிற்கொடியை இடை வைத்தார்; பிறை தவழப் பெறுதலாகிய ஒப்புமை பற்றி. எனவே, அதனை முதலிற் கூட்டி, `நிழற்கொடியோடு` என வேறுவைத்துரைக்க, `பலா என்பது ஈறு குறுகி நின்றது; செய்யுளாதலின் உகரம் பெறாது வந்தது. கிடங் கினை (ச்சூழ) உடைய இடை மதில்` என்க. பதணம்- மதில் உறுப்பு, `தரளம், நித்திலம்` என்பன முத்தின் வகைகள். `அவற்றை உடைய செம்பொன்னால் இயன்ற சிற்றம்பலம்` என்றவாறு, இத்திருப் பாட்டினின்றும் சிலர், `கூத்த` என்றே பாடம் ஓதுவர். நிதம்பம் - அரை. பொறை அணி - உடைக்குக் காப்பாக அணியப்பட்ட கச்சு நூல்` என்க. `பொறையாக` என ஆக்கம் வருவிக்க. புகல் - விருப்பம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அதுமதி இதுஎன் றலந்தலை நூல்கற்
றழைப்பொழிந் தருமறை யறிந்து
பிதுமதி வழிநின் றொழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச்சிற் றம்பலக் கூத்தா
மதுமதி வெள்ளத் திருவயிற் றுந்தி
வளைப்புண்டென் உளம்மகிழ்ந் ததுவே.

பொழிப்புரை :

`அதுதான் ஞானம், இதுதான் ஞானம்` என ஒரு வழிப்படாது வருந்தி மனத்தை அலையச்செய்கின்ற பலநூல்களையும் கற்றுப் பலவாறு பிறரைக் கூப்பிட்டுத் தம் கொள்கைகளைப் பேசும் செயலை விடுத்து, அரிய வேதங்களைப் பொருள் தெரிந்து ஓதி எல்லா உயிர்களுக்கும் தந்தையாகிய நீ வகுத்த சிவஞானத்தின் வழியே ஒழுகி வேள்வி செய்தலை நீக்காத சான்றோர் வாழும் பெரும் பற்றப் புலியூரிலே, தீயபுத்தியை உடைய சமணரும் பௌத்தரும் வந்து சேராத செல்வத்தை உடைய சிற்றம்பலக் கூத்தனே! எல்லோரும் மதிக்கும் தேன்வெள்ளத்தைப் போன்று இனிய உன் அழகிய வயிற் றின் கொப்பூழின் அழகினால் வளைக்கப்பட்டு என் மனம் மகிழ்ச்சி யுறுகின்றது.

குறிப்புரை :

மதி - ஞானம். இது, தாப்பிசையாய் நின்றது. `அது ஞானம்; இது ஞானம் என்று பரந்து திரிதற்கு ஏதுவாகிய சமய நூல்கள்` என்க. ``கற்று`` என்றது, `அழைப்பு` என்பதனோடே முடியும். அழைப்பு - கூப்பீடு; பிதற்றொலி. பிது - `பித்ரு` என்பதன் சிதைவு, `எவ்வுயிர்க்கும் அப்பனாகிய உனது ஞானத்தின் (சிவஞானத்தின்) வழி நின்று என்றபடி` செது - தீமை. ``செதுமொழி சீத்த செவி`` (கலி-68) என வந்தமை காண்க. `சேராச் சிற்றம்பலம்` என இயையும், `மது வெள்ளம் போலும் திருவயிறு` என்க. வயிற்றை இவ்வாறு உவமித்தார், கொப்பூழ், `அவ்வெள்ளத்தில் தோன்றும் சுழிபோல்வது` என்பது விளங்குதற்கு. `நீர் வெள்ளம்` என்னாது, `தேன் வெள்ளம்` என்றது, இனிமை புலப்படுத்தற்கு. `மதி வெள்ளம்`. வினைத் தொகை. வளைப்புண்டு - கவரப்பட்டு. உள் - உள்ளம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு வுதரத் தார்திசை யடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா!
உருமரு வுதரத் தனிவடந் தொடர்ந்து
கிடந்ததென் உணர்வுணர்ந் துணர்ந்தே.
 

பொழிப்புரை :

மலையைப் போன்ற புயங்களின் மீது புலித் தோலினையும், திருநீற்றை அணிந்த பூணூல் தவழும் மார்பினையும், பெரிய மலைகள் போன்ற உறுதியான தோள்களுடன் காணும் பேறு பெற்றவராகிய பெரும்பற்றப் புலியூரில் வாழும் செல்வம் பொருந்திய தகுதியை உடைய தில்லை மூவாயிரவர் நாற்றிசையும் சுற்றிலும் நெருங்கிநின்று காணக் கூத்து நிகழ்த்துகின்ற சிற்றம்பலக் கூத்தனே! அழகு பொருந்திய உன் வயிறுவரை தொங்கும் உருத்திராக்க மாலையில் என் அறிவு அதன் அழகை உணர்ந்து தொடர்ந்து தங்கிவிட்டது.

குறிப்புரை :

`பொரு புயம், வரைப் புயம்` எனத் தனித்தனி இயைக்க. புயமாவது வீரவளை யணியும் இடமாகலின், புயத்தின் மீமிசையாவது சுவல் அல்லது பிடர். புலித்தோல், உடையாதலேயன்றி உத்தரியமும் ஆம் என்க. அகலம் - மார்பு. ``உடன்`` என்றது, எண்ணொடுவின் பொருட்டு. `புலித்தோலும், அகலமும், தோளும் காணப்பெற்றவர் வாழும் பெரும்பற்றப் புலியூர்` என்க. இவற்றைக் காணும் தமது அவாவை, ``காணப்பெற்றார்`` எனப் பிறர்மேல் வைத்து விளக்கினார்.
எனவே, இதனுள் இறுதிக்கண் தாழ்வடத்தையே கூறினா ரெனினும், இவை, அனைத்தையும் தொகுத்துக் கூறுதல் கருத்தாகக் கொள்க. இவை, வருகின்ற திருப்பாட்டிற்கும் ஒக்கும். பிறர் என்றது, சிறப்பாகத் தில்லைவாழ் அந்தணர்களை, `திருமருவு தரத்தார்` என்பது, திருமருவுதரத்தார்` என வகையுளியாயிற்று. திரு - அருள். தரத்தார் - மேன்மையுடையவர். ``திசை அடைப்ப`` என்றது, `சுற்றிலும் நெருங்கி நின்று காண` என்றவாறு, ``திசைமிடைப்ப`` என்றதும் பாடம், உரு - அழகு. உதரம் - வயிறு. தனிவடம் - ஒப்பற்ற தாழ்வடம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

கணிஎரி விசிறுகரம் துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண் டுன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்தென் னமுதே
சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்றென் அறிவே.

பொழிப்புரை :

சிறப்பாக எண்ணத்தக்க நெருப்பு, சுழலுகின்ற கை, உடுக்கை, விடத்தை வாயிலே உடைய பாம்பாகிய கங்கணம், அபயம் அளிக்கின்ற சிவந்த கை என்ற இவற்றைப் பிறவிப்பிணி கெடத் தரிசித்து, உன்னுடைய பெரிய கூத்தினைக் காண்டலை நீக்காதவர் வாழும் பெரும்பற்றப் புலியூரில் நீலமணியின் செறிந்த நிறம் பொருந்திய கழுத்தினை உடைய, என் தெளிந்த அமுதம் போல் பவனே! சிறப்புப் பொருந்திய சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய, உன் பவளம் போன்ற சிவந்த வாயின் ஒளியினுள் அடியேனுடைய அறிவு அடங்கி விட்டது.

குறிப்புரை :

`பிணிகெட`` என்பதை முதலிற் கொள்க. அன்றி, இதனை நின்றாங்கு நிறுத்தி, ``இவை`` என்பதனை, ``அபயம் என்பதன்பின் கூட்டினும் ஆம். கணி - எண்ணத்தக்க. விசிறு கரம் - வீசிய கை. துடி - உடுக்கை. விடவாய், `விடத்தை யுடைய வாயை உடையது` எனப் பாம்பிற்குக் காரணப்பெயர். திணி - செறிந்த. ``மணி`` என்றது, இங்கு அதன் நிறத்தை; எனவே, இங்கு, `மணி நீலம்` என்றே இயைக்க, `திணி நீலம், மணி நீலம்` எனத் தனித்தனி சென்று இயையும். `தெள்ளமுதே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
மலர்முகம் கலந்ததென் கருத்தே.
 

பொழிப்புரை :

திருமகளோடுகூடிய நீண்டவனாகிய திருமால், இந்திரன்,பிரமன் ஏனைய தேவர்கள் யாவரும் உன்னைத் தரிசிக்க வரும் போது உள் வாயில் காவலில் உள்ள தடையால் நெருக்கப் படவே, அவர்களுடைய பெரிய கிரீடங்கள் ஒன்றோடொன்று மோது வதால் பெயர்ந்து கீழே விழும் இரத்தினங்கள் வாயிலின் முன்னிடத் தில் ஒளிவீசும் பெரும்பற்றப் புலியூரின் சிற்றம்பலத்தில், போரிலே பெரிய மேருமலையாகிய வில்லாலே திரிபுரத்தையும் தீக்கு இரை யாக்கிய கூத்தனே! பெரிய நீண்ட குழைகளை அணிந்த காதுகளை உடைய களங்க மற்ற செந்தாமரை மலர் போன்ற உன் திருமுகம் அடி யேனுடைய எண்ணத்தில் கலந்துவிட்டது.

குறிப்புரை :

கடை - வாயில். காவல் - தடை; தடுக்கப்படும் இடம். மோதி - மோதுதலால். `முன்றிலின்கண் பிறங்கிய` என்க, பெரும் பற்றப் புலியூர்க் கூத்தா` என இயைக்க.
இது, வருகின்ற திருப்பாட்டிற்கும் ஒக்கும், `செருவில், மேரு வில்` எனத் தனித்தனி இயையும். `மேருவாகிய வில்லினால் முப்புரத் தின்கண் தீயை விரித்த` என்க.
விரித்த - பரவச்செய்த. கருவடி குழை - பெரிய நீண்ட குழை. `குழைக் காதினையுடைய, அமலமாகிய முகம்` என்க. அமலம் - தூய்மை; ஒளி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம்,
பெருந்தடங் கண்கள் மூன் றுடையுன்
பேர்கள்ஆ யிரம்நூ றாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள்கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச்சிற் றம்பலக் கூத்தா
நீர்கொள் செஞ் சடைவாழ் புதுமதி மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.
 

பொழிப்புரை :

அழகு பொருந்திய கற்பகத்தை ஒத்தவனாய் அழகிய, வில் போன்ற புருவங்களும் பெரிய நீண்ட கண்கள் மூன்றும் உடைய உன்னுடைய ஆயிரம் நூறாயிரமாகிய பெயர்களை அடைவு கேடாகச் சொல்லும் இயல்பினை உடைய சான்றோர்கள் வாழும் பெரும்பற்றப் புலியூரில் சிறப்புப் பொருந்திய கொக்கிறகம் பூவும் கொன்றை மலரும் பொருந்திய தலையினை உடையையாய்ச் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! கங்கை பொருந்திய உன் சிவந்த சடையில் தங்கி யிருக்கும் பிறைச் சந்திரனும் ஊமத்தம் பூவும் என் உள்ளத்தில் நிறைந்து உலவுகின்றன.

குறிப்புரை :

ஏர் - அழகு, ``கற்பகம் ஒத்து`` என்றது எண்ணின் கண் வந்த எச்சமாகலின், `கற்பகம் ஒத்தவனும், இருபுருவமும், மூன்று கண்களும் உடையவனும் ஆகிய உனது` என உரைக்க.
சிலைப் புருவம் - வில்போலும் புருவம், `ஆயிரம்` நூறாயிரம் என்றது, அளவின்மை குறித்தவாறு. ``பிதற்றும்`` என்றது, `அன்பு மீதூர்ந்து சொல்லும்` என்றபடி, ``பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி`` (தி. 6. ப.6. பா. 4) ``பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப் பாய் எம் பெருமானே`` (தி.8 திருவாசகம் - எண்ணப்பதிகம்-4) என்றாற் போல வருவன பலவுங் காண்க.
``நீர்கொள் சடை`` என்றது, உடம் பொடு புணர்த்தலாகலின், நீரும் தனித்தெண்ணப்படும். ``சடை`` என்ற தனையும் செவ்வெண்ணாக்கி, `அதன்கண்வாழ் புதுமதி` என உரைக்க. மத்தம் - ஊமத்த மலர். நிகழ்ந்த - உலவலாயின.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

காமனக் காலன் தக்கன்மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்தா
பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.
 

பொழிப்புரை :

மன்மதன், இயமன், தக்கன், வேள்வித்தலைவன் இவர்கள் அழியுமாறு கடைக்கண் பார்வையாலே செயற் படுத்திய நின்னை அல்லாத பிற தெய்வங்களைத் தொழும் பேய் போன்ற மனம் பெற்றிலாத மேம்பட்ட தொண்டர்களின் தொண்டன் அடியேன். பெரும்பற்றப் புலியூராகிய பாதுகாவலைச் செய்யும் மேம்பட்ட தில்லைப் பகுதியை உனக்கு உகந்தருளியிருக்கும் எல்லையாகக் கொண்டு ஆளுகின்ற செல்வம் மிக்க சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்து பவனே! உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் உள்ள பழைய சிவகணத்தார்கள் அடியேனுடைய அற்பமான சொற்களின் பொருளைப் பொறுமையோடு ஏற்பார்கள்.

குறிப்புரை :

`மிகை செய்த` என்னும் பொருட்டாகிய `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. ``கடைக்கணித்தவன்`` என்றது, இடவழுவமைதி, `கடைக்கணித்தவன் தொண்டர்`` என இயையும். அல்லா - நன்றல்லாத, பிறிந்த - நீங்கிய; என்றது, `நன்மனம் பெற்ற` என்றவாறு. இதற்குப் பிறவாறும் உரைப்ப. `சிவப்பெருந் தொண்டர்` எனவும் பாடம் ஓதுப, ``தொண்டனேன்`` என்பதன்பின், ``ஆகலின்`` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை` `பொறுப்பர்` என்பதனோடு முடிக்க. புலியூராகிய தில்லை` என்க. சேமம் - காவல். வட்டம் - எல்லை, கொண்டு - நினதாகக் கொண்டு. ஆண்ட - அதனை ஆளுதல் செய்த, `பூவடி, மலரடி` எனத் தனித்தனி இயைக்க. பூ - பொலிவு. புராணம் - பழமை. பூதங்கள் என்பது சிவகணங்கள் என்னும் பொருட்டாய் உயர்திணையாய் நின்றது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

உறவா கியயோ கமும்போ கமுமாய்
உயிராளீ என்னும்என் பொன்ஒருநாள்
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என் னும் மணி நீரருவி
மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

திருமகள் போன்ற பேரழகுடைய என்மகள், விளங்கும் தில்லையிலே சிற்றம்பலத்தில் அற்புதக் கூத்தாடும் எம்பெருமானைக் குறித்து, ``உயிர்கள் சென்று சேரத்தக்க வீடுபேறாகவும் அவ்வீடுபேற்று இன்பமாகவும் இருந்து உயிர்களை ஆட்கொள்பவனே! பண்டொரு காலத்து உயிர்ப்பண்பினால் சிறப்புப் பெறாதவராகிய அசுரர்களின் மதில்களை அழித்த வெற்றி பொருந்திய வில்லைக் கையில் ஏந்தி, பன்றி ஒன்றன் பின்னே அதனைத் துரத்திச் சென்று நின்ற வீரனே! பளிங்குமணி போன்ற தெளிந்த நீரை உடைய அருவிகள் வீழும் பெரிய மகேந்திர மலைமீது விரும்பித் தங்கியிருக்கும் குறிஞ்சி நிலத் தலைவனே! குணமாகிய பொருள்கள் செறிந்து காணப்படும் மலை போல்பவனே!`` என்று பலவாறு அவனுடைய பண்புச் செயல்களைக் குறிப்பிட்டு அவனை அழைத்து வாய்விட்டுப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

உறவு - அடையப்படும் பொருள், ``யோகம்`` என்றது, முத்தியைக் குறித்தது. உயிர் ஆளீ - உயிர்களை ஆள்பவனே. என்னும் - என்று பிதற்றுவாள், ``பொன்`` என்றது, காதற்சொல். `ஒருநாள் சென்று` என இயையும். சிறவாதவர் - இழிந்தோர்; சிவநெறியைக் கடைப்பிடியாது கைவிட்டவர். `தேவராலும் அழிக்க இயலாத வலிய திரிபுரத்தை அழிக்க வில்லேந்திய பெருமான், சிறிய பன்றிப்பின் வில் லேந்திச் சென்றான்` என, அவனது எளிவந்த தன்மையை வியந்து உருகியவாறு. சிவபிரான் அருச்சுனன் பொருட்டு வேடனாய்ப் பன்றிப் பின் சென்ற வரலாறு வெளிப்படை. மகேந்திர மாமலை, திரு வாசகத்துட் கூறப்பட்டது. `பேரரசாகிய மலை` எனக் காரணப் பெய ராக்கி, `கயிலாய மலை` என இங்கு உரைத்தலும் ஆம். ``மகேந்திரம்`` என்றதை, `மயேந்திரம்` என்றே ஓதுவாரும் உளர். குறவன் - மலை வாணன். குலாத்தில்லை - விளக்கத்தையுடைய தில்லை. தி.8 திருவாசகத்துட் குலாப்பத்தைக் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என் னும் செல்வர்மூவாயிரர்
செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

தீவினையேன் பெற்றமகள் அழுகையை அடக்கிக் கொண்டு தேம்பி அஞ்சுதலோடு, ``சுடுகாட்டிலே கூத்தாடும் பல் பூதங் களும் உருமாறிச் சூழ்ந்து வர விரைந்து ஓடும் பன்றியின் பின் நீண்ட பகற் பொழுதில் காட்டில் பின் தொடர்ந்த வேடனே! மகேந்திர மலைத் தலைவனே! எல்லா உலகங்களும் அழிந்த பின்னும் தான் ஒருவனே எஞ்சிநிற்கும் பெருமையனே! உன் திருவடிகளை ஏத்தும் செல்வத்தால் சிறந்த ஞானப்பிரகாசம் உடைய மூவாயிர அந்தணர்கள் சிவந்த கைகளால் தொழும் கூத்தனே! குணக்குன்றே!`` என்று விளங்குகின்ற தில்லை அம்பலக் கூத்தனைப் பலவாறாக விளிக்கின்றாள்.

குறிப்புரை :

காடுஆடு பல்கணம் - காட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் கூட்டங்கள். கேழற் கடும் பின் - பன்றியினது கடிதாகிய பின்னிடத்தில். கேழல் கடிதாக ஓடுதலின், அதன் பின்னிடமும் கடிதாயிற்று. `கடுவிருள் நெடும்பகல்` என்பதும் பாடம். கான் - காடு. விம்முதலும், வெருவுதலும் பித்தினால் வருவன. சேடன் - பெருமை யுடையவன். `செல்வராகிய செழுஞ்சோதி அந்தணர்கள்` என்க. சோதி, இங்கு, வேள்வித் தீ. அதனை நன்கு ஓம்புதலின், ``செழுஞ் சோதி`` என்றார் அந்தணர்களை, ``செல்வர்`` என்றவர், `அவர்க்குச் செல்வமாயது இது` என்றற்கு. `செழுஞ்சோதி` என்றார். `செங்கையால்` என உருபு விரிக்க. கோடு. `கோடுதல்` என, முதனிலைத் தொழிற் பெயர்; `குனிப்பு; நடனம்` என்பது பொருள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கானே வருமுரண் ஏனம் எய்த
களி ஆர் புளினநற் காளாய் என்னும்
வானே தடவு நெடுங் குடுமி
மகேந்திர மாமலைமேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார்
திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி `காட்டில் உலவிய வலிய பன்றி மீது அம்பைச் செலுத்திய செருக்குமிகுந்த வேடர் குலத்துச் சிறந்த காளைப்பருவத்தனே! வானத்தை அளவிய நீண்ட சிகரத்தை உடைய பெரிய மகேந்திரமலைமீது இருந்த தேன் போன்ற இனியனே! தெய்வத்தன்மை பொருந்திய வேதத்தை ஓதும் செல்வத்தை உடைய தில்லை மூவாயிரவரின் தெய்வத்தலைவனே! குணக்குன்றே!` என்று பலவாறு அழைக்கிறாள்.

குறிப்புரை :

``கானே, வானே`` என்ற பிரிநிலை ஏகாரங்கள் சிறப் புணர்த்திநின்றன. முரண் ஏனம் - வலிய பன்றி. களி ஆர் - களிப்புப் பொருந்திய. அருச்சுனனோடு ஆடல் தொடங்க நின்றமை குறித்துக் காளாய் என்று கூறினார். புளினக்காளை - வேடர்குல இளைஞன். ``வாய்மொழி`` என்றது, வேதத்தை. திரு - திருவருள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
விசயற் கருள்செய்த வேந்தே என்னும்
மறியேறு சாரல் மகேந்திரமா
மலைமேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி`செருக்கு மிகுந்த பன்றியின் பின்னே, முன் ஒரு நாள் சென்று அருச்சுனனுக்கு அருள் செய்த வேந்தனே! மான்கள் உலாவும் சரிவுகளை உடைய பெரிய மகேந்திர மலைமேல் வீற்றிருந்த அமுதமே! அடியார்கள் தன்னை அடையத் தானே வழியாகவும் இருக்கின்றவனே! உன்னை அடைவதற்கு உன்னையே ஆறாகக் கருதி வாழ்கின்ற அடியார்கள் பேறாக நினைக்கின்ற நீதியோடு கூடிய உபநிடதங்களில் கூறப்பட்ட நிலை யான இலக்காக இருப்பவனே! நற்குணமலையே!` என்று பலவாறாகக் கூப்பிடுகின்றாள்.

குறிப்புரை :

வெறி - செருக்கு. மறி ஏறு - மான்கன்றுகள் பொருந் திய. நெறி - வீடுபெறும் வகை, சாதனம். பின்னர் வரும் ``குறி`` என்பது, இதனால் எய்தும் பயன். ``நினைக்கின்ற. `நீதி` என்னும் இரண்டும், ஒரு சொல் தன்மைப்பட்ட ``வேதாந்த நிலைக் குறி`` என்ப தனை விசேடித்தன. நீதி - எய்தும் உரிமை. வேதாந்த நிலைக்குறி - வேதத்தின் முடிநிலையாகிய குறிக்கோள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

செழுந் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாடவாடும்
எனைநீ நலிவதென் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
கரசுக் கரசே அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி, `செழிப்பான தென்றல் காற்று, அன்றிலின் தழுதழுத்த ஒலி, ஒளிவீசும் இந்த மதியம், இருள், அலைகளை உடைய கடல், இனிய இசையை இசைக்கும் வேய்ங்குழலின் ஓசை, காளையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலி இவைகள் தம்முழு ஆற்றலோடும் புறப்பட்டு என்மீது பகை கொண்டு துன்புறுத்தவும் அதனால் வாடிக் கொண்டிருக்கும் அடி யேனை நீயும் வருத்துவது ஏன்? அழிவில்லாத மகேந்திர மலையில் தங்கி வானத்தில் உலவும் பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு அருள் செய்த தலைவனே! தேவர்களின் ஒப்பற்ற கொழுந்து போன்ற இனியவனே! குணக்குன்றே!` என்று பலவாறாக அழைத்து அரற்று கின்றாள்.

குறிப்புரை :

அன்றில், துணை பிரியாப் பறவை. திங்களைக் காட்டி, ``இத்திங்கள்`` என்றாள். திரை வீரை - அலைகளையுடைய கடல். சே - எருது. தென்றல் முதலியவை காம நோய் கொண்டாரை வருத்துவன, பகையாடுதல் - பகைகொண்டு நிற்றல். அழுந்தா மகேந்திரம் - அழியாத மகேந்திர மலை. ``மகேந்திரத்து`` என்றதனை, பின் வரும் தொடர் ஒரு பெயர்த் தன்மைப்பட்டு நின்று முடிக்கும், ``புட்கரசு` என்றது, கலுழனை; அதற்கு அரசன் திருமால். ``கொழுந்து`` என்றது `தலையாயவன்` என்னும் பொருட்டு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வண்டார் குழல்உமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலை பல்ப சுங்கண்
கொண்டாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக்கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு `வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய உமாதேவியாரின் முன்பு, மகேந்திரமலைச்சரிவில் பன்றியின் பின்னே, பார்க்கிறவர்கள் கவலைப்படும்படி வில்லை ஏந்தி வேடர் களும், விரைந்து செல்லும் வேட்டைநாய்களும் உடன்வரப் பன்றி இருந்த பக்கத்தை வளைத்துக் கொண்டு அம்பு எய்தவனே! முற்பட்ட வனாகிய பிரமன், தக்கன், அவன் இயற்றிய வேள்வித் தலைவன் இவர் களுடைய தலைகளையும், ஆதித்தியர் பன்னிருவரில் பூஷன் என்பவன் பற்களையும், பகன் என்பவன் கண்களையும் நீக்கினவனே! குணக்குன்றே!` என்று விளித்துப்புலம்புகிறாள்.

குறிப்புரை :

தேவியும் வேடிச்சி கோலங்கொண்டு உடன் சென்றமை யின். `அவள் முன்னே` என்றார்.
``மகேந்திரம்`` என்பது இங்கு கயிலாய மலையைக் குறித்துநிற்றல் நோக்கத்தக்கது, மேலவற்றோடு ஒப்ப வருதற்பொருட்டு, இங்கு, கயிலையை மகேந்திரம் எனப் பொது வகையாற் கூறிப் போந்தார் எனினுமாம்.
``கண்டார்`` என்றது அன்பரை; என்னை, இறைவனது எளிவந்த செயலை நோக்கிக் கவலுதற்குரியார் அவரே யாகலின், ``கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார்கவலாரே?`` (தி.7 ப.41 பா.1) என்பது முதலிய திருமொழிகளைக் காண்க. கவல - வருந்த.
வில்லாடுதல் - விற்றொழில் புரிதல், வேடர் நாய் - வேட்டைக்கு உரியது. கடி நாய் - விரைவுடைய நாய். கை வளைந்தாய் - பல பக்கங்களிலும் சுற்றினாய். `வில்லாடிக் கைவளைந் தாய்` என்று இயைத்து. `விற் றொழில் செய்தலால் கைகள் செயற்படப் பெற்றவனே` என்று உரைப்பினும் ஆம். ஆய - தக்கன் வேள்விக்குச் சென்ற. தக்கன் வேள்வியில் பல் உகுக்கப்பட்டவன். `பூடா` என்னும் பகலவனும், கண் பறிக்கப் பட்டவன், `பகன்` என்னும் பகலவனும் ஆதலின், `பகலோன்` என்பதைத் தனித்தனி கூட்டுக. இத்திருப் பாட்டின் மூன்றாம் அடியுள், `பகலோன் அனல் பகற் பற்பசுங்கண்` என்பது பாடம் ஆகாமை அறிந்து கொள்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றதில் கண்டு `விரைந்து பறைகள் ஒலிக்க, விரைந்து அம்பைச் செலுத்தும் கொடிய வில், அம்பு, கவண் என்னும் கல்லைச் செலுத்தும் கருவி இவற்றைக் கைகளில் ஏந்தி, புலித்தோலை உடுத்துச் செருப்பினை அணிந்து சிறுகத்தியையும் கொண்டு, பன்றி முன்னே ஓடுமாறு சீழ்க்கை ஒலியை எழுப்பி விரைந்து நடப்பவனே! மகேந்திர மலைத் தலைவனே! நாததத்துவத்தின் முடிவாய் இருக்கின்ற தலைவனே! என்று வழிபட்டு வேண்டும் அடியவர்களுக்கு நாததத்துவத்தையும் கடந்த சிவலோகப் பதவியை வழங்குபவனே! குணக்குன்றே!` என்று விளித்துப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

கடுப்பாய் - மிகுதியாய். `கடுப்பாய்க் கறங்க` என இயையும். பறை, வேட்டைப் பறை. கறங்க - ஒலிக்க. உடுப்பு - உடை. சுரிகை - உடைவாள், `தோல் செருப்புச் சுரிகைகளுடன் நடப்பாய்` என்க.
நாதாந்தத்து அரையா - `நாதம்` என்னும் தத்துவத்திற்கு அப் பால் உள்ள தலைவனே! முன்னைத் திருமுறைகளில், `நாதம்` என்னும் சொல் காணப்படினும், `நாதாந்தம்` என்னும் தொடர் காணப்பட்டிலது. பதம் - பாதம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

சேவேந்து வெல்கொடி யானே என்னும்
சிவனே என்சேமத் துணையே என்னும் மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
வளர்நாய கா இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக்கூத்தனை உரு வெளித்தோற்றத்தில் கண்டு `காளை வடிவம் வரையப் பெற்ற, பகை வரை வெல்லும் கொடியை உயர்த்தியவனே! மங்களமான வடி வினனே! என் உயிர்க்குப் பாதுகாவலைத்தரும் துணைவனே! பல விலங்குகளையும் தன்னிடத்துக் கொண்ட மலைச் சரிவினையுடைய மகேந்திர மலையில் தங்கும் தலைவனே! பூக்களை அர்ப்பணிப் பதற்காக ஏந்திவந்து மூவாயிரவர் அந்தணர் வணங்குமாறு புகழ்மிக்க கனகசபையில் பொலியுமாறு நிற்கும் தலைவனே! குணக்குன்றே! என்னிடம் வருவாயாக` என்று அழைத்து வேண்டுகிறாள்.

குறிப்புரை :

சே ஏந்து - எருதைக் கொண்ட. சேமத் துணை - பாதுகாவலான துணை. மா ஏந்து - விலங்குகளை யுடைய.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

தரவார் புனம்சுனைத் தாழ் அருவி,
தடங்கல் லுறையும் மடங்கலமர்
மரவார் பொழில் எழில் வேங்கை எங்கும்
மழைசூழ் மகேந்திர மாமலைமேற்
சுரவாஎன் னும் சுடர்நீள் முடிமால்
அயன்இந் திரன்முதல் தேவர்க்கெல்லாம்
குரவா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக்கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு `மேம்பட்ட நீண்ட தினைப்புனங்கள், மலைச்சுனைகளிலிருந்து கீழ் நோக்கி இறங்கி ஓடும் அருவிகள். பெரிய கற்பாறைகள், அவற்றின் குகைகளில் உறையும் சிங்கங்கள், குங்கும மரங்கள் வேங்கை மரங்கள் நிறைந்த சோலைகள், எங்கும் சூழ்ந்த மேகங்கள் இவற்றை உடைய பெரிய மகேந்திரமலைமேல் எழுந் தருளியிருக்கும் தேவனே! ஒளிவீசும் நீண்ட கிரீடங்களை அணிந்த திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவனே! குணக்குன்றே!` என்று அழைத்துப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

தர வார் புனம் - மேலான நீண்ட புனம், சுனைத் தாழ் அருவி - சுனையினின்றும் வீழ்கின்ற அருவி. ``கல்`` என்றது முழையை. மடங்கல் - சிங்கம். மடங்கல் `அமர் பொழில்` என்க. இருள் மிகுந்திருத்தலின், முழையில் தங்கும், சிங்கம் இங்குத் தங்கு வதாயிற்று,
மரவு ஆர் பொழில் - குங்கும மரம் நிறைந்த சோலை. வேங்கை - வேங்கைமரம் இதனை வேறு கூறினார், மலை நிலத்திற்குச் சிறந்த மரமாதல் பற்றி. மழை - மேகம் `ஏங்கும்` என்பதும் பாடம். `புனம், அருவி` பொழில், வேங்கை முதலிய எங்கும் மேகங்கள் தவழ் கின்ற மகேந்திர மாமலை` என்க. `சுரவன்` என விரித்தல் பெற்று விளி யேற்று, `சுரவா` என நின்றது, சுரன் - தேவன் ``குரவன்`` என்றது, `தந்தை, தாய், அரசன், ஆசிரியன்` என்னும் அனைத்துப் பொருளை யும் குறிக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

திருநீ றிடாஉருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனுடைய நினைப்பிலே, திருநீற்றை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து, `திருநீறு அணியாத உருவத்தைத் தீண்டேன்` என்று சொல்லிப் பெருமை பொருந்திய நீலகண்டனாகிய சிவபெருமானுடைய பண்பு செயல் இவை பற்றிய செய்திகளை அடைவு கேடாகச் சொல்லிக் கொண்டு பெரிய தெருவிலே திரிகிறாள். `பருவமழையால் பெருகு கின்ற நீர் இழியும் அருவிகளை உடைய மகேந்திரமாகிய அழகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருவே! குணக்குன்றே!` என்று சிவபெருமானுடைய உருவெளித் தோற்றத்தைக் கண்டு அழைக்கிறாள்.

குறிப்புரை :

`திருநீறு இடா உருத் தீண்டேன்` என்றல், தில்லைக் கூத்தப் பெருமானுக்கு ஆகாதது, தனக்கும் ஆகாமை பற்றியாம், `மெய் யிலும் திருமுண்டத்திலும் தீட்டி` என்க. முண்டம் - நெற்றி, பூசுதல் வாளா பூசுதலும், தீட்டுதல் குழைத்து இடுதலும் ஆகும். `மெய்த்திரு முண்டத் திட்டு` எனவும் பாடம் ஓதுப. திறம் - புகழ். பிதற்றுதல் - பித்துக் கொண்டு பேசுதல். இங்கும் மகேந்திரமலை, `பொன்மலை` எனப்பட்டது. ``அருளும்` என்றது, ஆகமங்களை அருளிச் செய்தமையை. எனவே, இவளும் அதுநோக்கியே காதல் மிக்காளா யினமை பெறப்பட்டது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித் தோற்றத்தில் கண்டு` என்னோடு பொருந்தியவனே! உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தையும் நான் நினைக்க மாட்டேன். சுற்றிலும் ஒளிவீசும் மகேந்திர மலையைத் தியானித்து, மனத்திலுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி உன்னைத் தியானம் செய்யாதவர் நெஞ்சில் பொருந்தாதவனே! குணக்குன்றே!` என்று அவனை அழைத்து, `என் அறிவினுள் கலக்கப்பெற்ற திருவைந் தெழுத்தையும் பிதற்றிக் கொண்டு, அறியாமையாகிய பிணி நீங்குமாறு வெண்ணீற்றை அணிந்துள்ளேன்` என்று பிதற்றுகிறாள்.

குறிப்புரை :

உற்றாய் - யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. `உணர்வுள் கலக்கப்பெற்றுப் பொருந்திய ஐந்தெழுத்தும்` என்க. ``உணர்வுள்`` என்பது முதலாக, ``பெற்றேன்`` என்பது ஈறாக உள்ளவை, தலைவியின் கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியன. `உணர்வுகள்` என்பது பாடம் அன்று. சுற்று ஆயசோதி - சுற்றி லும் வீசுகின்ற ஒளியையுடைய. ``மகேந்திரம்`` என்றது, இகரம் அலகுபெறாது நிற்க ஆரியம் போல நின்றது. `சூழ` என்னும் செய வெனெச்சம், தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. `சூழச் சூழாத` என இயையும். இதனுள் முன்னர் நின்ற சூழ்தல், சார்தல். பின்னர் நின்ற சூழ்தல், நினைத்தல். இருள் வாங்கி - அறியாமையைப் போக்கி. ``குத்தாய்`` என்பது, எதுகை நோக்கி, `குற்றாய்` எனத் திரிந்தது. குத்தாய் - ஊன்றாதவனே; பொருந்தாதவனே.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 12

வேறாக உள்ளத் துவகைவிளைத்
தவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்
எனையும் மகிழ்ந்தாள வல்லாய் என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்துன்
அடியார் பிழைபொறுப்பாய் அமுதோர்
கூறாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லைக் கூத்தனை உருவெளித் தோற்றத்தில் கண்டு` மற்றவர்களினும் வேறுபட்ட வகையில் சிறப்பாக என் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்கி, பூலோக சிவலோகமாகிய தில்லையில் வேதம் ஓதுதலால் எய்தும் சிறப்பு மாறாத மூவாயிரவர் அந்தணரோடு அடியேனையும் மகிழ்ச்சியாக ஆட்கொள்ள வல்ல வனே! ஆறுகள் தோன்றும் உச்சியை உடைய மகேந்திர மலையில் இருந்து, உன் அடியவர்களின் பிழைகளைப் பொறுத்து அருளுகின்ற வனே! பெண்ணமுதாகிய பார்வதியை உன் திருமேனியின் ஒரு பாக மாக உடையவனே! குணக்குன்றே!` என்று அழைத்துப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

``வேறாக உள்ளத்து உவகை விளைத்து`` என்பதை` ``ஆளவல்லாய்`` என்பதன் முன்னர்க் கூட்டுக. வேறாக - தனியாக; என்றது `அந்தரங்க உரிமையாக` என்றபடி. தன்னையும் மூவாயிரவ ரொடு படுத்து இவள் இவ்வாறு கூறியது, தனது காதல் மிகுதியாலாம். எனவே, இதனான் இவ்வாசிரியரது பேரன்பு விளங்குவதாம். அவனிச் சிவலோகம் - தில்லை, `அவனிச் சிவலோக மூவாயிரவர்` என, இயையும். `தில்லை அவனிச் சிவலோகம்` எனவே, அதன் கண் வாழும் மூவாயிரவர் அவனிச் சிவர் என்பது விளங்கும். இதனை ``நீலத் தார்கரி யமிடற்றார்நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார்பற்று - சூலத்தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் - சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்`` (தி.3. ப.1. பா.3) என அருளிச் செய்தமை யானும், அவ்வருளிச் செயலின் வரலாற்றாலும் (தி.12 ஞானசம் - 168 - 174) நன்குணர்ந்து கொள்க. வேதவென்றி - வேதத்தை ஓதுதலா னும், அதன்வழி வேட்டலானும் பெற்ற வெற்றி. `இவ்வெற்றி என்றும் மாறாது நிற்கும் மூவாயிரவர்` என்க. ஆறு ஆர் சிகரம் - பல யாறுகள் பொருந்திய கொடுமுடி. பொருந்துதல் - தோன்றுதல். இனி, `வான யாற்றை அளாவிய சிகரம்` என்றலுமாம். ``உன் அடியார் பிழை பொறுப்பாய்`` என்றது தம் பாடலைப் பொறுக்கவேண்டுமென்னும் குறிப்பினது. இஃது ஒரு பெயர்த் தன்மைப்பட்டு, ``மகேந்திரத்து`` என்றதனை முடித்தது. அமுது - பெண்ணமுதாய மலைமகள். `மாதோர் கூறாய்` என்பது பாடம் அன்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

இணங்கிலா ஈசன் நேசத்
திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொழிப்புரை :

தனக்கு ஒப்பார் இலாத சிவபெருமானிடத்தில் அன்போடு நிலைத்திருக்கும் மனத்தை உடைய அடியேனைப் பொறுத்த வகையில், பல திருவிழாக்களைக் கொண்ட சிறப்பினை உடைய தில்லையில் உகந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய கூட்டத்தைப் பெற்ற அடியார்களுடைய வள்ளன்மைக் குணங்களைப் புகழ்ந்து கூறாத, பெருமை இல்லாத கொடிய வாயை உடைய, ஒன்பான் ஓட்டைகளை உடைய உடம்பைச் சுமக்கும், செத்தாரில் வைத்து எண்ணப் படுபவர்களை அடியேனுடைய கண்கள் காணமாட்டா. உலகத்தார் உண்டு என்பதனை இல்லை என்னும் அப்பேய்களோடு அடியேனுடைய வாய் உரை யாடாது.

குறிப்புரை :

இணங்கு - ஒப்பு. `சித்தத்தினேற்குக் கண் காணா; வாய் பேசாது` என இயையும். எனவே, இஃது ஏனைத் திருப்பாட்டுக் களினும் சென்று இயைவதாதல் அறிக. மணங்கொள் - பல விழாக் களைக் கொண்ட `தில்லைவாணனது மணத்தை (கூட்டத்தை)ப் பெற்ற அடியார்` என்க. வண்மை - வளப்பம்; சிறப்பு. வீறுஇல் - பெருமை இல்லாத; `கோரம்` என்பதில், மகரம் கெட்டு ரகரம் றகரமாயும், அகரம் ஐகாரமாயும் திரிந்து நின்றன. கோரம் - கொடுமை. பீறல் பிண்ட - ஓட்டை உடம்பையுடைய. உயிர் வாழ்தலால் பயன் இன்மையின், பிணங்கள்`` என இகழ்கின்றவர், அக்காரணத்தானே உடம்பின் இயல்பை விதந்தோதினார். பிதற்றுதலுடைமை பற்றி, `பேய்கள்` என்றார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

எட்டுரு விரவி என்னை
ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

அட்ட மூர்த்தியாய் என்னை ஆட்கொண்டவனாய், வளரும் ஒளி பிரகாசிக்கின்ற மாலையை அணிந்த தில்லையம்பதித் தலைவனாகிய எம் பெருமானை, அடியவராக வந்து அடையாத தீயவர்களையும், வஞ்சகச் சொல்பேசும், பிற தெய்வங்களின் அடியவர்களையும், இனிது விளங்காதபடி முணுமுணுத்துப் பேசும் சிறியோர்களையும் என்கண்கள் காண மாட்டா. என்வாய் அப்பேய்களோடு பேசாது.

குறிப்புரை :

ஈண்டு சோதி - மிக்க ஒளி; இஃது ``இலங்கு` என்பத னோடு முடியும். அலங்கல் - மாலை; என்றது பொன்னரி மாலையை; இதனையுடையது தில்லை. தூர்த்த வார்த்தை - வஞ்சகச் சொல். தொழும்பர் - பிறர்க்கு அடிமையாய் நிற்பவர். பிழம்பு - இனிது விளங்காத சொல்; முணுமுணுத்தல். பிட்டர் - நொய்யர்; சிறியோர். இச் சொல் `பிட்டம்` என்பதினின்று பிறந்தது. ``பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா பேணித் தொழுமின்கள்`` (தி.1. ப.69. பா.10) என்று அருளிச் செய்தமை காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

அருட்டிரட் செம்பொற் சோதி
யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொழிப்புரை :

அருளின் திரளாய், செம்பொன்னின் ஒளியை உடைய சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனாகிய எம்பெருமானுடைய அடியவர்கள்மாட்டு அன்பு செலுத்தாத துடுக்கு உடையவர்களையும், துடுக்கான வார்த்தைகளைப் பேசும் மனமாசு உடையவர்களையும், கழுகுகள் போன்று பிறர் பொருளைப் பறித் துண்ணும் நெறிதவறியவர்களையும் என் கண்கள் காணமாட்டா. என் வாய் அப்பேய்களோடு உரையாடாது.

குறிப்புரை :

`அருளினது திரளாகிய அம்பலம்` எனவும், `இருளினது திரள்போலும் கண்டம்` எனவும் உரைக்க. எம்மான் இன்பம் - சிவானந்தம். அரட்டர் - துடுக்குடையவர். அரட்டு - துடுக்கு. அழுக்கர் - மாசுடையவர். பிரட்டர் (பிரஷ்டர்) - நெறிதவறியவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

துணுக்கென அயனும் மாலும்
தொடர்வருஞ் சுடராய் இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் திடுக்கிடும்படி தொடர்ந்து வந்து அறிவதற்கு அரிய ஒளிவடிவினனாய், இவ்வுலகில் தன்னை அணுகியிருக்கும் அடியவர்களுக்குத் தானும் அணியனாய்ச் செம் பொன்மயமான அம்பலத்தில் ஆடுகின்ற எம்பெருமானுக்கு அன்பர் அல்லாத அழுகை உடையவரையும், பிறரைத் துன்புறுத்தும் குருட்டுத் தன்மையை உடைய அறிவிலிகளையும், கீழ்மக்களாகிய வாய் அழுக்கை உடைய மாறுபடப் பேசுபவர்களையும் என்கண்கள் காணா. அப்பேயரோடு என் வாய் உரையாடாது.

குறிப்புரை :

``துணுக்கென`` என்பதை `துணுக்கென்று` எனத் திரிக்க. துணுக்கெனல் - அஞ்சுதல். அணுக்கர் - அணுகியிருப்பவர்: அடியவர். அணிய - அண்மைக்கண் உள்ள. ``செம்பொன் அம்பலத்தாடி` என்றது ஒரு பெயர்த் தன்மைத்தாய். ``அணிய`` என்றதற்கு முடிபாயிற்று. சிணுக்கர் - அழுகையுடையவர். சிவபெருமானை இகழ்ந்து முணு முணுத்தலை, `அழுகை` என்றார். செத்தல் - செதுக்குதல்; `பிறரைத் துன்புறுத்துதல்` என்க. கொத்தை - குருட்டுத்தன்மை. சிதம்பர் - வெள்ளைகள்; அறிவிலிகள். சீத்தை - கீழ்மை. ஊத்தை - வாய் அழுக்கு; இஃது, இழிந்த சொல் உடைமை பற்றிக் கூறப்பட்டது. `பிணக்கர்` என்பது எதுகை நோக்கி ``பிணுக்கர்`` என்றாயிற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

திசைக்குமிக் குலவு கீர்த்தித்
தில்லைக்கூத் துகந்து தீய
நசிக்கவெண் ணீற தாடும்
நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

எண்திசைகளையும் கடந்து பரவும் புகழை உடைய தில்லையம்பதியின் ஆனந்தக் கூத்தை விரும்பித் தீமைகள் அழியுமாறு வெண்ணீற்றை அணியும் நம் அடியவர்களை அணுகாத நாய்களாய், கண்டவர் எள்ளி நகையாடுமாறு பொருள் தெரியாமல் வடமொழிச் செய்திகளை ஓதும் அறிவிலிகளையும், உயர்ந்தவரோடு மாறுபட்டுப் பேசும் பேச்சினை உடைய வலிமையற்றவர்களையும் என்கண்கள் காணா. என்வாய் அப்பேய்களோடு உரையாடாது.

குறிப்புரை :

திசைக்கு மிக்கு - திசையினும் பெரிதாகி. உகந்து - விரும்பிக் கண்டு. தீய நசிக்க - தீவினைகள் கெட்டொழியுமாறு. ``வெண்ணீறது`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. ஆடும் - மூழ்குகின்ற. `ஆடி` எனவும் பாடம் ஓதுவர். நமர்கள் - நம்மவர்: சிவனடியார்கள். `நாய்களாகிய, என்க. அசிக்க - பிறர் நகைக்கும்படி. நகைத்தல், ஆரிய மொழியின் ஒலிகள் பற்றியாம். `அவரது ஆரிய ஓத்துப் பொருளற்றது` என்றபடி. ஆதர் - அறிவிலிகள். பேத வாதம் - உயர்ந்தவரோடு மாறுபட்டுப் பேசும் பேச்சு. பிசுக்கர் - வலிமை யற்றவர்: உயிர்க்கு உறுதியாவதே வலிமை என்க. வலிமை கெட்டு மெலிதலை, `பிசுத்தல், பிசுபிசுத்தல்` என்ப. இதனுட் குறிக்கப்பட்டவர் கள் மீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

ஆடர வாட ஆடும்
அம்பலத் தமுதே என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

`படம் எடுத்து ஆடும் பாம்புகளாகிய உன் அணி கலன்கள் ஆட அம்பலத்திலே கூத்து நிகழ்த்தும் அமுதமே` என்று சிவ பெருமானைப் போற்றும் பெருமையை உடைய அடியவர்களுடைய திருவடிகளைத் தம் தலையில் சூடி வழிபடாத, நல்லூழ் இல்லாத உயி ரற்ற உடம்புபோல இருப்பவர்களையும், பத்தியில் நிலைத்து நில்லாத வரையும், சாணாகப்பிடித்த கை அளவை உடைய முரடர்களாகிய பொய்யரையும், தம் வயிறு வளர்ப்பதற்காகப் பிறிதோர் உயிரைச் சிதைக்கும் ஆண்மையற்றவர்களையும் என் கண்கள் காணா. அத்தகைய பேய் போன்றவரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

ஆடு அரவு - படம் எடுத்து ஆடுந்தன்மை யுடைய பாம்பு. ஆட - அது, தன் மேனியில் இருந்து அசைய. என்னும் - என்று துதிக்கின்ற. சேடர் - பெருமையுடையவர். திரு - நல்லூழ். உருவினார் - உயிரற்ற உடம்புகளாய் உள்ளவர். சாடர் - சகடர்; நிலையில்லாதவர். சாண் கை - சாணாகப் பிடித்த கையளவை யுடைய. `சாண் மகன்` என்பது, சிறுமை குறிப்பதோர் இகழுரை. மோடு - முருட்டுத் தன்மை; இஃது, அகரம் பெற்று வந்தது. சழக்கர் - பொய்யர். பிழைத்தல் - வயிறு வளர்த்தல். `பிழக்க` என்பது பாடம் அன்று. பிட்டல் - ஒன்றைச் சிதைத்தல். இதன்பின், `வல்ல` என ஒருசொல் வருவிக்க. பேடர் - ஆண்மை இல்லாதவர்: மேலான பயனை எய்துதலே ஆண்மை என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

உருக்கிஎன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

அடியேனுடைய உள்ளத்தை உருக்கி அதன் உள்ளே ஊறுகின்ற ஆனந்தமாகிய தேனின் பெருக்கு மாறாதபடி, நடனத்தால் தன் உள்ளகக் குறிப்பினை அடியவர்களுக்கு அருளுகின்ற தில்லைப் பெருமான் பக்கல் செல்லும் மனப்பக்குவம் இல்லாத சுருக்கம் உடையவர்களையும், நரகத்தில் அழுந்துதற்குரிய வஞ்சகர் களையும், கெடாத தீவினைகளை நாளும் மிகுதியாகச் செய்து கொள் பவர்களையும், என் கண்கள் காணா. என் வாய் அப்பேயர்களோடு உரையாடாது.

குறிப்புரை :

`என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல் நீங்காமைக்கு ஏதுவாகிய திருக்குறிப்பு, என்க. தேறல் - தேன்; என்றது பேரின்பத்தை. திருக்குறிப்பு, நடனத்தில் உள்ளது. `செல்வம் இல்` என்பது, `செல்வில்` எனக் குறைந்து நின்றது. அருக்கர் - சுருக்கம் உடையவர்; பெருக்கம் இல்லாதவர். அள்ளல்வாய - நரகத்தின் கண் உள்ள. கள்ளர் - வஞ்சகர். அவியா - கெடாத.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

செக்கர்ஒத் திரவி நூறா
யிரத்திரள் ஒப்பாந் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும்
சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்டாம் மிண்ட
எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

செவ்வானம் போன்று, சூரியர் நூறாயிரவர் ஒரு சேரத் திரண்டதற்கு ஒப்பான நிறத்தையும் ஒளியையும் உடைய தில்லையுள் எழுந்தருளியுள்ள அழகராகிய அம்பலக் கூத்தாடுபவரே பரம் பொருளாவார் என்ற வேதக் கருத்தை நினைத்துப்பார்க்காத செருக்கு மிக்கவரையும், கீழ் இனத்தவராகிய வலிமை மிக்க வஞ்சரை யும், புத்தர் முதலிய பொய்யரையும், என் கண்கள் காணமாட்டா. அந்தப் பேயர்களோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

செக்கர் - செவ்வானம். உவமை இரண்டற்கும் பொருள், அம்பலவர். சொக்கர் - அழகர். `சொக்கராகிய அம்பலவர்` என்க. சுருதி - வேதப்பொருள்; ஆகுபெயர், எக்கர் - செருக்கு மிக்கவர். ``எக்கராம் அமண் கையர்`` (தி.3 ப.39 பா.11) என வந்தமை காண்க.
குண்டு - கீழ் இனம். `குண்டர்` என்பதும் பாடம். மிண்டர் - வன்கண்ணர். எத்தர் - வஞ்சிப்பவர். பொக்கர் - பொய்யர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

எச்சனைத் தலையைக் கொண்டு
செண்டடித் திடபம் ஏறி
அச்சங்கொண் டமரர் ஓட
நின்றஅம் பலவற் கல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொழிப்புரை :

காளைவாகனத்தில் ஏறிவந்து எச்சனுடைய தலையைப் பூச்செண்டினை உருட்டுவது போல எளிதில் துண்டாக்கி, அஞ்சித் தேவர்கள் ஓடுமாறு வேள்விக் கூடத்தில் நின்ற சிவ பெருமானை வழிபடாத வெறுக்கத் தக்கவரையும், அப்பெருமானைப் பற்றிய நூல்களைக் கல்லாத கீழ்மக்களையும், சிறுதெய்வங்களைப் பரம் பொருளாகக் கூறும் நூல்களைக் கற்கும் மயக்க உணர்வினரையும் என் கண்கள் காணமாட்டா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

செண்டடித்து - பூச்செண்டு அடித்தல் போல அடித்து; இஃது எளிதில் செய்தமையை உணர்த்திற்று. ``இடபம் ஏறி`` என்ற தனை முதற்கண் வைத்து உரைக்க. ``ஏறி`` என்ற எச்சம் எண்ணின்கண் வந்தது. ``அம்பலவன்`` என்றது ஆகு பெயராய் அவனைப் பொரு ளாக உடைய நூலைக் குறித்தது.
கல்லா - கற்காத. `கைத்தவர்` என்பது, `கச்சவர்` என்று ஆகி, `கச்சர்` என இடைக் குறைந்து நின்றது; வெறுக்கப்பட்டவர் என்பது பொருள். ``பசு`` என்றது, சிறு தெய்வங்களை. நூல் - அவற்றைப் பொருளாக உடைய நூல். ``கற்கும்`` என்றது, `விரும்பிக் கற்கும்` என்ற வாறு. பிச்சர் - பித்தர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

விண்ணவர் மகுட கோடி
மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்
திருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

சிவபெருமானை வழிபடவரும் தேவர்கள் பலராதலின் அவருடைய பல கிரீடங்களும் ஒருசேரக் காணப்பட, அவற்றில் பதிக்கப்பட்ட மணிகள் ஒளிவீசும் தலைமையை உடைய சிற்றம்பலவனாகிய வெற்றியை உடைய மன்னவன் பக்கல் பக்தி இல்லாத முரட்டுத் தன்மை உடைய அறிவிலிகளையும், தெளிவற்ற மனத்தினை உடைய அஞ்ஞானிகளையும், வம்புப் பேச்சுக்களைப் பேசும், ஆண் தன்மையற்ற மகளிர் போல்வாரையும் என் கண்கள் காணா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

`வீசும் வாசல்` என இயையும். வாசல், `வாயில்` என்பதன் மரூஉ. தெண்ணர், `திண்ணர்` என்பதன் மரூஉ` `மூர்க்கர்` எனப் பொருள் தந்தது. ``தெண்ணர் கற்பழிக் கத்திரு உள்ளமே`` (தி.3 ப.47 பா.3) என வந்தமை காண்க. `உள்ளத்து இருளர்` என்க. `திட்டை,முட்டை` என்பன; பகுப்பற்ற பிண்டத்தை உணர்த்தி நின்றன. `பெண்ணர்`, என்பதற்கு, ``பேடர்`` என்றதற்கு உரைத்தது உரைக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

மேம்பாட்டை உடைய அடியவர்கள் வாழும் தில்லையிலே உள்ள செம்பொன்மயமான அம்பலத்தில் நடனமாடும் பெருமானுக்கு அடியவராக இருக்கும் உறுதிப்பாட்டை உடைய அடியவர்களுக்கு அடியவராக இருக்கும் உறுதிப் பாட்டினையும், அவர்களுடைய திருவடித்துகள்களை அணியும், சிறப்பினையும் இழந்து, இறத்தல் பிறத்தல் என்ற தொழில்களுக்கே இனிய இலக்காகி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கக் கூடிய கீழ் மக்களை என் கண்கள் காணா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

சிறப்பு - யாவரினும் உயர்ந்து நிற்கும் மேன்மை. உறைப்பு - உறுதி. `சிறப்புடை அடியாராகிய உறைப்புடை அடியார்` எனவும் உறைப்புடை அடியார்க்குக் கீழ்க்கீழாய் உறைப்பவரது சேவடி` எனவும் உரைக்க. கீழ்க்கீழாய் உறைப்பவராவரது, அடியார்க்கு அடியராயும், அவர்க்கு அடியராயும் நிற்றலில் உறுதியுடையராதல். ``நீறு`` என்றது, புழுதியை, பிறப்பர் - பிறப்பவர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிர்இல்
போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே. 

பொழிப்புரை :

எல்லா உலகங்களுக்கும் ஒரே தலைவனாய், தேவர் களுக்கு அரசனாய், அடியேனுடைய உயிரைத் தளிர்க்கச் செய்யும் அமுதமாய், ஒப்பில்லாத இன்பம் நல்கும் தலைவனாய், கார்மேக நிறத்தினனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கி, அவனைப் பொன்மயமான பல்லக்குப் போல வாகனமாகக்கொண்டு செலுத்திய, மேகம் போலக் கைம்மாறு கருதாமல் உயிர்களுக்கு உதவும் தலை வனாய், மேம்பட்ட திருவீழிமிழலையிலே தேவருலகிலிருந்து இறங்கி வந்து நிலவுலகில் நிலையாகத் தங்கியுள்ள மேம்பட்ட கோயிலில் முத்தியை வழங்கும் தலைவனாய் உள்ள சிவபெருமானை அன்றி மற்றொரு பரம்பொருள் உள்ளது என்பதனை நான் அறிகின்றேன் அல்லேன்.

குறிப்புரை :

எதிர் இல் போகம் - இணையில்லாத இன்பம்; சிவபோகம்; அதனைத் தரும் நாயகன் (தலைவன்) என்க. புயல் வண்ணன் - மேகம்போலும் நிறம் உடையவன்; திருமால். ``சிவிகை`` என்றதை, `ஊர்தி` என்னும் அளவாகக் கொள்க. ``ஊர்ந்த மேகம்`` என்றது, `உண்ட சோறு` என்பதுபோல நின்றது. `ஒரு கற்பத்தில் திருமால் சிவபெருமானை மேகவடிவங் கொண்டு தாங்கினமையால், அக்கற்பம், `மேகவாகன கற்பம்` எனப் பெயர் பெற்றது` என்னும் புராண வரலாற்றை அறிந்துகொள்க. மிகு - உயர்ந்த. திருவீழி மிழலைக் கோயிலின் விமானம் திருமாலால் விண்ணுலகினின்றும் கொணரப்பட்டமை பற்றி, `விண்ணிழி விமானம்` எனப்படும் என்பது இத்தல வரலாறு. இது தேவாரத் திருப்பதிகங்களிலும் குறிக்கப்படுதல் காணலாம். `யோகம்` என்பது, முத்தியைக் குறித்தது. `மற்றொன்றும் உணர்கிலேன்` என இயையும். ``உண்டென உணர்கிலேன்`` என்றது, `பொருளாக நினைந்திலேன்` என்றதாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

பொழிப்புரை :

கற்றவர்களால் அக்கல்வியின் பயனாக அடைந்து அநுபவிக்கப்படும் தெய்வீக மரத்தில் பழுத்தகனி போன்றவனாய், எல்லை இல்லாத பெருங் கருணைக் கடலாய், மற்றவர்கள்தம் முயற்சி யில் அறியமுடியாத செந்நிற மாணிக்கமணியால் ஆகிய மலைபோன்றவனாய், தன்னை வழிபடும் அடியவருடைய உள்ளத்தில் மாணிக்கச் சுடர் போன்ற ஞான ஒளி வீசுபவனாய், பகைவர்களுடைய முப்புரங்களையும் அழித்த, எங்களுக்கு நன்மையைத் தருபவனாய், அடியார்களுக்கு அருளுவதற்காகவே திருவீழிமிழலையில் வீற்றிருந்த வெற்றியனாகிய சிவபெருமானைப் பலகாலும் தரிசித்ததனால் என் உள்ளம் குளிர என் கண்களும் குளிர்ச்சி பெற்றன.

குறிப்புரை :

இறைவன், மெய்ந்நூல்களைக் கற்றவர்களால் அக்கல்வியின் பயனாக அடைந்து அனுபவிக்கப்படுபவனாதலின், ``கற்றவர் விழுங்கும் கனி`` என்றார். ``கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி`` (தி. 6 ப.32 பா.1) என்ற அப்பர் திருமொழியைக் காண்க. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் - நற்றாள் தொழாஅ ரெனின்`` (குறள்-2) எனத் திருவள்ளுவரும் கல்விக்குப் பயன் இறைவன் திருவடியை அடைதலே என்று வரையறுத்தருளினார். விழுங்குதல், உண்டல் தொழில் நான்கனுள், `உண்டல்` எனப்படுவது. வாளா, `கனி` என்னாது, கற்பகக்கனி என்றார். அருமையுணர்த் துதற்கு. கனி முதலியவை உவமையாகுபெயர்கள். கரையிலாக் கடல் என இயையும். மற்றவர் கற்றவரல்லாதார். மதிப்பவர் - தலைவனாக அறிந்து போற்றுபவர். மணி - இரத்தினம்; இஃது இயற்கையொளி உடையது. ``மாணிக்க மலை`` என்றது செந்திரு மேனியின் அழகுபற்றி. செற்றவர் - பகைத்தவர். செற்ற - அழித்த. ``உள்ளம் குளிரக் கண் குளிர்ந்தன`` என்றது, `ஞாயிறுபட வந்தான்` என்பது போல உடனிகழ்ச்சியாய் நின்றது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே. 

பொழிப்புரை :

வட்டமான ஞாயிற்றின் ஒளியை வழிபடுதலை விடுத்து அதன் உட்பொருளாய் என்னால் வழிபடப்பட்ட சிவப்பொரு ளாகிய அமுதமாய், என் ஒப்பற்ற மாணிக்கமாய், முற்காலத்தில் தம் முயற்சியால் அறிய முற்பட்ட தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கு அரியனாய், அடியவர்களுக்கு எளியனாய் இருக்கும் பெரியபவளமலை போல்வானாய், முறுக்கு அவிழ்ந்து மலரும் பூக்களிலிருந்து வெளிப்படும் தேன் பரந்து பெருக்கெடுக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும் கார்மேகம் போன்ற கரியகழுத்தை உடைய எம் மேம்பட்ட குருமணியை அணுகினால் கொடிய வினைகளின் தாக்குதல்கள் நம்மை அணுகமாட்டா.

குறிப்புரை :

மண்டலம் - ஞாயிற்றின் வட்டம், அதன் ஒளியை விலக்கி நுகர்தலாவது, ஞாயிற்றின் ஒளியிலே மயங்கி அதனையே வணங்கியொழியாது, அதன் நடுவில் எழுந்தருளியிருக்கும் சிவ மூர்த்தியை வணங்கி மகிழ்தல்.
மருந்து - அமுதம். மாறு - கேடு. அலர் அயன் - மலரின்கண் உள்ள பிரமன். `அயன்மாற்கு அரியதும், அடியார்க்கு எளியதும் ஆயதோர் பவளமால்வரை` என்றது இல்பொருளுவமை. ``அரிது மாய்`` என்ற உம்மை, எச்சம். மலர்வாய் - மலரின்கண் பொருந்திய. வேரி - தேன். வார் - ஒழுகுகின்ற. குரு மணி - ஆசிரியருள் தலைவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

தன் திருவடிநிழலின் கீழ் அடியேனையும் தடுத்து ஆட்கொண்ட பிறைவிளங்குகின்ற முடியை உடையவனாய், தானே உகந்து என்னிடத்தில் அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய மேல் மூன்று ஆதாரங்களாகிய மூன்று தாமரைகளிலும் உதித்து எழும் சிறந்த சுடராய், அருளாகிய ஒளிபொருந்திய கடலின் நீர்ப்பெருக்காய், திருவீழிமிழலையுள் விளங்குகின்ற வெண்மையான பளிங்குபோன்ற சிவபெருமானுடைய பொன்போன்ற அரிய திருவடிக்கண் தொண்டு செய்தலை மேற்கொண்ட அடியேன் அத்திருவடிகள் அடியேன் உள்ளத்தை விடுத்து நீங்கவிடுவேனோ?

குறிப்புரை :

தகைத்த - தடுத்து நிறுத்திய. சசி - சந்திரன். குலா - விளங்குகின்ற. மவுலி - முடியையுடையவன்; ஆகுபெயர். கமலம் மூன்று - ஆதாரங்கள் ஆறனுள் மேல் உள்ள மூன்று. கீழ் உள்ள மூன்றில் பிற கடவுளர் இருத்தலின், இவற்றையே கூறினார். `அருள்சேர் நெடுங்கடல்` என இயையும்.சேர் - திரண்ட. மின் - ஒளி. கடல், ஆகு பெயராகாது இயற்பெயராயே நின்று, பள்ளத்தையே உணர்த்திற்று. ``வெள்ளம்`` என வாளா கூறினாராயினும் இன்பம்சேர் (திரண்ட) வெள்ளம் என உரைக்க. வெள்ளம் - நீர்ப்பெருக்கு. அருளின் வழியே ஆனந்தந் தோன்றுதலின், அருளைக் கடலாகவும், ஆனந்தத்தை அதன்கண் நிறைந்த நீர்ப்பெருக்காகவும் உருவகித்தார். சிவபிரானை, ``பளிங்கு`` என்றது திருநீற்றொளி பற்றி. புக்கு - புகுந்தபின். `அவ்வடியை இனிப் போகவிடுவனோ. இறுகப் பற்றிக்கொண் டேனாதலின்` என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடை யோரே. 

பொழிப்புரை :

`இந்தத் தெய்வத்தை வழிபடும் வழி நல்வழி` என்று உட்கொண்டு அஞ்ஞானமும் வஞ்சனையும் கூடிய பிறவிப் பிணி யிலிருந்து தாமே தம்மைக் காத்து கொள்ள இயலாத இந்திர சாலம் போன்று விரைவில் அழியும், நிலைபேறில்லாத தெய்வங்களைப் பரம் பொருளாகக் கருதி வழிபடும் வழியிலே அடியேன் ஈடுபடாத வகையில் அருள்புரிந்த, வேண்டியவர்க்கு வேண்டியன நல்கும் சிந்தாமணியாய், ஆதிபுராதனனாய் உள்ள சிவபெருமான் அமைத்து வைத்த உண்மையான தெய்வநெறியில் வாழும் நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களின் திருவீழிமிழலையில், தேவருலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த செழுமையான கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவ பெருமானை விடுத்து, அறிவுடையார்கள் பயனில்லாத பிறபொருள்களைப் பொருளாக நினைப்பாரோ?

குறிப்புரை :

இருள் - அறியாமை. மாயம் - நிலையாமை `இவற்றை யுடைய பிறப்பு` என்க. அறா - அறுத்து உய்விக்க மாட்டாத. இம் மாட்ட மை உடையவாயினும், மாட்டுவபோலச் சொற்சாலம் செய்தல் பற்றி, ``இந்திர சால நெறி`` என்றார். ``பொய்`` என்றது போலியை. `பொய்த் தெய்வங்களைக்கொண்ட நெறி` என்க.
புரிந்த - இடை விடாது நின்று அருள்செய்த. புராண சிந்தா மணி - பழைய (எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள) சிந்தாமணி; என்றது, சிவ பெருமானை. வைத்த - அமைத்த. `மெய்த் தெய்வ நெறியையுடைய நான்மறையோர்` என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண் விளங்குவதும் ஆகிய சிவம்` என்க.
அவம் - பயனில்லாத பிறபொருள்கள். அறிவரோ - பொரு ளாக நினைப்பரோ? நினையார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே.

பொழிப்புரை :

உண்மையில்லாத பொய்த்தோற்றமாகிய கனவைப் போன்று நிலைபேறில்லாத உலகியல் செல்வங்களைப் பெறும் வழிகளையே ஆராய்ந்து, ஐம்புல இன்பத்தில் ஈடுபட்டு அடியேன் வாழ்க்கை வீணாகாதபடி காப்பாற்றி அடியேனை ஆட்கொண்ட தூயோனாய்ப் பார்வதிபாகனாய் எட்டுத்திக்குக்களிலும் தன்புகழ் பரவிய திருவீழிமிழலை எம்பெருமானுடைய திருவடி நிழலின் கீழ்ப்பொருந்தியிருப்பவர்களுடைய பொலிவுடைய திருவடித் தாமரைகள் தோய்ந்த அடிப்பொடியினை அணிந்து அவ்வடியவர் களுக்குத் தொண்டு செய்வதனை மேற்கொண்டேன்.

குறிப்புரை :

பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ``செல்வம்`` என்பத னோடு இயையும். கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ``சிந்தித்து`` என்றது, `விரும்பி` என்றவாறு. ஐவர் - ஐம்புலன்கள். அழுந்தி - மிகப் பொருந்தி. அவமே - வீண் செயலிலே. பொடி - துகள். `அவர்க்கு அடிமை பூண்டேன்` என்க. `இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே.

பொழிப்புரை :

இருபக்கங்களிலும் பூக்கள் மணம் கமழும் சோலை களைக் கொண்டதாய்க் கங்கை போன்ற தூயநீரைஉடைய அரிசில் ஆற்றங் கரையில் வயல்வளம் உடையதாய்ச் சந்திரனைத் தொடும் படியான மிகஉயர்ந்த மேல்மாடிகள் நிறைந்த பேரில்லங்களை மிகுதி யாக உடைய மேம்பட்ட திருவீழிமிழலையில் உகந்தருளியிருக்கும், சிறந்த செல்வமாகத் தானாகவே தோன்றிய குண பூரணனாய், தன் பேரொளியே வடிவெடுத்தாற் போன்ற பார்வதி பாகனாய் உள்ள என் கிட்டுதற்கரிய அமுதத்தை, இனிமேல் மறந்து வருந்துவேனோ?

குறிப்புரை :

`கங்கையது நீர்போலும் நீரையுடைய அரிசில்` என்க. ``கங்கை நீர்`` உவமையாகு பெயர். அரிசில், ஓர் ஆறு. அரிசிலின் கரைக்கண் உள்ளதும், இருமருங்கும் பொழிலால் சூழப்பட்டதும், கழனிகளை யுடையதும், நீண்ட மாளிகை சூழ்ந்ததும், மாடங்கள் நீடியதுமான உயர்திருவீழி` என்க. `மாளிகை, மாடம்` என்பன இல்லத்தின் வகைகள். `தங்கு, சீர், செல்வம், தெய்வம், தான்தோன்றி` ஆகிய அனைத்தும், ``நம்பி`` என்பதையே விசேடித்தன. சோதி - ஒளி. `தனது ஒளியாகிய மங்கை` என்க. ``வருந்தி மறப்பனோ`` என்றதை, `மறந்து வருந்துவனோ` எனப் பின்முன்னாக்கி யுரைக்க. `வருந்த` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே. 

