எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்


பண் :

பாடல் எண் : 1

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

அந்தங்கள், அவையாவன சமயநூல்களின் முடிவுகள் ஆறு. அவை, `வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்` - என்பன.

குறிப்புரை :

`இவை இன்ன` என்பதனை நாயனார் பின்னர் அருளிச் செய்வார்.
இதனால் ஞானம் பற்றிச் சமய நூல்கள் கொண்டுள்ள முடிவுகள் ஆறு வகையில் அடங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
அந்தமொ டாதி அறியஒண் ணாதே.

பொழிப்புரை :

(ஒரு பொருளை உடன்பாட்டினும், எதிர் மறையினும் ஆய்ந்து உணர்பவரே உண்மை உணர்பவர் ஆதலால்), மேற்கூறிய ஆறு அந்தங்களையும் அறிந்தவரே அறிவர் ஆவர். அவற்றை அறியாதவர் அறிவர் ஆகார்.

குறிப்புரை :

அதி சுத்தர் - மிகத் தூயர்; மலம் முழுதும் நீங்கப் பெற்றவர். அந்தம் ஆதிகள், ஞானத்தின் முடிவும், முதலும். செய்யுள் பற்றி அந்தம் முன் வந்தது. ``அறிய`` என்னும் செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது.
இதனால், ஆறந்தங்களை உணர்தலின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.

பொழிப்புரை :

பிறிதொரு நூலால் அன்றித் தன்னாலேதான் பிரமாண மாகின்ற வேதத்தின் முடிவுதான் எக்காலத்தும் சிவாகமங் களின் முடிவு. அவ்விரண்டிலும் கூறப்படுவது, நின்மலாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளுள் சிவனின் நீங்கி நில்லாத துரியாவத்தையில் ஆன்மா, தன்னை முதற்கண் உள்ளவாறுணர்ந்து, தேன்போல இனிக் -கின்ற பரம்பொருளை அடைதற்கு வழியாகிய சிவோகம் பாவனையில் நின்று, அதனானே அனாதிதொட்டு நீங்காது பற்றி வருகின்ற மலம் முற்றும் நீங்கப்பெற்று, பெறுதற்கரிய பேற்றைப் பெறுதலேயாம்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முதற்கண்ணதில், `தானே` என்னும் ஏகாரம் தொகுக்கப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல். பின்னது தேற்றப் பொருளில் வந்த இடைச்சொல். `முடிந்த முடிபு` எனப் பொருள் தருவ தாகிய `சித்தாந்தம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவாகமாந்தத்திற்கே காரண இடுகுறிப் பெயராய் வழங்குகின்றது. எனவே, மேல் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறிய `சித்தாந்தம்` என்பதும் இதுவே யாதல் அறிக.
இனி, `வேதாந்தம்` என்பதும் காரணப் பெயராய் உப நிடதங்களையும், காரண இடுகுறிப் பெயராய்ப் பிரமசூத்திரத்தையும் குறிக்கும். எனினும் சித்தாந்த சைவத்தில் எங்கும் `வேதாந்தம்` என்பது உபநிடதங்களையன்றிப் பிரமசூத்திரத்தையன்று. `பிரமசூத்திரம் ஏகான்ம வாதநூல்` - என்பதே சித்தாந்த சைவத்தின் முடிவு என்பதைச் சர்வான்ம சம்பு சிவாசாரியார் செய்த சித்தாந்தப் பிரகாசிகையாலும் சிவஞான மாபாடியத்தில் சிறப்புப் பாயிரத்து, `சைவாகமப் பிராமணியம்` கூறும் பகுதியாலும், அவையடக்கத்தில் `ஏகான்ம வாதம்` கூறும் பகுதியாலும் அறிக.
`வேதாந்தமே சித்தாந்தம்` - என்பதைப் பின்னரும் நாயனார் விளக்குதல் காண்க. ``அச்சிவோகம்`` என்ற அகரச்சுட்டு. வேதாகமங் களில் சொல்லப்படுதலைச் சுட்டிற்று. இறுதியில், `இவற்றின் முடிவு` என்பது இசையெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `வேதாந்தமும், சித்தாந்தமும் முடிவால் வேறல்ல` என்பது கூறப்பட்டது. `அங்ஙனமாயின் இரண்டாகக் கூறுவானேன்` என்னும் வினாவிற்கு விடை, பின்வரும் ``வேதமோடாகமம்`` என்னும் மந்திரத்திற் காணலாம்.

பண் :

பாடல் எண் : 4

நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொழிப்புரை :

`பரனே யன்றிச் சீவனும் அவன் போலவே என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள்` என்னும் கொள்கையை முதலிற் கொண்டு, (சீவன் அனாதியே பந்தப்பட்டு நிற்றலாம்), அது சுத்த மாயை, அசுத்தமாயை இரண்டும் பின்னர் வந்து பற்றாதவாறு விலகுதற்குரிய வழியை அறிந்து, அவ்வழியால் பந்தத்தினின்றும் நீங்கி, தந்தையாகிய சிவனை அடைதலே `சித்தாந்தம்` என்னும் தத்துவமாகும்.

குறிப்புரை :

`வேதாந்தம்` என்னும் தத்துவமும் அதுதான் என்பது. முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அமைந்தது. `பரனோடு உயிர் நித்தம் ஆதலை உற்று` என்க. ``சத்த முதல் ஐந்து`` என்பது ஆகுபெயராய் அவற்றை அறியும் செவி முதலிய ஐந்து பொறிகளை குறித்தது. இதனானே உபலக்கணத்தால் அனைத்துக் கருவிகளும் கொள்ளப் படும். ``தத்துவம்`` என்றது, `கருவி` என்றவாறு. `மாயை தொடரா வகை` என்றது. `பிறவி தொடரா வகை` என்றதாம்.
இதனால், `சக சீவ பரங்களில் முதல் இரண்டும் நித்தப் பொருள்களே` என்பதே சித்தாந்தம் எனக்கூறி, இக்கொள்கையே வேதாந்தம்` என்றமையால், `பரம் ஒன்றே நித்தம்` என்பது வேதாந்தம் ஆகாமையும் கூறப்பட்டது. எனவே ஆறந்தங்களுள் இங்கு சித்தாந்தம் கூறப்பட்டதாம், வேதாந்தம் இதன்கண் அடங்கிற்று.
சகம் - பிரபஞ்சம். காரியப் பிரபஞ்சம் அநித்தம் ஆதலின், முதலிரண்டு மட்டுமே இங்கு `நித்தம்` எனக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

பொழிப்புரை :

பஞ்ச கலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப் -பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` - என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்` என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங் -களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்தபொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா` என ஒன்று உளதாதல் விளங்கும்.

குறிப்புரை :

பஞ்ச கலைகளைப் பற்றி அறிய வேண்டுவன பல உள. அவையெல்லாம் சிவஞானமாபாடியம், பிராசாத யோக நூல்கள் முதலியவற்றில் சொல்லப்பட்டுள்ளன. அவையனைத்தையும் இங்குக் கூறுதல் கூடாமையின் அவைகளுள் தலையாய அதிதேவர்களை மட்டுமே கூறி, அவர்வழியாக அக்கலைகளையும், அவைகளில் அடங்கி நிற்பனவற்றையும் உணர வைத்தார். ஆகவே, பிரமன் முதலிய ஐந்தும் ஆகுபெயர்களாய், அவரால் செயற்படுத்தப்படும் கலை, தத்துவம் முதலியவற்றைக் குறித்தன. `விந்துவும், நாதமும் மிக்கு அப்பால் மேவும் எனக்கூட்டுக. இதனை எடுத்துக் கூறியது `இவை கடத்தற்கு அரியன` என்பதும், ``கடந்த இடமே நாதாந்தம்` என்பதும் விளங்குதற்பொருட்டு. `பிரமன்` முதலியன செவ்வெண். இறுதியில், `இவர்களில்` என்பது வருவிக்க.
இதனால், ஆறந்தங்களுள் நாதாந்தம் கூறப்பட்டதாம். தத்துவங்களைக் கொள்ளாதொழியினும் நாதத்தைப் பொதுப்பட உணர்ந்து `அதன் அந்தத்தை அடைதலே முடிநிலை` என்பவர் பாசுபதர் முதலிய சில புறச்சமயிகள்.

பண் :

பாடல் எண் : 6

உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத் தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றி -னின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.

குறிப்புரை :

ஆறாறு - ஆறாறன் தொகுதி. ``நாதாந்தம்`` இரண்டனுள் முன்னது அவ்விடத்து விளங்கும் ஆன்ம அறிவைக் குறித்தது. ``மேல் உள்ள`` என்றது, `மாயைக்கு மேல் உள்ள` என்றபடி. இருள் அருளாலன்றி நீங்காமை வெளிப்படை. ஓர் உணர்வு - தன்னோடு ஒப்பது வேறொன்றிலாத உணர்வு; சிவனது உணர்வு. உயிர் நாதாந்தத்தை அடைந்தமை முன்பே கூறப்பட்டமையால், ஈற்றில், ``நாதாந்தத்து`` என்றது, `அவ்விடத்து` என்னும் சுட்டளவாய் நின்றது. இங்கு, ``போதம் எய்திடும்`` என்றதனால், `போதம்` எனப்படுவது சிவபோதமே என்பது விளங்கும். விளங்கவே, போதாந்தமாவது, ஆன்மா, தான் சிவஞானத்தில் முற்றி நிற்கும் நிலையே போதாந்தம் என்பது போந்தது.
தத்துவம் முப்பத்தாறனையும் கடந்தவழி இருமாயை களையும் கடந்ததாம். மாயைகள் ஆணவத்தைப் போக்கவே இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலின், `அவை நீங்கியவிடத்து ஆணவம் நிற்றல் இயல்பு` என்பது பற்றி, ``நாதாந்தத்தைச் சென்று மேல் உள்ள இருள்`` என்றும்,
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்;
ஒன்று மேலிடின் ஒன்று
ஒளிக்கும்; எனினும் இருள் அடராது``*
என ஓதியபடி, நாதாந்தத்ததில் ஆணவமே யன்றிச் சிவமும் உளதாக, பக்குவம் இல்லாத பொழுது மேலிடுகின்ற ஆணவம், பக்குவம் வந்த பொழுது மேலிடமாட்டாதிருக்கச் சிவமே மேலிடும் ஆதலின் ``இருள் நீங்க`` என்றும், சிவம் மேலிட்ட வழி ஆன்மா அதனைப் பற்றுதற்குத் தடை இன்மையால், ``ஓர் உணர்வு ஆகுமேல்`` என்றும் கூறினார்.
இதனால், `போதமாவது இது` எனவும், அதனை அடையு -மாறும் கூறும் முகத்தால், ஆறந்தங்களுள் போதாந்தம் கூறப்பட்டது. `போதாந்தமே முடிநிலை` என்பவர் பாடாண வாத சைவர் முதலிய அகச் சமயிகள். இவர்களை, `பூர்வ சைவர்` - என்பர் சிவாக்கிர யோகிகள்.

பண் :

பாடல் எண் : 7

தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொழிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களையும் மேற்கொள்ளப் புகுந்து, அவ்வாறே படிமுறையால் மேல் ஏறி, முடிவான `சமாதி` என்னும் நிலையை எய்திச் சிவனுக்கு அணுக்கமாகி நிற்கச் சீவன் சிவனாய்விடும். அந்நிலையில் உலகத்தாக்கம் ஒழிய ஓர் அமைதி நிலை தோன்றும். அதுவே உயிர் பெறத்தக்க பேறு - என்னும் இதுவே யோக நூலின் முடிவான கொள்கை.

குறிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களின் இயல்பை மூன்றாம் தந்திரத்தில் காண்க. `இயமத்தில் தொடங்கி முறையே வளர்ந்து ஏழாவது உறுப்பாகிய தியானத்தை அடைதலே ஞானத்தின் முடிநிலை` என்பதும், `அதன்பின் சமாதியை அடைதலே ஞானத்தின் பயன்` என்பதும், `அதனை அடைந்தோர் உடம்பு நீங்கிய பின் பரம் பொருளோடு ஒன்றாகி விடுவர்` என்பதும் யோகநூற்கொள்கை என்றபடி. `உடம்பு நீங்குதலின்ற, என்றும் நிலைத்திருக்கப் பெறுதலே முத்தி` என்னும் கொள்கையும் உண்டு.
ஊடுதல் - உட்புகுதல். `ஊடுறும்` என்பது குறைந்து நின்றது என்றலும் ஆம். `சிவனுக்கு அணியராதல் சமாதியின் தொடக்கநிலை` என்க. `உபசாந்தம் கூடும்` எனமாற்றியுரைக்க.
இதனால், ஆறந்தங்களுள் யோகாந்தம் கூறப்பட்டது. இக்கொள்கையுடையோர் யோகமதத்தினர். இவர் முதல் ஆசிரியர் பெயர்பற்றி, `பாதஞ்சலர்` எனவும் கூறப்படுவர்.

பண் :

பாடல் எண் : 8

கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொழிப்புரை :

`ஆறந்தம்` எனப்படுகின்ற கொள்கைகளில் ஒன்றான, `கலாந்தமாவது யாது` என அறிந்து கொள்ளப்புகின், உயிர் பாசங்களினின்றும் நீங்குதற்கண் துணையாய் உள்ள நிவிர்த்தி முதலிய சத்திகட்கு இடமாய் நிவிர்த்தி முதலிய கலைகளும், மற்றும் பிராசாத மந்திரத்தின் மேதா முதலிய கலைகளும் சுத்த மாயையிலே தோன்றிச் சுத்த மாயையிலே ஒடுங்குமாற்றை ஆராய்ந்து தெளிதலே கலாந்தமாம்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய சத்திகளாவன, `நிவிர்த்தி, பிர திட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்துமாம். இச்சத்தி களுக்கு இடமாகின்ற சுத்த மாய விருத்திப் பகுதிகளும் இச்சத்திகளின் பெயர்களையே உடையன. `உலகம் ஆறு அத்துவா மயமானது` எனக்கூறுமிடத்து, ஏனை ஐந்து அத்துவாக்களும் கலாத்துவாவிலே அடங்கும். அதனால் அத்துவ சுத்தி, `கலாசுத்தி` என்றும், `கலா சோதனை` என்றும் சொல்லப்படும். இந்தச் சுத்தி, அல்லது சோதனையே நிருவாண தீக்கையாதலின் `தீக்கையே முத்தியாம்` எனக் கூறும் ஒருசார் சைவர்கள் `கலாந்தத்தில் பஞ்ச கலாந்தம்` என்பர்.
இனிப் பிராசாத கலைகள் மூன்றாம் தந்திரத்து. `கலை நிலை` என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டன. `அவைகளை முன்னர் ஆராய்ச்சியால் உணர்ந்து பின்னர் அனுபவத்திற்காணுதலே முடி நிலை` என்பவர் `கலாந்தத்தில் பிராசாத கலாந்தர்` என்க. இவரை யோக சைவர்` அஃதாவது, `பிராசாத யோகமே முத்தியைப் பயக்கும் - எனக் கூறும் சைவர் என்பதாம். இவரும் ஐக்கிய வாத சைவர் போல ஆணவ மலத்தை உணராதவர் ஆதலின், அவரோடு ஒப்பர் என்க.
ஈசானம் முதலிய பஞ்சப் பிரம மந்திர சத்திகளாகிய ஈசானி முதலிய ஐந்தும், அவைகளில் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டும் - ஆக முப்பத்தெட்டாய் நிற்கும் சத்திகளும் `கலை` எனப்படுதலால், அவற்றைத் தெளிதலும் கலாந்தமாம் என்பாரும் உளர். அவை மந்திர கலைகளாய் நாதாந்தத்தில் அடங்குத -லாலும், நாயனார் அவ்வாறு ஓதாமையாலும் அவைகளை இங்குக் கொள்ளல் வேண்டா என்க. ``ஆதிக்கு`` என்பது கண்ணுருபின் பொருளில் வந்து உருபு மயக்கம். `ஆம்` என்பதனை, `ஒடுங்கலும்` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, தோன்றுதலைத் தழுவிய எச்சவும்மை.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் கூறப்பட்டது. அஃது இருவகைத் தாதலும் உடன் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று)
ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு)
அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் கூறப்பட்ட கலாந்தம் ஒழுக்கம் பற்றியது. இனி), நூல் அறிவு பற்றி நோக்குங்கால் உள்ள கலாந்தம் வேறு ஐந்தாகும். அவை, `மந்திர கலாந்தம், தந்திர கலாந்தம், தெளிவுக் கலாந்தம், ஞான கலாந்தம். உபதேச கலாந்தம்` என்பன. அவையும் ஞானப் பகுதிகளேயாம். அவை ஆராய்ச்சியில் வேட்கை உடையவர்கட்கு ஆவனவாம்.

குறிப்புரை :

`அவை இன்ன` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும். அவன் அளியன் ஆகிய - சிவன் அருள் மிக்கவனால் அளித்தருளிய (கலைகள்).

பண் :

பாடல் எண் : 10

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொழிப்புரை :

அநாதியே உள்ளவனால் செய்யப்பட்டமையின், `அநாதி நூல்` எனப்படுகின்ற ஆகமங்களையும், வேதங்களையும் ஓதி, ஐயம் திரிபு அற உணர்தல் மந்திரகலாந்தம். ஏனைப் பாசுபதம் முதலிய தந்திரங்களை அவ்வாறு உணர்தல் தந்திர கலாந்தம். அவ்வாறு உணரப் பட்ட அந்நூல்களில் கண்டவாறு ஒழுகும் ஒழுக்கத்தில் மேம்படுதல் தெளிவுக் கலாந்தம். திருவைந்தெழுத்தைத் தத்தமக்கு உரியமுறையில் மனம் முதலிய அந்தக் கரணங்களால் அன்றி, அறிவால் சுத்தமான -தாகப் பெரிய அளவில் கணித்தல் ஞான கலாந்தம். குரு உபதேசத்தை நன்கு சிந்தித்துத் தெரிந்தபின் நிட்டையில் நிற்றல் உபதேச கலாந்தமாம்.

குறிப்புரை :

உபதேசகலை மட்டிலே, `குரு உபதேசம்` எனக் கூறினமை பற்றி, `ஏனைய கலைகள் குரு இன்றியும் உணரப்படும்` எனக்கொள்ளலாகாது. ஏனெனில், `உபதேசம்` என்றது ஞானோப -தேசத்தையேயாகலின், அவ்விடத்து, `குரு` எனப்பட்டோரும் ஞான குருவே. ஞான குருவைக் கூறியது ஏனைக் குருமாரை விலக்கிய -தாகாது. பிறரெல்லாம் வித்தியா குரவரும், கிரியா குரவரும் ஆவர் என்க.
`அனாதி ஆகும் கலை` என மாறிக் கூட்டுக. ஆகும் அத்தந்திரம் - வேதாகமங்கட்குப் பின்னிலையினவாகிய அந்தத் தந்திரங்கள் ஆகும். மனாதி - மந்திரங்களைக் கணித்தற்குக் கருவி யாகும் மனம் முதலியன. உடல் - கருவி. ஈற்றில் உள்ள `ஆகும்` என்பதை வேதம் முதலிய எல்லாவற்றோடும் கூட்டுக.
இவ்விரண்டு மந்திரங்களாலும் கலாந்தம் வேறுவகையால் அமைதல் கூறப்பட்டது. மந்திர கலாந்தம் கொண்டவர் தருக்க மதத்தவர். தந்திர கலாந்தம் கொண்டவர் அகப்புறச் சமயிகள். தெளிவுக் கலாந்தம் கொண்டவர் பௌராணிகர். ஞான கலாந்தம் கொண்டவர் அகச்சமயிகளில் ஒருசாரார். உபதேச கலாந்தம் கொண்டவரே சித்தாந்த சைவர்.

பண் :

பாடல் எண் : 11

தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொழிப்புரை :

ஞான கலாந்தத்தில் சிவம் வெளிப்படும். (என்றாலும் அதன்கண் அன்பு செய்து அழுந்துதல் உபதேச கலாந் தத்தில் உண்டாகும்). தெளிவுக் கலாந்தம் இறைநெறி ஒழுக்கத்தையும், இறையன்பையும் வலுப்படுத்தும். (என்றாலும் அவற்றை அஃது அறிவியல் முறையில் உணர்த்தாது. அவ்வாறு உணர்த்துவது உபதேச கலாந்தமே). வாய் வாளாமைபெற்று, பிறபொருள் உணர்வும், தன்னுணர்வும் அற்ற பெருந்தகையோன் வாக்கு மனங்களைக் கடந்த பரம சிவன் ஆவான்.

குறிப்புரை :

தன் ஞானம் - சிவ ஞானம். `அதனை உணர்த்தும் கலை` என்க. அக்கலைகள் பலவும் திருவைந்தெழுத்தில் அடங்கும், ``கலை, கலாந்தத்து`` என்பவற்றில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆசார நேயம்`, உம்மைத் தொகை. அறைதல் - வலியுறுத்தல். அறையும் - அறையப்படும். `பேசாது` என்பது ஈறு குறைந்துநின்றது. உரை, சொல்லப்படுவது. உணர்வு - சொல்லவாராது உணர்வு மாத்திரையாய் நிற்பது, பெருந்தகை, ஆகுபெயர். இவ்வொருமை சாதி யொருமை. நந்தி - சிவன், மாநந்தி - பரமசிவன். ``மாநந்திதானே`` எனத் தேற்றேகாரத்தால் `வேற்றுமையில்லை` என வலியுறுத்தியது. அத்தன்மை குறைவின்றி நிரம்புதல் பற்றி இங்ஙனம் வலியுறுத் -ததனானே, `அவன் பொருளால் வேறே` என்பது பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய ஐந்து கலாந்தங்களுள் உபதேச கலாந்தத்தின் சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தானது வாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

பொழிப்புரை :

(வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும்). `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபட வில்லை. (`ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` - எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று - என்பது மேலேகூறப் பட்டது), இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய்நிற்கும்.

