பட்டினத்து அடிகள் - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை


பண் :

பாடல் எண் : 1

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற் றாது
வலம்புரி நெடுமால் ஏன மாகி

நிலம்புக்
காற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளித்
திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து

மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து

பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து
நச்செயிற் றரவக் கச்சையாப் புறத்துப்
பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்துமீ துறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங்

கேழற் கோடும் வீழ்திரன் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து

செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து

மூவிலை வேலும் பூவாய் மழுவுந்
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்

தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்
இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று

குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று
எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்
அரவும் மதியமும் விரவத் தொடுத்த
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்

காணா வண்ணங் கருத்தையுங் கடந்து
சேணிகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வமாலை

நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
இனைய வண்ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒருவயிற்றாகி

வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்
குலகம் ஏழும் பன்முறை ஈன்று

மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள் நின்
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இத்திருப்பாட்டு திருவிடைமருதூர்ப் பெருமானை மாதொரு பாதி (அர்த்த நாரி) வடிவினனாக வருணித்து விளித்துக் கருத்தை விண்ணப்பிக்கின்றது.
அடி-17 ``ஒரு பால் திருவடி`` என்பதை முதலில் வைத்து, `மலர்ந்து, சிவந்து, புனைந்து, நிமிர்ந்து, அருளித் திகழ்ந்துளது` என்க.
தெய்வத் தாமரை - தேவலோகத் தாமரை.
`அதனது செவ்விபோல` என்க.
செவ்வி - மலரும் நேரம்.
அஃது ஆகுபெயராய், அப்பொழுது மலரும் மலர்ச்சியைக் குறித்தது.
`இன்` உவம உருபு.
வாடாமலர் - கற்பக மலர்.
தோடு - இதழ்.
இது பண்பு பற்றிய உவமையாய் வந்தது.
அலம்ப - ஒலிக்க; இவ் எச்சம் இதன் காலத்தை உணர்த்தி நின்றது.
எனவே `ஒலிக்கும் இடத்துத் தான் கழலைப் புனைந்து` என ஆற்றல் பற்றிக் கொள்ளப்படும்.
இரண்டும் மாறி மாறி ஒலியாது, ஒருங் கொலித்தல் பற்றி இவ்வாறு கூறினார்.
இது மற்றொருபால் திருவடிக் கும் ஒக்கும்.
கூற்று - கூற்றுவன்.
யமன்.
`நெடுமால் போற்றாது ஏனமாகி அகழ` என்க.
`திருவடி, போற்றிக் காணத் தக்கதல்லது, முயன்று காணத் தக்கதன்று` என்றற்கு, ``போற்றாது`` என்றார்.
``தொழுவார்க்கே யருளுவது சிவபெருமான் எனத் தொழார்`` 1 எனச் சேக்கிழாரும் அருளிச் செய்தார்.
நிமிர்ந்து - அப்பாற்பட்டு.
அடி- 17 ``ஒருபால் திருவடி`` என்பதை, ``மறுவில் கற்பகத்து உறு தளிர்`` என்பதற்கு முன்னே வைத்து, `சேந்து, செவ்வித்தாகி, நொந்து, சிவந்து திருவொடும் பொலியும்` என்க.
அகம் - உள்ளிடம்.
சேந்து - சிவந்து.
கற்பகத்தின்கண்` என உருபு விரிக்க.
வழுவழுப்புத் தோன்றுதற் பொருட்டு.
நெய்யில் தோய்த்தல் கூறப்பட்டது.
செவ்வி - பக்குவம்.
நூபுரம் - சிலம்பு.
``கிடப்பினும்`` என்னும் அனுவாதத்தால் கிடத்தல் பெறப்பட்டது.
மட வரல் மகளிர் - மடப்பம் (இளமை) வருதலை உடைய மகளிர்.
வீழ்த்த - தூவிய.
சின்னம் - சிறுமை.
எஞ்ச- தோற்க.
இது மென்மை மிகுதியைக் கூறியது.
எஞ்சாத் திரு - குறையாத அழகு.
பொலியும் - விளங்கும்.
அடி - 21 ``ஒருபால் திருஇடை`` என்பதை, ``நீலப் புள்ளி`` என்பதற்கு முன்னே கூட்டி, `விரித்து அசைத்து, யாப்புறுத்துப் பொலிந் துளது` என்க.
வாள் கூர்மை.
உகிர் - நகம்.
`புள்ளியையும், உகிரையும் உடைய வேங்கை` என்க.
கலிங்கம் - உடை.
அசைத்து - உடுத்தி.
யாப்பு உறுத்து - இறுகக் கட்டி.
அடி-24 ``ஒருபால் திரு இடை`` என்பதை ``இலங்கொளி`` என்பதற்கு முன்னே கூட்டி, `விரித்து, உறிஇ சாத்திய மருங்கிற்று ஆகும் என்க.
அரத்தம் - செம்மை.
ஆடை - பட்டாடை.
உறீஇ - உறுவித்து; பொருந்தப் பண்ணி.
இரங்கு - ஒலிக்கின்ற.
மணி மேகலை - இரத்தினங்களால் ஆகிய வடங்களின் தொகுதி.
மருங்கிற்று - பக்கங்களையுடையது.
அடி- 29 ``ஒருபால் ஆகம்`` என்பதை செங்கண் அரவும்`` என்பதற்கு முன்னே கூட்டி, ``இடம் கொண்டு`` என்பதை `இடம் கொள` எனத் திரித்து, `அருவம், ஆமையும், கோடும், அக்கும், நூலும் இடம் கொளப் புனைந்து வெற்பென்னத் திகழும் என்க.
ஆகம் - மார்பு.
ஆமை - ஆமை ஓடு; ஆகுபெயர் கேழல் - பன்றி, அக்கு - எலும்பு.
நுடங்குதல் - துவளுதல்.
நூல், முந்நூல்.
தவளம் - வெண்மை.
நீறணிந்தது ஓர் பவள வெற்பு, இல்பொருள் உவமை.
அடி 34 ``ஒருபால் ஆகம்`` என்பதை, ``வாரும் வடமும்`` என்பதற்கு முன்னே கூட்டி, `புனைந்து, அணிந்து, எழுதித் தளரா முலையுடன் பொலியும்` என்க.
வார் - கச்சு.
வடம் - மணி வடங்கள்.
ஏர் - அழகு ``புனைந்து`` முதலிய மூன்றும், `புனையப்பட்டு, அணியப்பட்டு, எழுதப்பட்டு` எனச் செயப்பாட்டு வினைப்பொருளவாய் நின்றன.
`குங்குமத்தால்` என மூன்றாவது விரித்து, `கோலம் எழுதி` என்க.
``பொற்றாமரை`` என்பதும் இல்பொருள் உவமை.
முகிழ் - அரும்பு.
அடி 38 ``ஒரு பால் திருக்கரம்`` என்பதை, ``அயில் வாய் அரவம்`` என்பதற்கு முன்னே கூட்டி, `அணிந்து தாங்கிச் சிறந்துளது` என்க.
அயில் - கூர்மை.
வாய் - பல்; ஆகுபெயர்.
வயின் வயின் - முன் கை.
முழங்கை, தோள் ஆகிய இடங்கள்.
அணிந்து - பூண்டு.
பூ வாய்- மெல்லிய வாய்.
கூர்மை மிகுதியால் மெல்லிதாயிற்று.
தமருகம் - உடுக்கை.
அமர்தர - பொருந்த.
அடி - 41 ``ஒருபால் திருக்கரம்`` என்பதை, ``செறிந்த`` என்ப தற்கு முன்னே கூட்டி, `விளங்கித் தரித்துத் திகழும்` என்க.
செறிந்த - அழுந்தப் பற்றிய.
சூடகம் - கங்கணம்.
``விளங்கி`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.
கழங்கு - கழற்சிக் காய் அளவாகச் செயற்கையாகச் செய்யப்பட்ட விளையாட்டுக் கருவி.
ஒம்மெனல் - உயர எறிதல்.
அம் மெல் கிள்ளை - அழகுபட மெல்லப் பேசும் கிளி.
அடி-42,43 ஒருபால் திருநெடு நாட்டம் இரவியும், எரியும் விரவிய வெம்மையின் விளங்கும்` என்க.
இரவி - சூரியன்.
எரி - அக்கினி இவையிரண்டும் சிவபெருமானுடைய இரண்டு கண்கள்.
எனவே, மேல், ``நாட்டம்`` என்றது பன்மைப் பொருட்டாய் இவ்விரு கண்களையும் குறித்தது.
இரவியும், எரியும் வெம்மையோடு கூடி விளங்கும்` என்க.
அடி - 48 ``ஒருபால் நாட்டம்`` என்பதை ``பாலிற் கிடந்த`` என்பதற்கு முன்னே கூட்டி, `நீலம் போன்று குவளையிற் குளிர்ந்து, இரங்கிப் புரக்கும்` என்க.
நவ்வி, மானின் வகை.
நீலம் - நீல மணி.
``கிடந்த`` என்றது, `தனது நிறம் வேறுபடாது கிடந்த` என்றபடி, `நீல மணியைச் சோதித்தற்கு அதனைப் பாலில் இட்டால், பாலையும் நீல நிறமாகத் தோற்றுவித்துத் தான் நிறம் மாறாதிருப்பதே முழுமையான நீலம்` என்பர்.
எனவே, ``பாலிற் கிடந்த நீலம்`` என்றது, `முழுநீலம்` என்றதாம்.
குண்டு - ஆழம்.
``நிறம் பயின்று`` என்பதை, ``நீலம் போன்று`` என்பதன் பின் கூட்டுக.
எம்மனோர் - எம்மை போலும் அடியவர்.
``இரங்கி`` என்றது, சிறப்புக் கருணை காட்டுதலை.
`ஏழும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது.
ஏழுலகத்தையும் புரத்தல் பொதுக் கருணை.
அடி- 57 ``ஒருபால் திருமுடி`` என்பதை, ``நொச்சிப் பூவும்`` என்பதற்கு முன்னே கூட்டி, `பூவும், மத்தமும், போதும், தும்பையும் தொடுத்த மாலை சூடி, விரவி, சடிலமொடு கடந்து, சேண் இகந்து உளது` என்க.
மத்தம் - ஊமத்தை.
``பச்ை\\\\\\\\u2970?`` என்றது முதலுக்காகிய அடை.
மத்தமும், தும்பையும் அவற்றது பூவைக் குறித்தலால் முதலாகு பெயர்கள்.
`யாறு` முதலிய நான்கும் விரவி` என்க.
விரவி - விரவப் பட்டு.
அன்றி, `இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது` எனினும் ஆம்.
சூடா மாலை - பிறரால் சூட்டப் பெறாத மாலை, பீடு கெழு - `பெருமை பொருந்திய சடிலம்` என்க.
நெருப்பின் - நெருப்பால்.
உருக்கிளர் - நிறம் விளங்குகின்ற.
சடிலம் - சடை.
`சடிலமொடு உளது` என்க.
கருத்தையும் - யாவர் கருத்தையும்.
சேண் இகந்து - ஆகாயத்தின் நீங்கி.
அடி-63 ``ஒருபால் திருமுடி`` என்பதை, ``பேணிய`` என்ப தற்கு முன்னே கூட்டி, `மகளிர் வாங்கி வைத்துப் புனைந்த மாலை வளைஇ, மேல் நிவந்து, திளைப்பப் பொலியும்` என்க.
பேணி.
- `போற்றிக் காத்த கற்பு` என்க.
தெய்வ மகளிர் ஆதலின் அவரது கற்பு, ``கடவுட் கற்பு`` எனப்பட்டது.
பொற்பூ - பொன்னால் ஆகிய பூ.
புனைந்த - தொடுத்த.
வளைஇ - சுற்றப்பட்டு, நிவந்து - உயர்ந்து.
`தேன்` என்பதும் ஒருவகை வண்டேயாம்.
கிண்டுபு - கிளறி.
திளைப்ப- இன்புற.
திரு - அழகு.
இதுகாறும் ``ஒருபால், ஒருபால்`` எனக் கூறிவந்தவற்றுள் முன்னவையெல்லாம் வலப்பாலையும், பின்னவையெல்லாம் இடப் பாலையும் குறித்தன.
இங்கு அடி -64-ல் `வண்ணம்` என்றது தன்மையை.
நினைவருங் காட்சி, நினைத்தற்கு இயலாத (மனத்தைக் கடந்த) தோற்றம்.
இரு வயின் உரு - இரண்டிடத்தில் வேறு வேறாய் இருத்தற்குரிய வடிவங்களை ஒரு வயிற்று ஆகி - ஓர் இடமே உடையதாம்படி ஆகி.
``வாணுதல்`` என்பது பின்னர் வருதலால் முன்னர் `ஆண்` என்பது வருவித்து, `வலப்பால் ஆண் பாகம் இடப் பால் வாணுதல் பாகத்தை நோக்க, அது நாணுதல் செய்ய` என்க.
தைவரல், வருடல் இரண்டும் ஒருபொருட் சொற்களாயினும் சிறிதே பொருள் வேற்றுமையுடையன.
`கரம் வருட, மெய்ம் மயிர் பொடித்து என்க.
மெய், இருபால் மெய்யும்.
ஆங்கு - அவ்வாறு `அவ்வாறு உலகம் ஈன்று` என்றதனால், `மேலெல்லாம் பலபடக் கூறிய வாறு, இருவயின் உருவும் ஒருவயிற்று ஆக இயைவன எல்லாம் உயிர்கள் மாட்டு வைத்த கருணை காரணமாக மேற்கொண்ட செயற்கையாவன அல்லது, தமக்கே இயல்பாக உடைய இயற்கையல்ல`` என்பது கூறப்பட்டதாம்.
போகியாய் இருந்து உயிர்க்குப்
போகத்தைப் புரிதல் ஒரார்
எனச் சாத்திரம் கூறிற்று.
சிறைக் கருப்பாசயம் - கருப்பாசயமாகிய சிறை; உருவகம்.
ஆசயம் - தங்குமிடம்.
கருப்பம் - கரு கருப்பாசயம்- கருப்பம் தங்கியிருக்குமிடம்; கருப்பப் பை.