பொழிப்புரை :

ஆயிரம் கதிரவர்கள் ஒன்று கூடினாற்போல முக் கண்களின் ஒளியை உடையவனாய், ஆயிரம் தாமரைபோன்று முகமும் கைகளும் பாதங்களும் அழகாக உடையவனாய், பரவின பெரிய கங்கையும் குளிர்ந்த பிறையும் மறையவைத்த பரவிய சடை ஒளிவிடும் அழகிய திருமுடியை உடையவனாய், மூங்கில் போன்ற பெரிய தோள்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெரு மான் உகந்தருளியிருக்கும் திருவீழிமிழலை என்ற திருத்தலத்தைச் சூழ்ந்த சோலைகளிடையே தங்கி, அங்கு இருந்தவாறே, கோயிலை அடையாது சிவபெருமானைப் போற்றித் துதிக்கின்ற அடியவர் களுடைய திருவடிகளை இந்திரன் முதலியோர் போற்றி வழிபடுவர்.

குறிப்புரை :

கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும் ஞாயிற்றை உவமையாகவும், ஏனையவற்றிற்குக் கமலத்தை உவமையாகவும் கொள்க. கண்களை, ``ஆயிர ஞாயிறு`` என்றது ஒளிமிகுதி பற்றி. கரம் -கை. சரணம் - பாதம். பாய் இருங் கங்கை - பாய்ந்தோடுகின்ற பெரிய கங்கை. பனி - குளிர்ச்சி. கரந்த - மறைத்த. படர் - விரிந்த. `சடையாகிய பொன்முடியோன்` என்க. ``போய்`` என்றது, `அடைந்து` என்றபடி. `திருவீழிமிழலைக் கோயிலை அடைந்து போற்றாவிடினும், அதனைச் சூழ்ந்துள்ள பொழிலை அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார் புரந்தராதியர் ஆவர்` என்றார். புரந்தரன் - இந்திரன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே. 

பொழிப்புரை :

எண்ணிக்கையைக் கடந்த பலகோடிக் கணக்கான சிவந்த பாதங்களையும், பலமுடிகளையும், பல வலிய தோள்களை யும், பலகோடிக்கணக்கான திருவுருவங்களையும், திருநாமங்களை யும், அழகிய முக்கண்கள் பொருந்திய முகங்களையும் செயல்களையும் கொண்டு அளவின் எல்லைக்கு அப்பாற்பட்டவராய் நின்று, அந்தணர் ஐந்நூற்றுவர் துதித்து வழிபடுகின்ற எண்ணற்ற பலகோடி நற்பண்புகளை உடையவர் அழகிய திருவீழிமிழலையை உகந்தருளியிருக்கும் பெருமானார். இவர் நம்மை அடியவராகக் கொள்ளும் இன்னருள் உடையவர்.

குறிப்புரை :

``எண்ணில் பல் கோடி`` என்றது, `அளவிறந்த` என்ற வாறு. சேவடி முதலியவற்றை, `அளவிறந்தன` என்றல் எங்கும் நிறைந்து நிற்கும் நிலையைக் குறிப்பதாம்
ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோள்உடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடி யானும்
ஆயிரம் பேர்உகந் தானும் ஆரூர் ஆமர்ந்தஅம் மானே. (தி.4 ப.4 பா.8)
என்று அருளியது காண்க. முகம் உள்ள இடம் எல்லாம் முக்கண் உள்ளமையின், ``எண்ணில் பல்கோடி முக்கண்`` என்பதும் கூறினார். ``இயல்பு`` என்றது, செயலை. எண்ணில் பல்கோடி குணம், ஒருவ ராலும் அளவிட்டறிய ஒண்ணாத தன்மைகள். சடமும், சித்துமாகிய பொருள்கள்தாம் பலவாகலின், அவற்றின் எல்லைகளும் பலவாதல் பற்றி, அவையனைத்தையும் கடந்து நிற்றலை, ``எண்ணில் பல்கோடி எல்லைக்கப்பாலாய் நின்று`` என்றார். தில்லையில் மூவாயிரவர் போலத் திருவீழிமிழலையில் உள்ள அந்தணர் ஐஞ்ஞூற்றுவர் என்க. ``இவர்`` என்றது, `இத்தகு மேலோர்` என்னும் பொருட்டு. ஆள் உடையார் - ஆளாக உடையவர். `ஆதலின் எமக்கென்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே.

பொழிப்புரை :

தக்கன், வெப்பமான கதிர்களைஉடைய சூரியன், சலந்தரன் என்ற அசுரன், பிரமன், சந்திரன், இந்திரன், தக்கன் செய்த வேள்வித் தலைவன், வலிய நெஞ்சினை உடைய இராவணன், திரிபுரம், தாருகவன முனிவர்கள் விடுத்தயானை, கருடன், இயமன், மன்மதன் ஆகிய இவர்களுடைய எல்லை கடந்த செருக்கை அழித்த வனாய், எண்திசைகளிலும் நிறைந்த புகழையுடைய திருவீழிமிழலைப் பெருமானுடைய அடியவர்களுடைய பொலிவை உடைய திருவடித் தாமரைகள் படிந்த பொடியைத் தலையில்சூடி அவர்களுக்கு அடியவனானேன்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். மறலி - கூற்றுவன். கரி - யானை; கயாசுரன். வேள் - மன்மதன். திணைவிராய் எண்ணியவழி மிகுதி பற்றி, `இவர்` என உயர்திணை முடிபு பெற்றது. அன்றி, அனைத்துப் பெயர்களையும் உயர்திணை என்றே கொள்ளினும் அமையும். மிகை - செருக்கு. இந்திரனைத் தோள் நெரித்ததும், கருடனை இடப தேவரால் அலைப்பித்ததும், பிறவும் ஆகிய வரலாறு களைப் புராணங்களிற் கண்டுகொள்க. இதன் ஈற்றடியில் உள்ள தொடர் ஆறாம் திருப்பாட்டின் ஈற்றடியிலும் வந்திருத்தல் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே. 

பொழிப்புரை :

மனத்தில் பொருந்துமாறு இனிய ஞானஒளியைப் பரப்பி, உயிரினங்கள் மாட்டுத் தன் கருணையைப் பொழிகின்ற பார்வதியின் கணவனாய், வளம் பொருந்திய கங்கையையும் பிறையையும் சூடியவனாய், இளைய காளைமீது இவர்ந்து வரு பவனாய் உள்ள ஒளி விளங்கும் திருவீழிமிழலையில் உள்ள, அரசே என்று என்னால் இயன்றவரையில் முருகன் தந்தையாகிய அப்பெருமானை அடியேன் குரல்வளை ஒலி வெளிப்படுமாறு அழைத்தால், அடியேன் பற்றுக்கோடாகக் கொண்ட பொன்நிறம் பொருந்திய கற்பகமரம் போன்ற அப்பெருமான் அடியேன் பக்கல் வரத் தவறுவானோ?

குறிப்புரை :

உளம் கொள - உயிர்களின் உள்ளம் நிறையும்படி. மதுரம் - இனிமை; இங்குத் தண்மைமேல் நின்றது. `தண்கதிர்` என்ற தனால், திங்களாய் நிற்றல் பெறப்பட்டது. ``கதிர்`` என்றது, பின்வரும் அருளையேயாம். ஆம்தனை - இயலும் அளவு. சேந்தன் - முருகன்; இவ்வாசிரியர் பெயரும் அதுவாதல் கருதத் தக்கது. களம் கொள - என்முன் வந்து தோன்றுமாறு. பிழைக்குமோ - தவறுமோ; வாரா தொழிவானோ! கைக்கொண்ட - பற்றிநின்ற. கனக கற்பகம் - பொன் வண்ணமான கற்பகத்தருப்போல்பவன். ``சேந்தன் தாதையை`` என்றதை ``விடைமேல் வருவானை`` என்பதன் பின்னும், ``யான்`` என்றதை, ``என்று`` என்பதன் பின்னும் கூட்டுக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 12

பாடலங் காரப் பரிசில்கா சருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்
திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கெழுமுதற் கெவ்விடத் தேனே. 

பொழிப்புரை :

பாடப்படுகின்ற அணிகள் நிறைந்த பாடல் களுக்குப் பரிசிலாகப் பொற்காசுகளை வழங்கி மேம்பட்ட செந்தமிழ்ப் பாமாலைகளாகிய மலர்களைச் சூடி, எம்பெருமக்களாகிய தேவார முதலிகள் உள்ளத்திலே நீடித்து நிற்கும் அலங்காரத்துடன் நிறைந்து நின்றவனாய், அருச்சுனனுக்கு அருளுவதற்காக அழகிய வேட்டுவக் கோலம் பூண்ட அமுதமாய், திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும், என்றும் அழிதலில்லாத புகழைஉடைய பொன்நிறக் கற்பகம் போல்பவனாகிய எம்பெருமானை அடைவதற்கு அடியேன் எந்த விதத்தகுதியையும் உடையேன் அல்லேன். எம்பெருமான் அடியே னுடைய தகுதியை நோக்காது தன்னுடைய காரணம் பற்றாக் கருணை யாலேயே அடியேனுக்கு அருள் செய்துள்ளான்.

குறிப்புரை :

பாடு அலங்காரப் பரிசில் - பாடுகின்ற அணிநிறைந்த பாட்டிற்குப் பரிசாக. அலங்காரம், ஆகுபெயர். காசு - பொற்காசு. பழுத்த - அன்பு நிறைந்த, ``எம்பெருமக்கள்`` என்றதை முதற்கண் கூட்டி, `அவர்தம் பழுத்த செந்தமிழாகிய மலரைச் சூடிக்கொண்டு, நீடு அலங்காரத்துடன் அவர்தம் நெஞ்சினில் நிறைந்துநின்றானை` என உரைக்க. ``எம்பெருமக்கள்`` என்றது, ஞானசம்பந்தர், நாவுக்கரசர் என்னும் இவரையே என்பது வெளிப்படை.
``இருந்து நீர்தமி ழோடிசை கேட்கும்
இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே``
(தி. 7. ப.88. பா.8)
எனச் சுந்தரரும் இத்தலத்தில் அருளிச் செய்தமை காண்க. வேடு அலங்காரக் கோலம் - வேட்டுவச் சாதியாகப் புனைந்துகொண்ட வேடம். இஃது அருச்சுனன் பொருட்டு என்பது மேலே சொல்லப்பட்டது. கேடு இல் அம்கீர்த்தி - கெடுதல் இல்லாத அழகிய புகழ். கெழுமுதல் - கூடுதல். ``எவ்விடத்தேன்`` என்றதனால், இவ்விறுதித் திருப்பாடலில் பணிவு கூறினார் என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
றருளா தொழிவது மாதிமையே.

பொழிப்புரை :

என்றும் தான் கூறுவது பொய்த்தல் இல்லாத வேதத்தை ஒதுபவராய்ச் சாத்தனூரில் வாழும் உண்மையான புகழாளராய், எண்ணிக்கையில் ஆயிரவராய் உள்ள நிலத்தேவராம் அந்தணர்கள் உள்ளம் ஒன்றித் திருத்தொண்டு செய்கின்ற, சிறப்பு மிகுகின்ற காவிரிக் கரையில் விரும்பி வீற்றிருக்கும் தலைவனே! திருவாவடுதுறையில் உகந்தருளியிருக்கும் அமுதமே! என்று என் மகள் உன்னை அழைத் தால் மைதீட்டிய பெரிய கண்களைஉடைய என்மகளுக்கு நீ ஒரு வார்த்தையும் மறுமாற்றமாகக் கூறாமல் இருப்பது உனக்குத் தகுதியோ? பெருமையோ? - என்று தாய் பெருமானிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

காவிரியாற்றில் பல புண்ணியத் துறைகள் உள்ளன; அவற்றுள் ஒருதுறையே ஆவடுதுறை. இஃது உமையம்மை பசுவாய் இருக்கவேண்டி வந்த நிலையை நீக்கினமை பற்றி வந்த காரணப் பெயர் என்பது புராணக் கொள்கை. இத்துறையைச் சார்ந்துள்ள ஊர். `சாந்தை` என்பது. எனவே, `ஆவடுதுறை` என்பது, இறைவன் திருக்கோயில் உள்ள இடமும், `சாந்தை` என்பது, சாத்தனூராகிய அதனைச் சார்ந்துள்ள ஊர்ப் பகுதியுமாதல் பெறப்படும். `துறை` எனப் பெயர் பெற்ற இடங்களில் அப்பெயர்கள் பெரும்பாலும் `அருட்டுறை` என்பது போலத் திருக்கோயிலுக்கே உரிய பெயராய்ப் பின், அஃது உள்ள ஊர்க்கும் ஆயினமை பெறப்படும். `தில்லையில் உள்ள அந்தணர் மூவாயிரவர்` என்பதுபோல, `திருவாவடுதுறையில் உள்ள அந்தணர் ஆயிரவர்` என்பது மரபாதல் இத்திருப்பாடலால் பெறப் படுகின்றது. ஒன்று - ஒருசொல். மாதிமை - பெருமை. ``மாதிமையே`` என்ற ஏகாரவினா, எதிர்மறை குறித்து வந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
திண்டோள் புணர நினைக்குமே. 

பொழிப்புரை :

என் மகள் நறுமணம் கமழும் சோலைகளும், அழகிய மேல்மாடிகளை உடைய மாளிகைகளை உடைய வீதிகளும் சூழ்ந்துள்ள, ஒளிவீசும் மதில்களால் அழகு செய்யப்பட்டுள்ள சாத்தனூரில் உள்ள உண்மையான வேதநெறியில் வாழும் சான்றோர் கள் வணங்குகின்ற, ஏனைய தேவர்களுக்கு முற்பட்ட பழைமை யனாகிய, அழகிய ஆவடுதுறை என்ற கோயிலில் உகந்தருளி யிருக்கும் குணபூரணனாகிய எம்பெருமான் பெருமையை உள்ளவாறு அறியும் ஆற்றல் இலளாய் அவனுடைய பொன்நிறமுடைய நீண்ட வலிய தோள்களைத் தழுவநினைக்கின்றாள் - என்று தன்மகள் நலம் வினவிய அயலக மகளிருக்குத் தாய் கூறியவாறு.

குறிப்புரை :

மாதி - மாது உடையவள்; தலைவி. மாது - அழகு. ``மாதி`` என்றது ``அறிகிலள்`` என்பதனோடு இயையும். மெய்ச் சுருதி- உண்மை நூலாகிய வேதம். அதன் விதிவழியோர், அந்தணர். புராணன் - பழையோன்; என்றது, `முற்பட்டவன்` எனப் பொருள் தந்து, அமரர்களையும் தோற்றுவித்தோனாதல் குறித்தது. ``நீதி`` என்றது பெருமையை; அதனை அறியாதவளாய் அவன் திண்தோள் களைப் புல்ல நினைத்தாள்; இது கூடுவதோ` என்றபடி. இக்கூற்றால், இவ்வாசிரியருக்கு இறைவன் திருவருட்கண் உள்ள வேட்கை மிகுதி புலனாகும். ``அறிகிலள்`` என்றது முற்றெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

நினைக்கும் நிரந்தர னேயென்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
தருணேந்து சேகரன் என்னுமே. 

பொழிப்புரை :

நல்லநெற்றியை உடைய பெண்களே! என்மகள் எம்பெருமானை விருப்புற்று நினைப்பவளாய் `எக்காலத்தும் நிலை பெற்றிருப்பவனே` என்று அவனைப்பற்றிப் பேசுவாள். பிறைச் சந்திரனுடைய அழகினைக் கொண்ட சிவந்த சடையில் மறைந் திருக்கும் கங்கைநீர் ஈரமாக்குகின்ற பெருமானுடைய கொன்றைப்பூங் கண்ணியின்மீது விருப்பம் கொண்டு பேசுவாள். மனத்திற்கு இன்ப வெள்ளத்தை அருளுபவனாய், பார்வதியை மணந்த குணபூரணனாய், வளமான சாத்தனூரில் விருப்புடையவனாய் அவ்வூரிலுள்ள ஆவடு துறை என்ற கோயிலில் உகந்தருளியிருக்கும் பிறைசூடி என்று எம் பெருமானைப் பற்றிப் பேசுவாள் - என்று செவிலி தன் மகள் நிலையை வினவிய அயலக மகளிருக்கு உரைத்தவாறு.

குறிப்புரை :

``நினைக்கும்`` என்றது முற்று. நிரந்தரன் - நிலை பெற்றிருப்பவன். நிலாக் கோலம் - நிலாவினால் உண்டாகிய அழகு. நயம் - விருப்பம். பேசும் - வெளிப்படையாக எடுத்துச் சொல்வாள். ``நங்கைமீர்`` என்றது முதலியன, தலைவி கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியது. ``நங்கைமீர்`` என்றதனைச் செவிலி கூற்றெனினும் இழுக்காது. ``மனக்கு`` என்றதில் அத்துச்சாரியை தொகுத்தல். மனக்கு இன்ப வெள்ளம் - என் மனத்துக்கு இன்ப வெள்ளமாய் இருப்பவன். ``நம்பி, இன்பன், தருணேந்து சேகரன்`` என்றவை, ஒரு பொருள்மேற் பல பெயர். ``சாந்தையூர்`` என்றதில், ``ஊர்`` என்றது, அதன்கண் வாழ்வாரை. தருண இந்து சேகரன் - இளமையான சந்திரனை அணிந்த முடியை உடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தருணேந்து சேகர னேயெனுந்
தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
திலக நுதலி திறத்திலே.

பொழிப்புரை :

பெரும்பரப்புடைய காவிரியின் தென்கரையில் அமைந்த சாத்தனூரில் மெய்ப்பொருளிலேயே ஈடுபட்டமனத்தை யுடைய அடியவர்கள் வழிபட, புகழும் செல்வமும் நிறைந்த ஆவடு துறைக் கோயிலுள் அருளை வழங்கிக் கொண்டு வீற்றிருக்கும், ஆளும் தகுதியைஉடைய தலைவனே! என்மகள் `பிறையைத் தலையில் சூடியவனே` என்று உன்னைப் பலகாலும் அழைக்கிறாள். திலகம் அணிந்த நெற்றியைஉடைய என்மகள் திறத்தில் மாத்திரம் தெளிந்த அறிவினைஉடைய உன்மனம் இரக்கம் கொள்ளாமல் கல்போல இருப் பதன் காரணம்யாது? - என்று தாய் பெருமானிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த - தெளிந்த. அருள் நேர்ந்து - அருளைத் தர இசைந்து. தெருள் நேர்ந்த சித்தம் - இவளது துன்பத்தைத் தெளிய உணர்ந்த மனம். `மனம்` என்பதை, `உனது மனம்` என உரைக்க. வலியவா - கடிதாய் இருந்தவாறு. இதனை இறுதி யில் வைத்து, `வருந்தத் தக்கது` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இதனுள், ``தருணேந்து சேகரனே`` என்பது ஒன்றும் தலைவி கூற்று. ஏனைய, செவிலி கூற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

திலக நுதல்உமை நங்கைக்கும்
திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
அணியும்வெண் ணீறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே. 

பொழிப்புரை :

வயல்வளம் பொருந்திய அழகிய குளிர்ந்த சாத்தனூர்க்கு அரசே! என்மகள் `நெற்றியில் திலகம் அணிந்த உமா தேவிக்கும் திருவாவடுதுறைக் கோயிலில் உகந்தருளியிருக்கும் குண பூரணனான எம்பெருமானுக்கும் அடிமைசெய்யும் கூட்டமான அடியவர்களுக்கு அடியேனை ஆட்படுத்து. என்னைத்தனக்கு அடிமையாகக் கொண்ட குணக்கடலாகிய எம்பெருமானை அல்லது யான்வேறு ஒருதெய்வத்தை அறியேன் என்று பலகாலும் கூறுகிறாள். வெண்ணீறு அணிதலும் திரு ஐந்தெழுத்தை ஓதுதலும் அல்லாமல் அவள் வேற்றுச் செயல் எதனையும் செய்கின்றாள் அல்லள். அவளுடைய இந்தநிலைமாறி அவள் பழைய நிலைக்கு வருதலுக்கு யான் செயற்பாலது யாது? - என்று செவிலி இறைவனிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

`குலம்` என்பது, ககரம் பெற்று, ``குலகம்`` என வந்தது; `கூட்டம்` என்பது பொருள். அம்மையை வேறு கூறியது, `அவளோடு உடனாய் நின்று காட்சி வழங்கும் அவன்` என்பது உணர்த்துதற்கு. கொடுத்து - கொடுத்தமையால். ``வெண்ணீறு`` என்றதற்கு, `அதனைப் பூசுதலும்` எனவும், ``அஞ்செழுத்து`` என்றதற்கு, `அதனைச் சொல்லு தலும்` எனவும் உரைக்க. ``வேந்தன்`` என்றது, சிவபிரானை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வேந்தன் வளைத்தது மேருவில்
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி
கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
யான்செய்கை யார்அறி கிற்பரே.

பொழிப்புரை :

`சிவபெருமானே! வானத்தில் உலாவிக்` கொண் டிருந்த மதில்களால் சூழப்பட்ட மூன்று கோட்டைகளும் சாம்பலாகு மாறு மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகியை வில் நாணாகக் கொண்டு, சிவந்தகண்களை உடைய திருமாலை அம்பாகக் கொண்டு, வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட, பிரமனைத் தேர்ப்பாகனாக உடைய தேரினைச் செலுத்திய சாத்தனூர்த் தலைவனே! உன் அருளே அடியேனுக்குக்கதி` என்று என் மகள் பலகாலும் கூறுகிறாள். அவள் திறத்துத் தண்ணீரினால் குளிர்ந்த திருவாவடுதுறை என்னும் கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் செய்யநினைத்திருக் கின்ற செயலை யாவர் அறியவல்லார்? - என்று மகள் நலம் வினவிய அயலக மங்கையருக்குத் தாய் கூறியவாறு.

குறிப்புரை :

`நாண் அரவு` எனவும், அருள் கதி` எனவும் மாறிக் கூட்டுக. போந்த மதில் அணி - வானில் திரிந்த மதில்களைக் கொண்ட. `வேதப் புரவித் தேர்ச் சாந்தை முதல் வேந்தன்` என முன்னே கூட்டி, `முப்புரம் பொடியாட` என்பதனை அதன்பின் வைத்து உரைக்க. அருள்கதி என்றதற்கு, `அவனது அருளே எனக்குப் புகல்` எனப் பொருள் கூறுக. ``தையலை``என்றது, ``செய்கை`` என்னும் தொழிற் பெயரோடு முடியும். ஆம் - நீர். `அதனால் உண்டாகிய தண்மையை உடைய திருவாவடுதுறை` என்க. செய்கை - வருந்தச் செய்தலை. `யார் அறிகிற்பர்` என்றது, `அறிந்து நீக்க வல்லார் யார்` என்றதாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
கருணால யாவந்தி டாய்என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
துறையாளி பேசா தொழிவதே. 

பொழிப்புரை :

`பாவிகளே` நாங்கள் வேள்வியை முழுமையாக நிறைவேற்றி வைப்போம் என்று சொல்லி வேள்வியை நடத்தப்புகுந்து வீரபத்திரர் வந்த அளவில் வேள்விச்சாலையிலிருந்து எழுந்து ஓடி அழிந்த அந்தத் தேவர்களின் சொற்கள் பயன்படாமல் போனதுபோல, நீங்கள் இந்த உடலால் எம்பெருமான் திருத்தொண்டினைவிடுத்து வேற்று உலகியல் செயல்களில் ஈடுபடும் செய்தி பயன்தாராது வீணாகும்` என்று இந்தத் தூய்மையான சொற்களைஉடைய என்மகள் பலகாலும் கூறுகிறாள். `எங்கள் கல் போன்றமனத்தைப் பழம்போல மென்மையுடையதாக்கிய கருணைக்கு இருப்பிடமான எம் பெருமானே! அடியேனுக்கு அருளவருவாயாக` என்று என் மகள் அழைத்தால், `மேம்பட்ட திருவாவடுதுறையை ஆள்பவனே! அவள் அழைத்தலுக்கு நீ ஒன்றும் பேசாமல் இருப்பது உனக்கு ஏற்ற தன்மையோ?` - என்று தாய் இறைவனிடம் வேண்டியவாறு.

குறிப்புரை :

கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க) வல்லோம். எடுத்து - அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று ஓடி அழிந்த. சொல் - அத்தேவர்களது புகழ். பயன் தருவது, ``பயன்`` எனப்பட்டது. முன்னர்ப் போந்த சொற்குறிப்பால், `அவர் புகழ்கள் பயன் தருவனவாகா` என்பது பெறப் பட்டது. ``பாவிகாள்`` என்றது, அவர் புகழ்களைப் பயன் தருவனவாகக் கருதிச் சொல்லு வோரை. ``எனச் சொல்லிச் சொல்லும்`` என்றது, `என்று பலகாற் சொல் கின்ற` என்னும் பொருட்டாய் நின்றது. `இத் தூமொழியாளது கற் போலும் மனத்தை` என்க. என்றால் - என்று அவள் அழைத்தால். ``பெற்போ`` என்றதை இறுதியிற் கூட்டுக. பெற்பு - பெற்றி; தன்மை. பெற்போ - உனக்கு ஏற்ற தன்மையோ.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும்
உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை யெய்திநின்
றிறுமாக்கும் என்னிள மானனே. 

பொழிப்புரை :

அழிதல் சிறிதும் இல்லாத செல்வன் கழல்ஏத்தும் செல்வத்தை உடைய சாத்தனூரில் உள்ள அழகிய ஆவடுதுறைக் கோயிலில் இன்பவெள்ளத்தில் மூழ்கிய, எனக்கு அன்னைபோன்று இனிய என் இளமான் போன்ற மகள் நீங்குதல் சிறிதும் இல்லாது ஆவடு துறைப் பெருமானுடைய உண்மை இயல்புகளைவிடாது சொல்லிக் கொண்டிருப்பாளாய்,ஊறிக்கொண்டிருக்கும் பேரின்ப வெள்ளத்தை யும், வற்றுதல் சிறிதும் இல்லாத காவிரித் தீர்த்தத்தையும் கோடிக்கணக் கான முனிவர்களையும், கணக்கற்ற இறைவனுடைய திருவுரு வங்களையும் குறைபாடு இல்லாத வகையில் அடைந்துநின்று அன் பால் எங்கள் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காத வகையில் பெரு மிதம் கொண்டுள்ளாள் - என்று தாய் தன்மகள் நிலைபற்றி அயலக மகளிரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

ஒழிவு ஒன்று இல்லா - நீங்குதல் சிறிதும் இல்லாத. உண்மை வண்ணம் - (ஆவடுதுறைப்பெருமானது) உண்மை இயல்புகள். உலப்பிலள் - விடாது சொல்வாளாகிய இவள்; இஃது ``ஆடினாள்`` என்பதனோடு இயையும். இன்பவெள்ளம் - இன்பப் பெருக்கு. மொழிவு ஒன்று இலாப் பொன்னி - சொல்லப்படுதல் சிறிதும் இல்லாத மிக்க பெருமையையுடைய காவிரி. ``முனி`` என்றது, அஃறிணை வாய்பாடாய்ப் பன்மை குறித்து நின்றது. `முனிகளது மூர்த்தி` என்க. மூர்த்தி - வடிவம். `முனிகள் கோடி கோடி` என்னாது. அவர்களது `வடிவு கோடி கோடி` என்றார், அவர்கள் இருந்து தவம் புரியும் காட்சியது சிறப்புணர்த்தற்கு. `திருவாவடுதுறை நவகோடி சித்தபுரம்` எனக் கூறப்படுதல். இங்கு நினைக்கத்தக்கது. `வெள்ளமும், தீர்த்தமும், மூர்த்தியும் அழிவில்லாத சாந்தையூர்` என்க. சாந்தையூர் அணி ஆவடுதுறை - சாந்தையூரால் அழகுபடுத்தப்படும் திருவாவடு துறை. இங்கு, `துறை` என்றது, துறைக்கண் உள்ள நீரை. `ஆடினாள்; அதனால், இழிவொன்றிலாவகை (மேன்மையானநிலை) எய்தி இறுமாக்கின்றாள்` என உரைக்க. ஈற்றில். `அன்னையே` என்பது, `அனே` எனக் குறைந்து நின்றது, மகளை, `அன்னை` எனக் கூறும் மரபு வழுவமைதி, அகப்பாட்டுக்களில் பயின்று வரும். `இளமானளே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

மானேர் கலைவளை யுங்கவர்ந்
துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
கருத்தை முடித்திடுங் குன்றமே. 

பொழிப்புரை :

தேன்போன்ற இனியவனே! அமுதம்போலப் புத்துயிர் அளிப்பவனே! என் உள்ளமே உறையுளாகக் கொண்டவனே! சிவலோகத் தலைவனாகிய என் செல்வமே! பசுக்கள் ஒலித்துக் கொண்டு மூழ்கும் நீரை உடைய காவிரியாற்றங் கரையிலமைந்த அழகிய ஆவடுதுறையில் உகந்து குடியிருக்கும் அடியார் தலைவனே! உன்னுடைய உண்மை அடியவர்களுடைய உள்ளங்களின் விருப் பங்களை நிறைவேற்றிவைக்கும் அருட்குன்றே! இத்தகைய இனிய பண்புகளையும் செயல்களையும் உடைய நீ மான்போன்ற என்மகளுடைய அழகிய உடையையும் கவர்ந்து அவள் உள்ளத்தையும் உன்வசப் படுத்துவதற்கு என்னநீதி உள்ளது? - என்று செவிலி இறைவனிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

மான் - மான்போன்றவளாகிய என்மகளது. ஏர் கலை - அழகிய உடை. வழக்கு உண்டே - நீதி உண்டோ. ஆனே அலம்பு - ஆக்களே, ஒலிக்கின்ற; ஆவடுதுறை என்க. ``ஆனே`` என்றதனை இறைவனுக்கு ஏற்றி உரைப்பாரும், `அவ்விடத்தே` என உரைப்பாரும் உளர். `ஆவடு துறைக் குன்றமே` என இயைக்க. இப்பாட்டு முழுதும் செவிலி கூற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

குன்றேந்தி கோகன கத்தயன்
அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்பு புனற்பொன்னி
அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
நவலோக நாயகன் பாலளே. 

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகப்பிடித்த திருமாலும், தாமரையில் தங்கும்பிரமனும் உணர முடியாத உன் திருவருள் நெறியிலே என்னையும் சேர்த்து விட்டாயே என்று மனம் பலவாறு வருந்திப் பெருமானை அழைக்கிறாள். இளங்கொடி போல்வாளாகிய என் மகள் என் கட்டுப்பாட்டைக் கடந்துவிட்டாள். ஒலிக்கும் நீரை உடைய காவிரிக்கரையில் அமைந்த அழகிய ஆவடு துறையை அடைந்து விட்டாள். இவள் நம் கட்டுப்பாட்டுக்கு அடங்கிய வள் அல்லள். புதிய உலகங்களுக்கும் தலைவனாகிய எம் பெரு மானைச் சார்ந்தவள் ஆயினாள். இவள் செயல் நமக்கு நன்றாக இருக் கிறதா? - என்று தாய் தன்னைச் சேர்ந்தவரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

குன்றேந்தி - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்; திருமால். கோகனகத்து அயன் - தாமரை மலரில் இருக்கும் பிரமன். இவ்விருவரும் அறியா நெறி, சிவஞானநெறி. எல்லை - உலக முறைமை. `பொன்னியை ஆவடுதுறைக்கண் ஆடினாள்` என்க. `ஆடினாள்; அன்றே இவள் நம்பரம் அல்லள்: நன்றே நவலோக நாயகன் பாலளே` எனக் கூட்டுக. பரம் - சார்பு. நவம் - புதுமை; இங்கு வியப்பைக் குறித்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.

பொழிப்புரை :

`பாலும் அமுதும் தேனுமாக எனக்கு ஆனந்தம் தந்து என் மனத்தினுள்ளே நின்று இன்பம் கொடுத்தருளி என் அருமையான உயிரிடத்து இன்பத்தை விளைவிப்பவனாய்த் திரிபுரம், இயமனுடைய உடல், மன்மதனுடைய உடல் இவற்றை அழித்த வனாய், சேல்மீனும் கயல்மீனும் விளையாடும் காவிரிநீரை உடைய திருவாவடுதுறை மன்னனாகிய எம் பெருமானோடு விளையாடு வதற்கே என் மகள் முற்படுகிறாள். இதுவே உண்மையான செய்தி. இந்தப்பெண் தான் வகுத்துக்கொண்ட இந்த வழியிலிருந்து விலக மாட்டாள் என்பதனை அறிந்தோம்` என்று தாய் தமரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

``தேனுமாய்`` என்ற ஆக்கம், உவமை குறித்து நின்றது. ``உள்ளே`` என்றதன்பின், `நின்று` என ஒரு சொல் வருவிக்க. `என் ஆருயிர்க்குப் போகமாம் புரன்` என்க. போகம் - சிவபோகம்; அதனையுடைய புரம், சிவலோகம். காலன், காமன், புரம் இவர்கட்கு அந்தகன் என்க. அந்தகன் - முடிவைச் செய்பவன். ஆலும் அதற்கே முதலும் - விளையாடுகின்ற அதற்கே முந்துவாள். போலும், ஆம் அசை நிலைகள். பொய்யாதது - மெய்யாகக் கூறிய சொல். ``பொய் யாதது`` என்ற சொல். முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என் மெல்லியல் இவளே. 

பொழிப்புரை :

`சேல் மீன்கள் உலாவுகின்ற வயல்களை உடைய திருவிடைக் கழியில் திருக்குராமரத்தின் நிழலின்கீழ் நின்ற திருக்கோலத்தில் காட்சி வழங்கும் வேல் தங்கிய நீண்ட கையினை உடைய அரசனாகியவனும், பார்வதியின் புதல்வனும், வானத்தில் தங்கும் தேவர்கள் இனம் முழுதும் ஆள்பவனும், வள்ளியின் கணவனும், செந்நிறத்தவனும் ஆகிய குமரவேள் மயக்கம் தங்கும் மனத்தை எனக்கு நல்கி என்கைகளில் யான் அணிந்திருந்த சங்கு வளையல்களைத் தான் கவர்ந்து விட்டான்` என்று பெண்மையே இயல்பாக உடைய என்மகள் பேசுகிறாள் - என்று தலைவியின் தாய் அவள் நலம் பற்றி வினவிய அயலக மகளிரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

மால் உலாம் மனம் - மயக்கம் நிகழ்கின்ற மனம். ``தந்து`` என்றது, `என் மனத்தை அத்தன்மையதாக்கி` என்றவாறு. சங்கம் - சங்க வளையல், தேவர் அனைவரையும் சேனைகளாக்கித் தான் அவற்றுக்குப் பதியாய் நிற்றலின், `தேவர் குலமுழுது ஆளும் குமரவேள்` என்றாள். குரா, ஒரு மரம். ``என் சேந்தன்`` என்றாள், காதல் பற்றி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன்நல் லழகன்நம் கோவே. 

பொழிப்புரை :

இளையகாளை போல்வானும், சோற்றுத்திரளை உண்ணும் பெரியயானைமீது மேலே குடைகவிப்ப இருபுறமும் கவரிவீசப் பொற்குன்றம் போன்று வருவானாய்த் தன்னைக் காண்பார் உள்ளத்தைக்கவரும் கள்வனும், நல்ல விளக்கம் பொருந்திய மாளிகைகளால் சூழப்பட்ட திரு இடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமரத்தின் நிழலின் கீழ் எழுந்தருளியிருப்பவனும், குவளைமலர் போன்ற கண்களைஉடைய நங்கையாகிய தெய்வயானையாருக்கும் வள்ளிநாச்சியாருக்கும் கணவனும் இளையோனும், பேரழகனும் ஆகிய நம் தலைவனாம் முருகன் இந்த என் பெண்ணுடைய கச்சினை அணிந்த இளையமெல்லிய கொங்கை பசலைநிறம் மிகுமாறு செய்து அவளுடைய அழகினைக்கவர்ந்து விட்டான்.

குறிப்புரை :

வார் - கச்சினையுடைய. பீர் - பசலை. ``இவளை எழில் கவர்ந்தான்`` என்றது, `பசுவைப் பால்கறந்தான்` என்பது போல நின்றது. கவளம், யானை உண்ணும் உணவு. எழிலைக் கவர்ந்தமை பற்றி, `கள்வன்` என்றாள்; எனினும், இஃது இகழ்ந்ததன்று; புகழ்ந்து கூறிய காதற் சொல்லேயாம். திவள் அம் மாளிகை - ஒளி வீசுகின்ற அழகிய மாளிகை. ``நங்கையாள்`` என்றது தலைவியை. நயக்கும் - விரும்புகின்ற. குழகன் - இளைஞன். ``நங்கை யானைக்கும்`` எனப் பாடம் ஓதி, அதற்கு, `தெய்வயானை` என உரைப்பாரும் உளர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன்
காவனற்சேனை யென்னக்காப் பவன்என்
பொன்னைமே கலைகவர் வானே
தேவினற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூருஞ்
சுப்பிர மண்ணியன் றானே.

பொழிப்புரை :

தேவர்களுக்கு மேம்பட்ட தலைவனாய்த் திரு விடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமர நிழலின்கீழ் நின்ற திருக்கோலத்தில் காட்சிவழங்குபவனாய், தோகைகளைஉடைய பெரிய ஆண்மயிலை வாகனமாக உடைய சுப்பிரமணியப்பெருமான், எல்லோருக்கும் தலைவனாய், பவளநிறத்தனாய், இளையவனாய், திருமணக்கோலம் கொண்டவனாய், அடியார் கூட்டங்கள் சூழ்பவனாய், பகைவர்களைவெல்லும் கோழிக்கொடியை உடையவனாய், காவலைச் செய்யும் பெரிய சேனையைப்போல எல்லோரையும் காப்பவன் என்று சொல்லப்படுபவனாய் இருந்தும் என் திருமகள் போன்ற மகளின் மேகலையைக் கவர்ந்து அவளைக் காவாது விடுத்த காரணம் அறிகிலேன்.

குறிப்புரை :

கோ வினை - தலைமைச் செயல்களையுடைய, பவளக் குழ - பவளம்போலும் நிறத்தையுடைய குழவியாகிய இவை இரண்டும், ``கோழி வெல்கொடியோன்`` என்பதனோடே முடியும். மணக் கோலக் குழாங்கள், தேவருலக மகளிர் குழாங்கள், இவர்கள் முருகனால் மாலை சூட்டப்படுதலை விரும்பி அவனைச் சூழ்ந்து நிற்பர் என்க. ``ஒரு கை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட`` என்ற திருமுருகாற்றுப்படை(அடி 116 - 117)யைக் காண்க. காவன் - கற்பகச் சோலையையுடைய இந்திரன். `அவனைச் சூழ்ந்தவரையும் சேனை யாகக் கொண்டு காப்பவன்` என்க. இனி, `அமரரை` என ஒரு சொல் வருவித்து, `காவல் நற்சேனையென்னக் காப்பவன்` என உரைப்பினும் ஆம். இனி, வேறு உரைப்பாரும் உளர். `கவர்வானே` என்றது, `கவர்தல் பொருந் துவதோ` என்றவாறு. `அமரர்களை வருந்தாமற் காப்பவன், என் மகளை வருந்தச் செய்தல் பொருந்துமோ` என்றதாம். ``தே`` என்பது அஃறிணைச் சொல்லாய்ப் பன்மை குறித்து நின்றது. தே - தெய்வம். தூவி - சிறகு. பீலி - தோகை. `சுப்பிர மண்ணியன்` என்றதில் ணகர மெய் விரித்தல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தானமர் பொருது தானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலஇளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே. 

பொழிப்புரை :

அசுரர்கள் படை சூரபதுமனோடு சேர்ந்து போர் செய்து மடியத் தான் போரிட்டுச் சூரபதுமனுடைய மார்பினைப் பிளந்தவனாய், மான் தங்கியிருக்கும் பெரிய கையினை உடைய வள்ளலாகிய சிவபெருமானுடைய மகனாய், வேதங்களில் மிகுதியாகச் சொல்லப் படுகின்ற ஓதல், ஓதுவித்தல் வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு அறங்களும் வளருமாறு, வண்டுகள் தங்கியிருக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ் நின்ற, தலைமை வாய்ந்த கூத்தப்பிரானுடைய குலத்தில் எல்லோராலும் விரும்பப்படும் இளைய யானை போல்வானாகிய முருகப் பெருமான் என்னுடைய பூங்கொடி போன்ற மகளுக்குத் துயர் விளைக்கும் செயல் அவன் நற்பண்புக்கு ஏற்றதாகுமா?

குறிப்புரை :

தானவர் - அசுரர். `வானவர் சேனை மடிய` எனப் பாடம் ஓதி, அதற்கியைய உரைத்தல் பொருந்தாமை அறிக. மறை நிறை - வேதத்தின்கண் நிறைந்துள்ள. செம்மையுணர்த்தும் `சட்ட` என் னும் இடைச்சொல்லில் அகரம் தொகுத்தலாயிற்று, ``சட்டோ நினைக்க மனத்தமுதமாம் சங்கரனை`` (தி.8 - கோத்தும்பி. 7.) என்றதிற் போல சட்ட அறம் - செம்மையான அறம். `அறம் வளர நின்ற இளங் களிறு` என இயையும். ``கோன்`` என்றதும், கூத்தனையே குறித்தது. அமர் கூத்தன் - விரும்பப்படும் கூத்தினையுடையவன். குலம் - மேன்மை. கணபதி மூத்தகளிறாதல் பற்றி முருகனை, `இளங் களிறு` என்றாள். ``மானமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை`` என முன்னர் கூறிப் பின்னரும், ``கூத்தன் குல இளங்களிறு என்றது. `உயிர்களின் இடரைப் போக்குதற்குக் கூத்தினை விரும்பி ஆடும் அவன்மகன், என் மகளுக்கு இடர் பயப்பது குண மாகுமோ` என்னும் கருத்தைத் தோற்றுவித்தற் பொருட்டாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளா தழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற் றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே. 

பொழிப்புரை :

பெருமைபொருந்திய கூட்டத்தவரான அந்தணர் களும் தேவர்களும் நில உலக உயிர்களும் தீங்கினின்றும் பிழைக்கு மாறும், அடியேனாகிய யானும் வாழுமாறும், உறுதியான அழகிய மாடிவீடுகளை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ்நின்ற, இரத்தினங்களின் தொகுதிகளை அடித்துக்கொண்டு வரும் நீர்ப்பெருக்கை உடைய கங்கா தேவியின் மகனும், கணபதியின் தம்பியும் ஆகிய முருகப்பெருமான், நற்குணங்கள் தன்னைச் சேர்ந்து அழகு பெறுதற்குக் காரணமான சிறுமியாய்க் கொவ்வைக்கனிபோன்ற சிவந்தவாயினை உடைய என் மகள், தன் அருள் முழுமையாகக் கிட்டாமையால் உறும் துயரத்தைத் தன்மனத்தில் ஏற்று அதற்குப் பரிகாரம் தேடாமல் இருப்பது, அவனுக்கு அழகிய செயல் ஆகுமா?

குறிப்புரை :

குண மணிக் குருளை - நற்பண்பினையுடைய சிறந்த வீரமுடைய சிறுவன்; முருகன். ``குருளை`` என்றது சிங்கக் குட்டியை. இஃது உவம ஆகுபெயராய், அதுபோலும் சிறுவனைக் குறித்தது. `குறிக்கொளாதது என்பது குறைந்து நின்றது. மணம் அணி மறையோர் - மங்கல விழாக்களை அழகு படுத்துகின்ற அந்தணர். மறையோரை வையத்தாரினின்று வேறு பிரித்தது, சிறப்புப் பற்றி. `வாழ நின்ற` என இயையும். `திண்ணம்` என்பது இடைக்குறைந்து, ``திணம்`` என வந்தது, `திண்மையாகிய மாடம்` என்க. கண மணி - கூட்டமாகிய இரத்தினங்களையுடைய பின். இளங்கிளை - தம்பி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட
ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக்
கருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 

பொழிப்புரை :

தன் அடியவருக்குச் சுற்றமாக உதவும் இளைய குமரனாய், கிரவுஞ்சமலையைப் பிளந்த ஆண்மைத் தன்மை உடையவனும், என்றும் அழிதல் இல்லாத வேலினை ஏந்திய செல்வனும், வளைந்த இளம் பிறையைச் சூடி சிவந்த சடையை உடைய சிவபெருமான் மகனும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலுடைய சகோதரிமகனும், எல்லோரும் மகிழ்ச்சியால் திளைக்கின்ற இளமரச் சோலைகளால் சூழப்பட்ட திருவிடைக்கழியில் திருக்குரா மரத்தின் கீழ்நின்ற மிக இளைய ஆண்யானை போல் பவனும் ஆகிய முருகவேள் இரக்கங்கொண்டு, என்செறிந்த கூந்தலை உடைய சிறுபெண்ணுக்கு அருள் செய்வானோ? மாட்டானோ?

குறிப்புரை :

`இளங்கிளை` என்பதே, `கிளைஇளையன்` என மாறி நின்றது. `இளைய பிள்ளை` என்றவாறு. சேய் - முருகன். `இளங் கிளையாகிய முருகன்` என்க. கிரி, கிரவுஞ்ச மலை. திளை - பலரும் இன்பம் துய்க்கின்ற. முளை இளங்களிறு - மிகவும் இளைய களிறு. ``முருகவேள்`` என்றதை, ``களிறு`` என்றதன் பின்னும், ``பரிந்து`` என்றதை, ``சிறுமிக்கு`` என்றதன் பின்னும் கூட்டுக. பரிந்து - அன்பு கொண்டு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண் டையுறும் வகையே. 

பொழிப்புரை :

வேதநெறியை அறிந்த,வேதம் கூறியநெறியில் வாழும் மக்கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, கட்டமைந்த கொடிய வில்லைக் கையில் ஏந்திய இளையனாய் உள்ள முருகப்பெருமான் திறத்து அழகிய சொற்களைப் பேசும் என்மகள் காம மயக்கம்கொண்டு அவன் திருஉருவினை `எல்லோரும் விரும்பும் சிவந்தசுடரோ? சூரியனோ? மின்னலோ? தூய இரத்தினத்தின் குவி யலோ? அழகுக்கு உயர்நிலையாகிய அரசோ? என்று பலவாறாக ஐயுறுகிறாள்.

குறிப்புரை :

பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு. குழவி - கொழுந்து. சிந்துரம் - செந்நிறப் பொடி. மணி - மாணிக்கம். சுந்தரத்து அரசு - அழகின் தலைமை. முருகன் விற்படையும் உடையனாதலைக் கருதி, ``சிலைக்கை மைந்தன்`` என்றாள். அம் சொல் - அழகிய சொல்; இஃது, அதனையுடையாள்மேல் நின்றது. `ஐயுறும்` என்றது முற்று. `வகை யானே` என உருபு விரிக்க. `அம் சொலாள், மையல் கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய இது, சுடரோ, பரிதியோ ..... என்ன வகைவகையாக ஐயுறும்` என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடியிடை மடல்தொடங் கினளே. 

பொழிப்புரை :

பலவகையினராக எண்ணிக்கையில் மிகுந்த அசுரர் கள் அழியும்படியாகத் தானே சென்று அவர்களுடைய மதில்களை வளைத்துக் கொண்டு பெரிய போரினைச் செய்த முயற்சி உடைய வனும், புகைமிக்க தீயால் திரிபுரம் அழியுமாறு செய்த, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானுடைய புதல்வனும், நாற்புறமும் பரவிய புகழை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ் நின்ற எண்ணிக்கையால் மிகுந்த பல திருப்பெயர்களை உடையவனும் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடிகளை அடைய வேறு வழி கிட்டாமையால், என்மகள் பெண்கள் மடலேறக்கூடாது என்ற பொது விதியை நெகிழ்த்து மடலேற ஆயத்தம் செய்துவிட்டாள்.

குறிப்புரை :

உழிஞை அமர், முற்றுகை இட்டுச் செய்யும் போர். தாளாளன் - வீரன். திகை - திசை. தொகை - எண்: அவை, நூறு, ஆயிரம், நூறாயிரம், கோடி முதலியவாம். நாமம் - பெயர். திருவடிக்கு-திருவடியை அடைதற்பொருட்டு; என்றது `தன்னைப் பணிகொள்ள ஏற்றுக் கொள்ளுதற்பொருட்டு` என்றவாறு. துடி இடை - உடுக்கை போலும் இடையை உடையாள். `கடலன்ன காமம் உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை` (குறள்-1137.) ஆயினும், அவளது பெருந்துயரைப் புலப்படுத்த, `மடல் ஏறத் தொடங்கினள்` என்றாள். `மயல் தொடங்கினள்` என்பதும் பாடம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற்
புறஇத ழாகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்
தறுமுகத் தமுதினை மருண்டே. 

பொழிப்புரை :

வேதநெறியில் உறுதியாக இருக்கும் நன்மக்கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற சிங்கம் போல்பவனாய், அடியார்திறத்து அருள்புரிய விழிக்கும் பன்னிரு கண்களையும் ஆறுமுகங்களையும் உடைய அமுதம் போல்வானாய் உள்ள பெருமானைக் கண்டு காமத்தால் மயங்கி, அவனை அடைய வேறு வழி இல்லாத நிலையில் என்மகள் மடல் எடுக்கத் தொடங்கி விட்டாளாக அதனைக் கண்டு தன்முடியில் அணிந்துள்ள மாலையின் வெளி இதழ்களைக் கூட அவள் ஆறுதல் பெறுமாறு அப்பெருமான் வழங்குகிறான் அல்லன். தன் அருகிலேயே இடம் பெற்றுள்ள அக் குறமகளாகிய வள்ளியம்மையார் கொள்ளக் கூடிய வெகுளியை விட மிகுதியாக அப்பெருமான் இவள் திறத்துத் தன் வெகுளியைப் புலப்படுத்தும் செயல்களும் சொற்களும் உடையவனாக இருக்கிறான்.

குறிப்புரை :

தொங்கல் - மாலை. புறஇதழ் சிறப்பில்லாததாகலின், `அதனையேனும் கொடுத்திலன்` என்றாள். இடங்கொள் அக்குறத்தி திறத்திலும் - தன்பால் இடங்கொண்டு இருக்கும் வள்ளியது தன்மையைக் காட்டிலும், மறத்தொழில் வார்த்தையும் உடையன் - பகைத்தொழிலையுடைய சொற்களையும் இவள் (தலைவி) கூற்றில் உடையனாகின்றான். தன் கணவனை மற்றொருத்தி காதலித்தலை அறியின் அவளிடத்தில் வள்ளியம்மைக்குப் பகையுண்டாதல் இயல் பாதலின், `அவளினும் பகைவார்த்தையை உடையன்` என்றாள். `மாலை கொடாமையேயன்றி` என்னும் பொருள் தருதலின், ``வார்த்தையும்`` என்ற உம்மை இறந்தது தழுவிய எச்சம். மடங்கல் - சிங்கம். ``அமுதத்தினை`` என்றதன் பின்னர், `கண்டு` என ஒருசொல் வருவிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே
விடலையே எவர்க்குமெய் யன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 

பொழிப்புரை :

முருகப்பெருமானுக்கு உண்மையான அன்பர் களாகிய, வேதநெறியைத் தெளிவாக உணர்ந்து பின்பற்றும் சான்றோர் கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, பூக்களைச் சூடிய சுருண்ட மயிரினையும் பிறையைச் சூடிய சடைமுடியையும் முக்கண்களையும் உடைய சிவபெருமானுடைய மென்மையான கொழுந்துபோன்ற மகனாகிய முருகன் விரும்பி உறைகின்ற திருக் கோயிலையும், வளம்நிறைந்த சிறந்த குன்றுகளிடத்தே வளர்கின்ற சோலைகளையும் உடையதாய், எல்லோரும் மகிழும்படியான திருப்பிடவூரில் உள்ள, மருண்ட மானின் விழிபோன்று மருண்ட விழிகளைஉடைய இப்பெண்களுக்கு அருள்செய்யாமல் அவர் களைப் புறக்கணித்துவிடுவானோ?

குறிப்புரை :

``எவர்க்கும் மெய்யன்பர்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `மருள` என்பது, ``மருண்டு`` எனத் திரிந்தது. மல்கு - வளங்கள் நிறைந்த. `கோயிலையும், குன்றத்தையும் உடைய, சோலைகள் வளர்கின்ற திருப்பிடவூர்` என்க. இஃது ஒரு வைப்புத் தலம். திருக்கயிலையில் அரங்கேறிய சேரமான் பெருமானது ஞான வுலாவை மாசாத்தனார் வெளிப்படுத்திய ஊர். ஒருதலப்பதிகத்தில் மற்றொரு தலத்தை நினைவுகூரும் முறைபற்றி இத்தலத்தை இங்கு எடுத்தோதினார். `திருப்பிடவூரில் அருள்செயாவிடுமே` என்க. அருள் செயாவிடுமே - அருள்செய்யா தொழிவானோ. விடலை - காளை. இதனை, ``கொழுந்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக. குருண்ட - சுருண்ட. கோமளக் கொழுந்து - அழகின் குருத்து; என்றது முருகனை. இதனுள், முருகனுக்கு, பிறைச்சடை முடியும், முக்கண்ணும் கூறப் பட்டமை நோக்கற்பாலது. இனி, கோமளம் என்றதனை சிவபிரானுக்கு ஆக்கியுரைப்பினும் ஆம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் லிவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே. 

பொழிப்புரை :

அறியாமையாகிய மயக்கம் நிலவப்பெற்ற மனமே! தூய்மையான சொற்களையே பேசும் தேவர்களின் தலை வனும் செழுமையாகத் திரண்ட சோதி வடிவினனும் ஆகிய சுவாமி எனப்படும் முருகனைப்பற்றிச் செப்புறை என்ற ஊரினைச் சார்ந்த சேந்தன் ஆகிய அடியேன் வளமையாகத் திரண்ட வாயினை உடைய தலைவியின் தாய்மார் கூறும் சொற்களாகச் சொல்லிய இச்சொற்களால் செழுந்தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற உதிக்கின்ற ஞாயிறு போன்ற ஒளியை உடைய முருகப் பெருமானைப் புகழ்பவர்கள், அங்ஙனம் புகழக் கேட்பவர்கள் ஆகியவர்களுடைய எல்லாத்துன்பங்களும் கெட்டுஓடும்.

குறிப்புரை :

கொழுந் திரள் வாய் ஆர் தாய் - செழுமையாய்த் திரண்ட வாயினையுடைய செவிலி. வழிபடுவோர்க்கு வரங் கொடுத்தல் பற்றி அமரரை, ``தூமொழி அமரர்`` என்றார், `செப்புறைச் சொல்` என இயைத்து, `செப்பென்னும் உறை போல்வதாகிய சொல்` என உரைக்க. முருகனாகிய அருமணியைத் தன்னுட் கொண்டிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார். `செப்புரை` எனவும், `செப்புதல்` எனவும் பாடம் ஓதுப. செப்புறை ஊருமாம். வாய்ந்த - பொருந்திய: இதனை, ``கோமகனை`` என்றதனோடு கூட்டுக. `இவை` என்றதில் `இவற்றால்` என உருபு விரிக்க. சுவாமி - முருகன் ``சுவாமியையே`` என்ற ஏகாரம் அசைநிலை `கேட்பார்க்கு` என்னும் நான்காவது, தொகுத்தலாயிற்று. `மனம் இடர்கெடும்` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. ``மாலுலா மனம்`` என்பது, முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் அறிக.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

கூட்டமாக விரிந்த தலைகளையும் அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

குறிப்புரை :

கணம் - கூட்டம். `கூட்டமாக` என ஆக்கம் வருவிக்க. `குடுமியில் உள்ள செம்மணிகளையுடைய` என்க. பல தலைகளை யுடைமை பற்றி, ``கணம்விரி குடுமி``என்றார், கவை நா - பிளவு பட்ட நாக்கு. கறை - நஞ்சு. தாடியைக் குறிப்பதாகிய, `அணல்` என்பது இங்கு, ஆகுபெயராய், வாயைக் குறித்தது. `அனல்` எனவும் பாடம் ஓதுவர், கண் செவி - கண்ணொடு பொருந்தி நிற்கும் காது. பகுவாய் - பிளந்த வாய். பணம் விரி துத்திப் பொறி - படத்தின்கண் பரந்த, `துத்தி` என்னும் பெயரை உடைய புள்ளிகள். மொழுப்பு - உச்சி. மழை - மேகம். `துணர்` என்பது, ``திணர்`` எனத் திரிந்து நின்றது. அரும்பு - தோன்றுகின்ற. `தவழ் பெரும்பற்றப் புலியூர், அரும்பு பெரும்பற்றப் புலியூர்` எனத் தனித் தனி முடிக்க. `புலியூர்த் திருச்சிற்றம்பலம்` என இயையும். திருவளர் - அழகுமிகுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
அஞ்சலென் றருள் செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

இந்தக் கடத்தற்கு அரிய பிறவியாகிய கடலில் கரை காண்பதற்காக நீந்தும் அடியவனாகிய எனக்கு என்னுடன் தோன்றிய ஐம்பொறிகளும் பகையாக உள்ளன. அந்நிலையில் எனக்குத் துணை யாவர் என்று வருந்தினனால், `யானே துணையாவேன். ஆதலின் அஞ்சாதே` என்று அருள் செய்கின்ற சிவபெருமானுடைய கோயில், பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில் தளிர்த்த செந்நெற் பயிர்களிடையே களையாக வளர்ந்ததனால், உழத்தியர்கள் களை யாகப் பிடுங்கிய நீலமலர்க்கொடிகளே வயலின் வரப்புக்களில் காணப் படும் பெரும்பற்றப் புலியூரில் உள்ள இறைவனுடைய அருட்செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமே யாகும்.

குறிப்புரை :

`இப் பௌவநீர்` என இயைத்து, `நீந்துதற்கரிய பிறவி யாகிய கடல்நீரை நீந்துகின்ற ஏழையேனுக்கு` என உரைக்க. ஐவர் ஐம்பொறிகள். `உடன்பிறந்தோர் அனைவருமே பகையாய் விட்டமை யின் எனக்கு யார் துணை` என்றவாறு. கைவரும் பழனம் - பக்கங் களில் பொருந்தியுள்ள வயல்களில். குழைத்த - தளிர்த்த. செஞ்சாலி - செந்நெற் பயிர். `நீலப் பூக்களின் கொடிகளே களைகளாய் உள்ளன` என்றபடி - செய் வரம்பு அரும்பு - வயல்களின் வரப்புக்களில் காணப்படுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும்
தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர
வளரிளஞ் சோலைமாந் தளிர்செந்
தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

தாயைப்போல உயிர்களிடம் இரக்கம் கொள்ளும் தலைவனே எனவும், தன்னுணர்வு இல்லாத அடியேனுடைய தலை வனே எனவும், நாய் போன்ற இழிந்தவனாகிய அடியேன் இருந்து அழைத்து வருந்தினால் இரக்கங்கொண்டு அடியேற்கு நன்மையைச் செய்யும் சிவபெருமானுடைய கோயில், பெண்களுடைய வாய்க்கு ஒப்பாகச் செந்நிறத்தோடு அரும்பும் அழகிய முருக்கமலர் மலர, இள மரங்கள் வளர்கின்ற சோலையில் மாந்தளிர்கள் சிவந்த தீயைப் போலத் தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள அருட்செல்வம் வளர்கின்ற சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

``தாயின்`` என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி, `நேர் நின்று இரங்கும்` என உரைத்தலும் ஆம். ``தலைவ, துணைவ`` என்ற விளிகட்குப் பின்னர் நின்ற ஓகாரங்கள் முறையீடு குறித்து நின்றன. வாயின்ஏர் அரும்பு - மகளிரது வாய்போல எழுச்சி விளங்குகின்ற. மணி முருக்கு - அழகிய முருக்க மலர். நேர் தீயின் அரும்பு - அதன் எதிராக நெருப்புப் போலத் தோன்றுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

துந்துபி, வேய்ங்குழல், யாழ், மொந்தை என்ற தோற்கருவி இவற்றின் ஒலி வானளவும் சென்று ஒலிக்க, முனிவர் குழாம் தொடர்ந்து துதிக்க, நந்திதேவர் தம் கைகளால் முழக்கும் முழவம் மேகத்தைப் போல முழங்கக் கூத்து நிகழ்த்தும் சிவ பெருமானுடைய கோயில், அந்திக் காலத்தில் சொல்லப்படுகின்ற மந்திரங்களை உடைய நான்கு வேதங்களினும் உள் அமைந்த இரகசியப் பொருள்கள் வேதியருடைய உள்ளத்தில் புலனாகின்ற பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.

குறிப்புரை :

துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது ஒலியைக் குறித்தன. வான் இயம்ப - வானளவும் சென்று ஒலிக்க. முழவம் - மத்தளம். அந்தியின் மறை - அந்திக் காலத்திற் சொல்லப் படுகின்ற மந்திரங்களையுடைய (நான்கு வேதங்கள் என்க). மறைப் பொருள் - இரகசியப் பொருள்கள். `மறைப் பொருள் அரும்பும்` என இயையும்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

கண்கள் கண்ணீர் துளிக்க, கைகள் குவித்து, `எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்` என்று கதறி எலும்புக ளெல்லாம் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடி யேனையும் இணைத்துக் கொள்ளும் சிவபெருமானுடைய கோயில், தேன் உண்டு என்பதனைத் தெளிந்த வண்டுகள் பலபல பண்களைப் பாடிக் கொண்டு ஆடக் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடைய பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே யாகும்.

குறிப்புரை :

மொட்டித்து - குவித்து. களைகணே - பற்றுக் கோடான வனே. தெளிதேன் - தேன் உண்மையைத் தெளிந்த வண்டுகள். ஆட - பறந்து திரிய. `சோலையது சூழ் மொழுப்பில்` என்க. சூழ் மொழுப்பு - பரவிய மேலிடம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு
நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
விரிசடை யடிகள்தங் கோயில்
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்
தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

அடியேங்களுடைய உள்ளங்களில் உள்ள துயரங் கள் தீர, எங்கள் உள்ளங்களில் புகுந்து தங்கியிருக்கும் நிலையோடு இருளைக் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட சூரியன் ஒளி வீசுவது போன்று ஒளியை வெளிப்படுத்தும் விரிந்த சடையை உடைய சிவ பெருமானுடைய கோயில், அழகிய ஒளியை உடைய மதிலும் அகழி யும் சூழ்ந்த உள்ளிடத்தில் மணிகளின் வரிசைகளிலிருந்து பரவிய சிவந்த ஒளி விரியும் பெரும் பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச் சிற்றம்பலமே ஆகும்.

குறிப்புரை :

அகம், அந்நெஞ்சின் அகம். `நிலைமையோடு கூடி` என ஒருசொல் வருவிக்க. முதற்றொட்டு, ``எழுந்த` என்பதுகாறும் உள்ளவை, வெஞ்சுடருக்கு அடையாய், இல்பொருள் உவமையாக் கின. வெஞ்சுடர் - பகலவனது வெப்பமான கதிர்கள். சுடர்வ போன்று - வீசுவன போன்று. துளும்பும் - விரிகின்ற. புரிசை -மதில். ``புரிசையும், அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி` என்க. அகம்படி - உள்ளிடத் தில். மணி நிரை பரந்த செஞ்சுடர் - மாணிக்கங்கள் பரந்து கிடத்தலால் உண்டாகின்ற செம்மையான ஒளி. அரும்பும் - தோன்றுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

செம்பூக் குவியல்களின் உருவம்போலச் சிவந்த ஒளியை வெளிப்படுத்திக் கொண்டு, அடியேனுடைய மனத்தில் வந்து எழுந்தருளிய, திருமாலாகிய காளையை உடையவனாய், தூய பளிங்கின் குவியலினின்றும் தோன்றிய காட்சி காணப்படுமாறு போல வெண்ணீற்றொளியோடு நிலை பெற்றிருப்பவன் கோயில், நாவினால் கூட்டமாக ஓதப்படுகின்ற வேதமந்திரங்களை உணர்ந்து ஓமகுண்டங் களிலே நறிய நெய்யை ஆகுதியாக அளித்து வேதியர்கள் வளர்த்த தீயின் குவியல் ஒளிவீசுகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருவளர் சிற்றம்பலமே ஆகும்.

குறிப்புரை :

`தீத்திரளின் உருவம்போல` என, உவம உருபு விரிக்க. புந்தியில் - எமது மனத்தில். ``மால்விடையோன்`` என்றது ஒரு பெயராய், ``வந்த`` என்றதற்கு முடிபாயிற்று. தூத்திரட் பளிங்கில் தோன்றிய தோற்றம் - தூய பளிங்கின் திரளினின்றும் தோன்றிய காட்சி. தோன்ற - காணப்படுமாறு. நா - நாவினால். `சிவபெருமானது திருமேனி பளிங்குபோல்வது, திருநீற்றினால்` என்பது முன்னும் கூறப் பட்டது. `நா ஓர்ந்து` என, ஓர்தல், இங்கு, `ஓதி` என்னும் பொருட்டாய் நின்றது.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

சிறப்புப் பெற்ற வலிய நில உலகம் முழுவதும் ஏனைய திசைகளும் மற்ற அண்டங்கள் அனைத்தும் பெற்றுள்ள அவற்றின் பெருமைகள் யாவும் தனது ஆற்றலுள்ளே மிகச் சிறியன வாய் ஒடுங்கத்தக்க ஆற்றலை உடைய சிவபெருமானுடைய கோயில், இறைவன் பெருமைகளை ஒலித்துக் கொண்டே ஒருவருக்குமுன் ஒருவராய் முற்பட்டு வந்து தேவர்களும் மற்றவர்களும் நீர் அலைக் கின்ற கடலைப் போல அலைவீசுகின்ற, அபிடேகம் செய்யும் தூய்மை யான நீர் நிறைந்து காணப்படும் பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

சீர்த்த - சிறப்புப் பெற்ற. திண்புவனம், மண்ணுலகம். ``திசை`` என்றது. பூமியைச் சூழ்ந்து நிற்கின்ற இந்திரன் முதலியோரது உலகங்களை. போர்த்த - பெற்றுள்ள. தம் பெருமை - அவற்றது பெருமைகள் பலவும். `சிறுமையாய்ப் புக்கு ஒடுங்கும் புணர்ப்பு`என்க. `புணர்ப்பு` என்றது, ஆற்றலை. `எல்லா உலகங்களின் பெருமைகளும் தனது ஆற்றலுள்ளே மிகச் சிறியனவாய் ஒடுங்கத் தக்க பெரியோன்` என்றவாறு. அமரித்து - போரிட்டு; `நான் முன்னே, நான் முன்னே என்று ஒருவருக்கு முன்னே ஒருவராய் முற்பட்டு வந்து` என்பதாம். `கடல்போல இடுகின்ற தீர்த்த நீர்` என்க. திரை - அலைவீசுகின்ற, `அமரரும், பிறரும் தூய நீரால் திருச்சிற்றம்பலத்தில் இறைவனை வழிபடுகின்றனர்` என்றபடி. ``பிறர் என்றதும், வானுலகத்தவரை.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங்
கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

ஒன்றோடொன்று கூடிய சிவந்த சடையும், பிறைச் சந்திரன் தவழ்கின்ற முடியும், பெரிய தம்முடைய கருணையும் ஆகிய இவற்றைக் காட்டி, தாய் தன் குழந்தைக்குத் தேனைக் கலந்து இனிய உணவை விரும்பி அளித்தாற் போல அருள் புரியும் சிவபெரு மானுடைய கோயில், புன்னை மலர்கள் தேனைச் சொரிகின்ற சோலை களினுள்ளே பூக்களைக் கிளறிப் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வண்டுகளின் கூட்டங்கள் பாடும் `தென்ன` என்ற இசையாகிய தேன் பரவிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம் பலமாகும்.

குறிப்புரை :

மொழுப்பு - முடி, `அன்னை அளித்தாங்கு` என இயையும், பொழில் அகம் குடைந்து - சோலைகளின் உள்ளே மலர்களில் மகரந்தத்தைக் கிண்டி.
தென்ன தேன் - `தென்ன` என்கின்ற இசையாகிய தேன். `தென்ன புலியூர்` என்று இயைத்து, `அழகினை யுடைய புலியூர்` என்றும் உரைப்ப.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம்
இருட்பிழம் பறஎறி கோயில்
வம்புலாங் கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

தேவர் உலகமே இவ்வுலகில் காணப்பட்டமை போன்று ஒளியை வெளிப்படுத்துகையினாலே எம்பெருமான் திருக்கூத்து நிகழ்த்தும் இடங்களிலெல்லாம் இருட்டின் வடிவம் நீங்குமாறு அதனை விரட்டும் கோயில், புதுமை வாய்ந்த தலைமை பொருந்திய இல்லங்கள், கோபுரங்கள், கூடங்கள், உயர்ந்த பல நிலைகளை உடைய மாடமாளிகைகள் யாவும் சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

உம்பர் நாடு - தேவர் உலகம். இம்பர் விளங்கியாங்கு - இவ்வுலகத்தில் வந்து விளங்கினாற்போல. எங்கும் ஒளி வளர் - எவ்விடத்திலும் ஒளி பரத்தற்கு ஏதுவான. திருமணிச் சுடர் - அழகிய இரத்தினங்களின் ஒளி. கான்று - உமிழ்ந்து. சூழல் - இடம். `சூழல் எறி` என இயையும். `சூழலாய்` என ஆக்கம் வருவிக்க.
அங்கெல்லாம் - தன் இடமெல்லாம். வம்பு உலாம் கோயில் - புதுமை பொருந்திய தலைமை வாய்ந்த இல்லங்களும், வளர் நிலை - உயர்ந்த பல நிலைகளையுடைய. செம்பொனால் அரும்பு - சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

பெரிய அலைகளால் மோதப்படும் முத்துக்களை உடைய கடல் சூழ்ந்த அகன்ற பூமியில் உள்ள எண்ணற்ற, அழகிய கண்ணாகிய அறிவு இல்லாத இழிநிலையிலுள்ள மக்கள், திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான கருவூர்த் தேவருடைய புறப்பொருள் துறையாகிய கடவுள் வாழ்த்தாகிய இனிய தமிழ் மாலையை உளங்கொண்டு ஏற்றருளும் மேம்பட்ட கருணையை உடைய சிவபெருமானுடைய கோயில், சோலைகளிலே மலர்களைக் குடைந்து வண்டுகள் உறங்கவும் செருந்தி நிலையாக அரும்புகளைத் தோற்றுவிக்கின்ற பெரும்பற்றப்புலியூர் என்ற தலத்திலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

பரவை சூழ் அகலம் - கடல் சூழ்ந்த அகன்ற பூமி. அம் கண் - `அழகிய கண்` எனப்படும் அறிவு. `எண்ணில், புன்மாக்கள்` எனவும், `புன்மாக்கள் அறிவுறு தமிழ்மாலை` எனவும் இயைக்க. திருந்து உயிர்ப் பருவத்து அறிவு உறு - திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான (தமிழ் மாலை என்க). கருவூர்த் தேவரை. ``கருவூர்`` என்றது உபசாரம். துறை - புறப்பொருள் துறை; கடவுள் வாழ்த்துப் பகுதி. `தமிழ் மாலையைப் பொருந்துகின்ற அரிய கருணையை யுடைய பரமர்` என்க. பொருந்துதல் - உளங் கொண்டு ஏற்றல். செருந்தி, ஒருவகை மரம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொழிப்புரை :

கலைகளுடைய பொருள்களும், அக்கலைகளை இயல்பாகவே அறிந்த அறிவுமாய், கற்புக்கடம் பூண்ட நெறியானே என்னைப் பெற்று எனக்கே முலைப்பால் தந்து உதவுகின்ற தாயை விடத் தயையுடையவனாகிய முக்கண்களை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் இடம், மலைகளைக் குடைந்து அமைத்தாற் போன்ற பலமாடிகளை உடைய மாட வீடுகளிலெல்லாம் வேதியர்கள் முறையாக ஓதும் வேதத்து ஒலி நீரை அலைக்கும் கடல் ஒலிபோல ஒலிக்கும் அழகிய குளிர்ந்த நீர் வளம் உடைய களத்தூரிலுள்ள அழகு விளங்கும் திருக்கோயிலாகிய ஆதித்தேச்சரமே.

