கட்டளைக் கலித்துறை


பண் :

பாடல் எண் : 1

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே.

பொழிப்புரை :

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றே ; ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் ஞானம் மேலிட்ட காலத்து ஆணவம் ஒளித்து நிற்கும், ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒளித்து நிற்கும் ; எனினும் இருள் அடராது ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளித்து நின்றாலும் ஞானத்தை ஆணவம் பொருந்தாது ; உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் பூர்வ வாதனா விசேஷத்தாலே உள்ளே கிடந்த சிவஞானம் சற்று விளங்குமானாலும் மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கு மல்லாமல் அது கொண்டே நீங்கமாட்டாது ; உயிர் அருள் கூடும்படி கொடிகட்டினனே இப்படி மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கிற ஆன்மா அருள் கூடும்படிக்குத் தீட்சைக் கிரமங்களினாலே மலங்களைப் போக்கத் துவசங்கட்டினேன்.

குறிப்புரை :

ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றாயிருக்கத் தனது காரணங் கெடாமலிருக்கிற மலத்தைத் தீட்சைக் கிரமத்தினாலே போக்கி மோட்சத்தை அடைவிப்போம்.

பண் :

பாடல் எண் : 2

பொருளாம் பொருளேது போதேது கண்ணே(து)
இருளாம் வெளியே திரவே(து) - அருளாளா
நீபுரவா வையமெலாம் நீஅறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

பொழிப்புரை :

