சேந்தனார் - கோயில்


பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

தில்லைத்திருநகரம் என்றும் நிலைபெறுக; நம் அடியார்கள் பல்லாண்டு வாழ்க; அடிமை செய்ய ஒருப்படாதவர்கள் இல்லாதொழிய, பொன்மயமான மண்டபத்திலே நுழைந்து உலக மெல்லாம் நிலைபெறுமாறு நின்று, அன்னம் போன்ற நடையினை உடைய இளையள் ஆகிய உமாதேவியின் தலைவன், அடியவர் களாகிய நமக்கு அருள் பாலித்து மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும்படி அடியேமுக்குத் தன் திருக்கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப்பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

இத் திருப்பாட்டின் முதல் அடியின் இருதொடர்கள் எடுத்துக்கொண்ட பொருட்கு மங்கல வாழ்த்தாய் நின்றன. மன்னுக - என்றும் நின்றுநிலவுக. ``நம் பத்தர்கள்`` என்றது, `நமக்கு உறவாய பத்தர்கள்` என உயர்திணை முறைக்கிழமைப்பொருட்டு. பத்தர்கள் - அடியார்கள். வஞ்சகர் - அடிமை செய்ய ஒருப்படாதவர்கள். ``போய் அகல`` என்றது ஒருபொருட் பன்மொழியாய், `இல்லாதொழிய` எனப் பொருள்தந்தது. `அகலப் புகுந்து` என இயையும். எனவே, வஞ்சகர்க்குத் திருமன்றத்தைச் சேர்தல் வாயாமை பெறப்பட்டது. `பொன்னின் மண்டபம், செய்மண்டபம்` எனத் தனித் தனி இயைக்க. பொன்னின் மண்டபம் - பொன்னால் இயன்ற மண்டபம்; என்றது கூத்தப் பெருமானது திருச்சபையை. இன், சாரியை. செய் மண்டபம் - சிறப்பாகச் செய்யப்பட்ட மண்டபம். புவனி - புவனம்; உலகம். விளங்க - நிலைபெறுமாறு. `விளங்க நின்று` என ஒருசொல் வருவிக்க. அடியோமுக்கு - அடியேங்கட்கு; என்றது, அடியவர் அனைவரையும் உளப்படுத்து. `அடியோமுக்கு அருள்புரிந்து` என்றது, `திருக்கூத்தி யற்றி` என்றவாறு. பின்னைப் பிறவி - மேல்வரும் பிறவி. அறுக்க - நாங்கள் அறுத்துக் கொள்ளும்படி. நெறி - அதற்குரிய வழி; என்றது. திருவடி ஞானத்தை, ``தந்த பித்தற்கு`` எனச் சுருங்க ஓதினாராயினும், தந்தான்; அப்பித்தற்கு` என இருதொடராக உரைத்தல் கருத்தென்க. பல்லாண்டு - பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் வாழ்த்தினை. `உமைகோன், மண்டபத்துள்ளே புகுந்து விளங்க நின்று அருள்புரிந்து நெறிதந்தான்; அவனைப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோமாக` என்பது இதன் திரண்ட பொருள். இதன் ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

எம் பெருமான் திறத்து உருகாத மனமுடையவர்கள் எங்களை விடுத்து நீங்குங்கள். உண்மை அடியவர்கள் விரைந்து வாருங்கள். நம்மை அடக்கியாளும் இறைவன்பால் அவனுடைய திருவருளைக் கொண்டும் நம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவனுக்கு வழங்கியும் எல்லாக்குடிகளில் உள்ளவர்களும் அடிமை செய்யுங்கள். கூட்டமாகத் திருவம்பலத்துக்குச் சென்று, `உலகங் களைக் கடந்தபொருள், எல்லையற்ற ஆனந்தப் பெருக்காகிய பொருள், பண்டும் இன்றும் என்றும் உள்ள காலம் கடந்தபொருள்` ஆகிய நம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