குறிப்புரை :

``அறிவு`` என்றது. அக் கலைகளின் பொருள்களை அறிந்த அறிவை, ``அறிவுமாய்`` என்ற எச்சம், ``நல்ல`` என்னும் பெய ரெச்சக் குறிப்போடு முடியும். `என்னைப் பெற்று, எனக்கே முலைகள் தந்தருளும் தாய்` என்க. கற்பினில் பெற்றி - கற்புக் கடம் பூண்ட நெறி யானே பெற்று. எடுத்து - கையில் ஏந்தி. ``எனக்கே`` என்ற ஏகாரம் தேற்றம். ``நல்ல`` என்றதில் நன்மை. அருள், போலும், அசை நிலை. மருங்கு, ஏழனுருபு, முறை ஓத்து - ஒலி ஒழுங்கினையுடைய வேதம், `கடல்போல முழங்கும்` என உவம உருபு விரிக்க. களத்தூர்`` என்பது, `களந்தை` என மரூஉ வாக்கப்பட்டது. `ஆதித்தேச்சரம்` என்பது அங்குள்ள திருக்கோயிலின் பெயர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

சந்தன களபம் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

சந்தனச் சாந்து செறிந்த அழகிய திருவுடம்பிலே மிக வெள்ளியதாகிய திருநீற்றை முழுதுமாகப் பூசிக் கொண்டு கூத்து நிகழ்த்தும் சிவந்த தழல் போன்ற உருவத்தோடு விளங்கும் நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானுக்கு உறைவிடம், விறகுகளுக்குப் பயன் படும் மரங்கள் வளரும் மலையில் வெட்டப் பட்ட காடு தீப்பிடித்து எரி வதனைப் போல, ஏழுநிலைகளை உடைய மாடவீடுகளில் அந்தணர் கள் அக்கினியை வளர்ப்பதும், அலையும் நீர் வளம் உடையதும் ஆகிய களத்தூரிலுள்ள அழகு விளங்கும் திருக்கோயிலாகிய ஆதித் தேச்சரம் ஆகும்.

குறிப்புரை :

களபம் - குழம்பு. துதைந்த - செறிந்த, `மேனி முழு தினும் வெண்பொடி ஆடும் உரு` என்க. தவள வெண் பொடி, ஒரு பொருட் பன்மொழி; `மிகவும் வெள்ளியதாகிய பொடி` என்க. தழல் உரு - நெருப்புப்போலும் வடிவம். நெருப்பு, வண்ணம் பற்றி வந்த உவமை. உருவிற் பொலிந்து - வடிவத்தோடு விளங்கி. இந்தன விலங்கல் - விறகு மலை. `விலங்கலாய்` என ஆக்கம் வருவித்து, அதனை, ``எறி`` என்பதனோடு முடிக்க. எறி புனம் - வெட்டப்பட்ட காடு. `ஒத்து` என்றதனை `ஒப்ப` எனத் திரிக்க. ஒப்ப - ஒத்து விளங்கு மாறு. மாடத்துக்கண் என உருபு விரிக்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

கரியரே இடந்தான் செய்யரே யொருபால்
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளுந் தேட
அரியரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

இடப் பகுதி கருநிறத்தவர். மற்றபகுதி செந்நிறத்தவர். கழுத்தில் ஒப்பற்ற எலும்புமாலையைச்சூடிக் கூத்து நிகழ்த்துபவர். சனகர் முதலிய முனிவர்களோடு கல்லால மரநிழலிலிருந்து நூலை ஆராய்பவர். ஒரே உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இருவராய் இருக்கின்றவர். மூன்று கண்களையும் நான்கு தோள்களையும் உடைய இறைவர். வேதங்களும் தேடி அவரை உள்ளவாறு அறிய இயலாதவர். இவை எல்லாம் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூரிலுள்ள அணிதிகழ் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாகும்.

குறிப்புரை :

``ஒரு பால்`` என்றதனை. `மற்றொரு பால்``எனக் கொண்டு, `இடம் கரியரே; மற்றொருபால் செய்யரே` என உரைக்க. `வடம்` என்றதனை, எலும்பின் வடமாகக் கொள்க. இதனால் சிவ பிரான் கழுத்திலும் இவ்வடம் உண்மை பெறப்படும். முரிவர் - வளைவார்; ஆடுவார் - `விளங்குவார்` எனவும் உரைப்பர். முறை தெரிந்து - நூலை ஆராய்ந்து; இவ்வெச்சம்` ``ஆம்`` என்பதனோடு முடியும். முன்பு, ``கரியர், செய்யர்`` என்றது, நிறங்கள் மாத்திரையின் வியந்தது. இங்கு, ``ஓருடம்பினராம் இருவர்`` என்றது. ஆண்மையும், பெண்மையுமாய் நிற்றலை வியந்தது. ``ஆகில்`` என்றது, `இவையெல் லாம் உண்மையாயின்` எனப் பொருள் தந்து, `இவையெல்லாம் உண்மையாதல்போல, அவருக்கு இடமாவது ஆதித்தேச்சரமாதலும் உண்மையாம்` என உவமப் பொருள் தோற்றிநின்றது, ``நீரின்றமையா துலகெனின்`` (குறள்-20.) என்பதிற்போல. ஈற்றில் நின்றதொழிய, ஏனைய ஏகாரங்கள், தேற்றம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

பழையராந் தொண்டர்க் கெளியரே மிண்டர்க்
கரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
பிச்சரே நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொழிப்புரை :

நெடுங்காலமாகத் தொண்டுசெய்துவரும் அடியவர் களுக்கு எளிமையாக அருள் செய்பவர். வன்கண்மை உடையவர்கள் அறிய அரியர். தீவினையை உடைய அடியேன் செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்து அவற்றால் அடியேனுக்குத் தீவினை உண்டாகாத வாறு தடுத்தல் செய்யாத பித்தர், விடமுடைய பாம்பினை ஒளிவீசும் காதணியாக அணிந்து வந்து எம் பரம்பரையை முழுமையாக ஆளும் இளையவர். கங்கைநீர் சடைக்கண் தங்கும் அழகர். இவையெல்லாம் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாம்.

குறிப்புரை :

பழையராந் தொண்டர் - நெடுங்காலமாகத் தொண்டு செய்துவருபவர். மிண்டர் - வன்கண்மை யுடையவர். ``பிணி`` என்றது வினையை, `எனது குற்றமான செயலைப் பொருட் படுத்தாது நீக்கு தலும், அவ்வாற்றால் எனக்கு வினை உண்டாகாமல் தடுத்தலும் செய் யாதவர்` என்றபடி. இதனால், இவ்வாசிரியர் தமது வினையால் தமக்கு உண்டாகிய துன்பத்தை உணர்ந்திருந்தமை பெறப்பட்டது, குழகர் - இளையவர். கங்கை அழகர் - கங்கையை அணிந்த அழகர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய சடையும் திருவாயும் திரு வுடம்பும் பவளம் போலச் செய்யன. உடம்பில் பூசிய திருநீறும் அணிந்த புரிநூலும் பற்களும்வெண்ணிறத்தன. பாம்புகள் அவர் உடம் பில் நெளிகின்றன. ஒரு புறம் புலித்தோல் ஆடை; மறுபக்கம் நல்ல ஆடை. இடப்பகுதியாகத் துடிபோன்றஇடையை உடைய ஒப்பற்ற வளாகியபார்வதியும் இருப்பாள். இவையாவும் உண்மையாவது போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் ஆதலும் உண்மையாம் .

குறிப்புரை :

`முடியும். வாயும். மேனியும் செந்நிற முடையன; திரு மேனிமேற் பூச்சும், முப்புரிநூலும், புன்னகையும் வெண்ணிற முடை யன` என்றவாறு. தவளம் - வெண்மை. களபம் - பூசும் சாந்து; சிவ பெருமான் பூசிக்கொள்ளும் சாந்து திருநீறே. துவளும் - நெளியும். ``கலை`` எனப் பொதுப்படக் கூறியது `தோலாடை` என்றற்கு.
துகில் - நல்லாடை. ``ஒருபால்`` என்றாராயினும். `ஓரொரு பால்` என்பது கருத்தென்க. ஒருத்தி - ஒப்பற்றவள். இடமருங்கில் துடி போலும் இடையை உடைய ஒப்பற்றவளாகிய அவளும் இருப்பாள்` என உரைக்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

நீலமே கண்டம் பவளமே திருவாய்
நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே யென்று
குழைவரே கண்டவர் உண்ட
தாலமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

`கழுத்து நீலநிறத்ததாய் உள்ளது. திருவாய் பவளம் போலச் செய்யது. பற்கள் முத்துப் போல வரிசையாக விளங்குகின்றன. முகம் மிகுதியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அத்தகைய ஒப் பற்ற சிவபெருமானுடைய அழகு, `ஐயோ! பேரழகாய் உள்ளதே` என்று கூறித் தரிசித்த அடியார்கள் மனம்உருகுவார்கள். அவர் உட் கொண்டது விடமே. இவையாவும் உண்மையாக இருத்தல் போலவே அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாம்.

குறிப்புரை :

நீலம் - நீலரத்தினம். நித்திலம் - முத்து. நிரைத்து - வரிசைப்பட வைக்கப்பட்டு.
முறுவல் - நகைப்பு, ``திருமுகம்`` என்றதன்பின், ``இவ்வாறாகலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க, ``கோலமே. அழகிதே`` என்ற ஏகாரங்களில் முன்னது அசைநிலை; பின்னது தேற்றம். அச்சோ, வியப்பிடைச் சொல். குழைவர் - மனம் உருகு வார்கள்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
திறத்தவர் புறத்திருந் தலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
புரியவும் வல்லரே எல்லே
அக்கடா வாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

பல திசைகளையும் அடுத்து இறைவனை எங்கும் தேடி அலைந்து மனம் நொறுங்கி உருகும் அடியவர்கள் உன்னால் ஆட்கொள்ளப் படாமல் இருந்து உடலும் மனமும் மெலிய, கரிய எருமைக் கடாவைப்போல உணர்வற்று இருக்கும் அடியேனை அடிமையாகக் கொள்ள விழைந்து, வேறொரு பிறவியில் பிறந்து பொய்யான உலகியல் பொருள்களில் பொருந்தாதபடி காத்து அடி யேனுக்கு அருள்புரியவும் வல்லவர். இறைவர் கருணைதான் என்னே! அடியேனுக்கு மனஅமைதி உண்டாயிற்று என்றால் அதனை அருளிய வர் உறைவிடம் களத்தூரில் உள்ள அணிதிகழ் ஆதித்தேச்சரமே யாகும்.

குறிப்புரை :

திக்கு அடா நினைந்து - பல திசைகளிலும் அடுத்து நினைந்து; என்றது, (இறைவனை) `எங்கும் தேடி அலைந்து` என்றபடி. இடிந்து - துயருற்று. புறத்து இருந்து - ஆட் கொள்ளப் படாமல் இருந்து, அலச - மெலிய, மைக்கடா - கரிய நிறம் பொருந்திய கடா; எருமைக் கடா; இஃது உணர்வின்மை பற்றி வந்த உவமை. ஆள் - அடிமை. ``ஆளாக`` என ஆக்கம் வருவிக்க. பொய் - நிலையாமை, ``பொய்க்கு` என்ற நான்கனுருபை, இரண்டனுருபாகத் திரிக்க. அடாவண்ணம் - பொருந்தாதபடி. ``புரியவும்`` என்ற உம்மை, சிறப்பு. கல்லில் நார் உரித்தது போன்ற செயலாதல் பற்றி, `வல்லரே` என்றார். ``எல்லே`` என்பது `என்னே` என்பது போன்ற தோர் இடைச்சொல்; இஃது இங்கு இறைவரது கருணையை வியந்த வியப்பின்கண் வந்தது. `அக்கடா` என்பது அமைதிக் குறிப்புத் தருவ தோர் இடைச்சொல்லாய் வழங்கும், கவலையின்றி இருப்பவனை, `அக்கடா என்று இருந்தான்` என்பர். ``அக்கடாவாகில்`` என்றதற்கு, `எனக்கு அமைதி உண்டாயிற்றாயின்` எனவும், ``அவர்`` என்றதற்கு அதற்கு ஏதுவாய அவர்` எனவும் உரைக்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

மெய்யரே மெய்யர்க் கிடுதிரு வான
விளக்கரே எழுதுகோல் வளையாள்
மையரே வையம் பலிதிரிந் துறையும்
மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் கடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

உண்மையடியவர்களுக்கு மெய்ப்பொருளாக இருந்து ஏற்றப்பட்ட விளக்குப் போல அறியாமையை நீக்கி அறி வொளியைத் தருபவர். எழுதப்பட்டன போன்ற வரிகளை உடைய திரண்ட அழகான வளையல்களை அணிந்த உமாதேவியாரை ஒரு பாகமாக உடையவர். ஆதலின் அவ் விடப்பாகம் அவளுடைய கரிய நிறத்தை உடையவர். உலகம் முழுவதும் பிச்சைக்காகத் திரிந்து சுடுகாட்டில் உறைபவர். எல்லார் உள்ளத்தும் அந்தர்யாமியாகக் கலந்து இருந்தபோதிலும் பொய்யர்களுக்குத் தோன்றாதவர். வந்து அடைந்த பளிங்கு போன்ற சீவன் முக்தர்களின் சொல்லாலும் செயலாலும் பக்குவமுடையவர்களுக்கு மெய்யுணர்வை உண்டாக்கும் தலைவர். இவையாவும் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாகும்.

குறிப்புரை :

மெய்யர்க்கு - மெய்ந்நெறியில் நிற்பவர்கட்கு, `இடு விளக்கர்`என இயையும்; `ஏற்றப்பட்ட விளக்குப் போல்பவர்` என்பது பொருள்; அஃதாவது, `இருளை (அறியாமையை) நீக்கி, ஒளியை (அறிவை) த் தருபவர்` என்பதாம். திருவான - அழகான. எழுது கோல் வளையாள் - எழுதப்பட்டது போலும் வரிகளையுடைய திரண்ட வளைகளை யணிந்த உமாதேவி. மையர் - அவளது கரிய நிறத்தை ஒரு பால் உடையவர். ``கோல் வளையை ஆண்மையர் (ஆளுந் தன்மையை உடையவர்) என்றும், `மையலர் என்றது இடைக்குறைந்து நின்றது` என்றும் உரைப்ப. `பொய்யர்க்குப் பொய்யரே` எனக் கூட்டுக; `எல்லார் உளத்திலும் இருந்தும், பொய்யருக்குத் தோன்றாதவர்` என்றபடி. `பளிங்கின் பொருள்` என்ற இன் அல்வழிக்கண் வந்த சாரியை ``பளிங்குபோலும் பொருள்`` என்ற வாறு. பளிங்கு போலும் பொருள் - மாசுதீர்ந்த உயிர்கள் (முத்தான்மாக்கள்) அவற்றின் வழி இருள் கிழித்தெழுதலாவது, சீவன் முத்தர்களது சொல்லாலும், செயலாலும் பக்குவர்களுக்கு மெய் யுணர்வை உண்டாக்குதல். ஐயர் - தலைவர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே யிருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலை நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

குமுத மலர் போன்ற செய்யவாயினர். கருங் குவளைபோலக் கரிய கழுத்தினர். இருகாதுகளில் வலக்காதில் குழையை அணிந்தவர். இடப்பகுதியில் களங்கமற்ற மேகலையை உடையவர். சடையின் மேல் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய பாம்பு நெளிகின்றது. அவருடைய முகமும் கண்ணும் தாமரை போன்று உள்ளன. அவருடைய பாதுகை பொன்மயமானது. அவருடைய நீர்மை களங்கமற்றது. அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சர மாகும்.

குறிப்புரை :

குமுதம், இங்குச் செவ்வாம்பல் மலரைக் குறித்தது. குவளை - நீலோற்பல மலர். களம் - கழுத்து, `குழையது` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. வேண்டும் சொற்கள் வருவித்து, `இருசெவிக்கண்ணும்` என ஈற்றில் தொக்கு நின்ற உருபும், உம்மையும் விரித்து, `ஒரு குழையே இருசெவிக் கண்ணும் உள்ளது` எனப் பொருள் உரைத்து, `இரு செவிகளுள் ஒன்றிலே குழையுள்ளது` என்பது அதனாற் போந்த பொருளாக உரைக்க. குழை உள்ளது வலச் செவியில்; இடச் செவியில் தோடு உளது. விமலம் - தூய்மை. பொறி - புள்ளி. வரி - கீற்று. திருவடிநிலை - பாதுகை; பின்னரும் பாதுகை கூறுவர். நீர் - நீர்மை.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.

பொழிப்புரை :

நீரினது அழகிய ஊறுதலையுடைய ஆதித்தேச்சரம் என்ற கோயிலே, பற்றிய, திருமால் பரவும் பாதுகைகளை உடைய சிவபெருமான் மீது பல சிறப்புக்களும் பொருந்திய கலைகளில் பயின்ற கருவூர்த்தேவர் வேதங்களை ஓதிய தம் பவளம் போன்ற வாயிலிருந்து வெளிப்படுத்திய அமுதம் போன்ற சுவையை உடைய தமிழ் மாலையாகிய அழகு பொருந்திய இப்பத்துப் பாடல்களையும் வல்லவர் அறியாமையைக் கிழித்து அப்புறப்படுத்திய உள்ளத்தின ராவர்.

குறிப்புரை :

நீர் அணங்கு அசும்பு - நீரினது அழகிய ஊறுதலை யுடைய. ``ஆதித்தேச்சரத்துத் திருவடி நிலை`` என இயையும் `திரு வடிக்கும் ஆகாது திருவடிநிலைக்கே ஆகும்` என்பார், ``திருவடி நிலைமேல் மொழிந்த` என்றார். ஆரணம் மொழிந்தவாய் - வேதம் ஓதியவாய்; இவர் தம்மை வேதம் ஓதியவராகப் பின்னரும் குறிக்கின்றார். அமுதம் ஊறிய - அமுதம் சுரந்தது போல இனிமை வாய்ந்த. `தமிழ் மாலைக்கண் உள்ள இரு நான்கு இரண்டு` என்க . ஏர் அணங்கு - எழுச்சி பொருந்திய அழகினை யுடைய. இருநான்கு இரண்டு - பத்து; பத்துப் பாடல்கள். இருள் - அறியாமை. சிந்தையர் - உள்ளத்தை யுடையவராவர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச்
சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே. 

பொழிப்புரை :

தளிர்போன்ற ஒளியைஉடைய அழகிய மலர் போலும் திருவடியில் சிலம்பு ஒலிக்கவும் விரித்த சடையிலே அலை கள் மோதும் கங்கையின் தெளிவான ஒளியை உடைய அழகிய நீர்த் துளிகள் முத்துப்போலத் தோன்றுமாறு அழகிய முகத்தில் பொருந்திச் சொட்டுச் சொட்டாக விழவும், மேம்பட்ட ஒளியை வீசும் நீலமணி போன்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகளிலும் வயல்களிலும் ஆர வாரம் மிகவும் கீழ்க்கோட்டுரில் ஒளி மிகுகின்ற மணிஅம்பலத்தின் கண் நின்று கூத்து நிகழ்த்தும் வலிமையை உடைய பெருமான் என் மனத்தில் கலந்து ஒன்றுபட்டு விட்டான். இஃது என்ன வியப்போ!

குறிப்புரை :

தளிர் ஒளி - தளிர்போன்ற ஒளியையுடைய. மணிப்பூம் பதம் - அழகிய மலர்போலும் திருவடியில். அலம்ப - ஒலிக்க. தெளிர் ஒளி மணி நீர்த்திவலை - தெளிவான ஒளியையுடைய அழகிய நீர்த் துளிகள். முத்து அரும்பி - முத்துப்போலத் தோன்ற. அரும்ப என்பது, ``அரும்பி`` எனத் திரிந்தது. சொட்டு அட்ட - துளிகளைச் சிந்த. துளி, வியர்வைத் துளி. `சொட்டட்ட ஆடும்` என இயையும். பழனம் - வயல். `பொழிலும் பழனமும் கம்பலை செய்யும் கீழ்க்கோட்டூர்` என்க. கெழுவு - பொருந்திய. கம்பலை - ஆரவாரம். `கம்பலம்` என்பது பாடம் அன்று. பொழிலிலும், பழனத்திலும் உள்ளவை செய்கின்ற ஆர வாரத்தை அவையே செய்வனவாகக் கூறினார். மணி அம்பலம் - மாணிக்கச் சபை. மைந்தன் - வலிமை (தளராமை) உடையவன். ஈற்றில், `இஃதென்ன வியப்பு` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்

மைந்தன்என் மனங்கலந் தானே.

பொழிப்புரை :

ஒரு கலையாகிய வெள்ளைப் பிறையையும், படர்ந்த சடைமுடியையும், உச்சிக்கொண்டையையும், சூலத்தையும், நீலகண்டத்தையும், காதணியையும், பவளம் போன்ற வாயின் உதடுகளையும், நெற்றிக் கண்ணின்மேல் இடப்பட்ட திலகத்தையும் யான் காணச் செய்து,கெண்டையும் கயலும் தாவிக்குதிக்கின்ற நீர் வளம் பொருந்திய வயல்களின் மள்ளர்களால் ஒலிக்கப்படும் ஆரவார முடைய கீழ்க்கோட்டூரில் வண்டுகள் ஒலிக்கும் மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிமையை உடைய பெருமான் என் உள்ளத்தில் கலந்து ஒன்றுபட்டுவிட்டான்.

குறிப்புரை :

மொழுப்பு - முடி. `சூழியம்` என்பது குறுகி, ``சுழியம்`` என வந்தது. சூழியம் - உச்சிக் கொண்டை. இஃது, இங்குச் சடை முடியைச் சுற்றியுள்ள பாம்பைக் குறித்தது. `பவளஇதழ்` என இயையும். `கண்ணையுடைய நெற்றியிலே உள்ள திலகம்` என்க. `காட்டிக் கலந்தான்` என முடியும். `கெண்டை, கயல்` - மீன் வகைகள். உகளும் - துள்ளுகின்ற.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
போய்வருந் தும்பிகாள் இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
மனத்தையும் கொண்டுபோ துமினே. 

பொழிப்புரை :

அழகிய நெற்றியில் உள்ள கண்ணும் பவளம் போன்ற வாயின் உதடுகளும் திலகமும் உடைய சிவபெருமானுடைய சடைமீது உள்ள விருப்பம் தரும் மலர்களின் மகரந்தத்தை அவற்றில் படிந்து நுகர்தற்குப் பல காலும் சென்றுமீள்கின்ற தும்பி என்றஉயர் குல வண்டுகளே! மலைகளின் மீது தவழ்கின்ற மேகங்களின் கீழ் விளங்கு கின்ற உயர்ந்த பேரில்லங்களில் ஆரவாரம் மிகுகின்ற கீழ்க்கோட்டூரில் காணப்படுகின்ற ஆற்றலை உடைய மணியம்பலத்தில் ஆடுபவ னாகிய சிவபெருமானைத் தரிசித்து அடியேனுடைய மனத்தை அவ னிடமிருந்து மீட்டுவாருங்கள்.

குறிப்புரை :

நுதல் விழி - நெற்றியில் உள்ள கண். `உடையவனது சடை` என்க. புரி - புரிவு; விருப்பம்; முதனிலைத் தொழிற்பெயர். தாது நின்று ஊத - மகரந்தத்தில் பொருந்தி ஊதுதற்பொருட்டு. போய் வரும் - பலகாலும் சென்று மீள்கின்ற. ``இங்கே`` என்றதனை, ``கொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இவ்வாறன்றி, நின்றாங்கு நிறுத்தி, `வருங்கால்` என ஒருசொல் வருவித்துரைப்பினுமாம். ``கீழ்த் தவழ்`` என்றதில் தவழ்தல் - விளங்குதல். ``கிரி தவழ் முகிலின்கீழ்`` என்றது, `மலை களின் சிகரத்தில் தவழும் இயல்புடைய மேகங்களின் கீழ் விளங்கு கின்ற மாடங்கள்` எனக் கூறுமுகத்தான், மாடங்கள் மலை போல உயர்ந்திருத்தலைக் கூறியவாறு. மாடங்களில் எழுகின்ற ஆர வாரங்களை அவைகளே செய்வனவாகக் குறித்தார். `வருகின்ற அம்பலவன்` என இயைத்து, `காணப்படுகின்ற அம்பலவன்` என உரைக்க. ``கொண்டு`` என்றது, `இரந்து பெற்று` என்றபடி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.

பொழிப்புரை :

தெளிவாகிய திருநீற்றை அணிந்த சிவபெருமான் அணியும் நீற்றினையே என் உடல் விரும்புகிறது. என் செவிகள் அவனை அறியும் அறிவைத்தரும் நூல்களையே கேட்கின்றன. என் வாய் அவனுடைய திருநாமத்தை மெதுவாக ஒலிக்கிறது. என்கண்கள் அவனுடைய விமானத்தை நோக்கியதால் என்னை வெப்பமாக மூச்சு விடச்செய்கின்றன. கிளிகள் பூஞ்சோலையிலே இனிமையாகப் பேசி மாம்பொழிலைநோக்கி ஆரவாரம் செய்யும் கீழ்க் கோட்டூரில் உறையும் வள்ளலே! மணியம்பலத்தில் நின்று கூத்துநிகழ்த்தும் வலிமையுடையவனே! என்று என்மனம் அவனை அழைக்கும்.

குறிப்புரை :

தெள்ளு - தெளிவாகிய; வெண்மையான. `நீற்றவன்` என வருதலேயன்றி, `நீறவன்` என வருதலும் இலக்கணமேயாம், இரண்டாவதன் தொகையோடொப்பதாதலின். ``கானக நாடனை நீயோ பெரும`` (புறம் - 5.) ``நாடன் என்கோ ஊரன் என்கோ`` (புறம்-49.) என்றாற்போல்வன பலவற்றுள்ளும் `நாடனை நாடன்` முதலாக வருவன பலவுங் காண்க. `நீறவன்` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. ``என்`` என்பது, ``செவி`` முதலிய பலவற்றோடும் சென்று இயையும். அவன் அறிவு நூல் - அவனை அறியும் அறிவைத் தரும் நூல். மெள்ள விளம்புதல் - செபித்தல். விமானம் - மூலத்தான மாளிகை. வெவ்வுயிர்க்கும் - வெப்பமாக மூச்செறியும். சோர் வுறுதலை இனிது விளக்க, மூக்கின் தொழிலாகிய உயிர்த்தலைக் கண்களுக்கு ஏற்றிக் கூறினார். `பொழிற்கண்` என்பது, ``பொழிற்கு`` என உருபு மயக்கமாய் வந்தது. என்னும் - என்று நினைக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

தோழி யாம்செய்த தொழில்என் எம்பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்குநைந் துளங்கரைந் துருக்கும்
கேழலும் புள்ளு மாகிநின் றிருவர்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யோமே. 

பொழிப்புரை :

தோழி! இணையாகிய மலர்களைப் போன்ற, எம் பெருமானுடைய திருவடிகளைக் காண்பதற்காகப் பல ஊழிக் காலங்க ளாக நினைத்து மனம் இளகி நெகிழ்ந்து நைந்து உள்ளம் கரைந்து உரு கும். பன்றியும் அன்னப்பறவையுமாகி நின்று திருமாலும் பிரமனும் எம்பெருமானை ஆரவாரத்தோடு துதித்தலைச்செய்யும் கீழ்க்கோட் டூரில், நாம் மணியம்பலத்திலுள்ள அப்பெருமானைக் காண, மயக்கம் கொண்டு அக்கலக்கம் தெளியாது இருக்கின்றோம். அவன்பால் காதல் மயக்கம் உறுவதனைத் தவிர நாம் செய்த பணிதான் யாது?

குறிப்புரை :

`தோழி. மணியம்பலவனைக் காண்பான் இருவர் கேழலும் புள்ளுமாகி நின்று மயங்கவும், யாம் மால் ஒழியோம்; எம் உள்ளம் ஊழிதோறூழி அவனை உணர்ந்தமையால் அஃது இப் பிறப்பில் கசிந்து நெக்கு நைந்து கரைந்து உருகாநின்றது; ஆயினும். யாம் அவனது துணைமலர்ச் சேவடி காண்பான் செய்த தொழில் என்` எனக் கூட்டி உரைக்க. ``தொழில்`` என்றது, பணியை. ``என்`` என்றது, யாதும் இன்மையைக் குறித்து நின்றது. மனம் உருகினும் பணியின்றி அவனைக் காண்டல் கூடாமையின், `எம் பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் யாம் செய்த தொழில் என்` என்றாள். `உணர்தலால்` என்பது, ``உணர்ந்து`` என திரிந்து நின்றது. சிவபிரானைப் பல பிறப்புக்களில் நினைந்ததன் பயனே ஒரு பிறப்பில் அவன்பால் விளையும் அன்பாகும் ஆதலின், `உளம் ஊழிதோறூழி உணர்ந்து கசிந்து உருகும்` என்றாள். பின்னர் வந்த ``உள்ளம்``, சுட்டுப் பெயரளவாய் நின்றது. இங்குக் கம்பலை செய்வது கீழ்க்கோட்டூரே என்க. ``வாழிய`` என்றது அசைநிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

என்செய்கோம் தோழி தோழிநீ துணையா
இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண் டயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவவோ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே. 

பொழிப்புரை :

தோழீ! நாம் யாது செய்வோம்? உன்னையே துணையாகக் கொள்வதால் இரவுப் பொழுது கழிந்து போகிறது. பகற் பொழுது வருமாயின் எம்பெருமான் வந்து அஞ்சாதே என்று கூறுகின் றான் அல்லன். கடலும் அதன் அலைகளும் சுழலுமாற்றைக் கண்டு சோர்வு அடைகின்றேன். முள் முருங்கைப் பூவினைப் போன்ற அழகிய சிவந்த வாயினை உடைய மகளிர், தெருவில் ஆரவாரம் செய்யும் `கீழ்க்கோட்டூரில், மேக மண்டலம் வரை உயர்ந்த மணியம்பலப் பெருமானே` என்று கூவி, யான், மாலைப் பொழுது கண்டால் மயக்கம் உறுவேன்.

குறிப்புரை :

``தோழி`` இரண்டனுள் முன்னது விளி: பின்னது, `தோழியாகிய நீ` என இருபெயரொட்டின்கண் வந்தது. `தோழி, இரவு நீ துணையாய் நிற்கப் போம்; அதனால், மாலையம் பொழுதில் ஆழி யும், திரையும் அலமருமாறு கண்டு அயர்வன்; மணியம்பலவவோ என்று மயங்குவன்; இதற்கு என் செய்கோம்` எனக் கூட்டி யுரைக்க.
முன்னர்த் தனது நிலையைக் கூறிப் பின், இருவரையும் சுட்டி, `என் செய்கோம்` என்றாளாதலின், பால்வழுவின்மை அறிக. `இன்று இரவு தனிமையிற் கழிந்ததாயினும், நாளைக்காலை வந்து `அஞ்சேல்` என்று அளிப்பான்` என்று ஒவ்வோர் இரவிலும் கருதுகின்றவள், ஒரு நாளும் அவன் அங்ஙனம் வரக்காணாமையால், ``பகல் வருமாகில் அஞ்சலோ என்னான்`` என்றாள். அஞ்சலோ என்னான் என்றது, `அஞ்சல் என்று சொல்வதோ செய்யான்` எனப் பொருள்தந்து நின்றது. அன்றி, ஓகாரம் அசையெனினும் ஆம். `அஞ்சலோம்பு` என்பதே பாடம் போலும்! ஆழி - கடல். திரை - அலை. அலமருதல் - அலைதல். அலமருவது திரையன்றி ஆழியன்றாயினும், அஃது அதனைத் தாங்கி உடன் நிற்றல்பற்றி அதனையும் அலமருவதாகக் கூறினாள். தனக்குத் துயர் செய்பவை தாமும் துயர்ப்படுவதைக் கண்டு மகிழ்கின்றா ளாதலின், `அலமருமாறு கண்டு` என்றாள், இதனால், கண் துயிலாமை விளங்கிற்று. அவை துயர்ப்படினும் தன் துயர் நீங்காமை பற்றி, `அயர்வன்` என்றாள். கிஞ்சுகம் - முள்முருக்கம் பூ. மஞ்சு அணி அம்பலம் - மேகங்களை மேலே கொண்ட மேற்கட்டியை யுடைய அம்பலம். ஓகாரம், முறையீடு குறித்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே. 

பொழிப்புரை :

வில்வம் வன்னி முதலிய தழைகள் பொருந்திய முடியும், வெள்ளிய திருநீற்றின் ஒளியும், சங்கு வளைகள், உடுக்கை இவற்றின் ஒலியும், காதணியை அணிந்த செவியும், குளிர்ந்த சடையின் திரட்சியும், எருதும், திரள்திரளாகத் தோன்றுகின்ற ஒளி வீசும் பொற்பொடிகளைத் தோற்றுவிக்கின்ற நீர் வளம் மிக்க வயல் களிலே ஆரவாரம் மிக்கிருக்கும் கீழ்க்கோட்டூரில் உள்ள, மேகங்கள் தன் மீது தவழுமாறு உயர்ந்த உயரத்தை உடைய மணிஅம்பலத்தில் நின்று ஆடும் வலிமைமிக்க சிவபெருமானுடைய செல்வங்களாகக் காணப்படுகின்றன.

குறிப்புரை :

தழை - வில்வம், வன்னி முதலியவற்றின் இலை. மொழுப்பு - முடி. சங்கம் - சங்க வளையல்; இஃது அம்மைபாகத்தில் உள்ளது. ``சகடை`` என்றது, உடுக்கையை. தெண்டு - திரட்சி. குண்டை - எருது. `தழைதவழ் மொழுப்பு முதலாகக் குண்டையீறாக உள்ளனவே அவரது வாழ்வு போன்றன` என்க. `குழாங்கொடு தோன் றும் கனகம்` என்க. `மிக்க பொன்` என்றவாறு.
கிழை - ஒளி. `கனகத்தைச் சொரியும் நீரையுடைய பழனங்கள் கம்பலை செய்கின்ற கீழ்க் கோட்டூர்` என்க. மழை - மேகம். ``போன்றன`` என்றதில் `போறல்` ஆக்கப் பொருட்டாய் நின்றது. `அவரை என்மனம் காதலிக்கின்றது வியப்பாகின்றது` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீ
றின்னகை மழலை கங்கைகொங் கிதழி
இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.

பொழிப்புரை :

தன்னகத்துள்ள இனிய ஒலியை எழுப்பும் சிலம்பு, சதங்கை, உடுக்கை, பாதுகை, திருநீறு, இனிய சிரிப்பினையும் மழலை மொழிகளையும் உடைய கங்கை, தேன்பொருந்திய கொன்றைமலர், இளம்பிறை, தளிர்களைத்தின்று வளரும் இளையமான், கின்னரம் என்ற நரம்புக்கருவி, மத்தளம், மழலை போன்ற இனிய ஒலிஎழுப்பும் யாழ், வீணை இவற்றால் ஆரவாரம் மிகுகின்ற கீழ்க்கோட்டூர் மன்னவ னாய் மணிஅம்பலத்துள் நின்று ஆடுகின்ற பெருமான் என் மனத்துள் புகுந்து விட்டான்.

குறிப்புரை :

`தன்னகத்துள்ள சிலம்பு முதலாக மான் ஈறாயின வற்றை என் மனத்து வைத்தான்` என்க. அகம், ஏழன் உருபு. மழலைச் சிலம்பு- மெல்லிய ஓசையையுடைய சிலம்பு. இன்னகையும் இறைவனுடையதே; இதனைக் கங்கைக்கு ஆக்குவாரும் உளர். மழலைக் கங்கை-இனிய ஓசையையுடைய கங்கை. கொங்கு இதழி - தேனையுடைய கொன்றை மாலை. `கோங்கிதழி` என்பது பாடம் அன்று. வளர் இளமான் - வளர்தற்குரிய இளைய மான்; `மான் கன்று` என்றபடி. கின்னரம், ஓர் நரம்புக் கருவி. முழவம் - மத்தளம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

யாதுநீ நினைவ தெவரையா முடைய
தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தானே. 

பொழிப்புரை :

தாழைப்பூவின் நிழலை மீன்கொத்திப்பறவை என்று தவறாக மனத்துக் கொண்டு கெண்டைமீன்கள் அஞ்சுகின்ற கீழ்க் கோட்டூரிலே மேம்பட்ட தவத்தை உடையவனாய் மணியம்பலத்துள் நின்று ஆடும் வலியவன், எல்லா உயர்திணைப் பொருள்களும் எல்லா அஃறிணைப் பொருள்களும் தானேயாகிப் பாதுகையுடனும் இனிய ஓசையை எழுப்பும் சிலம்பினொடும் புகுந்து என்னுடைய குளிர்ந்த மலர்போன்ற கண்களில் நின்று நீங்கானாய் என் மனத்துள் புகுந்து விட்டான். அவனையன்றிவேறு எவரை யாம் உறவாக உடையோம்? வேற்று வரைவு பற்றி நீ யாது கருதுகின்றனை?

குறிப்புரை :

`யாது நீ நினைவது எவரை யாம் உடையது` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. ``நீ`` என்றது, தோழியை, `நினைவது, உடை யது` என்பன தொழிற்பெயரும் பண்புப் பெயருமாய் நின்றன. உடை யது- தலைவனாகப் பெற்றுடையது. நொதுமலர் வரைவு பற்றித் தோழி கூறக்கேட்ட தலைவி, இவ்வாறு கூறினாள் என்க. உயர்திணையைக் குறிக்க. ``எவர்களை`` என்றும், அஃறிணையைக் குறிக்க, ``யாவையும்`` என்றும் கூறினாள். `அகலான்` என்றது முற்றெச்சமாய், `புகுந்தான்` என்பதனோடு முடியும். கேதகை - தாழை; அதன் பூவைக் குறித்தது ஆகு பெயர். குருகு - கொக்கு; `குருகென` என்பதனை` ``வெருவு`` என்பதன் முன்னர்க் கூட்டுக. மாதவன் - பெரிய தவக்கோலத்தை யுடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்
செய்வதென் தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே அறியும்என் மனமே. 

பொழிப்புரை :

மாலைவானம் போன்ற செந்நிற வடிவமும், மாலையில் தோன்றும் பிறை சேர்ந்த அழகிய சடையும், வெண்ணீறும் மனத்தால் நினைப்போம் என்றால் மனமும் என்வசத்தில் இல்லை. யான் யாது செய்வேன்? தெளிந்த நீரில் அசைவின்கண், தாமரை மலரைக் கிழிக்கும் கெண்டை மீன்கள் தாமரையின் தொடர்பால் மணம் வீசிக் கொண்டு தாவித்திரியும் குளிர்ந்த மருதநிலத்து வயல்களை உடைய கீழ்க்கோட்டூரில் அடியேன் அவனைத் தரிசிக்க வந்த நாளில் வேறு பட்ட என் மனநிலையை வலியவனாகிய அப்பெருமானே அறிவான்.

குறிப்புரை :

அந்தியில் பிறை - மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன். சிந்தை என்னை விட்டு அவனிடத்தே அடங்குதலால், சிந்தை காணப்படாதாயிற்று. `ஏனைய கருவிகளையேயன்றி, எனப்பொருள் தருதலின், ``சிந்தையும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம். அலங்கல் - அசைவின்கண். கெந்தியா (கந்தியா) - மணம் வீசி. புண்டரிகம் - தாமரை மலர். ``கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம் கிழிக்கும்`` என்றாராயினும், `புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா உகளும்` என்பது கருத்தென்க. கெந்தித்தல். புண்டரிகத்தைக் கிழித்த லால் உண்டாயிற்று. வந்தநாள் - சென்று நான் அவனைக் கண்ட நாளில் வேறுபட்ட என் மனநிலையை அவன் ஒருவனே அறிவான் என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே. 

பொழிப்புரை :

கித்தி என்னும் விளையாட்டை நிகழ்த்துகின்ற பெண்கள் தெருவில் ஆரவாரம் செய்யும் கீழ்க்கோட்டூரில் ஊமத்த மலரைச் சூடியவனாய், மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிய வனாகிய சிவபெருமானைப் பற்றி, வேதங்களை ஓதும் இறைப் பித்துடைய அடியேன் பாடிய மணிகள் போன்ற நெடிய பாமாலை பெரியோர்களுக்கு அகன்ற பெரிய சிவலோகத்தில் முத்தியை வழங்கும் என்று உலகத்தவர் இதனை உயர்த்திக் கூறுவாராயின் திரு மகள் அவர்களை முகம் மலர்ந்து எதிர்கொள்வாள்.

குறிப்புரை :

கித்தி - விளையாட்டு. `அரிவையர் கம்பலை செய்` என இயையும். மத்தன் - உன்மத்தன்; `ஊமத்தை மலரைச் சூடியவன்` எனலுமாம். பெரியவர்க்கு - பக்குவம் மிக்கோர்க்கு. ``அகல் இரு விசும்பு`` என்றது சிவலோகத்தை. `விசும்பின் கண்ணதாகிய முத்தி` என்க. முத்தி தருவதனை, ``முத்தி`` என்றார். `திருவும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. திரு - திருமகள். அவள், துறக்கம் முதலிய செல்வத்தைத் தருபவள் எனவே, `இம்மை மறுமைப் பயன்களையும் பெறுவர்` என்றதாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

புவனநா யகனே அகவுயிர்க் கமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே. 

பொழிப்புரை :

எல்லா உலகங்களுக்கும் தலைவனே! உன்னை அடைந்த முத்தான்மாக்களுக்கு அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.

குறிப்புரை :

புவனம் - உலகம்; இவ்வஃறிணை இயற்பெயர் பன்மைப் பொருட்டாய், `எல்லா உலகங்கட்கும்`. எனப்பொருள் தந்தது. இவ்வாறு வருவதனை, `சாதியொருமை` என்ப. அகம் - இடம்; அக உயிர் - உன்னை அடைந்த உயிர்கள்; முத்தான்மாக்கள். `அவனிக்கு` என உருபுவிரித்து, உலகிற்கு இருளை நீக்கி ஒளியைத் தரும் ஞாயிறுபோன்று மருளை நீக்கி அருளை வழங்கி, என உரைக்க. பசுபதி - உயிர்கட்குத் தலைவன். பன்னக ஆபரணன் - பாம்பாகிய அணிகளை யுடையவன்; தனியனேன் - துணை இல்லாதேன். தனிமை நீங்குதற்கு - அந்நிலை நீங்குமாறு; என்றது, `யான் துணை பெற்று உய்யும்படி` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
புணர்பொரு ளுணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும்
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே. 

பொழிப்புரை :

தீவினையால் மனம் வருந்தும் அடியேனுடைய தீவினைகள் நீங்குமாறு எதிர்வந்து அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூல் முறைவாயிலாக நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனைப்பொழிகின்ற பவளம் போன்ற வாயினையும், முக்கண்களையும் உடைய ஒளிவளருகின்ற நெடிய மாணிக்கமலை போன்றவனே! ஒலிக்கின்ற இனிய நீரில் பாய்ந்து இளைய, வரால் மீன்கள் தாவித் திரியும் திருமுகத்தலை என்ற திருத்தலத்தினும் அடியேனுடைய உள்ளத்தினும் அமர்ந்து அடியேன் நுகரும் இனிய கனியாகவும் இனிய ஆனந்த வெள்ளமாகவும் அதன்கண் பொருந்தினாய். இதற்கு அடியேன் செய்யத்தக்க கைம்மாறு யாது?

குறிப்புரை :

புழுங்குதல் - வேதல். \\\\\\\\\\\\\\\"புழுங்கு\\\\\\\\\\\\\\\" என்றது, \\\\\\\\\\\\\\\"வினை யேன்\\\\\\\\\\\\\\\" என்பதன் இறுதி நிலையோடு முடியும். \\\\\\\\\\\\\\\"புழுங்குதீவினையேன்\\\\\\\\\\\\\\\" என்றது, `தீவினையால் புழுங்குவேன்\\\\\\\\\\\\\\\' என்றவாறாம். புகுந்து - எதிர் வந்து. புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூன்முறை வாயிலாக. வழங்கு தேன் - உன் அடியார்க்கு நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனை. \\\\\\\\\\\\\\\"பொழியும்\\\\\\\\\\\\\\\" என்றது இறந்தகாலத்தில் நிகழ்காலம். இதனால். இவர்க்கு இறைவன் ஆசிரியனாய் வந்து அருள் புரிந்தமை பெறப்படும். (ஒளிக் குன்று) என இயையும். மணிக் குன்று - மாணிக்க மலை. `உள்ளமும்\\\\\\\\\\\\\\\' என உம்மை விரித்து, `முகத்தலை அமர்ந்து, எனது உள்ளத்தும் ஆயினை\\\\\\\\\\\\\\\' என உரைக்க. ஆயினை - பொருந்தினாய். `இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்\\\\\\\\\\\\\\\' எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்
கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர்
முகத்தலை யகத்தமர்ந் துறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே
பாவியேன் ஆவியுள் புகுந்த
தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற்
கெளிமையோ பெருமையா வதுவே. 

பொழிப்புரை :

கருங்கல் பார்த்துச் சிரிக்குமாறு அழுத்தமான உள்ளத்தை உடையவனாய், என்னுடையது அல்லாத உள்ளத்தை என்னுடையது என்று கருதும் கள்ளத்தை உடைய அடியேன் உன் திறத்து மனம் நெகிழமாட்டேன். கண்களிலிருந்து உள்ளம் உருகிய கண்ணீரைச் சொரியேன். உன் முன் மகிழ்ந்து நின்று பாடுதல் அழுதல் முதலியவற்றைச் செய்யேன். அவ்வாறாயினும், மேம்பட்ட நீர்வளம் உடைய திருமுகத்தலை என்றஊரில் உகந்தருளியிருக்கும், பாம்பை அணிகலனாக அணிந்தவனே! பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! நீ தீவினைகளைச் செய்த அடியேனுடைய உயிரின் உணர்வின் உள்ளிடத்தில் வந்துசேர்ந்தது யாது காரணம் பற்றி? அறிவற்றவனாய் நாய்போல் இழிந்த அடியேன் திறத்து எளிமை யாக உதவுவதே உனக்குப் பெருமை தருவதாகும்.

குறிப்புரை :

`கல் உள்ளம்` என இயையும். நகுதல் - மகிழ்தல்; அஃது இங்கு அன்பு செய்தலைக் குறித்தது. இது பொதுவாக உள்ளத்தின் இயற்கையைக் கூறியது. `நெகா உள்ளம்` எனவும் பாடம் ஓதுப. ``கசிவு`` என்றது அன்பினை. ``நின்கட்கசிவிலேன்`` என்றது. சிறப்பாக இறைவனிடத்து அன்பு செய்யாமையைக் கூறியது ``ஒழி`` என்றது, துணிவுப் பொருண்மை யுணர்த்த. ``நகாவொழியேன்`` என்றது ஒரு சொல்தன்மைப்பட்டு நின்று, `நகமாட்டேன்` எனப் பொருள் தந்தது. நகமாட்டாமையாவது, மகிழ்ந்து நின்று பாடுதல், ஆடுதல் முதலியவற்றைச் செய்யாமை. ``ஆவி`` என்றது, உயிரின் உணர்வை.
உள் - உள்ளிடத்தில். ஏழை - அறிவில்லாதவன். நாயடியேன் - நாய்போலும் அடியேன். ஒகார ஏகாரங்களை மாற்றி, `அடியேற்கு எளிமையே உனக்குப் பெருமையாவதோ` என உரைக்க. ஏகாரம் தேற்றம்; ஓகாரம் சிறப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும்
பரமனே பன்னகா பரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே.

பொழிப்புரை :

குற்றமற்ற மெய்ப்பொருளை விளக்கிக்கூறும் நூல்களோடு பழகியும், செழுமையான நீரில் வளர்கின்ற நெட்டி நீரை உள்ளே ஏற்காதவாறுபோல அந்நூற்பொருளை மனத்துக் கொள் ளாதவருடைய நெஞ்சைப்போன்ற என்நெஞ்சினை விடுத்து நீங்குதல் இல்லாத மாணிக்கமே! தலையிலுள்ள மணியை வெளிப்படுத்தி ஒளி வீசும் பாம்பினை அணிகலனாக உடைய மேம்பட்ட இறைவனே! மேட்டுநிலங்களிலும் நீர் ஏறிப்பாயும் நீர்வளம் உடைமையால் மேடுகளிலும் செந்நெல் ஆகிய பயிர்கள் செழிப்பாக விளைதலால் மிகவும் பொலிவுற்றிருக்கும் திருமுகத்தலை என்னும் பழைய ஊரில் பலகாலமாகத் தங்குகின்றாய் என்றாலும் உள்ளே நுழைந்து அடியேனுடைய நெஞ்சம் முழுதும் நிறைந்து நிற்கின்றாயே! இது வியப்பாகும்.

குறிப்புரை :

நூல் கெழுமியும் - நூல்களோடு பழகியும். நீர்க்கிடை அன்னார் உடைய என் நெஞ்சு - நீரிற்கிடக்கும் சடைப்பூண்டு போல் பவரது உள்ளங்கள் போலும் எனது உள்ளம். கிடை - சடைப் பூண்டு; இதனை, `தக்கை` என்றும், `நெட்டி` என்றும் வழங்குவர். இது நீரிலே நீங்காது கிடந்தும் நீரை உள்ளே ஏற்பதில்லை. அதனால், இது நூலொடு பழகியும் அதன் பொருளை ஏலாது நிற்பவரது உள்ளங்கட்கு உவமை யாயிற்று. ``உடைய`` என்றது, குறிப்பு வினைப் பெயர். ``நெஞ்சு`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``உடைய`` என்றார். கிடைய நெஞ்சு, உவமத்தொகை. பாடுஇலா - அழிதல் இல்லாத. ``ஒளிரும்`` என்ற பெய ரெச்சம், ``பரமன்`` என்னும் இடப்பெயர் கொண்டது. ``பன்னகா பரணன்`` எனப் பின்னர்க் கூறுகின்றமை `மணிகளை உமிழ்வன அவையே` என்பது விளக்கிற்று. ``உமிழ்ந்து`` என்றதனை, `உமிழ` எனத் திரிக்க. இவ்வாறன்றி, ``பரமனே`` என்பதனை, `மணி உமிழ்ந்து`` என்ற தற்கு முன்னே கூட்டுதலும் ஆம். மேடெலாம் செந்நெல் விளைதல், மிக்க நீரினாலாம். ``உள் புகுந்து`` என்றதற்கு, `என் உயிரின் உள்ளிடத் திற் புகுந்து` என உரைக்க. ``இது வியப்பு`` என்பது, குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
கென்னையாள் ஆண்ட நாயகனே
முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 

பொழிப்புரை :

விரைவில் மறையும் கனவுபோன்ற செல்வத்தைத் திரட்டுதலையே பலகாலும் நினைத்து ஐம்பொறிகளோடு சீவான் மாவாகிய அடியேனுக்கு ஏற்பட்ட இந்தப் பூசல்முழுதும் நீங்குமாறு வந்து என் உள்ளத்திலிருந்து என்னை ஆட்கொண்ட தலைவனே! மூன்று கண்களை உடைய மேம்பட்டவனே! உலகம் முழுதும் உன்னை வழிபடும்படி திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உறைந்து அடியேன் உள்ளத்தும் உறைந்து, உன் பவளம்போன்ற வாயினால் மெய்ப் பொருளை உபதேசித்து அடியேனிடத்தும் ஆனந்தம் தொடர்ந்து நிகழு மாறு செய்தாய். இஃது ஒரு வியப்பே.

குறிப்புரை :

இதன் முதலடி, சேந்தனாரது திருவீழிமிழலைத் திருவிசைப்பாவிலும் வந்தமை காண்க. `ஐவரோடும்` என்ற எண்ணும்மை விரிக்க. `என்னிடை விளைந்த` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கலாம் - பூசல்; இதனை இக்காலத்தார். `கலகம்` என்பர். ஆள் ஆண்ட - ஆளாக ஆண்ட. பக்கல், ஏழன் உருபு, `வாயால் மொழிந்து` என உருபு விரிக்க. மொழிந்து - மெய்ப் பொருளைக் கூறி; உப தேசித்து. இறைவன் ஆசிரியனாய் வந்து அருள்செய்த குறிப்பு இத னுள்ளும் காணப்படுதல் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே
முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே.

பொழிப்புரை :

பச்சைமண்ணாய் இருந்த காலத்தில் தன்மீது தண்ணீர்பட்டாலும் கரைந்து பின் மிக்குத்தோன்றும் தீயில் சுட்டபின் சுட்ட சால் ஆகிச் சிறந்த தண்ணீரைத் தன்னுள் அடக்கி உயிர்களைப் பாதுகாக்கும் குயவனுடைய குயத்தொழிலால் வனையப்பட்ட சுட்ட சால்போல மேம்பட்ட இரசவாத வித்தையால் அடியேன் உள்ளம் உன் திறத்து உருகுமாறு மகிழ்வுடன் செய்த பெரிய ஒளிவடிவினனே! போர் முனையில் அகப்பட்ட மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனே! திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உறைந்து அடி யேனுடைய வினை உண்டாவதற்கு ஏதுவாகிய உடம்பிலுள்ள மனத் தில் புகுந்து நீ நிலையாக அதன்கண் உறைகின்ற காரணத்தால் அடி யேனுடைய மனம் மேம்பட்ட திருக்கோயில் கருவறைமாளிகை ஆயிற்று. இதுவியத்தற்குரியது.

குறிப்புரை :

மண்டு அழல் வெதும்பி - மிக்க தீயால் வெந்தபின்பு. வினைபடு - தொழில் பொருந்திய. ``நிறை`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய். நிறைதற் கருவியை உணர்த்திற்று. நிறைதற்கருவி, நீர் நிறைந்து நிற்றற்கு ஏதுவாகிய சால். `மண்டு அழல்வெதும்பிய பின்னர்ப் பூம்புனல் பொழிந்து நிற்பது` என்றத னால், புனல் பட உருகுதல், அங்ஙனம் வெதும்புதற்கு முன்னராயிற்று. ``அழலில் வெதும்புதற்கு முன்னே புனல் சிறிதுபடினும் குழைந்து போவதாகிய நீர்ச் சால், அழலில் வெதும்பிய பின்னர்ப் புனலை நிறையக் கொண்டும் நிலைத்து நின்று உயிர்களைக் காப்பாற்றுவது போல, நீ என் மனத்தில் வேதகத்தைப் போல வருதற்குமுன்பு இவ் வுலகத்தைச் சிறிது பற்றினும் என் மனம் அதனுள் அகப்பட்டு மீள மாட்டாது மயங்கி உன்னை நினைத்தற்கு உதவவில்லை. நீ வந்தபின் அதனை நிரம்பப் பற்றினும் அதனுள் அகப்படாது நின்று உன்னை நான் எப்பொழுதும் நினைத்தற்குத் துணையாய் நிற்கின்றது` என்னும் பொருள் உவமையாற் குறிக்கப்பட்டது. `179ஆம் பாடலைக் காண்க. (தி.9 திருவிடைமருதூர்-7) `போல` என, தொகுக்கப்பட்ட அகரத்தை விரித்து. `போல ஆகும்படி` என உரைக்க. `போல மகிழ்ந்த` என இயையும். நிறைந்த - நிரம்பிய. வேதகம் - இரச குளிகை. இது செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும். பல வகை மருந்துகளால் செவ்வனே ஆக்கப்பட்ட குளிகையே பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றுமன்றி, அவ்வாறு ஆக்கப்படாது குறையுடைய குளிகை மாற்றாமையின், ``நிறைந்த வேதகம்`` என்றார். வேதகத்து - வேதகம்போல (மகிழ்ந்த என்க). மனத்தைத் திருத்தியதற்கு வினைமுதலாயினமை தோன்ற. இறைவனை முன்பு அழலோடு ஒப்பித்தவர் பின்பு வியப்புத் தோன்ற வேதகத்தோடு ஒப்பித்தார். நெகுதல், இறைவனிடத்து அன்பு காரணமாகவும், உயிர்களிடத்து அருள்காரணமாகவுமாம். ``மகிழ்ந்த`` என்றது, `எழுந்தருளி மகிழ்ந்த` என முன்னிகழ்ச்சியையும் குறித்துநின்றது. வினை படும் உடல் - வினை உண்டாதற்கு ஏதுவாய உடம்பு. ``உடல்`` என்றது, அதனகத் துள்ள மனத்தை. ``எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய் யான் இதற்கிலனொர்கைம் மாறே`` (தி.8. கோயில்-10) ``நிலாவாத புலா லுடம்பே புகுந்துநின்ற கற்பகமே யான் உன்னை விடுவேனல்லேன்`` (தி.6 ப.95 பா.4) என்றாற் போல வந்தன காண்க. விழுமிய - சிறந்த. விமானம் - திருக்கோயிற் கருவறை மாளிகை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்
வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங்
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
முகத்தலை யகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
பிழைபொறுத் தாண்டபே ரொளியே. 

பொழிப்புரை :

கடலிலே தோன்றிய விடத்தை நுகர்ந்த கருமை யோடு, சந்தனம் போலப்பூசிய திருநீற்றினுடைய வெண்மையும், திருமேனியின் செந்நிற ஒளியும் கரியும் நீறுபூத்த நெருப்பும் போல ஒளிவீசும் அத்தன்மையை உடையையாய்க் கழுத்தில் எலும்பு மாலையை ஒப்பற்ற மாலையாகப்பூண்டு வளைந்து கூத்தாட வேண்டிய கூத்துக்களை எல்லாம் நிகழ்த்தி அழகினை உடையை யாய்த் திருமுகத்தலை என்ற திருத்தலத்தில் உகந்திருந்தாய், பேய்களைப் போன்ற அடியேங்கள் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொண்டு அடியோங்களை ஆட்கொண்ட பெரிய ஞானஒளி வடிவின னாகிய உன்னை இனிப்பிரிந்து வாழ்தல் அடியோங்களுக்கு இயலுமோ?

குறிப்புரை :

விரியும் நீர் - கடல். `அதன்கண் பிறந்த ஆலம்` என்க. ஆலக் கருமை - விடத்தால் உண்டாகிய கருநிறம். சாந்து - சந்தனமாகப் பூசிய திருநீறு. ``வெண்மையும்`` எனவேறு எண்ணினா ராயினும், உவமைக்கு ஏற்ப, `வெண்மையொடு கூடிய செந்நிறத் தொளியும்` என ஒன்றாக உரைத்தல் கருத்து என்க. ``ஒளிரும்`` என்ற பெயரெச்சம், ``கழுத்து`` என்னும் இடப்பெயர் கொண்டது. ``கழுத்தில் ஓர் தனிவடம் கட்டி`` என்றதனையும், முரிதலையும் திருக்களந்தை ஆதித்தேச்சரப் பதிகத்துள்ளும் காண்க. பேய்களோம் - பேய் போன்றவர்களாகிய யாங்கள். தம்போல்வாரையும் உளப்படுத்து இவ்வாறு அருளிச்செய்தார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
கனியுமாய் இனியைஆ யினையே. 

பொழிப்புரை :

அடியேனை உன் திருவடித்தாமரைகளைப் பணியச்செய்து என் எலும்பெல்லாம் அன்பால் உருகுமாறு நீ எளியையாய் உன்னை அடியேனிடத்தில் வைத்து எல்லா இடத்தும் எல்லாக் காலத்தும் நீக்கமற நிறைந்த சிறந்த ஒளியை உடைய சுடர்வடிவினனே! அடியேனுடைய முற்பட்ட வினைகள் எல்லாம் நீங்கத் திருமுகத்தலையிலே உகந்தருளியிருந்து என்திறத்தில் கரும்பும், பாலும் தேனும் அரிய அமுதமும் பழமும் போல இனிய னாய் உள்ளாயே. இதற்கு அடியேன் செயற்பால கைம்மாறு யாது?

குறிப்புரை :

``எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே`` என்றது, `அந்நிலை எனக்குப் புலனாம்படி நின்ற ஞானவடிவினனே` என்றபடி.
எனவே, இது, தம் அநுபூதிநிலையை எடுத்தோதியதாயிற்று. ``பாசம்`` என்றது, வினையைக் குறித்தது. `அகலப் பணி வித்து` என முன்னே கூட்டுக. ``கனியும் ஆய்`` என்றதில் `ஆய்` என்பதற்கு` `போன்று` என உரைக்க. `இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

அம்பரா அனலா அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயும்ஆ யினையே. 

பொழிப்புரை :

வானமாகவும் தீயாகவும் காற்றாகவும் நிலமாகவும் நீராகவும் சந்திரனாகவும் சூரியனாகவும் இருக்கின்றவனே! தேவர்களாலும் அறிய முடியாத நுண்ணிய பொருளாய் எல்லாவற் றுள்ளும் நீக்கமற நிறைந்த மேம்பட்ட ஒளிஉருவனே! மனஉறுதியை உடையவராய் மற்றவருக்கும் உறுதிப்பொருளையே உரைக்கின்ற மேம்பட்ட அறிவாளிகள் நிறைந்த திருமுகத்தலையில் உறைந்து எனக்கே என் தலைவனாகி என்னை ஆட்கொண்ட நீ மற்றும் எனக்கு நிலையான தந்தையும் தாயும் ஆயினாய். உன் அருள்தான் என்னே!

குறிப்புரை :

அம்பரன் - ஆகாயமாய் இருப்பவன். அனலன் - நெருப்பாய் இருப்பவன். அனிலம் முதலியன இங்ஙனம் அன்பெற்று வாராமையின், அவை ஆகுபெயர்களாம்.
அனிலம் - காற்று. ஏனையபோல; புவியே` என்பதே பாடமாதல் வேண்டும். புவி - நிலம். அம்பு - நீர். இந்து - சந்திரன். `இரவீ` என்பதே பாடம்போலும். இறைவனது அட்ட மூர்த்தங்களுள் இயமானன் ஒழித்து ஒழிந்த உருவங்களை எடுத்தோதி விளித்தார். ``அணுவாய்`` என்றது, `நுண்ணிய பொருளாய்` என்றவாறு.
மொய்ம்பு - வலிமை; இங்கு, மன உறுதியை யுணர்த்திற்று. நலம் சொல் - உறுதியை உரைக்கின்ற. ``மூதறிவாளர் முகத்தலை`` என்றதில் தொக்குநின்ற ஆறாவது, `யானையது காடு` என்பதுபோல, வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ``எம்பிரான்`` என்றது, `இறைவன்` என்னும் அளவாய் நின்றது. ``மீண்டும்`` என்றது, `மற்றும்` என்னும் பொருள் படவந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே. 

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களுக்கும் ஆதியாய் அந்தமாய், தனக்கு முடிவு என்பதே இல்லாத முதற்பொருளாய்த் திருமுகத்தலை என்ற தலத்தில் அமர்ந்து, இனிய பாலும் அமுதமும் போன்ற இனிய னாய், பாம்பை அணிகலன்களாக உடையவனுடைய குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடிகள் இரண்டனையும் பற்றிக் கரும் பாலையில் காய்ச்சப்படும் பாகுபோன்ற சொற்களால் கருவூர்த்தேவர் பாடிய அமுதத்தை ஒத்த இனிய தமிழ்மாலையைக் கடமையாகக் கொண்டு பாடும் அடியவர் யாவரும் சிவலோக பதவியை மறு பிறப்பில் அணுகிநிற்பர்.

குறிப்புரை :

மூலம் - முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு. அவற்றைத் தனக்கு இலனாதலின், ``முடிவிலாமுதலாய்`` என்றார். இங்கு. ``முதல்` என்றது, `பொருள்` என்னும் பொருட்டு. ஆலையம் பாகு - கரும்பு ஆலையிடத்து உள்ள பாகு. அம், சாரியை. `சொல்லையுடைய கருவூர்` என்க. `கருவூரது மாலை` என இயையும். சீலமா - ஒழுக்கமாக (கடமையாக)க் கொண்டு. `நிற்பார்` என்பது, துணிவு பற்றி, ``நின்றார்`` என இறந்த காலமாகச் சொல்லப் பட்டது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

நீரோங்கி வளர்கமலம்
நீர்பொருந்தாத் தன்மையன்றே
ஆரோங்கிமுகம் மலர்ந்தாங்
கருவினையேன் திறம்மறந்தின்
றூரோங்கும் பழிபாரா
துன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

நிரம்ப மகிழ்ச்சி மிகுந்து முகமலர்ச்சி கொண்டு, மிக்க தீவினையை உடைய அடியேன் என் பெண்தன்மைக்கு உரிய நாண்முதலிய பண்புகளைப் போற்றும் செயலைமறந்து, ஊரார் தூற்றும் அலரையும் பொருட்படுத்தாது, சிறப்புக்கள் ஓங்கும் கோடை என்ற தலத்தில் உள்ள திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே! உன்பால் முழுமையாக ஈடுபட்டுவிட்டேன். அவ்வாறாகியும் உனது தலையளியை அடியேன் பெறாதிருத்தல் நீரால் ஓங்கி வளர்தற்குரிய தாமரைக்கொடி அந்நீரைப் பெறாது வாடி உலர்ந்து அழிந்துபோவதனைப் போல்வதாம்.

குறிப்புரை :

முதலடியை ஈற்றிலும், ஈற்றடியை முதலிலும்கொண்டு உரைக்க. `ஆர ஓங்கி` என்பது தொகுத்தல் பெற்று `ஆரோங்கி` என நின்றது. ஆர - நிரம்ப. ஓங்கி - மகிழ்ச்சி மிகுந்து. `முகம் மலர்ந்து விழுந்தொழிந்தேன்` என இயையும். `என் திறம் மறந்து` என வேறு எடுத்துக்கொண்டு உரைக்க. திறம் - பெண் தன்மைகள்; அவை நாண் முதலியன; இஃது உண்மைப் பொருளில் உலகியலை உணர்த்தும். பழி - அலர். ``விழுந்தொழிந்தேன்`` என்பது ஒருசொல் தன்மைத்து. சீர் - அழகு. `கோடை` என்பது ஊரின் பெயரும், `திரைலோக்கிய சுந்தரம்` என்பது திருக்கோயிலின் பெயருமாம். `அருவினையேன் என்திறம் மறந்து, ஊர் ஓங்கும் பழியையும் பாராது, ஓங்கி, முகம் மலர்ந்து உன் பாலே விழுந்தொழிந்தேன்; அவ்வாறாகியும், உனது தலையளியை நான் பெறாதிருத்தல், நீர் ஓங்கி வளர் கமலம் நீரைப் பொருந்தாத தன்மையன்றே` என்க.
நீர் ஓங்கி வளர் கமலம் - நீரால் ஓங்கி வளர்தற்குரிய தாமரை. நீர் பொருந்தாத் தன்மை - அந்நீரைப் பெறாத தன்மை. அஃதாவது, வாடி, உலர்ந்து அழிந்துபோதல். முதல் அடிக்கு, `நீரில் உள்ள தாமரை யில் நீர் ஒட்டாதிருக்கின்ற தன்மை` என உரைப்பாரும் உளர். இத் திருப்பாட்டு, தலைவி கூற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

உருகாத மனத்தினை உடைய அடியேனை மனம் உருகச்செய்வதற்காக, கோடை நகரத்துத் திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் உள்ள தலைவனே! நீ எம் தெருவழியே திருவுலாப் போந்த அன்றுமுதல் இன்றுவரையில் கைகள் நிறைவுறுமாறு தொழுது, அருவிபோலக் கண்ணீரை முழுமையாகப் பெருக்கினாலும் அடியேனுக்கு அருள்செய்ய மாட்டாயா?

குறிப்புரை :

நையாத மனத்தினனை - வருந்தாது மகிழ்வுடன் இருந்த மனத்தையுடைய என்னை. நைவிப்பான் - வருத்துதற் பொருட்டு. இவ்வாறு கூறினாளாயினும், `ஒருவர் குறிப்பும் இன்றித் தன்னியல்பில் உண்டாயிற்று` என்பதே கருத்தாம். ``நையாத, நைவிப்பான்``என்றவற்றில், `நைதல்` என்பது, காதற்பொருளில் இவ்வாறு, `வருந்துதல்` குறித்ததாயினும், உண்மைப் பொருளில், `உருகுதல்` என்னும் பொருளையே குறிக்கும். `அருள் செய்யாயோ` என மாற்றிக்கொள்க. இத் திருப்பாடலும் தலைவி கூற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

அம்பளிங்கு பகலோன்பால்
அடைபற்றாய் இவள்மனத்தின்
முன்பளிந்த காதலும்நின்
முகந்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியேஎன்
மருந்தேநல் வளர்முக்கட்
செம்பளிங்கே பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

புதுமையாகப் பழுத்த பழம் போல்பவனே! என் அமுதமே! மேம்பட்ட ஒளிவளர்கின்ற முக்கண்களை உடைய செந் நிறத்த பளிங்கு போல்பவனே! பளிங்குக் கல்லினது இயற்கை ஒளியும் அடுத்ததனைக் காட்டும் தன்மையும் கதிரவன் தோன்றிய பொழுது அவன்முன்னே விளங்குவபோல இவள் மனத்தில் முன்பு பழுத்திருந்த காதலும் உன் முகத்தைக் கண்ட அளவில் அதன்முன்பே வெளிப் பட்டது. ஆதலின் இவளூக்கு நீ அருளவேண்டும் - என்பது செவிலி கூற்று.

