திருவுந்தியார்


பண் :

பாடல் எண் : 1

அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.

பொழிப்புரை :

நிட்களமாய் ஒருவராலும் அறிதற்கரியதாகிய சிவம் ஆசாரிய மூர்த்தமாகி வந்ததென்று கருதி உம்முடைய குற்றத்தினின்று நீங்குவீராக. ஞானத்தைத் தான் விரும்பாமல் தானே வலியக் கொடுத்ததென்று கருதி உம்முடைய குற்றத்தினின்று நீங்குவீராக.
உந்தீபற வென்பதற்கு மேற்செய்யுள்களுக்கும் இப்படிப் பொருளுரைக்க. பறவென்றது ஒருமைப்பன்மை மயக்கம். இப்படியன்றிப் பறக்கவென்னும் வியங்கோளைப் பறவென்று விகாரமாக்கிக் கர்த்திருவாலே உம்முடைய தீமைகளெல்லாம் பறக்கக் கடவதெனினு மமையும். இதற்கும் அப்படியன்றிப் பறக்கவென்னு மெச்சத்தைப் பறவென விகாரமாக்கி உம்முடைய தீமைகளெல்லாம் பறந்துபோம்படிக்குக் கருதி நிற்பீரெனினுமமையும். இதற்கு நிற்பீரென்பது வருவிக்க. இம்மூவகையன்றிப் பொருளுண்டாயினுங் காண்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

பழக்கந் தவிரப் பழகுவ தன்றி
உழப்புவ தென்பெண்ணே யுந்தீபற
ஒருபொரு ளாலேயென் றுந்தீபற.

பொழிப்புரை :

விடயங்களிலே பழகின பழக்கந் தவிரும்பொருட்டு ஒப்பற்ற திருவருளாலே சரியை கிரியாயோகங்களிலே பழகுவதை விட்டு அந்த விடயங்களுக்காக முயற்சி பண்ணுவது என்ன புத்தியாயிருந்தது நெஞ்சமே.
ஆன்மாவைப் பெண்ணென்றது சிவனாகிய தலைவனோடே கூடி இன்பத்தை யனுபவிக்கையால்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்
பிண்டத்து வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.

பொழிப்புரை :

கண்ணிலே காணப்பட்ட ஆசாரியரைக் கொண்டு தம்மு டைய செயலைக் கொடுத்தவர் இப்போது எடுத்த சரீரவசமாய் நில்லார்கள். மேலும் இவர்களுக்குப் பிறப்புமிறப்புமில்லை.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 4

இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியும் அறிவதன் றுந்தீபற.

பொழிப்புரை :

நான் பெற்ற பேரானந்த அறிவை இப்படியிருந்த தென்று எப்படிச் சொல்லப்போகிறேன். அதுபோலே யிருந்தது, அது வேறேயுமில்லை, அந்த அறிவும் ஆன்மபோதத்தா லறியப்பட்ட அறிவல்ல.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 5

ஏகனு மாகி அனேகனு மானவன்
நாதனு மானானென் றுந்தீபற
நம்மையே ஆண்டானென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மாவிலே கலந்திருக்கையால் ஏகனுமாகி, அவனவளதுவாய்ப் பயன்கொடுத்தலால் அனேகனுமானவன் ஆசாரியனுமானான். அப்படித் திருமேனி கொண்டவிடத்தும் எண்ணிறந்த ஆன்மாக்களெல்லாமிருக்க நம்மையே அடிமை கொண்டான்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 6

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற.