மிண்டு மனம் - திணிந்த மனம்; உருகாத மனம். `மனத்தவராயினார், அடியார்களாயினார்` என இரண்டிடத்தும் ஆக்கச் சொல் வருவிக்க. ``போமின்கள்`` என்றது, அவர் இசையார் என்பது பற்றி. ``ஈசற்கு`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``கொண்டும் கொடுத்தும்`` என்றார். ஈசன் பால் கொள்ளுதல் அவனது திருவருளையும், அவனுக்குக் கொடுத்தல் நமது உடல் பொருள், ஆவி அனைத்தையும் ஆம். ``குடி குடி`` என்றது. `குடிதோறும்` என்னும் பொருட்டாய். `எல்லாக் குடியிலும்` எனப் பொருள் தந்தது. மெய்யடி யாராய் உள்ளார் செய்யத்தக்கது இதுவே என்றபடி.
குழாம் புகுந்து - கூட்டமாகத் திருவம்பலத்திற் சென்று. `புகுந்து கூறுதும்` என முடிக்க. என்று - என்று புகழ்ந்து சொல்லி. `அவற்குப் பல்லாண்டு கூறுதும்` எனச் சுட்டுப்பெயர் வருவிக்க. ``ஆட்செய்மின்`` என முன்னிலையாக வேறுபடுத்துக் கூறியது. `எம்மொடு குழாம் புகுந்து பல்லாண்டு கூறுதல் நுமக்குங் கடப்பாடாதலின்` எனக் காரணங்கூறி வலியுறுத்தற் பொருட்டு. இதன் முதலடியும், ஈற்றடியும் ஒரோவொருசீர் மிக்கு வந்தன.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்
திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்
அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

இறைவனிடத்து அசையாது ஈடுபட்டு நிற்றல் இல்லாத அடியேனுடைய உடலை நிட்டைக்குத் துணைசெய்வதாக மாற்றி அடியேனை ஆட்கொண்ட நிகரில்லாச் செயல்களையும், மேம் பட்டவன் ஆகிய சிவபெருமான் தன் அடியவர்களைப் பெருமைப் படுத்தும் செயல்களையுமே மனத்துக்கொண்டு அட்டமூர்த்தியாய், என் மனம் நெகிழுமாறு ஊறும் அமுதமாய் ,ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த குருமூர்த்தியாய், அடியேனைத்தன் அடிமையாக ஆட் கொண்ட நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

நிட்டை - உறைத்து நிற்றல்; அசையாது நிற்றல். இஃது இறைவனிடத்து நிற்றலேயாம். நிற்பது உயிரேயாயினும், அதற்குத் துணையாவது உடலாகலின், அதனை உடன் மேல் ஏற்றி, துணைசெய்யாத உடலை, ``நிட்டை இலா உடல்`` என்றார். ``நீத்து`` என்றது, `மாற்றி` என்றபடி. அஃதாவது, `நிட்டைக்குத் துணை செய்வதாக ஆக்கி` என்றதாம். ``என்னை ஆண்ட`` எனத் தமக்கு அருள்செய்ததையே கூறினார், `தம்கீழ்மை காரணமாகத் தமக்கு அருள்புரிந்ததே பெரும் புகழாவது` என்பது பற்றி.
`சிட்டனாகிய சிவன்` என உரைத்து, `தன்னடியாரை` எனச் சொல்லெச்சம் வருவிக்க. ``திறங்களுமே`` என்ற ஏகாரம் உலகியலைச் சிந்தித்தலை விலக்கிற்று. ``அட்டமூர்த்திக்கு`` முதலிய நான்கும், `அவனுக்கு` என்னும் சுட்டுப்பெயரளவாய் நின்றன. அகம் நெக - மனம் உருகும்படி. ஊறும் - சுரக்கின்ற. பட்டன் - ஆசிரியன்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

மெய்ம்மொழிகளால் நிறைந்த வேதப்பொருள் களை ஆராய்ந்து துணிந்த தூயமனத்தைஉடைய அடியீர்களே! சில ஆண்டுகளில் மறைந்து அழியும் சிலதேவர்களைப் பரம்பொருளாகக் கருதும் சிறிய வழியில் ஈடுபடாமல், பொன்மலையாகிய மேரு மலையை வில்லாகப் பணிகொண்டஅழகனாய், காளையை வாகன மாக உடையவனாய், பல ஆண்டுகள் என்ற காலத்தைக் கடந்தவனாய் உள்ள சிவபெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