குறிப்புரை :

இது முதலாக வரும் திருப்பாடல்கள் செவிலி கூற்றாம். அம் பளிங்கு பகலோன்பால் அடை பற்றாய் - அழகிய பளிங்குக்கல் கதிரவனிடம் அடைந்த நிலையைப்போல; அஃதாவது, `பளிங்குக் கல்லினது இயற்கை யொளியும், அடுத்தது காட்டுந்தன்மையும் கதிரவன் தோன்றியபொழுது அவன் முன்பே விளங்குதல்போல` என்றதாம். இவள் மனத்தில் முன்பு அளிந்த காதலும் நின் முகந்தோன்ற விளங்கிற்று - இவள் உள்ளத்தில் இயற்கையாகவே முன்பு மிகுந் திருந்த விருப்பம் (உன்னையே மிக விரும்பும் இவளது இயற்கை) உன்னுடைய முகம் தோன்றிய காலத்தில் அதன் முன்பே வெளிப்பட்டது. இறைவனை அடைதலே உயிர்கட்கு இயற்கை யாதலும், அவ்வியற்கை ஆணவத்தின் செயலால் திரிக்கப்படுதலாலே அவை உலகை நோக்கிச் செல்லும் செயற்கையை உடையவாதலும், ஆணவத்தின் சத்தி மெலிந் தொழிந்தபொழுது உயிர்களின் இயற்கைத் தன்மை வெளிப்படுதலும் ஆகிய உண்மைகள் இங்குக் குறிக்கப்பட்டன என்க. வம்பு அளிந்த - புதிதாய்ப் பழுத்த; ஆணவ நீக்கத்தில் விளங்குதலால் இறையின்பம் புதிதாய்த் தோன்றல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது. மருந்தாதல், `பிறவிப் பிணிக்கு` என்க. `நல்பளிங்கு` என இயையும். வளர் - ஒளி மிக்க. மூன்று கண்களையும் செம்மையையும் உடைய பளிங்கு, சிவபெருமானுக்கு இல்பொருள் உவமையாய்வந்தது. பின் இரண்டு அடிகளை முதலில் வைத்து, இறுதியில் `இவட்கு அருள வேண்டும்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மைஞ்ஞின்ற குழலாள்தன்
மனம்தரவும் வளைதாரா
திஞ்ஞின்ற கோவணவன்
இவன்செய்த தியார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

கருமை நிலைபெற்ற கூந்தலை உடைய தலைவி தன் உயிர் போன்ற மனத்தினைக் கோடைத் திரைலோக்கிய சுந்தர னுக்கு வழங்கவும், அவள் காணநிற்கின்ற கோவணமாக உடுத்த உடையை உடைய அப்பெருமான் அவளிடமிருந்து கவர்ந்த வளையல்களைக் கூடத் திரும்பத் தருகின்றான் அல்லன். இவன் செய்த செயல் போன்ற செயலை இதற்குமுன் செய்தார் யாவர் உளர்? அதனால் இவன் மெய்ம்மை பொருந்திய அன்பர் ஆயினார்க்குத் தானும் மெய்ம்மையான அருளில் பொருந்தவேண்டிய நன்றியறியும் பண்பு இல்லாதவன் ஆகின்றான் என்று செவிலி இறைவனுடைய பண்பினைப் பழித்துக் கூறியவாறு.

குறிப்புரை :

இத் திருப்பாட்டில், நகாரங்கட்கெல்லாம், ஞகாரங்கள் போலியாய் வந்தன. இவ்வாறு வருதலை, ``செஞ்ஞின்ற நீலம்`` (தி.4 ப.80 பா.5) என்னும் அப்பர் திருமொழியிற் காண்க. மை நின்ற - கருமை நிறம் பொருந்திய; இனி `மேகம் நின்றது போன்ற` என்றும் ஆம். `திரைலோக்கிய சுந்தரன், தனக்குத் தன் உயிர்போன்ற மனத்தைக் கொடுத்தவட்கு, அவளது வளையையும் திரும்பத் தருகின்றிலன்; இதுபோலும் நன்றியில்லாத செயலை இதற்குமுன் யார் செய்தார்; ஒருவரும் செய்திலர். அதனால், இவன் மெய்ம்மை பொருந்திய அன்பராயினார்க்குத் தானும் மெய்ம்மையான அருளில் பொருந்த வேண்டிய நன்றியறியும் பண்பு இல்லாதவன் ஆகின்றான்` எனப் பழித்தவாறு. காதல் மிகுதியாற் கூறினமையின், இப் பழிப்பு அமைவதாயிற்று. இந் நின்ற - இங்கு நிற்கின்ற. கோவணவன் - கோவணமாக உடுத்த உடையை யுடையவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

நீவாரா தொழிந்தாலும்
நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
குவளைமலர் சொரிந்தனவால்
ஆவாஎன் றருள்புரியாய்
அமரர்கணம் தொழுதேத்தும்
தேவாதென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

தேவர் கூட்டங்கள் தொழுது போற்றும் தேவனே! அழகிய சோலைகளை உடைய கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! நீ இவள் விரும்பியபடி வாராவிட்டாலும் எளியளாகிய இவள் உன் பக்கலிலே விருப்பம்கொண்டதனால் இவளுடைய குவளைமலர் போன்ற கண்கள் நூலில் கோக்கப்படாத முத்துமணி போன்ற கண்ணீரைச் சொரிகின்றன. இவள் திறத்து ஐயோ! என்று இரக்கம் கொண்டு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

நீ வாராதொழிந்தாலும் - நீ இவள்பால் வாராவிடினும். `ஏழை நின்பாலே விழுந்து` என மாற்றி. ``விழுந்து`` என்றதனைத் திரித்து, `எளியளாகிய இவள் நின்னிடத்தே வந்துவிழ` என உரைக்க. `குவளை மலரும் கோவாத மணிமுத்துச் சொரிந்தன` என உம்மையை மாற்றி உரைக்க. குவளைமலர் - கண்; உருவகம். `கோவாத மணி யாகிய முத்து` என்றது, கண்ணீரைக் குறித்தல் வெளிப்படை. ஆவா, இரக்கக் குறிப்பு. தென் - அழகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

முழுவதும்நீ யாயினும்இம்
மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
பயில்வதும்நின் னொருநாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

சிறந்த மதில்களைச் சூழ்ந்த சோலைகளை உடைய கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! எல்லாப்பொருள்களும் நீயே யாயினும், நீ அங்ஙனம் எங்குமாய இன்பத்தை இவ்வுடம்பு கொண்டு இவள் பெறாமையால், இச்செறிந்த கூந்தலை உடைய என்மகள் தன் உடல் உறுப்புக்கள் பலவும் குற்றம் உடையன என்று கருதி அவற்றிற் காக உண்ணுதல் நீராடுதல் ஒப்பனை செய்தல் முதலியவற்றை மதிக்கின்றலள். அவள் பலகாலும் கூறிக்கொண்டிருப்பதும் உன் திரு நாமமே. அவள் கண்ணீர் வடிப்பதும் உன் செயல்களை நினைத்தே யாகும். இவ்வுடம்பு கொண்டுபெறும் பேறு அதுவன்றோ? - என்று தாய் தன்மகள் மனப்பக்குவம் கண்டு மகிழ்ந்து கூறியது.

குறிப்புரை :

மெய் முழுதும் - தனது உடல் உறுப்புக்கள் பலவும். பழுது - குற்றம் உடையன. ஓராள் - அவற்றை மதிக்கின்றிலள்; எனவே, `உண்ணாமை, நீராடாமை, ஒப்பனை செய்யாமை முதலிய வற்றால் அவைகளை வருத்துகின்றாள்` என்பதாம். `எல்லாப் பொருளும் நீயேயாயினும், நீ அங்ஙனம் எங்குமாய இன்பத்தை இவ் வுடம்புகொண்டு இவள் பெறாமையால், இதனை வெறுக்கின்றாள்` என்பது பொருள். இதனால், சீவன் முத்திநிலையில் நிற்பார்க்கும் பரமுத்தி நிலைக்கண் உளதாகும் வேட்கை மிகுதி குறிக்கப்பட்டமை காண்க. ``அதுவன்றோ பெறும் பேறு` என்றது, ``இவள் பெற்றது அவ் வளவே`` என்னும் பொருட்டாய் அவலம் குறித்ததாயினும், உண்மைப் பொருளில், `இவ்வுடம்புகொண்டு பெறும்பேறு அதுவே யன்றோ` என்பது குறித்துநிற்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

தன்சோதி எழுமேனித்
தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
ஓலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாக்கண் ணிவளுடைய
துயர்தீரும் ஆறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

செந்நெற்பயிர்கள் வளரும் வயல்களை உடைய கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! தன்அழகு மேன்மேலும் வளருகின்ற உடம்பில் தோன்றிய பொற்பூப்போன்ற பசலை நிறமே தன்வருத்தத்திற்குச் சான்றாக நிற்க, உன் ஒளிமயமான அழகினைக் காண்பதற்கு இவள் வருந்தி அழைப்பவும் நீ உன் ஒளிவடிவத்தை இவளுக்குக் காட்டுகின்றாய் அல்லை. உறங்காத கண்களை உடைய இப்பெண்ணின் மனத்துயரம் நீங்குமாறு நீ அருள் செய்வாயாக - செவிலிகூற்று.

குறிப்புரை :

`தன்மேனி` என இயையும். ``தன்`` என்றது, தலைவியை. சோதி, இங்கு அழகு. மேனி - உடம்பு. உடம்பின் கண் தோன்றிய. தபனியப் பூச்சாய் காட்டாய் - பொற்பூப்போலும் நிறமே (பசலையே) தனது வருத்தத்திற்குச் சான்றாய் நிற்க. ``ஆய்`` என்ற தனை, `ஆக` எனத் திரிக்க. `காட்டா` என்றே பாடம் ஓதுதலும் ஆம். இவ்வடிக்கும், ``உருக்காட்டாய்`` எனப் பின்வருகின்ற அதன் பொருளே பொருளாக இறைவற்கு ஏற்றி உரைப்பாரும் உளர். `பூஞ்சாய்க் காட்டாய்` என ஓதுவார் பாடம் பாடம் அன்று. `சோதி யாகிய எழில்` என்க. என்றது, அதனையுடைய, உருவத்தைக் குறித்தது. ``இவளுடைய`` என்பது. ``கண்`` என்றதனோடும் இயை யும். செஞ்சாலி - செந்நெற் பயிர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

அரும்பேதைக் கருள்புரியா
தொழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிரீர்ந்தாய்
நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

அகழிநீரால் குளிர்ச்சி பொருந்திய மதில்களை அடுத்த குளிர்ந்த சோலைகளில் பாதிரிமரங்கள் பூக்களைச் சொரியும் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! இப்பெறுதற்கரிய பெண்ணுக்கு நீ அருள் புரியாது விட்டுவிட்டாய். உன்னுடைய விளங்குகின்ற சடையின்மேல் உள்ள பிறை சொரிகின்ற நெருப்பினாலும், உன் கையில் உள்ளயாழ் நரம்பின் ஒலியாலும் இப்பெண்ணினுடைய உயிரை உடம்பிலிருந்து பிரித்துக் கொண்டிருக்கிறாய். இஃது உனக்கு அழகோ - செவிலிகூற்று.

குறிப்புரை :

``நளிர் புரிை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்பது முதலாகத் தொடங்கி, ``அரும் பேதைக்கு அருள்புரியாதொழிந்தாய்`` என்றதனை இறுதிக்கண் வைத்து, `இஃது உனக்கு அழகோ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
``பேதை`` என்பது, `பெண்` என்னும் அளவாய் நின்றது. `இவ்வரும் பேதை` எனச் சுட்டு வருவித்துரைக்க. அருமை, பெறுதற் கருமை. ``நரம்பு`` என்றது, அதனினின்று எழும் இசையை. சிவபெரு மான் வீணை வாசித்தலை, ``வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி`` (தி.2 ப.85 பா.1) என்பதனானும் அறிக. உயிரை ஈர்தலாவது உடம்பினின்றும் பிரித்தல். ``உயிர் ஈரும்வாளது`` (குறள்-334) என்புழியும், ஈர்தல் இப்பொருட்டாதல் அறிந்துகொள்க. நளிர் - குளிர்ச்சி; இஃது அகழி நீரால் ஆவது. வனம், நந்தவனம். புரிசை வனம் - புரிசையாற் சூழப்பட்ட வனம் . `பாதிரியம் போது` என்பது, தொகுத்தல் பெற்று, `பாதிரம் போது` என நின்றது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

ஆறாத பேரன்பி
னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

அழகிய சோலைகளை உடைய கோடைத்திரை லோக்கிய சுந்தரனே! தணியாதபெருங்காதலை உடைய மெய்யடியார் களின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டு, பேரன்பர் அல்லது உன் மாட்டுச் சிறிதன்புடையவர் பலரும் உன்னைச் சூழுமாறு நீ கவலை யின்றி இருக்கிறாய். அச்செய்தியை மனத்துள்கொண்டு அவர்களனை வரினும் பெருமை பெற்றவளாய் உன்னைத் தன் ஒருத்திக்கே உரிய வனாகச் செய்து கொள்வதற்கு விரைதலைப் பொருந்தி இன்னும் அம் மயக்கம் தெளியப் பெற்றிலாள். இவள் காதல் மிகுதிக்கு ஏற்ப அருள் செய்வாயாக - செவிலிகூற்று.

குறிப்புரை :

ஆறாத - தணியாத. அன்பு காதலாய் முறுகிய ஞான்று கனல்போல் உள்ளத்தைக் கவற்றுதலின், ``ஆறாத அன்பு`` என்றாள். ``அன்பினவர்`` என்றதில், இன்னும், அகரமும் ஆகிய இருசாரியைகள் வந்தன. வேறாக - பேரன்பர் அல்லாத பிறராக. இவர் சிறிதன்பு உடையவர். வீறாடி - அவர் அனைவரினும் பெருமை பெற்றவளாய். உன்னைப் பொது நீப்பான் - உன்னைத் தன் ஒருத்திக்கே உரியனாகச் செய்து கொள்ளுதற்கு. விரைந்து - விரைதலைக் கொண்டு. இன்னும் தேறாள் - இன்னும் அம்மயக்கம் தெளியப்பெற்றிலள். `இறைவனை ஒருத்தி தனக்கே உரியனாகச் செய்துகொள்ளுதல் இயலாத தொன்றாதலின், அவ்வெண்ணத்தை மயக்கம்` என்றாள். `காதல் மிகுதியால் இன்னதோர் எண்ணம் இவட்குத் தோன்றிற்று` என்பதாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

சரிந்ததுகில் தளர்ந்தஇடை
அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி சொருநாள்கண்
டிரங்காய்எம் பெருமானே
முரிந்தநடை மடந்தையர்தம்
முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ வணிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.

பொழிப்புரை :

எம் பெருமானே! அசைந்த நடையினை உடைய பெண்கள் ஒலிக்கும் ஒலியும், மத்தளம் முதலிய இசைக்கருவிகள் தரு கின்ற ஓசையும் திருத்தமாய் உள்ள விழாக்கள் அழகு செய்கின்ற கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! இவ்விளம் பெண் தன் ஆடை நெகிழ்ந்து, இடைதளர்ந்து, குழல் அவிழ்ந்து இருக்கும் தன்மையை ஒருநாளாவது உன் திருக்கண்களால் கண்டு இவள்திறத்து இரக்கம் காட்டுவாயாக - செவிலி கூற்று.

குறிப்புரை :

`துகிலையும், இடையையும், குழலையும் உடைய தெரிவை` என்க. இவ்வாறு ஓதினாரேனும், `தெரிவை துகில் தளர்ந்து, இடை தளர்ந்து, குழல் அவிழ்ந்து இருந்த பரிசு கண்டு இரங்காய்` என்றலே கருத்தாதல் உணர்க. முரிந்த நடை - அசைந்த நடை. வழங்கு ஒலி - மத்தளம் முதலிய வாச்சியங்கள் தருகின்ற ஓசை. திருந்து விழவு - திருத்தமாய் உள்ள விழாக்கள். அணி - அழகு செய்கின்ற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய சோலைகளை உடைய கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! வேதமாகியதேனை உட்கொண்டு, அரியதமிழாகிய மாலைகள் நறுமணம் வீசுமாறு நான் இவ்வாறு, இருக்கின்ற நிலைபெற்ற காரணத்தால், கருவூர்த் தேவனாகிய அடியேன் பாடிய நிலை பெற்ற இத்தமிழ் மாலையிலுள்ள பாடல்கள் பத்தினையும் மனப்பாடம் செய்து காந்தாரப்பண்ணில் பாடுகின்றவர்கள் நிறைவுடையவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை :

தேனைப் பருகி, மாலை சூடிவரும் செல்வரது இயல்பு பற்றித் தமது திருவருட் செல்வப் பேற்றை இவ்வாறு விளக்கினார். `யான் இவ்வாறிருக்கின்ற காரணத்தால், எனது இத் தமிழ்மாலையும் நிலைபெற்ற தமிழ்மாலையாயிற்று` என்பதாம். இனி, இவ்வாசிரியர் காயகற்பம் பெற்றுப் பன்னாள் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுதலால், அதனையே குறித்து, ``நிலைபெற்ற கருவூரன்`` என்றார் என, இதனை, அவருக்கே அடையாக்கி உரைத்ததும் ஆம். இப்பொருட்கு, முதலடி யிற் சொல்லப்பட்ட காரணம், இவர் நிலைபெற்றமைக்கு உரிய காரண மேயாம். `தமிழ்மாலை பகரவரும்` என்பதும் பாடம். `இத் தமிழ் மாலையின் பாடல்பத்தினையும் காந்தாரப் பண்ணினால் பாடி இறை வனைப் போற்றுவோர் பூரணத்தாராவர்` என்க. `பூரணத்தால்` என்பது பாடம் அன்று. சீர் அணைத்த - அழகைத் தன்னிடத்தே கொண்ட.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

முன்னொரு காலத்தில் திருமால் கூட அறிய முடியாத ஒருவனாய் சத்தி, சிவம் ஆகிய இருபொருள்களாய் இருக்கின் றவனே! முக்கண்ணனே! நான்கு பெரிய நீண்ட தோள்களை உடைய கரும்பே! தேனே! அமுதமே! கங்கைகொண்ட சோளேச்சரம் என்ற திருக்கோயிலில் உகந்தருளியிருப்பவனே! அன்ன வடிவு எடுத்துப் பிரமன் வானத்தில் பறந்து உன் உச்சியைத் தேடுமாறு அவ்வளவு பெரியவனாகிய நீ சிறியனாகிய அடியேனை அடிமை கொள்ள விரும்பி அடியேனுடைய உள்ளத்தில் புகுந்த எளிவந்த தன்மையை அடியேன் ஒருநாளும் மறக்கமாட்டேன்.

குறிப்புரை :

தேட - தேடுமாறு. அங்ஙனே - அவ்விடத்தே; என்றது, `மாலும் அயனும் பொருதவிடத்தே` என்றதாம். ``பெரிய`` என்றது, `பெரியோனாய் நின்ற` என ஆக்கவினைக் குறிப்புப் பெயர். ஆள்விரும்பி - ஆளாக விரும்பி. ``மறக்கேன்`` என்றதில் எதிர்காலங் காட்டும் ககர வொற்று வந்ததன்று; குகரச் சாரியை வந்தது. எனவே, `மறவேன்` என்பது பொருளாயிற்று. இவ்வாறு வருதல் பிற்கால வழக்கு. இருவன் - இரு பொருளாய் இருப்பவன். இரு பொருள் - சத்தி, சிவம்; பெண்மை, ஆண்மை. கன்னல் - கரும்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா
ஓலம்என் றோலமிட் டொருநாள்
மண்ணின்நின் றலறேன் வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேற்
பண்ணிநின் றுருகேன் பணிசெயேன் எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணின்நின் றகலான் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

பொழிப்புரை :

மனம் நெகிழ்ந்து உடல் உருகி `முக்கண்ணனே! அடி யேன் உன் அபயம்` என்று உரத்துக் கூறிக்கொண்டு ஒருநாள் கூடத் தரையில் நின்றவாறு உன்னை அழைக்கமாட்டேன். வணக்கத்தைக் குறிப்பிடுகின்ற தமிழ்ப்பாடற்கோவையை, இனிய ஓசையை உண்டாக்குகின்ற சிலம்பினை அணிந்த உன் திருவடிகளை அடியேன் முடிமீது சூடிக்கொண்டு நின்று பாடி உருகமாட்டேன். உனக்கு ஒரு திறத்தாலும் திருத்தொண்டு செய்யாதேன் எனினும், நல்வினை செய்யாத பாவியாகிய அடியேன் உயிரினுள் புகுந்து, கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! நீ அடியேன் கண்களின் நின்று நீங்கா திருத்தலுக்குக் காரணம் உன் கருணையே அன்றிப் பிறிதில்லை.

குறிப்புரை :

நெக்கு - குழைந்து. `ஒருநாளும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி மொழி மாலை - வணக்கம் கூறுகின்ற தமிழ்ப் பாடற்கோவை. `மாலை பண்ணி நின்று` என இயையும். மழலையஞ் சிலம்பு - இனிய ஓசையை உண்டாக்குகின்ற சிலம்பு. `முடிமேலாக` என ஆக்கம் வருவிக்க. `ஆவி, உயிருணர்வு` என்பது மேலும் விளக்கப்பட்டது. என்னோ - காரணம் யாதோ; `கருணையே காரணம்; பிறிதில்லை` என்பது கருத்து. கொல், அசைநிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம்அள் ளூறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

அன்போடு இறைவனாகிய தன்னை திருவைந் தெழுத்தின் சொற்களாகிய நிலையில் வைத்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் போன்ற பொன் குவியலும், அழகிய பொன்மயமான பேரில்லங்களும், பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரின் பருத்த தனங்களும், கற்பகச் சோலையும் ஆகிய எல்லா நுகர் பொருள் இன்பங்களும் தானே வழங்கும் கங்கைகொண்ட சோளேச்சரத் தானைத் தவிர மேம்பட்ட தெய்வம் வேறு உளதோ?

குறிப்புரை :

``அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே`` என்பதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. ``அஞ்செழுத்தின்`` என்ற இன், தவிர் வழி வந்த சாரியை. சொல்பதம் - சொல்லாகிய நிலை. அள் ஊறும் - மிக உருகுகின்ற; என்றதனை, `உருகி நினைக்கின்ற` என்க. `எண் திசைக் கண்ணும் ஆம்` என இயைக்க. ``கனகம்`` என்பது, ``பற்பதக் குவை`` என்பதில் தொக்கு நின்ற `போலும்` என்பதனோடு முடியும். `பர்வதம்` என்னும் ஆரியச் சொல் ``பற்பதம்`` என வந்தது. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். ``பொழிலும்`` என்பதன்பின் `ஆகிய` என்பது எஞ்சி நின்றது. `ஆம்` என்றது, `ஆவான்` என்ற முற்று. `ஆவான்` என்றது, `அவை அனைத்தினாலும் வரும் இன்பத்தைத் தான் ஒருவனே தருவான்` என்றதாம். `அதனால், அற்புதத் தெய்வம் இதனின் மற்று உண்டோ` என்க. இதனின் - இதுபோல். ``உண்டே`` என்ற வினா, இல்லாமையை விளக்கி நின்றது. கங்கைகொண்ட சோளேச்சரத் தானைத் தெய்வங்களோடு பொருவிக் கூறலின், ``இத னின்`` என்றார். இதற்குப் பிறவாறு உரைத்தல் பொருந்தாமை அறிக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும்,
அழகிய விழியும் வெண் ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! அழகிய பொட்டு இடப்பட்ட வனப்புடைய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும், திருநீறும், சிவவேடத்திற்குச் சிறப்பான அடை யாளமாகிய சடைகளும், சடையின்மேல் கங்கை அலைகளும், சதங்கையும், சிலம்பும் ஆகிய இவற்றைச் சூழ்தலைக்கொண்ட எட்டுத் திக்குகளிலும் உருவெளியாகக் கண்ட உன் அடியார்கள் முகம்மலர இரு கண்களிலும் கண்ணீர் அரும்பக் கைகள் குவிய இருப்பதன் காரணம் யாதோ? முன்னைத் தவத்தின் பயனாகக்கிட்டிய அன்பே காரணம்.

குறிப்புரை :

ஐய பொட்டு - அழகிய திலகம். `அளக வாள்நுதல்` என்பது பாடம் அன்று. சைவம் - சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு அடையாளங்களுள் சடை சிறந்ததொன்றாதலின், ``சைவம் விட்டிட்ட சடைகள்` என்றார். நடனம் செய்பவர் காலில் சதங்கை அணிதல் இயல்பு என்க. மொய் கொள் - சூழ்தலைக் கொண்ட. ``எண் திக்கின் கண்ணும்`` என உருபு விரிக்க. `மலர்ந்து` `மொட்டிக்கும்` எனச் சினை வினை முதல்மேல் நின்றன. இவ்வா றன்றி, ``தொண்டர்`` என்றதில் ஆறாவது விரித்து, ``மலர்ந்து`` என்பது, `மலர` என்பதன் திரிபு என்றலும் ஆம். என்னோ - காரணம் யாதோ. `முன்னைத் தவத்தின் பயனாகக் கிடைத்த அன்பே காரணம்` என்ப தாம். கொல், அசைநிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க் கமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே வேதங்களை ஓதும் பிரமனாகவும் மேம்பட்ட நீண்டவடிவு எடுத்த திருமாலாகவும், அழகிய தேவர்கள் தலைவனாகிய இந்திரனாகவும், சூரிய தேவனாக வும், பரவிய சடைமுடியையும் மூன்று கண்களையும் உடைய சிவ பெருமானாகவும், உயிரகத்து அதனைத் தளிர்ப்பிக்கும் அமுதமாக வும், காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த, மேம்பட்ட வீரனாகவும், இவற்றைத் தவிர வேண்டுவார் வேண்டும் உருவத்தில் தோற்றம் வழங்குபவனாகவும் உள்ளான்.

குறிப்புரை :

``கங்கைகொண்ட சோளேச்சரத்தானே`` என்பதை முதலிற்கொள்க. ஏகாரம், தேற்றம். அவன் ஒருவனே பல உருவுமாவன் என்க. சுருதி வானவன் - வேதத்தை ஓதுகின்ற தேவன்; பிரமன். `விசும்பு` என்றது சுவர்க்கலோகத்தை; ``அகல்விசும்பு ளார்கோமான் - இந்திரனே`` (குறள் - 25) என்றது காண்க. பரிதி வானவன் - சூரிய தேவன். படர் சடை முக்கண் பகவன், உருத்திரன் என்றது சீகண்டரை. அக உயிர் - தன்னை அடைந்த உயிர்; அவைகட்கு அமுதம்போல அழியா இன்பந்தருவன் என்க. இதனை இறுதியிற் கூட்டி உரைக்க. எருது வாகனன் - இடபாரூட மூர்த்தி. எயில்கள் மூன்று எரித்த சேவகன், திரிபுராந்தக மூர்த்தி. இவையும் சீகண்டர் கொண்ட வடிவங்கள். `அவரவரும் அன்பினாற்கொண்ட மூர்த்திகள் பலரும் தானாய் இருந்து அவரவர் கருதிய பயனைத் தருபவன் பரமசிவன் ஒருவனே` என்றவாறு. தனது உண்மை நிலையை உணரும் ஞானியரை, ``அகவுயிர்`` என்றும், அவர்க்குப் பரமுத்தி யளித்தலை, ``அமுதாம்`` என்றும் குறித்தனர் என்க. ``ஆருருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்`` (தி.6 ப.18 பா.11) என்று திருநாவுக்கரசர் அருளிச் செய்தமை காண்க. ஏறுசேவகன் - மிக்க வீரத்தையுடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே நீல கண்டனே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

அண்டங்கள் எல்லாம் தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணு அளவின என்று கூறுமாறு மிகப்பெரிய வடிவினனாகவும், தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணுவே ஓர் அண்டத்தை ஒத்த பேருருவினது என்று சொல்லுமாறு சிறுமையிற் சிறிய வடிவினனாக வும் உள்ள தன்மையைக் கொண்டு, அடியேன் நுகரும் பிராரத்தவினை உன்னைச் சேர்ந்ததாக ஆகுமாறு அடியேனுடைய உள்ளத்தினுள் கலந்து விளங்கும் மேம்பட்ட ஒளி வடிவினனே! வாசுகி என்ற பாம் பினையே நாணாகக் கொண்டு பெரிய மேருமலை ஆகிய வில்லாலே பகைவர்களின் மும்மதில்களையும் எரித்த வீரனே! நீல கண்டனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே!

குறிப்புரை :

``கொண்டு`` என வந்தவை இரண்டும் வினைச் செவ்வெண். இம் முதலடியின் பொருளை, ``அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் - அண்டங்க ளாகப் பெரிதாய்ச் சிறிதா யினானும்`` எனப் பின் வந்தோர் கூறியவாறு அறிக. (பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் - கடவுள் வாழ்த்து) உண்ட ஊண்நுகர்ந்த - பிராரத்த வினை. `அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறை பணி நிற்` (சிவஞான போதம் - சூ. 10) பார்க்கு வரும் பிராரத்த வினை அவருக்கு ஆகாதவாறு, `இவனுக்குச் செய்தது எனக்குச் செய்தது என்று உடனாய் நின்று ஏற்றுக் கொள்ளுதல்` (சிவஞான சித்தி- சூ. 10-1) பற்றி, ``அடியேன் உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள்கலந்து`` என்றார். இறைபணியில் நிற்பவர் தமக்கு வருவன பலவற்றையும் `சிவார்ப்பணம்` எனக்கொள்ளுதல், பிராரத்தம் தாக்காமைப் பொருட்டேயாம்.
உண்ணும் உணவையும் சிவனுக்குச் செய்யும் ஆகுதியாக நினைத்துச் செய்தலும் மரபாதலின், இத் தொடர், அதனையும் குறித்தல் பொருந்துவதாகும். ``பரஞ்சோதி`` என்றதன் பின்னர், `நீயே` என்னும் பயனிலை வருவிக்க. இதனால், சிவ பெருமானது முழுமுதற்றன்மை கூறியவாறாம். `பாம்பாம்` எனப் பாடம் ஓதுதலால் ஒரு சிறப்பின்மை அறிக. கண்டன் - வீரன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மோதலைப் பட்ட கடல்வயி றுதித்த
முழுமணித் திரளமு தாங்கே
தாய்தலைப் பட்டங் குருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே
நிசிசரர் இருவரோ டொருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

பொழிப்புரை :

திரிபுரத்தை அழித்த காலத்திலே அசுரருள் மூவரை அன்பினால் சேர்ந்த கருணையை உடையவனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! ஒன்றொடொன்று மோதுகிற அலைகளோடு கூடிய கடல் வயிற்றிலிருந்து தோன்றிய குற்றமற்ற முத்துத் திரள்களைப் போன்ற அமுதம் அங்கேயே கடலிலே சேர்ந்த அப்பொழுதே உருகிக் கடலோடு ஒன்றாகும் தன்மைபோல என்னை முன் படைத்த நீ அடியேனுக்குக் காணக்கிட்டினால் அடியேனும் உருகி உன்னோடு ஒன் றாகிவிடுவேன்.

குறிப்புரை :

அலைப்பட்ட - அலையோடு கூடிய. `உதித்த அமுது` என இயையும். முழுமணி - குற்றமற்ற முத்து. `மணித்திரள் போலும் அமுது` என்க. இது, நிறம்பற்றி வந்த உவமை. ஆங்கே - அவ்விடத்தே. ``தாய்`` என்றது, அக்கடலை. `தலைப்பட்ட வழி` என் பது, `தலைப்பட்டு` எனத் திரிந்து நின்றது. தலைப்படுதல் - சேர்தல். அங்கு - அப்பொழுது. தன்மையில் - தன்மைபோல. இறைவனே உயிர்கட்கு அம்மையும் அப்பனும் ஆதலின், `என்னை முன் ஈன்ற நீ` என்றார். ``முன் ஈன்ற`` என்றது, பான்மைச் சொல். `வகையினேன்` என்பதனை, ``வகை`` என்றார். `ஆவேன்` என்னும் ஆக்கம் தொக்கு நின்றது. `உருகி ஒன்றாய் விடுவேன்` என்றார். இஃது இறைவனை மீளவும் எதிர்வர வேண்டிய வாறு. வாதவூரடிகளும் இவ்வாறு வேண் டினமை வெளிப்படை. நிசிசரர் - அசுரர். இருவரோடு ஒருவர் - மூவர். இவர் திரிபுரம் அழித்த காலத்துத் தமது சிவபத்தியால் அழியாது நின்று சிவபிரானை அடைந்தவர். அவர்களது பத்தி காரணமாகச் சிவபிரான் அவர்களைத் தப்புவித்தமை பற்றி, ``அவர்தம் காதலிற்பட்ட கருணை யாய்`` என்றார். பட்ட - அகப் பட்ட. ``பத்தி வலையிற் படுவோன் காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண் - 42) என்று அருளியது காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்
டத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்
கமருல களிக்கும்நின் பெருமை
பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யுங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கிளிபோன்ற மகளிர் மீது வைத்த அன்பினை நூறாயிரம் கூறுகளாகச் செய்து அவற்றுள் ஒரு கூறு அளவினதாகிய அன்பை உன்பால் வைத்த அடியார்களுக்கு உன் பெருந்தன்மையால் சிவலோகத்தையே வழங்கும். உன்னை ஒரு சமயம் பித்தன் என்று கூறுவாராயினும் அடியார்கள் செய்த தவறுகளைப் பொறுத்து அவர்களுக்கு அருள் செய்யும் அபயகரத்தை அடியேனுடைய தலை மீது வைத்த கங்கை கொண்ட சோளேச்சரத்தானே! என்று சிவ பெருமான் இவ்வாசிரியருக்கு ஆசிரியனாய் வந்து அருளிய வாற்றைக் குறிப்பிட்டவாறு.

குறிப்புரை :

தத்தை - கிளி. அங்கனையார் - மாதர். `தத்தை போலும் அங்கனையார்` என்க. தயா - இரக்கம்; என்றது அன்பை. `அதில்` என்பது, ``அத்தில்`` என விரித்தல் பெற்றது. `அங்ஙனம் கூறிடப்பட்ட அன்பில்` என்பது பொருள். அங்கு, அசைநிலை. ஒருகூறு - ஒருகூறாய அன்பினை. `பெருமையை` என, இரண்டாவது விரிக்க. பிழைத்தவை - அவர்கள் பிழைபடச் செய்த செயல்களை; இது `பித்தன்` எனக் கூறி யதைக் குறியாது பிறவற்றையே குறித்தல், ``பிழைத்தவை`` என்ற பன்மை யானும் பெறப்படும். ``செய்யும்`` என்ற பெயரெச்சம் ``கைத்தலம்`` என்ற கருவிப்பெயர் கொண்டது. இக்கைத்தலம், அபயகரம். ``கைத் தலம் அடியேன் சென்னிமேல் வைத்த`` என்ற இதனானும் இறைவன் இவ்வாசிரியர்க்கு ஆசிரியனாய் வந்து அருளினமை அறியப்படும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்
புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை யொடுங்கநீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! மூட்டிய நெருப்பினால் வெப்பமுறுத்தப்படும் காய்ந்த பாலோடு கலந்த நீர் ஆவியாகிப் போய்விடுவதுபோலப் பாவங்கள் விரைவில் நீங்கப் புண்ணியம் பின்சென்று அறிவினால் அறியும் வகையாக அடி யேனுன்னோடிருத்தலாகிய ஒரு யோக மார்க்கத்தில் விளங்கி நீ நுண்ணியையாய் உள்ளாய் எனினும் உன் பெருமை உன்னிடத்தில் மறைந்து நிற்க அடியேனால் விரும்பப்படும் நீ வந்து கண்ணினுள் மணி கலந்து நிற்பதுபோல அடியேனோடு ஒன்று கலந்து நின்றனை. இதற்கு அடியேன் செயற்பால கைம்மாறு யாது?

குறிப்புரை :

பண்ணிய - மூட்டிய. தழல் காய் - நெருப்புச் சுடுகின்ற (நெருப்பாற் சுடப்படுகின்ற). ``காய் பால்`` என்பது செயப்படு பொருட் கண் வந்த வினைத்தொகை. அளாம் - முன்பு கலக்கப்பட்ட. ``பறைந்து`` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ``நீர்போல்`` என் றார். `நீர் பறைவது போலப் பறைந்து` என்பது பொருளாயிற்று. `நெருப்பு மூட்டிக் காய்ச்சப்பட்ட பாலில், முன்பு கலந்திருந்த நீர் ஆவி யாய் விரைவில் நீங்கிவிடப் பின்பு நிலைத்து நின்று பயன் செய்யும் பால்போலும் புண்ணியம்` என்பது, இங்குக் கூறப்பட்ட பொருள். பொருட்கண், பாவம் பறைதல் ஒன்றே கூறினாராயினும், `நீ எனக்குச் செய்த திருவருளால் தூய்மையாக்கப்பட்ட எனது உயிரின்கண் முன்பு கலந்து நின்ற பாவம் பறைய` என்பது உவமையாற் கொள்ளுதல் கருத் தென்க. முன் - விரைவில். பறைந்து - நீங்கி. இதனை, `பறைய` எனத் திரிக்க. ``சென்று`` என்றது, `நிகழ்ந்து` என்னும் பொருளது. `சென்று புகுந்தது` என இயையும். `அறிவினுக்கு அறிய` என்றதில் நான்காவது, கருவிப் பொருட்கண் வந்தது. `கண்ணிற்குக் காணலாம்` என்பது போல. அறிதற்குச் செயப்படு பொருளாகிய `உன்னை` என்பது வருவித்துக்கொள்க. ``புகுந்தது`` என்னும் வினையாலணையும் பெயர் வினைமுதல் உணர்த்தாது. `புகுந்ததனால் விளைந்தது` எனச் செயப்படு பொருளை உணர்த்திற்று. `புகுந்ததாகிய ஓர் யோகு` என்க. யோகு - யோகம்; சிவயோகம். ``நுண்ணியை`` என்பதில் நுண் ணியையாய் என்னும் ஆக்கம் விரிக்க. `அப் பெருமை` எனச் சுட்டி உரைக்க. ஒடுங்க - மறைந்து நிற்க; என்றது, `என் திறத்தில் அதனைக் கொள்ளாது விடுத்து` என்றவாறு. `இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்` என்னும் குறிப்பெச்சம், இறுதியில் வருவித்து முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை மருங்கிற்
கொங்கைகொண் டனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என் றவிர்சடைமுடிமேற்
கங்கைகொண் டிருந்த கடவுளே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

இடப்பாகமாக உள்ள, கொங்கைகளின் பாரத்தைத் தாங்கி மெலிகின்ற கொடி போன்ற இடையினை உடைய பார்வதி கண்டால் வெகுளுவாள் என்று விளங்குகின்ற சடை முடியின் கண் கங்கையை வைத்துக் கொண்டிருக்கும் இறைவனே! கங்கை கொண்ட சோளேச்சரத்தானே! தம் கைகளில் வைத்துக் கொண்டு தேவர்கள் பூமாரி பொழிய, உன் திருவடிகளில் சூடிய சிலம்பு ஒலிக்க வந்து ஒருநாள் உன் திருக்கரத்தை அடியேன் தலையில் வைத்து ஆட்கொண்டு அருளினாய். நின் கருணைதான் என்னே!

குறிப்புரை :

``அங்கை கொண்டு`` என்றதில், ``கொண்டு`` மூன்றா வதன் சொல்லுருபு. அலம்ப - ஒலிக்க. ``உம் கை`` என்றதில் ``உம்`` ஒருமைப் பன்மை மயக்கம். `உன் கை` எனப்பாடம் ஓதினும் இழுக் காது. ``உம் கை கொண்டு`` என்றதில், `கொண்டு` என்றது, `எடுத்து` என்றவாறு. `மருங்கிற் கொடியிடை` என இயையும். `பக்கத்தில் இருக்கும் உமாதேவி` என்பது பொருளாம். ``கொங்கை கொண்டு`` , ``கங்கை கொண்டு`` என்றவற்றில் ``கொண்டு`` என்றவை, `தாங்கி` என்னும் பொருளன. அனுங்கும் - மெலிகின்ற (இடை என்க). ``கொடி யள்`` என்றதில், `ஆவள்` என்னும் ஆக்கம் விரிக்க. `கொடியளாவள்` என்றது, `வெகுள்வாள்` என்றவாறு. உமாதேவி காணின் வெகுள்வாள் என்று கருதியே சிவபிரான் கங்கையைச் சடையில் மறைத்து வைத்துள்ளான் என்றது, தற்குறிப் பேற்ற அணி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே. 

பொழிப்புரை :

பார்வதியோடு கூடி இருந்தே யோகம் செய்ப வனாய், ஒற்றைப் பிறைச்சந்திரனை முடியின் மீது கங்கையோடு அணிந்து கொண்டுள்ள தெய்வமாய் உள்ள கங்கைகொண்ட சோளேச் சரத்தானைப்பற்றி அழகிய கையில் பிச்சை எடுக்கும் ஓட்டினை ஏந்தி உணவுக்காகத் திரியும் கருவூர்த்தேவர் பாடியுள்ள சொல்மாலை யாகிய இப்பதிகத்தைப் பாடி வழிபடுபவர்கள் ஆணைச் சக்கரம் ஏந்திய கையோடு இவ்வுலகில் அரசர்களைப் போலச் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் மூழ்கித் திளைப்பார்கள்.

குறிப்புரை :

யோகு - யோகம். ``மங்கையோடு இருந்தே யோகம் செய்வான்`` என்றது, ``ஒன்றிலும் தோய்விலனாய், ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நிற்பான்`` (சிவஞான சித்தி- சூ. 1.51) என்றதாம். ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை`` என்ற அப்பர் திருமொழியைக் காண்க. (தி.6 ப.50 பா.3) இவ்வாசிரியர், தம்மை, அங்கை ஓடு ஏந்திப் பலி திரிபவராகக் கூறினமையின், நிறைந்த துறவர் என்பது விளங்கும். ஆழி - ஆணைச் சக்கரம். `திளைப்பதும் சிவன் அருட்கடல்` என்றாராயினும், `சிவனது அருட்கடலிலும் திளைப்பர்` என்றல் கருத் தென்க. `அரசு வீற்றிருத்தல் இப்பிறப்பிலும், சிவனது அருட்கடலில் திளைத்தல் இப்பிறப்பு நீங்கிய பின்னரும்` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

மருது, அரசு, பெரிய கோங்கு, அகில் என்னும் மரங்களை முரித்துக்கொண்டு மலையில் தோன்றும் பொருள்களை அடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கி ஓடிவருகின்ற வையை நதியின் ஒன்றோடொன்று மோதும் அலைகள் தம் பக்கத்தில் ஓங்கக்கொண்ட, கடைவீதிகளையுடைய திருப்பூவணம் என்ற தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய பெருமானே! திருவருள் புரிந்து அடியேனை அடிமையாக இவ்வுலகில் ஆட்கொண்டு இன்பம் தரும் பொருள் இது என்று அறிவித்து மிகுதியாக அருள்புரிந்து ஆனந்தத்தை வழங்குகின்ற உன் பெருமையைவிட மேம்பட்ட பொருள் ஒன்று உளதோ?

குறிப்புரை :

இதனுள் இறுதி ஒன்றொழித்து ஏனைய பாடல்களில் மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `ஆளாக ஆண்டு கொண்டு` என்க. இங்ஙன் - இவ்வுலகில். இனியது காட்டி - இன்பந் தரும் பொருள் இது என்று அறிவித்து. பெரிது அருள் புரிந்தமை யாவது, ஆனந்தத்தைத்தர நினைந்தமை. ``வறியார்க்கொன்று ஈவதே ஈகை`` (குறள் - 221) ஆதலின், அதனைச் செய்வோரது பெருமையையே உலகத்தார் உரையாலும், பாட்டாலும் சிறந் தெடுத்துப் போற்றுதல்போல. (குறள் - 232) மெய்ந்நெறி வகையில் மிகச் சிறியேனாகிய எனக்கு அருள்புரிந்த உனது பெருமையினும் சிறந்த பெருமை வேறொன்று இல்லை என்பார். ``நின் பெருமையிற் பெரியதொன்றுளதே`` என்றார். `மருது, அரசு, கோங்கு, அகில் என்னும் மரங்களைச் சாடி` என்க.
இரு - பெரிய. சாடி - முரித்து. வரைவளம் - மலைபடு பொருள்கள்: அவை கத்தூரி, குங்குமம் முதலியன. ``திரைமருங்கு`` என்றது, `கரைக்கண்` என்றவாறு. `திரைகளைத் தன்மருங்கில் ஓங்கக் கொண்ட வீதி` என்பாரும் உளர். ஆவண வீதி - கடைத்தெரு. பூவணம் கோயில் கொண்டாயே - திருப்பூவணத்தைக் கோயிலாகக் கொண்டவனே.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச்சோலை ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

தேனோடு கூடிய தண்ணீரை உடைய, மானிடர் ஆக்காத நீர்நிலையில் உள்ள வாளைமீன்கள் தம் வாயில் கொள்ளும் வண்ணம் தெளிந்த தேன் பாய்ந்து ஒழுகும் பூக்களையுடைய வயல்கள், சோலைகள் இவற்றை அடுத்த, கடைத்தெருக்களையுடைய திருப்பூவணத்தில் கோயில் கொண்டவனே! பாம்புப்படுக்கையில் துயின்ற திருமால், பிரமன் முதலிய தேவர்கள் மிகநெடுங்காலமாக உன்னைக் கண்களால் காண முயன்று வருந்தியிருக்கவும் அடியே னுடைய உள்ளத்தில் பரம்பொருளாகிய நீ வந்து சேர்ந்த எளிவந்த தன்மையை எக்காலத்தும் அடியேன் மறக்கமாட்டேன்.

குறிப்புரை :

``முத றேவர்`` என்பதல்லது, `முதற் றேவர்` என்பது பாடமாகாது. ஏம்பலித்து - வருந்தி. தேம் புனற் பொய்கை - தேனோடு கூடிய நீரையுடைய பொய்கையின் நீரை. பொய்கை, ஆகுபெயர். தேறல் - தேன். ``ஒழுகும்`` என்றது, `பணை` `சோலை` என்னும் இரண்டனையும் சிறப்பித்தது. பணை - வயல். `பணைவீதி, சோலைவீதி` எனத் தனித்தனி முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற்
கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

விரிவாக நிகழ்த்தப்படுகின்ற திருவிழாவிலே தன் பின்னே வருகின்ற அடியார்களுடைய பாடல்களைக் கேட்கும் விருப்பத்தால் எம் பெருமான் தன் திருமுடியை அசைக்கவே தன் முடியிலிருந்து விழுந்த பூக்கள் மிகுதியாக அமைந்து தூர்க்கின்ற கடைத்தெருக்களையுடைய திருப்பூவணத்தில் கோயில் கொண்டு இருக்கும் பொருளே! ஒலிக்கின்ற கடல் ஒலிபோல உடுக்கையின் அரைக்கும் உன் கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால் அதன் இருபக்கமும் ஒருநாவே சென்று தாக்கி ஒலியை எழுப்ப வந்து ஒருநாள் எங்கள் கண்களின் முன்னே காட்சி வழங்குவாயாக.

குறிப்புரை :

கரை - ஒலிக்கின்ற. கடல் ஒலியின் - கடல் ஒலி போன்ற ஒலியினையுடைய. `தமருகத்து அரையின்` என்பது முதல், `இயங்க` என்பதுகாறும் உள்ள பகுதியால் இறைவன் தனது தமருகத்தினின்றும் ஒலியை எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம் - உடுக்கை. `அதன் அரைக்கும் உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால் அதன் இருபக்கத்தும் ஒருநாவே சென்று தாக்கி ஒலியை எழுப்ப, அந்நிலையோடே எங்கள் கண்களின் முன்னே ஒருநாள் வந்து இருந்தருள்` என்றவாறு. விரி - விரிவு; முதனிலைத் தொழிற் பெயர். ``விழவு`` என்றது, அதிற்கூடும் மக்கட் கூட்டத்தினை. பாடல் பாடுவோர் மக்கட் கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு செல்லுதலின், ``விழவின் பின்செல்வோர் பாடல்` என்றார், விழவிற் பின் செல்வோர் பாடல் எனப் பாடம் ஓதி, விழாவில் `நின்பின் செல் வோரது பாடல்` என்று உரைத்தலும் ஆம். பாடல் வேட்கையின் - பாடல்மேல் எழுந்த வேட்கையினால். `வீழ்ந்த புரிசடை, போது அவிழ்ந்த புரிசடை` என்க. `நின்புரிசடை` என உரைக்க. வீழ்ந்த - அவிழ்ந்த. அடியாரது பாடலை இறைவன் இனிதாகக் கேட்டுத் தலையை அசைத்தலால், கட்டியுள்ள அவனது சடை அவிழ்ந்து வீழ்ந்தது. துகுக்கும் - தூர்க்கின்ற; நிரம்பச் சொரிகின்ற. ``போது அவிழ்ந்த புரிசடை`` என்றதனால், சொரியப்படுவன அப்போதுகளே ஆயின. போது - பேரரும்பு; அவை, கொன்றை, ஆத்தி முதலியவற் றின் அரும்புகளாம். அவிழ்ந்த - மலர்ந்த. `விழாக்காலங்களில் இறை வனது சடைக்கண் உள்ள மலர்களே வீழ்ந்து நிரம்பும் பெருமையை உடையன, திருப்பூவணத்தின் கடைவீதிகள்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே
கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன்
நுண்ணியை யெனினும் நம்ப நின் பெருமை
நுண்ணிமை யிறந்தமை அறிவன்
மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

ஒளி இல்லாத இடத்தில் இருள் நிறைந்திருக்கும் என்ற மண்ணுலக முறைப்படி இருள் தங்கியிருக்கும் சோலையின் உயர்ந்த பகுதியில் வண்டினங்கள் பாட, அவற்றின் பாடலுக்கு ஏற்ப ஆடும் செல்வ மகளிரை உடைய, கடைத்தெருக்கள் அமைந்த திருப் பூவணத் திருத்தலத்தில் கோயில் கொண்டருளிய பெருமானே! கண் மணி இருக்கும் இடத்தில் நீ புகுதலால் அங்குத்தானே உன்னைக்கூடி உன்னுள் ஒடுங்கிய அடியேனுக்கு அவ்வாறு நீ சிறியையாய் இருந்தாய் எனினும் எம்மால் விரும்பப்படும் பெருமானே! உன் பெருமை சிறுமையைக் கடந்தது என்பதனை அடியேன் அறிவேன்.

குறிப்புரை :

கண் இயல் மணியின் சூழல், கண்மணி இருக்கும் இடம். `அவ்விடத்தில் நீ புகுதலால் அங்குத்தானே உன்னைக் கலந்து, உன்னுள் ஒடுங்கின எனக்கு` என்க. இஃது இறைவனைக் கண்ணாற் கண்டமையால் அவனுடன் கலந்தமை கூறியவாறு. இக்கருத்துப் பற்றியே, கண்மணியே தாம் இறைவனோடு கலந்த இடமாகக் கூறினார். ``சூழல் புக்கு`` என்றதில், ``புகுதலால்`` என்பது, `புக்கு` எனத்திரிந்து நின்றது. ``நுண்ணியை`` என்பது, `சிறியை` எனப் பொருள் தந்தது. ``அங்ஙன் நுண்ணியை`` என்றது, `என் கண்மணி யளவாய் நிற்கும் சிறுமை யுடையை` என்றதாம். நுண்ணிமை - நுட்பம்; அஃது இங்கு, வியாபகத்தைக் குறித்தது. இறந்தமை - கடந்தமை. `வியாபகப்பொருள் பலவற்றையும் கடந்து வியாபகமாய் நிற்பது நின் பெருமை` என்றதாம். மண் இயல் மரபின் - `ஒளி இல்லாத இடத்தில் இருள் நிறைந்திருப்பது` என்ற மண்ணுலக முறைப்படி. இந்நிலை தேவருலகில் இன்மையால், ``மண்ணியல் மரபின்`` என்றார். மொழுப்பு - உயர்ந்து தோன்றுதல். அஃது அதனையுடைய சோலையைக் குறித்தது. புண்ணிய மகளிர் - செல்வ மகளிர். ``தேவ மகளிர்`` என்றும் உரைப்ப. `மகளிரையுடைய வீதி` என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

உயரமான அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரா நேரத்தில் இருளைப்போக்குவதற்கு அணையாது உள்ள விளக்குக்கள் சாளரங்களுக்கு வெளியே ஒளியை வீசுகின்ற, கடைத்தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி உன் திருவடிகள் இரண்டனையும் நூல்களில் சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

குறிப்புரை :

வினையைக் கடலாக உருவகிக்கின்றவர், அதுதான் பாசங்களுள் ஒன்றாதலை விளக்குதற்கு, ``வினைப் பாசக் கடல்`` என்றார். ஐவர் கள்ளர் - ஐம்பொறிகள். ``மெள்ள`` என்றது, `இனிமையாகவே` என்றவாறு. அவர் சென்றவழியே சென்று நீக்கினமை பற்றி இவ்வாறு கூறினார். இனி, `சிறிது சிறிதாக நீக்கி` என்றும் ஆம். துரந்து - ஓட்டி. அடையுமாறு அடைதலாவது, நூலிற் சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைதல். இதனை, `விதி மார்க்கம்` என்பர். `இனி நீ எனக்கு அருள் செய்; அல்லது அருள் செய்யாதொழி; அஃது உனது உள்ளத்தின்வழியது; யான் செயற் பாலதனைச் செய்துவிட்டேன்; இந்நிலையினின்றும் வேறுபடேன்` என்பதாம். `நெடுநிலை மாடத்து நிலைவிளக்குச் சாலேகப்புடை இலங்கும் வீதி` என்க. இரவு - இரவின்கண். கிழிக்க - போக்குதற் பொருட்டு. நிலை விளக்கு - அணையாது உள்ள விளக்கு. சாலேகப் புடை - சாளரங்கட்கு வெளியே. இலங்கும் - ஒளியை வீசுகின்ற.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன்
சேவடி பார்த்திருந் தலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர்
என்னுடை அடிமைதான் யாதே
அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே. 

பொழிப்புரை :

அடியவர்களுடைய மனம் மகிழ்வதற்கு அமைந்த நாள்களில் ஒருநாள் சிவபெருமான் ஆகிய நீ பிச்சைக்கு எழுந்தருள, உன்னைக் காதலித்த மையலால் மகளிருடைய அவிழ்ந்த கூந்தலில் வண்டுகள் பொம் என்ற ஒலியோடு இசைக்கும், கடைத்தெருக்களை யுடைய திருப்பூவண நகரில் கோயில் கொண்டருளும் பெருமானே! செம்மையான மனத்தை உடைய அடியவர்கள் உன்னுடைய திரு வருளை வேண்டி உன் திருவடிகளைப் பார்த்துக் கொண்டிருந்து வருந்தவும், அடியேனுடைய மனத்தில் நீ இருப்பிடம் கொண்டு இருப்பதற்கு அடியேன் யாது தகுதி உடையேன்? அடியேனுடைய அடிமைதான் எத்தன்மையது? உன் செயலுக்கு உன் அளவற்ற கருணையே காரணம் என்பதாம்.

குறிப்புரை :

கிழவோர் - உரியவர்; அடியார். `கிழவோர் அல\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என இயையும். ``அன்பு`` என்றது இறைவனது அருளை. பார்த்திருந்து - தோன்றுதலை எதிர்நோக்கியிருந்து. அலச - வருந்த. `அவர்களிடம் செல்லாமல் என்பால் வந்து என் மனத்தில் நீ குடிகொண்ட இந் நிலைக்கு நான் என்ன தகுதியுடையேன்! எனது தொண்டுதான் என்ன தகுதியுடையது` என்றபடி. அம் மனம் - அழகிய மனம்; அடியவர் மனம். குளிர்நாள் - மகிழ்வதற்கு அமைந்த நாளில். சிவபெருமானது விழாக்களில் அவன் பலிக்கு (பிச்சைக்கு) எழுந்தருளும் விழாவும் ஒன்றாதல் அறிக. அரிவையரது குழல் அவிழ்தல். இறைவனைக் காதலித்தமையாலாம். குழல் சுரும்பு - கூந்தலில் உள்ள வண்டுகள் ``பொம்மென`` என்றது ஒலிக்குறிப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

சொன்னவில் முறைநான் காரணம் உணராச்
சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

ஒளி மிகுந்த பொன்மயமான மாளிகைகளின் கோபுரம், விளங்குகின்ற இளைய பிறைச் சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாடி வீடுகள், பொன் மிகுந்த மதில், கடைத்தெருக்கள் இவற்றை உடைய திருப்பூவணத் திருத்தலத்தில் கோயில் கொண் டருளிய பெருமானே! சொற்களை ஒலிக்கும் முறைப்படி சொல்கின்ற காரணத்தை அடியேன் எட்டலாகாத இடத்தில் புகுந்து மறைந்த நீ இன்று கல்லையொத்த உருகாத மனத்தை யுடைய அடியேனுடைய கண்களாகிய வலையில் உன்னை அகப்படுத்திக் கொண்ட கருணையைக் காட்டிலும் மேம்பட்ட செயல் வேறு உளதோ?

குறிப்புரை :

`சொல் முறை நவில்` என மாற்றி, `சொற்களை, ஒலிக் கும் முறைப்படி சொல்கின்ற` என உரைக்க. உணராச்சூழல் - எட்ட லாகாத இடம். ``கல் நவில்`` என்றதில் நவில் உவமஉருபு. கண்ணில் அகப்பட்டமை பற்றி, அதனை வலையாக உருவகித்தார். பெரியது - பெரியதொரு கருணை. உளதே - உண்டோ. ஆரணத்துள் அகப் படாமை அவை சொல்வடிவாதலாலும், கண்வலைப்பட்டமை அதனைச் செலுத்துகின்ற உணர்வின் தூய்மையாலும் என்க. மின் நவில் - ஒளி மிகுந்த. வாய்தல் - வாயில் மாடம், கோபுரம். பொன் நவில் - பொன் மிகுந்த. புரிசை - மதில். `வாய்தல்` மாடம், புரிசை இவைகளையுடைய வீதி என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

* * * * * ** * * * * *

பொழிப்புரை :

* * * * * ** * * * * *

குறிப்புரை :

* * * * * ** * * * * *

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

* * * * * ** * * * * *

பொழிப்புரை :

* * * * * ** * * * * *

குறிப்புரை :

* * * * * ** * * * * *

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே. 

பொழிப்புரை :

திருப்பூவணத் திருத்தலத்தில் கோயில்கொண்டு அடியேனைத் தன் அடியவனாகக்கொண்ட புனிதனாய், பார்வதி பாகனாய், வெள்ளிய கோவண ஆடையை உடுத்து வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தும் இளையனாய், எல்லா அழகுகளும் முழுமையாக நிறைந்த தீ நிறத்தவனாகிய சிவபெருமானுடைய செய்திகளாகச் சிறந்த வேதங்களை ஆராயும் விளக்கமுடைய கருவூர்த் தேவனாகிய அடியேன் சொல்லிய பாக்களின் தன்மை பொருந்திய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பொருளோடு ஓதி நினைவிற்கொண்டு பாட வல்லவர்கள் சிவபெருமானுடைய சாரூப்பியத்தை அடை வார்கள்.

குறிப்புரை :

``வெண்டலை`` என்றது, பிரம கபாலத்தை. இது சிவபிரானுக்குப் பிச்சைப் பாத்திரமாவது. குழகன் - இளையோன். தாருகாவன முனிவர் பன்னியர்பால் பிச்சைக்குச் சென்றபொழுது சிவபிரான் இளைஞனாய்ச் சென்றமை அறிக. ``தெரியும்`` என்பது, ``கருவூரன்`` என்றதன் இறுதிநிலையோடு முடியும். `பாவாகிய வண்ணத் தமிழ்கள்` என்க. வண்ணம் - அழகு. ``பத்தும்`` என்ற தனால், இதன்கண் இருதிருப்பாடல்கள் கிடையாவாயின என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பெரியவா கருணை இளநிலா வெறிக்கும்
பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

சாட்டியக்குடியின்கண் ஏழுநிலைகள் அமைந்த விமானத்தை உடைய கருவறையில் உறையும், நம்மை அடக்கியாளும் பெருமானுக்குக் கருணை மேம்பட்டது. இளையநிலா ஒளிவீசும் பிறைச்சந்திரன் தங்கி இயங்கும் சடைமுடி அவிழ்ந்து தொங்குதல் தன்மை, காதுகளில் இருபாலும் வளைந்த அழகிய குண்டலங்கள் ஒளிவீசிக்கொண்டு தொங்குகின்றவாறு, கரியகழுத்து, அவர் வெளிப் படுத்தும் சிவந்த வாயின் வெள்ளிய பற்கள், அடியார்களுடைய குவிந்த இருகைகளையும் கண்டு மலர்கின்ற முகம் ஆகிய இவை அழகியன.

குறிப்புரை :

``பெரியவா`` முதலியன, `பெரியவாறு` முதலியவை கடைக்குறைந்து வந்தன. அவையெல்லாம் செவ்வெண்ணாய் நின்றமையின், இறுதியில், `இவை அழகிய` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. `கருணை பெரியவா` என மாற்றுக. கருணை ஒன்றேயாயினும் அதனால் விளையும் பயன்கள் பலவாதல்பற்றி, ``பெரிய`` எனப் பன்மையாகக் கூறப்பட்டது. இள நிலா - சிற்றொளி. மொழுப்பு - முடி. சுழி அம் குழை - வளைந்த அழகிய குண்டலம். தாழ்ந்தவா - தொங்கினவாறு. `காதுகளில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. எனவே, அதனை, ``சுழி`` என்றதற்கு முன்னே கூட்டுக. ``தாமும்`` என்ற உம்மை, `தமது உறுப்புக்கள் இயற்கையில் இவ்வாறு விளங்குதலேயன்றி` என, இறந்தது தழுவிய எச்சம். ``முறுவல்`` என்றது, `வெள்ளிய முறுவல்` என்றவாறு. சாட்டியக்குடியார் - திருச் சாட்டியக்குடியில் உள்ள அந்தணர்கள். `முகம் அலர்ந்தவா` என மாற்றிக்கொள்க. `தாமும் முறுவல் காட்டுமா` என்றதை இதன்பின்னர்க் கூட்டுக. அந்தணர்கள் கைகுவித்துத் தொழுதலைக் கண்டு இறைவற்கு உவகையால் முகம் மலர்ந்தது என்க. ஏழ் இருக்கை - ஏழு நிலைகள் அமைந்த விமானத்தையுடைய மாளிகை. இது திருச்சாட்டியக்குடிக் கோயிலின் அமைப்பு. `ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்குப் பெரியவா` என்று முன்னே சென்று இயையும்; இஃது, ஏனைய திருப் பாடல்கட்கும் ஒக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

சாட்டியக்குடி அடியாருடைய அன்பின் மிக்க எழுச்சியை உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிற்கண் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் அப்பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.

குறிப்புரை :

பாந்தள் - பாம்பு. பூண் ஆரம் - அணிகின்ற இரத்தின வடம். ``பரிகலம் கபாலம்; பட்டவர்த்தனம் எருது; சாந்தம் திருநீறு`` என்றாற்போல, ஏனையவற்றையும், `பூண் ஆரம் பாந்தள்; மஞ்சன சாலை கண்; பெருந்தேவி மலைமகள்; கீதம் அருமறை; முடி சடை; கோயில் மாளிகை இதயம்` என மாற்றிக் கொள்க. `இவை யெல்லாம் உலகிற் காணப்படாத அதிசயங்கள்` என்றபடி. பரிகலம் - உண்கலம். கபாலம் - பிரமனது தலைஓடு. பட்டவர்த்தனம் - அரச விருது; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு. வார்ந்த - இடையறாதொழுகிய. ``வார்ந்த கண்ணருவி`` என்றாராயினும், `வார்ந்த அருவிக் கண்` என்பதே கருத்து, இடத்தைச் சுட்டலே கருத்தாகலின். மஞ்சன சாலை - குளிக்கும் இடம். பெருந்தேவி - அரசமாதேவி. சாந்தம் - உடற்பூச்சு. கீதம் - தான் பாடும் பாட்டு. `சாட்டியக் குடியாரது இதயம்` என்க. ஏந்து எழில் இதயம் - மிக்க எழுச்சியையுடைய நெஞ்சு. ``எழுச்சி`` என்றது அன்பினை. நெஞ்சிற்கு அழகு தருவது அன்பேயாகலின், அதனை மாளிகைக்கு அமைந்த அழகாக விசேடித்தார். கோயில் மாளிகை - கோயிற்கண் உள்ள கருவறை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம்
தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை
கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் சாட்டியக்குடி ஈசனுக்கு அவனைத் தொழுதுகொண்டு பின் செல்வது பிரமன் முதலிய தேவர்களின் கூட்டம். அவனைத் தொடர்ந்து செல்வன நால்வேதங்கள். இத்தகைய சிறப்புக்கள் இருந் தாலும் அவன் உறைவிடம் பேய்கள் பொருந்திய சுடுகாடு. அவனுடைய போர்வை யானைத்தோல். அவன் உணவு, திரிந்து எடுக் கும் பிச்சை. அவன் கோவணம் விடத்தைக் கக்குகின்ற பாம்பு. அவன் ஜபம் செய்யக்கொண்ட மாலை பளிங்கு. உறையும் நெய்யைச் சொரிந்து பாதுகாக்கப்படும் ஒளி பொருந்திய விளக்கு அக்கினியே.

குறிப்புரை :

`நான்கும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. கழுது - பேய். கரி காடு - கரிகின்ற காடு; சுடுகாடு. கவந்திகை - உணவு. `போர்வை கரிஉரி, கவந்திகை திரிந்தூண்` என நிரல் நிறையாகக் கொள்க. திரிந்து ஊண் - அலைந்து ஏற்கும் உண்டி. தழல் உமிழ் - கண் ணால் நெருப்பைச் சிந்துகின்ற; என்றது `சீற்றத்தையுடைய` என்றபடி. பளிங்கு - படிகமணி. `சாட்டியக்குடியார் ஓம்பு அழல்` விளக்கு என்க. இழுது நெய் - வெண்ணெயை அப்பொழுது உருக்கிக்கொண்ட நெய். `பணி கேட்டுச் சூழ்பவர் அயன் முதலிய தேவர்களும், அறிய மாட்டாது ஆய்ந்து தொடரும் நூல்கள் வேதங்களும் ஆகிய பெருமை கள் காணப்படினும், அவன் உறைவிடம் சுடுகாடு முதலியவையாய் உள்ளன; இஃது அறிதற்கரிதாய் இருந்தது` என்றவாறு. இங்கும், `உறைவிடம் கரிகாடு; கோவணம் அரவம்; சபவடம் பளிங்கு; விளக்கு அழல்` என மாற்றுக. ``பளிங்கு`` என்றது, மாணிக்கம் முதலிய பிற இரத்தினங்களல்லாமையை உட்கொண்டது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும்
பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில்
தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

சாட்டியக்குடியில் எழுநிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் இருக்கும் பெருமானுக்குத் தாம் பாடும் பாடல் தொகுதி வேதங்களே. விருப்போடு பாடும் கந்தருவர்கள் தும்புருவும் நாரத ரும், அவர்கள் சேரும் இடம் ஆவன எல்லாம் அரங்கம். மாலைபோல அமைந்த மூவுலகங்களிலும் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கத் திருநடம் புரிய அடிபெயர்த்தலின் கையில் உள்ள உடுக்கை கடலைப் போல ஒலிசெய்யும். உள்ளத்தில் உள்ள அன்பையே தாம் விரும்பும் பொருளாகக் கொள்ளுதலின் அடியவர் இதயமே அவருக்குப் பதுமநிதி.

குறிப்புரை :

பதிகம் - (தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர் - கந்தருவர்; இசை பாடுவோர். கதியெலாம் அரங்கம் - அவர் சேரும் இடமாவன எல்லாம் அம்பலம். பிணையல் மூவுலகு - மாலைபோல் அமைந்த மூன்றுலகங்கள். `மூவுலகிலும்` என உம்மை விரித்து, `மூவுலகிலும் ஒலிசெயும்` என முடிக்க. சதியில் - அடிபெயர்த்தலில். ஆர்கலியில் - கடலைப்போல. `ஆர்கதியில்` என்பது பாடம் ஆகாமை யறிக. கமல வர்த்தனை - பதுமநிதி. உள்ளத்தில் உள்ள அன்பையே தாம் விரும்பும் பொருளாகக் கொள்ளுதலின், சாட்டியக்குடியாரது இதயங்களை இவ்வாறு கூறினார். `வர்த்தனை ஆசனம்` எனவும் உரைப்பர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர்தம் பாவை
தருமனை வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

எழுநிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் உறையும் சாட்டியக்குடி ஈசனுக்குத் திருமகன் முருகன். தேவி உமையாள். மருமகன் காமன். மருமகனுடைய தாய் திருமகள். மாமன் இமவான். மலையரசனாகிய இமவானுடைய மகள் இன்பத்தைத் தருகின்ற மனைவி. செல்வம் சிவபுரம். நண்பன் குபேரன். சாட்டியக் குடியாருக்கு முகங்கள் இரண்டு. திருவடிகள் மூன்று. கைத்தலங்கள் ஏழே.