பொருளாம் பொருள் ஏது பொருளிலே அழியாத பொருள் ஏது ; போது ஏது கிரணமாகிய சுத்தி ஏது ; கண் ஏது கண்போல ஆன்மா ஏது; இருளாம் வெளி ஏது இரவு ஏது அஞ்ஞானமாகிய சகல கேவலந்தான் ஏது; அருளாளா அருளையுடையவனே ; நீ புரவா வையமெலாம் நீ அறிய வையமாகிய மலமாயாதி கன்மங்களிலே பொருந்தாமல் ஆன்மாக்களினிடமாகப் பொருந்தியிருக்கிற தேவரீர் அறிய ; கோபுர வாசற் கொடி கட்டினேன் கோபுரவாசலிலே கொடி கட்டினேன்.
கர்த்தா ஏது சத்தி ஏது ஆன்மா ஏது கேவலசகலம் ஏது இது சொல்வார் உளரோ என்று கொடி கட்டினோம்.
அழியாத பொருள் ஏதென்னில், அகண்ட பரிபூரணமாய் உயிர்க்குயிராய் ஆனந்த ரூபமாயிருக்கிறது தற்சிவம். அதற்கு உம் : சிவப்பிரகாத்தில் (13) ‘பலகலையா கமவேதம்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க. கிரணவொப்பாகிய சத்திதான் ஏதென்னில், சத்தியென்பது தனியே ஒரு முதலல்ல, சூரியனுங் கிரணமும் போல மரமும் காழ்ப்புப் போலத் தடையற்ற ஞானமாயிருக்கும். அதற்கு உம் : சிவப்பிரகாசத்தில் (75) ‘சுத்தமாஞ் சத்திஞானச் சுடராகும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க. சித்தியாரில் (1.62) ‘சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகு’ மென்றும், (1.67) ‘ஒருவனே யிராவ ணாதி’ யென்ற பாடத்தில், ‘வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும், இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்’ என்றும் வருவன கண்டுகொள்க. கண்ணொப்பாகிய ஆன்மா ஏதென்னில், அது அதுவாய் அடுத்ததன் தன்மையாய் வசிப்பைப் பற்றின வியாபகமாய்க் கண்படிகம் ஆகாசம்போல ஒப்பையுடையதாய் அக்கினியைப்போலப் பற்றி நிற்கிற தல்லாமல் தனித்துநிற்கிற முதலல்லவாய் அருவம் உருவம் ரூபாரூபமல்லவாய்ப் பூவிற் கந்தம் போன்றதாயிருப்பது ஆன்மா. இதற்கு உம் : சிவஞான போதத்தில் (4.5) ‘மாயா தனுவிளக்காய் மற்றுள்ள’ மென்ற பாடத்திலும், சிவப்பிரகாசத்தில் (59) ‘ஓரிடத்திருத்த’ லென்ற பாடத்திலும், சித்தியாரில் (4.20) ‘அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய், வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி’ என்றும் ; திருவருட் பயனில், (18) ‘இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம், பொருள்க ளிலதோ புவி’ யென்றும், சித்தியாரில் (பரபக்கம் 52) ‘அங்கி யானது தானு மொன்றை யணைந்து நின்று நிகழ்ந்திடும், பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடாது’ என்றும், சிவஞான