காரைக்காலம்மையார் - திருஇரட்டைமணிமாலை


பண் :

பாடல் எண் : 1

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
குஞ்சென்னி ஈசனுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சமே ஈசனுக்கே வந்தி; வெந்துயர் வந்து அடும்போது அஞ்சி, என்பாய் இங்குத் தளர்ந்திருத்தலைத் தவிர்தி` என இயைத்துக் கொள்க.
வெந்துயர் கிளர்ந்து, வந்து அடும் போது - கொடிய துன்பம் மிகுந்து வந்து வருத்தும்போது, என்பாய்த் தளர்ந்திருத்தல் - உடம்பு எலும்பாய் இளைத்துப் போகும்படி மெலிந்திருத்தல்.
வளர்ந்து உந்து கங்கை - பெருகி மோதுகின்ற கங்கை. கோட்டுத் திங்கள் - வளைவையுடைய சந்திரன். `ஈசனுக்கு` என்பதை, `ஈசனை` எனத் திரிக்க. தளராது வந்தி - மனம் சலியாது வணங்கு.
`சிவனை மனம் சலியாது வணங்குவாரைத் துயர்வந்து அணுகாது` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 2

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈசன் - ஐசுவரியம் உயைவன்; அஃதாவது, உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவன். எனவே, `முழுமுதல் தலைவன்` என்பதாயிற்று `அவன்` என்பது, முன்னைப் பாட்டிற் போந்த அந்த ஈசனைச் சுட்டிற்று. நினைதல். இங்குத் துணிதலைக் குறித்தது. கூசுதல் - தம்மையும் ஏனையோரை யும் தலைவர்களாக எண்ண நாணுதல். `அவனையே மனத்தகத்துக் கொண்டிருந்து` என்க. `கொண்டிருந்தும், பேசியும்` என எண்ணும்மை விரிக்க. `பிரான்` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. பிறவாமை, எதிர்மறை வினையெச்சம்.
`சிவனைப் பொது நீக்கியுணர்ந்து, மறவாது நினைவாரை அவன் பிறவாமற் காப்பான்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 3

பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அந்தணன், தன்னைப் பன்னாள் பரவித் தொழுவாரது இடரைக் கண்டு (வாளா) இரான் என நிற்கின்ற ஈசன்` என இயைக்க. `பிரான்` என்றது சொல்லுவாரது குறிப்பால், `முழுமுதல் தலைவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `தன்னையே பிரான் என்று` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து, முன்னே கூட்டுக. பரவுதல் - துதித்தல். `ஈசன்` என்பது இங்கு, `இறைவன்` என முன்னர்ப் பொதுமையில் நின்று, பின்னர் `இரான் என நிற்கின்ற` என்னும் அடைபெற்று, சிவனது சிறப்புணர்த்தி நின்றது. `தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே` (தி.7 ப.1 பா.9) என நம்பியாரூரரும் அருளிச் செய்தார். கிண்டுதல் - கிளறுதல். பொருதல் - போர் செய்தல். பொதும்பர் - சோலை. பூக்களால் நிரம்பியிருத்தல் பற்றித் திரு முடியை, `சோலை` என்றார். பொம் மெனல், ஒலிக் குறிப்பு. `துறை` எனவே, `கங்கை` என்பது தானே பெறப்பட்டது. `சடையாகிய செம் பொன் முடி` என்க. `சடை, நிறத்தால் பொன்போல்கின்றது` என்பதாம். `பிற முடிதனை விரும்பாதவன்` என்பது குறிப்பு. அந்தணன் - அழகிய தட்பத்தினை (கருணையை) உடையவன்; காரணப் பெயர். கண்டீர், முன்னிலையசை.
`தன்னைப் பொது நீக்கி நினைந்து, பன்னாள் பரவித் தொழுவாரது இடரை நீக்குபவன் சிவன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன்னைப் பாடலிற் கூறிய அவ்வந்தணன் அத்தன்மையன் ஆதலின், நெஞ்சே, இனியேனும் அவனது பெருமையைச் சொல்லி அவனைப் புகழ்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இதன் முதல் இரண்டடிகள் முன்னைப் பாட்டிற் கூறியவற்றை மீட்டும் அநுவதித்துக் கூறியன. `துயரில் ஆழாமே` எனச் சொல்லெச்சம் வருவித்துரைக்க. கொந்து - கொத்து; என்றது தீக் கொழுந்தை. `இணர் எரி` * என்றல் வழக்கு. `கொந்தில் அணைந்த பொன்` என்க. நெருப்பில் காய்ச்சி ஓட விட்ட பொன், மாசு நீங்கி ஒளி மிக்கதாகும். பொன் ஆகுபெயராய், அதனால் ஆகிய அணி கலங்களைக் குறித்தது. கோள்- கொடுமை. `இனி` என்பதன் பின், `ஆயினும்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `அந்தணன்` என்றது, `அவ்வந்தணன்` என்னும் பொருட்டாகலின் முதற்கண், `அந்தணன்` என்றே வைத்து, பின், `அவனை என்` எனக் கூட்டி முடிக்க. கண்டாய், முன்னிலையசை. `கோள் அரவம் பூண்டமையே அவன் `தஞ்சம்` என்று அடைந்தாரை ஆழாமாற் காத்தலைத் தெரிவிக்கும்` என்பது குறிப்பு.
`அறியாது` கழிந்த நாள்கள் போக, அறிந்த பின்னராயினும் தாழாது சிவனைத் துதித்தல் வேண்டும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
கோத்தஎம் சங்கரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முனிவார் - கோபிப்பவர்; திரிபுரம், (வானத்தில்) திரிந்தபுரம். என வினைத்தொகை. பகைவர், `வெந்து மூழ்க` என்பதனை, `மூழ்கி வேவ` என மாற்றிவைத் துரைக்க. சிலை - வில். `சிலையால்` என்றது, `விற் போரினால்` என்றபடி. வார்கணை- நீண்ட அம்பு. `கணை ஒன்றினால்` என்பதை, `கணை ஒன்றினை` எனத் திரித்துக் கொள்க. அங்கம் - உடம்பு. `காணின் என் செய்தி` என்றது, `நாணித் தலை குனிவை போலும்` என்றபடி. எனினும், `உயிர்களின் நன்மைக்காகவன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை அவன் அறிவான் ஆகலின், `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் முனியப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள்ளுறைச் சிறப்பு இதனை வட நூலார் `நிந்தாத் துதி` என்றும், அதனைத் தமிழில் பெயர்த்துக் கூறுவார், `பழிப்பது போலப் புகழ்தல்`* என்றும் கூறுவர். பின்னும் இவ்வாறு வருவனவற்றை உணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 6

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். தாழ்ந்த சடை - நீண்டு தொங்குகின்ற சடை. பொங்கு - சினம் மிகுகின்ற. `அங்கொருநாள்` என்றது, கூற்றுவன் வரும் நாளினை. ஆ! ஆ!, இரக்கக் குறிப்பு இடைச்சொல். என்று - என்று இரங்கி. `ஆழாமைக் காப்பான்` என்பது மேலேயும் வந்தது.* ஓவாது - ஓழியாமல். உரை - சொல்லு; துதி. எப்பொழுதும் ஓவாது துதித்தால்தான் காப்பான்` என்பது குறிப்பு. `அன்று துதித்தல் இயலாது` என்பதாம், `சாங்காலம் சங்கரா! சங்கரா என வருமோ` என்பது பழமொழி.