``சொல்`` என்றது, தலைமை பற்றி மெய்ம்மொழிமேல் நின்றது. ``ஆண்ட`` என்றது, `நிறைந்த` என்னும் பொருளது. சோதித்த - ஆராய்ந்து துணிந்த. `தூ மனம்` என்றலேயன்றி, `தூய் மனம்` என்றலும் வழக்கே. `தொண்டராய் உள்ளீர்` என ஆக்கச்சொல் வருவிக்க. தேவர் நெறி - தேவரைப்பற்றி நிற்கும் நெறி. அந்நெறி களின் முதல்வர் யாவரும் சில்லாண்டிற் சிதைந்தொழிபவராகலின், அவரால் தரப்படும் பயனும் அன்னதேயாம். அதனால் அவை சேரத்தகாத சிறுநெறிகளாயின. இவ்வுண்மை, சுருதியை நன்காராய்ந் தார்க்கல்லது புலனாகாதென்பது பற்றியே முன்னர், ``சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்`` என்றார். வில் ஆண்ட மேரு விடங்கன் - வில்லாகப் பணிகொண்ட மேருமலையை உடைய அழகன். `மேருவை வில்லாக ஆண்ட அழகன்` எனற்பாலதனை இவ்வாறு ஓதினார் என்க. விடைப்பாகன் - இடபத்தை ஊர்பவன். ``பல்லாண்டு என்னும் பதம் கடந்தான்`` என்றது, `காலத்தைக் கடந்த வன்` என்றவாறு. பதம் - நிலை; என்றது பொருளை. `காலத்தைக் கடந்து நிற்பவனைக் காலத்தின் வழிப்பட்டு வாழ்க என வாழ்த்துதல் பேதைமைப்பாலது` என்பதையும், `அன்னதாயினும் நமது ஆர்வத் தின் வழிப்பட்ட நாம் அங்ஙனம் வாழ்த்துவோம்` என்பதையும் இங்கு இவர் உணர்த்தி நிற்றல் அறிக. இத்திருப்பாட்டின் முதலடியும், மூன்றாம் அடியும் ஐஞ்சீராகி வந்தன.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்
டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

இந்திரன், திருமால், பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து, பின் இன்று வரை எம்பெருமானைச் சரண் என்று அடைய இயலாதவராய், பல காலும் கெஞ்சிக்கெஞ்சி அழைக்கவும், அடியேமுடைய உயிரை ஆட் கொண்ட தலைவனுக்கு என்ன கைம்மாறு அடியேம் செய்யும் ஆற்றலுடையேம்? எக்காலத்தும் கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பக மரம் போல் பவனாய், எல்லையற்ற கருணைக் கடலாய் எல்லா இடங்களிலும் விரிந்தும் இடையீடின்றி நிறைந்தும் எல்லைகடந்து நிற்கும் அடிகள் ஆகிய நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

குறிப்புரை :

புரந்தரன் - இந்திரன். பூசலிட்டு - போர் செய்து. ஒலமிட்டு - ஆராவாரம் செய்து. ``இன்னம்`` என்பது, `இது காறும்` எனப் பொருள் தரும் `இன்னும்` என்பதன் மரூஉ. இதனை, ``இரந்திரந்து`` என்பதற்குமுன் கூட்டுக. `முதற்கண் செருக்குற்று அறியமாட்டாராய்ப் பின்னர் வழிபட்டு நிற்பாராயினர்` என்றவாறு. `அவரை ஆளாது, என் உயிரை ஆண்டான்` என்று அருளினார். தாமும், தம் உயிரும் வேறல்லர் ஆயினும், `உயிரை` என வேறுபோலக் கூறினார், ஆண்டது உடல்நலமாகாது உயிர்நலமாய் நின்ற சிறப் புணர்த்தற்பொருட்டு. ``என் உயிர்`` எனத் தமது உயிரையே எடுத்துக் கூறியதற்கு, மேல், ``என்னை ஆண்ட`` (தி.9 பா.291) என்றதற்கு உரைத்த வாறு உரைக்க. என் - என்ன கைம்மாறு. என்றும் - என்று சொல்லியும். உம்மை, எதிரது தழுவிய எச்சம். கரந்தும் - கண்ணிற்குப் புலனாகாது நின்றும். கரவாத கற்பகனாகி - வேண்டியவற்றை வேண்டியாங்கு மறையாது வழங்கும் கற்பகத்தருப்போல்பவனாகி. ``ஆகி`` என்றது, ``வரம்பிலர்`` என்பதில் ``இல்லா`` என்பதனோடு முடியும். `கருணைக் கடலாய்` என ஆக்கம் விரித்து, `ஆக்கம், உவமை குறித்து நிற்ப, கருணைக் கடல் என்பது இல்பொருளுவமையாய் நின்றது` என உரைக்க. கருணைக் கடல் - கருணையை உடைய கடல். பரந்தும் - விரிந்தும். நிரந்தும் - இடையீடின்றி நிறைந்தும். இவையும், ``இல்லா`` என்பதனோடு முடியும். `அழகு` எனப் பொருள் தரும் ``பாங்கு`` என்பது இங்கு, `மேலான தன்மை` எனப் பொருள் தந்து நின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை
அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