போதத்தில் (7.3) ‘தோன்றல் மலர்மணம்போற் றொக்கு’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. அஞ்ஞானமாகிய கேவலசகலந்தான் ஏதென்னில் : அதிற் கேவலமாவது தத்துவங்களோடே பொருந்தாமல் போகத்திற் கொள்கை யில்லாதவனாய் அறிவில்லாதவனாய் அந்தகாரத்திலே அலரவிழித்த விழிபோன்றதாய், மலமொன்றுமேயாய் அதுவாய் அந்த மல மாய்கையைவிட்டு நீங்குமுறைமை யில்லாததாயிருப்பது கேவலம். இதற்கு உம் : சிவப்பிரகாசத்தில் (33) ‘ஓங்கிவரும் பலவுயிர்கள்’ என்ற பாடத்திலும், சித்தியாரில் (4.38) ‘அறிவில னமூர்த்த னித்த னரா காதி குணங்க ளோடும்’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. சகலமாவ தேதென்னில், சகலத்துக்கு வெளியென்றும் தீபமென்றும் பெயர். வெளி தீபமென்றிருக்கிற சகலத்தை அஞ்ஞானமென்று சொல்லுவானேனென்னில்(“சகலத்திலே அஞ்ஞானமாகிய மாயா போகத்தைப் புசிப்பிக்கு மல்லாமல் ஞானத்தினை யுணர்த்தாது; ஞானம் சுத்தத்திலே யல்லாமல் உண்டாகாது; ஆகையால் சகலமும் போகத்தைப் புசிப்பிக்கிற நிமித்தமாகக் கேவலத்திற்கு இது தீபமென்றும் வெளியென்றும் சொன்னதல்லாமல் இதுவும் அஞ்ஞனமே தப்பாது”)சகலம் மாயா போகத்தைப் புசிப்பிக்கத் தீபமாக வந்தது, தனக்கு வேண்டிய தன்னை வினையைத் தலைவனை உணர்த்தாதாகையாலும் அஞ்ஞானமே இயக்குவிக்கு மென்பதினாலும் அறிக.சிவப்பிரகாசத்தில் (37) ‘புகலுமல மொழித்தற்கு’ என்ற பாடத்திலும், இருபாவிருபதில் (206) ‘இருள் வெளியாகு மருளினை யறுத்து’ என்பதிலும் அறிக. அருளாளா கிருபை யுடையவனே. நீ புரவா வையமெலாம் நீ யறியக் கட்டினேன். * சர்வத்ர பரிபூரணனாக இருக்கப் பிரபஞ்சத்திலே பொருந்தாமல் உயிர்களிடமாய் நிறைந்திருக்கிறது எப்படியென்னில், சூரியன் அந்தகாரத்தைப் பொருந்தாமல் எங்கும் வியாபித்து நிற்கிறது போலும் ; உயிரும் சிவமும் கலப்பாக இருக்க ஆன்மாக்களை மலம் பொருந்தினது எப்படியென்னில், சமுத்திரமும் சலமும் உப்பும்போல. உம் : நெஞ்சுவிடுதூதில் (8) ‘படநாகம் பூண்ட பரமன் பசுவி, னிடமாய் நிறைந்த இறைவன்’ என்றும், சித்தியாரில் *(7.1) ‘அனைத்துஞ்சத் தென்னி னொன்றை’ யென்றும், (7.3) ‘சுத்தமெய்ஞ் ஞானமேனிச் சோதிபா’ லென்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. கோபுர வாசற் கொடி அந்தக் கர்த்தாவே கர்ண பரம்பரையாக அநுக்கிரகம் பண்ணி யறிகிறதென்பது கருத்து.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்கா துணர்வரிய தம்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்கும் அருள்நல்கக் கொடி.