பண் :

பாடல் எண் : 7

உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந்
தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற
கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித்
தலைவைத்த வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உம்மை, சிறப்பு. செவ்வான் தொடை - செவ்விய உயர்ந்த மலர்மாலை; கொன்றை மாலை. இரைக்கின்ற - சீறிக்கொண்டிருக்கின்ற. தொடேல் - தொடாதே. என்றது, அது, `பிறைச் சந்திரன் வளரும்` என்று பசியோடு காத்திருக்கின்றது; அதனால் சினம் மிகுந்து கடித்துவிடலாம் - என்றபடி. இதனால், `தம்முட் பகையுடையவனவாகிய பாம்பையும், மதியையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்கின்றா யல்லையோ` எனக் குறிப்பாற் புகழ்ந்தவாறு. இழிந்து ஓட்டத்து - கீழே வீழ்ந்து ஓடும்பொழுது. திரைக்கின்ற - அலை வீசுகின்ற. விரைக்கின்ற - `வாசனை வீசுகின்ற கொன்றை` என இயைக்க. வன்னி - வன்னியிலை. தலை, ஏழாம் வேற்றுமையுருபு. வேதியன் - வேதம் ஓதுபவன். `சிவன் சாம வேதத்தை ஓதுபவன்` என்பர். ஓதுதல் பிறர் அறியவாம்.

பண் :

பாடல் எண் : 8

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானை` என்க. `சோதித்தற்கு மாலவனும் வல் ஏனமாய்க் கீழ்ப் புக்கு, மாட்டா- கில்லேன் அமா - என்றான்` என வினை முடிக்க. சோதித்தல்- அளந்தறிதல். ஏனம் - பன்றி. கில்லேன் - மாட்டேன். `அம்மா` என்னும் வியப்பிடைச்சொல் இடைக்குறைந்து நின்றது. `மாலவனும்- கில்லேன் - என்றான்` என்றதனால், `ஏனையோர் மாட்டாமை சொல்ல வேண்டுவதோ` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 9

கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இழிந்த துன்பமாகிய பெரிய கடலிலே தள்ளப்பட்டு, அதன் உள்ளே அழுந்தாமல் வேறிருந்து நுகர்கின்ற இன்பம் வேண்டும்` என்று விரும்புகின்றவர்களே - என்று எடுத்து, `தலைநின்மின்` என முடிக்க. நின்றால், `அத்தகைய இன்பம் கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். தள்ளுதலுக்கு `வினையால்` என்னும் வினைமுதல் வருவிக்க. `இருந்து நுகர்கின்ற` என ஒரு சொல் வருவிக்க. `துன்பக் கலப்பு இல்லாத இன்பம்` என்றபடி. அது வீட்டின்பமேயாம். விரவார் - கலவாதவர்; பகைவர். `கண்ட` என்றது `செய்த` என்றபடி. கண்டன் - வன்கண்மையுடையவன். `வன்கண்மை குற்றத்தின் மேலது` என்பது கருத்து.
தாழாது - தாமதியாமல். இறைஞ்சுதல் - தலை வணங்குதல். பணிதல் - அடியில் வீழ்தல். தலை, இடைச் சொல்லாதலின், `தலைநின் மின்` என்றது ஒருசொல் நீர்மைத்து. `அச்செயலிலே நின்மின்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 10

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தலையாய ஐந்து - மந்திரங்களுள் தலையாய ஐந்தெழுத்து, சாதித்தல் - கடை போகப் பற்றி முயலுதல். அஃது இங்குக் கணித்தலைக் குறித்தது. தாழ்தல் - வணங்குதல். தலையாயின - மேலான நூல்கள் `அருள் நூலும், ஆரணமும், அல்லாதும், அஞ்சின்- பொருள் நூல்களே` * ஆதலின் அவற்றை உணர்ந்தோர் திருவைந் தெழுத்தையே பற்றிச் சாதிப்பர் - என்றபடி. தலையாய அண்டம் - சிவலோகம். `தலையாயின உணர்ந்தோர் சாதித்துத் தாழ்ந்து கழல் காண்பர்` என வினை முடிக்க, இதனுள் சொற்பொருள் பின்வரு நிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 11

கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச் செம் மேனி எம்மான்` - சிவன். அவன் தனக்குவமையில்லாதவன்; நெருப்பினிடத்துள்ள ஒளிபோலும், சிவந்த மேனியை உடையவன். `அவனது கழலழணிந்த, சிவந்த பாதங்களைக் கண்டவர்களை வணங்குபவர்களது நிழலைக் கண்டாலே வினைகள் ஓடிவிடும் என்றால், அப்பெருமானை நாம் நமது கைகளால் மலர் தூவித் தொழுவதைப் பார்த்த பிறகு நம்மை வருத்துகின்ற நமது பழைய வினைகள் நம்மை நெருங்கி நிற்குமோ` என்க. `சிவன் அடியார்களையும், அடியார்க்கு அடியார்களையும் கண்டால் வினைகள் நிற்க மாட்டாது ஓடி விடும்` என்றபடி. `கழல், நிழல், தழல்` என்பவற்றின் ஈறு திரிந்தது செய்யுள் நோக்கி. உம்மை இரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது உயர்வு சிறப்பு. `போழ்தத்து` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. `வினை துன்னி நிற்குமோ` என மாறிக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங்காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.

பொழிப்புரை :

குறிப்புரை :

தொல்லை - பழமை. தாழாமே - தாமதி யாமலே. ஒல்லை - விரைவாக. கூற்று - யமன். காய்தல். உதைத்த லாகிய தன் காரியம் தோற்றிநின்றது. வாய்ந்து - (திருமேனியில்) பொருந்தி. `வணங்கி நினை` என்பதை `நினைந்து வணங்கு` என முன் பின்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 13

நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந்
தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன் நந்
தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நெஞ்சமே, மனையாளையும் மக்கள் தம்மை யும், `இங்கு ஒர் தஞ்சம்` என்று தேறி, அண்ட வாணன் அடித்தலம் நினையாது ஒழிதியோ` என இயைத்துக்கொள்க. மனையாளும், மக்களும் அம்மையார்க்கு இல்லையாதலின், `அவர்களைத் தேறி` என்றது, `அவர்களைத் தேறும் பிறரது மனங்களைப்போலவே நீயும் ஆகி` என்றது என்க. `சிவனதாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே... நெஞ்சமே`1 என அருளிச்செய்தார் ஞான சம்பந்தரும். `ஒழிதியோ` என்பதில் வினாப் பொருட்டாய ஓகாரம் தொகுத்தலாயிற்று, `கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டு கொண்ட - விடையவனே விட்டிடுதி கண்டாய்` 2 என்பதிற்போல. அவ்வோகாரத்தால், `அங்ஙனம் செய்தியாயின் கெடுவை` என்னும் குறிப்புப் போந்தது. கண்டாய், முன்னிலையசை. இங்கு - இவ்வுலகில். தஞ்சம் - புகலிடம். தேறுதல் - தெளிதல். ஓர் ஆறு, கங்கை. கங்கை யாறு புக்கது; ஆயினும் சடை நனைய வில்லை` என்றது சடைக்கு அதுபோதவில்லை என்றபடி. நொந்தாத- மிகுக்க வேண்டாத. `மிக எரிகின்ற` என்றபடி. அனையான் - போன்றவன். அண்டவாணன் - சிவலோகத்தில் வாழ்பவன். அடித்தலம் - திருவடியாகிய புகலிடம், `புகலிடம் ஆகாததை, ஆகும் என்று மயங்கிப் புகலிடம் ஆவதை விட்டொழியாதே` என அறிவுறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 14

அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.

பொழிப்புரை :

குறிப்புரை :