குறிப்புரை :

`அந்நிலை உபதேச கலாந்தமாகிய சித்தாந்தத்திலல்லது இல்லை` என்பது கருத்து. ஞானம் - அறிவு ஞேயம் - அறியப்படும் பொருள். ஞாதுரு - அறிபவன். இவை முறையே `காட்சி, காணப்படு பொருள், காண்பான்` எனவும் கூறப்படும். இவை `திரிபுடி` எனப்படும். `மூன்று பொருள் இல்லை; ஞானம் ஒன்றே உள்ளது` என ஏகான்மவாதம் கூறும். `மூன்று பொருள்கள் உள்ளன. ஆயினும் உணர்பவனது உணர்வில் அம்மூன்றும் மாறி மாறித் தோன்றும் நிலை சிவானுபவ நிலையாகாது. அவனது உணர்வில் ஞேயமாகிய சிவம் ஒன்றுமே தோன்றும் நிலையே சிவானுபவ நிலை. அதுவே பரமுத்தி` என்பது சித்தாந்தம். இவற்றுள் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துச் சித்தாந்தக் கொள்கையை வினா வெண்பா, பின்வருமாறு நயம்பட வலியுறுத்துகின்றது.
``காண்பானும், காட்டுவதும், காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``l
இம்மந்திரத்தில் ``சமாதி`` என்றது பாவனையளவாக நிகழும் யோகசமாதியன்று. ஞானசமாதி. இதுவே திருக்களிற்றுப்படியாரில் கூறப்பட்டது.
(இதனாலும் மேற்கூறிய கருத்தே வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.3

பண் :

பாடல் எண் : 13

ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களிலும், `ஞாதுரு ஞானத்துடன் சென்று, ஞேயத்தில் அடங்குதலைத்தான் முடிநிலையாகக் கூறுகின்றன. ஆகவே, ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தில் சென்று அடங்குதல்தான் ஆறந்தங்களின் குறிக்கோளும். ஆயினும், `ஞேயத்தில் அடங்குதல் மட்டுமன்றி, அவ்விடத்தில் எல்லையில்லாததோர் இன்பநுகர்ச்சியில் ஞாதுரு மூழ்கியிருத்தலே உண்மைப்பேறு` எனக் கூறுகின்ற சித்தாந் -தமே ஏனை அந்தங்களினும் வடித்தெடுத்த மோன நிலையாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, `ஆறந்தமும், ஞாதுரு, ஞானக்குறி உடன்வீட, ஞேயம் அடங்கிடும்; (ஆகலான்) ஆறந்தமும் சென்று அஞ்ஞேயத்தே அடங்கிடும்; (ஆயினும்) சிவானந்த உண்மையே தேறிய மோனம்` எனக் கூட்டி முடிக்க.
அடங்கிடுதலைக் கூறும் அந்தங்களை, அவையே அடங்குவனவாக உபசரித்துக் கூறினார். ``அஞ்ஞேயம்`` என்னும் சுட்டு, பின்னர்க் கூறப்படும் அடங்குதல் தொழிலையை உட் கொண்டது. ``ஆறந்தம்`` இரண்டில் பின்னதிலும் உம்மை விரித்து, `ஞேயத்தின்கண்` என உருபுவிரிக்க. `ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தின்கண் அடங்கிவிடும் அளவே முத்தியாவது என, அவ் விடத்து, பெறுவானையும், பேற்றினையும் அழித்துச் சில அந்தங்கள் கூறும் ஆகலின், அதனை மறுத்துச் சித்தாந்தத்தை வலியுறுத்துதற்கு, ``தேறிய மோனம் சிவானந்த உண்மையே`` என்றார்.
``முத்தியிலும் மூன்று முதலும் மொழியக்கேள்;
சுத்தஅனு போகத்தைத் துய்த்தலனு; - மெத்தவே
இன்பம் கொடுத்தலிறை; இத்தைவிளை வித்தல்மலம்;
அன்புடனே கண்டுகொளப் பா``8
என்பதே சித்தாந்தம் ஆதலை யறிக.
இதனாலும், சித்தாந்தத்தின் தலைமையே ஏதுக் காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.

பொழிப்புரை :

உண்மையை உணர்த்தும் கலைகள் பலவாகச் சொல்லப்படினும் அவை அனைத்தும் பன்னிரு கலைக்குள் அடங்குவனவாம். இனி, அனைத்துக் கலைகளையும் விடாது கடக்க வேண்டின், பதினாறைத்தாண்டி அப்பால் செல்லுதல் வேண்டும், `நாதந்தம்` என்பது, இவ்வாறு கூறப்படுவனவற்றின் இடையே நிற்கின்ற ஒன்று. ஆகையால், அதையே `உண்மை` என்று சொல்லின், அஃது ஏகதேசத்தையே `முற்று` எனக் கருதுவதாகவே முடியும்.

குறிப்புரை :

`ஆறு, ஒன்று, ஐந்து` என்பன அவ்வெண்களையே குறித்தன. அதனால், ஏழன் உருபு பெறாது, மூன்றன் உருபு பெற்றது. பிராசாத கலைகள் பலவாவன பஞ்ச கலை, அட்ட கலை, தச கலை, சதுர்த்த கலை முதலியன. அவைகளையெல்லாம் பிராசாத நூல்களில் காண்க. அவை அங்ஙனமாயினும் துவாதச கலையும், சோடச கலையுமே சிறப்புடையனவாகப் பயிலப்படற்குரியன என்றற்கு, ``பன்னிரண்டில் அடங்கும்`` என்றும், `பதினேழாகிய அந்தம்` என்றும் கூறினார். கலைகட்கு அடக்கம் கூறினமையால் பன்னிரண்டு என்றும் மேற்போதல் கூறினமையால், `பதினாறைக் கடந்த பதினேழ்` என்றும் கூறினார். இப்பிராசாதங்களைப் பற்றி இத்தந்திரத்திலும், மூன்றாம் தந்திரத்திலும் சிறிது விளங்கக் கூறினோம்.
``ஓர் அந்தம்`` என்றது, `ஏகதேச அந்தம்` என்றபடி.
இதனால், ஆறந்தங்களில் ஒன்றாகிய நாதாந்தத்தின் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

பொழிப்புரை :

தேவரையெல்லாம் தம் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சி புரிகின்ற, எங்களுடைய புகழ்மிக்க நந்திபெருமானே, நாங்கள் (`வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு வேறு` எனக் கூறிப்பிணங்குவார் பின் சென்று) கெடாதபடி எங்களை அறைகூவி அழைத்துத் திருவடி தீக்கை செய்து, `அவ்விரண்டிலும் சொல்லப்படுகின்ற உண்மை ஒன்றே என்பதையும், அவ்வுண்மையின் உயர்வையும் இனிது விளங்க உபதேசித்தருளிய ஞான குருவாவார். பசுக்களாகிய அனைத்துயிர் களையும் அடிமையாக உடைய சத்தி ஆதி சத்தியாய் நின்று ஆட்டிப் புடைக்கும் நிலையில், சிவனும் ஆதிசிவனாகவே அவளுடன் இருந்தவன், அந்நிலையை மாற்றித் தனது இயற்கை நிலையாகிய அநாதி சிவனாம் பரமசிவனாகி வந்து, அவளைத் தழுவிக்கொண்ட பின்பு, ஏனையோர்க்கும் எங்கட்கு அருளியவாறே அருளுமாறு அவன் அந்நந்தி பெருமானைத் திருவுள்ளத்தில் எண்ணுவான்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வுண்மை ஏனையோர்க்கும் இனிது விளக்கப்படும்` என்பது குறிப்பெச்சம். `பசு` என்னும் வடசொற்கு நேரிய தமிழ்ச்சொல் `ஆ` என்பதாதல் பற்றி அதனையே கூறினா ராயினும் அது `பசு`, அஃதாவது, `பாசத்தில் கட்டுண்டது` என்னும் பொருளையே தருதலின், `உடையாள்` என்றது ஆதிசத்தியை, அஃதாவது திரோதான சத்தியையேயாயிற்று. ``அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்`` என்ற இடத்திலும் `உலக வாழ்க்கையைத் தரும் அவள்` என்றது, திரோதான சத்தியையே யாதலை நினைக. `அரன்` - என்பது, `பாசங்களை அரிப்பன்` என்னும் பொருளது ஆதலின் அஃது, `அநுக்கிரகத்தைச் செய்பவன்` என்னும் பொருட்டாய்ப் பரமசிவனைக் குறித்தது. உயிர்கட்கு இருவினை யொப்பு மலபரிபாகம் வரும் பொழுதே திரோதான சத்தி அருட் சத்தியாய் மாறி ஆன்மாவிற்பற்றி, அரன் அப்பொழுதுதான்வந்து மணப்பவன் போலக் கூறினார். இது, `சத்தி நிபாதம் வந்த பின்பு` எனக் கூறியவாறேயாம். ``கோனை`` என்பது, `கோன் ஆவன்; அவனை` என இருசொல் தன்மைப்பட்டு நின்றது. ``கருதும்`` என்னும் `செய்யும்` என்முற்று, இங்கு ஆண்பால் படர்க்கையில் வந்தது. `அரன் வந்து கொண்டபின் கோனைக் கருதும்` என முடிக்க. தமக்கு அருள்புரிந்த வகையைக் குறித்து `நந்திபெருமானையே கருதுவன்` என்றா ராயினும், `அவரவருக்கு ஏற்புடையாரைக் கருதுவன்` என்றலே கருத்தாம். முதல் அடியை, ``கோனை`` என்பதன் பின்னர்க்கூட்டுக.
இதனால், `ஆறந்தங்களில் வேதாந்த சித்தாந்தங்களே மேலானவை` என்பது குருவருள் பெற்றபின் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
வரும்சம யம்புறம் மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொழிப்புரை :

கொள்வார் கொள்ளும் வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிவன் உலகில் பலவகைச் சமய நூல்களை ஆக்கி வைத்திருக் -கின்றான். (அவை ஒன்றோடொன்று முரணுதல் போலத் தோன்றுதல், அவற்றைக் கொள்வாரது பக்குவத்திற்கு ஏற்ப அவை அமைந்ததனாலேதான். அதனால் அவற்றைக் கொள்வோர் தமக்கு விருப்பமானவற்றைக் கொண்டு அமைதல் வேண்டுமன்றிப் பிறருக்கு விருப்பமானவற்றைப் பழித்தல் கூடாது. ஏனெனில் எல்லா நூல்களும் இறைவன் அருளால் தோன்றியவையேயாகலின்) அந்நூல்களின் வழி அமைந்த சமயங்களில் சில, `புறம்` எனப்படும். மாயை, மகாமாயை இவற்றைக் கொண்டுள்ள சமயங்கள் அகச்சமயங்களாம். அவற்றையும் கடந்து நிற்பன வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள்.