பொழிப்புரை :

நம்முடைய செய்தியுமற்று இப்படிச் செய்தியற்றோமென்கிற போதமுமற்ற பின்னர் நம்முடைய செயலையெல்லாங் கர்த்தன் தன்னுடைய செயலாக ஏற்றுக் கொண்டான். அது மட்டுமோ, இதுவரையும் பெறாததனை இப்போது நமக்குத் தந்தான்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 7

உள்ள முருகி யுடனாவர் அல்லது
தெள்ள அரியரென் றுந்தீபற
சிற்பரச் செல்வரென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மா(க்கள்) சிவனுடனே கூடிநிற்குமுறைமை எப்படியென்னில், ஆன்மா(க்கள்) அக்கினியைச் சேர்ந்த மெழுகு போல உருகிச் சிவனுடனே கூடிநிற்கிறதல்லாமல் தம் போதத்தாற் சிவனை யறிதலிலர்; அதுவுமன்றி மேலாகிய ஞானச் செல்வத்தினை யுடையவர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 8

ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல வுந்தீபற
விமலற் கிடமதென் றுந்தீபற.

பொழிப்புரை :

மனம் பலவற்றிலும் வியாபியாமல் 1ஆறாதாரங்களிலும் அந்தந்தத் தேவதைகளைத் தியானித்த பழக்கத்தினலே நிராதாரமாகிய மனசலனமற்றவிடத்தே நீ சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; கர்த்தாவுக்கிருப்பிடம் அந்தத் திருவருளே.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 9

ஆக்கில்அங் கேயுண்டாய் அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கிற் பரமதன் றுந்தீபற
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆறாதாரங்களிலே தியானிக்கும்பொழுது அவ்விடத்திலே யுண்டாய்த் தியானந் தப்பின காலத்து அவ்விடத்திலே இல்லையாய், உண்டானபொழுதும் விசாரித்துப் பார்க்குமிடத்து மேலான பொருளுமல்லவாமாகையால், நம்முடைய பாவனைக் கெட்டாத பொருள்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 10

அஞ்சே யஞ்சாக அறிவே யறிவாகத்
துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற
துய்ய பொருளிதென் றுந்தீபற.

பொழிப்புரை :

பஞ்சபூத பரிணாமமாகிய சரீரத்தைப் புறம்பேயிருக்கிற பஞ்சபூத பரிணாமங்களைப் போல அன்னியமாகக் கருதித் தன்னுடைய போதத்தை விட்டுத் திருவருளே தனக்கறிவாகக் கருதி மலவாதனையாலே மயங்காமல் கர்த்தாவை உணர்ந்திருப்பாயாக. தூய்மையாயிருக்கிற பொருள் இப்படி யறியப்பட்ட பொருளே.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 11

தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரம்
நோக்கிற் குழையுமென் றுந்தீபற
நோக்காமல் நோக்கவென் றுந்தீபற.

பொழிப்புரை :

சடசித்துக்கள் எல்லாவற்றிலும் பொருந்தியிருக்கச் செய்தேயும் ஒன்றிலுந் தோய்வற்று நிற்கிற ஒப்பற்ற மேலான கர்த்தாவை உன்னுடைய போதத்தாற் பார்க்கில் கைகூடான். உன்னுடைய பார்வையை விட்டு அருளினாலே பார்க்கக் கைகூடும். குழையுமென்பது குறிப்புமொழி. கைகூடுமென்பது வருவிக்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 12

மூலையி ருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற
தவத்தில் தலைவரென் றுந்தீபற.

பொழிப்புரை :

தத்துவங்களாகிய மூலைகளிலே கிடந்த ஆன்மாக்களைச் சிவானுபவமாகிய முற்றத்திலே கொண்டு வந்து விட்டவர் மிகவும் பெரியவர்; அந்தப் பெரியவருந் தவத்தினாலே காணப்பட்ட பெரியவர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 13

ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற் றிடஞ்சிவம் உந்தீபற
தேடும் இடமதன் றுந்தீபற.

பொழிப்புரை :

சலனமில்லாமல் எங்கும் வியாபித்து நின்ற திருவருளாகிய ஊரிலே சென்று அப்பால் வேறொன்றையுந் தேடாமல் நின்றவிடஞ் சிவானுபவம்; அந்த இடமும் ஆன்ம போதத்தாலே தேடப்பட்ட இடமல்ல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனேநின் றுந்தீபற
உன்னையே கண்டதென் றுந்தீபற.

