திருவலஞ்சுழி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே.

பொழிப்புரை :

மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம் மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர என்க. விரை - மணம். நசை - விருப்பம். தொண்டு - தொண்டர்.(ஆகுபெயர்). சுடர் - செஞ்சுடர். ஒலிபாடல் - வினைத்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரைதேரும்வ லஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.

பொழிப்புரை :

நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளிய பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பி னராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுதும் சென்று திரிந்து பலி ஏற்கக்காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

பாரல் - நீளல், அல் விகுதி. வாரல் - வார்தல், ஒழுகுதல். திரைவாய் இரைதேரும் - அலை நீரிலுள்ள மீன் உணவு ஆராயும், குருகு - கொக்கு, மூரல் - புன்னகை, முறுவல் - பல், நகு - விளங்கும், ஊரல் - ஊர்தல், பாரல் - நீளல், நீண்டவாய், பிளத்தல் - பிளந்தவாய் எனில் `பகுவாய்` கூறியது கூறலாகும். `பாரல் வாய்ச்சிறுகுருகு`( தி.3.ப.63.பா.5.) பார்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவல் லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.

பொழிப்புரை :

கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

தாமரைகள் கிண்ணத்தின் உருவம்போல மலர்தலை உணர்த்தினார். கிளர் - விளங்குகின்ற. அளாய் - அளாவி, கலந்து. வண்ணம் - நிறம், அழகு. அன்னம் தாமரைப்பூந்தாதுக்களைப் பொருந்திய அழகுடன் பொடிமணலில் வைகும் வளத்தது வலஞ்சுழி, பொடிக்கொண்டு பூசுதலின் வன்மை சர்வ சங்கார கர்த்திருத்துவத்தைக் குறித்தது. வைகல் - தங்குதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே.

பொழிப்புரை :

கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.

குறிப்புரை :

கோடு - கரைகள், குழி - அக்கரைகளுக்கு நடுவிலுள்ள பள்ளம், மாடு - பக்கம், கரைகளில் பூத்த குவளைமலரின் மணம் பள்ளத்திலுள்ள நீரில் நாறும். சேடு - பெருமை, தலை - பிரமகபாலம், நறவு - ஈண்டுப் பிச்சையேற்ற உணவு குறித்து நின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.

பொழிப்புரை :

முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

குரு - நிறம், வல்லை - விரைவு. முல்லைப்பூ வெண் முறுவலை உடைய நகை (பற்)களுக்கு ஒப்பு. சில்லை - சிறுமை. முல்லை வெண்முறுவல் நகை - பார்வதி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.

பொழிப்புரை :

நீர் பெருகி வரும் காவிரியில் பூசநன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித்தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.

குறிப்புரை :

பூசம் - தை முதலிய பன்னிரு திங்களிலும் வரும் நன்னாள், பூசநட்சத்திரம். \\\\\\\"பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ\\\\\\\"(தி.1 ப.32பா.5) என்றருளியதுணர்க. குடைவார் - முழுகுவார். தேசமும் திருவும் நீவிரே. பலி கொள்வதாகிய இல்லாமை என விரிக்க, இல்லாமை - வறுமை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.

குறிப்புரை :

கந்தம் - மணம், சந்து - சந்தனவிருட்சம், கார்அகில் - கரிய அகில், அந்தமும் ஆதியும் நடுவும் நீவிரே. `அடிகள்` விளியாங்கால் அடிகேள் என்றும் ஆகும், பந்தம் கருதாமை; பிச்சையேற்றலில் உயிர்க்கு ஆகும் பந்தம் இறைவனுக்கு இன்மையை உணர்த்திநின்றது. பந்தமென்று கருதாமல் என்னும் உரைசிறவாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டுயானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

நசை - விருப்பம், களிறு - ஆண்யானை, மதக்களிப்பையுடையது என்னுங் காரணப்பொருளது. கான் - காடு. உலகு - ஒக்க;- உலகெல்லாம் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்தவ ரக்கனை அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.

பொழிப்புரை :

புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன் மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.

குறிப்புரை :

தீர்த்தநீர் - பரிசுத்தம் புரியும் ஆற்றலுடைய நீர், காவிரி முதலிய யாறுகள் புண்ணிய நதிகள் ஆம். தீர்த்தமாகா நதிகளும் உள. பொன்னி - காவிரி, ஆர்த்து - ஆரவாரம்செய்து. சீர்த்த - சீருடைய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

உரம் - பெருமை, (சிவபிரானுக்குச் சடையும் ஞானமாதலின்) அறிவுமாம். பலியேற்கும் பாத்திரம் பிரமகபாலமாதலின் \\\\\\\"சிரமெனுங்கலம்\\\\\\\" என்றார். பா.5,10 இல் செல்வம் என்றது குறிப்பு. வரம்பெறலாவதும் மன்னும் என மாற்றலுமாகும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாவது மெந்தைவ லஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.

பொழிப்புரை :

வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

குறிப்புரை :

வீடும் அதற்கு ஏதுவான ஞானமும் வேண்டுவீரெனில், விரதங்களால் உடல்மெலிந்தால் ஞானம் ஆவதும் என்? என்று வினாவுக. விரதங்களால் உடல்வாட்டம் அன்றி உண்மை ஞானப்பேறு வாயாது என்றவாறு. எந்தையாகிய சிவபிரானது திருவலஞ்சுழியை (மனத்தால்) நாடி,(வாக்கால்) ஞானசம்பந்தருடைய செந்தமிழ் கொண்டு இசைபாடும் ஞானம் வல்லவர் திருவடி சேர்வது ஒன்றே ஞானமாகும் என்று பொருள்கொள்க. இத்திருமுறை பாடுவாரடிமலர் சேர்வதே வீடுதரும் ஞானமாகும் என்பது கருத்து. `சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக` என்று இக்காலத்தில் வழங்கும் தொடரில், `தமிழ்` என்றது திருமுறைகளையே குறிக்கும். பழந்தமிழ் நூல்களையும் தமிழ் மொழியையும் குறித்ததன்று. அவை வேறு பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத்தலாலும், சைவத்தொடு நெருங்கிய தொடர்பில்லாமையாலும், தமிழில் பிறசமய நூல்கள் பல உள்ளமையாலும் அவற்றை ஈண்டுச் சைவத்தொடு சேர்த்து வாழ்த்தினார் என்றல் பொருந்தாது. பிற்காலப் பதிப்புக்களில் `வாடி` என்ற பாடமே உளது.
சிற்பி