குறிப்புரை :

`ஆகமங்களில் சிவாகமங்களே சித்தாந்தம், என்றல், அவை முற்றறிவுடைய சிவனால் செய்யப்பட்டமையாலேயாம். எந்தச் செயலும் சிவன் தான் நேரே செய்யவும், பிறரைக் கொண்டு செய்விக்கவும் நிகழ்வதேயன்றி, அவை தாமாக நிகழ்வன அல்ல ஆகலின், சமய நூல்கள் பலவும் காரணக் குறிபற்றிச் சிவாகமமேயாம்.
``துணை நன்மலர் தூய்த்தொழும் தொண்டர்காள், சொல்லீர்;
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில் இரும் பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டே. இன்னும்,
``விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்``
என்றதும் கொள்பவரது பக்குவ வேறுபாடுகளை நோக்கியதேயாம்.
`உயிர்கள் பக்குவம் எய்தியபொழுதே இறைவன் குருவாகி வருவான்` என்பதை, ``அரும்பருவம் அடைதலுமே ஆசானாகித் தோன்றி``l என முன்னர்க்கூறிய சிவஞானசித்தி, பின்னர், `அவ்வரும் பருவம் எப்பொழுது வரும் என வினாவுவார்க்கு,
``புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவையடைந்தும், அருந்தவங்கள்புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணநூல் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்தடைவர்``8
எனப் பின்னர்க் கூறிற்று. இதனால் அனைத்துச் சமயநூல்களையும் அவற்றைக் கொள்வாரது பக்குவத்தை நோக்கின் வேண்டத்தக்கனவே யாதல் அறிக.
`சாருவாகம் முதல் எல்லாச்சமயமும் பரமசிவனால் செய்யப் பட்டமையின் பிரமாணமேயாயினும் ... ... சோபான முறையான் உபதேசித்தருளியது - என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப் படும்`` (கிறப்புப்பாயிரம் - `சைவாகமப்பிராமணியம்` எனச்சிவஞான மாபாடியத்தில் உரைக்கப்பட்டமையும் காண்க.
பக்குவம் நோக்கிச் செய்யப்பட்டமையால், `உலகம் மாயை மகாமாயைகளினின்று பரமசிவனால் தோற்றி ஒடுக்கப்படும்` என்பதை உணரமாட்டாதார்க்கு அது சொல்லப்படவில்லை அதனால், சாருவாகர், (உலகாயதர்) `பூதம் நான்கே; அவை கூடுதலும் பிரிதலும் இயற்கை. கூடுவதால், உலகமும், உடம்புகளும் தோன்றும்; பிரிவதால் அழியும். நான்கு பூதங்களும் கூடியபொழுது அறிவும் தோன்றும்; பிரியும்பொழுது அறிவும் அழியும்; ஆயினும், உடம்பு உள்ளவரையில் உலகில் நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும்; இல்லையேல் வாழ்வு நல்வாழ்வாக அமையாது` என்பர். ஆயினும் நீதியைக் கடைபிடிக்காத பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
சமணரும், பௌத்தரும், `உலகம் தானே தோன்றியழியும்` என்பர். அவருள் சமணர், `அறம் - என்பது ஒன்று உண்டு, அதன் வழியிலேதான் உலகம் நடைபெற்று வருகின்றது` - என்பர். ஆகவே, அறத்தைக் கடைப்பிபிடிக்காது வழுவி விடும் பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்;
பௌத்தர், `மனிதர் பரதுக்க துக்கராய் வாழவேண்டும்; அஃதாவது, பிறர்க்காயினும், பிறஉயிருக்காயினும் துன்பம்வரின், அத்துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அத்துன்பத்தைக் களையவும், துன்பம் வராமல் காக்கவும் வேண்டும்; இதுவே தவம். இத்தவத்தால் ஞானம் பிறக்கும்; ஞானத்தால் வீடு உளதாம்` என்பர். எனவே, இத்தவத்தினின்றும் வழுவும்பொழுது அவர்கள்தங்கள் மதத்தை அவர்கள் கைவிட்டவராகின்றனர்.
இவரெல்லாம் வேதசிவாகமங்களை இகழ்தலால் புறத்திலும் புறப்புறச்சமயிகள் ஆகின்றனர். வைதிகருள் மீமாஞ்சகரும், சாங்கியரும் நிரீச்சுரவாதிகள். அவருள் மீமாஞ்சகர், ஈசுரன் இல்லாவிடினும் இருப்பதாக வைத்து வேதத்தில் சொல்லப்படுகின்ற வேள்வி முதலிய கருமங்களைச் செய்தல் வேண்டும்; செய்தால் அந்தக் கருமங்களே பயனைக்கொடுக்கும். கருமங்களை விட்டவன் வழியை விட்டுக் குழியில் வீழ்ந்தவன் ஆவான்; அவனுக்கு உய்தியில்லை என்பர். எனவே, அவர் கருமங்களின் வழுவும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆவர்.
சாங்கியர், `உலகமே மயக்கத்தைத் தருவது, சாங்கிய நூலின் வழியே தத்துவ ஆராய்ச்சியில் முதிர்ந்து நிற்றல் வேண்டும். அவ்வாறு நின்றால் மயக்கம் நீங்கும்` என்பர். ஆகவே, அவர் தத்துவ ஆராய்ச்சி செய்யாது, வாழ்க்கை நடத்தப் புகும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர்.
நியாய வைசேடிகர்களும், `ஈசுரன் ஒருவன் உண்டு` எனக் கூறினாராயினும், உய்யும் வழி கூறுவதில் சாங்கியரை ஒத்திருக் கின்றனர்.
யோக மதத்தினர், `யோகத்தின் எட்டுறுப்புக்களாகிய இயமம், நியமம் முதலியவற்றை முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்` என்பர். முற்றாகக் கடைப்பிடித்தோர் எவரும் இலர்.
ஏகான்மவாதிகள், `உலகம் கனவு போன்றதே; என்றாலும், அதைக்கனவாகக் கண்டு கழித்து, பரமார்த்தத்தின் விழிக்கின்ற வரையில் உலகில் உள்ள எல்லா நீதி அநீதிகளையும் உணர்ந்து, தீவழி நீக்கி, நல்வழியில் ஒழுகவேண்டும்` என்பர். எனவே, அவர் அவ்வாறு ஒழுகாதபொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
`பாஞ்சராத்திரம்` எனப்படுகின்ற வைணவ மதத்தினர், பெரும்பான்மையும் சைவரோடு ஒத்திருப்பினும் சைவத்தின் உயிர்க் கொள்கையாகிய, `பிறப்பு இறப்பு உடையன எல்லாம் உயிர்களே; எக்காரணத்தாலும் அவையில்லாதவனே கடவுள்` என்பதை மறுத்து, `உயிர்களின் பொருட்டுக் கடவுள் பிறந்தும் வருகின்றான்` என்பர். பிறப்பாவது அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சார்யுசம் என்னும் நால்வகை யோனிகளுள் எந்த ஒன்றிலேனும் கருவாய் இருந்து தோன்றி, வளர்ந்து, சிலகாலம் வாழ்ந்து மறைதலாம். இதனை `அவதாரம்` என்றல் உபசாரமே. உண்மையில் அவதார மாவது, கடவுள் எவையேனும் சில காரியங்களை முன்னிட்டு யாதானும் ஓர் உருவில் தோன்றிச் சில நொடிகளில் அக்காரியத்தை முடித்து மறைவதேயாகும். பிறப்பு எய்திய வர்களையே இவர்கள் கடவுளாகக் கூறினாலும், `அவர்களையும், கடவுளையும் வழிபட்டு உய்யவேண்டும்` என்பர். மேலும், `அற நெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும், அறநெறிக்கு எதிரான மறநெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும் தரும் ஆதலின் அற நெறியிலே ஒழுகவேண்டும்` என்றும் கூறுவர். இக் கொள்கை சைவத்திலும் உள்ளதே. `உலகிற்கு அறநெறியை அருளியவன் கடவுளே` எனக் கொள்வதால் அறநெறியில் ஒழுகுவதும் கடவுள் வழி பாட்டின் ஒரு பகுதியேயாகின்றது. எனவே, வைணவரும், சைவரும் அறநெறியையும், இறைவழிபாட்டினையும் விடுவாராயின் தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர். மீமாஞ்சகர் முதல் பாஞ்சாரத்திரம் முடிய உள்ள மதத்தினர் வேதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் வேத சாரமாகிய சைவாகமங்களை ஏற்றுக்கொள்ளாமல் இகழ்தலால் இவர்களுடைய சமயங்கள் `புறச்சமயங்கள்` எனப்படுகின்றன.
இனிப் பாசுபதம் முதலிய தாந்திரிகர்கள், இறையுண்மை கொண்டபோதிலும் வேதத்திற்கு மாறான ஒழுக்கங்களை `நல்லொழுக்கம்` எனக்கொள்ளுதலாலும், `ஆன்றோர் யாவரும் வேத ஒழுக்கமே நல்லொழுக்கம்; அவற்றிற்கு மாறானவை தீயொழுக்கம்` எனக்கொண்டமையாலும் இவர்களது சமயங்கள் `அகப்புறச் சமயங்கள்` எனக்கூறப்படுகின்றன. சிவாகமங்களை இவர்கள் முழுமையாகக் கொள்ளாவிடினும் ஓரளவு தழுவுவர். அதனால் இவர்களது சமயம் அறவே, `புறச்சமயம்` எனப்படவில்லை.
புறப்புறச் சமயிகள் `மாயை` என்றை ஒன்றைக் கொள்வதே யில்லை. அதிலிருந்து அவர்களுடைய தத்துவங்கள் எவ்வளவு முரண் பட்டவை என்பது விளங்கும். புறச்சமயிகள் வைதிகர்களாயினும் மாயையை மட்டும் கொண்டு, மகாமாயையைக் கொள்வதில்லை. அதனால் அவர்களுடைய தத்துவங்களும் நிறைவுடையன ஆகாமை விளங்கும்.
இவைகளையெல்லாம் நோக்கும்பொழுது சமயவாதிகளது பக்குவநிலை விளங்கும். விளங்கவே இறைவன் எல்லாரிடத்தும் ஒப்பவே கருணையுடையவன் ஆகையால், சமயநூலை ஒன்றாகச் செய்யாது பலவாகச் செய்தும், செய்வித்தும் உள்ளான் என்பதை இம்மந்திரம் விளக்குகின்றது.
`ஆகமம்` எனத் தொகையால் ஒன்றாகிப் பின் வகை விரிகளால் பலவாதல் பற்றில் ``தன்னில்`` என ஒருமையால் கூறப்பட்டது. ``புறம்`` என்பதில் முக்கூற்றுப் புறங்களும் அடங்கின. `வரும் சமயமே புறமும்` என ஏகாரமும், உம்மையும் விரிக்க. `அதனால் அவை இகழற்பால அல்ல` என்பதாம். உருவிய உண்மை `வேதாந்த சித்தாந்த உண்மை` என்க. ``உருவிய`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பன்மை வினைப்பெயர்.
இதனால், `ஆறந்தங்களில் மேற்பட்டவை வேதாந்தமும், சித்தாந்தமும்` என்பது பரந்த நோக்கத்தில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.

பொழிப்புரை :

ஆறந்தங்களில் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் ஒன்றே எனத்தெளிவான அடையாளங்களைப் பெற்றுள்ளன. `போதந்தம்` என்பது உயிர் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெறும் நிலையாகும். `யோகாந்தம்` என்பது, பொதுப்பட ஒரு பொருளைக் குறியாகக்கொண்டு அதனையே நோக்கிநிற்பது. நாதாந்தம் திரு வருளைத் தலைப்பட்டு, அதனாலே சிவானந்தம் தோன்றப் பெறுவது. இவற்றிற்கு மேலாக முதலிற்கூறிய வேதாந்த சித்தாந்தங்களே முடிந்த அடையாளமாகிய பேசாநிலையைப் பெற்றுச் சிவானந்தத்தில் திளைத்திருக்கலாகும்.

குறிப்புரை :

`சீராக உதயம் ஆதல் ஆகும்` என்க.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் ஒழிந்த ஏனை ஐந்து அந்தங்களின் பயன் கூறப்பட்டன. கலாந்தத்தின் பயன் மேற்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல்
நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம்
போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.