பண் :

பாடல் எண் : 2

பொருளுங் குலனும் புகழுந் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் ஒருவர்
கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
மருதாவென் பார்க்கு வரும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குலம் - குடி.
``ஒழுக்கம் உடைமை குடிமை`` 2 என்ப ஆகலின், குலமாவது ஒழுக்கமேயாம்.
திறன் - கருதியதை முடிக்கும் ஆற்றல்.
அருள் - எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்கம்.
இதனை யுடையார்க்கு இறைவனது அருள் தானே கிடைக்கும்.
`ஒருவரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
கருதா - விரும்பாத, என்பு ஆர்க்கும் - எலும்பைப் பூணுகின்ற.
தொல்லை - பழைமை; அநாதி.
வரும் - கிடைக்கும்.

பண் :

பாடல் எண் : 3

வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி
லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென் றிரவேன்
ஒருவரை யாதொன்றுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இறந்தும், பிறந்தும் வருந்தேன்` என்க.
``புகழ் மா மருதில்.
இருந்தேன்`` என்பதை முதற்கண் வைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 4

ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத்
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக்
குயிலென மொழியும் மயிலியல் சாயல்

மான்மற விழிக்கும் மானார் செல்வத்
திடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடாராப் பூரணபுராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள்

சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக
யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
நனந்தலை யுலகத் தனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து
யாயுறு துயரமும் யானுறு துயரும்
இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும்
நீயல தறிகுநர் யாரே அதனால்
யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்

றுற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா
உள்ளமொன் றுடைமை வேண்டும் அஃதன்றி
ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று

தானல தொன்றைத் தானென நினையும்
இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம்
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிற ருளரோ இறைவ கற்பம்

கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரையெயிற் றுரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-30 ``இறைவ`` என்பதையும், அடி-33 ``நஞ்சு பொதி.
.
.
கண்ணுதலோயோ`` என்பதையும் அடி-12 யோக நாயக`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க.
`ஒன்றினொடு ஒன்று சேர்ந்து` என ஒருசொல் வருவிக்க.
`முகிலைத் தடவி` எனவும், `மாளிகையில் வகுத்த` எனவும் கொள்க.
`செம்மை வீதி, பூ இயல் வீதி` எனத் தனித் தனி இயையும்.
பூ இயல் - அழகு விளங்குகின்ற.
``மான் ஆர்`` என்பதில் `மான்` என்னும் அஃறிணை யியற் பெயர் இங்குப் பன்மைப்பாலதாய் உவம ஆகுபெயராகி மகளிரைக் குறித்தது.
வீதி ஆர் - வீதியின்கண் நிறைந்த.
மாற - தோற்க.
புராணன் - பழையோன்.
சோதி - திரட்சியான ஒளி.
சுடர் - கதிர் ``யோகம்`` என்பது வீட்டு நெறியைக் குறித்தல் வழக்கு.
நனந்தலை - அகன்ற இடம்.
அனந்தம் - முடிவின்மை, அளவின்மை.
யோனி - பிறப்பு வகை.
``பிறந்துழிப் பிறவாது`` என்றது `எல்லா யோனிகளிலும் பிறந்து` என்றபடி.
கறங்கு - காற்றாடி.
தோற்றும் பொழுது - பிறக்கும் பொழுது.
ஈற்றுத் துன்பத்து - கருவுற்ற பொழுதில் உளவாகின்ற துன்பங்களில்.
யாய் - என் தாய்.
அறப் பெரிது - மிகப் பெரிது.
அஃதான்று - அதுவன்றி.
என்றது, `பிறவித் துன்பத்தை ஆற்றாமை யேயன்றி, வேறும் இடர்கள் உள` என்றபடி.
`பிறப்பில் பெருமானாகிய உன்னைப் பற்றும் நெறியிலல்லது.
பிறந்தும், இறந்தும் உழல்கின்ற ஏனைத் தேவரைப் பற்றும் நெறிகளில் பிறவியறுதல் கூடாது` என்பார்.
உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லை
என்றார்.
``சிவனலால் முத்தியிற் சேர்த்துவார் இலை`` என்றார் காஞ்சிப்புராணத்திலும்.
அந்நெறிக்கு - அந்நெறியில் நிற்றற்கு.
ஆண்டு - அதனைப் பற்றுமிடத்து.
தொகுக்கப்பட்ட இழிவு சிறப் பும்மையை விரித்து, `ஒன்றிலும் வேண்டலும் வெறுத்தலும் படரா ஓர் உள்ளம் உடைமை வேண்டும்`` என்க.
அடி-27 `எனது உள்ளம் அஃதன்றி, நின்று, நினையும் இது; ஆதலின் இதுகொடு நின்னை நினைப்பது எங்ஙனம்` என்க.
`அஃது, இது` என்பன, `அன்னது, இன்னது` என்னும் பொருளவாய் நின்றன.
இன்னதாகிய உள்ளத்தைக் கொண்டு உன்னுடைய நெறியில் நிற்கக் கருதினேன் யான் ஆதலின், ``கற்புணையாகக் கடல்நீர் நீந்தினர் எற் பிறர் உளரோ`` என்றார்.
கருதினர் - கருதி முயன்றவர்.
`என்னையன்றிப் பிறர் உளரோ`` என்க.
`எனது மடமை யிருந்தவாறு இது` என்றபடி.
`இங்ஙனமாயினும் வேண்டும்; வேண்டும்; வேண்டும்` என்க.
கற்பம்- பிறந்து இறந்துவரும் நெடுங்காலம், `நின்னை நினைத்தல்` என்க.
`நெஞ்சு நிற்கவும்` என இயைக்க.
காரணம், காரியம் இரண்டனுள் காரியங்களை முன்னரும், `காரணங்களைப் பின்னருங் கூறியது முதலாவதாகிய நெஞ்சு நிலைபெறுதலே இல்லாத யான் பின்னர் விளையத் தக்கனவாகிய பயன்களைப் பெறுதல் எவ்வாறு` எனத் தமது எளிய நிலையை வெளிப்படுத்தி, `எனக்கு அருள்புரிதல் வேண்டும்` என வேண்டிக் கோடற் பொருட்டு.
உறை - துளி.
`நஞ்சு உறை பொதி எயிற்று உரகம்` என்க.

பண் :

பாடல் எண் : 5

கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் ஒண்ணை
மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றுக்
கருதவப்பால் உண்டோ கதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நந்தமக்கு, மூலம்`` என்பவற்றை முன்னருங் கூட்டிப் பொருள் கொள்க.
மூல எண் - முதற் கருத்து.
மூல எழுத்து - அக்கருத்தைத் தோற்றுவிக்கின்ற நாதம்.
மூலமாவனவற்றைக் கூறவே பின் பின் அவை வழியாகத் தொடர்ந்து தோன்றும் எண்ணும் எழுத்தும் அடங்கின.
ஒண் ஐ - எல்லாம் வல்ல தலைவன்.
`ஐயாகிய மருதவப்பன்` என்க.
அப்பால் - இவ்வுடல் நீங்கிய பின்பு.
கருத - `அடையற் பாலது இது` எனத் துணிதற்கு.

பண் :

பாடல் எண் : 6

கதியா வதுபிறி தியாதொன்றும்
இல்லை களேபரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப்
போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல்
லாலிதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ
லேசென்று வாழ்த்துவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கதியாவது பிறிது யாதொன்றும் இல்லை`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக.
``பிறிது`` என்பதன் முன், பின் வருகின்ற கழலைச் சுட்டுவதாகிய `அஃது` என்பது வருவித்து, `அஃதன்றிப் பிறிதியா தொன்றும் இல்லை; அதனால்` என உரைக்க.
களேபரம் - உடம்பு.
`களேபரமாகிய பொதி` என்க.
இன், வேண்டா வழிச் சாரியை.
``பொதியாவது`` என்பதில் `ஆவது` என்பது எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபாய் வந்தது.
``சுமந்தால் விழப்போம்`` என்பது, `நாம் விழாமல் போற்றிக் காத்துச் சுமந்தாலும் நில்லாது விழவே செய்யும்` என்றபடி.
`சுமந்தாலும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
``போம்`` என்றது, `செய்யும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா
துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபலபகர்ந்தேவி
ஆரா உண்டி அயின்றன ராகித்

தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்

பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும்

மேவுழி மேவல் செய்யாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்

ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்

அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்
தினிது மொழிந்தாங் குதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேளிகழ்ந்து
இகமும் பரமும் இல்லை என்று
பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து
யோசனை கமழும் உற்பல வாவியில்

பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக

பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையாதுன் னருளினை நினைந்து

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்

கிடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி ஒவாத்
தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்

பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின்
நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க்
கடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்
றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அடியரல்லார் செல்வச் செருக்கால் இறுமாந்து கண்டபடி வாழும் செல்வ வாழ்க்கையின் இழிவினையும், அடியராயினார் திருவருளில் அடங்கி நெறிநின்று வாழும் வறுமை வாழ்க்கையின் உயர்வையும் ஒப்பிட்டுத் தெரிக்கின்றது.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
என்பன பொது மறைத் திருமொழி.
``உயிர்`` இரண்டும் ஆகுபெயராய் அவற்றது துன்பத்தைக் குறித்தன.
வெஃகி - விரும்பி.
அவி - அடப்படுவன.
அடுநர்க்குச் சுவை பல பகர்தலாலது, `இதை இதை இன்று சமை, இப்படி இப்படிச் சமை` எனக் கட்டளையிடுதல்.
ஆரா உண்டி - வயிறு நிறையினும் சுவை மிகுதியால் மனம் நிறையாது அளவின்றி உண்ணும் உணவு.
தூராக் குழி - தூர்க்கும் பொழுது தூர்ந்து விட்டது போலத் தோன்றிப் பின் வெறிதாகி, ஒரு நாளும் தூராத குழி; வயிறு.
பாரா - பாராது இதனை, `கல்வியும்`` என்பதன்பின்னர்க் கூட்டுக.
விழுப்பம் - சில காரணங்களால் தமக்கு அமைந்த பெருமை.
குலம் - குடிப் பிறப்பு.
ஒழுக்கம் - முன்னோர் ஒழுகி வந்த நல்லொழுக்கம்.
கல்வி - பெற்றோராலும், ஆசிரியராலும் வற்புறுத்திக் கற்பிக்கப்பட்ட கல்வி.
இவைகளைப் பாராது அஃதாவது, `இவை வீணாவதை எண்ணாமல் நன்மூதாளரைஉறாப்பேசி` என்க.
உறாப் பேசுதல் - அன்பால் உளம் பொருந்துதல் இன்றிப் பேசுதல்.
எனவே கடிந்து பேசுதலாம்.
கூவுதல் - அழைத்தல்.
``கூய்`` என்பதை, `கூவ` எனத் திரிக்க.
`தொகுதியைப் பேசுதல் போலப் பேசி` என்பதாம்.
இன், உவம உருபு.
புன்மை - கீழான செய்திகள்.
தன் புல்லர் - தனக்கு நண்பராய் உள்ள அற்பர்.
`அற்பர்` என்றதனால், அத்தகையோரே அவருக்கு நண்பராதல் குறிக்கப்பட்டது.
தேறி - தெளிந்து; கைவிடாது காப்பாற்று வான் ` என நம்பி.
`அந்நிலையில்` என உருபு விரித்து, அதன்பின், ``கொண்டோள் ஒருத்தி`` என்பதைக் கூட்டுக.
கொண்டோள் - கொள்ளப்பட்டோள்.
`ஆயினும் அவள்பால் மேவுழி மேவல் செய்யாது` என்க.
மேவுழி - சொல்ல வேண்டிய காலத்தில்.
உண்டு வேட்டு இருத்தற்கு, `அவள்` என்னும் எழுவாய் வருவிக்க.
எள்ளைக் கொடுத்து, அதன் அளவுக்கு எண்ணெய் வாணிபரிடம் எண்ணெய் பெறுதல் அக்காலத்து வழக்கம்.
அவ்வாணிபர் அந்த எள்ளின் அளவுக்குச் சிறிது மிகுதியாகவும் எண்ணெய் கொடுக்க உடம்படார்.
தள்ளாது - பொருள் கொடுப்பின் யாரையும் விலக்காமல்.
`அன்பு உண்டாகக் காரணம் இல்லையாயினும், அருளேனும் உண்டாகப் பெறுவரோ எனின் அஃதும் இல்லை` என்றற்கு விலை மாதரை ``அருள் இல் மடந்தையர்`` என்றார்.
ஆற்றல் - ஆற்றுதல்; பொறுத்தல்.
பொறுக்கப்படுவது ஆசையின் வேகம்.
இதனை, ``கேட்டு`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
வேற்றோர் - அயலார்.
பிழை வழிபாராது- குற்றமான நெறியாதலை நோக்காமல்.
நச்சி - விரும்பி நல்கூர் - வறுமையுற்ற.
விச்சையின் படைத்த - அவர்களது அறிவில் பதியும்படி தோற்றுவித்த, காட்சி - மெய்ப்பாடுகள்.
தாளின் ஆற்றல் - நடப்பன வாகிய கால்களின் உரம்.
கேள் - சுற்றம், இகம் - இம்மை.
அது இம்மைக்கண் எய்தற்பாலதாகிய புகழைக் குறித்தது.
பரம் - மறுமை.
பயன் இன்று - பயன் இல்லாமல்.
பட்டிமை - கட்டுப்பாடின்றி வேண்டியவாறே ஒழுகும் தன்மை.
பயிற்றி - பலகாலும் மேற்கொண்டு ``ஒருவர்`` என்பது உன்னுவார் கருத்துப் பற்றி வந்ததாகலின் அது முன்னர்ப் போந்த ஒருமைச் சொற்களோடு இசையாது வேறு நின்றது.
நனை - அரும்பு.
உற்பலம் - நீலோற்பலம், பாசடை- பசுமையான இலை.
பார்ப்பு - குஞ்சு.
``மருதம்`` இரண்டில் முன்னது வயல், நிலம்.
வைப்பு - சேம நிதி.
முத்தித் தாள - முத்தியாகிய திருவடியை உடையவனே.
மூவா - அழியாத.
``மருத வாண, சுருதி நாயக, முத்தித் தாள, முதல்வ`` என்பவற்றை முதற்கண் கொண்டு உரைக்க.
ஒக்கல் - சுற்றம்.
திரு - செல்வம் ``மறுத்தனர்`` என்பது முற்றெச்சமாய் நின்றது.
சின்னம் - சிறுமை.
சீரை - மரவுரி.
துன்னல் - கீளோடு சேர்த்துத் தைத்தல்.
அறுதல் - நெய்யப்பட்ட பின் வேறாய் நீங்குதல்.
பெறுவது - கிடைத்த ஒன்று.
சிதவல் - உடைதல்.
உதவுழி - கிடைக்குமிடத்தில்.
படுதரைப் பாயல் - எதிர்ப்பட்ட நிலமாகிய பாயல்.
தகவு - தகுதி; ஒன்றிலும் பற்றின்மை.
கடவுள் - தெய்வத் தன்மை.
பிரளய சலதி - ஊழிக் காலத்தில் எங்கும் பொங்கிப்பரக்கும் கடல், இதவும் ஆகு பெயரால் நீரையே குறித்தது.
`குளப்படி நீரும், சலதி நீரும் ஆகிய இரு வகைப் பொருளும்` என்க.
துப்பிற்று - வலிமையுடையது.
முடலை யாக்கை - பல முறுக்குக்களையுடைய உடம்பு.
புடைப்பட்டு - பக்கத்தில் பொருந்தி.
கால் தலை - பாதமாகிய இடம்.
ஏவல் - ஏவப்படும் பணிகள்.
`ஏற்றுச் செய்து` என ஒரு சொல் வருவிக்க `அவர் கண்டது நான்காணின் அல்லது, எனக்கென்று பிறிது உண்டோ` என உரைக்க.
`அடியவர்க்கு அடிமையாதலிற் சிறந்த செல்வம் பிறிது இல்லை` என்பதை உணர்த்துவார், முதற்கண் அடியர் அல்லாதாரது இழிவையும், அடியாரது உயர்வையும் விரித்து ஒப்பிட்டுக் காட்டினார்.

பண் :

பாடல் எண் : 8

பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பில் செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டம் தன்னுளே வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அநங்க வேள் - மன்மதன்.
`செறிந்த வில், பொருத வில், அட்ட வில்` எனத் தனித்தனி இயைக்க.
பொருத - போர் செய்த.
அட்ட - கொன்ற; கொன்றது போலும் துன்பத்தைச் செய்த.
புராணன்- பழையோன்.
``புராணன் மருத வட்டம் தன்னுளே வந்து`` என்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

வந்திக்கண் டாயடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாயரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச்
சந்திக்கண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கண்டாய்`` நான்கும் முன்னிலை யசைகள்.
முதல் மூன்று அடிகளில் முதற்கண் நின்ற சீர்களில் வந்த ககர ஒற்றுக்கள் ஈற்றடியோடு எதுகை பொருந்த வேண்டி விரிக்கப்பட்டன.
``நெஞ்ே\\\\u2970?`` என்பதை முதலில் வைத்து, `அடியாரைக் கண்டால் வந்து; அரன் செம்பொற்கழல் மறவாது சிந்தி; திரு மாமருதைச் சந்தி; இல்லையேல் நமன் தமர் உன்னைக் கொடுபோய் நிரயத்து உந்தி வீழ்த்தி உழக்குவர்` என இயைத்து உரைக்க.
வந்தி - வணங்கி; சந்தி - நேர்நின்று காண்க.
தாம், அசை.
உந்தி - பின்னின்று தள்ளி.
உழக்கு வார் - அலைப்பர்.