பொழிப்புரை :

அனாதியே உன்னிடத்திலே பொருந்தின திருவருளைக் கர்த்தா ஆசாரியனாக வந்து அதிட்டித்து எழுப்புதலாலே நீ அந்தத் திருவருளுடனே கூடி நிற்றலாலே அந்தக் கர்த்தா உன்னையே கண்டு கொண்டு நிற்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றில்அப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
பாவிக்கில் வாராதென் றுந்தீபற.

பொழிப்புரை :

விடயங்களிலே யிருக்கிற பற்றை யறுப்பதாகிய ஒப்பற்ற திருவருளை நீ பற்றினாயாகில் அந்தத் திருவருளாகிய பற்றைக் கர்த்தா அறுத்துத் தானாக்கிவிடுவன்; இந்தத் தன்மை உன்னுடைய பாவனையால் வாராது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

உழவா துணர்கின்ற யோகிகள் ஒன்றோடுந்
தழுவாது நிற்பரென் றுந்தீபற
தாழ்ந்த மணிநாப்போ லுந்தீபற.

பொழிப்புரை :

விடயங்களுக்கு முயற்சி பண்ணாமல் திருவருளை மாத்திரமறிந்திருக்கிற சிவயோகிகள் கன்மவசத்தால் விடயம் பொருந்தினாலும் நாக்கு விழுந்த மணியினது செயலறுதிபோல ஒரு விடயத்திலும் பொருந்தாது நிற்பர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற
நேர்பட அங்கேநின் றுந்தீபற.

பொழிப்புரை :

திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலியாகிய பிரகாச ஒளிவழியே சென்று அவ்விடத்திலே செவ்விதாக நின்று கர்த்தாவைக் கண்டு தெரிசிப்பாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

மருளுந் தெருளும் மறக்கும் அவர்கண்
அருளை மறவாதே யுந்தீபற
அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற.

பொழிப்புரை :

கர்த்தாவினிடத்திலேயுள்ள திருவருளை நீ மறவா திருந்தாயாயின் உன்னுடைய நினைப்பு மறப்பும் அற்றுப்போம்; இவ்விடத்திலே நீ செய்ய வேண்டியது அது வொன்றுமே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

கருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்
ஒருமகள் கேள்வனென் றுந்தீபற
உன்ன அரியனென் றுந்தீபற.

பொழிப்புரை :

திருவருளுடனே கூடி நிற்கும்பொழுது சிவனைக் கூட வேணுமென்று விரும்புதற்கு முன்னே உன்னுடைய விருப்பங் கெடும்படிக்கு உன்னுடனே வந்து பொருந்துவன் ஒப்பற்ற பராசக்தியினுடைய கணவன்; இப்படியன்றி உன்னுடைய போதத்தாற் கிட்டுதற்கரியன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

இரவு பகலில்லா இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற
விரைய விரையநின் றுந்தீபற.

பொழிப்புரை :

இரவாகிய ஆணவமும் பகலாகிய மாயையுமில்லாத இன்பவெளியாகிய திருவருளுடனே சீக்கிரத்திலே கூடிநின்று உந்தீபற. விரவி விரவியென்பதும் விரைய விரையவென்பதும் அடுக்கு. இருமலமுஞ் சொல்லவே வினைமலமும் அடங்கிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்(கு)
அல்லனாய் ஆனானென் றுந்தீபற
அம்பிகை பாகனென் றுந்தீபற.