`அடித்தலத்தின் நெரித்தவாறு` என இயையும். இன், ஐந்தாம் உருபு. அரக்கன், இராவணன். `முரித்தவாறு என்` - என்றது, `பிழை நோக்கி ஓறுத்தல் வேண்டியோ` என்றபடி. ஒறுத்தபின் இசைபாடித் துதிக்க அருள்செய்தமையும் கேட்கப்படுவதால், `பிழை செய்தவரும் அஃது உணர்ந்து பணிந்தால், பிழையை நோக்காது அருள் செய்பவன் நீ` என்பதும் குறிக்கப்பட்டதாம். `ஆடி` நான்கும் பெயர்கள். அவற்றுள் முதற்கண் உள்ளதில் இகர விகுதி செயப்படு பொருட்டாயும் ஏனையவற்றில் அது வினைமுதற் பொருட்டாயும் நின்றது. ஆறு - கங்கை. `அனலோ` என்றாயினும். `அனலின்கண்` என்றாயினும் ஏற்கும் உருபு விரித்துக்கொள்க. `நீற்றின் கண்` என ஏழாவது விரிக்க. `நீ ஆடுபவன்; நீ அரக்கனது தோளையும் முடியையும் முரிக்கக் காரணம் என்ன? என வினை முடிக்க. `தலம்` மூன்றும், `இடம்` என்னும் பொருளன. `அடிகளாகிய தலம், முடியாகிய தலம்` என்க.

பண் :

பாடல் எண் : 15

நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா
டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே.

பொழிப்புரை :

குறிப்புரை :

தானவர் - அசுரர். நிரந்து - ஒருங்கே. உடனே- விரைவில். `தீயின்கண் நின்று` என உருபுவிரிக்க. சிலை - வில். தொடுதல் - வளைத்தல். இது, அம்பெய்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. திரங்கு - தசை மெலிந்து தொங்கிய. வல் வாய் - பிணத்தைத் தின்னும் வாய். பெயர்ந்து - புடை பெயர்ந்து. `நட்டம் செய்யும்` என இயைக்க. `பூதம் போய் நின்று தொழ` என மாறிக் கூட்டுக. `வந்து` என்பதனை, `போய்` என்றது இடவழுவமைதி. எனவே, `நின்பால் வந்து தொழ` என்றவாறாம். மொய் கழல் - பாதத்தைச் சூழ்ந்த கழல். புண்ணியன் - அற வடிவினன். `மதில் மூன்றும் வேவச் சிலைதொட்ட வாறு என்` என்றதற்கு முன்பாட்டில் `நீ முரித்தவாறு என்` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. பின்னிரண்டடிகள் ஆசெதுகை பெற்றன.

பண் :

பாடல் எண் : 16

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.

பொழிப்புரை :

குறிப்புரை :

`(யாம்) பொய்ந்நெறிகளில் சேராமல் விலகிய துடன், செய்த செயல்களும் புண்ணியங்களே. அஃது (எவ்வாற்றால் எனின்) எண்ணப்பட்ட ஐம்பொறிகளும் அம்மானுக்கு ஆட்பட்ட அன்பிற்கு இசைந்தவாயின` என இயைத்துப் பொருள் கொள்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். எண்ணிய - `ஐந்து` என்று எண்ணப் பட்ட. ஈற்று அகரம் தொகுத்தல். ஆல், அசை. கைம்மா - யானை. `ஈர் உரிவை`, வினைத் தொகை `உரித்த தோல்` என்பது பொருள். மூவுருவம் - மும்மூர்த்தி உருவம். `அன்பிற்கு` என நான்காம் உருபு விரித்து, `அன்பு செய்தற்கு` என உரைக்க. `ஐம்பொறிகள் அன்பு செய்தற்கு இசைந்தன` என்றமையால், `இசையாது மாறிச் செல்லுதலே அவற்றின் இயல்பு` என்பதும், `அவற்றை அவ்வாறு இசையச் செய்தல் வேண்டும்` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. `ஈருரிவை, மூவுருவம்` என்பது எண்ணலங்காரநயம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 17

அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட்
டா ததுவேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந் தேறுவதே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`கொல், ஐய இடைச்சொல். அதனால், அடையு மாற்றை நீரே அருளுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சமாயிற்று. `ஐயரே, நும் மேலது` என முன்னிலையை வருவித்து, `நும்மைப் பிறர் அன்பால் அடைவது எவ்வாறு கொல்` என முடிக்க. ஓர் அரவு, முடி மேல் உள்ளது. ஆடு அரவு - படமெடுத்து ஆடுகின்ற பாம்பு. `ஆகவே அது சீறுகின்றது` என்றதாம். `முன்பு ஆயின` எனப் பிரித்து, `தலை ஓடுகள்` என முடித்து, `அவை கோத்து` என வேறெடுத்துக் கொண்டு உரைக்க. `கோத்து ஆர்த்து, அணிந்து, உகந்து ஏறுவது ஏர் ஏறு` என்க. ஏறு - இடப. `அது பாய்வதால் அச்சம் உண்டாதலுடன், யானை மீதும், குதிரை மீதும் ஏறாமல், இடபத்தின்மேல் ஏறுவதால், நன்கு மதிக்கவும் இயலவில்லை` என்பதாம்.
`கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ`1
என்றது காண்க. உகத்தல் - விரும்புதல். `பாம்பும், இடபமும் பகையா யினாரைச் சீறுதலும், பாய்தலும் செய்யுமேயல்லது, அன்பரை ஒன்றும் செய்யா` என்பதும், `யானை குதிரைகளின் மேல் ஏறியும், மணி மாலைகளை அணிந்து யாம் பெருமை பெற வேண்டுவதில்லை` என்பதும், `எவ்வாறு கொல்` என்னும் ஐயத்தை நீக்கும் விடைகள் என்பது கருத்து. `பூணாணாவதோர் அரவங்கண் டஞ்சேன்` 2 என்று அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 18

ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறொர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.

பொழிப்புரை :

குறிப்புரை :

`எம்பெருமானும், அவிர் சடையாரும் ஆகிய நஞ்சுண்டார் தமக்கு ஏற, ஏறலால் மற்று இல்லையே` என முடிக்க. `பெருமான்` என்பது ஒருமையாயினும் உயர்த்துக் கூறும் சொல்லாதலின் பன்மையோடு மயங்கிற்று. `இல்லையே` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், `உறவாகவும் விரும்பிலர்` என்னும் குறிப்பினதாய் நின்றது. `ஆறு` என்றது ஆகுபெயராய் அதன் நீரைக் குறித்தது. வேறோர் நாகம், உயர்ந்த பாம்பு, அது `வாசுகி` என்பது. `உமிழ்ந்த நஞ்சு, சூழ்ந்த நஞ்சு` எனத் தனித்தனி இயைக்க. `அமரரை` என்னும் இரண்டாம் உருபு தொகுத்தலாயிற்று. `அமரர் சூழ்ந்த` என்பது பாடம் அன்று, முன்னைப் பாட்டில் கூறியவாறு, `ஏற்றையே உகந்து ஏறுவது இல்லாமையாலன்று; விரும்பாமையால்` என்பது இங்குக் கங்கையைத் தாங்கி மண்ணுலகினரைக்காத்தமை, நஞ்சை உண்டு விண்ணோரைக் காத்தமை இவற்றைக் குறித்த குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப
தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பொறாதுட
னேகொண்ட உத்தமரே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`இணை யாதும் இன்றி` என்றது, `காளைகளைப் பயன்படுத்துகின்றவர்கள் இரண்டை இணைத்தே பயன்படுத்துவர் ஆகலின் அவ்வாறு இணைத்தற்கு ஒன்று கிடையாமையால் ஒரு காளையையே உடையவராய் இருக்கின்றார்` என்றபடி.
`இனி ஒற்றைக் காளையையே பயன்படுத்துவதாயினும் உமாதேவி ஊர்வதற்கு மற்றொரு காளை இன்றியமையாது வேண்டும்; அஃது இல்லாமையால், அவளையும் தமது ஒரு காளையின்மேலே உடன் ஏற்றிக் கொண்டு வருகின்றார்` என மேலும் குறிகூறியபடி. `இத்தகைய இலம்பாடு (வறுமை) உடையவர், அவருக்கென்றே நாம் என்றும் பணிசெய்திருப்பினும், `எமக்கு என்று என்று ஒன்று இரந்தால், அதனை ஈய வல்லவராவரோ` - என ஐயுறுகின்றோம்` என்பது இப்பாட்டிற் கூறப்பட்ட பொருள். இதவும் நிந்தாத் துதி. `ஒருநாள் அருளுங்கொல்` என்றமையால், `எந்நாளும் அருள மாட்டாது வாளாதே இருப்பரோ` என்பதும் போந்தது. ஆம், அசை. `எமக்கு என்று` என்பதன் பின், `ஒன்று` என்பது வருவிக்க. `சொன்னால்`` என்றது, `வேண்டினால்` என்றபடி. `பிள்ளை` என்றது, இளமையைக் குறித்தது. `இணை யாதும் இன்றி` என்பது, `தனியே சுமக்கின்றது` என்பதைக் குறித்தற்கும் `வேறு ஒப்பதுஒன்று பெறாது` என்பது இணைத்தற்கு இல்லை? என்பதைக் குறித்தற்கும் கூறியன ஆகலின், கூறியது கூறல் ஆகாமை யறிக. தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. உத்தமர் - எல்லாரினும் மேலானவர். என்றது, `மற்றொரு காளையை இவர் கொள்ளாமைக்குக் காரணம் வறுமையன்று; உமையாளையும் ஒரு காளைமேல் உடன் கொண்டு செல்ல விரும்புதலேயாம்` என்பதை உணர்த்தி, `ஆகவே, `இவர் எம்மைத் தம் அடிமையென்று கருதியிரங்கி, வேண்டியவற்றை ஈபவரே எனவும் குறித்தவாறு. நம்பியாரூரரும் இவ்வாறே, முன்னர், `ஊர்வது ஒன்று (ஏ) உடையான்`* எனக் கூறிப் பின்னர், `உம்பர் கோன்` என அவனது பெருமையுணர்த்தியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 20