பொழிப்புரை :

வேதாந்தத்தில் சொல்லப்படுவது, `பிரகிருதியும் அதன் காரியமுமாகிய ஏழுவகைக் குற்றங்களினின்றும் நீங்க வேண்டும்` என்பதே. அவை 1. பூதங்கள், 2. ஞானேந்திரியங்கள், 3. அவற்றின் விடயங்கள், 4. கன்மேந்திரியங்கள், 5. அவற்றின் விடயங்கள், 6. அந்தக் கரணங்கள் என்பனவும், எல்லாவற்றிற்கும் மூலமாகிய 7. பிரகிருதியும் ஆகியவையாம்.
வேதாந்தத்திற்கு மேலேயுள்ள கலாந்தமாகச் சொல்லப் படுவது பிரோக காண்டம் ஆதல் பற்றிக்காரண தத்துவங்களாகச் சொல்லப்படுகின்ற சுத்த தத்துவங்களால் செலுத்தப்படுகின்ற வித்தியா தத்துவங்கள் ஏழும் நீங்குதலாம். இத்தத்துவங்கள் தடத்த சிவனால் செலுத்தப்படுதல் பற்றி, `பரோபாதி` என்றும் சொல்லப்படும்.
நாதாந்தமாகச் சொல்லப்படுவது, உயிர் உபாதிகள் அனைத்தும் நீங்கி நிற்கின்ற நிலையாம். `தத்துவமசி` மகா வாக்கியத் -தில் ஆன்மாவைக் குறிப்பதாகிய `துவம்` பதம் இந்நிலையில் நின்ற ஆன்மாவையே குறிப்பதாம்.
போதாந்தமாகச் சொல்லப்படுவது, உபாதிகளின் நீங்கிய ஆன்மா மல வாசனையால் `யான், எனது` எனநிற்கின்ற நிலையை விடுத்துச் சிவமாகும் நிலையாம் `தத்துவமசி` மகாவாக்கியத்தில் `ஆசி` பதம் ஆன்மா இவ்வாறாகும் நிலையையே குறிப்பதாம். `தத்` பதம் சிவத்தைக் குறிக்கும்.

குறிப்புரை :

``மேல்`` என்றது பிரகிருதியைக் குறித்தது. இரண்டாவதாகக் கூறப்படவேண்டிய மீதாந்தம், வேறுபொருள் படாமைப் பொருட்டு மூன்றாவதாகக் கூறப்பட்டது. ``விடு`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதனை காரணோபாதியோடும் கூட்டுக. காரணோபாதி காரணங்களால் வரும் உபாதி. `தற்பதத்துப் போம் அசி` என்க.``தற்பதம்`` என்பதில் `தத்` என்பது அதன் பொருளைக் குறித்து நின்றது. போதல் புகுதல். `போதலையே அசி` என்றமையால், ``போம் அசி`` என்பதில் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம்.
இதனால் ஆறந்தங்களுடன் மேற்கூறப்பட்ட ஐந்தில் உள்ள பாச நீக்க முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

பொழிப்புரை :

`உலகங்கள் அனைத்தையும் கடந்தாலும் அவற்றிற்கு அப்பாலும் ஒருபேரொளி உள்ளது` என வேதாகமங்கள் கூறுகின்றன. அந்தப் பேரொளிக்குள்ளே உள்ள ஓர் ஒளிதான் எங்கள் சிவபெருமான். அவன் அந்தப்பேரொளியைத் தனக்கு இயல்பாய் உள்ள மேலான ஆற்றலாக உடையவன். எனினும் அந்த ஆற்றலை ஆட்சி செய்கின்ற ஒருவனாகவும் அவன் அதற்குள் இருக்கின்றான்.

குறிப்புரை :

அண்டம், இங்கு `உலகம்` என்னும் பொருட்டாய் நின்றது. `உலகங்கள் ஏழு` என்னும் மரபு பற்றி, `ஏழு` எனப்பட்டது. ``கடந்தகன்று`` என்பது ஒருபொருட்பன்மொழி. ``அப்பாலும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம் இதனால் அண்டங்களுக் -குள்ளேயும் அந்த ஒளி இருத்தல் பெறப்பட்டது. ``என்ற`` என்னும் அனுவாதத்தால், என்றலும் பெறப்பட்டது. ``உள ஒளி`` என்பது குறிப்பு வினைப்பெயரெச்சத் தொடர். ``பண்டு`` என்றது `அனாதி` என்றபடி. `ஆற்றல் யாவும் பொருளைப்பற்றியே நிற்கும் ஆதலால், இந்த ஆற்றலுக்குப்பற்றுக்கோடாய் உள்ளவனே எங்கள் பெருமான்` என்றார். `அன்றி நின்றான்` என்றது, `அந்த ஆற்றலாகிய குணத்திற்கு வேறாய், அதனையுடைய குணியாய் நிற்கின்றான்` என்றதாம்.
`பரம்பொருள் அறிவு மட்டுமான குணமேயன்றி, அறிவையுடைய குணியன்று` என்பர் ஏகான்மவாதிகள். `அது சித்தாந்தம் அன்று` என்பதை இம்மந்திரத்தால் கூறினார்.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``8
என்றார் உமாபதி தேவர். சிவன் வெறும் சத்தியன்று; `சத்தியையுடைய சத்திமான்` என்க. எந்த ஒரு சத்தியும் தன்னையுடைய பொருள் இன்றித் தனியேயிராது.
``... ... ... ... ... சத்திதான் சத்தனுக்கோர்
சத்தியாம்; சத்தன்வேண்டிற் றெல்லாமாம் சத்தி தானே``l
என்ற சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், ஆறந்தங்களுள் மேலானதாய சித்தாந்தத்தின் சிறப்புப்பொருள் ஒன்று எடுத்துக்கூறப்பட்டது.
``அண்டம் ஆரிருள் ஊடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``3
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

பொழிப்புரை :

சிவன் தனது சத்தியாலே உயிர்கட்கு அறிவிக்கும் முறையை உணர்ந்து, அந்த வழியிலே குரு உபதேசித்த பணிகளைச் செய் வதாலும், மற்றும் மந்திரங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதாலும் பாசங்கள் யாவும் நீங்கும். பின்பு என்றுமே உயிர்க் -குயிராய் நீங்கா -திருக்கின்ற சிவன் ஒருவனே உயிரினிடத்து உள்ள பொருளாவான்.

குறிப்புரை :

கோ - யாவர்க்கும் தலைவன்; சிவன். அவன் முன்னர்த் திரோதான சத்தியால் உலகத்தையே உணர்த்துவான். பின்பு அருட் சத்தியால் உலகத்தை மறைத்துத் தன்னை - உணர்த்துவான். அதுவே சத்திநிபாதமாம். அதுதான் மந்ததரம் - மந்தம் முதலாகப் பல வகைப் படுதலின் அதற்கேற்ப குரு முன்னர் `சரியை, கிரியை, யோகம்` என்ப வற்றை உணர்த்தி, முடிவிலே ஞானத்தை உணர்த்துவார். அவற்றுள், ``கருமச் செய்தி`` என்பது சரியையும், ``அற்சனை`` என்பது கிரியா யோகங்களையும் குறித்தன. யோகமும் அருவத் திருமேனி அருச் சனையே. ``செய்ய, பார்ப்ப`` என்பன வினையிடத்து வந்த செவ்வெண். தே - சிவனேயான குரு. பா - பாட்டாயினும் மந்திரமே. ``அற்சனை பாட்டேயாகும்``* என்றது காண்க. படைத்தல் - சமர்ப்பித்தல். பாரித்தல் - மிகுதியாகச் செய்தல். ``ஓ`` என்னும் முதனிலையே. `ஓவும்` என முற்றுப்பொருள் தந்தது. `அனைத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்த -லாயிற்று. `ஒழியாத ஒருவனே உண்டு` என மாற்றியுரைக்க.
இதனால், `ஞானத்திற்கு வழி சரியை கிரியா யோகங்கள்` என்பது சித்தாந்தம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே

பொழிப்புரை :

சித்தாந்தம், ``மற்றாருந்தன்னொப்பாரில்லாத`` l தலைவன் ஒருவன் இருக்கின்றான். எனக் கூறுவதையோ, `அத் தலைவனுக்கு அடிமையாய் உள்ள உயிர்கள் பல உள்ளன` எனக் கூறுவதையோ, `அவ்வுயிர்கட்கு நல்வினை; தீவினை யென்னும் இருவகை வினைகளும், சுத்த மாயை என்னும் மாயைகளும் ஆகிய கட்டுக்கள் உள்ளன` எனக் கூறுவதையோ சக்திநிபாதம் வாயாதவர் உணர வல்லவராகார். ஆகையால், எக்காலத்திலும் உயிர்களின் அறிவுக் கறிவாய் நின்று அவைகளுக்கு அறிவித்து, வினைப்பயனை நுகர்வித்து, அவற்றிற்கு அவை அறியாமலே ஆதாரமாயும் நிற்கின்ற அந்தத் தலைவனே இருவினை யொப்பு மல பரிபாகங்களின்போது அறி -வித்தால்தான் எவரும் இந்தச் சித்தாந்த உண்மைகளை உணர இயலும்.

குறிப்புரை :

வருவித்துரைத்தன குறிப்பெச்சங்கள். `சக்திநிபாதம் வாயாதோர், வாய்த்தோர்` என்பன, முன் மந்திரத்தில், ``கோவுணர்த்தும் சத்தியாலே`` என்றதனால் கொள்ளக் கிடந்தன. அருவம் - புலனாகாமை. `ஆதாரம்` என்பது குறுகி நின்றது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் எதிர்மறை முகத்தான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன்பால் அன்புள்ளவர்களை இடமாகக் கொண்டு வெளியாகின்ற ஆற்றல்கள் எல்லாம் அவர்களுடைய ஆற்றல்கள் அல்ல; மற்று, சிவனிடத்தினின்றும் வெளியாகின்ற ஆற்றல்களே அந்த ஆற்றல்களின் முன்னிலையில் எல்லாப் பொருள் களையும் சிவன் நிற்க வைத்துச் செயற்படச் செய்தலால், உயிர் நிலையாகச் சிவானந்தத்தில் மூழ்கி, அவ்வானந்தமே மயமாம் நிலையை அடையும்.

குறிப்புரை :

`ஆகிவரும் அவை, சிவத்தினின்றும் வரும் சத்திகள்` எனவும் `அவற்றின்முன் வகுத்திட்டு எனவும், மொழி மாற்றியும், வேண்டும் சொற்களை வருவித்தும் உரைக்க சிவனது சத்தி, செயலாற்றுகையில் `அதிகாரசத்தி` எனப்பெயர் பெறும். அது சிவத்தினிடம் இருந்தே செயலாற்றாது, அவனுடைய அன்பர்களிட மிருந்தும் செயலாற்றும். அந்த அதிகாரத்து பதியப் பெறுதற்குப் புண்ணியம் வேண்டும் ``புரைத்ததி காரசத்தி புண்ணியம் நண்ணலாலே``l என்றது காண்க. செயல்கள் தாம் பலவாகலின், அவற்றிற்கு ஏற்ப அதிகார சத்திகளும் பலவாம். `இவை செயல் நோக்கியல்லது பொருள் நோக்கியல்ல` என்பதை,
``சத்திதான் பலவோ என்னில், தான்ஒன்றே; அனேகமாக வைத்திடும் காரியத்தான்; மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்;அர னுடையதாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்தவாறாம்``l
என்பதனான் உணர்க.
அதிகார சக்திகள் பலவும் அவரவரது புண்ணியத்திற்குத் தக அவ்வவரிடம் பதிந்து ஏற்புடைய செயல்களைச் செய்யும் என்க. உரன் உறுதல், எல்லாவற்றையும் செய்தும் தான் நிலை திரியாது இருத்தல். ``முன்`` என்றதும், ``சந்நிதி`` என்றதும் வெறும் எதிர்முக மாத்திரை யன்று; `இஃது இவ்வாறு ஆகுக` எனச் சங்கற்பித்தலையேயாம். இத்தகைய சங்கற்ப மாத்திரையானே சிவன் எல்லாவற்றையும் செய்கின்றான் என்பதை உணர்க. சேட்டித்தல் - செயற்படுதல். ``சேட்டிப்ப`` என்னும் செயவெனெச்சம் காரணப்பொருளில் வந்தது. ``சிவாநந்தி`` என்றது சாதியொருமை. இதற்கு, `உயிர்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. `சிவத்தினின்றும் வரும் சத்திகள்` என்றதனால், `அவற்றின் முன்னாக வகுத்தவன் சிவனே` என்பது பெறப்பட்டது. ``வகுத்திட்டு`` என்னும் செய்தென் எச்சம். `ஆசிரியன் சொல்லி, மாணாக்கன் அறிந்தான்` என்பதுபோலக் காரணப் பொருட்டாய் நின்றது. `வகுத்திட்டுச் சேட்டிப்ப` என இயையும்.
இதனால், முன்மந்திரத்தில், ``ஒருவனே தலைவன்`` என்றது பற்றி, `தலைவர் பலராதலைக் கண்டும், கேட்டும் அறிகின்றோமே; அஃதென்` என்று எழும் ஐயம் தீர்க்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொழிப்புரை :