வழிபடவந்த பிரமன், இந்திரன், சிவந்த கண்களை உடைய திருமால் எங்கும் பல திசைகளாகிய இடங்களில் அழைத்து, வழிபாட்டுப் பொருள்களைக் கைக்கொண்டு நெருங்கிக் கூட்டம் கூட்டமாய் நிற்க, திருக்கூத்தினை நிகழ்த்தும், என் உயிருக்கு அமுதம் போல்பவனாய், என் அவாவிற்கு உரிய செல்வமாய், எங்கள் தலைவனாய், பிறப்புவகையால் ஒரு நிகரான தேவர்கள் நினையும் நினைவுக்கு அகப்படாமல் அவர்கள் நினைவையும் கடந்து நிற்கும் நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

சேவிக்க - வணங்குதற்கு. ``வந்து`` என்றதை. ``மால்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `திசைதிசையன எங்கும்` என மாற்றுக. ``திசை திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்னும் அடுக்குப் பன்மை குறித்து நின்றது. ``திசையன`` என்றதற்கு, திசைகளாகிய இடங்களில்` என உரைக்க. கூவி - அழைத்து. ``கவர்ந்து`` என்றதற்கு, `வழிபாட்டுப் பொருள் களைக் கைக்கொண்டு` என உரைக்க. ``ஆடும் அமுது`` என்றதில் உள்ள ``அமுது`` என்பது, `அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான்` என்பதில் `பார்ப்பான்` என்பதுபோலக் கோடற்பொருட் பெயராய் நின்றது. உடல்நலம் ஒன்றே பயக்கும் தேவரமுதினும் வேறாதலை விளக்க ``ஆவிக்கு அமுது`` என்றார். இதுவும், இல்பொருள் உவமை. அமுது - அமிர்தம் போல்பவன். என் ஆர்வத் தனம் - எனது அவாவிற் குரிய பொருள் (செல்வம்). ஒப்பு அமரர் - பிறப்புவகையால் ஒரு நிகராய தேவர். அஃதாவது `வானவர்` என்றபடி. பாவிக்கும் பாவகம் - நினையும் நினைவு. அவர் தம் நினைவிற்கு அகப்படாமையின், ``அப்புறத் தான்`` என்றார்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

சிவநெறி ஒழுக்கமும் அவன் திருவருளும் அடியேனிடத்து நிலைபெற்று விளங்கும்படி, அச்சிவலோக நாயக னான பெருமானுடைய திருவடிகளின் கீழ் மற்ற யாவரும் பெறாததான `யாவரையும் யாவற்றையும் உடையவன் சிவபெருமானே` என்று அறியும் அறிவினைப் பெற்றேன். அவ்வறிவால் அடியேன் பெற்ற பேற்றினை வேறுயாவர் பெறக்கூடும்? இவ்வுலகில் நாட்டில் உள்ளா ரும் ஊரில் உள்ளாரும் எடுத்துக் கூறும்படி, அவன்புகழைப் பிதற்றி உமாதேவியின் கணவனாகிய எம்பெருமானுக்கு நாம் அடிமையாகிய திறத்தை இந்நிலவுலகத்தாரும் தேவர் உலகத்தாரும் அறியும் வகையில் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