பொழிப்புரை :

உண்டென்று சொல்லப்பட்ட கடபடாதிப் பொருள்களும் உண்டென்று சொல்லப்படாத ஆகாயப்பூ முயற்கோடாதிப் பொருள்களுமாகிய இவ்விரண்டு தன்மையுமில்லனாய் வேறே ஒரு தன்மையானான்; அவன் யாரென்னிற் பராசத்தியினுடைய கணவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினில்
ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற
அல்லாத தல்லாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

யோகப் பயிற்சியினாலே பிராணவாயுவை உள்ளடக்கித் தன்னுடைய போதத்தைத் திருவருளிடத்திலே செலுத்துவதே வெற்றி; அல்லாத முயற்சிகளெல்லாம் இழிவு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்
வெள்ள வெளியாமென் றுந்தீபற
வீடும் எளிதாமென் றுந்தீபற.

பொழிப்புரை :

மயக்கவல்ல கள்ளத்துடனே மயங்கவல்ல வீட்டுடையவன் கூடினது போலத் திருவருளுடனே ஆன்மா கூடினால் அந்த ஆன்மாவினுடைய இதயம் மலமாயை கன்மம் நீங்கி வெட்டவெளியாயிருக்கும். அப்பால் சிவனைப் பொருந்துகிறதும் எளிதாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

எட்டுக்கொண் டார்தம்மைத் தொட்டுக்கொண் டேநின்றார்
விட்டா ருலகமென் றுந்தீபற
வீடேவீ டாகுமென் றுந்தீபற.

பொழிப்புரை :

அட்ட மூர்த்தத்தைக் கொண்ட சிவனைச் சார்ந்து நின்றவர்கள் தேக முதலிய பிரபஞ்ச பதார்த்தங்களிலே பற்று விட்டவர்கள். இப்படிப் பற்றுவிட்டவர்களே பற்றுவிட்டவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே
ஒத்ததே யொத்ததென் றுந்தீபற
ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மாவும் முன்னே பொல்லாங்கு விளைக்கப்ட்ட அந்தக்கரணங்களுந் திருவருளுடனே பொருந்துதலே இருவினையொத்தது. இருவினை யொவ்வாததனாலே திருவருளைப் பொருந்துதல் கூடாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

உள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே
மொள்ளா அமுதாமென் றுந்தீபற
முளையாது பந்தமென் றுந்தீபற.

பொழிப்புரை :

சரியை கிரியைக்காரரைப்போல ஏகதேசப் படுத்திப் புறம்பே தியானிக்கும் தியானமும் யோகக்காரரைப் போல ஏகதேசப்படுத்தி உள்ளே தியானிக்குந் தியானமும் அற்றால் உன்னிடத்திலே ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத சிவானுபவம் உண்டாம். அப்பால் பாசஞானம் பசுஞானமாகிய பெந்தம் உன்னிடத்திலே பொருந்தாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்(கு)
அவிழுமிவ் வல்லலென் றுந்தீபற
அன்றி அவிழாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

பிரபஞ்சத்திலே வியாபித்திருப்பினும் அதிலே பெந்த மில்லாமலிருக்கிற திருவருளுடனே கூடி நிற்கிறவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்திலேயுள்ள துன்பங்களெல்லாம் நீங்கும். திருவருளுடனே கூடினாலொழிந்து துன்பங்கள் நீங்காது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற
பெறுவதிங் கென்பெண்ணே யுந்தீபற.

பொழிப்புரை :

வித்தாகிய ஞானாசாரியனைத் தேடிப் பாசஞானம் பசுஞானமாகிய முளை யிழந்தவர்கள் திருவருளாகிய பித்துக் கொண்டவர்கள். இப்படியன்றி முன்சொன்ன இருவகை ஞானங்களாலும் பெறுகிற பிரயோசனம் ஏதிருக்கிறது, நெஞ்சமே, சொல்லாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

சொல்லும் இடமன்று சொல்லப் புகுமிடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால்நா மென்செய்கோ முந்தீபற.