குறிப்புரை :

``மருமகன் தாய்`` என்றது, `தங்கை` என்றபடி. உமாதேவியை, `திருமால் தங்கை` என்பதுபோலத் திருமகளை, `சிவபெருமான் தங்கை` என்றலும் வழக்கு. ``அரையர்`` என்றது உயர்வுப் பன்மை. தரு மனை - இன்பத்தைத் தருகின்ற மனைவி. `தருமலி` என்பது பாடம் அன்று. `வளன், புரன்` என்பன `வளம், புரம்` என்பவற்றது போலி. வளன் சிவபுரன் - செல்வமாவது சிவபுரம். ``சாட்டியக்குடியார்`` என்றதனை, `கைத்தலம்` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``இரு முகம்`` என்றது, `முகம் இரண்டு` என்னும் பொருட்டு. ``முகம் இரண்டு; கழல் (பாதம் ) மூன்று; கைத்தலம் ஏழு`` என்றது, மாதொரு கூறாகிய (அர்த்தநாரீசுர) வடிவத்தை ஒரு நயம்படக் கூறியவாறு. இறைவன் இறைவியர் முகங்கள் இரண்டும் ஒன்றாய் இயைந்தனவாயினும் அவை ஆண்முகமும், பெண் முகமுமாய் வேறுபட்டு விளங்குதலின், ``இருமுகம்`` என்றார். இறைவனது இடத்திருவடியும், இறைவியது வலத்திருவடியும் ஒன்றாய் விடுதலால் கழல்கள் மூன்றாயின. இறைவனுடைய இடக்கை இரண்டில் ஒன்றும், இறைவியுடைய வலக்கை இரண்டில் ஒன்றும் ஒன்றாய்விடுதலால் கைத்தலங்கள் ஏழாயின.
``தோலுந் துகிலும் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலம்`` - (தி.8 திருக்கோத்தும்பி 18)
``உருவிரண்டும் ஒன்றொடொன் றொவ்வா அடி`` (தி.6 ப.6 பா.6) என்றாற்போல முன்னையாசிரியர் வியந்தருளிச் செய்ததனை, இவ்வாசிரியர் இவ்வாறாக வியந்தருளிச் செய்தார் என்க.
சாட்டியக்குடி வாழ்வோரது வேள்வித் தீ வடிவம் ஆனவன்" என்றும் பொருள் கொள்ளலாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அனலமே புனலே அனிலமே புவனி
அம்பரா அம்பரத் தளிக்கும்
கனகமே வெள்ளிக் குன்றமே என்றன்
களைகணே களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே.

பொழிப்புரை :

சாட்டியக்குடியில் உள்ள மக்களுக்கு மிக இனிய பழமாய் நீக்கமற நிறைந்து எழுநிலை விமானத்தின்கீழ்க் கருவறையில் உள்ள பெருமானே! பஞ்சபூத வடிவானவனே! விண்ணில் கொடுக்கப் படுகின்ற பொன்னுலகமே! வெள்ளி மலையே! அடியேன் பற்றுக் கோடே! உன்னைத்தவிர வேறு பற்றுக்கோடில்லாத அடியேனுடைய உள்ளத்தையே இருப்பிடமாகக்கொண்டு அருளும் மங்கலமான வடிவினனே! அத்தகைய நீ சாட்டியக்குடியில் வந்து உறையும் காரணத்தைக் கூறுவாயாக.

குறிப்புரை :

`அனல்` என்பது ஈற்றில் அம்முப் பெற்று நின்றது. அனிலம் - காற்று. ஏனையவற்றோடொப்ப, ``புவனி`` என்பதிலும் விளியுருபாகிய ஏகாரம் விரிக்க. புவனி - பூமி. அம்பரா - ஆகாயமாய் உள்ளவனே; இங்கு இவ்வாறு உயர்திணையாக விளித்தமையால், `அனலம்` முதலியவற்றையும் ஆகுபெயராகக் கொள்க. அம்பரத்து அளிக்கும் கனகமே - (நல்வினை செய்தோர்க்கு) விண்ணில் கொடுக்கப்படுகின்ற பொன்னுலகமே. வெள்ளிக் குன்றமே - சிவனடியார்கட்கு அளிக்கப்படுகின்ற கயிலை மலையே. களைகண் - துணை. சைவன் - சிவம் (மங்கலம்) உடையவன். `சைவன்` என்றது சிவபெருமானைக் குறிக்குமிடத்து. `சிவம்` என்னும் சொல் பண்பினை உணர்த்தி நிற்கும். அவன் அடியார்களைக் குறிக்குமிடத்து அச்சொல் அப்பண்பினையுடைய முதற் பொருளைக் குறித்துநிற்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

செம்பொனே பவளக் குன்றமே நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே
அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே
சங்கரா சாட்டியக் குடியார்க்
கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே. 

பொழிப்புரை :

செம்பொன்னே! பவளமலையே! பிரமன், திருமால் முதலியோர் கூட்டத்தில் உள்ள அன்பர்கள் உண்ணும் அரிய அமுதமே! தலைவனே! பித்தனாகிய அடியேனை ஆட்கொண்ட இன்பத்தைத் தோற்றுவிப்பவனே! அணுவே! அசைவு இல்லாதவனே! இன்பத்தைச் செய்பவனே! நன்மையைச் செய்பவனே! சாட்டியக் குடியில் உள்ளவர்களுக்கு இனியனே! அத்தகைய நீ எல்லா இடங் களிலும் நீக்கமற நிறைந்தும் சாட்டியக்குடி எழுநிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் உறையும் காரணத்தைக் கூறுவாயாக.

குறிப்புரை :

`பித்தனேனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலா யிற்று. சம்பு - இன்பத்தைத் தோற்றுவிப்பவன். தாணு - அசை வில்லாதவன். சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை
யிறைவனே போற்றியே போற்றி

பொழிப்புரை :

திருமாலே! நான்முகனே! சிவபுரத்தில் வீற்று இருக்கும் அழகிய கண்களையுடைய சிவனே! தேவர்கள் கூட்டத்தி னனே! இந்திரனே! தங்களுக்கே உரியதான வேதம் முதலிய நூல்கள் யாவற்றையும் கற்ற சான்றோர்கள் வாழும் சாட்டியக்குடியில் இருந்து அருள்செய்கின்ற எங்கள் தலைவனே! எழுநிலை விமானத்தின் கீழ் இருக்கும் இறைவனே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

செங்கணா - திருமாலே. போற்றி - வணக்கம். திசை முகா - பிரமதேவனே. சிவபுர நகருள் வீற்றிருந்த அங்கணா - சிவனே. அமரனே - தேவகூட்டத்தினனே. அமரர்கள் தலைவனே - இந்திரனே. சிவபெருமான் ஒருவனே இவர் யாவருமாய் நின்று அருள் செய்தல் பற்றி இவ்வாறு கூறினார். ``தங்கள் நான்மறை நூல்`` என்றதனால், திருச்சாட்டியக்குடியில் உள்ளோர் அந்தணர் என்பது பெறப்படும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

சித்தனே அருளாய் செங்கணா அருளாய்
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே அருளாய் அமரனே அருளாய்
அமரர்கள் அதிபனே அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
முன்னவா துயர்கெடுத் தெனக்கே.

பொழிப்புரை :

எல்லாம் வல்லவனே! நெருப்புக் கண்களை உடையவனே! சிவபுர நகரில் வீற்றிருந்த தலைவனே! தெய்வ வடிவினனே! தேவர்கள் தலைவனே! நீர் மோதுகின்ற குளங்களையும் சோலையையும் உடைய சூழலை உடைய சாட்டியக்குடியில் எழு நிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் உறையும் முத்தி அருள வல்லவனே! முதல்வனே! எல்லோருக்கும் முற்பட்டவனே! அடியே னுடைய துயரங்களைப்போக்கி அருளுவாயாக என்று முறை யிட்டவாறு.

குறிப்புரை :

சித்தன் - எல்லாம் வல்லவன். செங்கணன் - நெருப்புக் கண்ணையுடையவன். அமரன் - தெய்வ வடிவினன். அமரர்கள் அதிபன் - தேவர்கள் தலைவன். படுகர் - குளம். தண்டலை - சோலை. `படுகரையும், தண்டலையையும் உடைய சூழலையுடைய சாட்டியக்குடி ` என்க. ``முன்னவா`` என்றதனை முதலிலும், ``துயர் கெடுத்து எனக்கு`` என்றதனை, `சித்தனே` என்றதன் பின்னும் கூட்டுக. இங்ஙனம் கூட்டவே, இஃது ஏனைப் பெயர்களின் பின்னும் வந்து இயைதல் அறிக. `துயர்கெடுத்து எனக்கு அருளாய்` எனப் பலமுறை யும் கூறியது, முறையீடு தோன்ற.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
வளரொளி விளங்குவா னுலகே. 

பொழிப்புரை :

முயற்சியை உளதாக்கும் வயல்களையும், பசிய சோலைகளையும், குளங்களையும், தோட்டங்களையும் உடைய சாட்டியக்குடியிலுள்ளார் ஈட்டிய செல்வமாய் எழுநிலை விமானத்தின் கீழ் இருக்கும் பெருமானுடைய திருவடி மலர்கள் தொடர்பாக மெய்ப்பொருளைக் காட்டும் கலைகளைப் பயின்ற கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களையும் பொருந்திய மனத்தை உடைய சான்றோருக்கு வளர்கின்ற ஒளி விளங்கும் சிவ லோகம் உளதாவதாம்.

குறிப்புரை :

தாள் தரும் பழனம் - முயற்சியை (உழவை) உளதாக்கும் வயல்கள். இதில் டகர ஒற்று விரித்தல். `பழனத்தையும், பொழிலையும், படுகரையும், தண்டலையையும் உடைய சாட்டியக் குடி` என்க. ``காட்டிய பொருளையுடைய கலை`` என்றது, `பொருளைக் காட்டிய கலை` என்றபடி. பொருள் - மெய்ப்பொருள். ``ஈரைந்தும் மாட்டிய`` என்றது, இரண்டாவதன் தொகை. மாட்டிய - பொருத்திய. ``வானுலகு`` என்றதன்பின், `உளதாவது` என்பது சொல் லெச்சமாய் நின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ
அங்ஙனே யழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

பொழிப்புரை :

கோட்டை, பலவாக அழகு பொருந்திய பொருட் கூட்டத்தால் எடுப்பிக்கப்பட்ட நெடுநிலையாகிய எழுநிலை மாடங் கள் ஆகியவை, வெள்ளிய சந்திரன் பெரிய மலைப்பகுதியிலே தவழ்வதுபோல வெள்ளித்தகடுகள் மதிலிலுள்ள மேடைகளில் பதிக்கப்பட்டுக் காட்சி வழங்கும் மதில்களால் சூழப்பட்ட தஞ்சை யிலுள்ள இராசராசேச்சரம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானுக்கு, உலகங்களெல்லாம் தொழுமாறு வந்து தோன்றுகின்ற நூறாயிரகோடி பரிதிகளின் ஒளியினை உடைய சூரியன் உளதாயின் அதன் அளவாகிய ஒளியினை உடைய திருவுடம்பு வியக்கத்தக்கவகையில் பேரழகினதாக உள்ளது.

குறிப்புரை :

`எழு பரிதி` என இயையும். பரிதி - சூரியன். `நூறாயிர கோடி பரிதிகளின் ஒளியினை உடைய பரிதி ஒன்று உளதாயின், அதனது அளவாய் ஒளியினை உடைய திருவுடம்பு` என்க. ``திரு வுடம்பு`` என்றதன்பின்னர், `உண்டு` என்பது எஞ்சிநின்றது. ``அழகிது`` என்றதற்கு, `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. ஓகாரம், சிறப்பு. அரணம் - கோட்டை. `பல மாடம்` என்க. குலாம் படை செய் - அழகுபொருந்திய பொருட் கூட்டத்தால் செய்யப்பட்ட. ``பருவரை`` என்பதில், `போல` என்பது விரித்து, `பெரிய மலையிடத்துத் தவழ்தல் போல` என உரைக்க. `வெண்டிங்களாகிய இலை` என்க.
இலை - தகடு. வெள்ளித் தகட்டைக் குறித்தவாறு. பதணம் - மதிலுள் மேடை. இஞ்சி - மதில். `அரணத்தை, இஞ்சிசூழ் தஞ்சை` என்க. `இவர்க்கு அலகெலாம் பொதிந்த திருவுடம்பு உண்டு` என முன்னே சென்று முடியும். தஞ்சை, `தஞ்சாவூர்` என்பதன் மரூஉ.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா
நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன வில்லை
மற்றெனக் குறவென் மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

உயர்ந்து மடங்குகின்ற அலைகளை உடைய வடவாற்றில் ஓடும் நீரை, அதன்கண் அமைந்த தலைமதகில் வாழும் முதலைகள் வாரி எறிகின்ற நீரால் நிரம்பிய அகழிகளால் சூழப்பட்ட மதில்களை உடைய தஞ்சை இராசராசேச்சரத்து எம்பெருமானுடைய நெற்றிக்கண் என் கண்களினின்று அகலமாட்டாது. என் நெஞ்சினில் அழகிய சிலம்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. அழகிய திருவடிகள் அடியேனுடைய குடி முழுதையும் ஆள்வதற்கு அடியேனிடம் புகுந்தன. அடியேனை விடுத்துப் புறத்துச் செல்லவில்லை. இங்ஙன மாதலின் அடியேனுக்கு வேறு யாது உறவு வேண்டும்?

குறிப்புரை :

`அகலாது` என்பது, ஈறு குறைந்தது. `நெஞ்சில் புகுந்தன` என இயையும். பொன் - அழகு. திரு - மேன்மை. போந்தன இல்லை - புறத்துச் செல்லவில்லை. `இங்ஙனமாகலின் எனக்கு மற்று உறவு என்` என்க. `வடவாறு` என்பது தஞ்சாவூரின் வடக்குப்புறத்தில் ஓடும் ஓர் ஆறு. இடு - அதன் கண் அமைக்கப்பட்ட. புனல் மதகு - நீரையுடைய வாய்க்கால் தலைமதகு. `நீர்சூழ்` என இயையும். கிடங்கில் - அகழிபோல. ``இவர்க்கு`` என்பது, முன் உள்ள `அகலா, புகுந்தன, போந்தன வில்லை` என்பவற்றோடு முடியும். நான்கனுருபு, `இவற்கு இஃது இயல்பு` என்றல்போலப் பண்புத் தற்கிழமைக்கண் வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிண ரனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்
துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

பொழிப்புரை :

கோங்கம் பூங்கொத்துக்களை ஒத்த வெண் குடைகள் பொருந்திய அரசர்களுடைய கிரீடங்கள் நெருக்கம் காரண மாக ஒன்றோடொன்று உராய்வதனால் தெறித்து விழுந்த செம்மையான ஒளியோடு கிடக்கும் இரத்தினக் குவியல்கள் மிக இருக்கும் வீதிகளில் பொருந்திய மாடங்களை மதில்கள் சூழும் தஞ்சை இராசராசேச்சரத்து எம்பெருமான், சடையிலே பொருந்திய கிரீடம் தெளிந்த நிலாப் போன்ற ஒளியைப் பரப்ப, வெள்ளிய ஒளியைப் பரப்பும் விரிக்கப்பட்ட முத்துக்குடை நிழலிலே காளை மீது இவர்ந்து திருவுலா வரும் கருத்துத்தான் யாதோ? என்று எம்பெருமான் வீதி உலாக் காட்சியில் அவனைக்கண்டு காதல் கொண்ட இளமகள் ஒருத்தியின் கூற்று அமைந்தவாறு.

குறிப்புரை :

`மகுடத்தின்கண்` என உருபு விரிக்க. `வெண்ணிலா விரிதரு குடை` என்க. தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று. தரளம் - முத்து. குறிப்பு - கருத்து. ``குறிப்பென்னோ`` என்றது, `மாதர் உள்ளங்களைக் கவர்வதுபோலும்` என்னும் குறிப்புடையது. கோங்கு இணர் - கோங்கம்பூக்கொத்து; இது குடைக்கு வடிவுவமை. துணியால் ஆக்கப்பட்ட குடைக்கு இவ்வுவமை பொருந்துவதாகும்.
தேய்ந்து - தேய்தலால். உக்க - உதிர்ந்த. `உக்க குவை` என இயையும். ``செஞ்சுடர்ப்படு குவை`` என்றதனால், `மாணிக்கக் குவை` என்பது தோன்றிற்று.
படு - உண்டாகின்ற. குவை ஓங்கு இடைகெழு மாடம் - குவியல்கள் மிக்கிருக்கின்ற இடத்திற் பொருந்திய மாடம். இடம், வீதி. `இடைகழி மாடம்` என்பதும் பாடம். `மாடத் தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்க. இப்பாட்டு, காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

வாழிஅம் போதத் தருகுபாய் விடயம்
வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசல ராதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

வடவாற்று நீரின் அலைகளில் பரவிய பொருள்கள் சார்ந்துள்ள சுற்றிடத்தில் வரிசையாக விளங்கும் தோற்றமாகிய பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம் தஞ்சை நகரைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச் சுவர் அமைக்கப்பட்டது போலத் தோற்ற மளிக்கவும், கரிய அகில் புகைமணம் வீசும் மாளிகைகளில் உள்ள மகளிர் இராக் காலத்தில் தம்விரல்களால் மீட்டும் யாழ்ஒலி எம் பெருமான் உகப்பிற்காகவே ஒலிக்கின்றது.

குறிப்புரை :

வாழி, அசைநிலை. அம்பு ஓதத்து - நீரின் அலைகளில். நீர், வடவாற்றில் உள்ளது. பாய - பரவிய; இதன் இறுதியகரம் தொகுத்தலாயிற்று. விடயம் - பொருள்கள். அடுத்த சூழல் - சார்ந்துள்ள சுற்றிடம். `பளிங்கின் மண்டலம்` என இயையும். பாசலராதிச் சுடர்விடு மண்டலம் - பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம். `வடவாற்றில் உள்ள நீரின் அலைகள் உயர்ந்தெழும் போது வெள்ளிய அவ் வலைகளில் அருகில் உள்ள சோலையின் தழைகள், பூக்கள் முதலியன தோன்றுதல், தஞ்சை நகரத்தைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச் சுவர் அமைக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றது` என்பதாம். `விளக்கலின்` என்பது பாடமாயின், `அந்நகரம் விளக்கி நிற்றலின்` என உரைக்க.
காழ் - வயிரம். `மாளிகைக்கண்` என ஏழாவது விரிக்க. அங்குலி கெழும - விரல் பொருந்த. சிலம்பும் - ஒலிக்கும். `இவர்க்கே யாழொலி சிலம்பும்` என முடிக்க. இதனால், `தஞ்சை நகர மகளிர் இரவும் பகலும் இராசராசேச்சரமுடையாரை யாழிசையால் துதிப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

எவருமா மறைகள் எவையும்வா னவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவருமா லவனும் அறிவரும் பெருமை
அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற் றரசின தீட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

உவர்ப்பை உடைய பெரிய கடல் போலப் பேரொலி கேட்கப்படும் பெருந்தெருக்களில் உலவும் பெரிய அரச உவாக்களின் கூட்டம் ஏறும்படியான மலையைப் போல அமைந்த மதில்களால் சூழப்பட்ட தஞ்சை இராசராசேச்சரத்தில் உறையும் பெருமானார் மக்கள் யாவரும், சிறந்த வேதங்களாகிய எவையும், தேவர்கள் கூட்டமும், தாமரையில் வாழும் பிரமனும், திருமாலும் அறியமுடியாத பெருமையை உடையவராய்ப் பிறரை வருத்தும் வெப்பமுடைய தழல் வடிவினராய் உள்ளார்.

குறிப்புரை :

``எவரும்`` என்றதற்கு, `மக்கள் யாவரும்` என உரைக்க. தாள் திருக் கமலம் - தண்டினயுடைய அழகிய தாமரை மலர். அதன்கண் இருப்பவர், பிரமதேவர். பிரமனைப் பன்மையாற் கூறியது முடிதேடி வந்தபொழுது. `அறிந்து வந்தேன்` எனப் பொய் கூறிய இழிவை உட்கொண்டு.
அறிவரு - அளவறியப்படாத. அளவறியப் படாமையை வெளிப்படுத்தினோர் அயனும், மாலுமாயினும் அறிய மாட்டாமை அனைவர்க்கும் பொதுவாதல் பற்றி, அவ்விருவரோடு, ஏனைய பலரையும் உளப்படுத்துக் கூறினார். பெருமை, அடி பாதலத்தைக் கடந்தும், முடி அண்டங்கள் எல்லாவற்றையும் கடந்தும் நின்றமை. `பெருமையையுடைய தழல்` என்க. அடல் - அடுதல்; வருத்துதல். வருத்துதலையுடைய அழல் என்க . அழல் - வெப்பம். பிழம்பர், `பிழம்பு` என்பதன் போலி. பிழம்பு - வடிவம். உவரி - உவர்ப்புடையதாகிய. ``அரசு`` என்றது பன்மை குறித்து நின்றது. `மா மறுகில் உறு களிற்றினது ஈட்டம் மாகடலின் ஒலிசெய்` என மாற்றி அதனையும், `இஞ்சி சூழ்` என்பதனையும், `தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்பதனோடு தனித்தனி முடிக்க. இவரும் - உயர்ந்த. ``மால் வரை செய்`` என்றதில் உள்ள செய், உவம உருபு. `இவர்க்குப் பிழம்பர் தழல்` என முடிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

அருளுமா றருளி ஆளுமா றாள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ தழகோ
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

முத்தினாலாகிய பெரியமலைபோலக் குளிர்ந்த நிலவொளி வீசும் மாடங்களின் திரட்சி மிக்கிருக்கின்ற பெரிய தெருக்களால் இருட்டு எல்லாம் நீக்கப்படுகின்ற, மதில்களால் சூழப்பட்ட தஞ்சை இராசராசேச்சரத்து உறையும் எம்பெருமான் அருள வேண்டிய முறைப்படி அருள்செய்து ஆட்கொள்ள வேண்டிய முறைப்படி அடிமைகொள்ளுவதற்குத் தம் அழகிய விழிகளையும், சுருண்ட சடைமுடியையும், நீண்ட காதுகளையும், மற்றவர் காணுமாறு காட்சி வழங்கி, யான் பெற்ற குயில் போன்ற இனிய குரலை உடைய என்மகளைக் காம மயக்கம் அடையுமாறு செய்துள்ள செயல் அவர் அருள் உள்ளத்துக்கு அழகு தருவது ஆகுமா?

குறிப்புரை :

அடிகள் - (யாவர்க்கும்) தலைவர். `அடிகளாகிய தம்` என உரைக்க. குருள் - சுருள்; சடைமுடி. `அழகோ` ஓகாரம் சிறப்பு; எதிர்மறையாயின், `ஆளா அடிகள்` என்பது பாடமாதல் வேண்டும். தரள வான்குன்றில் - முத்தினாலாகிய பெரிய மலைபோல. ``ஒளியும்`` என்ற உம்மை சிறப்பு. குவால் - (மாடங்களின்) திரட்சி. `மாடங்களின்` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. இருளெலாம் - இருள் முழுதும். `கிழியும் தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என இயைக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப் பிலையுதிர் வென்றால்
நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும்
நெஞ்சிடிந் துருகுவ தென்னோ
சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

பொழிப்புரை :

சுனையைப் போல ஆழமான, மூழ்கும் மகளிருடைய சந்தனச்சேற்றால் கலங்குதலை உடைய பொய்கைகளில் உள்ள கழுநீர்ப்பூக்கள் தம்மைச் சுற்றிலும் உள்ள ஒளிவீசும் மாளிகைகளில் எத்துணைப் பெரிய நறுமணத்தையும் பரப்பும் படியான, மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் உள்ள இராசராசேச் சரத்துப் பெருமானார், தனிப் பெருந்தலைவராய் எல்லாவிடத்தும் வியாபித்து இருக்கவும், பிறப்பாகிய தளிர் இறப்பாகிய இலை உதிர் நிலையை எய்திற்றாயின் அதுபோது நினைத்தற்கும் அரிய இவர்பால் செல்லுதல் இயலாமை அறிந்தும் மனம் கலங்கி இப்பெருமான் திறத் தில் மனம் உருகுவது யாது கருதியோ? தொடக்கம் தொட்டே இறை வனை நினைந்து உருகும் உள்ளத்தோடு செயற்படவேண்டும் என்பது.

குறிப்புரை :

``தாம்`` என்றது இறைவரை. முழுதுற - எவ்விடத்தும் இருக்க. `உறவும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் - உடம்பாகிய தளிர் இறப்பாகிய இலை உதிர்நிலையை அணுகிற்றாயின். நினைப்பருந் தம்பால் சேறல் இன் றேனும் - அதுபோழ்து நினைத்தற்கும் அரிய இவர்பால் செல்லுதல் இயலாமை அறிந்தும்.
நெஞ்சு இடிந்து இவர்க்கு உருகுவது என்னோ - மனங் கலங்கி இவர் திறத்தில் சிலர் உருகுவது யாது கருதியோ. `நன்றாக வாழ்ந்த காலத்தில் இவரை (இறைவரை) அடையாது இறக்குங் காலத்தில் சிலர் இவரை நினைந்து உருகுவது என்னோ` என்பது இதன் முன்னிரண்டிகளில் சொல்லப்பட்ட பொருள். ``முழுதுற`` என்றது, முன்னர் எளிதாயிருந்த செயல், பின்னர் இயலாததாய நிலையைக் குறித்தற்கு. ``பிறப்பின்`` என்றதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. `சுனைப்பொய்கை` என்று இயைத்து, `சுனைபோல ஆழ்ந்த பொய்கை` என உரைக்க.
கலங்கல் - கலங்கல் நீர். கலங்குதல் மூழ்கும் மகளிரது சந்தனச் சேற்றாலாம். சூழல் - சூழ்ந்துள்ள. `சுடர் வீசும் மாளிகை` என மொழி மாற்றி, `மாளிகைக்கண்` என உருபு விரிக்க. எனைப் பெருமணம் செய் - எத்துணைப் பெரிய மணத்தையும் உண்டாக்குகின்ற (தஞ்சை என்க). `பொய்கைகளில் உள்ள கழுநீர்ப் பூக்கள், சுற்றிலும் உள்ள மாளிகைகளில் தம் மணத்தை உண்டாக்குகின்ற தஞ்ை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்பது பின்னிரண்டடிகளில் அமைந்துள்ள பொருள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை யென்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

நீண்ட புருவத்தினை உடையராய், மின்னலைப் போன்று உடல் ஒளி வீசுகின்ற, இளமயில் போன்ற தம் இனிய பெண் மையை உடைய மகளிர் மலைபோல நிலைபெற்ற நாடக சாலைக்கண் இனிய கூத்தினைப் பழகும், மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் உள்ள இராசராசேச்சரத்து எம்பெருமான் பற்பல ஆண்டுகள் திருத் தொண்டு செய்து பழைய அடியவர்கள் எம்பெருமான் திருவருளை வேண்டி வருந்தியிருக்கவும், அடியேனுடைய உள்ளத்தை எம்பெரு மான் தன்னுடைய பெரிய கோயிலாகக்கொண்டு அதன்கண் வீற்றிருக் கும் அவன் எளிவந்த தன்மைபற்றி அடியேன் யாது கூற வல்லேன்?

குறிப்புரை :

`பழையோர் பலர் பன்னெடுங்காலம் பணிசெய்து ஏம்பலித்திருக்க` எனக்கூட்டுக. ஏம்பலித்திருக்க - வருந்தியிருக்க. `கோயிலாக` என, ஆக்கம் வருவிக்க. ``நெஞ்சு`` என்றதனை, ``என்`` என்றதனோடு கூட்டுக. மறக்கேன் - மறவேன்; இவ்வாறு முன்னும் வந்தது. ``நெடும்புருவத்து`` என்பதனை முன்னே கூட்டி, `மின்னும் இளமயிலும் அனையார்` என உரைக்க. விலங்கல் - மலை. செய், உவம உருபு. `நாடக சாலைக்கண்` என உருபு விரிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார்;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதி ரனையர் வா ழியரோ
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசாரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் இராசராசேச் சரத்தில் கோயில்கொண்டு அருளும் எம்பெருமான், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப்போல, தாம் எங்கும் நிறைந்திருந்தும், வஞ்சனை உடையவர்கள் உள்ளத்தில் மறைந்தே இருப்பார். எரிகின்ற விளக்குப்போல ஒளி உடையராய் இருக்கின்ற அன்பர்களுக்கு வேனிற்காலத்து ஒளிக்கதிர்களை விரித்து விளங்குகின்ற சூரியனைப் போலப் பேரொளி வீசி நிற்பார். மேம்பட்ட அழகிய உடம்பில் பூசப் பட்ட திருநீறு அழியும்படியாகக் கசியும் அழகினை உடைய கங்கை நீர் ததும்புகின்ற சடைமுடியை உடைய இவரை வணங்கி வாழ்த்துதற் பொருட்டு அடியேன் வாழ்வேனாக - இது தலைமகள் கூற்று.

குறிப்புரை :

மங்குல் சூழ் போதின் - மேகத்தால் மறைக்கப்பட்ட ஞாயிற்றைப்போல. `பாலின் நெய்போல` என்ற உவமைபோல, இஃது இறைவன் எங்கும் இருந்தும் விளங்காது நிற்றற்குக் கூறப்பட்ட உவமை. ``ஒழிவற நிறைந்து`` என்பதை முதலிற் கூட்டுக. அங்கு - அவ்விடத்தில்; நெஞ்சில். அழல் சுடராம் அவர்க்கு - எரிகின்ற விளக்குப்போல ஒளியுடையராய் இருக்கின்ற அன்பர்க்கு. வேனல் அலர் கதிர் அனையர் - வேனிற் காலத்து விரிந்து விளங்குகின்ற ஞாயிறு போலப் பேரொளி வீசிநிற்பவர். திருநீறு அழிபொசி வனப் பின் - திருநீறு அழிந்து குழைகின்ற அழகோடு. புனல் துளும்பு சடை மொழுப்பர் - நீர் ததும்புகின்ற சடைமுடியை உடையவர். `சடை யிலுள்ள நீர் தளும்புதலால் திருமேனியிற் பூசியுள்ள நீறு அழிந்து குழை கின்ற அழகையுடையவர்` என்பதனை இவ்வாறு கூறினார். ``வாழியர்`` என்றதனை வியங்கோளாகவும், ஓகாரத்தைச் சிறப்பாக வும் வைத்து ``வாழியரோ`` என்றதனை இறுதியிற் கூட்டி, `ஒளிப் பவரும், அனையவரும், இனியவரும் ஆகிய இவர்பொருட்டு (இவரை வணங்குதற் பொருட்டு) யான் வாழ்வேனாக` எனக் காத லுடையாள் கூற்றாக உரைக்க. இவ்வாறன்றி, `வாழி, அரோ என்பன அசைநிலைகள் எனக்கொள்ளின், இராசராசேச்சரத்து இவரே` என்பது பாடமாதல் வேண்டும்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

தனியர்எத் தனைஓ ராயிர வருமாந்
தன்மையர் என்வயத் தினராங்
கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆ ரமிர்தர்
புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்
கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 

பொழிப்புரை :

இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து எம் பெருமான் தாம் ஒருவராகவும் இருப்பார். எத்தனையோ ஆயிரப் பொருள்களாக நிற்கும் தன்மையையும் உடையார். அடியேனுக்கு உரியவராகிய அப்பெருமான், பழமும், இனிமையைத் தருகின்ற அத்தன்மையை உடைய கரும்பும் போன்றவர். வெள்ளிய பூணூலை அணிந்தவர். மிகக் காய்ச்சிய பால்போல இனியர். தூயர். அழகிய வீரக் கழலை அணிந்தவர். முறுக்கிய சடையை மகுடம்போல அணிந்தவர். புண்ணிய வடிவினர். பொய் என்பது இல்லாத மெய்யன்பர்களுக்கு மிக இனியர். இவரை வணங்கி வாழ்த்துதற் பொருட்டு அடியேன் வாழ்வேனாக - இதுவும் தலைமகள் கூற்று.

குறிப்புரை :

தனியர் - ஒருவர். எத்தனை ஓராயிரமாம் தன்மையர் - எத்துணையோ ஆயிரப் பொருளாயும் நிற்கும் தன்மையை உடையவர், `ஏகன் அனேகன் இறைவன்` எனத் திருவாசகத்துள்ளும் (தி.8 சிவபுராணம் - 5) கூறப்பட்டது. என் வயத்தினராம் கனியர் - எனக்கு உரியவர் ஆகிய கனிபோல்பவர். ``அத் தரு தீங்கரும்பர்`` என்றதனை, `தீதரு அக்கரும்பர்` என மாற்றி, `இனிமையைத் தருகின்ற அத் தன்மையை யுடைய கரும்புபோல்பவர்` என உரைக்க. கட்டியர் - அணிந்தவர். அட்ட ஆரமிர்தர் - மிகக் காய்ச்சிய அரிய பால் போன்ற வர். மிகக் காய்ச்சிய பால் மிக்க சுவையுடைத்தாதல் அறிக. `பொய் இலா மெய்யர்க்கு எத்தனையும் இனியர்` என்க. ``இவர்க்கே`` என்றதன்பின் முன்னைத் திருப்பாட்டிற் சொல்லிய ``வாழியரோ`` என்றதனை இங்கும் வருவித்து முடிக்க. அவ்வாறு வருவியா தொழி யின், முன்னர்க் கூறியவாறே இங்கும், `இவரே` என்பதே பாடமாதல் வேண்டும்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 11

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
பொன்னெடுங் குன்றுடை யோரே. 

பொழிப்புரை :

தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் என்ற மரங்கள் அடர்ந்த நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில்களால் சூழப்பட்ட இராசராசேச்சரத்து எம்பெருமானை, அரிய காயகற்பத்தை அருந்தி இறத்தலைப் பலகாலம் நீக்கி வைத்த கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களின் சொற்பொருளாகிய அமுதத்தை நுகர்ந்த அடியார்கள் சிவபதம் என்னும் பொன்மயமான நெடிய மலையைத் தம் உடைமையாகப் பெறுவர்.

குறிப்புரை :

சரளம் - தேவதாரு. வகுளம் - மகிழ். நந்தனவனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சி - நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில். அருமருந்து- காயகற்பம். இவ்வாசிரியர் காயகற்பம் அருந்தி நெடுநாள் வாழ்ந்தார் என்ப. அல்லல் - இறப்புத் துன்பம். பொருள் மருந்து - சொற்பொருளாகிய அமிர்தம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

படமெடுக்கும் சிவந்த பாம்பு ஒன்று செம்மணியை உமிழ்தலால் அடியேன் பெரிதும் விரும்பும் எம்பெருமானுருடைய காதில் அழகிய செம்பொன்மயமான தோடுபோல அவர் அணிந்த பாம்பாகிய குழை விளங்க, விளங்கும் சடைமுடியிலிருந்து கசியும் கங்கைநீரினால் அழிந்த அழகிய திருநீற்றினை உடையவராய், ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளை உடைய நள்ளிரவும் உள்ளதுபோலத் தோன்றுகின்ற கரிய நிறத்தைக்கொண்ட சிவந்த கழுத்தினை உடையவராய் உள்ள, அண்டங்களில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தலைவராகிய சிவபெருமான் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் என்ற திருத்தலமாகும்.

குறிப்புரை :

முதலடியை இறுதியடியின் முன் கூட்டுக. `ஓர் பாந்தள்` என இயையும். பைய - படத்தையுடைய. பாந்தள் - பாம்பு. உமிழ்ந்து - உமிழ்தலால்; இது, ``காதல் செய்`` என்பதனோடு முடியும். `சிவபெருமானது திருச்செவியில் செம்பொன் தோடேயன்றிப் பாம்பும் குழைபோல உள்ளது` என்க. ஐய - அழகிய. மொழுப்பு - முடி. `மொழுப்பினால் அழிகின்ற அழகிய திருநீறு` என்க. திருநீறு அழிதற்குக் காரணம் முன்னே (தி.9 பா.170) கூறப்பட்டது. வெய்ய செஞ்சோதி மண்டலம் - ஞாயிற்று மண்டலம். `ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளையுடைய நள்ளிரவும் உள்ளது போலத் தோன்றுகின்ற கரிய நிறத்தை ஒருபுடை கொண்ட சிவந்த கழுத்து` என்க.
மைய - கருநிறத்தை யுடைய. `செம்பொற் றோட்டையும், அழகிய திருநீற்றையும், செங்கண்டத்தையும் உடைய கோன்` என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

இந்திர லோக முழுவதும் பணிகேட்
டிணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாக மேகலை யரையா
அகந்தொறும் பலிதிரி யடிகள்
தந்திரி வீணை கீதமுன் பாடச்
சாதிகின் னரங்கலந் தொலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

தேவர் உலகம் முழுவதும் தாம் இட்ட ஏவலைச் செவிமடுத்துத் தம் திருவடிகள் இரண்டனையும் தொழுது செயற்படப் புறப்படவும் தாம் ஐந்தலை நாகத்தைத் தம் புலித்தோல் ஆடைமீது மேகலையாக அணிந்து வீடுதோறும் பிச்சை ஏற்கத் திரியும் பெருமானார், நரம்புகளை உடைய வீணைகள் முதற்கண் பாடல் ஒலியை எழுப்ப, அவற்றோடு கலந்து உயர்ந்த யாழ் ஒலி வெளிப்பட, இனிய வேய்ங்குழலில் வாசிக்கப்படும் மந்திரப்பாடல்கள் எங்கும் பொருந்திய இடமாகிய திருஇடைமருது என்ற திருத்தலத்தில் உறைகிறார்.

குறிப்புரை :

`தம்மை விண்ணுலகம் முழுவதும் வணங்கிநிற்கத் தாம்போய் அகந்தோறும் பிச்சைக்கு உழல்கின்றார்` என்ப தாம்.``அடிகள்`` என்ற உயர்வுச் சொல்லும் இங்கு நகைப் பொருட்டாயே நின்றது.
தந்திரி - வீணை - நரம்புகளையுடைய வீணை. சாதி - உயர்ந்த. கின்னரம் - யாழ்; என்றது அதன் இசையை. வீணை முற் பட்டுப் பாட, யாழிசை அதனோடு ஒன்றி ஒலிக்கின்றது என்பதாம். `கீதமும் பாட` என்பது பாடம் அன்று. ``வீணை பாட`` எனக் கருவி வினைமுதல் போலக் கூறப்பட்டது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
பல்லவம் வல்லியென் றிங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
வீங்குல கொழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமக ளுடனாய்த்
தூங்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சந்திரனின் பிறை போன்ற குருத்து, அதனைப்போன்ற தளிர், கொடி ஆகிய இவைபோன்ற பொருள்கள் வடிவாகச் செய்யப்படுகின்ற பொன்போல எல்லாப் பொருள்களுமாய், பரந்த உலகம் முழுதும் நீக்கமற நிறைந்து, புலவி யோடு கூடிய கலவியை நிகழ்த்தும் பார்வதியுடன் கூடியவராய், எல்லோரும் உறங்குகின்ற இருள் செறிந்த நடுஇரவில் வந்து என் மனத்தை அணுகி, யாவரும் அடியேனும் அறியாதவாறு என் உள்ளத்தினுள் கலந்த நுண்மையை உடைய எம்பெருமானார் உறையுமிடம் திருஇடைமருதூராகும்.

குறிப்புரை :

பனி படு மதி - குளிர்ச்சி பொருந்திய சந்திரன்; என்றது பிறையை. கொழுந்து - குருத்து. அன்ன பல்லவம் - அவற்றோடொத்த தளிர். வல்லி - கொடி. என்று இங்ஙன் வினைபடு கனகம்போல யாவை யுமாய் - ஆகிய இன்னோரன்ன பொருள் வடிவமாகச் செய்யப் படுகின்ற பொன்போல எல்லாப் பொருள்களுமாய்; என்றது, `பொன் ஒன்றே பல பொருள்களாய் நிற்றல்போலத் தான் ஒருவனே எல்லாப் பொருளுமாய் நிற்கின்றான்` என்றவாறு. இது பரிணாமம் கூறியதன்று; கலப்புப் பற்றியே கூறியது. தூங்கு இருள் - மிக்க இருள். ``நடுநல் யாமத்து`` எனக் களவிற் கலக்கப்பட்ட தலைவியது கூற்றுப்போலக் கூறினார். `யாவரும் அறியாதவாறும், யானும் அறியாதவாறும் என் மனத்திடை அணுகினான்` என்பது உண்மைப் பொருள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங்
கடியனே னுள்கலந் தடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
படர்சடை விடமிடற் றடிகள்
துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை
சுடர்உமிழ் தரஅத னருகே
மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

அழகை வெளிப்படுத்துகின்ற ஒளி இரத்தினத்தின் உள்ளே கலந்து நீக்கமற நிறைந்தாற்போல அடியேனுடைய உள்ளத்தில் கலந்து அடியேனுடைய தொண்டினை விரும்பி நிற்கும் பார்வதி பாகராகிய, பரந்த சடையையும், விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய பெருமானார், குறைதலை வெளிப்படுத்தி நிற்கின்ற மேல் ஆடை, இடுப்பில் ஓர் ஆடை, அதன்மேல் நாகரத்தினத்தை வெளிப்படுத்தும் பாம்பு அழகை வெளிப்படுத்திக் கச்சாக விளங்க, இவற்றை உடுத்து விரும்பித் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

அணி உமிழ் சோதி மணியின் உள் கலந்தாங்கு - அழகை வெளிப்படுத்துகின்ற ஒளி இரத்தினத்தின் உள்ளே கலந்தாற் போல. இவ்வுவமை, `இறைவன் அடியாரது உள்ளத்தில் கலந்தான் என்பதெல்லாம், மணியினுள் ஒளி கலந்தது போல்வதுதான்; அஃதாவது இயற்கையாயுள்ள கலப்பேயன்றிச் செயற்கையாய் வரும் கலப்பன்று` என்பதை விளக்கி நின்றது. `அடிகள் மருவிடம்` என இயையும். `படர்ந்த சடையையும், விடத்தையுடைய மிடற்றையும் உடைய அடிகள்` என்க. `அரையில் ஓர் ஆடை துணி உமிழ் ஆடை யோடு சுடர் உமிழ்தர` என்க. துணி உமிழ் - குறைதலை வெளிப்படுத்தி நிற்கின்ற. `ஆடை` என்பது `ஆடுதல் உடையது` என்னும் பொருட் டாய் உத்தரீயத்திற்கே பெயராயினும், பொதுமையில் அரையில் உடுக்கப்படுவதாகிய உடையையும் குறித்தல் பற்றி உத்தரீயத்தை, ``துணியுமிழ் ஆடை`` என்றார். உத்தரீயம் உடையிற் குறைதல் பற்றி, `துண்டு` எனவும் வழங்கப்படுதல் அறிக. நாகம், கச்சாக அமைந்தது. `அணி உமிழ்ந்து` எனப் பிரிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற்
படிவழி சென்றுசென் றேறிச்
சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி
தெரியினுந் தெரிவுறா வண்ணம்
எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன்
எண்ணில்பல் லூழிக ளுடனாய்
வந்தணு காது நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

உலகியல் கட்டுக்களையும், அவற்றிலிருந்து விடுதலை பெறுதலையும் ஆராய்கின்ற பொருள் பற்றிக் கூறுகின்ற தத்துவ சாத்திரங்களாகிய படிவழியில் பலகாலும் ஈடுபட்டுச் சென்றபின் சிவநெறி எய்தி என் சிந்தையும் தானும் கலந்த கலவி யானது ஆராய்ந்தாலும் விளங்காதபடி என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானே ஆகியும், இவ்வாறு பல ஊழிக்காலங்கள் உடனாகி, வேறாய் நின்று பின்னர் வந்து ஒன்றாய்க் கலவாது பண்டே சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாய் ஒன்றாய் இருந்து பின்னர் விளங்கித்தோன்றும் இடம் திருஇடைமருதூராகும்.

குறிப்புரை :

பந்தம் - கட்டு; பிரிவு - வீடு. தெரி - இவ்விரண்டன் தன்மையையும் ஆராய்கின்ற. `தெரிபனுவல், பொருட்பனுவல்` எனத் தனித்தனி முடிக்க. பொருட் பனுவல் - பொருட் பெற்றிகளைக் கூறு கின்ற நூல்கள்; `தத்துவ சாத்திரங்கள்` என்றபடி. `பனுவலாகிய படி வழியில்` என்க. ``சென்று சென்று`` என்ற அடுக்குப் பன்மை பற்றி வந்தது. அதனால், பொருட் பெற்றிகளை வேறுவேறாய்க் கூறுகின்ற சமய நூல்கள் பலவற்றையும் முறையானே, `இதுவே மெய்ந்நூல்; இதுவே மெய்ந்நூல்` எனத் தெளிந்து அவ்வாற்றானே அறிவு சிறிது சிறிதாக முதிரப்பெற்று என்பது பொருளாயிற்று. `தொன்னூற் பரசமயந் தோறும் அது அதுவே - நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து` என்றார் குமரகுருபர அடிகளும். (கந்தர்கலி அடி 18) சமயங்கள் பலவும் `சிவ நெறியாகிய மேல் நிலத்திற்குப் படிகள்` என்பதைச் சிவஞானசித்தி, ``புறச்சமயநெறிநின்றும்`` (சிவஞான சித்தி அதி.2 பா.11) என்னும் திருவிருத்தத்தால் இனிதுணர்த்துதல் காண்க. சிவஞானபோத மாபாடியத்திலும், `சமயங்கள் பலவும் சைவத்திற்குப் படிகள்` என்பதற்கு இப்பகுதியே (சூ.8 அதி.1) மேற் கோளாகக் காட்டப்பட் டது. சென்று ஏறி - சென்றபின் சிவநெறியை எய்தி. `என் சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி` என்று எடுத்துக் கொண்டு உரைக்க. தெரியினும் தெரிவுறா வண்ணம் - ஆராய்ந்தாலும் விளங்காதபடி. `தெரிவுறா வண்ணம் உடனாய் உள்கலந்தோன்` என்க. எந்தையும் யாயும் யானும் என்று இங்ஙன் - என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானேயாகியும் இவ்வாறு; இஃது, `உடனாய்க் கலந்தோன்` என்பதனோடு முடியும். `யாய்` என்பதற்குப் பொருள், `என் தாய்` என்பதே யாதலை, `யாயும் ஞாயும் யாரா கியரோ` (குறுந்தொகை - 40) என்பதனான் அறிக. `தாய்` என்பது பாடம் அன்று. இறைவன் உயிர்க்குயிராய்க் கலந்து நிற்றலை இனிது விளக்குவார், ``எந்தையும் யாயும் யானும்என் றிங்ஙன்`` என்றார். ``வந்து அணுகாது கலந்தோன்`` என்றது, `வேறாய் நின்று, பின்னர் வந்து ஒன்றாய்க் கலவாது, பண்டே ஒன்றாயிருந்து, பின்னர் விளங்கித் தோன்றினான்` என்றதாம். ஆகவே, முன்னர், ``கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறாவண்ணம்` என்றதும் இதுபற்றியேயாயிற்று. சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாதல் பற்றி, ``நுணுகி`` என்றார்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண்
டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந்
தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப
அந்திபோன் றொளிர்திரு மேனி
வரியர வாட ஆடும்எம் பெருமான்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

பிணங்கள் எரியும் சுடுகாட்டில், புதைப்பதற்காக இடப்பட்ட பிணங்களின் கொழுப்பினை உண்டு ஏப்பம் விட்டு விளங்குகின்ற பற்களையும், நெருப்பினைக் கக்கும் வாயினையும், பிணத்தைத் தேடி ஓடுகின்ற கால்களையும் உடைய நெடிய பேய்க் கூட்டங்கள் குதித்து ஆடும் இருள் செறிந்த பெரிய நடுஇரவில், அருளை வெளிப்படுத்தும் புன்முறுவல் நிலவினை வெளிப்படுத்த, அந்திவானம் போலச் செவ்வொளி விளங்கும் திருமேனியில் கோடு களை உடைய பாம்புகள் அசையக் கூத்து நிகழ்த்தும் எம்பெருமான் விரும்பி உறைகின்ற இடம் திருஇடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

எரி தரு - நெருப்பைத் தருகின்ற; என்றது, `நெருப்பை யுடைய` என்றபடி. கரிகாடு - சுடுகாடு. இடுபிண நிணம் - ஒரு பக்கத் தில் இடப்பட்ட பிணத்தினது நிணத்தை. துரு கழல் - பிணத்தைத் தேடி ஓடுகின்ற கால். `யாமத்தே ஆடும்` என இயையும்.
அருள்புரி முறுவல் - அருள் வழங்குதலைக் குறிக்கின்ற நகைப்பு. புன்னகையாதலின், ``முகிழ்நிலா`` என்றார். முகிழ்த்தல் - அரும்புதல். `புன்முறுவலாகிய இளநிலாவோடு தோன்றுதலின், செம் மேனி அந்திபோன்றொளிரும்` என்க. `திருமேனிக்கண்` என உருபு விரிக்க. வரி - கீற்று.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந் துருகி
அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்
காதனேன் மாதரார் கலவித்
தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம்
தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

அழகின்கண் ஆழ்த்துகின்ற செயற்பாட்டை உடைய பசியமட்கலம் வானத்தின் மழைத்துளி தன்மீதுபட்ட அளவில் நனைந்து கரையவும், நெருப்பிலிட்டுச் சுட்டபின்பு அம்மட்கலம் தண்ணீரிலேயே கிடந்தாலும் கேடின்றி இருப்பதுபோல அறிவில்லா தேனாகிய அடியேனுடைய உள்ளம் மகளிருடைய கலவியாகிய செயலில் ஆழ்ந்து இடர்ப்படாதவண்ணம் இருள் செறிந்த பெரிய நடு இரவில் ஒப்பற்ற இனிய யாழ் ஒலி ஒலிக்க வந்து என் உள்ளத்துப் புகுந்த பெருமான் உறைவிடம் இடைமருதே.

குறிப்புரை :

``எழிலை, அழலை, தொழிலை`` என்னும் இரண்ட னுருபுகளை ஏழனுருபாகத் திரிக்க. எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன் - அழகின்கண் ஆழ்த்துகின்ற (அழகு மிகுமாறு செய்கின்ற) செயற்பாட்டையுடைய பச்சை மட்கலம். உருகி - கரைவதாய். அழலை ஆழ்பு - நெருப்பில் மூழ்கிய பின்பு. உருவம் - தனது வடிவம். புனலொடும் கிடந்தாங்கு - நீரிலே மூழ்கினாலும் அதனுடன் கேடின்றி இருந்தாற்போல. ஆதனேன் - அறிவிலேனாகிய எனது. `ஆதனேன் நெஞ்சம்` என இயையும். இடர்ப்படா வண்ணம் - மயக்கத்திற் படாதபடி. ``இடர்`` என்றது, ஆகுபெயராய், அதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் குறித்தது. `இடர்ப்படாவண்ணம் புகுந்தோன்` என இயையும். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்பு மாதராரது கலவியில் மிக ஆழ்ந்தபோதும் உள்ளம் அதனால், திரிவுபடாமை யாகிய அஃதொன்றையே கூறினாராயினும், மேற்போந்த உவமை யால் முன்பு அவரை எதிர்ப்பட்ட ஞான்றே உள்ளம் திரிந்து வேறுபட்டமையைக் கூறுதலும் கருத்தென்க. இஃது இறைவன் திருவருளைப் பெறாதவரது நிலைமைக்கும், பெற்றவரது நிலைமைக் கும் உள்ள பெரியதொரு வேற்றுமையை இனிது விளக்கியவாறு. வருகின்ற இருதிருப்பாட்டுக்களில் கூறப்படும் உவமைகளும் இக் கருத்துப்பற்றியனவே என்க. திருவருள் பெற்றார்க்கும் அப்பிறப்பில் நுகர முகந்துகொண்ட பிராரத்தவினை நிற்றலின், அது காரணமாக மாதரார் கலவியில் ஆழ்தல் உண்டாயினும் அவர் அதனால் மயங்கி அதனையே மேலும் மேலும் அவாவி அதற்கு ஆவனவற்றின்கண் விருப்புடையராய் அவற்றை ஆக்கவும், அதற்கு ஆகாதனவற்றின் கண் வெறுப்புடையராய் அவற்றை அழிக்கவும் முயலாது இறைவனது திருப்பணியிலே முனைந்து நிற்பராகலான், அவர்க்கு மயக்கம் இன்மை அறிக. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, நம்பியாரூரரது வரலாறேயாகும். அவர், ``பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்`` (தி. 7 ப.54 பா.1) என்றது இந்நிலையையேயாம். `கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை - மொண்டுண்டயர்கினும் வேல்மறவேன்` என்றார் அருணகிரிநாதரும். (அலங்காரம் - 37) இன்னும் மேற்காட்டிய உவமையானே இறைவன் திருவருள் கை கூடப்பெறாதவர் கடிய நோன்பு முதலியவற்றால் உடலை வருத்தி னாராயினும், அவர்க்கும் மயக்கம் நீங்குதல் இல்லை என்பதும் பெறப்படும். சைவ சமய ஆசிரியன்மார் சமண புத்த மதங்களின் ஒழுக்கங்களை இகழ்ந்தமை இதுபற்றியே என்பது உணர்க.
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்துந் தாகமுதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்;
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானம்
கூடும்அவர் கூடரிய வீடும் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர். (சிவஞான சித்தி. சூ. 10.5)
என்னும் சாத்திர முறையைக் காண்க. திருவருள் வாய்க்கப் பெறாது உலக மயக்கிடை ஆழ்ந்து கிடப்போர், தமது நிலையைத் திருவருள் பெற்றாரது நிலையாகப் பிறர்பாற் கூறின், அது, குற்றத்தின்மேலும் உய்தியில் குற்றமாய் முடியும் என்க. மழலை யாழ் சிலம்ப - இனிய யாழிசை ஒலிக்க. அகம் - உள்ளம்; `இல்லம்` என்பது நயம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார்
மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
விழுமியோன் முன்புபின் பென்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

வைக்கோலை விரும்புகின்ற காளையை வாகன மாகப் பெற்று அதன்மீது இவர்கின்ற அழகினை உடைய பெருமானார் அடியேனை அழகு மிக்கோராகிய அடியாருடைய அன்பிலே நிற்கச்செய்து, செந்தீயிடை இடப்பட்ட செங்கல் வெந்தபின் உரம் பெற்று நிற்றல்போல, பாசத்தால் கட்டுண்டு எளியனாய் நின்ற யானும், ஞானத்தால் திண்ணியனாகும்படி செய்து, அடியேனுடைய உள்ளத்தில் எளிமையாக வந்து வீற்றிருக்கின்றார். கருநிறம் பொருந்திய கழுத்தினராய், பலகோடிக்கணக்கான அண்டங்களில் வாழும் தேவர்களுக்குத் தலைவரான அப்பெருமானார் தங்கி யிருக்கும் இடம் திருஇடைமருதே. அப்பெருமானார் வந்து என் உள்ளத்து வீற்றிருந்தமை முன்பு என்பேனோ, பின்பு என்பேனோ? அவர் வந்து உள் வீற்றிருந்தது ஒரு காலத்தன்று என்றுமேயாம்.

குறிப்புரை :

``முன்பு பின்பு என்கோ`` என்பதனை முதலில் வைத்து, `முன்பென்பேனா பின்பென்பேனா` எனப் பொருள் கூறி, அதனை, ``வந்து உள்வீற்றிருந்ததனை`` உட்கொண்டு கூறியவாறாக உரைக்க. `வந்து உள்வீற்றிருந்தது ஒருகாலத்தன்று; என்றுமே யாம்` என்றவாறு. இதன்பின், `விழுமியோன் வை அவாம் பெற்றம் பெற்று என்னை, வெய்யவாம் செந்தீப்பட்ட இட்டிகைபோல் அம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து` எனக் கொண்டு கூட்டியுரைக்க. விழுமியோன் - யாவரினும் மேலானவன்; இதுவும் இறைவனையே குறித்தது. வை அவாம் பெற்றம் பெற்று - வைக்கோலை விரும்புகின்ற எருதினை ஊர்தியாகக்கொண்டு. இட்டிகை - செங்கல். `மண்ணால் ஆக்கப் படுகின்ற இது, செந்தீயில் வெந்தபின் உரம் பெற்று நிற்றல்போல, பாசத்தால் கட்டுண்டு எளியனாய் நின்ற யானும் ஞானத்தால் திண்ணியனாகும்படி` என்றவாறாம். `போல ஆகும்படி` என்னும் பொருட்டாகிய, `போல` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து - அழகு மிக்கோராகிய அடியாரது அன்பிலே நிற்கச் செய்து. அழகு - அருட்பொலிவு; அடியவர்க்கு ஏவல் செய்து நிற்பின், அஞ்ஞானம் நுழைதற்கு வாயில் இல்லாமை அறிக. நொய்ய ஆறென்ன - எளிய பொருள்போல. ``ஆறு`` என்றது, அதனாற் கிடைக்கும் பொருளை யுணர்த்தி நின்றது. `வீற்றிருந்த கோன்` என இயையும். மை - மேகம். இங்கு, `அவாம்` என்பது உவம உருபாய் நின்றது. `விழைய` என்பதோர் உவம உருபும் உளதாதல் அறிக. கருமை மிகுதி உணர்த்தற்கு, `நூறுநூறாயிர கோடி மேகம் போலும்` என்றார்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக்
கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த
நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே என்றுநின் றுருகிப்
புலம்புவார் அவம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

கலங்குதலை உடைய பொய்கையின் நீர் தேற்றாங் கொட்டையால் தெளிவிக்கப்பட்ட இடத்து நீரோடு கலந்த மண் அடியில்பட நீர் தெளிவாக இருப்பதுபோல, அடியேன் சிந்தையுள் புகுந்து கலக்கத்தை நீக்கி நன்மையை அருளும், என்னால் விரும்பப் படும் பெருமானே! புதியவனாகிய அடியேனுடைய அறிவில் கலந்தவனே! என்று நிலையாக உருகிப் புலம்புவாரும், வீண் செயல் களில் செல்லாதவர்களும் ஆகிய அடியார்களுடைய, அருவிபோல் கண்ணீர் பெருகுதலை உடைய கண்களின் கண்மணியை ஒத்த அப் பெருமான் உறையும் இடம் திருஇடைமருதூரே.

குறிப்புரை :

`சேற்றால் கலங்கல் பெற்ற நீர் தேற்றாங்கொட்டை சேர்ந்ததனால் தெளிவுபெற்ற பின்னர் அச்சேற்றோடே இருப்பினும் கலங்கல் இன்றித் தெளிந்தே நிற்றல்போல` என்பது முதல் அடியின் பொருள். தெளிவிடத்து - தெளியும்பொழுது. கலங்கல் நீர் தெளிவு பெறுதல் தேற்றாங்கொட்டையால் என்பது நன்கறியப்பட்டதாகலின், அதனைக் கூறாராயினார். நலம் - திருவருள். ``கலந்து`` என்றதனை, `கலக்க` எனத் திரிக்க. `கலந்து, அதனால் உலகியலாற் கலங்கா திருக்குமாறு` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. புலம், ஐம்புலன்; இஃது அவற்றான் வரும் இன்பத்தைக் குறித்து நின்றது. திருவருள் கைவரப் பெற்றோர்க்கு `பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய்` விளை தலின் (தி.8 திருவுந்தியார் - 33) ``புலங் கலந்தவனே`` என்றார். ``வம்ப னேனுடைய புலங்கலந்தவனே`` என்றது, உருகிப் புலம்புவாரது கூற்றை, கொண்டு கூறியது. எனவே, ``வம்பனேன்`` என்றது பன்மை யொருமை மயக்கமாம். புலம்புவார் - அழுகின்றவர். அவம் புகார் - வீண் செயலிற் செல்லாதவர். `புலம்புவாரும், அவம் புகாரும் ஆகிய அவரது கண்ணில்` என்க. அருவி மலங்கல் கண் - அருவி போல நீர் மல்குதலையுடைய கண். அம், சாரியை. கண்மணிபோறலாவது, இன்றியமையாப் பொருளாகி நிற்றல்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

எண்ணற்ற மெய்யுணர்வு இல்லாத மக்கள் இருகண்களும் ஒருசேர மூடி உறங்கும் இருள் செறிந்த பெரிய நடுஇரவிலே, விழித்துக்கொண்டிருக்கும் ஒருவனுடைய கண்களில் மாத்திரம் சிவந்த சுடரின் வெளிச்சம் கலந்தாற்போல, இறைவனுடைய திருவருளில் கலந்து மெய்ம்மையை உணர்ந்த கருவூர்த்தேவர் வழங்கும் கரும்பு போன்ற இனிய தமிழ்மாலையைப் பெரிய சோலை களில் மருத யாழ் ஒலியோடு பாட, அதனைக் கேட்கவரும் நீலகண்ட னாகிய, பல அண்டங்களிலும் உள்ள தேவர்கள் எல்லோருக்கும் தலைவனான சிவபெருமான், உகந்தருளியுள்ள இடம் திருஇடை மருதூரே ஆகும்.

குறிப்புரை :

ஒருங்கு - ஒற்றுமைப்படுத்துகின்ற. இருகண்ணும் ஒற்றுமைப்படுதலாவது, ஒன்றனையே நோக்குதல். இதனை எடுத் தோதியது, உறங்குங்காலும் அவை ஒருங்கே உறங்கும் என்றற்கு. `இருங்கண்ணின்` எனப் பாடம் ஓதுதல் சிறவாது. கண்ணின் - கண்ணினையுடைய. ``புன்மாக்கள்`` என்றது, மெய்யுணர்வில்லாத மக்களையும் உளப்படுத்து. கருமை இன அடையாதலின், `ஓர் கருங்கண்` என்றதனை, `ஒருகண்` என்றே கொள்க. `ஒருகண்` என்பதில் `ஒன்று` என்றது, `முதல்வகையான் ஒன்று` என்றவாறு. அஃதாவது, `எண்ணில் புன்மாக்களுடைய இருகண்களும் உறங்குகின்ற நடுநல் யாமத்தில், தமது ஒருகண் மாத்திரம் செழுஞ்சுடர் விளக்கங் கலந்து பொருள்களைக் கண்டாற்போல` என்றதாம். நின்று இமைக்கும் செழுஞ்சுடர் - நிலைபெற்று ஒளிரும் செழுமையான விளக்கு. விளக்கம் - ஒளி. கலந்து உணர் - இறைவனது திருவருளிற் கலந்து மெய்ம்மையை உணர்ந்த. கருவூர் - கருவூர்த் தேவரது. இறைவன் நடுநல் யாமத்து வந்ததாக இவர் பலவிடத்துக் கூறலின், இவர்க்கு அவன் அருள்புரிந்த நேரம் இடையாமமாதல் கூடும். இனி, அஞ் ஞானத்தின் மிகுதியை இவ்வாறு உருவகமாகக் கூறினார் எனினுமாம். மருதம் - மருதநிலம். அதன்கண் உள்ள யாழில் பாடப்படுவது செவ்வழிப்பண் எனினும், பஞ்சமும் பாடப்படுவ தன்றாகாது என்க. மருதூராகலின் ஆங்கு உள்ளது மருதயாழேயாம். `மருதயாழொடு` என ஒடுவுருபு விரிக்க. ``உதிப்ப வரும்`` என்றது, `உதித்தலால் அதனைக்கேட்டு வருகின்ற` என்பதாம். அஃதாவது, இத்திருப்பதிகத்தை யாவர் மருதயாழோடு பாடினும் இடைமருதுறை இறைவன் அவர்பால் வருவான் என்றவாறு. இதனால், இத்திருப் பாட்டுத் திருக்கடைக்காப்பாயிற்று. முன்னரும் (தி.9 பா.179) ``மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்`` என்றமையால், இறைவன் இவர்பால் இசைவிருப்பினன்போல வந்து அருள்செய்தான் எனக் கொள்ளல் தகும்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே. 

பொழிப்புரை :

கைகளில் வெள்ளிய முத்துக்களால் ஆகிய தோள் வளைகளை அணிந்து, கழுத்தில் ஒப்பற்ற தனிமாலையைச்சூடி, மூன்று கண்களை உடைய தலைவராய், இவ்வுலகிலே மிக்க சிறப்பையுடைய திருவாரூரில் முதல்வராய், வீதிகளில் திருவுலாப்போகும் அழகராய் அசபாநடனம் என்று போற்றப்படும் கூத்தினைச் சிறப்பாகப் புரிந்து வருகிறார். திருவீதி உலாமேற்கொண்டு, இங்ஙனம் உடம்பை வளைத்து எம்பெருமான் ஆடும் ஆட்டத்தின் விளக்கம் உமாதேவி அளவிலும், கங்காதேவி அளவிலும் அடங்காது மேம்பட்டுள்ளது. எம்பெருமானுடைய கொள்கைதான் யாதோ?

குறிப்புரை :

வால்முத்தின் - வெண்மையான முத்துக்களையுடைய. சரி - தோள்வளை. வளை - கைவளை. முரிவது ஓர் முரிவு - விளங்கு வதாகிய ஒரு விளக்கம். `உமாதேவியின் அளவிலும், கங்காதேவியின் அளவிலும் அடங்குவதன்று; மேற்பட்டது` என்றவாறு. உம்மைகள், எண்ணோடு சிறப்பு. ``என்னோ தம் ஒருப்பாடு`` என்றதை, `தம் ஒருப் பாடு என்னோ` என மாற்றி இறுதியிற் கூட்டி உரைக்க. ஒருப்பாடு - கொள்கை. `வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளு தல்போலும்` என்பதாம். இவர் முசுகுந்தச் சக்கரவர்த்தியால் இந்திரலோகத்திலிருந்து கொணர்ந்து திருவாரூரில் எழுந்தருளு விக்கப்பட்டவராதல் அறிக.
ஆதி - முதல்வன்; இது பன்மையொருமை மயக்கம். வீதி விடங்கர் - தெருவில் உலா வரும் அழகர். இது தியாகராசருக்குப் பெயர். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் திருமூலட் டானத்தேயிருக்க, இவர் வீதியில் எழுந்தருளிவந்து காட்சி வழங்கு பவராதலின், இப்பெயர் உடையராயினார். இவர் வீதியில் எழுந் தருளுங்கால் நடனம் புரிந்து வருதலும், அந்த நடனம், ``அசபா நடனம்``` என்று போற்றப்படுதலும், அந்நடனத்தை இவர் முதற்கண் திருமாலின் இதயத்தில் இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே. 

பொழிப்புரை :

தேவர்களே! சிவபெருமானிடத்துப் பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந் தோறும் அமுதம்போல அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளிவீசிக் கொண்டிருப் பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கல மாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார்.

குறிப்புரை :

``தேவர்காள்`` என்பதனை முதலிற்கொண்டு, அதன் பின்னர்ப் பின்னிரண்டடிகளைக் கூட்டியுரைக்க. `உணர்வோர் பருகுதோறு` என இயையும். `வாய்மடுத்துப் பருகுதல்` என்பது பான்மை வழக்கு. ``அவர்க்கே`` என்ற பிரிநிலை ஏகாரம், பிறர்க்குத் தித்தியாமை குறித்து நின்றது. தித்தியா - தித்தித்து. இருந்தவா - இருந்தவாற்றை. தேவர்களை நோக்கிக் கூறினார், `யாம் திவ்விய தேகமும் (ஒளியுடம்பு) உடையோம்; அதனால் தேவராய் நிற்கின் றோம் எனச் செருக்குகின்ற உங்கள் உருவத்தின் ஒளி இவரது திருவுரு வத்தின் ஒளிக்கு எட்டுணையேனும் போதாமையைக் கண்டு அடங்கு மின்கள்` என்றற்கு. இனி வருவன அத்திருவுருவத்தின் பெருமைகள். சத்தியாய் - அம்மையாய். சிவமாய் - அப்பனாய். தனிமுழு முதலாய் - அவ்வாறு நிற்றலானே உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். அதற்கு ஓர் வித்துமாய் - தம்மால் படைக்கப்பட்ட அவ்வுலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய்.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 1

முத்து வயிரமணி மாணிக்க
மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
மாயிற்றே.

பொழிப்புரை :

முத்து, வயிரம், மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின்மேல் பூங்கொத்துக்கள் ஒளிவீசுவது போன்றும், தூண்டப்பட்ட விளக்கின் ஒளி போன்றும், எல்லாத் திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப்புகழும் தில்லைத் திருத்தலத் திலுள்ள, ஒளிவீசும் பொன்னம்பலம் எம்பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக ஆயிற்று.

குறிப்புரை :

``எத்திசையும்`` என்பதை முதலிற் கொள்க. வயிரமணி, இருபெயரொட்டு.
தொத்து - பூங்கொத்து. இது தூண்டு விளக்குக்களுக்கு உவமை. ஏய்ப்ப - பொருந்த வைக்க; ஏற்றி வைக்க. `ஏய்ப்ப ஏத்தும்` என இயையும். ``அத்தனுக்கும்`` என்ற உம்மை சிறப்பு.
`அவ்வம்பலமே` சுட்டு வருவிக்க. ``அம்பலமே`` என்ற ஏகாரம், `பிறிதிடம் இல்லை` என்னும் பொருட்டாய், அம்பலத்தது சிறப்புணர்த்தி நின்றது.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 2

கடியார் கணம்புல்லர் கண்ணப்பர்
என்றுன்
அடியார் அமர்உலகம் ஆளநீ
ஆளாதே
முடியாமுத் தீவேள்வி மூவா
யிரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத்
தாடினையே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க கணம்புல்ல நாயனார், கண்ணப்ப நாயனார் என்ற பெயருடைய உன் அடியவர்கள் சிவலோகமாகிய வீடுபேற்றுலகத்தை ஆளவும், நீ அதன்கண்ஆட்சி செய்வதனை விடுத்து, என்றும் அழிதல் இல்லாத முத்தீக்களால் வேள்விகளை நிகழ்த்தும் தில்லை மூவாயிரவர் அந்தணரோடு உடன் உறையும் வாழ்க்கையை மேற்கொண்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்து ஆடுகின்றாய்.

குறிப்புரை :

கடி ஆர் - விளக்கம் (புகழ்) பொருந்திய. `உன்றன்` என்னாது, `உன்` என்றே ஓதுதல் பாடம் ஆகாது என்க. `அமரர் உலகம்` என்பது குறைந்து நின்றது. `அமருலகம்` என்பதனை முதலிற் கூட்டுக. ``அடியார் ஆள நீ ஆளாது`` என்றது, `அதன்கண் விருப்பம் இன்மையால் விடுத்தாய்` என்னும் குறிப்பினது. இன்னும், அடியார் பலரையும் அமருலகம் ஏற்றுதல் தில்லையிலிருந்தேயாம் என்பதும் கருத்து. பின்னர் நாவுக்கரசர் முதலிய மூவர் முதலிகளுக்கு அருள்புரிந்தமையை எடுத்தோதுவதும் இக்கருத்துப் பற்றியே என்க. முடியா - என்றும் வளர்கின்ற. ``குடிவாழ்க்கை கொண்டு`` என்றது, ``அவருள் ஒருவனாய்` என்றபடி. குலாவி - மகிழ்ந்து.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 3

அல்லியம் பூம்பழனத் தாமூர்நா
வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே
தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா
டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே
சேர்ந்தனையே.