வேதாந்தப் பொருள் முழுவதையும் மிகச் சுருக்கமாகத் தொகுத்துணர்த்தும், `ஒருமொழி அல்லது `பெரும்பெயர்` எனப்படுகின்ற மகாவாக்கியங்கள் சிலவற்றுள், `தத்துமசி` என்பதே சிறந் தெடுத்துச் சொல்லப்படுவது. (இது சாமவேதவாக்கியம்) இதனுள் `தத்` என்பது பதியாகிய சிவத்தையும், `துவம்` என்பது பசுவாகிய உயிரையும், `அசி` என்பது, உயிரைச் சிவமாக்குகின்ற அருட் சத்தியையும் குறிக்கும். எனினும், `இவற்றுள் பசுவாகிய உயிர் பஞ்ச பேதங்களை யுடைய (இத்தந்திரத்து முதல் அதிகாரம்) உடலளவில் ஏகதேசமாய உள்ளதன்று; வியாபகமானதே` என்பதை வலியுறுத்தி விளக்குவதே வேதாந்தமாகும். மண்முதல் நாதம் ஈறாகச் சொல்லப் படுகின்ற உபாதி களுள் ஒன்றும் இன்றி, நின்மலமாய் நிற்பது எதுவோ அதுவே பதிப் பொருள்` என வலியுறுத்தி விளக்குவது நாதந்தமாகும் (`உயிர் இவ்வு பாதிகளை உடைமையாலே - பசு - எனப்பட்டது` என்பதும் இதனானே விளங்கும்).
இனி, துவம் பதப்பொருளாகிய உயிர் தத் பதப் பொருளாகிய சிவத்தில் சென்று `பாலோ டளாயநீர பாலாகு மலலது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதவாறுபோல``3 சிவமேயாய் வேறு தோன்றாது ஒன்றிவிடுதலை வலியுறுத்தி விளக்குவதே போதாந்தமாகும். (போதம் - சீவபோதம். அந்தம் - அதன் ஒடுக்கம். அஃதாவது கதிரொளியில் விளக்கொளிபோலச் சிவபோதத்தில சீவ போதம் அடங்கியிருத்தல்).
[`போதாந்தம் கூறும் நிலையை எய்தி, அவ்விடத்தில உயிர் பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்துதலை வலியுறுத்தி விளக்குவதே சித்தாந்தமாகும்` என்பது குறிப்பு.]
`சிவமும், சீவனும் பொருள் இரண்டாமாயின், அவை ஒன்றாதல் எங்ஙனம் கூடும்` எனின், அவ்விரண்டற்கும் இடையே உள்ள பொதுத்தன்மைதான் அவை அங்ஙனம் ஒன்றாதற்குக் காரணம் [அத்தன்மையாவது, இரண்டும் சித்தாய் இருத்தலாம். எனவே, சடத்திற்குச் சிவத்தோடு ஒன்றுதல் கூடாமை விளங்கும்].

குறிப்புரை :

பசு - பசுவின் இயல்பு; ஆகுபெயர். பசு இயல்பைக் கூறுவதை `பசு` என்றே உபசரித்தார. இவை `பதி` என்றதற்கும் ஒக்கும். `தற்பத்துப் போய்` என்க. `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலா யிற்று. `ஐக்கியம்` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சி நின்றது. ஆதலைக் கூறுவதை `ஆதல்` என்றதும், சாயுச்சம் ஆதற்குக் காரணமாவதை, `சாயுச்சியம்` என்றதும் உபசாரம். சாதாரணம் - பொதுத்தன்மை.
இதனால், மேல், ``ஒருவனையுன்னார்; உயிரினை உன்னார்`` என்பன முதலாக எதிர்மறை முகத்தாற் கூறியவற்றை நீக்கி, உடன்பாட்டு முகத்தால் உன்னுமாறு ஆறந்தங்களுள் பெறப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபட வில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக்கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.

குறிப்புரை :

ஆதலைக் கூறுவனவற்றை ``ஆதல்`` என்றது உபசாரம். அவமம் - கீழ் (பரமம் ளு அவமம்). ``செய்தது`` எனவும், ``ஒன்று`` எனவும் கூறியது. `வடிவால் வேறாயினும், பொருளால் ஒன்றே` என வலியுறுத்தற்கு `வேதம் ஒருவரால் செய்யப்பட்டதன்று; தானே உள்ளது` எனக் கூறுபவர்க்கே (மீமாஞ்சகர்) வேதம் ஆகமத்தின் வேறாகும். `வேதமும் சிவனால் செய்யப்பட்டதே` என்பார்க்கு வேதமும் ஆகமந்தான் இது பற்றியே நீலகண்ட சிவாசாரியர், `வேதமும் ஆகமமே` (``வேதோபி ஆகம்`` சிவாத்துவித பாடியம் - பதியதிகரணம்) என்றார். வேதாகமங்கள் தோன்றிய வரலாற்றை முதல் தந்திர உரையிற் காண்க.
நவம் - புதுமை; முதலிலே உணரப்படுவது` என்பது கருத்து.
இதனால், மேற்கூறியவற்றுள் வேதாந்த சித்தாந்தங்களது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப் படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.

குறிப்புரை :

``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம்ஒன்றி லேசீவன் முத்த ராக்கி
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர்; இது என்ன பிராந்தி!`` -பக்கம் - சூ. 8 - 16.
என்னும் சிவஞான சித்தி மொழியினை இங்கு ஒப்புநோக்கியுணர்க.
இதனால், ஆறந்தங்களுள் சித்தாந்தத்தின் தலைமை அதன் பயன்கூறும் முகத்தால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொழிப்புரை :

சிவனை ஈசுரனிடத்திலும், சீவனிடத்திலும் வைத்துக் காட்டுவது வேதாந்தம். அதில் இருவகை உண்டு. ஒன்று பரிணாம வாதம்; மற்றொன்று ஆபாசவாதம். ஆபாசம் - போலி. விவர்த்தனம் ஆபாசத்துள் அடங்கும். விவர்த்தனம் - கயிறு பாம் பாதல் போலும் பொய்த்தோற்றம். `நிர்க்குணமாகிய பரப்பிரமமே தன் இச்சையால், சத்துவகுணனாகிய ஈசுரனாகவும், இராசத குண னாகிய சீவனும், தாமத குணத்தவாகிய அந்தக் கரணம் முதலிய கருவி களுமாய்ப் பரிணமிக்கும்` என்பது பரிணாம வாதம். `நிர்க் குணமாகிய பரப்பிரமத்திலே - இன்னது எனச்சொல்ல இயலாத - மாயை என்பது உண்டு. அது முக்குணங்களை யுடையது. மூன்றுநிறம் உடைய கண்ணாடியைப் போன்றது. அம்மூன்றுகூற்றிலும் கண்ணாடி -யில் நிழல் போலப் பரப்பிரமம் பிரதிபலிக்கும். அவற்றுள் சத்துவக் கூற்றின் பிரதி பலனம் ஈசுரனாயும், இராரசதக் கூற்றின் பிரதிபலனம் சீவனாயும், தாமதக் கூற்றின் பிரதி பலனம் அந்தக் கரணம் முதலிய கருவிகளாயும் நின்று செயற்படும்` என்பது ஆபாசவாதம். இந்த ஆபாசத்திற்கு அடிப்படை மாயையே யாகையால், ஆபாசவாதமே `மாயாவாதம்` எனப்படுகின்றது எவ்வகை யிலேனும் இந்தவேதாந்தம் `சகம், சிவன், பரம்` என்னும் முப் பொருளை உணர்த்துதலால், இதனை உணர்ந்த பின் ஆகமாந்தத்தை உணருங்கால், வேதாந்தக் கூற்று தூலாருந்ததி முறைமைத்தாதல் விளங்கும். தூலாருந்ததி முறைமை யாவது, `அருந்ததி மீன் மிக நுண்ணி தாதலின், அதனைக் காட்டுதல் அரிது` என்று கருதி முதற்கண், அதற்கு அருகில் உள்ள ஒரு பெரு மீனைச் சுட்டி, `அதுவே அருந்ததி` எனக் காட்டுதல் போன்ற முறை. முதலில் அப்பெருமீனைக் கண்டுணர்ந் தவனுக்குப் பின்பு, `அஃதன்று அருந்ததி மீன்; அதனைச் சார்ந்து மிக நுண்ணியதாய் விளங்குகின்றதனைப் பார்; அதுவே அருந்ததி மீன்` எனக்காட்டினால், அவன் அருந்ததியைக் கண்டுகொள்வான். இம் முறையில் அருந்ததி யல்லாத மீனை அணுக்கம் பற்றி `அருந்ததி` என்றல் போல்வது இங்குக் கூறிய வேதாந்தப் பொருள். அருந்ததி மீனையே சுட்டி, `அருந்ததி மீன்` எனக் காட்டுதல் போல்வது ஆகமாந்தப்பொருள். ஆகவே, தூலாருந்ததி முறைமை பற்றி நோக்கினால் இங்குக் கூறிய வேதாந்தமும் பயனில்லது ஆகா தாகலின், இந்த வேதாந்தமும் சித்தாந்தமேயாம். இவ்வாறு ஆகும் நிலைமையில் ஒருவனது ஞானம் அமையுமாயின், அந்த ஞானம் தசகாரியத்துள் ஒன்பதாம் நிலையாகிய `சிவயோகம்` எனப்படுகின்ற சீவன் சிவனாய் நிற்கும் நிலைமையைத் தரும். `சரியை, கிரியை, யோகம்` என்றும் தவங்களின் மிகுதியனாலே இத்தகைய ஞானத்தை எய்தினோரே, `தத்துவ ஞானிகள்` எனப்படுகின்றார்கள்.

குறிப்புரை :

`பரப்பிரமத்தை` என்னாது, ``சிவனை`` என்றது, `சித்தாந்தத்தில் சொல்லப்படும் சிவனே, வேதாந்தத்தில் சொல்லப் படும் பரப்பிரமம்` என்றற்கு. இச்சிவன், சொரூப சிவன் என்க. இஃதே பற்றித் தடத்த சிவனை, `வேதாந்திகள் கூறும் ஈசுரன்` என்றோ, `சகுணப் பிரமம்` என்றோ மயங்கற்க. சித்தாந்தம் கூறும் தடத்த சிவனும் நிர்க்குணனே. பரமன் - வேதாந்திகள் கூறும் பரமன்; ஈசுரன். ``நவம்`` என்றது, ஒன்பதாம் எண்ணுமுறைமையை. `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மிக்கு - மிகுந்ததனால். உணர்தற்கு, `இதனை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `சித்தாந்தமே வேதாந்தம்` என்னும் உண்மையை உணராதவர் வேதாந்த வாக்கியங்கட்குத் தாம் தாம் அறிந்தவாற்றால் கூறும் பொருள்களும் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கட்கு நேர் மாறானவை யாகாது, தூலாருந்ததி முறைமையவாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ மாகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொழிப்புரை :

சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.