பொழிப்புரை :

சிவனுடைய எல்லையானது ஆன்மாக்களாலே சொல்லப்பட்ட எல்லையல்ல, ஆசாரியர் சொல்ல ஆன்மாக்கள் புகுதுகிற எல்லையே; இப்படியாகையால் நாம் அந்த எல்லையை ஏதாகச் சொல்லப் போகிறோம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

வீட்டில் இருக்கிலென் நாட்டிலே போகிலென்
கூட்டில்வாள் சாத்தியென் றுந்தீபற
கூடப் படாததென் றுந்தீபற.

பொழிப்புரை :

அனாதியே ஆன்மாவாகிய கூட்டிலே (வாள் சாத்தி=) வாழ்ந்திருக்கப்பட்ட திருவருளைவிட்டு வீடாகிய துறவறத்திலே நின் றாலும் பயனில்லை, தீர்த்தம் முதலானவற்றைக் குறித்து நாடுகளிலே சென்றாலும் பயனில்லை; இவ்விருவகையாலுங் கூடப்படாத பொருளாயிருக்குஞ் சிவம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவி யறாதேயென் றுந்தீபற
அவ்வுரை கேளாதே யுந்தீபற.

பொழிப்புரை :

விசாரிக்கு மிடத்துச் சைவசித்தாந்த மொன்றுமே யொழிந்து மற்றச் சமயங்களெல்லாஞ் சாவியாகப் போமாகையால், அந்தச் சமயங்கள் நிலையிலே நின்று நரகத்திலே விழுந்து துன்பப்படாதே; அந்தச் சமயங்களுடைய நூல்களையுங் கொள்ளாதே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

துரியங் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரந்
துரியமாய் நின்றதென் றுந்தீபற
துறந்தார் அவர்களென் றுந்தீபற.

பொழிப்புரை :

நின்மல துரியத்தைக் கடந்த சிவனடியார்கட்குச் சாக்கிரமும் மேலான திருவருளால் நின்றது. இப்படி நின்றவர்களே முற்றத் துறந்தவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் றுந்தீபற.

பொழிப்புரை :

திருவருளைப் பெற்ற காலத்துண்டாகிய சிற்றின்பங்களெல்லாஞ் சிவானுபவமாய் முடியும்படிக்கு வரும்; இந்த முறைமையாலே பின்பு தனுகரண போகங்கள் இவனுக்குண்டாகாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

பேரின்ப மான பிரமக் கிழத்தியோ(டு)
ஓரின்பத் துள்ளானென் றுந்தீபற
உன்னையே ஆண்டதென் றுந்தீபற.

பொழிப்புரை :

முன்போலப் பல துக்கங்களையும் பல சுகங்களையும் விட்டுத் தொட்டுமிராமல், இப்போது பெரிய இன்பமான சிவசத்தியுட னே கூடி ஒப்பற்ற இன்பத்தை யுடையவனானாய்; உன்னையே இப்படி யாண்டான், எல்லார்க்குங் கிடையாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டாரென் றுந்தீபற
காணாதார் காணாரென் றுந்தீபற.

பொழிப்புரை :

பெண்டிராகிய ஆன்மா பேயின் வசமாய்ப் பிடிபட்டவனைப் போலவும் ஆண்மக்களாகிய சிவன் பிடித்த பேயைப் போலவும் பெற்றவர்களே அருட்கண்ணாலே கண்டவர்கள். இப்படிப் பெறாத பேர்கள் அந்தக் கண்ணாலே காணாத பேர்கள். பிடியென்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயர், ஆன்மா, பெண்டிரைப் போலவும் பிடிபட்டவனைப் போலவும் சிவன் ஆண்மக்களைப் போலவும் பேயைப் போலவும் எனினும் அமையும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

நாலாய பூதமும் நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாமென் றுந்தீபற
நாதற் கிடமதென் றுந்தீபற.