பொழிப்புரை :

அக இதழ்களோடு கூடிய அழகிய பூக்கள் பொருந்திய வயல்களை உடைய திருவாமூரில் அவதரித்த திருநாவுக்கரசு சுவாமிகள் வீடுபேற்றை அடையும் வழியைக் காட்டிய வீரனே! அழகிய தில்லைநகரில் முல்லை நிலத்தில் மேயும் காளையை ஒத்த காளையை இவர்ந்தவனே! நீ கூத்தாடுதலை நிகழ்த்தும் அரங்கமாகச் செல்வம் மிகுந்த சிற்றம்பலத்தை அடைந்துள்ளாயே.

குறிப்புரை :

அல்லி - அகஇதழ். பழனம் - வயல். ஆமூர் - திருவாமூர். இது திருநாவுக்கரசர் திருவவதாரம் செய்த தலம். ``நாவுக்கரை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றதனை, `நாவுக்கரசுக்கு` எனத் திரிக்க. ``கொல் விடை`` என்பது ஐகாரம் பெற்று நின்றது. கொல்விடை போலும் விடை என்றபடி. கொல்விடை, விடலையர் தழுவுதற் பொருட்டு ஆயர் இனத்தில் வளர்க்கப்படுவன. விடை ஏறீ - இட பத்தை ஊர்பவனே.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 4

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்
டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்
கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி
தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை
யாயிற்றே. 

பொழிப்புரை :

எம்மைப் பிணித்திருக்கும் கொடிய வினையாகிய நோயினை அறவே அழித்து, எம்மை அடியவராகக் கொண்ட சீகாழி மன்னனாகிய திருஞானசம்பந்த நாயனாரையும் அடிமையாகக் கொண்டருளிய பெருமானுக்கு, அம்பு போன்ற கண்களை உடைய உமாதேவியும் தாமுமாக அழகிய தில்லைத் திருத்தலத்திலுள்ள பொன்னம்பலமே எழுந்தருளியிருப்பதற்குரிய இடமாக ஆகிவிட்டது.

குறிப்புரை :

`எம் வினைநோய்` என இயையும். `பந்த வினை, வல்வினை` எனத் தனித்தனி இயைக்க. பந்தம் - கட்டு. திருப்பதிகங் களை வினைதீர்தற்கு வழியாகத் திருக்கடைக்காப்பு அருளிச்செய்து சென்றமையின், `எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டு எமை ஆளும் சம்பந்தன்` என்றார். அம்பு உந்து - அம்புபோலப் பாய்கின்ற. ``தானும்`` எனப் படர்க்கையாகக் கூறினார். ``தான்`` என்றது, கூத்தப் பெருமானை. `கண்ணாளும் தானும் சேர்ந்து இருக்கை தில்லை அம்பலமே ஆயிற்று` என மாறிக் கூட்டுக. `செம்பொன்னால்` என உருபு விரிக்க. இருக்கை - இருக்கும் இடம்.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 5

களையா உடலோடு சேரமான்
ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை
மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா
யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின்
ஆடரங்கே. 

பொழிப்புரை :

தம் உயிர் இவ்வுடம்பைவிடுத்து நீங்காமல் இந்த உடலோடும் சேரமான் பெருமாள் நாயனாரோடும் ஆரூரன் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் மதத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தல் நீங்காத வெள்ளை யானையைக் கயிலை மலையை அடைவதற்கு இவர்ந்து செல்லவும், இளம்பிறையைச் சூடிய பெருமானே! நீ தில்லை மூவாயிரவரோடும் கலந்து விளையாடுகின்ற திருச்சிற்றம்பலமே உனக்குக் கூத்தாட்டு நிகழ்த்தும் அரங்கமாக உள்ளது. சேரமான் குதிரையில் கயிலை சென்றார் என்க. மதிமுடி - எனவும் பாடம் ஓதுப.

குறிப்புரை :

`சேரமானொடு` என உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் ஒடுவுருபு விரிக்க. `மதம் விளையா` என மாற்றுக. விளையா - விளைந்து; பெருகி. மாறா - நீங்காத. மேற்கொள்ள - ஏறிச்செல்லும் படி. முளையாம் - இளைதாகிய. அளையா - கலந்து. `மேற்கொள்ள விளையாடும்` என இயையும். `மேல் கொள்ள விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே` என்றாராயினும், `மேல்கொள்ள விளையாடி ஆடு அரங்கு அம்பலமே` என்பது கருத்தென்க.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 6

அகலோக மெல்லாம் அடியவர்கள்
தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ
தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள்
நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச்சிற்
றம்பலமே.

பொழிப்புரை :

நீ புகுவதற்கு வேறு உலகம் உண்டு என்று நீ கருதாதபடி, மேல் உலகங்களை அடைவதற்கு உரிய நெறியானே எய்திய புண்ணியங்களால், இந்நிலவுலகம் முழுதிலுமுள்ள அடியவர் கள் உன்னைச் சூழ்ந்து நிற்க, அதனால் பொருந்திய சிறப்பினையுடைய சிவலோகமாகவே தில்லைத் திருப்பதியின் சிற்றம்பலம் அமைந்துவிட்டது.

குறிப்புரை :

``நீ`` என்பதொழிய, `புகலோகம்` என்பது முதல், `புண்ணியங்கள்` என்பது காறும் உள்ள அனைத்தையும் முதலிற் கூட்டுக. புக - புகுவதற்கு. லோகம் உண்டு என்று - வேறு உலகம் உண்டு என்று நினைத்து. `புவலோகம்` என்றது, `மேலுலகம்` என்னும் அளவாய் நின்றது. புவலோக நெறி படைத்த - மேலுலகத்தை அடைவிக்கும் நெறியானே எய்திய. `புண்ணியங்களால்` என உருபு விரித்து, அதனை, ``சூழ`` என்பதனோடு முடிக்க. புண்ணியங்களை எய்தினோர் அடியவர்கள். அகலோகம் - இவ்வுலகம். இத்திருப் பாட்டில் உயிரெதுகை வந்தது.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 7

களகமணி மாடம் சூளிகைசூழ்
மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார்
போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை
ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே
சேர்ந்தனையே.

பொழிப்புரை :

வெண்சாந்து பூசப்பட்ட அழகிய மேல்மாடமும், மேல்மாடத்தின் முகப்பும் சூழ்ந்துள்ள பேரில்லங்களின் மேல் நிலத் தில், கூந்தல் வந்து படிந்திருக்கும் பிறை போன்ற நெற்றியை உடைய வராகிய, ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த மகளிர் உன்னைப் போற்றிப் பாட, நல்ல பிரகாசமுடைய இரத்தினங்கள் அவ்விடத்தில் கவியும் இருளைப்போக்கும் தெளிந்த ஒளியை உடைய, தில்லைப் பதிக்கண் உள்ள திருச்சிற்றம்பலத்தையே நீ வந்து சேர்ந்துள்ளாய்.

குறிப்புரை :

களக மணி - நீல மணி. மாடம் - மேல்நிலம். சூளிகை - மேல்மாடத்தின் முகப்பு `மாடத்தைச் சூளிகை சூழ்ந்த மாளிகை` என்க. அளக நுதல் - கூந்தலை உடைய நெற்றி. ``மதி`` என்றது, பிறையை. `மதிநுதலாராகிய ஆயிழையார்` என்க. போற்றிசைப்ப (உன்னைத்) துதிக்க. தெளி - விளக்கம்.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 8

பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும்
பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத்
தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர்
நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின்
ஆடரங்கே.

பொழிப்புரை :

பாடகம், பாத கிண்கிணி, சிலம்பு என்று தம் கால் களில் அணிந்த அணிகலன்கள் அசைந்து ஒலிக்க நாள்தோறும் கதை தழுவிவரும் கூத்தினை நிகழ்த்துபவராய் வளையல்களை அணிந்த கைகளை உடைய அம்மகளிர் உன்னை வழிபட்டுப் புகழ, இப்பழைய உலகில் பொன்னால் மேற்கூரை வேயப்பட்டு அமைந்துள்ள பொன்னம்பலம் உனக்கு நடன சபையாக அமைந்துள்ளது.

குறிப்புரை :

`பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்தொலிப்ப, நாள்தோறும் நாடகத்தின் கூத்தை நவிற்றும் அவராகிய சூடகக்கை நல்லார் தொழுது ஏத்தத் தொல்லுலகில் ஆடு நின் அரங்கு ஆடகத்தால் அமைந்த அம்பலம்` எனக்கொண்டு கூட்டி உரைக்க.`பாடகம், நூபுரம், சிலம்பு` என்பன, மகளிரது காலில் அணியும் அணிவகைகள். பேர்ந்து - அசைந்து. சூடகம் - கைவளை. நாடகம் - கதை தழுவிய கூத்து. `அது போலும் கூத்து` என்க. அஃதாவது, கதைப் பொருளைக் கைகாட்டி ஆடும் கூத்து. இன் கூத்து - இனிய கூத்து. நவிற்றுதல் - செய்தல். மேய்ந்து - வேயப்பட்டு.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 9

உருவத் தெரியுருவாய் ஊழிதோ
றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும்
பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு
மாளிகைசூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்க
மாயிற்றே.

பொழிப்புரை :

பல ஊழிக்காலங்கள் உன் புகழைப்போற்றி வழிபட்டுப் பிரமனும், திருமாலும் உன்னை வணங்கிப் புகழ, சூரியனை ஒப்ப ஒளிமிக்கு விளங்குகின்ற மாளிகைகளால் சூழப்பட்டு, ஒலியை உண்டாக்குகின்ற சிற்றம்பலமே அழகிய தீப்பிழம்பு போன்ற வடிவுடன் நீ கூத்து நிகழ்த்தும் அரங்கமாக அமைந்துவிட்டது.

குறிப்புரை :

உருவத்து - அழகையுடைய. `எரியுருவாய் ஆடு அரங்கம்` எனவும், `ஏத்த ஆடு அரங்கம்` எனவும் இயையும். `அரங்கம் மாளிகை சூழ்ந்து அரவிக்கும் அம்பலமே ஆயிற்று` என்க. இரவி - சூரியன். அரவிக்கும் - ஒலியை உண்டாக்குகின்ற.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 10

சேடர் உறைதில்லைச் சிற்றம்
பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து
பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங்
கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை
பற்றுவரே. 

பொழிப்புரை :

சான்றோர்கள் வசிக்கின்ற தில்லைத் திருத்தலத் திலுள்ள சிற்றம்பலத்தை உடையவனாகிய கூத்தப்பிரானுடைய ஆனந்தக்கூத்தின் சிறப்பினை அறிந்து பூந்துருத்திக்காட நம்பி இயற் றிய தமிழ்மாலையில் உள்ள பாடல் இவை பத்தினையும் அவற்றின் கருத்தை அறிந்து பாடும் தொழிலில் வல்லவர்கள் அடையத்தக்க இடமாகிய வீடுபேற்றினை அடைவர்.

குறிப்புரை :

சேடர் - தொண்டர். `பூந்துருத்திக் காடன் சிற்றம்பலத் தான்றன் ஆடல் அதிசயத்தை அறிந்து கருத்து அறிந்து பாடும் தமிழ் மாலையாகி இவை பத்தும் வல்லார், பற்றும் நிலை பற்றுவர்` எனக் கொண்டு கூட்டுக. கருத்து - பாடக் கொள்ளும் பொருள். பற்றும் நிலை - அடையத்தக்க நிலை; வீடு. பற்றுவர் - அடைவர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே. 

பொழிப்புரை :

மின்னலைப் போல ஒளிவீசும் மகளிருடைய வடிவங்கள் மாடங்களின் மேல்நிலையில் விளங்கவும், வெண்கொடி கள் அம்மாளிகைகளைச் சுற்றிலும் பறக்கவும் அமைந்த அழகான தில்லை என்ற திருத்தலத்தில், பொன்னாலாகிய மலை ஒன்று வந்து அவ்வூரில் தங்கிவிட்டது போலும் என்று கருதுமாறு, தென்னா என்று இசைஒலியை எழுப்பி வண்டுகள் பாடும் அவ்வூரின் பொன்னம்பலத் தில் எழுந்தருளியிருக்கும், என் கிட்டுதற்கரிய அமுதமாகிய எங்கள் தலைவனை அடியேன் என்று கிட்டப்பெறுவேன்?

குறிப்புரை :

மின்னார் - பெண்கள். மேல் - மாடங்களின் மேல் நிலையில். `விளங்க` என்பது, ``சூழ`` என்பதனோடு முடிய, ``சூழ`` என்பது, ``நின்றது`` என்பதனோடு முடியும். பொன்னார் குன்றம், பொன்னம்பலத்திற்கு உவமை. ``என்னா`` என்பதற்கு, `மருளும்` என்று ஒருசொல் வருவித்து முடித்து, அதனை,`மருளும் அம்பலம்` என இயைத்து முடிக்க. ``தென்னா`` என்பது ஒலிக்குறிப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்றுகொலோ.

பொழிப்புரை :

என்றும் அணையாத முத்தீக்களையும், ஐவகை வேள்விகளையும், ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் முறையே வளர்த்து, நிகழ்த்தி, கற்று, ஓதும் அந்தணாளராய், பசுக் களின் நெய், பால், தயிர் இவற்றை ஆகுதிகளாகச் சொரிந்து வேள்வி களை நிகழ்த்தி மேம்பட்ட மூவாயிரவர் வேதியரோடு, முன் ஒரு காலத்துப் பதஞ்சலி முனிவர் உன் கூத்தினைக்காண நாட்டிய அரங் காகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானே! உன் திருக் கூத்தினைக் காணும் வாய்ப்பு அடியேனுக்கு என்று கிட்டுமோ?

குறிப்புரை :

ஓவா - ஒழியாத. முத் தீ, `ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி` என்பன. அஞ்சு வேள்வி `பிரமயாகம், தேவயாகம், பிதிர்யாகம், மானுடயாகம், பூதயாகம்` என்பன. ஆறங்கம் `சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்` என்பன. இவை வேதத்தின் பொருளையும், ஒழுக்கத்தையும் அறிதற்குக் கருவியாகும். ஆவேபடுப்பார் - பசுக்களின் நெய், பால், தயிர்களை மிகுதியாகச் சொரிவர். அரங்கு - அம்பலம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

முத்தீ யாளர் நான்ம றையர்
மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ

பொழிப்புரை :

முத்தீ ஓம்பி நான்மறை ஓதும் மூவாயிரவராய் உன் திருவுள்ளக் குறிப்பிற்கு ஏற்ப வாழும் தன்மை உடையவர்கள் ஓதிய நான்கு வேதங்களையும் தெத்தே என்று இசை எழுப்பி வண்டுகள் பாடும் அழகிய தில்லையின் சிற்றம்பலத்தில் உள்ள தலைவனே! உன்னுடைய ஞான ஆனந்தத் திருக்கூத்தினைத் தரிசிக்க அடியேன் உன்னிடம் வந்து சேருவது எந்த நாளோ!

குறிப்புரை :

`இரணிய வன்மன்` என்னும் அரசன், வியாக்கிரபாத முனிவருடைய கட்டளையின்படியே, `கங்கை, யமுனை` என்னும் இருநதிகளின் இடையேயிருந்த முனிவர் மூவாயிரவரைத் தில்லைக்கு அழைத்து வந்து எண்ணிக்காட்டிய பொழுது, ஒருவர் குறைய அவன் திகைத்து வருந்துதலும், தில்லைக் கூத்தப் பெருமான், `இவர்கள் எம்மையொப்பார்கள்; நாமும் அவர்களை யொப்போம்; நாம் அவர் களில் ஒருவரானோம்; வருந்தற்க` என்று அருளிச்செய்தார் என்பது தில்லை மூவாயிரவரைப் பற்றிய வரலாறு ஆதலின், அவரை, `நின் னோடு ஒத்தே வாழும் தன்மையாளர்` என்றார். இவ்வரலாற்றைக் கோயிற் புராணத்தால் அறிக. `தில்லைவாழந்தணர் ஓதுகின்ற நான்கு வேதங்களை வண்டுகள் பாடும்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

மானைப் புரையும் மடமென் னோக்கி
மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
அம்புலி சூடும்அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவ தென்றுகொலோ.

பொழிப்புரை :

மானின் பார்வையை ஒத்த பார்வையை உடைய ளாய் மடம் என்ற பண்பினை உடைய பார்வதியோடு, பஞ்சகவ்விய அபிடேகம் செய்யப்படும் தலையின் மீது ஒரு பிறையைச் சூடும் சிவபெருமானாய்த் தேன் போலவும், பால் போலவும் இனியனாய்த் தில்லைத் திருத்தலத்தில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத் தில் உள்ள தலைவனாய், ஞானக்கொழுந்தாய் உள்ள எம்பெருமானை அடியேன் கூடும் நாள் எந்நாளோ?

குறிப்புரை :

ஆன் அஞ்சு - பஞ்ச கௌவியம். ``ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்` என்ற அப்பர் திருமொழியைக் காண்க. `ஆனைஞ்சு` எனவும் பாடம் ஓதுவர். அம்புலி - சந்திரன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

களிவான் உலகிற் கங்கை நங்கை
காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ.

பொழிப்புரை :

`களித்து வாழ்தற்குரிய வானுலகிற்கு உரிய கங்கை என்ற பெண்ணின் கணவனே! எனக்கு அருள் செய்வாயாக!` என்று அழகை உடைய திருமால் உன் முன்னே வரம் வேண்டிப் படுத்துக் கிடக்கவும் அவனுக்கு அருளாது உன் அடியவர்களுக்கே அருள் செய்யும் தெளிவு பொருந்திய அமுதமே! தில்லைத் திருப்பதியில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத்துள் ஒளிவீசும் மேம் பட்ட ஒளியே! உன்னை நாய்போன்ற கடையேனாகிய நான் என்று வந்து அடைவேன்?

குறிப்புரை :

களி வான் உலகு - களித்து வாழ்தற்குரிய வானுலகம். `அங்குள்ள கங்கை` என்க. `பகீரதன் பொருட்டு வானுலகத்திலிருந்து வந்த கங்கையைச் சிவபெருமான் சடையில் தாங்கினார்` என்பது வரலாறு. ஒளிமால் - அழகை யுடைய திருமால். முன்னே - உனது திருமுன்பில். வரம் கிடக்க - வரம்வேண்டிப் பாடு கிடக்க. `அவனுக்கு அருளாமல் அடியார்க்கு அருளுகின்றாய்` என்றபடி. தில்லைக் கூத்தப்பெருமான் திருமுன்பில் திருமால் கிடந்த கோலத்தில் இருத்தல் காண்க. ``வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே`` என்றார் திருக்கோவையாரினும் (தி.8 கோவை பா.86). தெளிவுஆர் - தெளிவு பொருந்திய. உறுவது - அடைவது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
காண்பதும் என்றுகொலோ.

பொழிப்புரை :

உலகிலுள்ள மக்களெல்லாம் தன்னை வந்து வணங்கவும், பதஞ்சலி முனிவருக்காகத் திருக்கூத்து ஆடுதலை விரும்பி மேற்கொண்டவனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதி பாகனாய், மேம்பட்ட வேதியர் வணங்கச் சிறப்பால் மேம் பட்ட தில்லையம்பதியின் செம்பொன் அரங்கில் திருக்கூத்து நிகழ்த்து கின்ற நீலகண்டனாகிய எம் தலைவனை எந்நாள் காண்பேனோ?

குறிப்புரை :

``முழுதும்`` என்பது, `எல்லாரும்` எனப்பொருள் தந்துநின்றது. பதஞ்சலிக்கு - பதஞ்சலி முனிவர் பொருட்டாக. ஆட்டு உகந்தான் - ஆடுதலை விரும்பினான். `இறைவனது திருநடனத்தைத் தில்லைக்கண்ணே காண முதற்கண் தவம் செய்திருந்தவர் வியாக்கிர பாத முனிவர்` என்பதும், பின்பு பதஞ்சலி முனிவர் அவருடன் வந்து சேர்ந்தபின்பே இருவருக்குமாக இறைவன் தில்லையில் திருநடனம் காட்டினான் என்பதும் கோயிற்புராண வரலாறு. ``பதஞ்சலிக் கருளிய பரமநாடக` என்று அருளிச்செய்தார் திருவாசகத்தும் (தி.8 கீர்த்தி-138) கண்டன் - தலைவன். `கண்டு அன்னாரை` எனப் பிரித்து உரைத்தலுமாம்; இஃது ஒருமைப் பன்மை மயக்கம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ. 

பொழிப்புரை :

இலைவடிவமாக அமைந்த ஒளி பொருந்திய வேலை ஏந்திய இலங்கை மன்னனுடைய இருபது தோள்களும் நொறுங்குமாறு செய்து, கயிலைமலையை எடுத்த அவனுக்குச் சந்திரகாசம் என்னும் வாளோடு முக்கோடி வாழ்நாளும் கொடுத் தவனாய், வில்லினால் முப்புரங்களையும் எய்த வில்லாளனாய், செம்பொன்மயமான சிற்றம்பலத்தில் மான்கன்றை ஏந்திய கையனாய் உள்ள பெருமானை அடியேன் எந்நாள் காண்பேன்?

குறிப்புரை :

``மலைதான் எடுத்த`` என்பதை முதலிற் கூட்டுக. இற - முரிய. `இறச் செய்து` என ஒருசொல் வருவிக்க. மறக்கருணையின்பின் அறக்கருணை செய்தமையைக்குறித்தலின், மற்று, வினைமாற்றின் கண் வந்தது. நாள் - நீண்ட வாழ்நாள். சிவபெருமான் இராவணனுக்கு வாளொடு நாள்கொடுத்தமையை,
``எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே``
என்னும் சுந்தரர் திருமொழியானும் (தி.7 ப.55 பா.9) அறிக. கலையார் மறிபொற் கையினான் என்பது, ஒருபெயர்த் தன்மைத்தாய் நின்று `அம்பலத்து` என்பதற்கு முடிபாயிற்று. கலை - ஆண்மான்; மறி - கன்று (குட்டி) `கலை மறி ஆர் கையினான்` என மாற்றிப் பொருள் கொள்க. பொன் - அழகு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே.

பொழிப்புரை :

கொடுங்கோலினை உடைய அரசனான பாண்டிய னுடைய நாட்டினையும், இலங்கையையும் கைப்பற்றிய ஆற்றலை உடைய செங்கோலை உடைய சோழ மரபினனாய், உறையூரைக் கோநகராகக்கொண்டு சிபி மரபினனாய் ஆண்ட பராந்தகச்சோழன் பொன்வேய்ந்த, அழகிய திரண்ட வளையல்களை உடைய மகளிர் பாடியும், ஆடியும் நற்பணி செய்யும் அழகிய தில்லை அம்பலத்துள் எம்தலைவனாய், எம்மை அடக்கி ஆள்பவனாய் உள்ள எம் இறைவனை என்று அடையப்போகிறேனோ?

குறிப்புரை :

தென்னன் - பாண்டியன். `இவரால் குறிக்கப்படும் சோழன் காலத்தில் இருந்த பாண்டியன் கொடுங்கோலனாய் இருந்தான்` என்பதை, `வெங்கோல் வேந்தன்` என்றதனால் அறிகின்றோம். ஈழம் - ஈழநாடு; இலங்கை. கோழி - உறையூர். செம்பியன் - சோழன். அணிந்த - வேய்ந்த. `அணிந்த அம்பலம்` என இயையும். `தூயசெம் பொன்னினால் - எழுதி மேய்ந்த சிற்றம்பலம்` என அப்பர் அருளிச்செய்தமையால் (தி.5 ப.2 பா.8) அவர் காலத்திற்கு முன்பே தில்லைச் சிற்றம்பலம் பொன் வேயப்பட்டுப் பொன்னம்பலமாய் விளங்கினமை நன்கறியப்படும். இவ்வாறு இதனைப் பொன்வேய்ந்தவன் `இரணியவன்மச் சக்கரவர்த்தி` எனவும், `இவன் சூரியன் மகனாகிய மனுவின் மகன்` எனவும் கோயிற் புராணம் கூறும். `சோழ மன்னர் மனுவின் வழியினரே` என்பது மரபு. இம்மரபு பற்றியே பிற்காலங்களிலும் சோழர் குலத்தில் தோன்றிய மன்னர் சிலர் சிற்றம்பலத்தையும், பேரம்பலத்தையும் பொன்வேயும் திருப்பணியை மேற்கொண்டனர். இங்கு இவ்வாசிரியரால் குறிக்கப்பட்ட சோழமன்னன் `முதற் பராந்தகன்` எனக் கருதுவர் ஆராய்ச்சியாளர்.
இரணியவன்மன் கௌட தேசத்து அரசன் மகனாயினும் உடற் குற்றத்தால் அரசனாகத் தகுதியற்றவனாய் யாத்திரை செய்து வந்த பொழுது தில்லைப் பெருமானது திருவருளால் அவ்விடத்திலே உடற் குற்றம் நீங்கப் பெற்ற காரணத்தால் வியாக்கிரபாத முனிவர், `இவனே இந்நாட்டிற்கு அரசனாவான்; கௌட தேசத்தை அவன் தம்பியர் ஆள்க` என்று சொல்லித் தில்லைப் பதியிலே தில்லை மூவாயிரவரும் பிறரும் சூழ அவனுக்கு முடிசூட்டி, புலியூர் அரசனாகிய இவனுக்குப் புலிக்கொடியே உரியது என்று கொடுத்தார் என்பதும் அப்புராண வரலாறு. இதனால் பிற்காலச்சோழர்கள் தில்லையில் தில்லை வாழந்தணர் முடிசூட்டப்பெறும் வழக்கத்தையும் உடையராய் இருந்தனர். இவ்வாசிரியரும் அம்மன்னருள் ஒருவராதல் இங்கு நினைக்கத்தக்கது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

நெடியா னோடு நான்மு கன்னும்
வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ. 

பொழிப்புரை :

ஓங்கி உலகளந்த திருமாலோடு பிரமனும், தேவர்களும் சந்நிதியில் நெருங்கி நிற்றலான், அவர்கள் முடிகள் ஒன்றோடொன்று மோதுதலான், சிதறிய பெரிய மணிகளின் குவியலை அடியவர்கள் திருவலகைக்கொண்டு திரட்டி வைக்கும் அழகிய தில்லை அம்பலத்துள்ள நறுமணம் கமழும் கொன்றைப் பூமாலையானாகிய சிவபெருமானை அடியேன் எந்நாள் காண்பேனோ?

குறிப்புரை :

நெடியான் - திருமால். முடியால் - ஒருவர் மகுடத்தோடு. முடிகள் மோதி - மற்றவர் மகுடங்கள் தாக்குதலால். உக்க - சிந்திய. முழுமணி - குற்றமற்ற இரத்தினம். கடி - நறுமணம். இத்திருப்பாடற் பொருளோடு,
வந்திறை யடியில் தாழும் வானவர் மகுட கோடிப்
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்.
என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளை (18) ஒப்புநோக்கிக் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே. 

பொழிப்புரை :

சிறப்பான் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள செம் பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய கண்டராதித்தன் திருவரு ளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப் பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்தினின்றும் திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

சீரால் மல்கு - புகழால் உலகெங்கும் நிறைந்த, ``தஞ்சையர் கோன்`` என்றதனால், இவர் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டிருந்தமை பெறப்படும். ``கோழிவேந்தன்`` என்றது மரபு குறித்ததாய், `சோழ மன்னன்` என்னும் அளவாய் நின்றது. `கோழி வேந்தன், தஞ்சையர் கோன் கண்டராதித்தன் அம்பலத்தாடி தன்னைக் கலந்த அருந்தமிழ் மாலை` என்க. ஆரா இன்சொல் - தெவிட்டாத இனிமையை யுடைய சொல்லையுடைய. பேரா உலகு - சென்றடைந் தோர் நீங்காது நிலைபெறும் உலகம்; வீட்டுலகம்.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 1

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே
ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங்
கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும்
எனதுபணி
நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

தில்லையில் திருக்கூத்து நிகழ்த்தும் எம் பெருமானே! அடிமைகளை விரும்புபவர்கள், அவ்வடிமைகள் இழிவான செயல்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர். கசப்புச் சுவையை உடையவாயிருப்பினும் வாழைக்கச்சல் களையும், வேப்பங்கொழுந்தினையும் கறி சமைத்தற்குப் பயன்படுத்து வார்கள். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு எந்தப்பற்றுக்கோடும் இல்லை என்பதனை நீ அறிந்தும் என்னுடைய தொண்டினை விரும்பா திருப்பதன் காரணம் புலப்படவில்லை.

குறிப்புரை :

துச்சான - இழிவான செயல்களை. ஆள் உகப்பார் - தமக்கு அடிமையாய் உள்ளவரை விரும்புகின்ற தலைவர். `கைத்தா லும்` என்பது, `கைச்சாலும்` எனப் போலியாயிற்று. கைத்தல் - கசத்தல். கதலி - வாழை; இஃது ஆகுபெயராய் அதன் காயைக் குறித்தது. ``இலை வேம்பு`` என்றதனை, `வேம்பு இலை` என மாற்றுக. `வாழை யின் பிஞ்சுக் காயும், வேப்பிலையும் கசப்பனவாயினும் அவற்றையும் கறியாகக் கொள்வர் மக்கள்` என்னும் இவ்வுவமையை முன்னர் வைத்து உரைக்க. எச்சார்வும் - யாதொரு துணையும். `எனக்கு இல்லாமை` என உரைக்க. நச்சாய் - நீ விரும்பவில்லை. `இது பொருந் துவதோ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. காண், முன்னிலை யசை.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 2

தம்பானை சாய்ப்பற்றார் என்னும்
முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே
அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன்
தொழில்இறையும்
நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஒருவரும் தம்முடைய பானையைச் சாய்த்து நீரைப் பிடிக்க மாட்டார்கள் என்னும் பழமொழியும் அடியேனைப் போன்றவர் களுக்குப் பொருந்தாதிருத்தலை என்னைப்பொறுத்த வரையில் தெரிந்து கொண்டுவிட்டேன். புதியராக வந்த அடியவர்களின் தொண் டினை விரும்பும் நீ வழிவழியாக வந்த அடியேனுடைய தொண் டினைச் சிறிதும் விரும்பாதிருக்கிறாயே.

குறிப்புரை :

`சாய` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. தம் பானை சாயப் பற்றார் - ஒருவரும் தங்கள் பானையைக் கீழே விழுமாறு பிடிக்கமாட்டார்கள்; அஃதாவது `கருத்தின்றிப் புறக்கணிப்பாகக் கையாளார்` என்பதாம்.
முதுசொல் - பழமொழி. `இறைவன் தம்மைப் புறக்கணித்து விட்டான்` என்னும் கருத்தினால் `அம்முதுசொல் எம் போல்வார்க்கு இல்லாமை என்னளவிலே அறிந்தொழிந்தேன்` என்றார். ``சொல்லும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``அறிந்தொழிந் தேன்`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
வம்பு ஆனார் பணி உகத்தி - புதியராய் வந்து அடியராயி னாரது தொண்டினையும் விரும்புகின்ற நீ `பணியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி அடியேன் தொழில் இறையும் நம்பாய் - வழியடியேனாகிய எனது தொண்டினைச் சிறிதும் விரும்பவில்லை.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 3

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என்
றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான்
ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள்
உரையாடாள்
நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பான், நீர் நிறைந்த குளத்தின் அருகிலே பள்ளத்தில் உள்ள சிறுமரத்துக்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாயாதோ என்று சொல்லப்படும் பழ மொழிக்கு இணங்க அவன் வரும் திசைகளைப் பார்த்து மனம் வருந்திச் `சிவபெருமானே! அடியேனுக்கு அருள் செய்ய வாரா திருத்தல் முறையோ!` என்று முறையிட்டாலும், அந்த எம்பெருமான் என்பக்கம் வர உள்ளம் கொள்வானல்லன். அடியேனை அடிமையாக உடைய உமாதேவியும் எம்பெருமானை அடியேன் கண்முன் வருமாறு பரிந்துரை கூறுகின்றாள் அல்லள். அவனைக்காண ஆசைப்படும் அடியேன் யாது செய்வேன்?

குறிப்புரை :

`நிறைகுளம் கீழ்க்கொம்பு பொசியாதோ` என மாற்றி, `கொம்பிற்கு` என உருபு விரிக்க. `ஏரி நிரம்பினால் அடைகரை பொசியும்` என்பது பழமொழி. பொசிதல் - கசிந்து ஊறுதல். `ஏரி நிறைந்தபொழுது மதகின் பாய்ச்சலால் வளரும் பயிர்களே யன்றி, அடை கரையில் முளைத்துள்ள செடிகளும் ஊற்றுப் பெற்று வளரும்` என்பது இப்பழமொழியின் பொருள். `போல` என்றதன்பின், ``என் திறத்தும், நசையானேன்`` என்பவற்றை முறையே கூட்டுக. ``என் திறத்தும் நசையானேன்`` என்றது, என்னளவிலும் நினைந்து சிவ பெருமான் அருள் வழங்குவான் என்று கருதி, அவனிடத்து விருப்ப முடையவனாயினேன். இதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. திசைநோக்கி - அவன் வரும் திசையைப் பார்த்து. பேழ்கணித்து - மனம் வருந்தி; `ஆகாயத்தை நோக்கி` என்றவாறு. சிவபெருமான் ஓ எனினும் - சிவபெருமானே முறையோ என்று முறையிட்டாலும். இசையான் - (என்னை ஆளாக உடையானாகிய அவன்) வர இணங்கவில்லை. `எனை உடையாளும்` என உம்மை விரித்து, ` என்னை ஆளாக உடையாளாகிய உமையம்மையும் எனக்கு முன்வந் தருளுமாறு அவனுக்குச் சொல்லவில்லை` என உரைக்க. `இனி யான் என்செய்வேன்` என்பது குறிப்பெச்சம். ``நம்பானே`` என்றதில் ஏகாரம் ஈற்றசை.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 4

ஆயாத சமயங்கள் அவரவர்கண்
முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற
அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும்
என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஆராய்ச்சியில்லாத புறச்சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு முன்னே அடியேனை மனக்கவலையும் உடற்பிணியும் வருத்துமாறு அடியேன் இருக்கின்ற காரணத்தால், `இந்த அடியவனைப் பேய் என்று கருதி இவனுடைய ஆண்டானும் இகழ்ந்து புறக்கணித்து விட்டான்` என்று நாய் போன்ற அடியேனை அவர்கள் எள்ளி உரைக்குமாறு செய்துவிட்டாய்.

குறிப்புரை :

`என்னை நோயோடு பிணி நலிய, (நான் ஏதும் செயலின்றி) இருக்கின்ற அதனாலே, நாயேனை ஆயாத சமயங்கள் அவரவர் முன்பு என்பித்தாய்` என, கூட்டியுரைக்க. ஆயாத சமயங்கள் - உண்மையை ஓர்ந்துணரமாட்டாது மயங்கி உரைக்கின்ற சமயங்கள். ``ஆயாதன சமயம்பல`` எனத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்தமை காண்க. (தி.1 ப.11 பா.5) `சமயங்களை யுடைய அவரவர்` என்க. நோய் - மனக்கவலை. பிணி - உடற்பிணி. நலிய - வருத்த. `பேயாக` என்பது ஈறு குறைந்தது. `பேய்போல அலையும்படி` என்பது பொருள். தொழும்பன் - அடியவன். தம்பிரான் - தமக்குத் தலைவன். ``தாம்`` என்றது, இவர்போலும் அடியவர் பிறரையும் உளப்படுத்தது. `தம் பிரான் இகழும்` என்றல், `இல்லாதவனை உளனாகக் கருதியும், தன்னைக் காக்கமாட்டாதவனை மாட்டுவான் எனக் கருதியும் அல்லல் உறுகின்றான்` என்னும் இருவகைக் கருத்தையும் தோற்றுவிப்பது. `என்போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே யாகில்` என்று அருளினார் திருநாவுக்கரசு நாயனாரும் (தி.4 ப.1 பா.9). ``என்பித்தாய்`` என்பது, `என்று பொது மக்களால் இகழ் வித்தாய்` எனப் பொருள்தந்து, `நாயேனை` என்னும் இரண்டாவதற்கும், ``முன்பு`` என்பதற்கும் முடிபாயிற்று. `ஏத மேபல பேச நீஎனை ஏதிலார்முனம் என்செய்தாய்` என்றார் திருவாசகத்தும். (தி.8 திருக்கழுக். 6)

பண் : புறநீர்மை

பாடல் எண் : 5

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! நின்ற இடத்தும் அமர்ந்த இடத்தும் கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த விடத்துத் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கின்றாய் அல்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?

குறிப்புரை :

``நின்று ....... தொழும்பனேன்`` என்றதற்கு, `நின்ற விடத்தும், இருந்தவிடத்தும், கிடந்தவிடத்தும் நினைந்து, எழுந்த விடத்துத் தொழுகின்ற தொழும்பனேன்` என உரைக்க. நிற்றல் முதலிய மூன்றும் செயலற்றிருக்கும் நிலையாதலின், அக்காலங்களில் நினைத லும், எழுதல் கிளர்ந்தெழுந்து செயற்படும் நிலையாகலின், அக்காலத் தில் தொழுதலும் கூடுவவாயின. `இரு நிலையிலும் உன்னை மறவா திருக்கின்ற யான், ஒரோவொருகால் எக்காரணத்தாலேனும் மறந்திருப் பினும் இருக்கவொட்டாய்` என்க.
இதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. ஒன்றி - உன்னைப் பொருந்தி; என்றது, பிறவற்றை மறந்து என்றவாறு. இது, `நினையாது` என்பதில், `நினைதல்` வினையோடு முடிந்தது. ``வரவு`` என்றதில், ஒடு உருபு விரித்து, `வரவொடு நில்லாயாய்; ஆப்போல் கதறுவித்தி` என மாற்றி உரைக்க. கன்று பிரி - கன்றினால் பிரியப்பட்ட. ``கற்றா`` என்றது, வாளா பெயராய் நின்றது.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 6

படுமதமும் இடவயிறும் உடையகளி
றுடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக்
கோத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு
வையிடுதல்
நடுவிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஒழுகு கின்ற மத நீரையும் பானை போன்ற வயிற்றினையும் உடைய யானை முகனாகிய விநாயகனை மகனாக உடைய தலைவனே! உன் திரு வருளை உணர்தற்பொருட்டு அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தாய். அகத்தியருக்கு மேம்பட்ட நிலையை அருளி, அடியே னுக்கு உலகியலை அருளிய இச்செயல் இரண்டு எருதுகள் உள்ள இடத்திலே ஓர் எருதுக்குப் புல்லை வழங்கி மற்றொன்றினுக்கு வைக் கோலை வழங்குவதனை ஒக்கும் செயலாகும். இஃது உனக்கு எல்லோ ரிடமும் நடுவு நிலையோடு நடந்துகொள்ளும் பண்பு ஆகுமா?

குறிப்புரை :

படுமதம் - மிக்க மதம். இடவயிறு - இடம் பெரிதாய வயிறு. இவற்றை யுடைய களிறு, மூத்த பிள்ளையார். `அயிராவணம்` என்பாரும் உளர். ``பிரான்`` என்றது, `பிரானாகிய நீ` என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழுவமைதி. அடி அறிய - உனது திருவருளை உணர்தற்பொருட்டு. `அடிஅறிய ஓத்து உணர்த்துவது அகத்தியனுக்கு அன்றே` எனவும், `இது நடுவோ` எனவும் மாற்றுக. ஓத்து - ஆகமப் பொருள். சிவபெருமான் அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தார் என்பதும் வரலாறு. `அகத்தியனுக்கு அந் நிலையை அருளி, அடியேனுக்கு உலகியலை அருளினாய்; இது, இரண்டெருதுகளை உடைய ஒருவன். ஒன்றற்குப் புல் இட்டு, மற்றொன்றற்கு வைக்கோல் இடுதல் போல்வது` என்பதாம்.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 7

மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு
வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான்
மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து
விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் வரையிலும் மனிதர்களோடு தேவர்கள் வரையிலும் எல்லோருக்கும் நீ பற்றுக்கோடு ஆவாய். அவ்வாறாகவும் அடியேனுக்கு மாத்திரம் பற்றுக்கோடு ஆகாமல் அடியேனைப் புறக்கணித்தலால் அடியேன் மிகவும் கலங்கி, `பெருமை பொருந்திய தலைவனே` என்று மேல்நோக்கி மனம் சுழன்று அழைத் தாலும் நீ அடியேனை நெருங்கி நிற்கின்றாய் அல்லை; இதன் காரணம் தான் யாதோ?

குறிப்புரை :

ஒடுக்கள், எண்ணிடைச்சொல். `மண்ணின்கண் அளவும் (பொருந்திய) மனிதர்க்கும், விண்ணின்கண் அளவும் வான வர்க்கும்` என நிரல்நிரை வந்தது. கண் - களைகண், பற்றுக்கோடு. `எனக்கு அவ்வாறு ஆகாதொழிந்தமையால்` என்க. `அண்ணல்` என்பது ணகர ஈறாய்த் திரிந்து விளியேற்பது பிற்கால வழக்கு. அண்ணல் - பெருமை யுடையவன்; தலைவன். அண்ணாந்து - ஆகாயத்தை நோக்கி நின்று. அலமந்து - வருந்தி.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 8

வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து
நெஞ்சுருகி
வீடாம்செய் குற்றேவல் எற்றேமற்
றிதுபொய்யிற்
கூடாமே கைவந்து குறுகுமா
றியானுன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! வாட்ட முற்று, வாயின்கண் உள்ள நாவினால் அடைவுகேடாகப் பல கூறி, உன்னை விருப்புற்று நினைத்து, மனம் உருகும் இதனைத் தவிர, வீடு பேறு அடைதலுக்கு ஏதுவாகிய சிறுபணிவிடை வேறுயாது உளது? இக்குற்றேவல் பொய்யின்கண் பொருந்திப் பழுதாகாவாறு யான் உன்பக்கம் வந்து உன்னைக் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றுவாயாக.

குறிப்புரை :

``வாடா`` என்பது, `செய்யா` என்னும் வினையெச்சம். `வாடி, பிதற்றி, நினைந்து, உருகிச் செய் குற்றேவல்` என்க. வாய் நா - வாயின்கண் உள் நாவால் `செய் வீடாம் குற்றேவல்` என மாறுக. வீட்டிற்கு ஏதுவாவதனை, ``வீடாம்`` என்றார். குற்றேவல் - சிறு பணி விடை. எற்று - என்ன பயனை உடையது. `உன்னை அடைவதையே பயனாக உடையது` என்பது குறிப்பு. இதனால், இவர் உலகப் பயன் கருதி இறைவனுக்குத் தொண்டு செய்யாமை பெறப்பட்டது. இது பொய்யிற் கூடாமே - இக் குற்றேவல் பொய்யின்கண் பொருந்தாத வாறு; `பழுதாகாதபடி` என்றவாறு. `கூடாமே நாடாய்` என இயையும். ``கைவந்து`` என்றதில், கை இடைச்சொல். `யான் வந்து உன்னைக் குறுகுமாறு நாடாய்` என மாற்றிக் கூட்டுக. நாடாய் - நினைந்தருள்.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 9

வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய
மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத்
தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன்
தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! வழிபடுதலைச் செய்யாது திருமாலும் பிரமனும் விரும்பிக் காண் பதற்கு அரிய உன் திருமேனியைக் கைகளை உச்சிமேல் குவித்துச் சேர்த்துத் திருவடித்துணைக்கண் நிறைவு பெறும்படி தொழுதாலும் நீ அடியேனை அடிமையாக உடைய செயலும் உடையையோ? அடி யேன் உன் திருவடிகளைச் சேரும் நாள் என்று வருமோ?

குறிப்புரை :

``வாளா`` என்றது, `வழிபடுதலைச் செய்யாது` என்னும் பொருட்டு. ``புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்` என்பது முதலாக இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையுள் (தி.5 ப.95) திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் அறிக. மாலுக்குரிய, ``வீழ்ந்து`` என்பதன்பின், அயனுக்குரிய, `பறந்து` என்பது வருவிக்க. ``மாண்பு`` என்றது அதனையுடைய திருமேனியை உணர்த்திற்று. கூத்தப் பெருமான் திருமேனியும் மாலயன் பொருட்டுத் தோன்றிய வடிவின் வேறன்றாகலின் `மால் அயன் காண்பரிய மாண்பினதாகிய இதனை` என்றார். தோளாரத் தொழுதல், கைகளை உச்சிமேற் சேர்த்தித் தொழுதலாம். துணை - திருவடித்துணை. `தோளாரவும், கையாரவும் துணையை ஆரத்தொழுதாலும்` என்க. ஆள் - அடிமை. ``நீ`` என்றதன்பின், `என்னை` என்பது வருவித்து, `நீ என்னை உடையதுவும் ஆளோ` என மாற்றி உரைக்க. `உடையதுவும் ஆளோ` என்றது, ஆளாக உடையையோ என்றவாறு. `உடையை அல்லையாயின், அடியேன் உன் தாள்சேரும் நாளும் ஒன்று உண்டாகுமோ` என்க. எனவே, ``ஆளோ`` என்ற ஓகாரம் ஐயப்பொருளிலும், `ஏதோ` என்னும் ஓகாரம் இரக்கப் பொருளிலும் வந்தனவாம். இனிப் பின்னின்ற ஓகாரத்தை அசைநிலை யாகவும் ஆக்கி, `உடையாயின், அடியேன் உன் தாள் சேரும் நாள் ஏது (யாது)` என வினாப்பொருட்டாகவும் உரைக்க.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 10

பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித்
தொண்டன்எடுத்
தோவாதே அழைக்கின்றான் என்றருளின்
நன்றுமிகத்
தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ
நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத்
தடுப்பரிதே. 

பொழிப்புரை :

என் தேவனே! அழகிய புனிதத் தலமாகிய தில்லையில் திருக்கூத்து நிகழ்த்துபவனே! அடியார்களுடைய திருவடித் தொண்டன் பாட்டு வடிவமாக அமைந்த தமிழ்மாலையை எடுத்துக் கூறி விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதனைத் திருவுளம்பற்றி இப்பொழுதே அருள்செய்தால் மிக நல்லது. நாய் போன்ற இழிந்த அடியவனாகிய நான் சாகின்ற நேரத்திலாவது உன்னைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டுவதனை இனி உன்னாலும் தடுத்தல் இயலாது.

குறிப்புரை :

மூன்றாவது அடிமுதலாகத் தொடங்கி, ``தடுப்பரிது`` என்பதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. பா ஆர்ந்த - பாட்டாய்ப் பொருந்திய. `பா ஆர்ந்த மாலை` எனவும், `மாலை எடுத்து அழைக்கின்றான்` எனவும் இயையும். அருளின் - இப்பொழுதே அருள்செய்தால்; என்றது `காட்சி கொடுத்தருளினால்` என்பதாம். `மிக நன்று` என்க. `நாயடியேன் நினைக் காண்டலைச் சாவாயும் தடுப்பு உனக்கு இனி அரிது` என மாற்றிக் கூட்டுக. ``இனி`` என்றது, `யான் ஓவாதே அழைப்பதான பின்பு` என்றபடி. `இறைவன் தன்னைப் பன்னாள் அழைப்பவர்க்கு என்றாயினும் எதிர்ப்படுதல் கடன்` (தி. 4 ப.112 பா.9) ஆதலாலும், இறக்கும்பொழுதும் எதிர்ப் படாதொழியின் கூற்றுவன் வந்து எதிர்ப்படுவானாகலின், அவன் வாராதவாறு அப்பொழுது ஒருதலையாக எதிர்ப்படுதல் வேண்டு மாகலானும் இவ்வாறு கூறினார். இதனால், இறைவனது காட்சியைக் காண இவருக்கிருந்த வேட்கை மிகுதி புலனாகும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

மையல் மாதொரு கூறன் மால்விடை
யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
கண்டன் கனன் மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
யுள் ளிடங் கொண் டனவே.

பொழிப்புரை :

அழகிய நீர்வளம்உடைய வயல்கள் சூழ்ந்த தில்லைத்திருப்பதியின் பொன்னம்பலத்தில் உள்ளவனாய், தன் மாட்டுக் காமமயக்கம் கொண்ட பார்வதி பாகனாய், திருமாலாகிய காளையை இவர்பவனாய், மான்குட்டியை ஏந்திய நீண்ட கையனாய், கார்மேகத்தை ஒத்த விடக்கறை பொருந்திய கழுத்தினனாய், கனலை யும் மழுவையும் ஏந்துகின்றவனாய், நிறைந்த தீயிடைக் கூத்தாடு பவனாய் உள்ள தலைவனுடைய சிவந்தபாதங்கள் என் மனத்தின்கண் வந்துபொருந்தி அதனைத் தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன.

குறிப்புரை :

மையல் மாது - காதலை உடைய பெண்டு; உமை. `காதலுக்கு இடமாய பெண்டு` என்றும் ஆம். கார் புரையும் - மேகம் போலும். கறை - கறுப்பு. இதனுள், ``கறை, சிந்தை`` என்பவை கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
முந்தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
யார்தில்லை யம்பலவன்
புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே.

பொழிப்புரை :

நீரின்கண் பொலிவை உடைய தாமரைக் கொடிகள் ஆழமாக வேர்ஊன்றி வளர்ந்த குளங்களை உடையதாய், அந்த மிக்க நீரின்கண் உள்ள பூக்களைச் சேர்ந்து அவற்றைக் கிண்டி வண்டுகள் ஒலிக்கப்பெறுவதாய், அழகுநிறைந்த தில்லைப்பதியிலுள்ள பொன்னம்பலத்தில் உள்ளவனாய், முறையிட்டுத் தேவரும் அசுரரும் தன்னைப் புகழ்ந்து துதிக்கக் கூத்து நிகழ்த்தும் பொன்போலச் சிறந்த கூத்தப்பிரானுடைய திருவடிகளில் ஒலிக்கின்ற கிண்கிணிகள் அடியே னுடைய சிந்தையுள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

சலம் - நீரின்கண். பொன் - அழகு. தாழ்ந்து எழுந்த - ஆழ வேரூன்றி வளர்ந்த. தடம் - குளத்தின்கண். `தடமும்` என்பது பாடம் அன்று. தடம் புனல்வாய் - மிக்க நீரின்கண் உள்ள. `அத்தடம் புனல்வாய்` எனச்சுட்டு வருவிக்க. அலம்பி - கிண்டி. புலம்பி - முறை யிட்டு. தானவர் - அசுரர். பொற் கூத்து - பொன்போலச் சிறந்த நடனம், சிலம்பு - ஒலிக்கின்ற. இதனுள்ளும், ``அணி, சிந்தை`` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

குருண்ட வார்குழற் கோதை மார்குயில்
போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திரு
மல்குசிற் றம்பலவன்
மருண்டு மாமலை யான்மகள்தொழ
ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே. 

பொழிப்புரை :

சுருண்ட நீண்ட கூந்தலை உடைய மகளிர் குயில் போல இனிமையாக மழலைபேசும் அழகிய பேரில்லங்கள் மிகுதியாக உள்ள தில்லைத்திருப்பதியில் செல்வம் நிறைந்த சிற்றம்பலத்தில் உள்ளவனாய், திகைத்து நின்று இமவான் மகள் தொழுமாறு ஆடும் கூத்தப்பிரானுடைய செம்மணியை ஒத்த திரண்ட சிறந்த துடைகள் அடியேன் சிந்தையுள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

குருண்ட - சுருண்ட. ``மிழற்றிய`` என்னும் இறந்த காலம், `அத்தன்மையைப் பெற்ற` என்னும் பொருட்டு. திரண்ட - நெருங்கிய. திருமல்கு - அழகு நிறைந்த; இது சிற்றம்பலத்தைச் சிறப் பித்தது. மருண்டு - வியந்து. மணி - மாணிக்கம். வான் குறங்கு - சிறந்த துடை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை யச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட
மல்குசிற் றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமி
யேனைத் தளர்வித்ததே. 

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்துத் தன்னுடைய அச் செயலினால் உமாதேவிக்கு ஏற்பட்ட அச்சத்தைப் பின்னர்க் கண்ட வனாய், ஆழ்ந்த குளிர்ந்த நீரால் நிறைந்த குளங்கள் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள பெருமான் அணிந்த அழகிய பூணநூலோடு, பரவிய புலித்தோல் மீது வளைத்துக்கட்டிய இடைக்குப் பொருத்த மான கச்சு தன்னுணர்வு இல்லாத அடியேன் உள்ளத்தைத் தளரச் செய்தது.

குறிப்புரை :

போழ்ந்து - உரித்து, `உமையது அச்சத்தைப் பின்னர்க் கண்டவன்` என்க. இனி, ``கண்டவன்`` என்றதற்கு, `உண்டாக் கினவன்` எனப் பொருள்கொண்டு, `உமைக்கு என நான்காவது விரித்தலும் ஆம். தாழ்ந்த புனல் - ஆழ்ந்த நீர். தொடுத்து வீக்கும் - வளைத்துக் கட்டிய. பொன் நூல் - அழகிய பூணநூல். ``பொன்னூல் தன்னினொடு`` என்பதைச் ``சிற்றம்பலவன்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. தாழ்ந்த கச்சு - பொருந்திய கச்சு. இப்பாடலில் சீர்கள் சிறிது வேறுபட்டு வந்தன.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பந்த பாச மெலாம்அ றப்பசு
பாச நீக்கிய பன்மு னிவரோ
டந்தணர் வணங்கும் அணி
யார்தில்லை யம்பலவன்
செந்த ழல்புரை மேனியுந் திகழுந்
திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான்சுழிஎன் உள்ளத்
துள்ளிடங் கொண்டனவே.

பொழிப்புரை :

செயற்கையாகிய மாயை, கன்மம் என்பனவற்றை யும், இயற்கையாகிய ஆணவமலத்தையும் போக்கிய பல முனிவர் களோடு அந்தணர்கள் வணங்கும் அழகுநிறைந்த தில்லைத்திருநகரில் அமைந்த பொன்னம்பலத்திலுள்ள பெருமானுடைய சிவந்த நெருப்பை ஒத்த திருமேனியும், விளங்கும் திருவயிறும் அத்திரு வயிற்றிலுள்ள கொப்பூழின் அழகிய சுழியும் அடியேனுடைய உள்ளத்துள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

``பந்த பாசம்`` என்றது, செயற்கையாகிய மாயை கன்மங்களையும், ``பசு பாசம்`` என்றது இயற்கையாகிய ஆணவத்தை யும் குறித்தன. அற - அறுமாறு. ``பசு பாசம்`` என்னும் ஆறாவதன் தொகை வடநூல் முடிபு. ``சுழி`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப் பட்டது. இதனுள், ``அணி. உள்ளத்து`` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

குதிரை மாவொடு தேர்ப லகுவிந்
தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு
மதுர வாய்மொழி யார்மகிழ்ந்
தேத்துசிற் றம்பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம்என் னுள்ளத்
துள்ளிடங் கொண்டனவே. 

பொழிப்புரை :

குதிரைகள் யானைகள் என்ற இவற்றோடு தேர்கள் பல சேர்ந்து நெருங்குகின்ற தில்லையம் பதியிலே பூங்கொம்புபோன்ற ஆடல் மகளிரோடு இனிய இசைப் பாட்டைப் பாடுகின்றவர்கள் மகிழ்ந்து போற்றும் சிற்றம்பலத்தில் உள்ளவனாய், நீண்ட கழல் ஒலிக்கக் கால்களை வீசி அழகாகக் கூத்து நிகழ்த்துகின்ற கூத்தப்பிரான் திருமேனியின்மேல் விளங்கும் வயிற்றின் மேல் கட்டப்படும் ஆபரணத்தின் பல சுற்றுக்கள் என் உள்ளத்தினுள் தமக்கு இருப் பிடத்தை அமைத்துக் கொண்டன.

குறிப்புரை :

மா - யானை. ஈண்டு - நெருங்குகின்ற. கொம்பு அன்னார் - பூங்கொம்புபோலும் ஆடல் மகளிர். மதுர வாய்மொழியார் - இனிய இசைப்பாட்டைப் பாடுகின்றவர். அதிர - ஒலிக்க. `வார்கழல் அதிர` என மாற்றி, வீசுதலுக்கு, `கால்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``கூத்தன்`` என்றது அவனது திருமேனியைக் குறித்த ஆகுபெயர். கச்சு, மேற்கூறப் பட்டமையின், உதரபந்தனம் அதனின் வேறென்க. உதர பந்தனம் - வயிற்றின்மேல் உள்ள கட்டு. கச்சு, அரையில் கட்டப் படுவது. ``கொண்டன`` என்ற பன்மையால் இது பல சுற்றுக்களை உடையதாதலும் பெறப்படும். இதனுள், ``அழ, உள்ளத்து`` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

படங்கொள் பாம்பணை யானொ டுபிர
மன்ப ரம்பர மாவரு ளென்று
தடங்கை யால்தொழ வுந்தழல்
ஆடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும் அத் தோள்க ளுந்தட
மார்பினிற் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்டமன்றே வினை
யேனை மெலிவித்தவே. 

பொழிப்புரை :

படம் எடுக்கின்ற திரு அனந்தாழ்வானைப் பாயலாகக் கொண்ட திருமாலொடு பிரமன், `மேலோருக்கும் மேலாயவனே! எங்களுக்கு அருள்புரிவாயாக` என்று நீண்ட கைகளால் தொழக் கையில் அனல்ஏந்தி ஆடும் சிற்றம்பலப் பெருமானுடைய நீண்டகைகள் நான்கும் நான்கு திருத்தோள்களும், பரந்த மார்பில் அணிந்த அணிகலன்களும், அவற்றின் மேலதாய்ப் பொருந்திய விடமுண்ட கண்டமும் ஆகிய இவைகள் இவற்றைத் தரிசிக்கும் நல் வினையை உடைய அடியேனை உள்ளத்தை உருக்கி மெலிவித்தன.

குறிப்புரை :

பரம் பரமா - மேலானவற்றுக்கும் மேலானவனே; உனக்குமேல் ஒன்று இல்லாதவனே. ``தொழவும் ஆடுசிற்றம்பலவன்`` என்றது, `ஆடுவார் தொழுவாராயும், காண்பார் தொழப்படுவாராயும் இருத்தல் இயல்பாக. காண்பார் தொழுவாராக, ஆடுவான் தொழப் படுபவனாய் இருக்கின்றான்` என்றவாறு. எனவே. ``தொழவும்`` என்ற உம்மை உயர்வு சிறப்பாயிற்று. ``பூண்கள், கண்டம்`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. பூண்கள் - அணிகலங்கள். மேற்று இசை - மேலதாய்ப் பொருந்திய. `மேல் திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` எனப் பிரித்து, `மேலிடத்துள்ள` என்றலுமாம். `மெலிவித்ததே` என்பது பாடம் அன்று. இதனுள், ``வினை`` என்ற ஒன்றுமே கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்
தாடுசிற் றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக்
காதும் காதினின் மாத்தி ரைகளோ
டைய தோடுமன்றே அடி
யேனை ஆட் கொண்டனவே. 

பொழிப்புரை :

சிறந்த சங்குகளோடு தாமரை மலர்கள் ஊரைச்சுற்றிக் காணப்படும் தில்லைத்திருப்பதியில் மேம்பட்ட வேதியர்கள் தொழவும், உலகம் தீமைநீங்கி நன்மைபெறவும் நிலையாக மகிழ்ந்து கூத்து நிகழ்த்தும் சிற்றம்பலப் பெருமானுடைய சிவந்த வாயிலுள்ள பற்களும், விளங்கும் அழகிய காதுகளும், காதுகளில் அணிந்த குழைகளும் தோடும் தம் பேரழகால் அடியேனை அடிமையாகக் கொண்டன.

குறிப்புரை :

செய்ய கோடுடன் - நல்ல சங்குகளுடன். மாத்திரைகள் - சிறந்த சுருள்கள்; என்றது, குழையை. ஐய - அழகிய. இதனுள், `மகிழ்ந்து, அடி` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

செற்று வன்புரந் தீயெழச்சிலை
கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறி
நீர்த்தில்லை யம்பலவன்
மற்றை நாட்ட மிரண்டொ டுமல
ருந்திரு முகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டமன்றே நெஞ்சு
ளேதிளைக் கின்றனவே.

பொழிப்புரை :

சினங்கொண்டு கொடியோருடைய மும்மதில்களும் தீ எழுமாறு வில்லை வளைத்து அவற்றை அரிய நெருப்புக்கு உணவாக்கினவனாய், சிறந்தமணிகளை மோதிக் கரைசேர்க்கும் நீர்வளம் மிக்க தில்லை அம்பலத்தில் உள்ள பெருமானுடைய மற்ற இருகண்களோடு விளங்கும் திருமுகமும், முகத்தில் நெற்றி யிலுள்ள கண்ணும் அல்லவோ அடியேனுடைய நெஞ்சினுள்ளே பதிந்துள்ளன.

குறிப்புரை :

செற்று - சினந்து. சிலை - வில். கோலி - வளைத்து. ``அவன்`` என்பது பகுதிப்பொருள் விகுதி. நாட்டம் - கண். ``நெற்றி நாட்டம்`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. திளைக் கின்றன - உலாவுகின்றன.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
தென்னுள் நின்றனவே.

பொழிப்புரை :

பசுக்கூட்டங்கள் வயல்களில் களையாக முளைத்த தாமரைக் கொடிகளின் பூக்களை மேயவும் அவற்றின் கால்களில் மிதிபட்டுக் கருப்பஞ்சாறு வயல்களில் பாயவும், தாக்குண்ட கயல் மீன்கள் வருந்தி நீர்மடையை நோக்கிப் பாயும் தில்லையம்பதியிலுள்ள அம்பலப்பெருமானுடைய முறுக்கிய நீண்ட சடையும், அச்சடையில் சிறிது மலர்ந்த மொட்டோடு கூடிய ஊமத்தம் பூக்களும் பிறைச் சந்திரனும் உடைய திருமுடிகள் என்றும் நீங்காது அடியேனுடைய உள்ளத்தில் நிலை பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் ஆவான்.

குறிப்புரை :

தொறுக்கள் - பசுக்கூட்டங்கள். கமல மலர், வயலில் உள்ளவை. உழக்க - மேய. பாய்தர - மேல்நின்று விழ. மறுக்கம் - வருத்தம். `பசுக்களின் கால்களால் மிதிபட்டும். கருப்பஞ்சாற்றின் வீழ்ச்சியால் தாக்குண்டும் கயல் மீன்கள் வருந்துவவாயின` என்பதாம். `மடைக்கண் பாய்` என உருபு விரித்துரைக்க. வார் சிகை - நீண்ட சடை. ``முகிழ்த்த`` என்றதன்பின்னர் நின்ற வகரமெய் விரித்தல். வாசிகை எனவும். `அகத்தி` எனவும் ஓதுவன பாடம் அல்ல. ``பிறைக் கொள்`` என்றதில் உம்மை தொகுத்து, ககர ஒற்று விரிக்கப்பட்டது. இதனுள், `மடை, பிரி` என்பன கூன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தூவி நீரொடு பூவ வைதொழு
தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
யான் அடி மேவுவரே.

பொழிப்புரை :

நீரினால் திருமுழுக்காட்டி மலர்களைத் தூவித் தொழுது கும்பிடும் கைகளை உடையவர்களாய் மேம்பட்ட பிராண வாயுவை உள்ளே அடக்கி விரும்பச் சுரந்த அன்புடையவர்களாய்த் தேவர்கள் தாம் வணங்குமாறு திருக்கூத்து நிகழ்த்திய தில்லைக் கூத்தப்பிரானைத் திருஆலி அமுதன் சொல்லிய சொற்களை விரும்பிப் பாட வல்லவர்கள் காளை வாகன இறைவனாகிய சிவபெரு மானுடைய திருவடிகளை மறுமையில் அடைவார்கள்.

குறிப்புரை :


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழு கொக்கின்றதே. 

பொழிப்புரை :

பவளத்தால் ஆகிய பெரிய மலையைப்பனிபரவி மூடினாற்போல வெண்ளொளி வீசும் திருநீற்றினைப்பூசி, பெரிய குவளைமலர்களாலாகிய முடிமாலையும் கொன்றைப் பூவும் பொருந்திய பொன்னிறமுடைய சுருண்ட அழகிய சடையை உடைய வனாய், ஒளிவீசும் மாளிகைகள் சூழ்ந்த தில்லைநகரிலே திருக்கூத்து நிகழ்த்துகின்ற வெண்ணிறம் பொருந்திய சிவபெருமானை நினைக்குந் தோறும் அடியேனுடைய உள்ளம் நெருப்பின் அருகிலிருக்கும் மெழுகுபோல உருகுகின்றது.

குறிப்புரை :

படர்தல் - மூடுதல். `வரையில்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பவளமலை சிவபெருமானுக்கும், அதனைமூடிய பனி அப் பெருமான் பூசியுள்ள திருநீற்றுக்கும் உவமை. கண்ணி - முடியில் அணி யும் மாலை. ``கொன்றை`` என்றதும் அதனாலாகிய கண்ணியையே. துன்று - பொருந்திய. பொன் - பொன்போலும். குழல் - சுருண்ட. திவள - விளங்க. `திருநீறும், சடையும் திவள நடம்புரிகின்ற` என்க. தவள வண்ணன் - வெண்மை நிறத்தை உடையவன்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும்
அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
நிறையழிந் திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
படுந்தொறும் அலந்தேனே. 

பொழிப்புரை :

செந்நிற ஒளியைஉடைய மாளிகைகள் சூழ்ந்த தில்லை நகரில் எம்பெருமான் திருக்கூத்தைத் தரிசித்த காரணத்தால், ஒருசேர ஓடிவந்த மாலைநேரமும், சந்திரனும் தண்ணீர் அலைகின்ற கடலின் ஒலியோடு சேர்ந்து உருகி ஓடுகின்ற அடியேனுடைய நெஞ் சினைத் தாக்கிய அளவில் அடக்கம் என்ற பண்பு அழிய இருக்கும் அடியேன் பக்கல் ஓடிவந்த மன்மதனுடைய பூக்களாகிய அம்புகள் அடியேன் மேல் படுந்தொறும் அடியேன் வருந்தினேன்.

குறிப்புரை :

ஒக்க ஓட்டந்த - ஒருசேர ஓடிவந்த. அந்தி - மாலைக் காலம். `மாலைக் காலமும், சந்திரனும் ஒருசேர ஓடிவந்தன` என்றாள். பின்பு, `அவை இரண்டும் கடல் ஒலியோடு சேர்ந்து நெஞ்சைப் பிளந் தன` என்றாள். நெக்கு வீழ்தரு நெஞ்சு - முன்பே உடைந்து அழிந்த மனம். ``பாய்தல்`` என்றது, `போழ்தல்` என்னும் பொருட்டாய் நின்றது. நிறை - நெஞ்சினைத் தன்வழி நிறுத்துந்தன்மை. ``இருப் பேனை`` என்றதை, `இருப்பேன்மேல்` எனத் திரித்து, அதனை, ``படுந் தொறும்`` என்பதனோடு முடிக்க. இவ்வாறு திரியாமலே, ``பக்கம் ஓட்டந்த`` என்பதனை, `அணுகிய` என்னும் பொருட்டாக்கி, அத னோடு முடித்தலும் ஆம். மூன்றாம் அடியை முதலடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. பக்கம் ஓட்டந்த - அருகில் ஓட்டந்த - அருகில் ஓடி வந்த. அலந்தேன் - வருந்தினேன்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
வந்தருள் செய்யாயே.

பொழிப்புரை :

சபையில் நடனமாடும் பெருமானே! அழகிய தில்லைநகரை ஆள்பவனே! திருத்தொண்டுசெய்த சிலந்தியை அதன்மறுபிறப்பில் அரச குடும்பத்தில் தோன்றி நாட்டை ஆளுமாறு அருள்செய்த, பெருந்தேவர்களையும் அடக்கி ஆள்பவனே! பொலிவு இழந்த மார்க்கண்டேயன் பொருட்டு அவன் உயிரைப்பறிக்க வந்த அந்தக் காலனை உயிர்நீங்குமாறு உதைத்த உன் திருவடிகள், வருந்திக் கிடக்கும் அடியேனுடைய வருத்தம் நீங்குமாறு அடியேனுடைய அழகிய முலைகளின் மீது அழுந்தப் படியுமாறு அருள்செய்வாயாக.

குறிப்புரை :

சிவபெருமான், சிலந்தியை அரசாளச் செய்தமையைக் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்துக் காண்க. `தேவ தேவாகிய ஈசனே` என்க. தேவ தே - தேவர்க்குத் தேவன். ``தேவ தேவீசனே`` என்ற இருசீர்களும் வேறுபட வந்தன. ``உலந்த`` என்பதற்கு, `வாழ்நாள் உலந்த` என உரைக்க. உலத்தல் - முடிதல். ``மார்க்கண்டி`` என்பது, `மிருகண்டு முனிவர் மகன்` என்னும் பொருளது. ஆகி - துணையாகி. ``அக் காலனை`` என்னும் சுட்டு, `அந்நாளில் வந்த காலனை, எனப் பொருள் தந்தது. செக - அழிக்கக்கருதி. உதை கொண்ட - உதைத்தற் றொழிலை மேற்கொண்ட. `உதைகொண்ட பாதங்கள், மலர்ந்த பாதங்கள்` எனத் தனித்தனி முடியும். `பாதங்களால் வந்து` என மூன்றாவது விரித்து முடிக்க. வனம் - அழகு. ஒற்ற - பொருந்த; தழுவுதற்பொருட்டு. `என் வனமுலைமேல் ஒற்ற` என்று எடுத்துக்கொண்டு. ``ஈசனே`` என்றதன்பின் கூட்டி உரைக்க.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
சேர்த்திஅச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.