சீர் - செம்மை; சிவநெறி ஒழுக்கம். திரு - திருவருள். பொலிய - என்னிடத்து நிலைபெற்று விளங்கும்படி. `சேவடிக் கீழ் நின்று` என ஒருசொல் வருவிக்க. நிற்றல் - பணிசெய்தல். ``பெறாத`` என்றது, `பெறுதற்கரிய` என்றவாறு. பெறுதற்கரிய அறிவாவது, `யாவரையும், யாவற்றையும் உடையவன் சிவபெருமானே` என அறியும் அறிவு. `அவ்வறிவாற்பெற்றது` எனக் காரணம் வருவித்து, ``பெற்றது`` என்றதற்கு, `பெற்றபயன்` என உரைக்க. அங்ஙனம் உரையாவிடில், ``ஆரும் பெறாத அறிவு`` என்றதன் பொருளே பொரு ளாய்ச் சிறப்பின்றாம். பயன், சிவானந்தம். ஆர் - அவ்வறிவைப் பெறாத எவர். `அத்தகைய பயனை நீவிரும் பெற்றீராதலின், நாம் அனைவரும் கூடிப் பல்லாண்டு கூறுவோம்` என இயைபுபடுத் துரைக்க.
ஊர் - வாழும் ஊர். கழற - எடுத்துச் சொல்லும்படி; இதற்கும் செயப்படுபொருள் இனி வருகின்ற ``ஆள்`` என்பதே. அதனால், ``உமை மணவாளனுக்கு ஆள்`` என்பதை, ``உலகில்`` என்றதன் பின்னே வைத்து உரைக்க. உழறி - அவன் புகழைப் பிதற்றி. `பிதற்றி` என்றார், முற்ற அறியாது அறிந்தவாறே கூறலின். இதனை, ``நாம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆள் - நாம் ஆளான தன்மையை. ``கழற`` எனவும், ``அறியும் பரிசு`` எனவும் வேறு வேறு முடிபு கொள்ளுதலால், ``பாரும்`` என்றது, கூறியது கூறல் ஆகாமை அறிக. பரிசு - தன்மை. `பரிசினால்` என மூன்றாவது விரிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

பொழிப்புரை :

`சேல் மீனையும் கயல் மீனையும் உவமை கூறும் படியான கண்களைஉடைய இளமகளிரின் கொங்கைகளில் பூசப்படும் குங்குமத்தைப் போல எம்பெருமான் திருமார்பில் திருநீறு விளங்கு கிறது` என்று அடியவர்கள் புகழ்ந்து கூற, திருமாலும் பிரமனும் அறிய முடியாத வழியைக்காட்டி அடியேனுடைய உள்ளத்தினுள் பாலும் அமுதும் ஒத்து இனிமையானவனாகியும், புத்துயிர் அளிப்பவனாகி யும், நிலை பெற்றிருக்கும் எம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து வோமாக.

குறிப்புரை :

சேல், கயல் என்பன மீன்வகை. `சேலும் கயலும் போல` என உவம உருபு விரிக்க. திளைக்கும் - பிறழ்கின்ற. ``குங்குமம்`` என்றது, குங்குமங் கூடிய சாந்தினை. `குங்குமம் போலும் பொடி மார்பின்கண் இலங்கும்` என்க.
அணி - அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும், `மார்பிற்பொடி, கொங்கையிற் குங்குமம்போல இலங்கும்` என்றல் கருத்தென்க. இதனால் இறைவன் மார்பில் உள்ள திருநீறு, மங்கையர் கொங்கையில் உள்ள குங்குமம் காமுகரை வசீகரித்தல் போலப் புண்ணியரை வசீகரித்தல் கூறப்பட்டது. புண்ணியர் - சிவபுண்ணியத் தின் பயனாகிய சிவஞானத்தைப் பெற்றவர். நெறி - சிவஞானம், வந்து - அழகிய கோலத்துடன் வந்து. இதனை, ``போற்றிசைப்ப`` என்றதன் பின்னர்க் கூட்டுக.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல் வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால்பெறாது அழுது, வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெரு மானாய், ஒருகாலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத்திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு, அருளைவழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