குறிப்புரை :

தத்துவம் - உண்மை. `தத்துவமாகும்` என்னும் பயனிலை நான்கடிகளிலும் முதற்கண்ணே நின்றது. சகளம் - உருவம். அகளம் - அருவம். இவ்விரண்டைக் கூறியதனால் சகள நிட்களமாகிய உருவாருவமும் பெறப்பட்டது. தன்பரம் - தனக்கு மேலே உள்ளவர். அவர் சதாசிவர் முதலிய கடவுளர். இவரையும், சீவர்களையும், மற்றும் இவர்களது தனு கரண புவன போகங்களையும், `கனவிற் காணப்படும் மயக்கக் காட்சிபோல வியாவகாரிக சத்தைகள்; பாரமார்த்திகத்தில் இவையெல்லாம் பொய்யாய் ஒழியும்` எனக் கூறுவர் மாயாவாதிகள். `அது பொருளன்று` என வலியுறுத்தற்கு அடிதோறும் ``தத்துவம் ஆகும்`` எனக்கூறினார்.
இதனால், மேற்கூறிய வேதாந்தப்பொருள் தூலாருந்ததி முறைமைத்தாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.

பொழிப்புரை :

இதன்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொது, உண்மையை முற்ற உணர்த்தாது, ஓரளவாக உணர்த்துவது. சிறப்பு, உண்மையை முற்ற உணர்த்துவது, உலகர் உண்மையை ஓரளவே உணர்வார்; சத்தி நிபாதரே முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பு முற்ற உணர இயலும். அது பற்றியே உலகர்க்காவும், சத்திநிபாதர்க்காகவும் முறையே வேதமும், ஆகமமும் சிவனால் செய்யப்பட்டன. எனவே இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு` என்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர் உண்மைதானே பொதுவும், சிறப்புமாம் வகையில் `வேதாந்தம்` எனவும், `சித்தாந்தம்` எனவும் நிற்கின்றது என்பர் என்றபடி.
``வேதநூல், சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறும்உள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது;சைவம் அருஞ்சிறப்பு நூலாம்; நீதியினால் உலகர்க்கும் சத்தநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
-சுபக்கம் சூத். 8 - 15.
என்றது சிவஞானசித்தி.

இதனால், ஆறந்தங்களுள் வேதாந்த சித்தாந்தங்களது தலைமை அவற்றின் இயல்பு கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொழிப்புரை :

வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த நெறியில் அடையப்படும் ஆனந்தம் சிவானந்தம். அதனை முற்றப்பெற்ற உயிரே மேலான ஆனந்தத்தைப் பெற்ற உயிராகும். இனி அந்த ஆனந்தம் முப் பாழுக்கு மேலே விளைவதாகும். அதனை இவ்வுலகிலே இறைவன் செய்யும் திருக்கூத்திலும் பெறலாம். திருக்கூத்தில் பெறும் `முத்திரானந்தம், எனப்படும். அதனை எல்லாரும் பெறுதல் கூடும். சிவானந்தத்தை எந்த வகையிலேனும் பெறும் உயிரே இன்பத்தால் நிறைக்கப்பட்ட உயிராகும்.

குறிப்புரை :

பர + ஆனந்தம் = பரானந்தம். `பரா + ஆனந்தம்` என்றலும் ஆம். ஆனந்தத்தை உடையது ஆனந்தி. ``பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்`` என்றாரேனும், `சிவானந்தம் எல்லாம் மன்னியது பரானந்தி` என்றலே கருத்து. எல்லாம் - முழுதும். `முழுதிலும்` என்க. மன்னுதல் - நிலைத்திருத்தல். இரண்டாம் அடியில், `அந்தப் பரானந்தம்` எனச்சுட்டியுரைக்க. ``மேல்மூன்றும் பாழ்உறு ஆனந்தம்`` என்பதை, `மூன்று பாழுக்கும் மேல் உறு ஆனந்தம்` என மாறிக்கூட்டுக. `முப்பாழ்இவை` என்பதைப் பின்னர்க்காண்க. விரா ஆனந்தம், வினைத்தொகை. ``விரா`` என்றது உடம்பொடு புணர்த்தது. எனவே, `முத்திரானந்தம் (யாவராலும்) விராவப்படும்` என்பது கருத்தாயிற்று. கூத்தப்பெருமானது கூத்து, ``ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தலையே``l குறிப்பதாகலின், அந்த நடனத்தில் காணப்படும் முத்திரை (வீசியகரமும், எடுத்த திருவடியும்) `ஆனந்த முத்திரை` யாகும். அதனால் அதை, ``முத்திரானந்தம்`` என்றார். முத்திரானந்தம் - முத்திரையில் விளையும் ஆனந்தம்.
`இறைவன் இல்லை` எனப் பிணங்கிய தாருகாவன முனிவர்க்கு `அவன் உளன்` என விளக்கினமையால், பிட்சாடனர் கையில் காணப்படுவது `சன்முத்திரை` சன் + முத்திரை (சத் + முத்திரை) என்றும், சனகாதி நால்வர்க்கு ஞானத்தைத் தெளிவித் தமையால், தென்முகக் கடவுள் கையில்காணப்படுவது `சின்முத்திரை` (சித் + முத்திரை) என்றம் சொல்லப்படும். எனவே இம்மூர்த்திகளின் முத்திரையும் கூடி, சச்சிதானந்த முத்திரையாதல் விளங்கும்.
`பொரு` என்னும் பகுதி நேரே, `போர் செய்தல்` எனப்பொருள் தருமாயினும், உகரம் பெற்று, `பொருவுதல்` என நின்று `ஒத்தல்` என்றும் பொருளைத் தரும் ஆதலின் இங்கு, ``பொராநின்ற`` என்பது, `ஒத்திரா நின்ற` எனப்பொருள்தத்தது. ஒத்திருத்தல் - தகுதி பெற்றிருத்தல். உள்ளம் - ஆன்மா. பூரித்தல் - நிறைத்தல். பூரிப்பி - நிறைக்கப் பட்டது.
இதனால், சித்தாந்தத்தில் பெறப்படும் பயன் ஒப்புயர் வற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே

பொழிப்புரை :

ஆறந்தங்களில், `கலாந்தம், நாதாந்தம்` என இரண்டு கூறப்படினும், நாதாந்தம் கலாந்தத்துள் அடங்கும் ஆதலின், நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளின் முடிவே முடிவாகும் ஆகவே, `அந்தப் பஞ்சகலைகளையும் சுத்த மாயையுள் ஒடுக்கியும், மீள விரித்தும் நிற்பவன் சிவன்` எனக் கேட்கப்படுதலன்றிப் பிறர் ஒருவரும் அத்தன்மையராதல் கேட்கப்படாமையால், அவனே ஆறந்தங்கட்கும் மூலமாகிய வேதாகமங்களைச் செய்தருளினான்.

குறிப்புரை :

அன்றே, தேற்றம், `பஞ்ச கலைகளையும் ஒடுக்கி, விரிப்பவனே முழுமுதல் தலைவன்` என்பதும், `கீழ்க் கீழ் உள்ள சிலகலைகளை மட்டும் ஒடுக்கி, விரிப்பவர் முழுமுதல் தலைவராகாது, முழுமுதற்றலைவன் கீழ் ஒருபுடை நிற்கும் தலைவர் என்பதும் சித்தாந்தம். ஆதலின், உலகிற்கு இருவகை முதல் நூல்களைச செய்தளித்தவனும் அவனே என்றபடி. `இரண்டந்தம்` என்பதை, `நாதாந்தம்` என்பதன் பின்னர்க்கூட்டுக. என்ன - என்று சொல்லும்படி. பஞ்சாந்தகன் - ஐந்தையும் இறுதி செய்பவன். இறுதி செய்தலைக் கூறவே, தோற்றுவித்தலும் தானே பெறப்பட்டது.
இதனால், மேல் ``நாதன் உரை அவை`` எனப்பொது வகையால் சுட்டப்பட்ட தலைவன் இவன் என்பது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.

குறிப்புரை :

அன்று, பன்மையொருமை மயக்கம். ``என்னாதை`` என்பது, எதிர்மறை ஒருமை ஏவல். இஃது, `என்னாதே` என மருவி வழங்கும். ``அன்றாகும் என்னாதை` என்பதை முதல் அடியின் இறுதியிற் கூட்டுக. உணர்வு முறையில் சித்தாந்தம் முடிவானதாயினும், செயல் முறையில் அதற்கு முதற்படி யோகாந்தம் என்றபடி. அனைத்து அந்தங்களும் படிமுறையில் வேண்டுவன ஆதலின் அவற்றை, ``அன்றாகும் என்னாதை`` என்றார்.
இதனால் ஆறந்தங்களும் படி வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.

பொழிப்புரை :

பதியைப்போலவே பசுவாகிய சீவனும் அனாதி. அதற்கு அனாதியே ஒரு குற்றம் உண்டு. அந்தக்குற்றம் மேல் எழாமல் கீழாம்படி அடக்கினால் சீவன் தனது உண்மையைத் தான் உணரும். தன்னை உணர்ந்தால், பின் தலைவனை உணர்ந்து, அவனைச் சார்ந்து அவனாகி நிற்கும். அங்ஙனம் நிலையை அடைதற்பொருட்டுச் சீவன் அனாதிக்குப் பின் ஆதியாய் வந்த மலங்களும் நீங்கும்படி அவற்றைக் கடக்கும் முறையை ஞான குருவை அடைந்து வினாவும். பின் அவர் உபதேசித்தபடி நின்று, ஐந்து மலங்களும் நீங்கப் பெற்றுத் தூயதாய் உலகத்தைக் கடந்து நிற்கும். அந்நிலையில் அது சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆதல், நீர் பாலோடு சேர்ந்து பாலாதல் போல்வதாம். வேதாந்தத்தின் உண்மைப்பொருள் இதுதான்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில், `வேதாந்தப் பொருளைச் சித்தாந் -தத்தின் வழியாக உணர்தல்வேண்டும்` என்றமையால், `அதனை அவ்வாறு உணருங்கால் வேதாந்தப் பொருள் இவ்வாறாம்` என்றபடி.
ஐம்மலம் - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. இவற்றுள் ஆணவம் அனாதி; அன்றே உள்ளது. ஏனைய ஆதி; பின் வந்தவை. இரண்டாம் அடியில் ``அனாதி`` என்றது. அனாதியாய மலத்தை. அனாதிக்கு அந்தம் இல்லை ஆதலின், `அழித்து` என்னாது ``அடக்கி`` என்றார். ஆணவம் தவிர ஏனை நான்கும் ``ஆதி மலம்`` எனப் பட்டன. சம்பந்தம் ஆயினமை பற்றி, ``தத்துவாதீதம்`` என மாயே யத்தையே கூறினாராயினும் இனம் பற்றி அனுபந்தமும், சார்பு பந்தமு -மாய் உள்ள ஏனைய மலங்கட்கு அதீதம் ஆதலும் கொள்ளப்பட்டது. வினாவுதற்கு, வினாவப்படுவார் வருவிக்கப்பட்டார்.
சீவனை, `ஆதி` என்பாரை மறுத்தற்கு, ``அனாதி சீவன்`` என்றும், `மலம் இரண்டே` என்பாரை மறுத்தற்கு, ``ஐம்மலம் அற்று`` என்றும், ஆணவத்தைப் பலபட மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு ``அனாதி மலம்`` என்றும். `சீவன் சிவனாதல் நீரும், நீரும் சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், `குடம் உடைந்த வழிக் குடாகாயம் மகா காயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், மற்றும் இன்ன பிற போல்வனவாகவும் கூறுவாரை யெல்லாம் மறுத்தற்கு, ``நீர் பாலாதல்`` என்றும் கூறினார்.
``ஐம்மலம் அற்று அப்பால் ஆம்`` என்பதை ``வினாவும்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `அது நீர் பால் ஆதல் போல்வது` எனவும், `இதுவே வேதாந்த உண்மை` என்று எழுவாய்கள் வருவித்து, தேற்றேகாரத்தை மாற்றிவைத்துரைக்க. அதீதம் ஆதற்குரிய முறையை ``அதீதம்`` என்றார்.
இதனால், மேல் ``நாடில் இரண்டந்தம் பேதமதென்னில் பெரியோர்க் கபேதமே`` என்றது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.

