ஏழாம் தந்திரம் - 29. சீவன்


பண் :

பாடல் எண் : 1

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.

பொழிப்புரை :

உயிர் பருப்பொருளாகக் கருதிக்கொண்டு, `அதன் அகல, நீர், கன அளவுகள் எத்துணையன` என வினாவுவார்க்கு விடை கூறின், `பசுவின் மயிர்களில் ஒன்றை எடுத்து அதனைப் பல நூறாயிரங் கூறு செய்தால் அவற்றுள் ஒரு கூற்றின் அகல, நீள, கன அளவுகளே உயிரின் அகல, நீள, கன அளவுகள்` எனக் கூறலாம்.

குறிப்புரை :

இது, ``வன்பாற்கண் - வற்றல் மரம் தறித்தற்று`` * என்பது போல, வடிவு கூறலாகாமையைக் குறித்து நின்றது. `வடிவு` என்பது அகல நீள கனங்களையுடையதாகும். அது கண்ணில்லா தவராலும் தடவி அறிந்து கொள்ளப்படும். `உருவம்` என்பது நிறம். அது கண்ணாலன்றி அறிய இயலாது. எனவே, உயிர்க்கு `அணு` முதலாக வடிவு கூறுவோர் உயிரை, `பருப் பொருள்`, அஃதாவது, `தூலப் பொருள்` என்போராவர். உயிர் பருப்பொருளாகாது `நுண் பொருள்`, அஃதாவது, `சூக்குமப் பொருள்` என்றற்கே இவ்வாறு கூறினார். `பிராணன்` என்றல், உபாதி பற்றிய செயற்கையாலாம். தத்துவங்கள் யாவும் உபாதியேயாகலின், உயிரை மேல், `புருடன்` முதலாகக் கூறியதும் உபாதி பற்றியேயாம். மேவிய கூறு - கிடைத்த ஒரு கூறு ``ஆயினால்`` என்பதன் பின், `அதில்` என்பது வருவித்து `அதில் நூறாயிரத்தொன்றே ஆவியின் கூறு` என்க.
இதனால், `உயிர், உண்மையில் சூக்குமப் பொருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன்
வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :

கட்புலனாகாப் பொருள் சிவன் ஒருவனேயாக, பலவாகிய உயிர்களையும் அத்தகைய பொருளாகக் கூறுதல் கூடுமோஎனின், கூடும். ஏனெனில், சிவனது பெருமையை நோக்கு மிடத்து ஏனைத் தேவர் அனைவர் பெருமையினும் பெரிது. ஆயினும் பருப்பொருளாகிய உடம்புகளில் சூக்குமமாய் நிறைந் திருக்கின்ற உயிர்களினுள்ளே அவற்றினும் அதிசூக்குமமாய் அவன் நிறைந் திருக்கின்றான். (எனவே, உயிர் சூக்குமப் பொருளும், சிவன் அதி சூக்குமப் பொருளுமாம் ஆதலின் அதுபற்றி ஐயமில்லை என்றபடி,) சிவன் இத்தகைய அதிசூக்குமப் பொருளாதலின் அவன் தேவர்களா லும் எளிதில் அறியத்தக்கவனல்லன். ஆயினும் அவனே அவரவரது தவத்தின் அளவை யறிந்து அவ்வளவிற்கு ஏற்ப விளங்கி நிற்பன்.

குறிப்புரை :

`ஏனோரினும்` - என ஐந்தாவது விரிக்க. ``ஊனே சிறுமை`` என்பதற்கு, `ஊனின்கண் உள்ள சூக்குமப் பொருள்` எனப் பொருள் கொள்க. அப்பொருள் உயிர்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதற் காலத்திலே, `சிவனை அறியும் வாயில் உண்டு` எனக் கூறுதற்கு அவனைத் தம்முன்னே கொண்டு யோகம் பயில்கின்ற குணம் இல்லவிட்டாலும் பின்பு அக்குணத்தை அடைந்து தம்முன்னே கொண்டு யோகம் பயிலும். ஆகவே, உயிர்கட்கு என்றாயினும் ஒருநாள் சிவனைத் தெளிவாக உணரும் உணர்வு உண்டாகவே செய்யும்.

குறிப்புரை :

`அவ்வுணர்வு முதற்கண் தோன்றாமைக்குக் காரணம் பக்குவம் வாயாமையும், பின்பு தோன்றுதற்குக் காரணம் பக்குவம் வாய்த்தலும் ஆம்` என்பது கருத்து. `பக்குவம் சிவனது அருள் நோக்கத்தால் வாய்க்கும்` என்பது, ``பண்டு பயிலும் பயில் சீவனார்`` என்பதனால் குறிக்கப்பட்டது. பயில் சீவனார் - பயில்வை உடைய சீவனார் பயிலுதல் - நீங்காது உடன் இருத்தல். உரைத்தற்கு, `உணரும் வாயில் உண்டென` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஏகாரத்தைப் பிரித்து, ``குணம்`` என்பதனோடு கூட்டுக. `யோகம்` என்பதன்முன் உள்ள இகரம் வடசொல் நோக்கி வந்தது. இவ்வேகாரம் தேற்றம். `தெளிவு உண்டு` என மாற்றி யுரைக்க.
இதனால், முன் மந்திரத்தில், `அறியும் அளவல்லன் மாதேவன்` என்பது பற்றி நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

பொழிப்புரை :

மாயா காரியமாகிய கருவிக்கூட்டம் சடமாகலின், அது சித்தாகிய உயிருக்குக் கூடாப் பொருளாய்க் குற்றமாகும். ஆயினும் அவ்வுயிரின் உள்ளே என்றும் உள்ள சிவன் அதனது பக்குவம் அறிந்து அருள் காரணமாகக் குருவாகி எதிர் வந்து அதனை அக்குற்றத்தினின்றும் பிரிவிக்க, அஃது அங்ஙனமே பிரிந்து திருவருளில் புகுந்து, அதன் கண் பேருறக்கத்தை எய்தி அமைதியுற் றிருக்கும். அருள் உறக்கம், இருள் உறக்கம் அன்றாகலின் அந் நிலையில் உயிர் அறிவே வடிவாய் விளங்கும்.

குறிப்புரை :

உபாதி - செயற்கைப் பொருள்; மாசு, சேதனம் - அறிவுடைய பொருள். ``சேதனத்து ஆய குரு`` என்றது, `சிவம்` என்றபடி அதனால் சிவமேகுருவாய் வருதல் பெறப்பட்டது. `குரு தூண்ட` என இயையும். தூண்டுதல் - விரிந்து செல்லும்படி அதற்குரிய உண்மையை உணர்த்துதல். அஃது ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தமையை* அறிவித்தலாம். `அதினின்றும் தூண்ட` என்க. `உயிர் உபாதி ஒன்றினோடும் ஒன்றாது துரியம் புகுந்து அறிவாகவே ஓயும்` என முடிக்க. துரியம் - பேருறக்கம். மலத்தின் உறங்குதல் கேவல துரியம். திருவருளில் உறங்குதல் சுத்த துரியம். இங்குக் குறிக்கப்பட்டது சுத்த துரியமே என்பது வெளிப்படை.
இதனால் உபாதி வசத்தால் மாசுபட்டுச் செயற்கை நிலையில் இருந்து உயிர் அம்மாசினின்றும் நீங்கித் தூயதாய்த் தனது இயற்கை நிலையை அடையுமாறு கூறப்பட்டது.
சிற்பி