பாலுக்கு - பாலை உண்பதற்கு. ``பாலகன்`` என்றது, உபமன்னிய முனிவரை. வேண்டி - விரும்பி. வியாக்கிரபாத முனிவர் மகனாராகிய உபமன்னிய முனிவர் பிள்ளைமைப் பருவத்தில் பால் பெறாது அழுது வருந்த, அவரை வியாக்கிரபாத முனிவர் கூத்தப் பெருமான் திருமுன்பிற் கிடத்துதலும், கூத்தப்பெருமான் அவருக்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட் காண்க. சிவபெருமான் திருமால் செய்த வழிபாட்டிற்கு இரங்கிச் சக்கரம் அளித்த வரலாறு வெளிப்படை. ஆலிக்கும் - வேதத்தை ஓது கின்ற. ஆலித்தல் - ஒலித்தல்; ``அஞ்செவி நிறைய ஆலின`` (முல்லைப் பாட்டு - 89.) என்றது காண்க. வாழ்கின்ற - வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற. ``சிற்றம்பலமே`` என்ற ஏகாரம் பிரிநிலை. பாலித்து - அருளை வழங்கி. இது, `பாலியாநின்று` என நிகழ்காலம் பற்றிநின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனக மும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

தம் தந்தையின் கால்கள் நீங்கும்படி மழு வாயுதத்தை வீசிய சண்டேசுர நாயனாருக்கு அந்தவானுலகத் தோடு நிலஉலகத்தவரும் ஒருசேர வணங்குமாறு அழகிய இருப்பிடமும் தனக்கு நிவேதித்த உணவும் வழங்கி, ஒளி பொருந்திய அழகிய முடியில் அணிந்த தன் மாலையும் சண்டன் என்ற சிறப்புப் பெயரும், அடியவர்களுக்குத் தலைமையும், தாம் செய்த பாதகச் செயலுக்குப் பரிசாக வழங்கிய எம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து வோமாக.

குறிப்புரை :

`தாதையை வீசிய` என இயையும். சண்டி - சண்டேசுர நாயனார். இவர், தந்தைதன் காலை வெட்டிப் பேறுபெற்ற வரலாறு (தி.12) பெரியபுராணத்துட் பரக்கக் காணப்படுவது. அண்டம் - வானுலகம். என்றது, அதன்கண் உள்ளாரை. ``அவ்வண்டம்`` என்ற பண்டறி சுட்டு, வானுலகத்தின் பெருமையுணர நின்றது. `இவ்வண்டம்` என்பது பாடம் அன்று. ஒடு, எண்ணொடு. உம்மை, சிறப்பு. `அண்டத்தொடும் பூதலத்தோரும் உடன் வணங்க` என மாறிக்கூட்டுக. ``உடனே என்ற ஏகாரம் அசைநிலை.
பொன் - அழகு. போனகம் - தான் உண்டு எஞ்சிய உணவு. சோதி மணி முடி - ஒளியை உடைய அழகிய சடைமுடி. தாமம் - கொன்றை மாலை. நாமம் - `சண்டன்` என்னும் சிறப்புப் பெயர். இஃது அப் பதவி பற்றி வருவது. எனவே, ``நாமம்`` என்றது, `அப்பதவியை` என்றதாயிற்று. நாயகம் - தலைமை. ``தொண்டர்க்கு நாயகமும்`` என்றது. அப்பதவியது இயல்பு விளக்கிய வாறு. `சிவபிரானை வழிபடும் அடியவர்க்கு அவர்தம் வழிபாட்டின் பயனை வழங்கும் பதவியே சண்டேசுர பதவி என்பதும், `அப்பதவியையே அப் பெருமான் விசாரசருமருக்கு அளித்தான்` என்பதும் அறிக. `பரிசாக வைத்தான்` என ஆக்கம் வருவிக்க. ``பாதகத்துக்குப் பரிசு வைத்தான்`` என்றது, `இன்னதொரு பொருந்தாச் செயலைச் செய்தான்` எனப் பழிப்பதுபோல நின்று, `திருத்தொண்டில் உறைத்து நின்றாற்கு அவ்வுறைப்பினை அறிந்து அதற்குத் தக்க சிறப்பினை அளித்தான்` என்னும் புகழ் புலப்படுத்தி நின்றது. ``பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்`` என்ற திருவாசகத்தோடு (தி.8 திருத்தோணோக்கம் - 7) இதனை ஒப்புநோக்குக.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 11

குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

வேய்ங்குழல்இசை, யாழின்இசை, கூத்தாடுதலின் ஓசை, துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப்பெருகித் திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில் இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

ஏத்து ஒலி - துதித்தலின் ஓசை. `குழாமாகப் பெருகி` என ஆக்கம் விரிக்க. பெருகி - பெருகுதலால். விழவு ஒலி - இறைவனது சிறப்பு நாளிற்கு உரிய ஓசைகள். விம்மி மிகு - நிறைந்து மிகுகின்ற. இது திருவாரூரின் சிறப்பேயாம். `திருவாரூரிற் பிறந்த பழ அடியார்` என்க.
சைவ அந்தணர்க்கன்றிப் பிறர்க்குத் தில்லை இடமாகாதிருந்தது போலத் திருவாரூர் சைவர்கட்கன்றி இடமாகாதிருந்தது. அதனால், அங்குப் பிறந்தோர் யாவரும் சிவபெருமானுக்கு வழிவழித் தொண்டராய பழவடியாராதலின், அவரோடு கூடிப் பல்லாண்டு கூறுதலைச் சிறப்புடையதாக அருளிச்செய்தார். இவ்வாற்றால் தில்லை வாழந்தணர் போலத் திருவாரூர்ப் பிறந்தாரும் இயல்பாற் சிறந்த வராதல் பற்றியே ஆளுடைய நம்பிகள், ``தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்`` என்றாற்போல, ``திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்`` என்று அருளிச்செய்தார். மழவிடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி - மரபு இரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய் (தி.12 பெ.பு.ஞானசம்-17) உள்ளவரே தம்முள் மணம் செய்துகொள்ளும் குடிகள். `அவற்றிற் பிறந்த பழவடியார்` என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 12

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

அழகினை உடைய ஆதிரைத்திருநாளில் தேவர் கூட்டத்தில் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோர் வந்தனர். தேர்ஓடும் வீதியில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நிறைய, நிலவுலகெங்கும் நிறைந்த சிவபெருமானுடைய பழமையான புகழைப்பாடியும் ,அதற்கு ஏற்ப ஆடியும், அந்த ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

`யார் யார்` என்பது, ``ஆர் ஆர்`` என மருவிநின்றது. திருவாதிரை நாள் தில்லைப் பெருமானுக்குத் தனிப்பெருந் திருநாளாத லின், அதனையே எடுத்துக்கூறினார். இத் திருப்பதிகம் அந்நாளில் இவரது அன்பினை வெளிப்படுத்துதற் பொருட்டு, ஓடாது நின்ற தேரினை இத்திருப்பதிகம் பாடி ஓடச் செய்தார் என்பது மரபு. தில்லைத் தேர்த் திருவிழா இஞ்ஞான்று திருவாதிரைக்கு முன்னாளில் செய்யப் படுகின்றது. அணி - அழகு. `ஆதிரை நாளில் அமரர் குழாத்தில் ஆரார் வந்தார்` என்க. ``வந்தார்`` என்றதன்பின், `எனின்` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. இனி அவ்வாறு வருவியாது, கூற்றும், மாற்றமுமாக நின்றாங்கு நிற்ப உரைப்பினும் ஆம். ``இந்திரனும்`` என்றதன்பின் `வந்தார்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. `அரசன் வந்தான்` என்றவழி, அமைச்சர் முதலாயினார் வந்தமை தானே பெறப் படுதல் போல, `நாராயணன் முதலியோர் வந்தார்` எனவே, ஏனைத் தேவர் பலரும் வந்தமை சொல்லாமே அமைந்தது. பெரியோனது தனிப் பெருவிழாவாகலின், அமரர் அனைவரும் எஞ்சாது வருவாராயினர். ``தேரார்வீதியில்`` என்பதன்முன், `இவ்வாறு` என்னும் இயைபு படுத்தும் சொல் வருவிக்க. ``தேரார் வீதி`` என்றதனால், ஆதிரை நாளில் வீதியில் தேரோடிய குறிப்பு அறியப்படும். ``நிறைந்து`` என்ற தனை, `நிறைய` எனத் திரிக்க. நிறைய - நிறைந்து நிற்க. பார் ஆர் - நிலவுலகெங்கும் நிறைந்த. தொல் புகழ் - பழமையான புகழ்; இது சிவபிரானுடையது. ஆடியும் - அப்பாடலுக்கு ஏற்ப ஆடுதலைச் செய் தும். ``ஆதிரைநாள்`` என்றமையின், `அந்நாளை யுடையானுக்குப் பல்லாண்டு கூறுதும்` என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 13

எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்மெம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே. 

பொழிப்புரை :

எம்தந்தை, எம்தாய், எம்சுற்றம் முதலிய எல்லாப் பொருள்களும் எமக்கு அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானே என்று தியானம் செய்யும், சிவபெருமானுடைய சிறப்புடைய அடியவர்களின் திருவடிகளை வழிபடும் நாய்போல இழிந்தவனாகிய சேந்தன், `அழிவில்லாத ஆனந்தத்தை வழங்கும் சிறந்த தேன் போலவந்து அடிமையாகக் கொண்டு அரிய உயிரின்மேல் நிற்கும் கட்டு நீங்குமாறு அருள் செய்தபெருமானே` என்று வாழ்த்தும் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

குறிப்புரை :

`எம் தந்தை, எம் தாய், (எம்) சுற்றம், (மற்றும்) எல்லாப் பொருளும் எமக்குச் சிவபிரானே என்றென்று சிந்தை செய்யும் சீரடியார்` என உரைக்க. அமுதாம் எம்பிரான் - அமுதம்போல இனிக் கின்ற எங்கள் பெருமான்; `சிவபிரான்` என்றபடி. முதலடியின் இறுதிச் சீரின் ஈற்றசை நேர்பு. நேர்பசை நிரைபசை கொள்ளாதார் இச் சீரினை, `நாலசைச் சீர்` என்ப. `என்றுமே` என ஓதி, எழுசீராகவும் ஆக்குப. இத் திருப்பாட்டின் இரண்டாவதும், மூன்றாவதும் ஆகிய அடிகளில் உள்ள பாடங்கள் உண்மைப் பாடங்களாகத் தோன்றவில்லை. பாடபேதங் களும் பலவாகப் சொல்லப்படுகின்றன. எனவே, இரண்டாம் அடியில், ``நாய்`` என்றதன்பின் `சேந்தன்` என்னும் சொல் அமைய ஓதுதல் பாடமாகக் கொண்டு, மூன்றாமடியில், `அந்தமில் ஆனந்தச் செந்தேன் எனப்புகுந்து` எனக் காட்டப்படும் பாடத்தை உண்மைப் பாடமாகக் கொள்ளுதல் பொருந்துவதாம். ஆயினும், இது பொழுது ஓதப்பட்டுவரும் பாடமே இங்குக் கொள்ளப்படுகின்றது. சீரடியார் அடி நாய் - சிறப்புடைய அடியவரது அடிக்கீழ் நிற்கும் நாய் போன்றவன் என்றது தம்மைப் பிறர் போலக் கூறியதாம். `செப்புரை யால் கூறுதும்` என மூன்றாவது விரித்து முடிக்க. ஆனந்தச் சேந்தன் - ஆனந்தத்தைப் பெற்ற சேந்தன். இஃது, ஆளப்பட்ட பின்னர் அடைந்த நிலைமையைக் கூறியது. ஆருயிர்மேற் பந்தம் - அரிய உயிரின்மேல் நிற்கும் கட்டு. பிரிய - நீங்குமாறு. பரிந்தவன் - அருள் செய்தவன்.
ஒன்பதாம் திருமுறை
மூலமும் உரையும் - நிறைவுற்றது.
சிற்பி