பொழிப்புரை :

`உயிர், பரன், திருவருள்` என்னும் முப்பொருளை யும், `அவற்றுள் ஒன்றையும் விடாது முறையே உணர்த்துகின்ற, `துவம், தத், அசி` என்னும் மூன்று பதங்களால் ஆகிய வேதாந்த மகா வாக்கியத்தை அனுபவமாக உணர்வதால், நீ சடமாகிய பாசங்கள் ஆகாது, சித்தாகி விடுவாய். ஆயினும், அதன்பின் `யான் எதனையும் யானே அறியமாட்டாமையால், தூலசித்தாகின்ற எனக்கு எஞ் ஞான்றும் அறிவித்து வருகின்ற சூக்கும சித்து ஒன்று உண்டு என உணர்ந்து, எதனையும், `யான் அறிகின்றேன், யான் செய்கின்றேன்` எனச் செருக்குதலை விடுத்து, அந்தச் சூக்கும சித்தின்கீழ்ப் போய் அடங்கியிரு. அப்பொழுதே வேதாந்தம் சித்தாந்தம் ஆகிவிடும்.

குறிப்புரை :

சிவன், அவனது அருளைக் குறித்த ஆகுபெயர். வாக்கியம், `தத்துவமசி` என்று இருப்பினும் உண்மையில் அதன் சொற்கிடக்கை முறை, `துவம் தத் அசி` என்பதே ஆதலை விளக்குவார். `தொம் தத் அசி` என்றார். `அசி` என்பது, `ஆகின்றாய்` எனப் பயனிலை ஆதலாலும் அது முன்னிலையிடத்தது ஆதலாலும் `துவம்` (நீ) என்னும் முன்னிலை எழுவாய் முதற்கண் நிற்றலே முறையாதல் அறிக. எனவே, `தத்துவமசி` என்ற மகாவாக்கியத்தின் பொருள், `நீ அது ஆகின்றாய்` என்பதே ஆகின்றது.
ஒரு பொருள் மற்றொரு பொருளேயாதற்குக் காரணம் அவற்றிடையே யுள்ள இயைபு. அவ்வியைபுதான் பல. `குடம் மண் ஆகின்றது` என்பதில் ஆதற்குக் காரணம் காரிய காரண இயைபு. அது போன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் பிரம பரிணாமவாதிகள்.
`வெண்மை தாமரை யாகின்றது`, `இலை பூ காய்கள் மரமாகின்றன` என்பவற்றில் ஆதற்குக் காரணம் குண குணி, இயைபும், அவயவ அவயவி இயைபும் ஆகும். இவைபோன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் விசிட்டாத்து விதிகள்.
`பாம்பு பழுதையாகின்றது`, `அரசன் ஆண்டியாகின்றான்` `குடாகாயம் மகாகாயம் ஆகின்றது` என்பவற்றில் ஆதற்குக் காரணம் காட்சிவகையும், நிலைமை வகையும், பொருள் ஒருமை வகையும் ஆகும். இவைபோன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணமும் என்பர் கேவலாத்து விதிகள்.
இவரெல்லாம், `வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு, வேறு` எனப் பேதம் கூறுபவரும், சித்தாந்தத்தை ஏனையோர் கூறும் வேதாந்தம் ஆக்குபவரும் ஆவர். அவர்களையெல்லாம் மறுத்து, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம், ``நான் இவள்ஆம் பகுதிப் பொற்பு``* என்று அருளிச்செய்தபடி, `தலைவன் தலைவி ஆகின்றான்` என்பதில் ஆதற்குக் காரணம், தலைவனது உணர்வு தன்னை உணரும் உணர்வாகாது, தலைவி தன் நலத்தையே உணரும் உணர்வாதலாம் அது போன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் எனச் சித்தாந்தம் கூறுவார், ``அறிவாகியும் சென்று அடங்கி`` என்றார். ``தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னை``* என்பதில், ``என் -றன்னை`` என்றதும், ``என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``l என்பதில் ``என்னை`` என்றதும் உயிருணர்வையே -யாம். இவற்றில், ``கொண்டது`` எனவும், ``விழுங்கி`` எனவும் கூறப் பட்டதே இங்கு, ``அடங்கி`` எனக்கூறப்பட்டது. `அடங்குதி` என்னும் இகர ஈற்று ஏவல் வினை தகரம்பெறாது நின்றது, ``நன்றுமன் இது நீ நாடாய் கூறி``8 என்பதிற்போல.
``அறி`` என்பது, `தொந்தத்தசி` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றதனோடு வினைத்தொகைபடத் தொக்கது. அயர்வு - அறியாமையால் கொள்ளாதொழிதல்.
இதனால், முன் மந்திரத்தில் கொள்வகையால் விளக்கிய உண்மை, சொற்பொருள் வகையால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.

பொழிப்புரை :

பொது மறையாகிய வேதத்தை மட்டுமே நூலாகக் கொண்டு, சிவாகமங்களை நூலாகக்கொள்ளாதவர்கட்குத் தலையான மகாவாக்கியமாய் உள்ளது, ``ஸோஹம் அஸ்மி`` என்பது [இதன் பொருள், `அது நான் ஆகின்றேன்` அல்லது, `அவன் நான் ஆகின்றேன்` என்பது `தத்துவமசி` மகாவாக்கியத்தில் முன்னிலையில் வைத்துச் சொல்லப்பட்ட பொருளே இதில், தன்மையில் வைத்துச் சொல்லப்பட்டது. ஆகையால் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளது வடிவு வேற்றுமையே யன்றிப் பொருள் வேற்றுமையில்லை. `தத்துவமசி` மகாவாக்கியம், மாணவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர் கூற்று. `ஸோஹம் அஸ்மி` மகாவாக்கியம், ஆசிரியர் உபதேசித்த பொருளை அனுபவமாகக் காணும் மாணவன் கூற்று. இவற்றால் இவை முன்னிலையிடத்தும், தன்மையிடத்தும் ஆயின].
இனிப் பொதுமறையாகிய வேதத்தோடு, சிறப்பு மறையாகிய சிவாகமங்களையும் நூலாகக் கொள்வோர், வேதாந்தத்தில் `ஸோக மஸ்மி` எனப் பொதுவாகக் கூறப்பட்டது, உண்மையில், `சிவோஹ மஸ்மி` எனக்கொள்வர். (இதன் பொருள், `சிவன் நான் ஆகின்றேன்` என்பது). அக்கொள்கையே சிறப்பு மறையாகிய சிவாகமங்கள் ஆராய்ந்து காட்டும் முடிநிலை முடிபாகும். அந்த முடிபைப் பல்லாற்றா -னும் வலியுறுத்த எழுந்த நூல்களே `சிவாகமம்` எனப்பெயர் பெற்று விளங்குகின்றன.

குறிப்புரை :

`இருவகை நூல்களின் முடிவும் பொதுவும், சிறப்பும் ஆகின்ற அத்துணையேயல்லது, அவற்றிடையே பிறிது வேற்றுமை யில்லை` என்பது குறிப்பு.
`மாமறையாளர்தம் சென்னியது சோகம் ஆம்` எனவும், `ஈது, ஆன சிவோகமாம் என்ன, அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்` எனவும் இயைத்துக் கொள்க. ``தோன்றும்`` என்னும் பயனிலைக்கு, `அது` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``பண்டை மறைகளும் `அது நான் ஆனேன்` என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைத் தானே``*
என்னும் சிவஞானசித்தியில், ``இப்பாவகம்`` என்றது, `சிவன் நான் ஆனேன்` என்னும் சிறப்புப் பாவனையையேயாம்.
ஒருவனை, `அவன்` எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும், ஒருபொருளை, `அது எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும் அக்கூற்றைக் கேட்டவனுக்கு என்ன பயன் உண்டாகும்? பொதுவாகச் சுட்டியவற்றைப் பின்பு சிறப்பாகச் சுட்டியவழியே, கேட்பவனுக்குப் பயன் உண்டாகும். எனவே, பொதுக்கூற்றுச் சிறப்பிற்கு முன்னோடியேயன்றி, அதுவே முடிநிலை முடிபு ஆகாமை உணர்க.
``அதுபழச் சுவையென, அமுதென, அறிதற்(கு)
அரிதென, எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருஉரு; இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு``*
என்னும் அருள்மொழியால், `பொதுவாக விளக்கமின்றியிருக்கும் மகாவாக்கியப்பொருளைச் சிறப்பாகத் தெளிய உணர்த்துவதே ஆசிரியர் வழங்கும் அருள் உபதேசமொழி` என்பது விளங்கும்.
`தத்துவமசி` என்னும் பொது வாக்கியமே, `சிவத்துவமசி` எனச்சித்தாந்த ஆசிரியரால் சிறப்பாக உபதேசிக்கப்படுகின்றது. `ஸோஹமஸ்மி` என்னும் பொது வாக்கியமே. `சிவேஹமஸ்மி` எனச்சித்தாந்த மாணவனால் சிறப்பாகப் பாவிக்கப்படுகின்றது.
`சிவாய` எனநிருவாண தீக்கையில் உபதேசிக்கப்படுகின்ற முத்தி பஞ்சாக்கரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதனால், `ய, சி, வா` என அமையும் எழுத்துக்கள் முறையே `துவம், தத், அசி` என்னும் பதங்களாய் அமைதல் விளங்கும். அதனால் உபதேசிக்கப்பட்ட அந்த மூன்றெழுத்துக்களை விந்துத்தானமாகிய புருவ நடுவில் வைத்துத் தியானிப்பதனால், சிவோஹம் பாவனை, அஃதாவது `நான் சிவன் ஆகின்றேன்` என்னும் பாவனை அமைந்து விடுகின்றது.
`தத்துவமசி` என்பதேமகாவாக்கியம் ஆயினும், `துவம்ததசி` என்பதே பொருளாதல் போல, `சிவத்துவமசி` என்பதே மகா வாக்கியம் ஆயினும், `துவம்சிவாசி` என்பதே பொருளாதலின், அப் பொருள் மேற்கூறிய மூன்றெழுத்துக்கணிப்பால் அமைதலை உணர்க.
இதனால், வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றாம் முறைமையும். அவற்றுள் சித்தாந்தமே சித்தாந்தம் ஆதலும் தெரித்துக் கூறப்பட்டன.
சிற்பி