பொழிப்புரை :

நாலாம் பூதமாகிய வாயுவையும் நாதமாகிய சத்தப் பிரமத்தையும் ஆசாரியர் உபதேசித்த முறையே யறிந்திடில் நாலாம் நிலையாகிய திருவருள் கைகூடும். சிவன் இருத்தற்கிடம் அந்தத் திருவருளே. யோகப்பயிற்சி வேண்டுமென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி
நின்ற பரிசறிந் துந்தீபற
நீசில செய்யாதே யுந்தீபற.

பொழிப்புரை :

நீ விடயங்களிலே செல்லும் வழியெல்லாஞ் சிவனிடத்திலே செல்லும் வழியாம்படிக்குச் சிவன் செலுத்துவிக்கிற முறைமையையும் நீ செல்லுகிற முறைமையையும் அறிந்து கர்த்தா செலுத்தாமல் நாமே செல்லுகிறோமென்கிற செய்தியைப் பொருந்தாதே.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 38

பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீயறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ண முந்தீபற.

பொழிப்புரை :

பொற் கொழுக் கொண்டு வரகுக் குழுவதுபோல முத்திக்கேதுவாயிருக்கிற மனவாக்குக் காயங்களைக் கொண்டு விடயங்களுக்கு முயற்சி பண்ணுவது என்ன பயன். அக்கொழுப் போன்ற மனவாக்குக் காயங்களினுடைய அருமையை யறிந்து அவையாலே சரியைகிரியாயோகங்களைச் செய்து பின்பு திருவருளையறிந்து வேறொன்றையும் அறியாவண்ணம் நில். நில்லென்பது வருவிக்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 39

அதுவிது வென்னா தனைத்தறி வாகும்
அதுவிது வென்றறிந் துந்தீபற
அவிழ்ந்த சடையானென் றுந்தீபற.

பொழிப்புரை :

அதுவிதுவென்று சுட்டி யறியாமல் எல்லாவற்றையும் ஒரு காலத்திலே அறியுமறிவாகிய அந்தக் கர்த்தாவை அதுவே பொருளென்று ஐயந்திரிபற அறிந்து உந்தீபற; அந்தப் பொருள் யாதென்னில் அவிழ்ந்த சடையினையுடையானென்று உந்தீபற.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 40

அவனிவ னான தவனருளா லல்ல(து)
இவனவ னாகானென் றுந்தீபற
என்றும் இவனேயென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மா சிவனானது அந்தச் சிவனுடைய கிருபையினாலேயல்லாமல் வேறொன்றினாலும் ஆன்மா சிவனாகான்; அப்படியான காலத்தும் பேரின்பத்தை யனுபவிப்பதொழிந்து சிவனுடைய கிருத்தியத்தைப் பண்ணமாட்டான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

முத்தி முதற்கொடி மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்ததென் றுந்தீபற
அப்பழ முண்ணாதே யுந்தீபற.

பொழிப்புரை :

முத்தியடைதற் கேதுவாகிய ஆன்மாவாகிய கொடியிலே ஆசையாகிய கொடி படர்ந்து அத்திப்பழம்போல இதாகிதங்கள் மிகுதியு முளவாயின; அந்த இதாகிதங்களைப் பொருந்தாதே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

அண்ட முதலாய் அனைத்தையு முட்கொண்டு
கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற
குறைவற்று நின்றதென் றுந்தீபற.

பொழிப்புரை :

) பிருதிவியண்ட முதலாகிய ஆறத்துவாவையும் உனக்குச் சரீரமாகக் கொண்டிருந்து இப்போது கொண்டிருக்கிற சரீரத்தைப் பொருளென்று கொள்ளாதே; இத்தன்மையே குறைவற்று நின்ற தன்மை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற
வரட்டுப் பசுக்களென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மாவாகிய சரீரத்துக்குள்ளே உயிராயிருக்கப்பட்ட சிவஞானமாகிய தேனையுண்டு பேரின்பத்தை யனுபவிக்க மாட்டாமல் மெய்போன்ற விடயமாகிய கள்ளையுண்டு மயங்குவர்கள்; அவர்கள் யாரென்னில் வரட்டுப் பசுக்களே போன்று பயன்படாத ஆன்மாக்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

சிந்தையி லுள்ளுமென் சென்னியி லுஞ்சேர
வந்தவர் வாழ்கவென் றுந்தீபற
மடவா ளுடனேயென் றுந்தீபற.

