ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை


பண் :

பாடல் எண் : 1

ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

பொழிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன் களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.

குறிப்புரை :

ஆதல் - மிகுதல். அஃது இங்கு அளவின் மிகுதலைக் குறித்தது. இரண்டாம் அடியில், `மதத்தால்` எனவும், ஈற்றடியில் `யோகினால்` எனவும் உருபு விரிக்க. ``யோகு`` என்பது தமிழ் முறையில் முதனிலைத் தொழிற்பெயராய் வரும். யோகம், இங்குச் சிவயோகமேயாம். `திருந்துதல்` என்பதன்பின் `ஒழிய` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `ஒன்றையும்` என உருபும், இழிவு சிறப்பும்மையும் விரிக்க. `ஐந்திந்திரியங்களை அடக்குதல் சிவ யோகியர் சிலராலல்லது ஏனையோரால் கூடாமையும், சிவயோகத்தை எய்துதல் பலர்க்குக் கூடாமையும் நோக்கின் ஐந்திந்திரியங்களை அடக்குதற்கண் உளதாய அருமை விளங்கும் என்பது கருத்து.
இதனால், இங்கு எடுத்துக் கொண்ட பொருள் முதற்கண் இனிது புலப்படுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து)
எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

பொழிப்புரை :

இதுவும் ஒட்டணி. அடங்காமையை ஐம்பொறி மேல் வைத்துக் கூறினும் அடங்காது ஓடுவது மனமே. ஓட்டத்தின் விளைவு குறித்து மனம் குதிரையாக உருவகிக்கப்படும். பாய்மா - குதிரை. குதிரையைப் போரின்கண் செயற்படுத்தும் வீரன் அதன் முதுகின் மேல் அமர்ந்துகொண்டு கால்களால் குறிப்புத் தருவான். நல்ல குதிரைகள் அக்குறிப்பின் வழியே பாய்ந்து பாகனுக்கு வெற்றியை உண்டாக்கும். முருட்டுக் குதிரைகள் முரணி வேறுவழியிற் பாய்ந்து பாகனுக்கு வீழ்ச்சியைத்தரும். இங்கு ``பாய் மா`` என்றதை, `குறிப்பிட்ட ஒரு பாய்மா` எனக் கொள்க. அது மனம். அதனைப் பிராணாயாமத்தால் அடக்குதல் கூடும். ஆகவே ``கால்`` என்றது சிலேடை வகையால் உவமையில் பாகனது கால்களையும், பொருளில் பிராண வாயுவையும் குறித்தது. கொத்துதல் - உட்செலுத்துதல். பாகன், ஆன்மா. அவன் யோகநூலைக் கருத்துடன் கற்று அதன்படி பிராணா யாமம் செய்து தாரணை நிலையில் நின்று அடக்கினாலும் அடங்காது ஓடுவதே மனத்தின் இயல்பு. உவமையில் `நூல்` குதிரை செலுத்தும் நூல். `எருத்தம்` என்பது ஈறு குறைந்து, ``எருத்து`` என நின்றது. எருத்தம் - பிடரி; இங்கு அது முதுகைக் குறித்தது. `முதுகு` என்றது தாரணை நிலையை. திருத்துதல் - பிராணாயாமத்தினாலும், வருத்துதல், அஃதாவது அடக்குதல். தாரணையினாலும் என்றற்கு அவற்றைத் தனித் தனிக் கூறினார். திகைத்தல் - வேறு வழியில் செல்லுதல். வழி, நேர்வழி. அம் மா - மேற் குறிப்பிட்ட அந்தக் குதிரை. ``திகைத்தன்றிப் பாயாது, வழி நடவாது` என்றவை, அடங்குதல் அரிதாதலையே குறித்தது.

குறிப்புரை :

இதனால், `பொறி வழி ஓடும் மனத்தினை அடக்கி ஞான நெறியில் செலுத்துதல் யோகியர்க்கும் அரிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.