பொழிப்புரை :

அடியவர்கள் திறத்து அருள் செய்து மேம்பட்ட பொன்னம்பலத்தில் கூத்துநிகழ்த்தும் கூத்தப்பிரானே! அழகிய தில்லை நகரை ஆள்பவனே! அடியேனுக்குக் காமமயக்கத்தை உண்டாக்கி அடியேனுடைய அழகிய முலைகளைப் பசலைநிறம் பாயச் செய்வது நீதியான செயலாகுமா? நீர் திரண்டு ஓடிவரும், நீண்ட மணிகளை அடித்துவரும் கங்கையைத் திருச்சடையில் வைத்துக்கொண்டு அச் செயலைப் பொறுத்துக்கொண்ட பெருங்கற்பினளாகிய பார்வதிக்கு உன்உடம்பில் ஒருபாகத்தை வழங்கி, பெரிய அழகிய தீயினை நெற்றியில் வைத்த பெருமானே! நின் செயலை நினைத்துப் பார்.

குறிப்புரை :

அருள் செய்து - உயிர்கள்மேல் அருள்பண்ணி; இரண்டாமடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க. மருள் - மயக்கம்; மையல். `என்றனை மருள்செய்து` என மாற்றுக. பொன் பயப்பிப்பது - பொன்போலப் பசக்கச் செய்வது. வழக்காமோ - முறையாகுமோ. நீள் மணி - மிக்க இரத்தினம். செய்யாள் - சிறந்தவள்; உமையம்மை. உருவம் பாகமும் தந்து - உருவத்தைப் பங்காகவும் கொடுத்து. `தீயை` என்பது, `தியை` எனக் குறுகி நின்றது. `தீயை நெற்றிக் கண்ணில் வைத் தோன்`. என்றது, `காமனை எரித்தோன்` என்னும் குறிப்பினது. `கங்கையையும், உமையையும் கலந்தாற்போல என்னைக் கலத் தலாவது செய்தல் வேண்டும்; அல்லது என்னை வருத்துகின்ற காமனையாவது எரித்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றேனும் செய்யாது என்னைப் பசப்பிப்பது முறையோ` என்பாள், `கங்கையைச் சடைச் சேர்த்திச் செய்யாளுக்குப் பாகமும் தந்து தீயை நுதல் வைத்தோனே` என்றாள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
எழில்மறை யவற்றாலே
செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய
தில்லையம் பலத்தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம்
பதைபதைப் பொழியாதே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஏழுலகங்களுக்கும் கீழே ஊடுருவு மாறு வைத்த திருவடிகளைத் திருமால் காணஇயலாதவனாயினான். பிரமன் மேல் ஏழுஉலகங்களையும் கடந்து ஊடுருவிய திருமுடியைக் காணஇயலாமல் மனம் இளைக்க, இருவரும் நிலஉலகிற்குவந்து அழகிய வேத வாக்கியங்களால் இப்பொழுதும் உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வயல்களிலே தாமரைகள் களைகளாக வளர்ந்து ஓங்கும் தில்லையிலே அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் உன்னைப் பத்தி செலுத்தி அடைந்து காண்பதற்கு, திருமால் பிரமன் என்பவர்களோடு ஒப்பிடின் மிகத்தாழ்ந்த அடியேனுடைய உள்ளம் விரைதலை நீங்காது உள்ளது. இஃது என்ன வியப்போ!

குறிப்புரை :

வைத்த - ஒளித்து வைத்த. ``துதிக்கின்றார்`` என்ற தன்பின் `அவ்வாறாக` என்பது வருவிக்க. `துதிக்கின்றான்` என்பது பாடம் அன்று. செய்த்தலை - வயலிடத்து. பத்தி - ஆசை. `பத்தியால் ஒழியாது` என இயையும். பதைபதைத்தல் - மிக விரைதல். `பதை பதைத்தலை ஒழியாது` என்க. `இது கூடுவதோ` என்பது குறிப்பெச்சம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை
அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து
கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
அம்பலத் தரன் ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
மனத்தினை யுடையேற்கே. 

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆராய்ந்த சிறந்த அந்தணர்கள் வாழும் தில்லைநகரில் உள்ள பொன்மன்றத்தில் எம் பெருமானுடைய கூத்துநிகழ்த்தும் மேம்பட்ட மலர்களைப் போன்ற திருவடிகளைக் காணும் எண்ணமுடைய அடியேன் மீது, உடல் தேய்ந்து அச்சத்தால் வெளுத்து உட்புறம் வளைந்து, பாம்பினை அஞ்சித் தான் உன்சடையிலே இருக்கும் நிலையிலும், அடியேனை வெகுண்டு பலகாலும் என்னை அணுகி என்னைத்துன்புறுத்தி ஒளிக் கதிர்களை உடைய நிலா அடியேன்மீது நெருப்பைத் தூவுகிறது.

குறிப்புரை :

``மெய்`` என்றது தாப்பிசையாய், `தேய்ந்து` என்பத னோடும் இயையும். அகம் வளைந்து - உள்வளைந்து. இது சிலேடை யாய், `மனம் மடிந்து` எனப் பொருள் தந்தது; சிவபெருமானது முடியில் உள்ள நிலவின் இயல்புகளை, அங்குள்ள அரவிற்கு அஞ்சிய அச்சத்தால் விளைந்தனவாகக் கூறியது தற்குறிப்பேற்றம். காய்ந்து - சினந்து. வலிசெய்து - வலிதில் தொடர்ந்து. கதிர் நிலா - ஒளியை யுடைய சந்திரன். ``கதிர்நிலா`` என்றது, `தனது கதிரால் எரிதூவும்` என்றற்கு. `அரன் பாதங்கள்` என இயையும். உடையேற்கு என்றதை, `உடையேன்மேல்` எனத்திரிக்க. `கதிர் நிலாத் தான் அரவினை அஞ்சி மெய் தேய்ந்து வெளுத்து அகம் வளைந்து இருந்தேயும் காய்ந்து வலிசெய்து உடையேன் மேல் எரிதூவும் `என மாறிக் கூட்டுக.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும்
உண்பதும் பலிதேர்ந்து
விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை
ஆகிலும் என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றிமற் றாரையும்
உள்ளுவ தறியேனே. 

பொழிப்புரை :

நீர் மடைகளிலே வந்துசேர்ந்த வாளை மீன்கள் குதித்து அடையும் வயல்களை உடைய தில்லைநகரின் பொன்னம் பலத்தில் தீயைக் கையில்ஏந்திக் கூத்துநிகழ்த்தும், அடியேனை அடிமையாக உடைய எம்பெருமான் உடையாகக்கொள்ளுவன பாய் கின்ற புலியின் தோலும் பெரிய பாம்புமே ஆகும். உண்பதும் பிச்சை எடுத்துக் கொள்ளும் உணவே. ஏறிச் செலுத்துவதும் காளையே. தங்கும் இடமும் கொடிய கயிலாயமலையே. இவ்வளவு குறைபாடுகள் அப்பெருமானிடத்தில் இருந்தாலும் அவனையன்றி வேறு எந்தத் தெய்வத்தையும் பரம்பொருளாக அடியேன் நினைத்து அறியேன்.

குறிப்புரை :

``உடையும், உண்பதும்`` என்ற உம்மைகள் எச்சப் பொருள. நஞ்சின்றியிருத்தலைக் குறிக்க, ``நல்அரவம்`` என்றார். அரவம் (பாம்பு) கச்சாக நின்று உடையைக் காத்தலின் அதனையும், `உடை` என்று சார்த்திக் கூறினார். பலி - பிச்சை. ``விடையது`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மேவு இடம் - இருக்கும் இடம். ``இடம்`` என்றதிலும், எச்ச உம்மை விரிக்க. வரை - மலை; கயிலை காடு அடர்ந்து. புலியும், அரிமாவும் போல்வன வாழ்தலின், `கொடிது` எனப்பட்டது. மடை கொள்வாளை - மடையை வாழும் இடமாகக் கொண்ட வாளை மீன்கள். ``மடை`` என்றது, அதனால் தடுக்கப்படும் நீரை. `அனலோடு ஆடும்` என மூன்றாவது விரித் துரைக்க. உடைய கோ - எல்லாரையும், எல்லாவற்றையும் ஆளாகவும், உடைமையாகவும் உடைய தலைவன். `யாரையும்` என்பது, `ஆரையும்` என மருவிற்று. `தில்லையம்பலத்தாடும் கோவிற்கு உடையும் தோலும், அரவமுமே. உண்பதும் பலி தேர்ந்தே; ஊர்வதும் விடையே; மேவிடமும் கொடுவரையே. ஆகிலும் என் நெஞ்சம் அவனையன்றி மற்று ஆரையும் உள்ளுவதை நான் காண வில்லை` என்க. விரிக்கப்படும் ஏகாரங்கள் பிரிநிலை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும்
ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும்
உடன்பிறந் தவரோடும்
பிரிய விட்டுனை யடைந்தனன் ஏன்றுகொள்
பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்குங்கொண் டந்தணர் ஏத்தநன்
மாநட மகிழ்வானே.

பொழிப்புரை :

பெரும்பற்றப்புலியூரில் நான்கு வேதங்களின் வாக்கியங்களையும் கொண்டு அந்தணர்கள் புகழ மேம்பட்ட சிறந்த கூத்தினை மகிழ்ந்து ஆடும் பெருமானே! அறிவும், மிக மேம்பட்ட நாணமும் அடக்கமும், உலகப்பொருளிடத்துள்ள ஆசையும், இவ் வுலகில் உள்ள உறவினர்களும் பெற்றதாயும், தந்தையும், உடன் பிறந்தவர்களும் என்னைப்பிரியுமாறு அப்பண்புகளையும் அவர்களை யும் விடுத்து உன்னைப் பற்றுக்கோடாக அடைந்துள்ள அடியேனை ஏற்றுக் கொள்வாயாக.

குறிப்புரை :

அறிவும் - உன்னால் ஏற்கப்படும் தகுதியின்மையை அறியும் அறிவும். நாணமும் - காதல் கரையிறந்தவழியும் கன்னியர் தாமே ஆடவர் இருக்குமிடத்திற் செல்லக் கூசும் வெட்கமும். நிறைமை யும் - மனத்தை அஃது ஓடும்வழி ஓடாது நிறுத்தும் தன்மையும். ஆசையும் - இருமுது குரவர் ஏவல்வழி நிற்பின் இதனைப் பெறலாம், அதனைப் பெறலாம் என்னும் அவாவும், உறவும் - செவிலியும், தோழியும் முதலாய கிளைஞரும். ``உடன் பிறந்தவரோடும்`` என்ற உம்மை சிறப்பு. `அறிவு முதலாகத் தந்தை ஈறாகச் சொல்லப்பட்ட அஃறிணையும். உயர் திணையுமாகிய யாவும், யாவரும் உடன்பிறந்த வரோடும் தம்மிடத்தே பிரிந்து நிற்குமாறு அவர்களை விட்டு உன்னை அடைந்தேன்` என்க. உடன்பிறந்தவர் பின்றொடர்ந்து வந்தும் மீட்டுச் செல்லற்கு உரியராதலின், அவரைத் தனியே பிரித்து ஒடுவும், உம்மை யும் கொடுத்துக் கூறினாள். இது, பெருந்திணையுள், `மிக்க காமத்து மிடல்` என்னும் பகுதியுள் `கணவன் உள்வழி இரவுத் தலைச்சேறல்` என்னும் துறை. உண்மைப் பொருளில் இஃது உலகியலை முற்றத் துறந்து இறைவனையே புகலாக அடைந்தமையைக் குறிக்கும்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வான நாடுடை மைந்தனே யோஎன்பன்
வந்தருளாய் என்பன்
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
பால்வண்ண னேஎன்பன்
தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண் அணி மார்பனே
எனக்கருள் புரியாயே. 

பொழிப்புரை :

வண்டுகள் விரும்பித்தங்கியிருக்கின்ற சோலை களால் சூழப்பட்ட தில்லைநகரில் திருநடம் புரிகின்றவனாய்ப் பன்றிக் கொம்பாகிய அழகிய அணிகலனை அணிந்த மார்பை உடைய பெருமானே! மேல்உலகாகிய சிவலோகம் உடையவனே! வந்து அருள் செய்வாயாக என்று முறையிடுகின்றேன். பால், நெய் முதலிய பஞ்சகவ்வியத்தை அபிடேகம் செய்து கொண்ட பரந்த சடையினை உடைய பால் போன்ற வெள்ளிய நிறத்தினனே! ஓ என்று முறையிடு கின்றேன். அடியேனுக்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

வான நாடு - சிவலோகம். மைந்தன் - பேராற்ற லுடையவன். `வானநா டுடையவனாயினும் என் பொருட்டு இங்கு வந்து அருள்` என்றவாறு. `பால், நெய் முதலிய ஐந்தையும் ஒருங்கு ஆடிய` என்க. ஏன மா - பன்றியாகிய விலங்கு; இருபெயரொட்டு. அதனது மருப்பே இறைவன் மார்பில் அணியாய் நிற்றலின், `ஏனமாப் பூண்` என்றார். மணி - அழகு. இது தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித்
தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன
தடியிணை பணிவாரே. 

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படும் அழகிய மதில்களால் சூழப்பட்ட தில்லைநகரிலே, நிலத்தேவர் எனப்படும் அந்தணர்கள் பலரும் துதிக்குமாறு, எரியைக் கையில் சுமந்து கூத்து நிகழ்த்தும் எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் அருள் முழுமை யாகக் கிட்டாமையால் வருந்தும் தலைவிகூறும் மொழிகளாக, மலையைப் போன்ற பெரிய மதில்களைஉடைய திருமயிலாடுதுறை என்ற ஊருக்குத்தலைவனான வேதங்களில் வல்ல திரு ஆலிஅமுதன் முன்நின்று போற்றிய இப்பத்துப்பாடல்களையும் கற்றுவல்லவர் சிவபெருமானுடைய திருவடிகளின் கீழ்ச் சிவலோகத்தில் அவனைப் பணிந்து கொண்டு வாழ்வார்கள்.

குறிப்புரை :

புரியும் - நன்கு செய்யப்பட்ட. இங்கும், `எரியோடு ஆடும் ஈசன்` என்க. இனைபவள் - வருந்துபவள். `இளையவள், இனையவன்` என்பன பாடம் அல்ல. வரைசெய் - மலை போலும். மயிலை - மயிலாடுதுறை; மாயூரம். இஃதே இவரது அவதாரத்தலம் என்பது இதனால் அறியப்படும். `ஆலி` என்பது ஆலிநாட்டின் தலைநகராதலாலும், அந்நகரில் உள்ள `அமுதன்` என்னும் திருமால் பெயரே இவருக்குப் பிள்ளைப் பருவத்தில் இடப்பட்டமையாலும், ஆலிநாடு மாயூரத்திற்கு அணிய இடமேயோதலாலும். `மயிலை` என்பதனைப் பிற ஊர்களாக உரைத்தல் கூடாமை அறிக. ``மறைவல திருவாலி`` என்றதனால், இவர் அந்தணர் குலத்தினராதல் அறியப்படும். பரவல் பத்து இவை - துதித்தலைச் செய்த பத்துப் பாடல்களாகிய இவைகளை. வல்லவர் - அன்புடன் பாட வல்லவர்கள். வாளா ``பணிவார்`` என்றாராயினும், `சிவலோகத்திற் சென்று பணிவார்` என்பதே கருத்து என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
காண அருள் என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.

பொழிப்புரை :

இரவாகவும், பகலாகவும், உருவம் அற்ற பொருளாகவும், உருவம் உடைய பொருளாகவும், மனநிறைவைத் தாராத அமுதமாகவும், கல்லாலமரத்தின் நிழலில் உள்ளவனாகவும், அமையும் கயிலைமலைத் தலைவனே! `உன் திருவுருவைக் காணும் பேற்றை எங்களுக்கு அருளுவாயாக` என்று பதஞ்சலி முனிவர் போன்ற பல்லாயிரவர் சான்றோர்கள் முன் நின்று வேண்ட, அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வெளிப்பட்டு மேகமண்டலம் வரை உயர்ந்த மதில்களை உடைய தில்லைக்கண் உள்ள அடியார்களுக்கு அருள் செய்து எம்பெருமான் கூத்துநிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

முதலடியில் உள்ள, `ஆய்` என்பன பலவும் வினையெச்சங்கள். `இரவு முதலிய பல பொருள்களாகி` என்பது அவற்றின் பொருள். இவ்வெச்சங்கள் பலவும் அடுக்கிநின்று, ``நிழலாய்`` என்ற விளியேற்ற குறிப்புவினைப் பெயரைக் கொண்டு முடிந்தன. அல் - இரவு. ``அரு, உரு`` என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. ``அமுதம்`` என்றதும், தேவர் அமுதத்தையே குறித்தது. கல்லால் நிழலாய் - கல்லால மரநிழலில் எழுந்தருளி யிருப்பவனே. ``கயிலை மலையாய்`` என்றதும் விளிப்பெயரே. காண-(உனது நடனத்தை) யாங்கள் காணுமாறு. ``பதஞ்சலிகள்`` என்றது, `பதஞ்சலி முனிவர்போன்ற முனிவர்கள்` என்றவாறு. பரவ - துதிக்க. பதஞ்சலியார் முதலிய முனிவர் பலரது துதிகளுக்கு இரங்கியே இறைவன் தில்லையில் வெளிப்பட்டு நின்று தனது நடனத்தைக் காட்டியருளினான்` என்பது தில்லைக் கூத்தப் பெருமானைப் பற்றிய வரலாறு. செல் வாய் - மேகங்கள் பொருந்திய. சாரியையின்றி` மதிற் றில்லை` என ஓதப்படுவது பாடம் அன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த
சிற்றம் பலந்தன்னுட்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண
விகிர்தன் ஆடுமே. 

பொழிப்புரை :

அன்னப்பறவை போன்ற நடையினையும் அமுதம் போன்ற இனிய சொற்களையும் உடைய இளமகளிர் வாழும் தில்லைப் பதியில், பாண்டியன் வளர்த்த தமிழும் இசையும் கலந்து முழங்கும் சிற்றம்பலத்தில், பொன்னும் மணிகளும் பரந்து பொருந்திய இடத்திலே புலித்தோலைத் தோளில் அணிந்து, மின்னலைப் போன்ற இடையை உடைய உமாதேவிகாண மற்றவரினும் வேறுபட்ட வனாகிய சிவபெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் - அன்னம் போலும் நடையை உடையவரும், அமுதம்போலும் மொழியை உடையவரும் ஆகிய அவர்கள்; மகளிர். மகளிர் அழகும், பிற நலங்களும் உடையராய் இருத்தல் இல்லத்திற்கேயன்றி, ஊர்க்கும், நாட்டிற்கும் சிறப்பைத் தருவது என்க. தென்னன் - பாண்டியன். இவ்வொருமைப் பெயர் பாண்டியரது குடியின்மேல் நின்று அவர் அனைவரையும் குறிப்பதாயிற்று. தமிழ் நாட்டு மூவேந்தருள் சங்கம் நிறுவித் தமிழை வளர்த்தவர் பாண்டியராதலின், தமிழை அவர்க் குரியதாகக் கூறினார். ``உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழ்`` (கலவை 20) என்றார். இனி, `நற்றமிழ்` என வருத லல்லது, `நன்றமிழ்` என வருதல் வழக்கின்கண் இன்மையின், `தென் நன் தமிழ்` எனல் ஆகாமை அறிக. ``இசை`` எனப் பின்னர் வருகின்றமையும், ``தமிழ்`` என்றது, இசைத் தமிழையாயிற்று. இயற்றமிழையும் இசைத் தமிழையும் கூறவே இனம் பற்றி நாடகத் தமிழும் கொள்ளப் படுவதாம். ஆகவே, `முத்தமிழும் கலந்த சிற்றம் பலம்` என்றதாயிற்று. கலந்த - பொருந்திய. நிரந்த தலம் - பரந்து பொருந்திய நிலம். பியற்கு- தோளில் `தலத்து, இட்டு, காண விகிர்தன் ஆடும்` என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

இளமென் முலையார் எழில்மைந் தரொடும்
ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற
அழகன் ஆடுமே. 

பொழிப்புரை :

மென்மையான நகில்களை உடைய இளைய மகளிர் அழகிய ஆடவரோடு அழகுநிறைந்த படுக்கையில் இன்பத்தில் மூழ்கும் மேல்மாடிகளைஉடைய செல்வம் நிறைந்த தில்லைநகரத்துச் சிற்றம்பலத்திலே உயர்ந்த பொன்மலையினுள்ளே அமைந்த வயிர மலை போல வலக்கையை வளைத்துக்கொண்டு நின்று, எல்லையற்ற பெருமையை உடைய தேவர்களும் வழிபடுமாறு எம்பெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

`திளைக்கும்` என்பது, `திளையும்` எனச் சாரியை தொகுக்கப்பட்டு நின்றது. திளைத்தல் - இன்பத்தில் மூழ்கல். பொன்மலை சிற்றம்பலத்தின் வடிவிற்கும், வயிர மலை இறைவனுக் கும் உவமை. திருநீற்றுப் பூச்சினால் இறைவன் திருமேனி வயிரமலை போல் காணப்படுவதாயிற்று. `கவித்தல்` என்றது, அபயமாகக் காட்டு தலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே.

பொழிப்புரை :

சந்தனமரம், அகில்மரம், சாதிக்காய்மரம், தழை போன்ற மயில்தோகை என்ற பலவற்றையும் அகப்படக்கொண்டு தள்ளி ஓடுகின்ற நிவா என்ற ஆற்றின் கரையில் அமைந்த உயர்ந்த மதில்களைஉடைய தில்லை என்ற பெயருடைய, நினைக்கவும் அரிய தெய்வத் திருத்தலத்துச் சிற்றம்பலத்தில் திருநந்திதேவர் முழவு ஒலிக்கச் சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

தழைப் பீலி - தழைபோன்ற மயில் தோகை. சாதி - ஒருவகை மரம்; இதன் காய் சிறந்ததொன்றாகக் கொள்ளப்படுதல் அறிக. கொண்டு - அகப்படக் கொண்டு. உந்தி இழியும் - தள்ளி ஓடு கின்ற. நிவா, ஓர் ஆறு. `கரைமேல் விளங்கும் தில்லை` என உரைக்க. ` தில்லையாகிய தெய்வப்பதி` என்றவாறு. ``சிந்திப்பரிய`` என்றது, `சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய` என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஓமப் புகையும் அகிலின் புகையும்
உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வாமத் தெழிலார் எடுத்த பாதம்
மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
தேவன் ஆடுமே.

பொழிப்புரை :

வேள்விப்புகையும், அகிலின்புகையும் மேல் நோக்கிச் சென்று மேகத்தோடு பொருந்துமாறு தீஓம்பும் தொழிலை உடைய அந்தணர்கள் மிக்கிருக்கும் சிற்றம்பலத்தில், தூக்கிய அழகிய இடத்திருவடியில் இனிய ஓசையை உடைய சிலம்பு ஒலிக்கத் தீயைப் போன்ற சிவந்த நிறத்தை உடைய சடையின் மேல் பிறையைச்சூடி எம்பெருமான் கூத்துநிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

``தீ மெய்த் தொழில்`` என்றதை. `மெய்த் தீத்தொழில்` என மாற்றி, `மெய்த் தொழில், தீத்தொழில்` எனத் தனித் தனி முடிக்க. மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத் தொழில் - தீயை ஓம்பும் தொழில்; வேள்வி வேட்டல். வாமம் - இடப்பக்கம். `எடுத்த எழில் ஆர் வாமபாதம்` என மாற்றிக்கொள்க. இறைவன், வலத் திருவடியை ஊன்றியும், இடத் திருவடியைத் தூக்கியும் நடனம் செய்தல் அறிக. `பாதத்தின் கண்` என உருபு விரிக்க. மழலை - இனிய ஓசையை உடைய. தீ மெய் - நெருப்புப்போலும் நிறத்தையுடைய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை
குவிந்த கரைகள் மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து
மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை யேந்தி
அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

குரவம், கோங்கம், குளிர்ந்த புன்னை என்ற மரங்களும், தாழைப் புதரும் திரண்டுள்ள கடற்கரைப் பகுதிகளின் மேல் அலைகள்வந்து உலவும் தில்லைநகரில் விளங்கும் சிற்றம்பல மாகிய, மலையைப் போன்ற நிறைந்த இரத்தினங்களால் அமைக்கப் பட்ட மண்டபத்தில் அந்தணர்கள் மகிழ்ந்து துதிக்கவும் பாம்பு ஆடவும், தீயைக் கையிலேந்தி அழகனாகிய கூத்தப்பிரான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

கைதை - தாழை. குவிந்த - திரண்டுள்ள. கரை, கடற்கரை. அதன் இடப்பகுதிகள் பற்றி, `கரைகள்` எனப்பலவாகக் கூறினார். திரை - அலை. `தில்லைச் சிற்றம்பலம்` என இயையும். சிற்றம்பலம், இங்குக் கோயிலைக் குறித்தது. மல்கு - அழகு நிறைந்த. வரை - மலை. மலிந்த மணி - நிறைந்த இரத்தினங்களால் ஆகிய. `மண்டபத்து ஆடும்` என இயையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
என்றென் றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

`வண்டுகள் நிறைந்த சோலைகளை உடைய தில்லைநகர்த் தலைவனே! அழகிய சிற்றம்பலத்தில் உள்ளவனே! அருளுவாயாக.` என்று சித்தர்களும் தேவர்களும் இயக்கர்களும் முனிவர்களும் போற்றி வேண்ட, முத்தும் மணியும் வரிசையாக அமைந்த அந்த அம்பலத்தில் பிறைச்சந்திரனைச் சூடி, கொத்துக் கொத் தாக அமைந்த சடைகள் தொங்குமாறு அழகனாகிய சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

``அவர்`` என்பதனை, ``முனிவர்`` என்றதன்பின்னும், ``அணி அம்பலவா`` என்பதை, ``அத்தா`` என்றதன் பின்னும் கூட்டுக. ``நிரந்த தலம்`` என்பது முன்னும் வந்தது (தி.9 பா.237). `முளை மதி` என இயைத்து, `புதுவதாய்த் தோன்றும் சந்திரன்` என உரைக்க. கொத்து ஆர் - கொத்தாகப் பொருந்திய. கொத்து, பூங்கொத்துமாம். குழகன் - அழகன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால்
அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல்
ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப்
பரமன் ஆடுமே. 

பொழிப்புரை :

`ஆரவாரம் செய்த அரக்கனாகிய இராவணன் உடல் நொறுங்குமாறு அவனைக் கால்விரலால் துன்புறுத்தியவனே! எங்களுக்கு அருளுவாயாக` என்று போற்றி வேதியர்கள் வழிபடும் தில்லையம்பதியிலுள்ள சிற்றம்பலமாகிய உதயநிலைச் சூரியனின் கிரணங்கள் போல ஒளி வீசுகின்ற மேம்பட்ட மணிகள் எல்லா இடத் தும் பதிக்கப்பட்ட அரங்கத்தில் பவளம் போன்ற சிவந்த திருமேனியை யுடைய மேலோன் ஆகிய சிவபெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

அதிர்த்த - ஆரவாரம் செய்த; (உமையை) `அஞ்சப் பண்ணிய` என்றுமாம். அரக்கன் - இராவணன். அடர்த்தாய் - துன்புறுத்தினவனே. `உதித்த போழ்தில் விளங்கும் இரவி` என ஒரு சொல் வருவிக்க. `மணி, மாணிக்கம்` என்பது வெளிப்படை. தலம் - நிலம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலோ டயனும் அமரர் பதியும்
வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
பரமன் ஆடுமே. 

பொழிப்புரை :

திருமாலோடு பிரமனும் தேவர்தலைவனாகிய இந்திரனும் வந்து வணங்கிநின்று `விடக்கறை தங்கிய நீலகண்டனே! தீயோரை அழிப்பவனே! அருளுவாயாக` என்று போற்றிப் புகழுமாறு சேல்மீன்கள் உலாவும் வயல்களை உடைய தில்லைநகரின் மேம்பட்ட சிற்றம்பலத்தில் சுற்றிலும் சுழன்று ஆடுகின்ற முடியிலுள்ள சடைகள் நீண்டு விளங்கப் பரமன் ஆடுகின்றான்.

குறிப்புரை :

அமரர் பதி - தேவர்கள் தலைவன்; இந்திரன். ஆலம் - நஞ்சு. `ஆலா கண்டா` எனப் பாடம் ஓதி, `ஆலால` என்பது குறைந்து நின்றதாக உரைப்பினும் இழுக்கில்லை. ``அவர்`` என மீட்டும் கூறியது, அவரது பெருமை குறித்து. ``மல்கு சிற்றம்பலம்`` என்பது முன்னும் வந்தது (தி.9 பா.231). பால் ஆடும் - சுற்றிலும் சுழன்றாடுகின்ற. `பாலாடும் சடை` என இயையும். `பாலாடும் முடி` என்று இயைத்து, `பாலில் மூழ்குகின்ற சென்னி` எனவும் உரைப்பர். தாழ - நீண்டு விளங்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

நெடிய சமணும் மறைசாக் கியரும்
நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
அடிக ளவரை ஆரூர் நம்பி
யவர்கள் இசை பாடக்
கொடியும் விடையும் உடையகோலக்
குழகன் ஆடுமே. 

பொழிப்புரை :

உடலை மறைக்காத நீண்ட உடம்பை உடைய சமணரும், உடம்பை ஆடைகளான் மறைத்துக் கொள்ளும் பௌத்தரும், உணர்வு நிரம்பப் பெறாத பலகோடிகளான பாவங் களால் செலுத்தப்படுகின்ற வீண்செயல் உடையவர்களாய் எய்தப் பெறாத தில்லைநகரில் உள்ள சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமானைத் திருவாரூர் நம்பியாகிய சுந்தரமூர்த்திநாயனார் இசைப்பாடல்களால் போற்றிவழிபட, விடைக்கொடியும் விடைவாகனமும் உடைய அத்தகைய அழகன் சிற்றம்பலத்துள் கூத்துநிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

உடையின்மையால் மரம்போல் நிற்றலின், ``நெடிய`` என்றார்; இஃது இடக்கரடக்கு. பின்னர், `சாக்கியர்` என்றலின், ``சமண்`` என்றதனையும் `சமணர்` என்பது ஈறு தொகுக்கப்பட்டதாக உரைக்க. மறை - உடலை மூடுகின்ற. `சமணரும், சாக்கியரும் ஆகிய அவத்தோர்` என்க. நிரம்பா - உணர்வு நிரம்பப் பெறாத. செடி உந்து - பாவத்தால் செலுத்தப்படுகின்ற. அவத்தோர் - வீண் செயல் உடைய வர். அடிகள் - தலைவர். ``அவரை`` என்றது, `தம்மை` என்றபடி. `அடிகளாகிய தம்மை` என்க. ஆரூர் நம்பி, சுந்தரர். இக்காலத்தில் பெருவழக்காய் உள்ள `அவர்கள்` என்னும் உயர்வுச் சொல், இங்கு அருகி வந்துள்ளது. ஆரூரர் பாடியதனை இங்கு எடுத்துக்கூறியது. `அவரது பாடலைக் கேட்டிருந்தமையால் தாழ்த்தோம்` என்று இறைவன் சேரமான் பெருமாள் நாயனாருக்கு அருளிச்செய்ததனை உட்கொண்டதாம். இது முன்பு நிகழ்ந்ததைக் குறித்து `அத்தன்மையன்` என்றவாறாம். ``கொடியும் விடையும்`` என்றது, `விடைக் கொடியும், விடை ஊர்தியும்` என்றதாம். ``கோலக் குழகன்`` என்றது ஒரு பொருட் பன்மொழி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வானோர் பணிய மண்ணோர் ஏத்த
மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி
சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
பாவம் நாசமே. 

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கவும் மனிதர்கள் துதிக்கவும், பொருந்திக் கூத்துநிகழ்த்தும், வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட தில்லையில் விளங்கும் சிற்றம்பலப் பெருமானைப் பற்றித் தூய்மையான நான்கு வேதங்களையும் ஓதுபவனான திரு ஆலி அமுதன் பாடிய தமிழ்மாலையாகிய பால் போன்ற இனிய பாடல்கள் பத்தினையும் பாடுதலால் தீவினைகள் அழிந்து ஒழியும்.

குறிப்புரை :

மன்னி - என்றும் நின்று. பால் நேர் - பால்போலும் இனிமையுடைய. `நாசம் ஆம்` என்னும் ஆக்கச்சொல் தொக்கது. ``தூ நான் மறையான்`` என்றதனால், இவர் மறையவர் குலத்தினராதல் விளங்கும். இது, முன்னைப் பதிகத்திலும் கூறப்பட்டது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

கோல மலர்நெடுங்கட் கொவ்வை
வாய்க்கொடி யேரிடையீர்
பாலினை யின்னமுதைப் பர
மாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தேலுடை எம்மிறையை
என்றுகொல் காண்பதுவே. 

பொழிப்புரை :

அழகிய பூப்போன்ற பெரிய கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையும் கொடிபோன்ற மெல்லிய இடையினையும் உடைய தோழிமீர்! பால்போன்று இனிய னாய், இனிய அமுதம் போன்று புத்துயிர் அளிப்பவனாய், எல்லா ரினும் மேம்பட்டவனாகிய மேம்பட்ட ஒளிவடிவினனாய், சேல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களால் சூழப்பட்ட தில்லையாகிய பெரிய நகரிலே சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்க இசைந்த எம் தலைவ னாகிய சிவபெருமானை அடியேன் எக்காலத்துப் புறக்கண்களால் காணப்போகிறேனோ?

குறிப்புரை :

கோலம் - அழகு. `கோலக் கண்` என இயையும். `கொடி ஏர் இடையீர்` என்றதில், ஏர் உவம உருபு. ``இடையீர்`` என்றது பாங்கியரை.
பரம் ஆய - எப்பொருட்கும் முன்னதாகிய. பரஞ் சுடர் - மேலான ஒளி. சேல் உகளும் - கயல்மீன்கள் துள்ளுகின்ற. ஏல் - ஏற்றல்; முதனிலைத் தொழிற்பெயர். ஏற்றல் - எழுந்தருளியிருக்க இசைதல். `ஏலஉடை` என்பது பாடம் அன்று. ``இறை`` என்றது, சொல்லால் அஃறிணையாதலின், ``பரம், சுடர்`` என்றவற்றோடு இயைந்து நின்றது. கொல், ஐயத்துக்கண் வந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காண்பதி யானென்றுகொல் கதிர்
மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென் றறி
தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
யோன்மலர்ப் பாதங்களே. 

பொழிப்புரை :

ஒளிவீசும் மேம்பட்ட மணி போல்பவனாய்க் கனல் போன்ற செம்மேனியனாய், ஆண் என்றோ பெண் என்றோ வடிவு அற்றவன் என்றோ அறிவதற்கு இயலாதவனாக உள்ளவனாய், வானத்தை அளாவிய பெரும்பரப்புடைய மாளிகைகளால் சூழப்பட்ட தில்லை என்ற பேரூரின் சிற்றம்பலத்திலே மாட்சிமை பொருந்திய மேம்பட்ட திருக்கூத்தினை நிகழ்த்தும், வேதம் ஓதும் சிவபெரு மானுடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை அடியேன் புறக்கண் களால் காணும் நாள் எந்நாளோ?

குறிப்புரை :

``மணி, கனல்`` என்றவை உவமை ஆகுபெயர்கள். ``ஆண், பெண், அரு, உரு` என்ற நான்கும், ``என்று`` என்பதனோடு தனித்தனி இயைந்தன. அரிது - அரிய பொருள். ``சேண் பணை மாளிகை`` என்றதை, `சேணிற் பணைத்த மாளிகை` எனப் பிரிக்க. `வானத்தை` அளாவிப் பரந்த மாளிகை என்பது பொருள். `சிற்றம்பலத்துக்கண்` என உருபு விரிக்க. `நடம்செய் பாதங்கள்` என இயையும். ``பாதங்கள்`` என்புழியும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபை விரித்து, `யான் காண்பது என்றுகொல்` என்பதனைக் கொண்டுகூட்டி, `இறைவனை யும், அவன் பாதங்களையும் யான் காண்பது என்றோ` என உரைக்க. பாதங்களை வேறாக எடுத்துக் கூறியது, அவற்றது சிறப்புப்பற்றி. ``நின்னிற் சிறந்த நின்தாள் இணை`` (பரிபாடல் - 4) எனச் சான்றோரும் கூறுவர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கள்ளவிழ் தாமரைமேற் கண்
டயனோடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
வனையு ணர்வரிதே. 

பொழிப்புரை :

உலகத்தைப் படைத்தவனாகிய, தேன் வெளிப் படும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும், திருமாலும் வணங்குமாறு அவ்விருவருக்கும் நடுவே ஒளிவீசும் தீப்பிழம்பின் உருவத்தனாய்ப் பரவி உயர்ந்த சிறப்பை உடையவனாய், மேலோர் தமக்குப் புகலிடமாகத் தெளிந்த, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட தில்லை யாகிய பெரிய நகரத்தில் உள்ள சிற்றம்பலத்துள் தீயினைக் கையில் ஏந்தி ஆடுகின்ற ஒப்பற்ற சிவபெருமானை உள்ளவாறு அறிதல் இயலாத செயலாகும்.

குறிப்புரை :

கள் அவிழ் - தேனோடு மலர்கின்ற. `தாமரைமேல் அயன்` என இயையும். `கண்ட` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. கண்ட - உலகத்தைப் படைத்த. ``முழுவதுங் கண்டவனை`` (தி.8 திருச் சதகம் - 7) என்ற திருவாசகத்தைக் காண்க. பணிய - செருக்கொழிந்து வணங்குமாறு. `நடுவே எரியின் உருவாய` என மாற்றுக. நடுவே - அவ்விருவருக்கும் நடுவிலே. `ஓங்கிய ஒருவன்` எனவும், `சீர்த் தில்லை, தெள்ளிய தில்லை` எனவும் இயையும். தெள்ளிய - மேலோர், தமக்குப் புகலிடமாகத் தெளிந்த. `உணர்தல் எனக்கு அரிதாகியே விடுமோ` என்பது பொருள். உணர்தல், இங்குத்தலைப்பட்டுணர்தல். `ஒருவன்னை` என ஒற்று விரித்து ஓதுவதே பாடம் போலும்!

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

அரிவையோர் கூறுகந்தான் அழ
கன்எழில் மால்கரியின்
உரிவைநல் லுத்தரியம் உகந்
தான்உம்ப ரார்தம்பிரான்
புரிபவர்க் கின்னருள்செய் புலி
யூர்த்திருச் சிற்றம்பலத்
தெரிமகிழ்ந் தாடுகின்றஎம்
பிரான்என் இறையவனே.

பொழிப்புரை :

பார்வதியைத் தன் உடம்பின் ஒருபகுதியாகக் கொண்டு மேம்பட்டவனாய், அழகனாய், அழகிய மத மயக்கம் பொருந்திய யானையின் தோலைச் சிறந்த மேலாடையாகக் கொண்டு மேம்பட்டவனாய், தேவர்களுக்குத் தலைவனாய், தன்னை விரும்பு பவர்களுக்கு இனிய கருணைசெய்யும், புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்திலே எரியைக் கையிலேந்தி மகிழ்ச்சியோடு ஆடுகின்ற எங்கள் பெருமானே என் தெய்வம் ஆவான்.

குறிப்புரை :

மால் கரி - பெரிய யானை. உத்தரியம் - மேலாடை. புரிபவர் - விரும்புபவர். `இன்னருள்செய் எம்பிரான்` என இயையும். இறைவன் - தலைவன். ``இறையவனே`` என்னும் ஏகாரத்தைப் பிரித்து, ``எம்பிரான்`` என்றதனோடு கூட்டுக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

இறைவனை என்கதியை என்னு
ளேயுயிர்ப் பாகிநின்ற
மறைவனை மண்ணும்விண்ணும் மலி
வான்சுட ராய்மலிந்த
சிறையணி வண்டறையுந் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம்இறையை நினைத்
தேன்இனிப் போக்குவனே.

பொழிப்புரை :

தலைவனாய், எனக்குப் பற்றுக்கோடாய், எனக் குள்ளே மூச்சுக்காற்றாய் மறைந்து நிற்பவனாய், நிலவுலகமும் வானுல கமும் மகிழ்தற்கு ஏதுவான மேம்பட்ட ஒளியாய், நிறைந்த சிறகு களைக் கொண்டுள்ள அழகிய வண்டுகள் ஒலிக்கும் தில்லைமா நகரிலே சிற்றம்பலத்துக்கு மிக்க அணியாக இருக்கும் தெய்வமாகிய சிவபெருமானை விருப்புற்று நினைத்த யான் அவனை இனி, என் உள்ளத்தினின்றும் போக்கி விடுவேனோ?

குறிப்புரை :

கதி - புகலிடம். ``என்னுள்ளே உயிர்ப்பாய் ..... நிற்கும்`` என்ற அப்பர் திருமொழி இங்கு நோக்கத்தக்கது. (தி.5 ப.21 பா.1) மறை - மறைந்து நிற்கும் பொருள். `துறைவன்` என்பதுபோல, ``இறைவன், மறைவன்`` என்றவற்றில் வகரம் பெயர் இடைநிலை. `இறையனை, மறையனை` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். மலி - மகிழ்தற்கு ஏதுவான. `சுடராய் அணியாம் இறை` எனவும், `மலிந்த வண்டு` எனவும் இயையும். மலிந்த - நிறைந்த. சிறைஅணி - சிறகைக் கொண்டுள்ள. `சிற்றம்பலத்துக்கு` எனத் தொகுக்கப்பட்ட உருபை விரிக்க. நிறை அணி - மிக்க அழகு. போக்குவனே - என் உள்ளத்தினின்றும் போக்கி விடுவேனோ; `மறப்பேனோ` என்றபடி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம
லத்திரளை நினைப்பார்
மனத்தினு ளேயிருந்த மணி
யைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கன
கங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை
மாநகர்க் கூத்தனையே. 

பொழிப்புரை :

தூய்மையின் மிகுதியனாய், தன்னை விருப்புற்று நினைப்பவர் உள்ளத்திலே தங்கியிருக்கும் அழகிய மாணிக்கம் போல் வானாய், ஒலித்துக்கொண்டு வயல்களிலே வந்து பாயும் மிக்க நீர், ஒளி வீசுகின்ற பவளத்தைக் கோபம் கொள்பவரைப்போலக் கரையில் ஒதுக்கித்தள்ளும் தில்லை மாநகரில் உள்ள கூத்தப்பிரானை விருப் புற்று நினைத்த அடியேன் இனி என் உள்ளத்தினின்றும் போக விடுவேனோ?

குறிப்புரை :

`நிமலத்திரளை` என்பது முதலாகத் தொடங்கிப் பூட்டு வில்லாக முடிக்க. நிமலத் திரள் - தூய்மையின் மிகுதி. ``மனத்தினுளே இருந்த மணி`` என்றது அற்புத உருவகம். பின்னர் வந்த மணி, அழகு. ``மணியை`` எனவும், ``மாணிக்கத்தை`` எனவும் வேறு வேறாகக் கூறினாராயினும், `மாணிக்க மணியை` என்பதே கருத்தென்க. கனைத்து - ஒலித்து. கன கம் - மிக்கநீர். ``கழனி`` என்பதன்றி, `கனநீர்` என்பதே பாடம் போலும்! கனம் - மேகம். ``சினத்தொடு வந்து`` என்றது, தற்குறிப்பேற்றம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கூத்தனை வானவர்தங் கொழுந்
தைக்கொழுந் தாய்எழுந்த
மூத்தனை மூவுருவின் முத
லைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்
தணர்தில்லை யம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்
பிரான்அடி சேர்வன்கொலோ. 

பொழிப்புரை :

கூத்தாடுபவனாய், தேவர் கூட்டத்துக்குத் தலை வனாய், எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படையாய்த் தோன்றிய மூத்தவனாய், படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று செயல் களுக்கும் மூன்று வடிவங்களை எடுத்த முதல்வனாய், எல்லாச் செயல் களுக்கும் காரணமாய் இருப்பவனாய், பசுவின் பால், தயிர், நெய் முதலியவற்றை ஆகுதி செய்யும் அந்தணர்கள் வாழும் தில்லை அம்பலத்துள் பலரும் துதிக்குமாறு நிலையாகக் கூத்து நிகழ்த்துகின்ற எம் தலைவனுடைய திருவடிகளை அடியேன் சேர்வேன் கொல்லோ!

குறிப்புரை :

வானவர்தம் கொழுந்து - தேவ கூட்டத்திற்குத் தலை யாயவன். பின்னர், ``கொழுந்தாய்`` என்றது, `எல்லாப் பொருட்கும் கொழுந்தாய்`` என்றவாறு. எழுந்த - தோன்றிய; என்றது, படைப்புக் காலத்தில் முதற்கண் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு நின்றமையை, ``முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி`` என்றார் நாவுக்கரசர். (தி.6 ப.19 பா.1) `மூத்தவனை` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. மூத்தவன் - முன்னோன். நிலையை, `உரு` என்றார். முந்நிலையாவன, `படைக்கும் நிலை, காக்கும் நிலை, அழிக்கும் நிலை` என்பன. பின்னர், `முதலாகி நின்ற` என்றது, `எல்லாச் செயல் கட்கும் முதலாகி நின்ற` என்றவாறு. `நின்ற எம்பிரான்` என இயையும். ``ஆத்தனைப் படுக்கும் அந்தணர்`` என்றதற்கு, முன், `ஆவே படுப்பார் அந்தணாளர்` என்றதற்கு (தி.9 பா.196) உரைத்தவாறே உரைக்க. தான், அசைநிலை. ``தில்லை யம்பலத்துள்`` என்றதனை, ``நின்ற`` என்றதன்பின்னர்க்கூட்டுக. கொல், ஐய இடைச்சொல். ஓகாரம், இரக்கப்பொருட்டு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

சேர்வன்கொ லோஅன்னைமீர் திக
ழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத்தழுவி அணி
நீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்வங்கை மான்மறியன் எம்
பிரான்போல் நேசனையே.

பொழிப்புரை :

என் அன்னையர்களே! சிறந்த மரக்கலங்கள் வந்து அணுகும் தில்லைமாநகரில் உள்ள சிற்றம்பலத்தில் உள்ளவனாய், கையில் எழுச்சியை உடைய மான்குட்டியை ஏந்தியவனாய், எம் தலைவனாய், எம்மால் விரும்பப்படும் பெருமானுடைய விளங்கும் தாமரைமலர் போன்ற திருவடிகளை விருப்பத்தோடு தழுவி, அவன் அணிந்திருக்கும் திருநீறு என் நகில்களில் படியுமாறு அவனைத் தழுவும் வாய்ப்பினைப் பெறுவேனோ?

குறிப்புரை :

`அன்னைமீர், என் நேசனை, அவன் அணி நீற்றை என் முலைக்கு அணியுமாறு, அவன் மலர்ப் பாதங்களைத் தழுவிச் சேர்வன்கொலோ` எனக்கொண்டு கூட்டுக. ``அன்னைமீர்`` என்றது, கைத் தாயரை. அணி - அழகு. பிறராயின் சந்தன களபங்களைப் பூசிச் சேர்வர். இவன் திருநீற்றையே பூசிச் சேர்வான். ஆதலின், ``அணிநீறு அணிய`` என்றாள். வங்கம் - மரக்கலம். ஏர்வு - எழுச்சி. போல், அசை நிலை. `புவனேசன்` என்பது `போனேசன்` என மருவிற்று என்பாரும், பிற உரைப்பாரும் உளர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

நேசமு டையவர்கள் நெஞ்சு
ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
ணுதலைக் காமருசீர்த்
தேச மிகுபுகழோர் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தீசனை எவ்வுயிர்க்கும் எம்
இறைவன்என் றேத்துவனே.

பொழிப்புரை :

தன்னிடம் விருப்பமுடைய அடியவர்களின் உள்ளத்துள்ளே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு தங்கு பவனாய், பகைவர்களைத் துன்புறுத்தும் வெகுளியை உடைய பெரிய காளையை வாகனமாக இவர்கின்ற, நெற்றிக் கண்ணுடையவனாய், விரும்பத்தக்க சிறப்பினை உடைய உலகத்தில் மிகுகின்ற புகழை உடையவர்கள் வாழும் தில்லைமாநகரில் சிற்றம்பலத்தில் வீற்றிருக் கும், மற்றவரை அடக்கியாளும் பெருமானை எல்லா உயிர்களுக்கும் தெய்வமாயவன் என்று புகழ்ந்து கூறும்நான் அவன் அருள்பெறுவது என்றோ?

குறிப்புரை :

காய் சினம், இன அடை. மால் விடை - பெரிய இடபம் `திருமாலாகிய இடபம்` எனலும் ஆம். காமரு - விரும்பத்தக்க. சீர் - அழகு. `சீர்த் தில்லை` என இயையும். தேசம் மிகு புகழ் - நில முழுதும் பரவிய புகழ். ``புகழோர்`` என்றது, தில்லைவாழ் அந்தணரை. `எவ் வுயிர்க்கும் இறைவன் என்று ஏத்துவன்` என்றது, `அவனது பெருமை யறிந்து காதலித்தேன்` என்றவாறு. `இனி அவனைத் தலைப்படுதல் என்றோ` என்பது குறிப்பெச்சம். இறைவன் - தலைவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

இறைவனை ஏத்துகின்ற இளை
யாள்மொழி யின்தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்
தேத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி
ஆலைகள் சூழ்மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்
தேத்துக வான்எளிதே. 

பொழிப்புரை :

சிவபெருமானைத் துதிக்கின்ற இளம்பருவத் தலைவியின் கூற்றாக இனிய தமிழால், நான்மறைகளின் பொரு ளுணர்ந்து ஒலி பிறழாது அவற்றை ஓதுதலில் வல்லவர்கள் மகிழ்ந்து துதிக்கின்ற சிற்றம்பலம் தொடர்பாக வரப்பால் வரையறுக்கப்பட்ட வயல்கள் செந்நெற்பயிர்களோடும் மேம்பட்ட கரும்புகளின் வரிசையான ஆலைகளோடும் சூழ்ந்திருக்கும் திருமயிலாடு துறையைச் சேர்ந்த, வேதங்களில் வல்ல திருஆலிஅமுதன் பாடிய பாடல்களை விருப்பத்தோடு பாராயணம் செய்க. சிவலோகம் உங்களுக்கு மறுமையில் எளிதாகக் கிட்டும்.

குறிப்புரை :

``ஏத்துகின்ற`` என்றது, `காதலித்துத் துதிக்கின்ற` என்னும் பொருட்டு. `இளையாள் மொழியாகிய (கூற்றாகிய) இனிய தமிழால்` என உரைக்க. ``மறைவல`` என்றது பொருளுணர்தல் வன்மையையும், ``நாவலர்கள்`` என்றது, ஒலி பிறழாது ஓதுதல் வன்மையையும் குறித்து நின்றன. அறை - வரம்பால் வரையறுக்கப் பட்ட வயல்கள். `வயல்கள் செந்நெற்பயிர்களோடும், கரும்பின் ஆலைகளோடும் சூழும் மயிலை` என்க. அணி - வரிசை. மயிலை - மயிலாடு துறை. (மாயூரம்).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

வாரணி நறுமலர் வண்டு கெண்டு
பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ
சீரணி மணிதிகழ் மாட மோங்கு
தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்
ஆவியின் பரமன்றென்றன் ஆதரவே.

பொழிப்புரை :

தேன் ஒழுகுகின்ற நறுமலர்களைக் கிளறுகின்ற வண்டுகள் பாடுகின்ற பஞ்சமப் பண், சண்பகப் பூமாலை, மாலைக் காலம் என்ற இவை கச்சணிந்த அழகிய முலைகள் மெலியுமாறு தொடர்ந்து வந்து நம்மை மயக்குகின்றன. அம்மயக்கத்தைப் போக்க அழகினைக் கொண்ட மணிகள் விளங்குகின்ற மாடங்கள் உயர்ந்த தில்லையம்பலத்திலுள்ள எங்கள் செல்வனாகிய சிவபெருமான் நமக்குக் காட்சி நல்கவில்லை. என்திறத்து அருள் செய்து என்னை அஞ்சாதே என்று சொல்லக்கூடியவர் யாவர் உளர்? என் விருப்பம் என் உயிரால் தாங்கப்படும் அளவினதாக இல்லை.

குறிப்புரை :

வார் - தேன் ஒழுகுகின்ற. அணி - அழகிய. `நறுமலரை வண்டு கெண்டி (கிளறிப்) பாடுகின்ற பஞ்சமப் பண்` என்க. ``மாலை`` இரண்டனுள் பின்னது மாலைக் காலம், `பஞ்சமமும், செண்பக மாலையும், மாலைக் காலமும் ஆகிய இவை நம் வனமுலைகள் மெலியுமாறு வந்து வந்து நம்மை மயக்கும்` என்க. ஆல், ஓ அசை நிலைகள். சீர் அணி - அழகைக்கொண்ட. ``ஆர் எனை அருள்புரிந்து அஞ்சல் என்பார்`` என்றதை இறுதியிற் கூட்டுக. ``எனை`` என்றது, ``அஞ்சல் என்பார்`` என்பதனோடு முடியும். என் ஆதரவு ஆவியின் பரம் அன்று. எனது காதல் என் உயிரின் அளவினதன்று; மிக்கது. ``சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் - உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே`` (குறுந்தொகை-18) என்னும் பகுதியை நோக்குக. ஆதரவு - விருப்பம்; காதல். `அஃது என்னால் தாங்கும் அளவினதாய் இல்லை` என்றபடி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட் டம்ம அம்ம
பாவிவன் மனம்இது பைய வேபோய்ப்
பனிமதிச் சடையரன் பால தாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே
ஆவியின் வருத்தமி தார்அறிவார்
அம்பலத் தருநடம்ஆடு வானே.

பொழிப்புரை :

என் விருப்பம் என் உயிரின் தாங்கும் எல்லையைக் கடந்து மிக்குள்ளது. தீ வினையினேன் ஆகிய அடியேனை விடுத்துப் பாவியாகிய வலிய மனம் யான் அறியாதவாறு மெதுவாகச் சென்று குளிர்ந்த பிறையைச் சடைக்கண் அணிந்த சிவபெருமான்பால் சேர்ந்து விட்டது. நெஞ்சம் எனக்குப் பற்றுக்கோடாக இல்லாமையாலே மேகலையின் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் ஏற்பட, அவற்றால் என் உயிர்படும் வருத்தத்தை யாவர் அறிவார்?. அம்பலத்தில் அரிய கூத்தாடும் பெருமானே அறிவான்.

குறிப்புரை :

இரக்கத்தின்கண் வந்த `அம்ம` என்பது அடுக்கி நின்றது. பாவி மனம் - கொடுஞ் செயலை உடையதாகிய மனம். `இதுவும்` என்ற எச்ச உம்மை விரிக்க. ஆல், ஓ அசை நிலைகள். நீவி - நீக்கம்; தனிமை; மேகலை என்று கொண்டு, `நீவியின் நெகிழ்ச்சியும்` என்பது பாடம் என்பாரும் உளர். நெகிழ்ச்சி - தளர்ச்சி; மெலிவு. ``நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே`` என்றதனை ``அரன் பாலதாலோ`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `நீவி முதலியனவாகிய இவ் ஆவியின் வருத்தம்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. `நடமாடுவானே அறியும்` என ஒருசொல் வருவித்து முடிக்க. அல்லாக்கால் ``அரன்`` என்றதனோடு இயையுமாறில்லை. ``போய்`` என்பது முன்னிலைக்கண் செல்லாதாக லின், `சடைய நின்பால தாலோ` எனப் பாடம் ஓதலும் ஆகாது. இத்திருப்பாட்டிலும், வருந்திருப்பாட்டிலும், `அருள்நடம்` எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

அம்பலத் தருநட மாடவேயும்
யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.

பொழிப்புரை :

நீ பொன்னம்பலத்திலே அரிய கூத்தினை ஆடிக் கொண்டிருந்தாலும், கொடிய பழிச்செயல்களைச் செய்யும் தேவர்கள் முன்னொரு காலத்தில் உன்னை நஞ்சினை உண்பித்தார்களே. அதனால் உனக்கு என்றாவது என்ன தீங்கு நேரக்கூடுமோ என்று அஞ்சி நெஞ்சில் நிம்மதியில்லாமல் இருக்கின்றேன். தேவர்கள் கூட்டங்களை நீக்கி வலிமையுடையனவாய்ப் பலவாய் உள்ள படை யாம் தன்மையை உடைய பூதங்கள் உன்னைச்சூழ எங்கள் வீதி வழியாக என்னுடைய மிக்க பசலை நோய்தீரும் வண்ணம் எழுந்தருளுவாயாக.

குறிப்புரை :

``ஆடவேயும்`` என்றாரேனும், `ஆடுகின்றாய்` என்றும், ஊட்டினர் என்றும் கேட்டு `யாது விளைவதுகொல் என்று நெஞ்சம் அஞ்சி உய்யேனாயினேன்` என உரைத்தல் கருத்து என்க. ஏகாரங்கள் இசைநிறை. `வன்பழியாளராகிய உம்பர்` என்க. `உனக்கு ஊட்டினர்` எனச் சொல்லெச்சம் வருவிக்க. ``உய்யேன்`` என்றது `இறந்துபடும் நிலையில் உள்ளேன்` என்றபடி. வன்பழியாளராகிய கொடுமை மிகுதிபற்றி `வானவர் கணங் களை மாற்றுதல்` ஒன்றையே எடுத்துக் கூறினாளாயினும், `ஆடுதலை விட்டு எழுந்தருளாய்` என்றலும் கருத்தாம். என்னை? `ஒழியாது ஆடு தலால் இறைவற்குத் திருமேனி நோம் என்பது கருதியும் வருந்தினாளா தலின்`. பயலைமை - பசலைத் தன்மை. `எழுந்தருளின் இதுவும் தீரும்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
ஏதமில் முனிவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
குழையணி காதினின் மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கனி வாயும்என் சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க் கென்செய் கேனோ
அரும்புனல் அலமரும் சடையினானே.

பொழிப்புரை :

குற்றமற்ற பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலிய முனிவர்களோடு வெளிப்பட்ட ஞானக்கொழுந்தாகிய கூத்தப் பிரானே! உன் குழையை அணிந்த காதுகளில் உள்ள காதணிகளும் செழித்த பெரிய மலர்களை ஒத்த முக்கண்களும், சிவந்த கனி போன்ற வாயும் என் உள்ளத்தைக் கவருவதனால் துன்பத்தில் ஆழ்ந்த என் உயிர் நிலைத்திருப்பதற்கு யான் யாது செய்வேன்? அரிய கங்கை நீர் சுழலும் சடையினானே! நீ எங்கள் வீதி வழியே அடியேன் காணுமாறு எழுந்தருளுவாயாக. எழுந்தருளினால் அடியேன் உயிர்நிற்கும்.

குறிப்புரை :

``எழுந்தருளாய் எங்கள் வீதியூடே` என்பதனை இறுதியிற் கூட்டுக. ஏதம் - குற்றம். முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர் முதலியோர். `தில்லைவாழந்தணர்` எனலும் ஆம். `கொழுந்தது` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. கொழுந்து, முடிநிலை. `மாத்திரை` என்பதும் ஓர் காதணியே. வௌவ - வௌவினமையால். அழுந்தும் - துன்பத்தில் ஆழ்கின்ற. உயிர்க்கு - உயிர் நிற்றற்கு. அலமரும் - அலைகின்ற. `நீ எங்கள் வீதியூடே எழுந்தருளினால் என் உயிர் நிற்கும்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அரும்புனல் அலமரும் சடையினானை
அமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகை யார்முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

பொழிப்புரை :

கரிய பெரிய மலரை ஒத்த கழுத்தை உடையவனே! தில்லை அம்பலத்தில் எழுந்தருளியிருக்கும், தெய்வங்களுக்குள் மேம்பட்ட எங்கள் தேவனே! கங்கை சுழலும் சடையை உடைய உன்னைத் தேவர்கள் அடிகளில் விழுந்து வணங்கிப் பலவாறு தங்கள் முறையீடுகளை விண்ணப்பிக்க, அக்காலத்துப் பெரிய திரிபுரங்களைத் தீக்கிரையாக்கிய உன் வில்லாண்மையின் புகழை எடுத்துக்கூறும் அள வில், அடியேனுடைய அறியாமையை உடைய உள்ளம் உருகுகிறது. வளப்பமான மாலையை அணிந்த மகளிர் முன்னே என் பெண்மையை, உன் அழகான மலர்போன்ற திருவடிகளை அணைய வேண்டும் என்ற விருப்பத்தினாலே தோற்று நிற்கிறேன்.

குறிப்புரை :

``சடையினானை`` என்றது, `சடையை உடைய வனாகிய நின்னை` என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழு வமைதி. சிலை - வில். வார்த்தை - (வீரச்) செய்தி. ``பேசவும்`` என்ற உம்மை, `பேசுதல் ஒன்றையே பிறர் செய்யவும்` எனப் பொருள் தந்து நின்றது. நையும் - (அதனைக் கேட்ட அளவிலே) நெகிழ்ந்துருகும். கருந் தடமலர் - கரிய நீர்ப் பூ; நீலோற்பலம். கண்ட - கண்டத்தை உடையவனே. வண் தார் - வளப்பமான மாலையை அணிந்த. `தார்` என்பது இங்குப் பொதுமையில் நின்றது. காரிகையார் - பெண்கள். `அவர்கள் முன்பு` என்றது, `அவர்கள் நகைக்கும்படி` என்றதாம். பெண்மை - பெண் தன்மை; நாணம். நசை - விருப்பம். `நசையினாலே தோற்றேன்` என முன்னர்க் கூட்டுக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலை யோடிடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநட மாடில் எங்கள்
ஆருயிர் காவல்இங் கரிது தானே. 

பொழிப்புரை :

தில்லை அம்பலத்தில் எங்கள் தேவதேவனாய், மனந்தெளிந்த அந்தணர் தியானிக்கும் இடமாகிய சிற்றம்பலத்தில் உள்ள அழகுமிக்க ஒளி வடிவினனாய், அடியேனுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த என் தந்தையே! பல்லோடு கூடிய பிரம கபாலமாகிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி இருட்டில் கால்கள் இடற, உன் திருவடிகளாகிய மெல்லிய மலர்கள் அடியிடுதலால் நோவ, நீ சென்று இருளில் அரிய கூத்தாடினால், உன் செயல்பற்றிக் கவலைப்படும் அடியேங்களுடைய அரிய உயிரை நீங்காமல் பாது காப்பது அரிய செயலாகும். ஆதலின் இருளில் நடம்புரிதலை நீக்கு வாயாக.

குறிப்புரை :

``தேவதேவை`` என்றதும், முன் திருப்பாட்டில், `சடையினானை` என்றதுபோன்ற வழுவமைதி. தேறிய அந்தணர் - தெளிந்த அந்தணர்கள்; என்றது, `ஞானத்திற் சிறந்த அந்தணர்` என்றவாறு. எல்லை - இடம்; என்றது சிற்றம்பலத்தை. ``எல்லையது`` என்றதில் உள்ள அது, பகுதிப்பொருள் விகுதி. `எல்லையதன்கண்` என ஏழனுருபு விரிக்க. ஆகிய - பொருந்திய. காவல் கொண்டு - காத்து. பல்லைப் பொருந்திய பசுந்தலை, இடுகாட்டுள் நரி முதலிய வற்றால் இழுக்கப்பட்டுக் கிடப்பன பல்தோன்றக் கிடத்தலை, ``பல்லை ஆர்`` என்றார். `பாதம் அவற்றோடு இடறுதலால் அம்மலரடி நோவ` என்க. அல்லினில் - இருளில். ஆடில் - ஆடினால். ஆருயிர் காவல் - ஆருயிரை யாங்கள் காத்தல். அரிது - இயலாது. `ஆதலின், இனி அதனை ஒழிக` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

ஆருயிர் காவல்இங் கருமை யாலே
அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரே எங்கள் தில்லை வாணா
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 

பொழிப்புரை :

இவ்வுலகில் தன்னுடைய அரிய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இயலாமையாலே அந்தணர் மகனாகிய மார்க்கண்டேயன் உன் திருவடிக்கண் வணங்க, கூரிய முனையினை உடைய வேலாகிய படைக்கலனை ஏந்திய கூற்றுவன் அழியுமாறு உன் கழல் ஒலிக்கும் திருவடி ஒன்றினைச் செயற்படுத்த நீ போரிட்டனை என்றால் தேவர்களில், குறைவில்லாதவர்கள் யாவர்? அவரவர் நுகரும் துயரங்களைப் போக்குதற்கு ஒருப்பட்டு நிற்கின்ற சிறந்த உயிர்போல்பவனே! எங்கள் தில்லையம்பதியில் வாழ்கின்றவனே! நீ காவாதொழியின் சேயிழையார் ஆகிய மகளிருக்கு இனி உயிர் வாழ்தல் அரிது.

குறிப்புரை :

இங்கு ஆருயிர் காவல் அருமையால் - இவ்வுலகில் தனது அரிய உயிரைக் காத்துக்கொள்ளுதல் இயலாமையால். அந்தணர் மதலை, மார்க்கண்டேயர். `சாய மலைந்தது` என இயையும். குரை கழல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த பாதம். பணிகொள - செயல் கொள்ளும்படி. மலைந்தது, தொழிற் பெயர். `மலைந்தது குரைகழல் பணிகொள என்றால்` என மாற்றுக. `கூற்றுவனைச் சாய்த்தது திருவடி ஒன்றினாலே என்றால்` என, இறைவனது பெருமையை வியந்தவாறு. ``குறைவு`` என்றது, `அடங்குதல்` என்னும் பொருட்டாய், `குறைவு இலாதார்` என்றது, `உனக்கு அடங்குதல் இல்லாதவர்` எனப் பொருள் தந்தது. சீர் உயிரே - சிறந்த உயிர்போல்பவனே. `ஏனைத் தேவர் ஒருவருக்கும் இல்லாத உனது இப்பெருமையை உணருந்தோறும் சேயிழையார்க்கு இனி வாழ்வு அரிது` என இயைபு படுத்தி உரைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

சேயிழை யார்க்கினி வாழ்வரிது
திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராஉன்
பாயிரும் புலியத ளின்னு டையும்
பையமே லெடுத்தபொற் பாத முங்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈசனேயோ. 

பொழிப்புரை :

திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே! எங்களை அடிமைகொள்ளும் ஈசனே! நீ தாயை விட மிக நல்லவனாய் உள்ளாய் என்று உன்னைச் சரண்யனாக அடைந்தேன். எல்லோருக்கும் நன்மையைச் செய்கின்றவனே! நீ இப்பெண்ணுடைய தனிமைத் துயரை நினைத்துக்கூடப் பார்க்காதவனாக உள்ளாய். உன்னுடைய பரவிய புலித்தோல் ஆடையையும் மெதுவாக மேலே தூக்கிய அழகிய திருவடியையும் கண்டே இப்பெண் தன் சங்கு வளையல்களை இழந்தாள். நீ அருளாவிடின் இனி மகளிருக்கு உயிர்வாழ்தல் அரிதாகும்.

குறிப்புரை :

`தாயினும் மிக நல்லையாகிய நீ இவளது தனிமைத் துயரை நினைகின்றாய் இல்லை` என்றபடி. ``பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து` (தி.8 பிடித்த-9) என்னும் திருவாசகத்தை நோக்குக. `சங்கரா` என்றதும், நீ சுகத்தைச் செய்பவன் அல்லையோ என்னும் குறிப்புடையது. `உன் உடை` என இயையும். `பாய் புலி, இரும் புலி` என்க. இரு - பெரிய. அதள் - தோல். ``அதளின்`` என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. ``அதளின்னுடை`` என்றதில் னகர ஒற்று விரித்தல். `இவள் சங்கம் இழந்தது, உனது உடையையும், பாதத்தையும் கண்டே` என்க. ஆவா, இரக்கக் குறிப்பு, ஓகாரமும் அன்னது. இத்திருப்பாட்டு ஒன்றும் செவிலி கூற்று. ஏனைய தலைவி கூற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

எங்களை ஆளுடை ஈசனேயோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே. 

பொழிப்புரை :

எங்களை அடிமையாகக் கொண்ட ஈசனே! இள முலையின் முகடு நசுங்குமாறு உன்னைத்தழுவி உன்னுடைய அழகிய பங்கயம் போன்ற முகத்தை நோக்கி நீ அணிந்திருக்கும் குளிர்ந்த பிறையின் நிலவொளி என்மேல் பரவ, சிவந்த கயல் மீன்களை ஒத்த கண்களை உடைய இளைய பெண்கள் காணுமாறு, அவர்கள் கண் எதிரே திருச்சிற்றம்பலத்தில் உன்னோடு புகுந்து, அங்கு உனக்குக் குற்றேவல்கள் பல நாள்தோறும் செய்து உன் அருளைப் பெறும் வாய்ப்பு உண்டாயின் இவ்வுலகில் பலகாலம் இருக்கலாம். உன் அருள் கிட்டாவிடின் அஃது இயலாது.

குறிப்புரை :

நெக - குழைய. முயங்கி - தழுவி. பொற் பங்கயம், இல் பொருள் உவமை. நிலவு - மதியினது ஒளி. அது, பகுதிப்பொருள் விகுதி. ``செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே`` என்றது, `ஏனைய மகளிரினும் முற்பட்டு` என்றவாறு. `முன்னே புகுந்து` என இயையும். உடனே - விரைவாக. `நாளும் செய்து` என முன்னே சென்று இயை யும். அகலிடம், பூமி. இருக்கலாம் - உயிர்வாழ்தல் கூடும். `ஈசனேயோ, முன்னே` உடனே புகுந்து, முயங்கி, நோக்கி நோக்கி நாளும் பணி பல செய்து அருள்பெறின் இருக்கலாம்; அல்லது கூடாது` எனத் தனது ஆற்றாமை மிகுதி கூறினாள். இதனால் இவ்வாசிரியரது பேரன்பு அறியப்படும். ``நிலவு என்மேல் படரப் பணி பல செய்து`` என்றதனால், `அணுக்கத் தொண்டுகள் பல செய்து` என்றதாயிற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

அருள்பெறின் அகலிடத் திருக்க லாமென்
றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியு மையாள்
கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே. 

பொழிப்புரை :

சிவபெருமானுடைய அருள் கிட்டினால் பரந்த தத்தம் உலகில் பலகாலம் இருக்கலாம் என்று இந்திரனும், பிரமனும் திருமாலும் ஆகிய அறிவுடையவரின் மேம்பட்டார் இருவரும், இன்றும் எங்கள் கூத்தப்பிரானைத் துதிக்கிறார்கள். இறைவனுக்கு மையல் ஏற்படுவதற்குக் காரணமான மழலை போன்ற மென்மையான சொற்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெருமானை அடைவதற்குத் தீவினையை உடைய அடியேனுடைய நெஞ்சம் சுழல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஆசை இவ்வளவுதான் இருத்தல் வேண்டும் என்று ஆசையை அளவுபடுத்தி ஆசைகொள்பவர் இவ் வுலகில் யாவர் உளர்?