பொழிப்புரை :

வாக்காலும் ... தன்மையனை வாக்கு மனங்களாலும் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற் கரிதாகிய தன்மை யுடையவனை ; நோக்கி விசாரித்துப் பார்த்து ; பிறித்து பகுக்கு மிடத்து ; அறிவு ... கொடி அறிவுக்கறிவா யிருக்கிறதைப் பிரியாமற் குறித்து அருள் பொருந்தத்தக்கதாகக் கொடி கட்டினேன்.
வாக்கு மனங்களுக்கும் எட்டாமல் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற்கரிதாகிய அறிவுக்கறிவாயிருக்கிற பொருளை இவனிடத்திலே பொருந்தத் தக்கதாகக் கொடி கட்டினேன்.
மனம் வாக்குக் காயங்களினாலே ஒருகாலுந் தாக்கா தவனென்றும் ஆன்மபோதத்தா லறியப்படாதவனென்றும் சொன்னதற்கு உம் : சித்தியாரில் (பாயி. 4) ‘மறையினா லயனால் மாலால் ... கூறொணா தாகி நின்ற விறைவனா’ ரென்றும், சிவப்பிரகாசத்தில் (84) ‘பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும், ஈசனை யறிய வொண்ணா’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. விசாரித்துப் பார்க்குமிடத்தில் என்றது இப்படி மனம் வாக்குக் காயங்களுக்கும் ஆன்மபோதத்துக்கும் எட்டாத சிவனை ஆசாரியர் தீடிக்ஷக்கிரமங்களினாலே மலமாயாதி கன்மங்களைப் போக்க பசு கரணங்களைச் சிவகரணமாக்கி மலத்திலே பற்றாக இருந்த அறிவைத் திருப்பி அருளிலே பற்றாக்கி என்றதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (90) ‘பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம், நீத்தான் நினைவுவே றாக்கினான்’ என்பது கண்டுகொள்க. அறிவு தம்மிற் பிரியாமை தானே குறிக்கும் என்றது இப்படி மலங்களைப் போக்கி அறிவை அருளினாலே திருப்பின ஆசாரியர் அனுக்கிரகத்தினாலே ஞாதுரு ஞான ஞேயங்களாகிய சங்கற்பனை ஞானங்களிலே போகாமல் தன்னிடத்திலே உயிர்க்குயிராய் அநாதியே தோன்றாமற் பொருந்தியிருக்கிற திருவருளிலே அறிவு தாரகமாக நிறுத்தி என்றதற்கு உம் : சித்தியாரில் (11.2) ‘ஞாதுரு ஞான ஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனை ஞான மாகுந், திருஞான மிவையெல்லாங் கடந்த சிவ ஞான மாதலாற் சீவன் முத்தர் சிவமேகண் டிருப்பர்’ என்பது கண்டுகொள்க. அருள் நல்கக் கொடி என்றது இப்படி ஆசாரியர் அனுக்கிரகம் பெற்ற அனுட்டானத்தினாலே சிவன் ஆன்மாவைக் கவளீகரித்துக் கொள்ளுவனென்றும் இந்த முறையிலே யல்லாமல் மோக்ஷம் அடையப்படாதென்றும் கொடிகட்டினோ மென்பது கருத்து. அருள் பொருந்து மென்றிருக்கச் சிவன் கவளீகரிப்பனென்று சொல்லுவானே னென்னில், அருளென்றும் சிவமென்றும் வேற்றுமையில்லை யென்றது. ஆன்மாவைச் சிவன் கவளீகரித்ததெப்படி யென்னில், ரசகுளிகை பொன்னைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டது போலவும் ; தானாக்கினது எப்படியென்னில், அக்கினி இரும்பைத் தானாக்கினது போலவும் ; சிவன் ஆன்மாவை வசித்து விடாதது எத்தன்மையென்னில், காந்தம் இரும்பை வசித்தால் ஒருகாலும் விடாது அத்தன்மைபோலவும் ; சிவன் ஆன்மாக்களுக்கு மலத்தைப் போக்கித் திருவடியிலே கூட்டினது எப்படியென்னில், அக்கினி காட்டத்தைக் கெடுத்தது போலவும் சூரியன் அந்தகாரத்தைப் போக்கினது போலவும் மலத்தைப் போக்கி உப்பை யணைந்த அப்பைப் போல ஒன்று பட்டுத் திருவடியிலே கலந்திருப்பது. ஆன்மா சிவனைப் பொருந்திச் சிவனாய் நீங்காமலிருக்கிறது எப்படி யென்னில், குளத்திலே கட்டுப்பட்ட தண்ணீர் அணையை முறித்துக்கொண்டு சமுத்திரத்திலே சேர்ந்தபோது அந்தச் சமுத்திர சலமேயாய் அந்தச் சமுத்திரத்தை விட்டு நீங்காத முறைமை போலவும் ஆன்மாச் சிவனைப் பொருந்திச் சிவமேயாய்ச் சிவனைவிட்டு நீங்காமல் சிவனுடைய திருவடியிற் கலந்து கிடக்கிறது இந்த முறைமைத்து. இதற்கு உம் : சித்தியாரில் (11.12) ‘இரும்பைக் ... கலந்தே’ என்றும், சிவஞான போதத்தில் (11.4) ‘மன்னு மிருளை மதிதுரந்த’ என்ற பாடத்திலும், (11.5) ‘நசித்தொன்றி னுள்ளம்’ என்ற பாடத்திலும், (8.7) ‘சிறைசெய்ய நின்ற’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.

