ஏழாம் தந்திரம் - 15. போசன விதி


பண் :

பாடல் எண் : 1

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.

பொழிப்புரை :

ஒரு வயலையே தங்களுடையதாகக் கொண்டிருப் பவர் அது தரிசாய்க் கிடந்தால் விளைவு ஒன்றையும் பெறமாட்டார். அது போலச் சிவனடியார்கள் `அடியார்களுக்கு` என்று நினைத்துச் சமைத்த உணவையே, `இஃது எட்டுத் திக்கினையும் நிறைவு செய்யும் அமுத மாகும்` என விரும்பி உண்பதன்றி, `தமக்கும் தம் கேளிர் கிளைஞர் கட்குமே` என்று நினைத்துச் சமைத்த உணவை உண்ணமாட்டார்கள்.

குறிப்புரை :

அவ்வாறு சமைத்து அடியவர் வரின் மகிழ்வுடன் வரவேற்று உண்பிப்பவர் உலகில் மிகச் சிலரே யாகையால் அவரை ஒருவனுக்கு அமைந்த ஒரே வயலாகவும், அவரிடத்தன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணார் சிவனடியார் ஆகலின் அவரை ஒரு வயலையே உடைய நிலக்கிழாராகவும் கூறினார். `அந்த ஒரு சிலர் இல்லையேல் சிவனடியார்க்கு உணவில்லை` என்பது பின்னிரண் டடிகளில் ஒட்டணி வகையால் கூறினமையின் இங்கு இவ்வாறு உரை கூறப்பட்டது.
`இறைவன் அடியவர்க்கு (என்று) அட்ட அடிசிலை அவ்வடியார் எட்டுத் திசையும் (விரும்பும்) அமுது என்று எதிர் கொள்வர்` என்க. அடியவரது இயல்பிற்கு ஏற்ப விளைவை ஆகு பெயரால் ``விருப்பு`` என்றார். அன்பில்லாதார் அறஞ்செய்தலை விரும்பார் ஆகலின் அறவோர் அவர்பால் உண்ணார் என்க.
அதனால், `சிவனடியார் தம்பால் அன்புடையாரிடத்தே யன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணலாகாது` என்பது அவரது இயல்பின்மேல் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அச்சிவ னுள்நின் றருளை யறிபவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.

பொழிப்புரை :

தம்முள் நிற்கின்ற சிவனுக்குள்ளே தாம் நின்று அவனது திருவருள் இயல்பை அநுபவமாக உணர்ந்த அடியார்கள் பசிமிகுந்த போது தம்முள்ளே அமர்ந்திருக்கின்ற தலைவனது இல்லமாகிய உடலில் உயிர் நின்றாங்கு நிற்றற் பொருட்டு, பிச்சையேற்று உண்டு சிவனைத் தம்மின் வேறாக நினையாது தாமேயாக நினைந்து உலகப் பற்று அற்று ஒன்றாகிய சிவ நிலையிலே உயர்ந்திருப்பார்கள்.

குறிப்புரை :

அகரச் சுட்டுப் பின்னர் வருகின்ற உள்நிற்குந் தன்மையைச் சுட்டிற்று. சிவனுள் தாம் நிற்றலாவது அவனது இச்சா ஞானக் கிரியையகளின் வியாபகத்தில் தமது இச்சா ஞானக் கிரியைகள் வியாப்பியமாய் அடங்கி நிற்க நிற்றல். ஏகாந்தத்தேயிருப்பவர்க்குக் கால வேறுபாடு இல்லையாகலின் ``உச்சியம் போதாக`` என்பது பசி மிகுகின்ற காலத்தையே குறிக்கும். அவரினும் கீழ் நிற்பார் கால வேறுபாடுணர்ந்து உச்சியம் போதாகிய ஒருவேளை உண்டு. ஏகாந்தத்தில் ஏறியிருக்க முயல்வர். `அவரினும் கீழ் நிற்பார் உச்சியம் போதுடன் இரவு ஒருவேளையும் உண்பர்` என்பது
``பரம னடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும்
பறை நிகழ்த்தி`` -தி.12 திருநாவுக்கரசர்., 259
என்றமையான் அறியப்படும். `தம்மை இறைவன் உடைமையாகக் கருதுவர்` என்றற்கு ``கோ இற்கு`` என்றார். பிச்சை - தானம். அடியவர் தானம் ஏற்பரே யன்றித் தருமம் ஏலார். பிடித்தல் - ஏற்றல். ``பேதம் அற நினைந்து`` என்பது முதலாகக் கூறியன, அவையெல்லாம் வாய்த்தற் பொருட்டே அடியவர் உணவை நாடுவர் என்றற்கு.
இதனால் முன் மந்திரத்திற் கூறியவாறு அடியவர் அன்புடையார்பால் சென்று அவர் அளிக்கும் உணவை ஏற்று உண்டலும், உயர்நிலைபெற்று ஞானத்தையும் அதன் பயனையும், எய்துதற் பொருட்டு எனக்கருதி உண்ணல் வேண்டுமன்றி, வாளா, `உடலோம்புதற் பொருட்டு` எனக்கருதி உண்ணலாகாது என்பது கூறப்பட்டது. முன்பு நாயனார், மூன்றாம் தந்திரத்தில்
`உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே``
என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றியேயாகும்.
சிற்பி