குறிப்புரை :

``மிக்கார்`` என்றது, `மிக்காராய்` என முற்றெச்சம். ஏத்துதலால், அறிவுடையாரின் மிக்காராயினர். ``மிக்கார்`` என்ற தனைப் பெயராக்கி, அமரர்தம் தலைவன் முதலியோருக்கு ஆக்கி உரைப்பாரும் உளர். `கூத்து` என்றது, `கூத்தனை` என ஆகுபெயராய் நின்றது. மருள்படு - இறைவற்கு மையல் உண்டாதற்கு ஏதுவான. வினையாட்டியேன் - வினையை உடையளாகியேன். `நான் அருள் பெறுதலைக்கருதி என் நெஞ்சம் அலமரும்` என்க. ``ஆசையை அளவறுத்தார் இங்குஆர்`` என்றது வேற்றுப்பொருள் வைப்பு. `எங்கள் கூத்தனை, உமையாள் கணவனை அமரர்கள் தலைவன் முதலாயினோர் (அவன் அருள் பெறமாட்டாது) ஏத்துகின்றாராக, வல் வினையாட்டியேனாகிய நான் பெற நெஞ்சம் அலமரும்; ஆதலின், ஆசையை அளவறுத்தார் இங்கு ஆர்` எனக் கூட்டி முடிக்க. ஆவா, வியப்புக் குறிப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

ஆசையை அளவறுத் தார்இங் காரே
அம்பலத் தருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வண்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார்
மலைமகள் கணவனை யணைவர் தாமே. 

பொழிப்புரை :

உலகிலே ஆசையை அளவுபடுத்தி ஆசை வைப் பார் யாவர் உளர்? பொன்னம்பலத்தில் அரிய கூத்து நிகழ்த்தும் சிவ பெருமானை நறுமணம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய மகளிர் நாள்தோறும் மனத்தால் கூடியதனால் அவனுடைய மாலையைப் பெறுவதற்காக ஏற்பட்ட பூசலைப்பற்றிக் குற்றமற்ற வேத வாக்கியங்கள் பலவற்றை ஓதும் நாவினனாகிய வண்மையை உடைய புருடோத்தமன் படைத்துக்கூறிய பாடல்களாகிய மலர்களைக் கொண்டு, பார்வதி கணவனாகிய சிவபெருமானைத் துதிக்க வல்லவர் கள் அவனை மறுமையில் சென்று அடைவார்கள்.

குறிப்புரை :

``ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே`` என்பதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. `ஆசையை அளவறுத்தல் இயலாதாகலின் மடவார் பலரும் கலந்தெழுவாராயினர்` என்றவாறு. `நடம் ஆடுவானைக் கலந்து எழும்` என இயையும். கலந்து-மனத்தாற் கூடி. இனி, ``கலந்து`` என்றதனை, `கலக்க` எனத் திரித்தலும் ஆம். வைகலும் - நாள்தோறும். மாலைப் பூசல் - மாலையைப் பெற. `நான் நான்` என்று செய்யும் பூசல். `பூசலை உரைத்த வாசகம்` என்க. `கண்டு` என்றது, `படைத்து` என்றவாறு. வாசக மலர்கள் - சொற்களாகிய பூக்கள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

வானவர்கள் வேண்ட
வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை
ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந்
தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே
நாடகமே யாடுவரே. 

பொழிப்புரை :

தேவர்கள் வேண்டியதனால் பெருகி வந்த விடத்தை உண்ட பெருமானார் அவர்களைக் காப்பாற்றினார். ஆனால் அடியவள் ஆதற்கு எந்தக் குறைபாடும் இல்லாத அடியேனுடைய கைகளில் இருந்த ஒளிவீசும் வளைகளைக் கைப்பற்றி எனக்கு இறந்து பாட்டை நல்கலாமா? தேனிலே பெரிய கோடுகளை உடைய வண்டு கள் ஒலிக்கும் தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலத்தில் கூத்தாடும் பெருமான், நான் அவரை நம்முடைய உறவினர் என்று சொல்ல முடியாதபடி என்துன்பத்தைப் போக்காது நாடகத்தை நடிக்கின்றார்.

குறிப்புரை :

`தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்று அவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து எனக்கு இறந்துபாடு உறுவிக்கின்றாரோ! இது வியப்பா கின்றது` என்பது, முதல் இரண்டடிகளின் பொருள். ஓகாரம், இழிவு சிறப்பு. `தேன் வண்டு` என இயையும். நமர் - நம் உறவினர். என்னாது - என்று சொல்லாதபடி; என்றது, `என் துன்பத்தைத் தவிர்க்காதுநின்று` என்றதாம். ``நாடகம்`` என்றது சிலேடை; இறைவனது அருட் கூத்தோடு, போலி வேடங்கொண்டு நடித்தலையும் குறித்தலின். தனக்கு அருளாமை பற்றி, அனைத்துயிர்க்கும் அருள்புரியும் கூத்தினை, `நாடகம்` என்றாள் என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆடிவரும் காரரவும்
ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன்
தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும்
தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே
நிற்கவுமே ஒட்டாரே. 

பொழிப்புரை :

ஆடிக்கொண்டுவரும் கரிய பாம்பினையும் அழகிய பிறையையும் பசியகொன்றைப்பூமாலையையும் எம்பெருமான் சூடிவருதலைக்கண்ட நான் அவரிடத்து மையலால் உடல்மெலிய என் தோள்வளைகள் நெகிழ அவற்றை இழந்தாலும், தேவர்கள் தேடிக் கொண்டுவந்து முன்நின்று துதிக்கும் அச்சிற்றம்பலத்துப் பெருமானார் தாம் கூத்தாடிக் கொண்டு வரும் பொழுது அவர் அருகே நின்று அவர் கூத்தினை அடியேன் காணும் வாய்ப்புப்பெறாதபடி விரட்டுகிறார்.

குறிப்புரை :

காரரவு - கரும் பாம்பு. ஐம்மதி - அழகிய சந்திரன். ``கண்டேன்`` என்றதைப் பெயராக்கி, அதனை, ``தோற்றாலும்`` என்ப தனோடு முடிக்க. ஆடிவருதல், வீதியின்கண் என்க. `நான் வளை களைத் தோற்கும் அளவிற்குக் காதல் கரைகடந்து நிற்கவும், இவர் என்னை அருகணையவும் ஒட்டாது ஓட்டுகின்றார்; இவர் தம்மைக் காதலித்தார்க்கு அருளுந்திறம் இதுதான் போலும்` என்றபடி.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

ஒட்டா வகைஅவுணர்
முப்புரங்கள் ஒர்அம்பால்
பட்டாங் கழல்விழுங்க
எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஒவாத்
தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக்
கோல்வளைகள் கொள்வாரே. 

பொழிப்புரை :

பொருந்தாத பகைமை பாராட்டிய அசுரர்களின் மும்மதில்களையும் தீப்பட்டு அவற்றை விழுங்குமாறு அம்பு எய்து மகிழ்ந்த பண்பாளராம், உயர்வு பொருந்திய வேதஒலி நீங்காத தில்லைச் சிற்றம்பலத்து எம்பெருமானார் மத்தளம் முதலியவை முழங்கப் பொருத்தமாகக் கூத்து ஆடுதலால் அதன்கண் ஈடுபட்ட அடி யேனுடைய திரண்ட வளையல்களைக் கைப்பற்றுவார் ஆயினார்.

குறிப்புரை :

ஒட்டா வகை அவுணர் - பொருந்தாத வகைமையை (பகைமைக் குணத்தை) உடைய அசுரர். `ஓர் அம்பால் எய்து` என இயையும். `அழல் பட்டு விழுங்க` என மாற்றுக. ஆங்கு, அசைநிலை. உகந்த - தேவர்களை விரும்புகின்ற. `சிட்டம்` என்பதன் ஈற்றில் அம் முக்குறைந்து நின்றது. சிட்டம் - உயர்வு: கொட்டு ஆம் நடம் - மத்தளம் முதலியவற்றின் முழக்கம் பொருந்திய நடனம். ஆட - ஆடுதலால். `ஆடி` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `கொடியோரை அழித்து நல்லோரை விரும்பிக்காக்கும் பண்புடையார், என் கோல் வளை களைக் கொள்வார்; இது தக்கதோ` என்றபடி.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

ஆரே இவைபடுவார்
ஐயம் கொளவந்து
போரேடி என்று
புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத்
தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை
ஒக்கின்றார் காணீரே. 

பொழிப்புரை :

நற்குணங்கள் உடையார் எவர்தாம் இக்குணங்கள் தோன்ற நிற்பவர் ஆவர்? பிச்சை பெறவந்து ஏடீ! என்று என்னை அழைத்துப் புருவத்தால் போரிடுகின்றார். அஃதாவது புருவங்களை நெரித்துக் காதல் குறிப்பை உணர்த்துகின்றார். தேர்கள் நிறைந்ததாய்த் திருவிழாக்கள் இடையறாது நிகழ்த்தப்படும் தில்லைநகரிலுள்ள சிற்றம்பலத்து எம்பெருமானார் நோய் மாத்திரமே செய்து அந்நோய் தீரும் பரிகாரத்தைச் செய்யாமையின் நீங்காத நோயைச் செய்யு மவரை ஒத்துள்ளார். அவரை நீங்களும் வந்து காணுங்கள்.

குறிப்புரை :

ஆரே - நற்பண்புடையார் எவர்தாம். இவை படுவார் - இக்குணங்கள் தோன்ற நிற்பார். செய்யுளாதலின் சுட்டுப் பெயர் முன்வந்தது. எனவே, ``இவை`` என்றது, பிச்சையேற்பார்போல வந்து பெண்டிரை மயங்கச்செய்வனவாய பின்வருங் குணங்களையாயிற்று. ஐயம் - பிச்சை. ``போர்`` என்றதை. ``புருவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ஏடி - பெண்பால் விளிப்பெயர். `புருவத்தால்` என உருபு விரிக்க. புருவத்தால் போரிடுதலாவது. புருவத்தை நெறித்துக் காதற் குறிப்புணர்த்துதல். இதனை, ``போர்`` என்றாள்; நோய் மாத்திரமே செய்துபோதலின். தீராநோய் செய்வார் - கெடுத்தொழியும் இயல்பினர். ஒக்கின்றார் - அவரோடு ஒரு தன்மையராய்க் காணப் படுகின்றார். ``ஒக்கின்றார்`` என்றதனால் `இவரது இயல்பு அதுவன்று` என்பது பெறப்பட்டது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

காணீரே என்னுடைய
கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத்
தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேற்
பூவம்பாற் காமவேள்
ஆணாடு கின்றவா
கண்டும் அருளாரே. 

பொழிப்புரை :

என்னுடைய கைவளையல்களைக் கவர்ந்து கொண்ட பெருமானார் ஆகிய, வானளாவிய அழகிய மாடங்களை உடைய தில்லைநகரின் சிற்றம்பலத்தில் நடனமாடுபவர், அணிகலன் களை அணிந்த அழகிய முலைகளின்மேல் பூக்களாகிய அம்புகளை எய்து மன்மதன் தன் ஆண்மையைக் காட்டி நிற்றலைக் கண்டும் எனக்கு அருள் செய்கிறார் அல்லர். அவருடைய இந்த அருளற்ற செயலை என் தோழிகளாகிய நீங்களும் காணுங்கள்.

குறிப்புரை :

காணீர் - காணுங்கள். ஏகாரம், அசைநிலை. சேண் ஆர் - வானத்தைப் பொருந்திய. பூண் ஆர் - ஆபரணம் நிறைந்த. வனம் - அழகு. ஆண் ஆடுதல் - தமது ஆண்மையை (வீரத்தை)க் காட்டிநிற்றல்.
சிற்றம்பலவர் என்னுடைய கைவளைகள் கொண்டார்; (ஆயினும்) காமவேள் ஆண் ஆடுகின்றவா கண்டும் தாம் அருளார் `இது காணீரே` எனக்கூட்டுக.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

ஏயிவரே வானவர்க்கும்
வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும்
தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியஞ் சூடிய
தில்லைச்சிற் றம்பலவர்
வாயின கேட்டறிவார்
வையகத்தா ராவாரே. 

பொழிப்புரை :

பிறையைச்சூடிய தில்லைச்சிற்றம்பலவர் ஆகிய பெருமானாரே தேவர்களுக்கும் மேம்பட்டவர் என்கின்றனர். இவரே எல்லோருக்கும் தாயும் தந்தையும் ஆவார் என்கின்றனர். இவர் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டு அவற்றை மெய்ம்மொழி யாக மனங்கொள்பவர் இவ்வுலகத்தில் பலகாலம் இருப்பதனை விடுத்து இறந்துபாடுற்று விரைவில் வானகத்தார் ஆவர்.

குறிப்புரை :

`ஏ` என்றது, இகழ்ச்சி குறித்தது. ``தேய்மதியஞ்சூடிய`` என்பதும் அன்னது. ``இவர்`` என்றது சிற்றம்பலவர் சொல்லைத் தலைவி தன் கூற்றிற் கூறியது. வானவர்க்கும் வானவர் - தேவர்க்கும் தேவர். ஏகாரம், தேற்றம். ``தில்லைச் சிற்றம்பலவர்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``என்பர்`` என்றாள். வாயின - வாயி னின்றும் வரும் சொற்கள். `சொல் என்னாது வாயின என்றாள். `மெய் யல்லது கூறாதவாய்` என அதனது சிறப்புக் கூறுவாள் போன்று பொய் கூறும் வாயாதலை உணர்த்தற்கு. `ஒருத்திக்கு நலம்செய்யாத இவர் அனைத்துயிர்க்கும் நலம் செய்வாராகத் தம்மைக் கூறிக்கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்` என்பது கருத்து. ``ஆவாரே`` என்றதில் உள்ள ஏகாரம், எதிர்மறைப்பொருட்டாய் நின்றது. `வையகத்தார் ஆகார்` என்றது, `வானகத்தார் ஆவர்` என்னும் பொருட்டாய், `இவர் வாய் மொழியைத் தெளிந்தோர்க்கு உளதாவது இறந்துபாடேயாம்` என்னும் குறிப்பினைத் தந்து நின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

ஆவா இவர்தம் திருவடி
கொண் டந்தகன்றன்
மூவா உடல்அவியக்
கொன்றுகந்த முக்கண்ணர்
தேவாம் மறைபயிலும்
தில்லைச்சிற் றம்பலவர்
கோவாய் இனவளைகள்
கொள்வாரோ என்னையே. 

பொழிப்புரை :

தெய்வத்தன்மை பொருந்திய வேதஒலி பலகாலும் கேட்கப்படுகின்ற தில்லைச்சிற்றம்பலத்துக் கூத்தனார் ஆகிய இவர், ஐயோ! என்று கேட்டார் இரக்கப்படுமாறு தம்திருவடிகளால் காலனுடைய மூப்படையாத உடல் அழியுமாறு அவனைக்கொன்று மகிழ்ந்த முக்கண்களைஉடைய மூர்த்தியாவர். அடியவன் ஒருவனைக் காத்த அப்பெருமானார் எனக்குத் தலைவராய் வந்து யான்அணிந்த இனமான வளையல்களை என்னிடமிருந்து கைப்பற்றி அவர் அடிய வளாகிய என்னைத் துன்புறுத்துவாரோ?

குறிப்புரை :

ஆவா, இரக்கக் குறிப்பு. ``இவர்`` என்றது எழுவாய். அந்தகன் - கூற்றுவன். மூவா உடல் - அழியாத உடல்; அமர தேகம். அவிய - அழியும்படி. உகந்த - தம் அடியவனை விரும்பிக் காத்த ``முக்கண்ணர்`` என்றது, `இறைவர்` என்றபடி. இதன்பின், `அவ்வாறாக` என்பது வருவிக்க. தே ஆம் - தெய்வத் தன்மை பொருந்திய. `சிற்றம்பலவராகிய இவர்` என முன்னே கூட்டுக. செய்யு ளாதலின் சுட்டுப்பெயர் முன் வந்தது. ``கோவாய்`` என்றதன்பின் `வந்து` என ஒருசொல் வருவிக்க. `கோவா வளை` என்பது பாடம் அன்று. ``கொள்வாரோ`` என்ற ஓகாரம் சிறப்பு. `இது தக்கதன்று` என்பது குறிப்பெச்சம். `என்னை வளைகள் கொள்வார்` என முன்னே கூட்டுக. `வளைகள் கொள்ளுதல்` என்பது `மெலிவித்தல்` எனப் பொருள்தந்து, ``என்னை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

என்னை வலிவார்ஆர்
என்ற இலங்கையர்கோன்
மன்னு முடிகள்
நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித்
தில்லைச்சிற் றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார்
ஒவ்வார்இம் முத்தரே. 

பொழிப்புரை :

என்னைத் தம்வலிமையால் அடக்கவல்லவர் யாவர் என்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய நிலை பெற்ற முடிகளை நசுக்கிப் பார்வதியின் அச்சத்தைப் போக்கிய மணவாளர் செந்நெல் விளையும் வயல்களால் சூழப்பட்ட தில்லைச் சிற்றம்பலவர் ஆவர். இயல்பாகவே பாசங்கள் இல்லாத இப்பெருமான் முன்பு தம்மை விரும்பியவர்களுடைய அச்சத்தைப் போக்குபவராக இருந்தமைபோல இக்காலத்தில் இருப்பவராகத் தோன்றவில்லை.

குறிப்புரை :

வலிவார் - வலிசெய்வார்; நலிகின்றவர். ``வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான்`` (தி.12 பெ.பு.திருநீலகண்ட - 32.) என்றது காண்க. மணவாளர் - அழகர். ``மணவாளர்`` என்றாள், உமையது அச்சத்தைத் தவிர்த்தமை கருதி. அதனால், இவளது காதல் மீக்கூர்தல் பெறப்படும். `மணவாளர் இச்சிற்றம்பலவர்`` எனச் சுட்டும், `ஆயினும்` என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. தான், அசைநிலை. கண்டறிவார் - சிலரால் கண்டறியப்பட்டவர்; என்றது, `சிலர் தலைப்பட்டுணர்ந்து, ``அற்றவர்க்கு அற்ற சிவன்`` (தி. 3 ப.120 பா.2.) என்றாற்போலக் கூறப்பட்டவர்` என்றபடி. அவ்வியல்பு தன்னளவில் இவர்மாட்டுக் காணப்படாமையின், ``முன்னம் கண்டறிவார் ஒவ்வார்`` என்றாள். ``அறிவார்`` என்றது காலமயக்கு.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

முத்தர் முதுபகலே
வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக
என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும்
தில்லைச்சிற் றம்பலவர்
கைத்தலங்கள் வீசிநின்
றாடுங்கால் நோக்காரே. 

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்கள் இல்லாத எம்பெருமான் நண்பகல் நேரத்தில் வந்து அடியேனுடைய வீட்டில் புகுந்து `அன்பராய் உள்ளார் பிச்சை வழங்கட்டும்` என்று வாயால் யாதும் பேசாமல் என் உருவம் முழுதும் பார்த்தவர், அத்தகைய, சான்றோர்கள் குழாம் நெருங்கிய சிற்றம்பலப் பெருமான் தம் கைகளை வீசி ஆடுங்கால் பண்டுபார்த்து அடையாளம் கண்ட அடியேனை நோக்குகின்றார் அல்லர்.

குறிப்புரை :

முத்தர் - இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். முதுபகல் - முற்றிய பகல்; நண்பகல். பத்தர் பலி இடுக - அன்பராய் உள்ளார் பிச்சை இடுவார்களாக. எங்கும் - எனது உருவம் முழுதும். `இல்லில் வந்து என்னை முழுதும் நோக்குதல் பற்றி இவர் நமக்கு அருளுவார் என்று கருதி யான் இவர் தம் மன்றிற்குச் சென்றால், என்னைச் சிறிதும் கடைக்கணிக்கின்றிலர்` என்பாள், ``இல்புகுந்து பார்க்கின்றார்; ஆடுங்கால் நோக்கார்`` என்றாள். `இஃது இவர் வஞ்சகச் செயல்போலும்` என்றவாறு. இறைவனது திருவருளைப்பெற விரைவார் இறைவனை இங்ஙனம் கூறுதல் இயல்பு என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

நோக்காத தன்மையால்
நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து
மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந்
தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள்
கொள்வாரோ ஒண்ணுதலீர். 

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நெற்றியை உடைய என் தோழிமீர்! காளைவாகனத்தை விரும்பி இவரும் தில்லைச்சிற்றம் பலவர் தம்மை முழுமுதற்கடவுளாக மதித்த திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கி, அவ்வாறு மதிக்காத தன்மையால் நாம் உனக்கு அருள் செய்யக்கருதேம் என்று பிரமனைப் பழித்து அவன் நடுத்தலையைக் கைந்நகத்தால் கிள்ளி எடுத்தவராவார். அப்பெருமான் என் ஊர்க்கண் வந்து தன்னையே பரம் பொருளாக வழிபடும் என்னுடைய வளை களைக் கவர்ந்து என்னை வருத்துவாரோ?

குறிப்புரை :

``மாற்கு ஆழி ஈந்து`` என்பதை, ``நிந்தித்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நோக்காத தன்மையால் - நீ எம்மை முதற்கடவுள் என்று மதித்தலைச் செய்யாத காரணத்தால். யாம் நோக்கிலோம் என்று-நாம் உன்னை நம் அடியவருள் ஒருவனாகக் கருதி இரங்கி லோம் என்று சொல்லி. மலரோன் - பிரமன். அவனை நிந்தித்தமை. அவனது நடுத்தலையை உகிரால் அறுத்தமை. `திருமாலுக்கு ஆழி (சக்கரம்) ஈந்ததும், அறக் கடவுளை ஊர்தியாகக் கொண்டதும் அவர் களது வழிபாட்டினால்` என்பது பிரமனுக்குக் கூறிய குறிப்புப்பற்றி வருவித்துகொள்ளப்படும். ஊர்க்கே வந்து - ஊரினுள் தாமே வந்து. `வழிபடுபவர்க்கு அளியும், வழிபாடாதோர்க்குத் தெறலும் செய்கின்ற இவர் வழிபாடுடைய என்மாட்டுத் தெறலைச் செய்கின்றது என்னோ` என்பதாம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 11

ஒண்ணுதலி காரணமா
உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் றன்னைப்
புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப் பத்தும்
பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்
கினிதா இருப்பாரே. 

பொழிப்புரை :

தேவர்கள் தொழுது புகழும் நெற்றிக்கண்ண னாகிய சிவபெருமானைப் பற்றித் தலைவி கூற்றாகப் புருடோத்தமன் பாடிய, யாழை எழுவிப்பாடுதற்கு உற்ற தலையாய இப்பத்துப் பாடல்களையும் நன்கு உணர்ந்து ஆடிக் கொண்டு பாடுபவர், இவ் வுலகில் எல்லோராலும் மதிக்கப்படுதலைப் பொருந்தி மறுமையில் சிவலோகத்தில் மகிழ்வாக இருப்பார்கள்.

குறிப்புரை :

ஒண்ணுதலி, இதனுள்கூற்று நிகழ்த்திய தலைவி. `காரணமாச் சொன்ன` என இயையும். `பண்ணு பத்து` என இயைத்து வினைத்தொகையாக்குக. பண்ணுதல் - யாழைப் பண்ணுக்கு ஏற்ப அமைத்தல். `அங்ஙனம் அமைத்துப் பாடுதற் குரிய பத்துப் பாடல்கள்` என்றவாறு. தலைப் பத்து - தலையாய பத்துப் பாடல்கள். பயின்று - கற்று. எண்ணுதலைப் பட்டு - யாவராலும் மதிக்கப் படுதலைப் பொருந்தி. அங்கு - சிவலோகத்தில்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள் அயற் சார்வதி னால்இவள்
வேலை யார்விட முண்டுகந் தீரென்று
மால தாகுமென் வாணுதலே.

பொழிப்புரை :

சேல்மீன்கள் உலாவும் வயல்களை உடைய தில்லையம்பதியில் உள்ள பெருமானே! என்னுடைய ஒளி பொருந்திய நெற்றியை உடைய மகளாகிய இத்தலைவி பல நாள்கள் உம் அருகிலேயே பொருந்தியிருப்பதனால், `கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களைக் காத்த மகிழ்ச்சியை உடையீர் நீர்` என்று உம் திறத்துக் காம மயக்கம் கொண்டுள்ளாள்.

குறிப்புரை :

அயல் சார்வது - பக்கத்தில் அணுகி நிற்றல். இது நாள் தோறுமாம். வேலை ஆர் - கடலில் நிறைந்து தோன்றிய. உகந்தீர் - அதனையே அமுதமாகக் கொண்டீர். என்று - என்று இடையறாது கூறி. மால் ஆகும் - பித்துடையவள் ஆகின்றாள். `அவளுக்கு அருளல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். அது, பகுதிப்பொருள் விகுதி. வாள் நுதல் - ஒளியையுடைய நெற்றி; இஃது ஆகுபெயராய், `ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்` எனப் பொருள்தந்தது. ``அயற் சார்வதினால் மாலதாகும்`` என்றதனால், இறைவரது வசீகரம் விளங்கும். ``விடம் உண்டு உகந்நீர்`` என்றதனால், `அதனினும் நான் கொடியளோ` என்பது குறித்தாள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாண மற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே. 

பொழிப்புரை :

என் அழகியமகளாகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய இக்கொடி போல்வாள் மிகவும் காம மயக்கம் கொண்டு நாணமற்றவளாய் உள்ளாள். இவளைப்பழைய நிலையில் கொண்டுவரும் வழியை நான் அறியேன். மாளிகைகளின் மேற்பகுதி ஆகாயம் வரையில் உயர்ந்த மாளிகைகளை உடைய தில்லையம் பதியில் உள்ள பெருமானே! உம்மைக் கண்டால் இவள் மெலிவு இல்லாதவள் ஆவாள். ஆதலின் இவளுக்கு நீர் காட்சியையாவது வழங்குதல் வேண்டும்.

குறிப்புரை :

கொடி - கொடிபோன்றவள். மிக அற்றனள் - முழுதும் நீங்கினாள். ``இனி`` என்றதன்பின் `விளைவது` என்பது வருவிக்க. `இனித் தெருவில் வந்து உம்மைத் தூற்றுவாள்` என்பது குறிப்பு. நுதல் - மாளிகைகளின் நெற்றி. `நுதல் சேணிற்பொலி தில்லை` என்க. சேண் - ஆகாயம். எய்ப்பு - மெலிவு. இலள் - இல்லாதவள் ஆவள். `ஆதலின், உமது காட்சியையேனும் அவளுக்கு வழங்குதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

காரி கைக்கரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழ லாள்இவள் விம்முமே. 

பொழிப்புரை :

கரிய பெரிய யானையின் தோலைக் கிழித்து உரித்து அதனை மேற்போர்வையாக அணிந்தவரே! `மேம்பட்ட சிறப்பினை உடைய தில்லை நகரில் உள்ளவனே! சிவபெருமானே!` என்று தேன் பொருந்திய நல்ல கூந்தலைஉடைய இவள் நாக்குழறிப்பேசுகிறாள். இப்பெண்ணுக்கு நீர் அருள் செய்வீராக.

குறிப்புரை :

``காரிகைக்கு அருளீர்`` என்றதை இறுதிக்கண் கூட்டி, ``காரிகைக்கு`` என்றது, `இவட்கு` எனச் சுட்டளவாய் நின்றதாகலின், ``இவள்`` என்றதற்கு, `காரிகை` என உரைக்க. `கருங்கரி, மால் கரி` எனத் தனித்தனி இயைக்க. மால் - பெரிய. ``ஈர் உரித்து`` என்றது, ``ஈர்ந்து உரித்து`` எனப் பொருள் தந்தது, ``வரிப்புனை பந்து`` (முருகு - 68) என்றாற் போல. சீர் இயல் - தன் புகழ் எங்கும் பரவிய. வேரி - தேன். `குழலாளாகிய இவள்` என்க. ``சீரியல் தில்லையாய்`` என்றது தலைவி கூற்றாய் வேறு முடிதலின், பால் வழுவாகாமை உணர்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா
உம்மை யேநினைந் தேத்தும் ஒன்றாகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.

பொழிப்புரை :

பெரிதும் தேம்பிப் பெருமூச்சுவிட்டு அடியேனை ஆண்டுகொள்வாயாக என்று உம்மையே விருப்புற்று நினைத்துப் புகழ்கிறாள். இவள் ஒருதிறத்தும் ஆற்றுவிக்க இயலாதவளாக உள்ளாள். சான்றோர்கள் வாழும் தில்லை நகரில் உள்ள பெருமானே! எங்களுடைய அழகிய கரிய மயிர்முடியை உடைய பெண் பெரிதும் மயங்குகிறாள்.

குறிப்புரை :

வெய்து உயிர்த்து - மூச்சு வெப்பமாக விட்டு. ஆள் - என்னை ஆண்டுகொள். ஏத்தும் - துதிப்பாள். ஒன்று ஆகிலள் - ஒரு திறத்தும் ஆகாள்; `ஆற்றுகின்றிலள்` என்றபடி. இதனை முற்றெச்ச மாக்கி, ``அயர்வுறும்`` என்பதனோடு முடிக்க. செம்மலோர் - தலைமை உடையோர்; அந்தணர். பயில் - வாழ்கின்ற. அம் அல் ஓதி - அழகிய இருள்போலும் கூந்தலை உடைய மகள். இதனை முதற்கண் கூட்டுக. அயர்வுறும் - சோர்வாள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

அயர்வுற் றஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே. 

பொழிப்புரை :

என் மகளாகிய இப்பெண் சோர்ந்து கைகளைக் கூப்பி `ஐயோ! என்னை வாழச்செய்ய உன் கொன்றைப் பூமாலையை அருளுவாயாக` என்று உம்மை வேண்டுகிறாள். வேலைப்பாடுகள் அமைத்து நிறைந்த மதில்களைஉடைய தில்லைநகரில் உள்ள பெருமானீரே! நீர் இப்பெண்ணுக்கு அருள் செய்யுங்கள்!

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, ``உற்றாள்`` என்றதை முற்றெச்சமாகக் கொண்டு உரைக்க. உய - உய்ய. இதன்பின், `கொள்ள` என ஒரு சொல் வருவிக்க. செயல் உற்று ஆர் - வேலைப் பாடு அமைந்து நிறைந்த. இவண் - இப்பொழுது. மயல் - பித்து. `இவட்கு அருள்` என்னும் குறிப்பெச்சம் இறுதியில் வருவித்து முடிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென்
றோதில் உய்வன் ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்ம டக்கொடியையே. 

பொழிப்புரை :

`ஒளிபொருந்திய பச்சைக்கிளியே! பார்வதிபாகன், வளமான கொன்றைப்பூவினை அணிந்த மார்பினன் என்று நீ கூறினால் நான் பிழைப்பேன்` என்று என் இளைய கொடிபோல்வாள் ஆகிய மகள் கூறுகிறாள். பிரமனுடைய தலையைப் போக்கினவரே! தில்லைக் கண்நின்று இவளை வருந்தப் பண்ணினீர்; இது தகுமோ?

குறிப்புரை :

`ஒண் பைங்கிளியே, மாதொர் கூறன், கொன்றை மார்பன் என்றாற்போலத் தில்லையானைப் பற்றிய பேச்சினை நீ பேசினால் நான் உய்வேன்; (இல்லாவிடில் உய்யமாட்டேன்) என்று கிளியிடம் சென்று வேண்டுவாள்` என்க. வண்டு ஆர் - வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற); `நிறைந்த` என்றலுமாம். `நான் முகனைச் சிரம் சேதித்தீர்` என மாற்றுக. சேதித்தீர் - அறுத்தவரே. `சிரம் சேதித்தீர்` என்றது, `ஒறுத்தீர்` என்னும் பொருட்டாய், `நான்முகனை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. `தில்லைக்கண் நின்றுவாதித்தீர்` என்க. வாதித்தீர் - வருந்தப் பண்ணினீர். `இது தகுமோ` என்பது குறிப்பெச்சம். இத்திருப்பாட்டின் ஈற்றடி இறுதிச்சீர் வேறுபட்டு வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

கொடியைக் கோமளச் சாதியைச் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே. 

பொழிப்புரை :

`பகைவருடைய மும்மதில்களும் அழியுமாறு செந் நிறமுடைய மேருமலையை இருகால்களும் அணுகவருமாறு வளைத் தவரே!` என்று பூங்கொடி, அழகிய சண்பகப்பூ, பூங்கொம்பு, இளைய பெண்யானை இவற்றைப் போன்ற என்மகள் வருந்தி நிற்கின்றாள். நீர் செய்துள்ள இந்த இறந்து படும்நிலை இவளுக்கு எந்நாள் நீங்கும்? நீர் என்னகாரியம் செய்துவிட்டீர்?

குறிப்புரை :

``பகைத்தார் புரம்......கால்வளைத்தீர்`` என்பதை முதலிற்கொள்க. கொடி - பூங்கொடிபோன்றவள். கோமளச்சாதி - அழகிய செண்பகப் பூப்போன்றவள். கொம்பு - பூங்கொம்பு போன்ற வள். `கொம்பினை` என இங்கும் இரண்டாவது விரிக்க. இளம் பிடி - இளமையான பெண்யானை போன்றவள். இவையெல்லாம் தலைவியையே குறித்து வந்த பல பெயர்கள்.
இடிய - அழியும்படி. செஞ்சிலை - நிமிர்ந்து நின்ற வில்லை. கால் வளைத்தீர் - இரண்டு காலும் அணுக வருமாறு வளைத்தவரே. `பகைத்தார் புரம் இடியச் செய்தது பொருந்தும்; காதலித்தாளை இடியச் செய்தல் பொருந்துமோ` என்பது குறிப்பு. `நீர் செய்த மூச்சறவு என்று முடியும்` என மாற்றுக. மூச்சறவு - இறந்துபாடு; இஃது அதற்கு ஏதுவாய வருத்தத்தைக் குறித்து நின்றது. என்று முடியும் - எந்நாள் நீங்கும். `நீங்குதல் இன்றி. இறந்து பாட்டினைச் செய்தேவிடும் போலும்` என்பது குறிப்பெச்சம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.

பொழிப்புரை :

``அறவடிவினனே! முன்னொருகால் பன்றியின் பின்னே அதனைவேட்டையாடச் சென்றவேடனே! என்னைத் துன்புறுத்தாதே`` என்கிறாள். பிறைபோன்ற நெற்றியை உடைய வளாய் வளையல்களை அணிந்த என் மகள் `சிறகுகளை உடைய வண்டுகள் பொருந்திய சோலைகளைஉடைய தில்லைநகரில் இருப்பவரே!` என்று உம்மை அழைக்கிறாள்.

குறிப்புரை :

அறவன் - அற வடிவினன். மறவன் - வேடன். ``அறவன், மறவன்`` என்பன, `தன்னை அடைந்தாரை இடுக்கண் நீக்கிக் காப்பவன்` என்னும் குறிப்புணர்த்தி நின்றன. வாதை - துன்பம். பிறை குலாம் நுதல் - பிறை விளங்குவது போலும் நெற்றியையுடைய. பெய் வளை - இடப்பட்ட வளையினை உடையவள். `இவள் எப் பொழுதும் உம்மையே நினைந்து முறையிடுகின்றாள்; இவளது வருத்தத்தைப் போக்கீர்` என்பது கருத்து.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக்
கொன்று காலனைக் கோள் இழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்று மாகிலள் உம்பொருட்டே. 

பொழிப்புரை :

தென்றல் காற்று வீசும் சோலைகளைஉடைய தில்லைநகரில் உள்ளவரே! என்மகள் `ஒருகாலத்தில் சூரியனுடைய பற்களைத்தகர்த்து, யானையைக் கொன்று, இயமனைக் கொலை செய்தவர் நீங்கள்` என்று கூறிக்கொண்டே இருக்கிறாள். என்மகள் உம்மை அடைய வேண்டி ஒன்றும் ஆகாமல் நாளும் அழிந்து கொண்டிருக்கிறாள்.

குறிப்புரை :

அருக்கன் - சூரியன். சூரியனைப் பல் இறுத்தது தக்கன் வேள்வியில். ``இறுத்து, கொன்று`` என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. கோள் - உயிரைக் கொள்ளுதல்; கொலை. இழைத்தீர் - செய் தவரே. எனும் - என்று சொல்லுவாள். `இவள் உம்பொருட்டு ஒன்றும் ஆகிலள்` என்க. உம் பொருட்டு - உம்மை அடையவேண்டி, ஒன்றும் ஆகிலள் - ஒருபொருளும் ஆகாது அழிந்தொழிகின்றாள். `இவளைக் கடைக்கணித்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இதனுள் முன்னைத் திருப்பாட்டில் `அன்று பன்றிப்பின் ஏகிய` என்னும் பொருளைத் தொடர்ந்து, `அன்று அருக்கனைப் பல் இறுத்து, என்று வந்த பொருள் அளவே அந்தாதிபோலும்!

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே. 

பொழிப்புரை :

பொருந்தும் வகையில் தில்லை நாயனாராகிய சிவபெருமானைப் பற்றி அழகிய சேதி நாட்டு மன்னன் விரும்பி உரைத்த இப்பாடல்களை, எழுத்துப்பிழை, சொற்பிழை தோன்றாத வாறு தூய்மையாகப் பாடுபவர்கள் சிவலோகத்தில் உள்ள இன்பத்தை மறுமையில் பொருந்தி என்றும் மகிழ்வாக இருப்பர்.

குறிப்புரை :

ஏயுமாறு - பொருந்தும் வகையில் `சேதிபர்கோன் தில்லை நாயனாரை `ஏயுமாறு உரைசெய்தன` எனக் கூட்டுக. சேதிபர் - சேதிநாட்டவர். சேதியர்` எனப் பாடங்கொள்ளுதல் சிறக்கும். கோன் - அரசன். ``சேதிபர் கோன்`` என்றதனால், `சேதிராயர்` என்னும் பெயர்க் காரணம் விளங்கும். நயந்து - விரும்பி. உரைசெய்தன - பாடிய பாடல்கள். தூயவாறு - எழுத்துப்பிழை முதலியன இல்லாதவாறு. ``துறக்கம்`` என்றது இங்கு, `உடலைத் துரத்து சென்று அடையப்படுவது` எனக் காரணப் பெயராய்ச் சிவலோகத்தைக் குறித்தது. ஆய இன்பம் - அடையத் தக்கதாய இன்பம்; சிவானந்தம். ஏனை இன்பங்கள் அன்னதாகாமை அறிக. இத்திருப்பாடலின் ஈற்றடி ஈற்றயற்சீர் வேறுபட்டு வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

தில்லைத்திருநகரம் என்றும் நிலைபெறுக; நம் அடியார்கள் பல்லாண்டு வாழ்க; அடிமை செய்ய ஒருப்படாதவர்கள் இல்லாதொழிய, பொன்மயமான மண்டபத்திலே நுழைந்து உலக மெல்லாம் நிலைபெறுமாறு நின்று, அன்னம் போன்ற நடையினை உடைய இளையள் ஆகிய உமாதேவியின் தலைவன், அடியவர் களாகிய நமக்கு அருள் பாலித்து மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும்படி அடியேமுக்குத் தன் திருக்கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப்பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

இத் திருப்பாட்டின் முதல் அடியின் இருதொடர்கள் எடுத்துக்கொண்ட பொருட்கு மங்கல வாழ்த்தாய் நின்றன. மன்னுக - என்றும் நின்றுநிலவுக. ``நம் பத்தர்கள்`` என்றது, `நமக்கு உறவாய பத்தர்கள்` என உயர்திணை முறைக்கிழமைப்பொருட்டு. பத்தர்கள் - அடியார்கள். வஞ்சகர் - அடிமை செய்ய ஒருப்படாதவர்கள். ``போய் அகல`` என்றது ஒருபொருட் பன்மொழியாய், `இல்லாதொழிய` எனப் பொருள்தந்தது. `அகலப் புகுந்து` என இயையும். எனவே, வஞ்சகர்க்குத் திருமன்றத்தைச் சேர்தல் வாயாமை பெறப்பட்டது. `பொன்னின் மண்டபம், செய்மண்டபம்` எனத் தனித் தனி இயைக்க. பொன்னின் மண்டபம் - பொன்னால் இயன்ற மண்டபம்; என்றது கூத்தப் பெருமானது திருச்சபையை. இன், சாரியை. செய் மண்டபம் - சிறப்பாகச் செய்யப்பட்ட மண்டபம். புவனி - புவனம்; உலகம். விளங்க - நிலைபெறுமாறு. `விளங்க நின்று` என ஒருசொல் வருவிக்க. அடியோமுக்கு - அடியேங்கட்கு; என்றது, அடியவர் அனைவரையும் உளப்படுத்து. `அடியோமுக்கு அருள்புரிந்து` என்றது, `திருக்கூத்தி யற்றி` என்றவாறு. பின்னைப் பிறவி - மேல்வரும் பிறவி. அறுக்க - நாங்கள் அறுத்துக் கொள்ளும்படி. நெறி - அதற்குரிய வழி; என்றது. திருவடி ஞானத்தை, ``தந்த பித்தற்கு`` எனச் சுருங்க ஓதினாராயினும், தந்தான்; அப்பித்தற்கு` என இருதொடராக உரைத்தல் கருத்தென்க. பல்லாண்டு - பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் வாழ்த்தினை. `உமைகோன், மண்டபத்துள்ளே புகுந்து விளங்க நின்று அருள்புரிந்து நெறிதந்தான்; அவனைப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோமாக` என்பது இதன் திரண்ட பொருள். இதன் ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

எம் பெருமான் திறத்து உருகாத மனமுடையவர்கள் எங்களை விடுத்து நீங்குங்கள். உண்மை அடியவர்கள் விரைந்து வாருங்கள். நம்மை அடக்கியாளும் இறைவன்பால் அவனுடைய திருவருளைக் கொண்டும் நம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவனுக்கு வழங்கியும் எல்லாக்குடிகளில் உள்ளவர்களும் அடிமை செய்யுங்கள். கூட்டமாகத் திருவம்பலத்துக்குச் சென்று, `உலகங் களைக் கடந்தபொருள், எல்லையற்ற ஆனந்தப் பெருக்காகிய பொருள், பண்டும் இன்றும் என்றும் உள்ள காலம் கடந்தபொருள்` ஆகிய நம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

மிண்டு மனம் - திணிந்த மனம்; உருகாத மனம். `மனத்தவராயினார், அடியார்களாயினார்` என இரண்டிடத்தும் ஆக்கச் சொல் வருவிக்க. ``போமின்கள்`` என்றது, அவர் இசையார் என்பது பற்றி. ``ஈசற்கு`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``கொண்டும் கொடுத்தும்`` என்றார். ஈசன் பால் கொள்ளுதல் அவனது திருவருளையும், அவனுக்குக் கொடுத்தல் நமது உடல் பொருள், ஆவி அனைத்தையும் ஆம். ``குடி குடி`` என்றது. `குடிதோறும்` என்னும் பொருட்டாய். `எல்லாக் குடியிலும்` எனப் பொருள் தந்தது. மெய்யடி யாராய் உள்ளார் செய்யத்தக்கது இதுவே என்றபடி.
குழாம் புகுந்து - கூட்டமாகத் திருவம்பலத்திற் சென்று. `புகுந்து கூறுதும்` என முடிக்க. என்று - என்று புகழ்ந்து சொல்லி. `அவற்குப் பல்லாண்டு கூறுதும்` எனச் சுட்டுப்பெயர் வருவிக்க. ``ஆட்செய்மின்`` என முன்னிலையாக வேறுபடுத்துக் கூறியது. `எம்மொடு குழாம் புகுந்து பல்லாண்டு கூறுதல் நுமக்குங் கடப்பாடாதலின்` எனக் காரணங்கூறி வலியுறுத்தற் பொருட்டு. இதன் முதலடியும், ஈற்றடியும் ஒரோவொருசீர் மிக்கு வந்தன.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்
திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்
அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

இறைவனிடத்து அசையாது ஈடுபட்டு நிற்றல் இல்லாத அடியேனுடைய உடலை நிட்டைக்குத் துணைசெய்வதாக மாற்றி அடியேனை ஆட்கொண்ட நிகரில்லாச் செயல்களையும், மேம் பட்டவன் ஆகிய சிவபெருமான் தன் அடியவர்களைப் பெருமைப் படுத்தும் செயல்களையுமே மனத்துக்கொண்டு அட்டமூர்த்தியாய், என் மனம் நெகிழுமாறு ஊறும் அமுதமாய் ,ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த குருமூர்த்தியாய், அடியேனைத்தன் அடிமையாக ஆட் கொண்ட நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

நிட்டை - உறைத்து நிற்றல்; அசையாது நிற்றல். இஃது இறைவனிடத்து நிற்றலேயாம். நிற்பது உயிரேயாயினும், அதற்குத் துணையாவது உடலாகலின், அதனை உடன் மேல் ஏற்றி, துணைசெய்யாத உடலை, ``நிட்டை இலா உடல்`` என்றார். ``நீத்து`` என்றது, `மாற்றி` என்றபடி. அஃதாவது, `நிட்டைக்குத் துணை செய்வதாக ஆக்கி` என்றதாம். ``என்னை ஆண்ட`` எனத் தமக்கு அருள்செய்ததையே கூறினார், `தம்கீழ்மை காரணமாகத் தமக்கு அருள்புரிந்ததே பெரும் புகழாவது` என்பது பற்றி.
`சிட்டனாகிய சிவன்` என உரைத்து, `தன்னடியாரை` எனச் சொல்லெச்சம் வருவிக்க. ``திறங்களுமே`` என்ற ஏகாரம் உலகியலைச் சிந்தித்தலை விலக்கிற்று. ``அட்டமூர்த்திக்கு`` முதலிய நான்கும், `அவனுக்கு` என்னும் சுட்டுப்பெயரளவாய் நின்றன. அகம் நெக - மனம் உருகும்படி. ஊறும் - சுரக்கின்ற. பட்டன் - ஆசிரியன்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

மெய்ம்மொழிகளால் நிறைந்த வேதப்பொருள் களை ஆராய்ந்து துணிந்த தூயமனத்தைஉடைய அடியீர்களே! சில ஆண்டுகளில் மறைந்து அழியும் சிலதேவர்களைப் பரம்பொருளாகக் கருதும் சிறிய வழியில் ஈடுபடாமல், பொன்மலையாகிய மேரு மலையை வில்லாகப் பணிகொண்டஅழகனாய், காளையை வாகன மாக உடையவனாய், பல ஆண்டுகள் என்ற காலத்தைக் கடந்தவனாய் உள்ள சிவபெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

``சொல்`` என்றது, தலைமை பற்றி மெய்ம்மொழிமேல் நின்றது. ``ஆண்ட`` என்றது, `நிறைந்த` என்னும் பொருளது. சோதித்த - ஆராய்ந்து துணிந்த. `தூ மனம்` என்றலேயன்றி, `தூய் மனம்` என்றலும் வழக்கே. `தொண்டராய் உள்ளீர்` என ஆக்கச்சொல் வருவிக்க. தேவர் நெறி - தேவரைப்பற்றி நிற்கும் நெறி. அந்நெறி களின் முதல்வர் யாவரும் சில்லாண்டிற் சிதைந்தொழிபவராகலின், அவரால் தரப்படும் பயனும் அன்னதேயாம். அதனால் அவை சேரத்தகாத சிறுநெறிகளாயின. இவ்வுண்மை, சுருதியை நன்காராய்ந் தார்க்கல்லது புலனாகாதென்பது பற்றியே முன்னர், ``சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்`` என்றார். வில் ஆண்ட மேரு விடங்கன் - வில்லாகப் பணிகொண்ட மேருமலையை உடைய அழகன். `மேருவை வில்லாக ஆண்ட அழகன்` எனற்பாலதனை இவ்வாறு ஓதினார் என்க. விடைப்பாகன் - இடபத்தை ஊர்பவன். ``பல்லாண்டு என்னும் பதம் கடந்தான்`` என்றது, `காலத்தைக் கடந்த வன்` என்றவாறு. பதம் - நிலை; என்றது பொருளை. `காலத்தைக் கடந்து நிற்பவனைக் காலத்தின் வழிப்பட்டு வாழ்க என வாழ்த்துதல் பேதைமைப்பாலது` என்பதையும், `அன்னதாயினும் நமது ஆர்வத் தின் வழிப்பட்ட நாம் அங்ஙனம் வாழ்த்துவோம்` என்பதையும் இங்கு இவர் உணர்த்தி நிற்றல் அறிக. இத்திருப்பாட்டின் முதலடியும், மூன்றாம் அடியும் ஐஞ்சீராகி வந்தன.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்
டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

இந்திரன், திருமால், பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து, பின் இன்று வரை எம்பெருமானைச் சரண் என்று அடைய இயலாதவராய், பல காலும் கெஞ்சிக்கெஞ்சி அழைக்கவும், அடியேமுடைய உயிரை ஆட் கொண்ட தலைவனுக்கு என்ன கைம்மாறு அடியேம் செய்யும் ஆற்றலுடையேம்? எக்காலத்தும் கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பக மரம் போல் பவனாய், எல்லையற்ற கருணைக் கடலாய் எல்லா இடங்களிலும் விரிந்தும் இடையீடின்றி நிறைந்தும் எல்லைகடந்து நிற்கும் அடிகள் ஆகிய நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

குறிப்புரை :

புரந்தரன் - இந்திரன். பூசலிட்டு - போர் செய்து. ஒலமிட்டு - ஆராவாரம் செய்து. ``இன்னம்`` என்பது, `இது காறும்` எனப் பொருள் தரும் `இன்னும்` என்பதன் மரூஉ. இதனை, ``இரந்திரந்து`` என்பதற்குமுன் கூட்டுக. `முதற்கண் செருக்குற்று அறியமாட்டாராய்ப் பின்னர் வழிபட்டு நிற்பாராயினர்` என்றவாறு. `அவரை ஆளாது, என் உயிரை ஆண்டான்` என்று அருளினார். தாமும், தம் உயிரும் வேறல்லர் ஆயினும், `உயிரை` என வேறுபோலக் கூறினார், ஆண்டது உடல்நலமாகாது உயிர்நலமாய் நின்ற சிறப் புணர்த்தற்பொருட்டு. ``என் உயிர்`` எனத் தமது உயிரையே எடுத்துக் கூறியதற்கு, மேல், ``என்னை ஆண்ட`` (தி.9 பா.291) என்றதற்கு உரைத்த வாறு உரைக்க. என் - என்ன கைம்மாறு. என்றும் - என்று சொல்லியும். உம்மை, எதிரது தழுவிய எச்சம். கரந்தும் - கண்ணிற்குப் புலனாகாது நின்றும். கரவாத கற்பகனாகி - வேண்டியவற்றை வேண்டியாங்கு மறையாது வழங்கும் கற்பகத்தருப்போல்பவனாகி. ``ஆகி`` என்றது, ``வரம்பிலர்`` என்பதில் ``இல்லா`` என்பதனோடு முடியும். `கருணைக் கடலாய்` என ஆக்கம் விரித்து, `ஆக்கம், உவமை குறித்து நிற்ப, கருணைக் கடல் என்பது இல்பொருளுவமையாய் நின்றது` என உரைக்க. கருணைக் கடல் - கருணையை உடைய கடல். பரந்தும் - விரிந்தும். நிரந்தும் - இடையீடின்றி நிறைந்தும். இவையும், ``இல்லா`` என்பதனோடு முடியும். `அழகு` எனப் பொருள் தரும் ``பாங்கு`` என்பது இங்கு, `மேலான தன்மை` எனப் பொருள் தந்து நின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை
அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

வழிபடவந்த பிரமன், இந்திரன், சிவந்த கண்களை உடைய திருமால் எங்கும் பல திசைகளாகிய இடங்களில் அழைத்து, வழிபாட்டுப் பொருள்களைக் கைக்கொண்டு நெருங்கிக் கூட்டம் கூட்டமாய் நிற்க, திருக்கூத்தினை நிகழ்த்தும், என் உயிருக்கு அமுதம் போல்பவனாய், என் அவாவிற்கு உரிய செல்வமாய், எங்கள் தலைவனாய், பிறப்புவகையால் ஒரு நிகரான தேவர்கள் நினையும் நினைவுக்கு அகப்படாமல் அவர்கள் நினைவையும் கடந்து நிற்கும் நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

சேவிக்க - வணங்குதற்கு. ``வந்து`` என்றதை. ``மால்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `திசைதிசையன எங்கும்` என மாற்றுக. ``திசை திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்னும் அடுக்குப் பன்மை குறித்து நின்றது. ``திசையன`` என்றதற்கு, திசைகளாகிய இடங்களில்` என உரைக்க. கூவி - அழைத்து. ``கவர்ந்து`` என்றதற்கு, `வழிபாட்டுப் பொருள் களைக் கைக்கொண்டு` என உரைக்க. ``ஆடும் அமுது`` என்றதில் உள்ள ``அமுது`` என்பது, `அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான்` என்பதில் `பார்ப்பான்` என்பதுபோலக் கோடற்பொருட் பெயராய் நின்றது. உடல்நலம் ஒன்றே பயக்கும் தேவரமுதினும் வேறாதலை விளக்க ``ஆவிக்கு அமுது`` என்றார். இதுவும், இல்பொருள் உவமை. அமுது - அமிர்தம் போல்பவன். என் ஆர்வத் தனம் - எனது அவாவிற் குரிய பொருள் (செல்வம்). ஒப்பு அமரர் - பிறப்புவகையால் ஒரு நிகராய தேவர். அஃதாவது `வானவர்` என்றபடி. பாவிக்கும் பாவகம் - நினையும் நினைவு. அவர் தம் நினைவிற்கு அகப்படாமையின், ``அப்புறத் தான்`` என்றார்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

சிவநெறி ஒழுக்கமும் அவன் திருவருளும் அடியேனிடத்து நிலைபெற்று விளங்கும்படி, அச்சிவலோக நாயக னான பெருமானுடைய திருவடிகளின் கீழ் மற்ற யாவரும் பெறாததான `யாவரையும் யாவற்றையும் உடையவன் சிவபெருமானே` என்று அறியும் அறிவினைப் பெற்றேன். அவ்வறிவால் அடியேன் பெற்ற பேற்றினை வேறுயாவர் பெறக்கூடும்? இவ்வுலகில் நாட்டில் உள்ளா ரும் ஊரில் உள்ளாரும் எடுத்துக் கூறும்படி, அவன்புகழைப் பிதற்றி உமாதேவியின் கணவனாகிய எம்பெருமானுக்கு நாம் அடிமையாகிய திறத்தை இந்நிலவுலகத்தாரும் தேவர் உலகத்தாரும் அறியும் வகையில் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

சீர் - செம்மை; சிவநெறி ஒழுக்கம். திரு - திருவருள். பொலிய - என்னிடத்து நிலைபெற்று விளங்கும்படி. `சேவடிக் கீழ் நின்று` என ஒருசொல் வருவிக்க. நிற்றல் - பணிசெய்தல். ``பெறாத`` என்றது, `பெறுதற்கரிய` என்றவாறு. பெறுதற்கரிய அறிவாவது, `யாவரையும், யாவற்றையும் உடையவன் சிவபெருமானே` என அறியும் அறிவு. `அவ்வறிவாற்பெற்றது` எனக் காரணம் வருவித்து, ``பெற்றது`` என்றதற்கு, `பெற்றபயன்` என உரைக்க. அங்ஙனம் உரையாவிடில், ``ஆரும் பெறாத அறிவு`` என்றதன் பொருளே பொரு ளாய்ச் சிறப்பின்றாம். பயன், சிவானந்தம். ஆர் - அவ்வறிவைப் பெறாத எவர். `அத்தகைய பயனை நீவிரும் பெற்றீராதலின், நாம் அனைவரும் கூடிப் பல்லாண்டு கூறுவோம்` என இயைபுபடுத் துரைக்க.
ஊர் - வாழும் ஊர். கழற - எடுத்துச் சொல்லும்படி; இதற்கும் செயப்படுபொருள் இனி வருகின்ற ``ஆள்`` என்பதே. அதனால், ``உமை மணவாளனுக்கு ஆள்`` என்பதை, ``உலகில்`` என்றதன் பின்னே வைத்து உரைக்க. உழறி - அவன் புகழைப் பிதற்றி. `பிதற்றி` என்றார், முற்ற அறியாது அறிந்தவாறே கூறலின். இதனை, ``நாம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆள் - நாம் ஆளான தன்மையை. ``கழற`` எனவும், ``அறியும் பரிசு`` எனவும் வேறு வேறு முடிபு கொள்ளுதலால், ``பாரும்`` என்றது, கூறியது கூறல் ஆகாமை அறிக. பரிசு - தன்மை. `பரிசினால்` என மூன்றாவது விரிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

`சேல் மீனையும் கயல் மீனையும் உவமை கூறும் படியான கண்களைஉடைய இளமகளிரின் கொங்கைகளில் பூசப்படும் குங்குமத்தைப் போல எம்பெருமான் திருமார்பில் திருநீறு விளங்கு கிறது` என்று அடியவர்கள் புகழ்ந்து கூற, திருமாலும் பிரமனும் அறிய முடியாத வழியைக்காட்டி அடியேனுடைய உள்ளத்தினுள் பாலும் அமுதும் ஒத்து இனிமையானவனாகியும், புத்துயிர் அளிப்பவனாகி யும், நிலை பெற்றிருக்கும் எம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து வோமாக.

குறிப்புரை :

சேல், கயல் என்பன மீன்வகை. `சேலும் கயலும் போல` என உவம உருபு விரிக்க. திளைக்கும் - பிறழ்கின்ற. ``குங்குமம்`` என்றது, குங்குமங் கூடிய சாந்தினை. `குங்குமம் போலும் பொடி மார்பின்கண் இலங்கும்` என்க.
அணி - அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும், `மார்பிற்பொடி, கொங்கையிற் குங்குமம்போல இலங்கும்` என்றல் கருத்தென்க. இதனால் இறைவன் மார்பில் உள்ள திருநீறு, மங்கையர் கொங்கையில் உள்ள குங்குமம் காமுகரை வசீகரித்தல் போலப் புண்ணியரை வசீகரித்தல் கூறப்பட்டது. புண்ணியர் - சிவபுண்ணியத் தின் பயனாகிய சிவஞானத்தைப் பெற்றவர். நெறி - சிவஞானம், வந்து - அழகிய கோலத்துடன் வந்து. இதனை, ``போற்றிசைப்ப`` என்றதன் பின்னர்க் கூட்டுக.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல் வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால்பெறாது அழுது, வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெரு மானாய், ஒருகாலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத்திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு, அருளைவழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

பாலுக்கு - பாலை உண்பதற்கு. ``பாலகன்`` என்றது, உபமன்னிய முனிவரை. வேண்டி - விரும்பி. வியாக்கிரபாத முனிவர் மகனாராகிய உபமன்னிய முனிவர் பிள்ளைமைப் பருவத்தில் பால் பெறாது அழுது வருந்த, அவரை வியாக்கிரபாத முனிவர் கூத்தப் பெருமான் திருமுன்பிற் கிடத்துதலும், கூத்தப்பெருமான் அவருக்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட் காண்க. சிவபெருமான் திருமால் செய்த வழிபாட்டிற்கு இரங்கிச் சக்கரம் அளித்த வரலாறு வெளிப்படை. ஆலிக்கும் - வேதத்தை ஓது கின்ற. ஆலித்தல் - ஒலித்தல்; ``அஞ்செவி நிறைய ஆலின`` (முல்லைப் பாட்டு - 89.) என்றது காண்க. வாழ்கின்ற - வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற. ``சிற்றம்பலமே`` என்ற ஏகாரம் பிரிநிலை. பாலித்து - அருளை வழங்கி. இது, `பாலியாநின்று` என நிகழ்காலம் பற்றிநின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனக மும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

தம் தந்தையின் கால்கள் நீங்கும்படி மழு வாயுதத்தை வீசிய சண்டேசுர நாயனாருக்கு அந்தவானுலகத் தோடு நிலஉலகத்தவரும் ஒருசேர வணங்குமாறு அழகிய இருப்பிடமும் தனக்கு நிவேதித்த உணவும் வழங்கி, ஒளி பொருந்திய அழகிய முடியில் அணிந்த தன் மாலையும் சண்டன் என்ற சிறப்புப் பெயரும், அடியவர்களுக்குத் தலைமையும், தாம் செய்த பாதகச் செயலுக்குப் பரிசாக வழங்கிய எம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து வோமாக.

குறிப்புரை :

`தாதையை வீசிய` என இயையும். சண்டி - சண்டேசுர நாயனார். இவர், தந்தைதன் காலை வெட்டிப் பேறுபெற்ற வரலாறு (தி.12) பெரியபுராணத்துட் பரக்கக் காணப்படுவது. அண்டம் - வானுலகம். என்றது, அதன்கண் உள்ளாரை. ``அவ்வண்டம்`` என்ற பண்டறி சுட்டு, வானுலகத்தின் பெருமையுணர நின்றது. `இவ்வண்டம்` என்பது பாடம் அன்று. ஒடு, எண்ணொடு. உம்மை, சிறப்பு. `அண்டத்தொடும் பூதலத்தோரும் உடன் வணங்க` என மாறிக்கூட்டுக. ``உடனே என்ற ஏகாரம் அசைநிலை.
பொன் - அழகு. போனகம் - தான் உண்டு எஞ்சிய உணவு. சோதி மணி முடி - ஒளியை உடைய அழகிய சடைமுடி. தாமம் - கொன்றை மாலை. நாமம் - `சண்டன்` என்னும் சிறப்புப் பெயர். இஃது அப் பதவி பற்றி வருவது. எனவே, ``நாமம்`` என்றது, `அப்பதவியை` என்றதாயிற்று. நாயகம் - தலைமை. ``தொண்டர்க்கு நாயகமும்`` என்றது. அப்பதவியது இயல்பு விளக்கிய வாறு. `சிவபிரானை வழிபடும் அடியவர்க்கு அவர்தம் வழிபாட்டின் பயனை வழங்கும் பதவியே சண்டேசுர பதவி என்பதும், `அப்பதவியையே அப் பெருமான் விசாரசருமருக்கு அளித்தான்` என்பதும் அறிக. `பரிசாக வைத்தான்` என ஆக்கம் வருவிக்க. ``பாதகத்துக்குப் பரிசு வைத்தான்`` என்றது, `இன்னதொரு பொருந்தாச் செயலைச் செய்தான்` எனப் பழிப்பதுபோல நின்று, `திருத்தொண்டில் உறைத்து நின்றாற்கு அவ்வுறைப்பினை அறிந்து அதற்குத் தக்க சிறப்பினை அளித்தான்` என்னும் புகழ் புலப்படுத்தி நின்றது. ``பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்`` என்ற திருவாசகத்தோடு (தி.8 திருத்தோணோக்கம் - 7) இதனை ஒப்புநோக்குக.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 11

குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

வேய்ங்குழல்இசை, யாழின்இசை, கூத்தாடுதலின் ஓசை, துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப்பெருகித் திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில் இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

ஏத்து ஒலி - துதித்தலின் ஓசை. `குழாமாகப் பெருகி` என ஆக்கம் விரிக்க. பெருகி - பெருகுதலால். விழவு ஒலி - இறைவனது சிறப்பு நாளிற்கு உரிய ஓசைகள். விம்மி மிகு - நிறைந்து மிகுகின்ற. இது திருவாரூரின் சிறப்பேயாம். `திருவாரூரிற் பிறந்த பழ அடியார்` என்க.
சைவ அந்தணர்க்கன்றிப் பிறர்க்குத் தில்லை இடமாகாதிருந்தது போலத் திருவாரூர் சைவர்கட்கன்றி இடமாகாதிருந்தது. அதனால், அங்குப் பிறந்தோர் யாவரும் சிவபெருமானுக்கு வழிவழித் தொண்டராய பழவடியாராதலின், அவரோடு கூடிப் பல்லாண்டு கூறுதலைச் சிறப்புடையதாக அருளிச்செய்தார். இவ்வாற்றால் தில்லை வாழந்தணர் போலத் திருவாரூர்ப் பிறந்தாரும் இயல்பாற் சிறந்த வராதல் பற்றியே ஆளுடைய நம்பிகள், ``தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்`` என்றாற்போல, ``திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்`` என்று அருளிச்செய்தார். மழவிடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி - மரபு இரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய் (தி.12 பெ.பு.ஞானசம்-17) உள்ளவரே தம்முள் மணம் செய்துகொள்ளும் குடிகள். `அவற்றிற் பிறந்த பழவடியார்` என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 12

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

அழகினை உடைய ஆதிரைத்திருநாளில் தேவர் கூட்டத்தில் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோர் வந்தனர். தேர்ஓடும் வீதியில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நிறைய, நிலவுலகெங்கும் நிறைந்த சிவபெருமானுடைய பழமையான புகழைப்பாடியும் ,அதற்கு ஏற்ப ஆடியும், அந்த ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

`யார் யார்` என்பது, ``ஆர் ஆர்`` என மருவிநின்றது. திருவாதிரை நாள் தில்லைப் பெருமானுக்குத் தனிப்பெருந் திருநாளாத லின், அதனையே எடுத்துக்கூறினார். இத் திருப்பதிகம் அந்நாளில் இவரது அன்பினை வெளிப்படுத்துதற் பொருட்டு, ஓடாது நின்ற தேரினை இத்திருப்பதிகம் பாடி ஓடச் செய்தார் என்பது மரபு. தில்லைத் தேர்த் திருவிழா இஞ்ஞான்று திருவாதிரைக்கு முன்னாளில் செய்யப் படுகின்றது. அணி - அழகு. `ஆதிரை நாளில் அமரர் குழாத்தில் ஆரார் வந்தார்` என்க. ``வந்தார்`` என்றதன்பின், `எனின்` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. இனி அவ்வாறு வருவியாது, கூற்றும், மாற்றமுமாக நின்றாங்கு நிற்ப உரைப்பினும் ஆம். ``இந்திரனும்`` என்றதன்பின் `வந்தார்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. `அரசன் வந்தான்` என்றவழி, அமைச்சர் முதலாயினார் வந்தமை தானே பெறப் படுதல் போல, `நாராயணன் முதலியோர் வந்தார்` எனவே, ஏனைத் தேவர் பலரும் வந்தமை சொல்லாமே அமைந்தது. பெரியோனது தனிப் பெருவிழாவாகலின், அமரர் அனைவரும் எஞ்சாது வருவாராயினர். ``தேரார்வீதியில்`` என்பதன்முன், `இவ்வாறு` என்னும் இயைபு படுத்தும் சொல் வருவிக்க. ``தேரார் வீதி`` என்றதனால், ஆதிரை நாளில் வீதியில் தேரோடிய குறிப்பு அறியப்படும். ``நிறைந்து`` என்ற தனை, `நிறைய` எனத் திரிக்க. நிறைய - நிறைந்து நிற்க. பார் ஆர் - நிலவுலகெங்கும் நிறைந்த. தொல் புகழ் - பழமையான புகழ்; இது சிவபிரானுடையது. ஆடியும் - அப்பாடலுக்கு ஏற்ப ஆடுதலைச் செய் தும். ``ஆதிரைநாள்`` என்றமையின், `அந்நாளை யுடையானுக்குப் பல்லாண்டு கூறுதும்` என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 13

எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்மெம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

எம்தந்தை, எம்தாய், எம்சுற்றம் முதலிய எல்லாப் பொருள்களும் எமக்கு அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானே என்று தியானம் செய்யும், சிவபெருமானுடைய சிறப்புடைய அடியவர்களின் திருவடிகளை வழிபடும் நாய்போல இழிந்தவனாகிய சேந்தன், `அழிவில்லாத ஆனந்தத்தை வழங்கும் சிறந்த தேன் போலவந்து அடிமையாகக் கொண்டு அரிய உயிரின்மேல் நிற்கும் கட்டு நீங்குமாறு அருள் செய்தபெருமானே` என்று வாழ்த்தும் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

`எம் தந்தை, எம் தாய், (எம்) சுற்றம், (மற்றும்) எல்லாப் பொருளும் எமக்குச் சிவபிரானே என்றென்று சிந்தை செய்யும் சீரடியார்` என உரைக்க. அமுதாம் எம்பிரான் - அமுதம்போல இனிக் கின்ற எங்கள் பெருமான்; `சிவபிரான்` என்றபடி. முதலடியின் இறுதிச் சீரின் ஈற்றசை நேர்பு. நேர்பசை நிரைபசை கொள்ளாதார் இச் சீரினை, `நாலசைச் சீர்` என்ப. `என்றுமே` என ஓதி, எழுசீராகவும் ஆக்குப. இத் திருப்பாட்டின் இரண்டாவதும், மூன்றாவதும் ஆகிய அடிகளில் உள்ள பாடங்கள் உண்மைப் பாடங்களாகத் தோன்றவில்லை. பாடபேதங் களும் பலவாகப் சொல்லப்படுகின்றன. எனவே, இரண்டாம் அடியில், ``நாய்`` என்றதன்பின் `சேந்தன்` என்னும் சொல் அமைய ஓதுதல் பாடமாகக் கொண்டு, மூன்றாமடியில், `அந்தமில் ஆனந்தச் செந்தேன் எனப்புகுந்து` எனக் காட்டப்படும் பாடத்தை உண்மைப் பாடமாகக் கொள்ளுதல் பொருந்துவதாம். ஆயினும், இது பொழுது ஓதப்பட்டுவரும் பாடமே இங்குக் கொள்ளப்படுகின்றது. சீரடியார் அடி நாய் - சிறப்புடைய அடியவரது அடிக்கீழ் நிற்கும் நாய் போன்றவன் என்றது தம்மைப் பிறர் போலக் கூறியதாம். `செப்புரை யால் கூறுதும்` என மூன்றாவது விரித்து முடிக்க. ஆனந்தச் சேந்தன் - ஆனந்தத்தைப் பெற்ற சேந்தன். இஃது, ஆளப்பட்ட பின்னர் அடைந்த நிலைமையைக் கூறியது. ஆருயிர்மேற் பந்தம் - அரிய உயிரின்மேல் நிற்கும் கட்டு. பிரிய - நீங்குமாறு. பரிந்தவன் - அருள் செய்தவன்.
ஒன்பதாம் திருமுறை
மூலமும் உரையும் - நிறைவுற்றது.
சிற்பி