பொழிப்புரை :

மேய்ப்புத் தொழில் செய்து பிழைக்கும் குலங்கள் ஆமேய்க்கும் குலம், எருமை மேய்க்கும் குலம், ஆடு மேய்க்கும் குலம், தாரா, கோழி முதலிய பறவைகள் மேய்க்கும் குலம் எனப் பலவகை உண்டு. அவற்றுள் பறவை மேய்க்கும் குலத்தில் இரங்கத் தக்க ஒரு குலம் உண்டு. அந்தக் குலத்தில் ஒருவனுக்கு ஒரு குடில். அந்தக் குடிலில் ஐந்து கூடுகள். அந்தப் பறவைகள் வெளியே மேயும் இடங்களும் ஐந்து. அந்த இடத்தில் மேய்கின்ற உணவுகளும் வேறு பட்ட ஐந்து. அந்த உணவுகளின் குணங்களும் வேறுபட்ட ஐந்து. இந் நிலையில் அந்த மேய்ப்பான் ஒருவன் அந்தப் பறவைகளை ஒரு வழியிற் செலுத்தி மேய்க்க வேண்டும். இது மாற்ற முடியாத ஓர் அமைப்பு முறை - அதனால் இந்த மேய்ப்புத் தொழிலில் வெற்றி பெற மாட்டாதார் பலர் மேற்குறித்த ஒரு குடிலில் ஒன்பது வாயில்கள் இருப்பதால் அந்த வாயில்களில் எந்த ஒன்றின் வழியாகவாவது யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுகின்றார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரம் பிசிச் செய்யுள். கூடு இங்கு, `புலம்` எனப்பட்டது. அவை தத்துவங்களில் ஞானேந்திரியங்களாம். அவை புறநோக்குடைய மனத்திற்கு இடமாதல்பற்றி, `புலம்` எனப்பட்டன. ஞானேந்திரியங்கள் `புலம்` எனவும் படுதல் வழக்காதல் அறிக. புள் - மனம். அஃது ஒன்றாயினும் மேற்குறித்த இடச்சார்பு பற்றி ஐந்தாகின்றது. நிலம் - மனம் பொறிவழியாகச் சென்று பற்றும் பொருள். ``ஐந்து`` என்றது, `ஐந்து வகை` என்றபடி. மேய்க்கப்படும் பறவைகள் நீரை விரும்புதல் பெரும்பான்மையாதல் பற்றி உணவு ``நீர்`` எனப்பட்டது. அவை அப்பொருள்களில் பொறிவழியாகக் கவரப்படும் உரு, ஊறு, நாற்றம், சுவை, ஓசை என்பன. நீர்மை - குணம். அவை நுகர்வாரது தன்மைக்கு ஏற்பப் பெரிதும் சிறிதுமாக அவரது அறிவையழித்தல். ``கொண்டு`` என்பதை, ``குலம் ஒன்று`` என்பதனோடும் கூட்டுக. ``ஒருவன்`` என்பதன்பின் ``இது நிலைமை`` என்னும் இசையெச்சம் வருவிக்க. உலமருதல் - உழன்று எய்த்தல். `உலமந்தவழி` என்பது `உலமந்து` எனத் திரிந்து நின்றது. ``போம் வழி ஒன்பது`` என் றதனால், `எந்தவழியாலாவது புறப்பட்டுப் போதல் எளிது` என்றபடி, வழி - வாயில், வாயிலைக் கூறவே, `அவை உள்ளது குடிலில்` என்பது தானே பெறப்பட்டது. `அஃது உடம்பு` என்க. ``ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்`` (தி.6 ப.99) என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ஐந்திந்திரியங்கள் அடக்குதற்கு அரியனவாயுள்ள இயல்பினை விளக்கி, அதனால் அடக்க முயன்றோர் பலரது நிலையை எடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