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

பொழிப்புரை :

குறிப்புரை :

உத்தமராய் - கல்வி, செல்வம், அதிகாரம், முதலியவற்றில் ஒன்றாலேனும், பலவற்றாலேனும் உயர்ந்தவர்களாய். `வாழ்வாரும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. உலந்தக்கால் - இறந்துவிட்டால். `உயர்ந்தவர்களாய் வாழ்ந்தவர் களாயிற்றே` என்று எண்ணுதல் இன்றி, எல்லாரோடும் ஒப்பச் செத்த மரத்தையே (காய்ந்த விறகையே) அடுக்கி, அவற்றோடு ஒன்றாகச் சேர்த்து! உறவினர்கள் தீத்து (எரித்து) விடுவார்கள் `இவ்வளவே இவ்வுலக வாழ்வு` என்றபடி. `ஆகையால் இந்த வாழ்விலே ஆழ்தலை யுடைய நெஞ்சே, உன்னையும் அவ்வாறு செய்தற்கு முன், சிவனது புகழை அறிந்தோர் சொல்லக் கேள்` என்க. `கேட்டால், `நிலையான வாழ்வைப் பெறுவாய்` என்பது குறிப்பெச்சம். `உத்தமன்` என்பதற்கு, முன்னைப்பாட்டில் `உத்தமர்` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. `ஆழி` இரண்டில் முன்னது, `கடல்` என்னும் பொருட்டாயும், பின்னது `ஆழ்தல் உடையது` என்னும் பொருட்டாயும் நின்றன. `கிளர்ந்து கேள்` என முன்னே கூட்டி, `ஊக்கம் கொண்டு கேள்` என உரைக்க. இங்ஙனம் உரைக்கவே, `ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைத்தாகாது` என்பது பெறப்பட்டது.
`இரட்டை மணி மாலை இருபது பாட்டுக்களால் அமைதல் வேண்டும்` என்பதனால் திருக்கடைக் காப்புக் கூறிற்றிலர். இப்பிரபந்தம் முழுவதும் அந்தாதியாய் வந்து மண்டலித்தவாறு காண்க.
சிற்பி