பொழிப்புரை :

அஞ்செழுத்தும் ... நாலெழுத்தும் சிவாயநம என்கிற அஞ்செழுத்தும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தும், ஓம் நமசிவாய என்கிற ஆறெழுத்தும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தும் ஆன இப்படி உச்சரிக்கிற விதிப்படியே உச்சரித்து ; பிஞ்செழுத்தும் ... நெஞ்சழுத்தி விதிப்படி உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை யறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும் மேலைப் பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் தன்னுடைய இருதயத்திலே வைக்கில் ; பேசும் ... கொடி பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டறக் கூசாமல் அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
பஞ்சாக்கர முதலாகிய மந்திரங்களை உச்சரித்து அதன் பிறகு அந்த மந்திரத்தினுடைய அட்சர சொரூபத்தை அறிந்து சத்தி சிவான்மகமாயிருக்கிற அட்சரத்தை இருதயத்திலே வைத்தால் அந்தச் சத்தி தானே சிவனை இரண்டறக் கலப்பிப்பளென்று பஞ்சாக் கரத்தினாலே மோட்சத்தை அடையும் படிக்குக் கொடி கட்டினேன்.
அஞ்செழுத்தும் ... நெஞ்சழுத்தி பஞ்சாட்சரம் உச்சரிக்கிற முறைமையிலே தூல பஞ்சாட்சரம் சூக்கும பஞ்சாட்சரம் அதிசூக்கும பஞ்சாட்சரம் சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று உச்சரிக்கிற முறைமை நாலுவித முண்டு. அந்த முறைமை உச்சரித்து அந்தப் பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து அது ஏதென்னில், சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை யறிற்து இதிலே ஊன நடனமாகிய நகார மகாரத்திலே சென்று செனன மரணத்திலே போகாமல் ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்திச் சிகார முதலாக உச்சரித்து அப்படி உச்சரிக்கிற முறைமையும் விட்டு வகாரமாகிய ஞானந் தானாக நிற்கவே சிகாரமாகிய ஞேயத்திலே அழுத்துவிக்கும். அது எப்படி யென்னில், சத்தியாகிய வகார மிடமாகச் சிவமாகிய சிகாரத்தி னிடையிலே அழுந்தவே அத்தன்மை யுண்டாக்கும். அதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (93) ‘அஞ்செழுத்தை, யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி யுணர்த்தியதன், வைச்சிருக்கு மந்த வழியாக்கி’ என்றும், சிவப்பிரகாசத்தில் (91) ‘திருவெழுத்தஞ்சில்’ என்ற பாடத்திலும், திருவருட்பயனில் (83) ‘ஊன நடன,’ (89) ‘ஆசினவா’ என்ற குறள்களிலும் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க. ஆனால் பஞ்சாட்சரத்தை உச்சரித்தாற் போதாதோ உச்சரிக்கவும் அதன்மேலே சத்தி சிவான்மகமாகிய எழுத்தினிடத்திலே நிற்கவும் அதன்மேலே மோட்சமுண்டாமென்றது ஏதென்னில், பஞ்சாட்சரத்தை உச்சரித்ததனாலே அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசிக்கும். அதற்கு உம் : சிவஞானபோதச் சூரணையில் (9) ‘பஞ்சாட்சரத்தை விதிப்படி உச்சரிக்க’ என்றது இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானம் வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாதலின் அது நீக்குதற்கெனக் கொள்க. இந்தப் பஞ்சாட்சர உச்சரிப்பிலே விளங்கின ஞானத்திலே நகார மகாரந் திரோதமலமென்றும் யகாரம் ஆன்மபோத மென்றும் மூன்றெழுத்தும் நீங்கி ஞானமேயாய் அந்த ஞானத்தினாலே சிகார வகாரத்தி னிடையிலே நின்றழுந்துகிறது வைச்சிருப்பு. அதற்கு உம் : திருவருட்பயனில் (89) ‘அருளினால் வாசியிடை நிற்க வழக்’ கென்பது கண்டுகொள்க. இப்படி ஞானத்திலே அழுந்துகிறோ மென்கிறதையும் விடவே சிவன்தானே இவனைக் கிரகித்துக் கொண்டும் இவன் செயலெல்லாந் தன் செயலாகவும் இவனுந் தானாகவே நிற்பன். இதற்கு உம் : திருவுந்தியாரில் (6) ‘நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன், தன்செயல் தானேயென் றுந்தீபற, தன்னையே தந்ததென் றுந்தீபற’ ஆக மூன்றுவகையுங் கண்டுகொள்க.

குறிப்புரை :

கொடிக்கவி யுரை முற்றும்
(இங்குப் பதிப்பித்த கொடிக்கவியுரை திருநெல்வேலி திரு. எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரவர்கள் அனுப்பி வைத்த ஏட்டுப் பிரதியிலுள்ளது. இதனை யொப்பு நோக்கற்குத் துணையாயிருந்தன இராசாங்கத்துக் கையெழுத்து நூல் நிலயத்துப் பிரதியும் அதனைப் பெரிதும் ஒத்த சிவஞான போத யந்திர சாலைப் பதிப்பும். இவ்வுரை விளக்கமாயுள்ள விரிந்தவுரை. இதனை யியற்றியவர் பெயர், இயற்றிய காலம் முதலியன விளங்கவில்லை.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை)
சிற்பி