இம்மந்திரமும் பிசிச் செய்யுளே, முன் மந்திரங்களில் களிறுகளாகவும், குதிரைகளாகவும், பறவைகளாகவும் குறிக்கப்பட்ட புலனடக்கம் இல்லாத மனம் இம்மந்திரத்தில் அதனது அடங் காமையின் மிகுதி இனிது விளங்குமாறு சிங்கமாகக் குறிக்கப்பட்டது. அடவி - வேறுபட்ட பல பெருமரங்கள் செறிந்த காடு. அது `நல்லன, தீயன` எனப் பெரும்பான்மையாக இருவகைப்பட்டு, அவற்றுள் எண்ணில வாய் விளையும் வினைகளைக் குறித்தது. நல்வினை, பயன்மரம், தீவினை, நச்சுமரம், வாய்ப்பு உள்ள பொழுது சென்று ஐம்புலன்களை நுகர்கின்ற மனம் வாய்ப்பு இல்லாதபொழுதும் அவற்றையே நாடுதல் பற்றி ``அஞ்சு அகமே புகும்`` என்றார். அஞ்சு - பொறிகள். சிங்கங்கட்கு உகிர் (நகம்) உண்டற்குரிய விலங்குகளை இறுகப் பற்றுதற்கும், எயிறு (பல்) அவ்விலங்கின் தசைகளை உண்டு சுவைத்தற்கும் உதவுவன. எனவே, `அவற்றை அறுத்தல்` என்பது மனத்திற்குப் பொருள்களின் மேல் உளதாய பற்றினையும், அவற்றை நுகர்தற்கண் உளதாய ஈடுபாட்டினையும் நீக்குதலாயிற்று. `நீக்குதற்குக் கருவி சிவயோக சிவானங்கள் என்பது மேல் பல இடங்களில் கூறப்பட்டது. ``அறுத் திட்டால்`` எனவே, ``அறுத்திடல் மிக அரிது`` என்பது விளங்கிற்று. நகமும், பல்லும் போயபின் காட்டில் வாழும் சிங்கங்கள் அங்குச்சென்றோரை அப்பாற் போகவிடாமல் மறித்துக் கொன்றொழிக்க மாட்டா. அதனால் அவர் அக்காட்டைக் கடந்து இன்புறலாம் என்பது பற்றி, ``அறுத்திட்டால் - எஞ்சாது இறைவனை எய்தலும் ஆகும்`` என்றார்.

குறிப்புரை :

இதனால், `ஐந்திந்திரியங்களை அடக்குதல் செயற்கருஞ் செயல் என்பதும், `ஆயினும் அதனைச் செய்தார் அடையும் பயன் பெரிது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

பொழிப்புரை :

அரசராகிய நம்மில் ஒவ்வொருவருக்கும் ஐவர் அமைச்சர் உள்ளிட்ட தொண்ணூற்றாறு பேர் வல்லுநர் பணியாளராய் உள்ளனர். அவர் நமக்கு அடங்கிப் பணி புரியாமல் ஒவ்வொருவரும் தனித்தனியே நம்மை ஆள விரும்புகின்றனர். எனினும் ஐவர் அமைச்சரே நம்மை ஆள்வதில் வெற்றி காண்கின்றனர். அந்த ஐவருக்குள்ளேயும் ஒற்றுமையில்லை. அதனால் அவரவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு நம்மை ஆள முயல்கின்றனர். அவர்கட்கு வரிசெலுத்தி நாம் எவ்வாறு நிறைவு செய்ய இயலும்!

குறிப்புரை :

`இயலாது; ஆகவே அவர் அனைவரையும் அடக்கிப் பணிய வைத்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். ஐவர் அமைச்சராவார் ஐம்பொறிகள். தொண்ணூற்றறுவர் அப்பொறிகள் உள்ளிட்ட தத்துவ தாத்துவிகங்கள். `உள்ளிட்டு` என்பது, `உள்` எனக் குறைந்து நின்றது. நோக்கம் நிறைவேறாதபொழுது சினம் உண்டாகும். ஆகையால் நோக்கத்தை, `சினம்` என்றது காரிய ஆகுபெயர். இறை - வரி; என்றது, சுவை, மணம் முதலிய புலன்களாய் உள்ள பொருள்களை, `அவற்றைப் பலகால் நுகரினும் நிரம்பாது மீள மீள அவாவே உண்டாதலின் நுகராது அடக்குதலே தக்கது` என்பது கருத்து.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. -திருக்குறள், 343
என்றே திருவள்ளுவரும் அருளினார்.
மைந்து வலிமையாதலின், ``மைந்தர்`` என்றது, `வலியர்` என்றபடி, அதனால் அவற்றை அடக்குதல் அருமை குறிக்கப்பட்டது. ``ஐவர் உம் மைந்தர்`` என்பதில் உகரம் சுட்டெழுத்து.
இதனால், `ஐந்திந்திரியங்களை வருந்தியாயினும் அடக்குதல் வேண்டுமன்றி, அடக்காது அவற்றின் வழிச் செல்லுதல் தகாது, என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.