பொழிப்புரை :

தன்னுடைய திருவடித் தாமரையானது என்னுடைய இதயத்திடத்திலேயும் என்னுடைய தலையிடத்திலேயுஞ் சேரும்படிக்கு ஆசாரியனாகத் திருமேனி கொண்டுவந்த சிவன் எக்காலமும் பராசத்தியுடனே கூடி வாழ்ந்திருக்கக் கடவது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

வைய முழுதும் மலக்கயங் கண்டிடும்
உய்யவந் தானுரை யுந்தீபற
உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற.

பொழிப்புரை :

உய்யவந்த தேவநாயனார் செய்த திருவுந்தியாரென்னும் நூலினுடைய உண்மையை யறிந்தவர்கள் பிரபஞ்ச முழுதையும் (மலக் கயம்=) அஞ்ஞான சாகரமாகக் காணக்கடவது.
(குறிப்பு : திருவுந்தியார் கி.பி. 1147லும் திருக்களிற்றுப்படியார் 1177 லும் செய்யப்பட்டன. நூலாசிரியர்களைக் குறித்து வழங்கும் வரலாற்றை, சமாஜத்து சித்தாந்த சாத்திர முதற்பதிப்பின் உஎ, உஅம் பக்கங்களிற் காணலாம். இவ்விரு நூல்களுக்கும் அங்கே பதிக்கப்பட்ட உரை திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் செய்த விரிவுரை. இந்தப் பதிப்பில் வெளியிடப்படுவது வேறு உரை. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உரைகளின் இறுதியில் எழுதப் பெற்றுள்ள ‘அம்பலவாண குருவே துணை’, ‘நமச்சிவாய குருவே துணை’ என்ற தொடர்களினால் இவ்வுரையாசிரியர் திருவாவடுதுரையாதீனத்தைச் சேர்ந்தவர் என்று கருதலாம். இவருரையைத் தழுவியே தம்பிரானது விரிவுரை செய்யப் பெற்றது; இருவர் உரையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். நூல்கள் இரண்டும் பழைய தமிழ் முறையில் எளிய செவ்விய நடையில் அமைந்திருப்பதற்கேற்ப, இவ்வுரையாசிரியரும் எளிமையாக இலக்கியச் சுவைபொருந்தத் தம் பொழிப்புரையைச் செய்திருக்கிறார். உரைத் தொடக்கத்தில் நூலாசிரியர்களின் ‘சந்தான பரம்பரை’யைக் கூறுகிறார். வழக்கிலுள்ள வரலாற்றுக்கு இது சிறிது மாறுபட்டிருக்கிறது. சில பாடல்களுக்கு இவர் வேறான பாடம் கொண்டிருக்கிறார்; இவற்றுட் பெரும்பாலான சிறந்தவை. காலஞ்சென்ற திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் எழுதி வைத்திருந்த காகிதப்பிரதியே இப்பதிப்புக்கு ஆதாரமானது; திருவுந்தியாருரையை மட்டும் அவர்களே காலஞ் சென்ற திரு. எம்.பி.எயி. துரைசாமி முதலியாரவர்களுடைய ஏட்டோடு ஒப்பு நோக்கித் திருத்தி வைத்திருந்தார்கள். திருகளிற்றுப்படியாருக்கு இவ்வுரையன்றி, சிறந்த அனுபூதிமானொருவர் எழுதிய வேறு பழைய உரையொன்றும் உண்டு; இது இன்னும் அச்சில் வெளிவரவில்லை.) அருணாச்சலம்

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை
சிற்பி