பொழிப்புரை :

``துஞ்சும் போதும் சுடர்விடும் சோதியாய், (தி.5 ப.93 பா.8) உள்ள இறைவனையும், அவனோடே நீக்கமின்றி யிருக்கின்ற இறைவி யையும் நாள்தோறும் ஒழிவின்றி மந்திரமொழியாலும், தோத்திரப் பாடல்களாலும் சொல்லக் கடவேனாகிய யான் அங்ஙனம் செய்ய மாட்டாதவனாய் நிற்கின்றேன். அதனால் அங்ஙனம் மாட்டா தாரிடத்து வளர்வனவாகிய ஐம்புல ஆசைகளையும், அதனை உடைத்தாகின்ற மனத்தையும் அடக்கும் வலியிலேனாகின்றேன் அதனால், தன்மேல் இருப்பவனைக் குழியில் வீழ்த்திக் கொல்லவே நினைத்து வேகமாகப் பாய்ந்து ஓடுகின்ற குதிரையை அடக்க மாட்டாது விழிப்பவன்போலத் திகைக்கின்றேன்.

குறிப்புரை :

இரண்டாவது அடியில் வந்த ``சொல்லகில்லேன்`` என்பது சொற்பொருட் பின்வருநிலையணி. `மங்கையையும்` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. ``வெல்லகில்லேன்`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக. ``தன்னை`` என்றது மனத்தை. ஐம்புலன்களை வெல்லுதல் அவற்றின்மேல் அவாக்கொள்ளாதவாறு அடக்குதலும், மனத்தை அடக்குதலாவது அதனைப் புறத்துப்போக விடாது அகத்தே நிற்கச் செய்தலும் ஆகும். `இவ்விரண்டும் கை கூடுதற்கு உபாயம் இறைவனை இறைவியோடு தியானித்துத் துதித்தலே` என்றற்கு` `அவற்றை நான் செய்ய மாட்டாதவனாய் இருக்கின்றேன்` என்றார். மாட்டாமை பரிபாகம் இன்மையால் உளதாவது. `இத்தகையோரிடத்து ஐம்புல ஆசை வளர்தல் இயல்பே, என்றற்கு, ``அங்குள புலன் ஐந்து`` என்றார். `குதிரையோடு` என ஒடு உருபு விரிக்க. ``ஒத்தேன்`` என்றது, அதனை மாற்றிச் செலுத்த வகையறியாது, `அதன் வழியிலே நிற்கின்றேன்` என்றதாம்.
இதனால், `ஐம்புலனை அடக்கும் உபாயம் இது` என்பது அனுவாத முகத்தாற்கூறி, `பரிபாகம் இல்லார்க்கு அவ்வுபாயத்தைச் செய்தல் அரிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.

பொழிப்புரை :

ஒரு தலைவன் எனக்கென ஓர் அறையை ஈந்துள்ளான். (தலைவன் - பிரமன். அறை - உடம்பு) அதில் உள்ள பொத்தல்களோ அளவில்லன. (மயிர்க்கால்கள்) ஆயினும் அந்த அறைக்குள்ளே சிறிதே ஒளிபுகாது இருட்டிக் கிடப்பது வியப்பைத் தருகின்றது. (ஞானம் உடம்பு வழியாக வாராமை தெளிவு,) இந்த இருட்டறையிலேதான் என்னுடைய காலமெல்லாம்போய் ஆக வேண்டும் என்றால், அஃது எத்துணைத் துன்பத்தைத் தரும் என்பது சொல்லவேண்டுவதில்லை. ஆயினும் இறைவன் என்னை அவ்வறை யிற்றானே யிருந்து காலந் தள்ளாமல் காக்கத் திருவுளம் பற்றுவா னாயின், உடனே எனக்கு அளவுட்படாத கலத்தையுடைய ஒரு பெரிய மாளிகையைத்தரின் ஒப்பற்ற பெரியதோர் இன்பம் கிடைத்துவிடும். (அம்மாளிகை வியாபகப் பொருளாகிய திருவருள். இன்பம், சிவானந்தம்.)

குறிப்புரை :

`திருவுளம் பற்றுவானா` என்பது குறிப்பெச்சம். ``அவ் விருட்டறை`` எனச் சுட்டிக் கூறினமையால், `அஃது ஒருவனால் தரப் பட்டது` என்பது பெறப்பட்டது. ``அறை`` என்றார், எண்சாண் நீளமும் இருசாண் அகலமுமே உடைமையின். ஏகுதல் - செல்லுதல், காலம் போக்குதல். `பீழை` என்பது குறுகி நின்றது. மூன்றாம் அடியில் ``இல்லி`` என்றது ஆகுபெயராய் அவற்றையுடைய அறையைக் குறித்தது. `காத்தல்` என்பது அதன் காரணம் உணர நின்றது.
இதனால், `ஐந்திந்திரியத்தை அடக்குதற்குத் திருவருள் துணை புரிய வேண்டும்` என்பது கூறி அத்துணை கிடைத்தல் அருமையாதலின் ஐந்திந்திரியங்களை அடக்குதலும் அருமையாதல் கூறப்பட்டது. திருவருள் துணைகிடைத்தலின் அருமை முன் மந்திரத்தில் கூறியவாற்றால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 8

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

பொழிப்புரை :

உலகில் அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் உள்ள பொருளின் வலிமைக்குக் காரணம் மழையின் வலிமையே யாகும். அதுபோல, கடல் சூழ்ந்த நிலவுலகில் உள்ள அனைத் துயிர்களின் வாழ்க்கை வலி அயன் விதித்த விதியின் வலிமையும், அவ்வுயிர்களுள் மக்கள் உயிர்களின் வாழ்க்கை வலிமைக்குக் காரணம் அவர்களது ஆறாவது அறிவின் வலிமையும், சுவர்க்க லோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த பல தெய்வ வழிபாடுகளின் வலிமையும், சிவலோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த சிவவழிபாட்டின் வலிமையுமாகும்.

குறிப்புரை :

ஆகவே, `ஐந்திந்திரியங்களை அடக்கியொழுகி அதனால் சிவலோகத்தை அடைதற்கு வழி சிவ வழிபாடேயாம்` என்பது கருத்து. ஈற்றடி எடுத்துக்காட்டுவமை யாதலின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க. ``நீரின்று அமையாது உலகு எனின் அந்நீர் வான்இன்று அமையாதது`` (திருக்குறள், 20) பற்றி, ``நீர்`` என்பதற்கு `மழை` எனப் பொருள் உரைக்கப்பட்டது. ``விதியை மதியால் வெல்லலாம்`` என்பது உலக மொழியும் (பழமொழி) `ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர்`` என்பது ஆசிரிய மொழியும் (திருக்குறள், 620) ஆகையால் ``மானுடர் வாழ்க்கைக்குக் காரணம் மதியின் பெருவலி`` என்றார். ``வானுலகம்`` என்பதை `விண்ணுலகம்` எனவும், `மேலான உலகம்` எனவும் இரட்டுற மொழிந்து கொள்க. ஐந்திந்திரியங்களை அடக்கிப் பெறும் பயன் கூறுவார், அவற்றை அடக்காதோர் பெறும் பயனையும் உடன் கூறினார். அடக்கிக் பெறும் பயனது சிறப்பு விளங்குதற்கு. ``துதி`` என்றது உபலக்கணம். `நதியின் பெருவலி நார்வலி தானே` எனப் பாடம் ஓதி, `நாரம்` என்பது அம்முக் குறைந்து நின்றது எனினும் ஆம்.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் உவமை முதலியவற்றால் நன்கு வலியுறுத்தப்பட்டது.
சிற்பி