பண் :

பாடல் எண் : 10

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுற வுளவோ
அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித் தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட் டம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து.
புண்ணிய
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க்
காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும்

சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
எம்ம னோர்கள் இனிதினி தருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்

காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக
இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு

மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவா
திமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உழப்பு - முயற்சி.
உறுதி - நன்மை.
கழப்பு - நெடுநீர்மை; மடி கையறவு - துன்பம்.
``முயற்சி திருவினை யாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்`` 1 என்பதனை முதல் இரண்டு, அடிகளால் வலியுறுத்திக் கூறினார்; தாம் முயற்சியால் இன்பம் எய்தி யதையும், சிலர் மடிமையால் துன்பம் எய்துதலையும் நிறுவுதற்கு.
இப் பாட்டு முழுவதும் `நன்று, தீது` என்னும் இருவகையான் ஆகிய முற்றுருவகம் ஆதலை அறிக.
அதனால் - அதனை யறிந்தமையால், `அகழ்தல் முதலியவற்றைச் செய்தோம்` என்பதாம்.
புனம் - கொல்லை.
வஞ்சக் கட்டை - பிறரை வஞ்சித்தலாகிய பெருமரம்.
மெய் - வாய்மை.
பத்தி - இறையன்பு.
ஆர்வம் - சிவானந்த வேட்கை.
பட்டி அஞ்சு, கட்டுக்கு அடங்காத ஐம்புல ஆசையாகிய யானைகள்.
சாந்தம் - பொறுமை.
ஞானம் - மெய்யுணர்வு.
நந்தாது - கெடாமல்.
கருணை - திருவருள் அருகா - பயிரின் பக்கமாய் முளைக்கின்ற காமக் குரோதங்களைக் கூறவே இனம் பற்றி உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஏனை நான்கும் உடன் கொள்ளப்படும்.
சேமப் படுத்துழி - பாதுகாவல் செய்த பொழுது.
செம்மையின் ஓங்கி - (பத்தியாகிய மரம்) நன்றாக வளர்ந்து.
முகிழ்த்தல் - அரும்பெடுத்தல்.
அம்மென - அழகாக ``அரும்பி`` என்றது, `போதாகி` என்றபடி.
கடி - மணம்; அஃது இங்குப் பக்குவத்தைக் குறித்தது.
புண்ணியம் - சிவபுண்ணியம்.
`அதனைத் தருகின்ற அஞ்செழுத்து` என்க.
`அஞ்செழுத்துத் தானே சிவபெருமானாய்த் தோன்றி நின்றது` என்ற படி.
காள கண்டம் - கரிய மிடறு.
சுவை, அவற்றையுடைய உணவைக் குறித்தது.
``இனிது இனிது`` என்னும் அடுக்குக் காலப்பன்மை பற்றி வந்தது.
உறு - மிக்க.
``மருத மாணிக்கம்`` என்பது `சிவபிரான்` என்னும் அளவாய் நின்றது.
`இனி யருந்தி` எனப் பாடம் ஓதி, `இப் பொழுதே அருந்தி` என உரைத்தலும் ஆம்.
`பாழாக்கிக் கழியும் இயற்கைேயார் ஆகின்றனர்; அத்தகையோரையும் உடையது இவ் வுலகம்` என முடிக்க.
ஆறு அலைத்தல் - வழிப் பறி செய்தல்.
இன்பப் பேய்த்தேர் - உலக இன்பமாகிய கானல்.
புல்வாய் - மான்.
பாலை நிலத்தில் தோன்றுகின்ற கானலை நீர் என்று நினைத்து விடாய் தணியப் பருகுதற்கு ஓடி ஓடி எய்த்தல் மான்களுக்கு இயல்பு.
இச்சை - ஆசை.
உதிர்த்தல் - தூவுதல் ``யான்`` என்பதைக் கூறவே, `எனது` என்பதும் கொள்ளப்படும்.
மாமரம் - பெரிய மரம்.
பொய் - பொய் கூறுதல்.
கவடுகள் - கிளைகள்,கொடுமை - வெகுளி.
கடுமை - கடுஞ் சொல்லும், வன்செயலும்.
தூக்கி - காய்த்துத் தொங்கவிட்டு ``தூக்கி, பழுத்து`` என்னும் செய்தென் எச்சங்களை, `தூக்க, பழுத்து`` எனச் செயவென் எச்சங்களாகத் திரிக்க.
இறுதிக்கண், `இவ்வுலகம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 11

உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
படமொடுங்கப் பையவே சென்றங் கிடைமருதர்
ஐயம் புகுவ தணியிழையார் மேல் அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடை மணி - மேகலையில் உள்ள மணிகள்.
அவை மகளிர் ஐயம் இட வரும்பொழுது ஒலிக்கும்.
அவ்வொலியை! இடியின் தோற்றமோ` என ஐயுற்றுப் பிச்சைக்குச் செல்லும் பெருமான் அணிந்துள்ள பாம்புகள் தம் படங்களைச் சுருக்கிக் கொள்ளும்.
அம்பு உக - அம்புகள் சிந்த.
காண் முன்னிலை யசை.
இடை மருதர் பசிக்கு உணவு வேண்டிப் பிச்சைக்குச் செல்கிலர்.
தாருகாவனத்து முனிவர் பத்தினியர் மையற்பட வேண்டியே பிச்சைக்குச் செல்கின்றார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 12

காணீர் கதியொன்றுங் கல்லீர்
எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர்
அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம்
நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்
பிரான்கழல் மேவுதற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உருத்திர சாதனம் - உருத்திராக்கம்.
வீணீர் - பயனில்லாது திரிகின்றவர்களே.
இதனை முதற்கண் வைத்து, `மருதப்பிரான் கழல் மேவுதற்கு உமக்கு எளிதோ! (அன்று; ஆதலால் நீவிர்) கதி என்றும் காணீர் - காணமாட்டீர்` என்க.
`செயற்பாலன வற்றைச் செய்கிலீர்; நீவிர் பயன் பெறுதல் எங்ஙனம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 13

மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்
திடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள்

பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா
தின்ன தியானென் றறியேன் என்னை
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன்
முன்னம்
வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக்

கண்படை யாகக் காமனை ஒருநாள்
நுண்பொடி யாக நோக்கியண் டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கீறித் தூய

ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்

தம்மையுங் காணாத் தன்மை யோரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பதியில்பை மட்டுமன்று; ஏனைப் பசு பாசங்களது இயல்பையும் உள்ளவாறு உணர்தல் திருவருள் வழியால் வரும் சிவஞானத்தாலன்றிக் கூடாது` என்பதையும், `சிவஞானத்தால் அறிகின்றுழி, முன்னர்ப் பதியில்பை உணருமாற்றானே ஏனைப் பசு பாசங்களது இயல்பும் உள்ளவாறு உணரப்படும்` என்பதையும் இப்பாடல் இனிது விளக்குகிறது.
`வரைத் தனி வில்லால்.
.
.
கங்கை நாயக! நின்னைக் காணா மாந்தர் தம்மையும் காணாத் தன்மையோரே; என்னை? (நான் ஞான நாட்டம் பெறுதற்கு) முன்னம், - மயிர்த் தொகையோ? தோலின் பரப்போ? புண்ணோ? உதிரப் புனலோ? எலும்போ? மூளை விழுதோ? வழும்போ? புழுவின் ஒழுங்கோ? மலத்தின் குவையோ? நரம்பின் கயிறோ? ஒறுக்கும் பிணியோ? - `இன்னது யான்` என்று தெரியாது ஏதினும் தேடினேன்; யாதினும் காணேன்; (அதனால்) என்னையே (யான்) அறிந்திலேன்.
நின் திருவருள் கிடைத்த பொழுது (அதனால்) மாயையாகிய திரையைக் கீறி, ஞான நாட்டம் பெற்றபின் நின் பெருந் தன்மையுங் கண்டேன்; காண்டலும் என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்` என ஏற்குமாற்றான் இயைத்துப் பொருள் காண்க.
அடி-1: மேவிய - உடம்பு முழுதும் பொருந்திய.
புன் மயிர் - குறு உரோமங்கள்.
பாவிய - பரந்த, பொதிந்த - மூடிய புண் - சீயும், சினையும்.
கூறு - துண்டு.
முடை - முடைநாற்றம்.
விழுது - நெகிழ்ச்சி யுடையதிரள், வழும்பு - நிணம்; கொழுப்பு.
நீர் - சிறுநீரும், வெயர்வை யும்.
``மலம்`` என்பது உடல் அழுக்கையும் குறிக்கும் `நரம்பாகிய கயிறு` என்க.
இன், வேண்டாவழிச் சாரியை.
`ஏதினும்` என்பது, `யாதினும் என்பதன் மரூஉ.
வரை - மேருமலை.
தனி - ஒப்பற்ற.
புரம், திரிபுரம்.
கண் படையாக - கண்ணையே படைக்கலமாகக் கொண்டு.
பொடி - சாம்பல்.
வீயா - இறவாத `அமரர்` என்பது `மரித்தல் இல்லாதவர்` என்னும் பொருளது ஆதலின் இங்கு அது வாளா பெயராய் வந்தது.
அமுது - உண்ணும் உணவு.
`உண்டதனால் ஊறு எதுவும் நிகழ்ந்திலது` என்றற்கு `உணவாக்கி` என்றார்.
வெருவா - அச்சங் கொள்ள.
சரளம் - தேவ தாரு.
வகுளம் - மகிழ்.
முகிழ்த்த - தோற்றுவித்த.
புது வெயில் - அதிசய வெயில்.
இருடி கணங்கட்கு ஆன புண்ணியம் தவம்.
`புரக்கும் பெருமான்` என்க.
இனி, புரக்கும் இடைமருது` என்றலும் ஆம்.
தெய்வத் திருவருள் - தெய்வத் தன்மையைத் தரும் திருவருள்.
உரிமையாக்கிக் கொள்ளுதலை, `கைக்கொள்ளுதல்` என்றும் `கைப்பற்றுதல்` என்றும் கூறும் வழக்கம் பற்றி, ``கைவந்து`` என்றார்.
`கையின்கண் வந்து` என உருபு விரிக்க.
படலம் - மறைப்பு.
`பசுக்களும், பாசங்களும் பதியின்கண் வியாப்பிய மேயாகலின், வியாபகமாகிய பதியை உணரவே, அதன்கண் வியாப்பியமாகிய பசுக்களும், பாசங்களும் தாமாகவே உணரப்படும்` என்க.
அது கடலுள் மூழ்கி அதன் ஆழத்தைக் காண்பவர் அதனானே அக்கடலின்கண் உள்ள பொருள்களையும் நன்குணர்தலில் வைத்து உணர்ந்து கொள்க.
கடல் ஆழத்தைக் காண முயலாமல் கடலில் உள்ள பொருள்களை மட்டும் காண முயல்வோர் அவற்றுட் சிலவற்றை மட்டுமே பெற்றொழிதலன்றி அனைத்தையும் பெறாமைபோலப் பதியை உணர முயலாமல் பசுபாசங்களை மட்டும் உணருவோர் அவற்றது இயல்பினை ஒருபுடையாக உணர்தலன்றி முற்ற உணராமை பற்றி.
நின்னைக் காணா மாந்தர்
தம்மையுங் காணாத் தன்மை யோரே
என்றார்.
`தன்னையும்` என்பது பாடம் ஆகாமையை.
மாதவச் சிவஞான யோகிகள் சிவஞான போத மாபாடியத்துள் இதனை எடுத்துக்காட்டிய இடத்தில் 1 காணும் பாடம் பற்றியறிக.
முதற்கண் போந்த ஓகாரங்கள் தெரிநிலைப் பொருள.

பண் :

பாடல் எண் : 14

ஒராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ
எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஓராது`` முதலிய நான்கும் எதிர்மறை வினையெச்சங்கள்.
அவைகளில் உள்ள ஏகாரங்கள் பிரிநிலைப் பொருள.
ஓர்தல், இங்கு அறிதல்.
அதற்கு `நூற்பொருளை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
நேர்தல் - சாத்த உடன்படுதல்.
எந்தத் திருமுழுக்கும் நீரால் நிரம்புதல் பற்றி, ``நீரும் நிரப்பாதே`` என்றார்.
யார் ஆயோ - என்ன இயைபு உடையேமாகியோ, `நண்ணுவாம் என்னும் அது யார் ஆயோ` என்க.
செயற்பாலனவற்றுள் ஒன்றையும் செய்யாமலே, `நண்ணுவாம்` எனக் கூறுதற்கு யாதோர் இயைபும் இல்லை - என்றபடி.
``அது`` என்பது, என்று சொல்லுதலாகிய அத்தொழிலையே குறித்து நிற்றலால் அஃது, `யாராய்` என்னும் வினையெச்சத்தோடு முடிந்தது.

பண் :

பாடல் எண் : 15

நாமே இடையுள்ள வாறறி
வாமினி நாங்கள்சொல்லல்
ஆமே மருதன் மருத
வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச்செய்
தாரொரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகத்திணைப் பொருளில் `மெய் தொட்டுப் பயிறல்` என்னும் துறை பற்றித் தலைவன் கூற்றாய் அமைந் தது.
மருத வனத்து அன்னம் அன்னவர் தலைவி.
மேல் - தலை மேல்.
அணிந்து - அலங்கரித்து.
`மேல் பூவால் அணிந்து` என்க.
பிழைக்கச் செய்தார் - அணிந்தவர்கள் தம் செயல் குற்றாமாகும்படி செய்தார்கள்.
`அன்னம் அன்னவரது இடை எவ்வாறு உள்ளது` என்பதை (அது பூவைச் சுமக்காது என்பதை) நாம் மட்டுமே அறிவோம்.
(அவர்கள் அறியார்கள்) இனி நாங்கள் அவர்களுக்குச் சொல்லலாமோ! (கூடாது) பூவை அணிந்ததற்குமேல் நெற்றியில் ஒரு பொட்டும் முன்பே மெலிகின்றவர் மேல் மேலும் சுமையை ஏற்றல் தக்கதன்று.
(தலைவன் இவ்வாறு கூறி, `இதற்கு மேல் தலையில் உள்ள மலர்களை நாடி வண்டுகள் வருகின்றனவே` எனக் கூறி, அவைகளை ஓட்டுவான் போலத் தலைவியை நெருங்கி அவளது மெய்யைத் தீண்டுவான்.
) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்லா படாஅ பறை (குறள், 1115)
என்னும் திருக்குறள் இங்கு நினைவுகூரத் தக்கது.
``தளர்பவரை`` என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 16

அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில்

பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட் டிமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை

கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி

மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை

பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்குங் குமரன் தாதை
பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னினைந்
தெண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்

பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்

தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று
தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப

வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த் திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்றினர் - பகைத்தவர்.
நுண்பொடி, தோளுக்கு அடை, ``கயிலை நடந்தனைய`` என்பது முதலியன மால்விடைக்கு அடை ``கயிலை நடந்தனைய`` இல்பொருள் உவமை.
`நடந் தனையதாள்` என்க.
எனவே, `நடந்தாற் போலும் நடையை யுடைய தாள்` என்பதாம்.
தாள் - பாதம்.
நோன் - வலிய.
உயர்நிலை - ஓங்கி நிற்கும்தாள்.
கோடு - கொம்பு.
திமில் - முசுப்பு.
சிமையம் - சிகரம்.
``செங்கோடு`` என்பதில் செம்மை ஆகுபெயராய்ப் பொன்னைக் குறித்தது.
கோடு - சிகரம்.
மணி - மாணிக்கம்.
இமயச் செல்வன் பெற்ற அன்னம், உமாதேவி `கிள்ளைப் பிள்ளை, மயில் இளம்பேடை, மானின் கன்று, வல்லி` என்பனவும் அப்பெருமாட்டியையே குறித்தன.
``வல்லி`` என்பது தவிர ஏனைய உருவகங்கள்.
``குயில் எனப் பேசும்`` என்றாரேனும் பேசுமிடத்து எழும் குரலே அங்குக் கருதப்பட்டது.
`மொழியாற் கிள்ளை, சாயலால் மயில், கண்ணால் மான்கன்று` என்க.
இடையே ``குயில் எனப் பேசும்`` என உவமையணி வந்தது.
வருமுலை - வளர்கின்ற தனம்.
``தாங்கும்`` என்பது மார்பிற்கு அடை.
வல்லி - கொடி போன்றவர், உவம ஆகுபெயர்.
நீலம் - நீலப் பூ.
கமலம் - தாமரைப் பூ.
`நீலப் பூ தாமரைப் பூமேல் பூத்தது போலும்` என்பது இல்பொருள் உவமை.
அது முகத்தின்மேல் கண் விளங்குதலுக்கு உவமை, மதர் - களிப்பு.
அரி - செவ்வரிகள்.
ஐய - அழகிய.
பணைக் கை - பருத்த துதிக்கை.
`கையொடு` என உருபுவிரிக்க.
``பவள மால் வரை பணைக் கையோடு போந்தனைய`` - என்பது இல்பொருள் உவமை.
தலைவன்; கணபதி.
சிவபெருமானுக்கு உள்ளவை விநாயகருக்கும் இருத்தல் பற்றி, `எண்தோள் தலைவன்` என்றார்.
பதாகை - கொடி.
`கூர்வேற் குமரன்` என இயையும்.
`அமரரைத் தாங்கும்` என உருபுவிரிக்க.
தாங்குதல், அசுரரால் இன்னற்படா வண்ணம் காத்தல்.
``தாங்கும்`` என்றதை இறந்த காலத்தில் வந்த நிகழ்காலமாகக் கொள்ளலும் பொருந்தும்.
பொருதல்- மோதுதல்.
`கரையைப் பொருதிடும்` என்க.
பொன்னி - காவிரி நதி.
அது பல வளங்களையும் தருதலால் புண்ணியங்களைப் புரப்பதாயிற்று.
தேவர் ஆ - காமதேனு.
`அஃது எல்லார்க்கும் எல்லாம் வழங்குவதாகலின், அதன் கன்றிற்குக் கிடையாதது ஒன்று இல்லை` என்னும் பொருட்டு.
வதையா - வதைத்து.
முறியாப் புழுக்கல் - உடைபடாத அரிசியால் ஆக்கப்பட்ட சோறு.
அயினி - உணவு; அது சோற்றைக் குறித்தது.
விளாவிய நீர் காய்ச்சப்படாத நீரில் உள்ள குற்றத்தை உடைத்தாம் ஆகலின், அக்குற்றம் இன்மையைக் குறித்தற்கு, ``ஆற்றிய தெண்ணீர்`` என்றார்.
`நெருப்பில் வைத்துக் காய்ச்சினும் குற்றம்படும்` என்றற்கு.
``வெயிலின் வைத்து`` என்றார்.
நாற்றம் - நறுநாற்றம்.
மடுத்தல் - வாய்மடுத்தல்.
வேட்கை - தாகம்.
``விடாவேட்கை`` என்றாராயினும் `வேட்கை விடாமை` என்றலே கருத்து.
கண் அகன்று - இடம் பரந்து.
துணர் - கொத்து.
துறுமி - செறிந்து.
வாலுகம் - வெண்மணல்.
`நிழலிற் செல்லாமல் வருந்துதல்` என்க.
தீங்கு - குற்றம்.
`செல்வ! பாக! கொழுந! தலைவன் தந்தை! குமரன் தாதை! மருதவாண! (உலகில் சிலர் துயர் உறுதல்) நின்னது குற்றம் யாதுமில்லை; நின் நினைந்து காலனை வதைத்துச் சிறப்பொடு திரியாப் பாவம் பாவிகள்தமதே; அஃது எத்தன்மைத்து எனின், அடிசில் அட்டு இனிதிருப்ப ஒருவன் புசியராது வருந்துதல் அயினியின் குற்றம் அன்று; தெண்ணீர் இருப்ப, ஒருவன் மடாது வேட்கை விடாமை தெண்ணீர் குற்றம் அன்று; சோலை கிடப்ப, ஒருவன் நிழலிற் புகாது வெயிலில் வருந்துதல் நிழல் தீங்கன்று` என இயைத்து, `இவை போலும் தன்மைத்து` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 17

அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உரைத்தாலும்`` என்பதன்பின், `அவ்வுரைகள் அனைத்தும்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
ஒரு தனையே- ஒருவனாகிய (தன்னோடு ஒப்பது பிறிதொன்று இல்லாதவனாகிய) தன்னையே, `உண்மையான மெய்ப்பொருள் திருவிடைமருதூர்ப் பெருமானேயாகையால், மெய்ப்பொருளை ஆயப் புகுந்த சமயங்கள் பலவும் தான் தான் அறிந்த அளவில் அம்மெய்ப்பொருளைப் பற்றிக் கூறும் கூற்றுக்கள் தம்முள் ஒவ்வாது இகலியிருப்பினும் அவை அனைத்தும் அப்பெருமானைப் பற்றிக் கூறும் கூற்றாகவே அமையும்` என்பதாம்.
இஃது யானையின் ஒவ்வோர் உறுப்பை மட்டும் கையால் தடவி முடித்து, `அவ்வவ்வுறுப்புக்களே யானை` எனக் கருதிக் கொண்டு யானையின் இயல்பைப் பற்றிக் குருடர்கள் தம்முள் இகலியுரைக்கும் உரைகள் யாவும் யானையின் இயல்பேயாதல் போல்வதாம்.
``அன்று`` என்றல், எதிர்ப் பக்கத்தவர் கூறும் உரையை உடன்படுவார் கூறுவது.
ஆறு சமயங்களாவன மெய்ப்பொருளை ஆயப்புகுந்த ஆறு சமயங்கள்.
அவை `உலகாயதம், பௌத்தம், சமணம், சாங்கியம், தருக்கம், ஏகான்ம வாதம்` என்பன.
உலகாயதம், ``உலகமே மெய்ப்பொருள்`` எனவும், சமணம், ``வினையே மெய்ப் பொருள்`` எனவும், ``சாங்கியம், உயிரே மெய்ப்பொருள்`` எனவும், தருக்கம், ``உயிரினும் சிறிதே உயர்ந்தது மெய்ப்பொருள்`` எனவும் கூறும்.
பிற சமயங்களின் மெய்ம்மைகள் எல்லாம் இவற்றுள்ளே அடங்குமாற்றையும், இவை அனைத்தும் சிவநெறிமெய்ம்மையுள் அடங்குதலையும் அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 18

நோக்கிற்றுக் காமன் உடல்பொடி
யாக நுதிவிரலால்
தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப்
படத்தன் சுடர்வடிவாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலையுருண்
டோடச் சலந்தரனைப்
போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு
தாளுடைப் புண்ணியமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நோக்கிற்று, தாக்கின்று`` முதலிய நான்கும் நோக்கியது, தாக்கியது முதலிய பொருளவாய், அவ்வத் தொழிலைக் குறித்தன.
அவற்றிற்கெல்லாம் வினை முதல் இறுதிக்கண் உள்ள ``புண்ணியன்`` என்பது.
`புண்ணியம்` என்பது பாடமாயின் அதுவும் உபசார வழக்கால் புண்ணியனையே குறித்து நிற்கும்.
அரக்கன், இராவணன், ஓக்கிற்று - உயர எடுத்தது.
மருது - மருதூர்.
நுதி - நுனி.
நுதி விரல் - விரல் நுதி; இலக்கணப் போலி மொழி.
`உயிர் போக்குதல்` என்பது `அழித்தல்` என்னும் பொருட்டாய் நிற்றலின் அது, ``சலந்தரனை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

பண் :

பாடல் எண் : 19

புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக

வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர்

கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவரும்

காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்

சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்
தாங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்

பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ்
செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்

மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்

தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமுங் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப
ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட
உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்
கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்

ஆல காலமும் அனைத்தும்இட் டமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்துஞ்

சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா
தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்

தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது

சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி -76.
``முதல்வ`` என்பதை, ``திரிபுராந்தக`` என்பதன் பின்னர்க் கூட்டி.
`முதல்வன் - முழுமுதற் கடவுள்` என்க.
அடி-4 வாட்கண் அரிக்கண்` எனத் தனித் தனி இயைக்க.
வாட்கண் - வாள்போலும் கண்.
அரி - செவ்வரி.
அடி-7 மூவா - கெடாத, இடையே கெடும் முதல்வரின் நீக்குதற்கு மூவர் முதல்வ`` என்றார்.
ஐந்தெழுத்து ஓதலை அடி-8.
பணைத்த - பெருத்த.
அறியாமை பற்றி அம்மக்களை ``மாக்கள்`` என்றார்.
கை மேல் நிமிர்த்தல், இருகைகளையும் வானத்தை நோக்க நீட்டுதல்.
கால் ஒன்றுமுடக்குதலாவது, ஒரு கால் அடியை எடுத்து மற்றொரு காலின் துடை மேல் ஊன்றுதல்.
ஐவகை நெருப்பு - பஞ்சாக்கினி.
அவை நான்கு திசையிலும் மூட்டப்பட்ட நான்கு தீக்களோடு நடுவண் தீயாகக் கருதிக் கொள்ளப்படும் பகலவன்.
அழுவம் - பள்ளம்; குண்டம்.
வார் பனி - ஒழுகுகின்ற பனி, கண் படை- துயிலுதல்.
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து - தானே மெலிவதாகிய உடம்பைத் தாங்கள் வலிதின் மெலிவித்து.
அம்மை - மறுமை.
தம்மை ஒறுத்தலாவது, உடலை வாட்டும் முகத்தால் - உயிரை வருத்துதல்.
தாது - மகரந்தம்.
முன்றில் - இல்முன்.
தண்டா - நீங்காத.
ஆல - ஆடும்படி.
குயிற்றிய - செய்யப்பட்ட.
குயிற்றிய குன்று - செய்குன்று; கட்டு மலை, மருப்பு - யானைத் தந்தம்.
வாள் அரி - கொடிய சிங்கம்.
படுத்த.
இடப்பட்ட.
அமளி - படுக்கை.
அணை - மெத்தை.
ஐ வகை அமளி அணை - பஞ்ச சயனம்.
அவை மயிலின் மெல்லிறகு அன்னத்தின் மெல்லிறகு; இலவம் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு - இவை அடைக்கப்பட்ட மெத்தை.
`அணைமேல் விரித்து` என இயையும்.
`மலர் போலக் கமழும்` என்க.
மடி - துணி.
பட்டு - பட்டால் ஆகிய உறை.
பதப் பஞ்சு - கொட்டி எடுத்துப் பதம் ஆக்கிய பஞ்சு.
நுண் பஞ்சு, இலவம் பஞ்சு.
`பஞ்சின் கொட்டைகள்` என்க.
நெட்டணை - பஞ்ச சயனங்களைத் தாங்குகின்ற நீண்ட மெத்தை.
கொட்டைகள் - தலையணைகள்.
பாயல் - படுக்கை.
`இவ்வாறான பாயல்` என்க.
`பாயல் மீமிசைத் தோய்ந்து` என இயையும்.
பரிபுரம் - காலில் அணிந்த சிலம்பு.
அன்னத்தின் நடையைத் தாம் பயிற்றி என்க.
பயிற்றுதல் - நிகழ்வித்தல்.
தோரணம், இடைக்கு உவமை, அம் - அழகு.
மெல் - மெல்லிய.
குறங்கு - துடை.
``ஒம்`` என்பது மெல்லென ஒலிக்கும் ஒலிக் குறிப்பு.
`குறங்கின்கண் ஒண் என்னும் கலிங்கம்` என்க.
கலிங்கம் - உடை.
கவற்ற - ஏக்கறும்படி செய்ய.
பண் வர இரங்கும் - பல பண்களும் தோன்ற ஒலிக்கின்ற.
நடை வேறுபாட்டால் மேகலையின் ஒலி வேறுபடுவனவாம்.
மருங்கு - இடை; அரும் பெறல் நுசுப்பு - அரிதில் காணப்பெறும் இடை` `அல்குலின் மேலதாகிய நுசுப்பு` என்க.
வனம் - அழகு.
கதிர்ப்ப - அழகு விளங்க.
ஆரம் - கழுத்துச் சரம், வளை, இங்குத் தோள் வளை.
தோள் வரித்த சாந்து.
தோள்களை அலங்கரித்த சந்தனம்.
உத்தரியம் - மேலாடை.
வள்ளை - வள்ளைத் தண்டு; நீரிற் கிடப்பது.
இது காதிற்கு உவமையாகும்.
`வள்ளையை வாட்டிய` என்க.
வாட்டிய - தோற்கச் செய்த.
உருவக வகையால் பவளம் இதழையும், தரளம் (முத்து) பற்களையும், குமிழ் மூக்கினையும் குறித்தன.
குமிழ் - குமிழம் பூ.
நாட்டம் - கண்.
அவை காமத்தை மிகுவிக்கும் முகத்தால் ஆடவரது உயிரைப் போக்குவன போறல் பற்றிக் காலனது (கூற்றுவனது) வேல் முதலிய மூன்றும் ஒருங்கமைந்தனவாகக் கூறப்பட்டன.
மிளிர்தல் - சிவத்தல்.
அம் சொல் - அழகிய சொல்.
ஆகம் - மார்பு.
சின்னம் - ஓவியம்.
வறிது - சிறிது.
அருந்தா - அருந்தி.
சிறிதே அருந்துதல் பசியின்மையைால்.
வாடினர் - வறியவர்.
வரையாது கொடுத்தல் - `இன்னார், இனியார்` என்று வேற்றுமை பாராது எல்லார்க்கும் வழங்குதல்.
தூசு - நல் ஆடை.
`அவற்றுள்ளும் நல்லன` என்க.
தொடை - மாலை.
`தொடையின்கீழ்` எனவும்.
`மைந்தரொடும், ஒக்கலோடும்` எனவும் உருபுகள் விரிக்க.
ஆர - நிரம்ப.
ஆர்ந்து - நுகர்ந்து.
ஒக்கல் - சுற்றம்.
``இவ்வகை யிருந்தேமாயினும்`` என்பது நியமம் ஆகாமை விளங்கும்.
அந்த முத்தி - மேல் தம்மைத் தாமே ஒறுப்பவர் விரும்பியதாகக் கூறப்பட்ட முத்தி.
இனி, `முத்திகளில் எல்லாம் முடிவான பரமுத்தி` என்றலும் ஆம்.
``வாயிடை`` என்பதன் பின், `வைத்தலை` என ஒரு சொல் வருவிக்க.
``வல்லான் ஒருவன்.
.
.
கல்லே போல்`` என்பதை ``அந்த முத்தியும் இழந்திலம்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
அடி-29 ``யாங்கள் இவ்வகை யிருந்தேமாயினும் அந்த முத்தியும் இழந்திலம்`` என்றதனால், `தம்மைத் தாமே ஒறுப்பவர் அவ்வாறு ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறுகிலர்` என்பது பெறப்பட்டது.
பல வகையிலும் உடலை வருத்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டேயாம்.
அவ்வாற்றால் மனம் ஒருங்குதலின் பயன், மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன்வழிச் செலுத்தலே யாகலின் தம்மைத் தாமே ஒறுத்தும் அது செய்யாதார் அந்த முத்தியை அடைவாரல்லர்` எனவும், `முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதே, மாறாக, ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த முத்தியையும் இழவாது பெறுவர்` எனவும் `எவ்வாற்றானும் சிவனை நினைதலே முத்தி சாதனம்` என்பதும், `எனவே, எதனைச் செய்யினும் அச்சா தனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு.
அப்பர்.
இக்கருத்தை, ``கங்கை யாடில் என், காவிரி யாடில் என்`` 1 என்பது முதலாக எடுத்துக் கூறி, ``எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே`` என நியமித்து அருளிச் செய்தார்.
அதனால் அவர் அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும், இங்கு இவ்வாசிரியர், ``மக்களை, மனைவியை, ஒக்கலை ஒரீஇக் காடும், மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும் இகழ்ந்தார் என்னற்க.
மற்று, எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம் ஆதலையே வலியுறுத்தினர் என்க.
அவைதிகருள் சமணரும் வைதிகரும் மீமாஞ்சகரும் இங்குக் கூறியவாறு, `தம்மைத் தாம் ஒறுப்பதே முத்தி சாதனம்` என்பர்.
அது பற்றியே இங்கு வைதிகர் புரியும் தவங்களாகக் கூறிவந்தன பலவற்றுக்கு இடையே அடி-20, 21 தலையைப் பறித்தல், உடையைத் துறத்தல், உண்ணாது உழலல், கல்லில் கண் படைகொள்ளல் ஆகிய சமணர் தவங்களையும் கூறினார்.
கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம் முயன்று எரிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள்.
`கல்லின் இயல்பு, யாவர் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியிற் சேர்த்தல்` என்பது இவ்வுவமை களால் விளக்கப்பட்டது.
இதனை, சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (குறள்.,307)
என்னும் குறளிற் போந்த உவமையோடு வைத்துக் காண்க.
அடி-77: அத்திறம் - ஐம்புலன்களையும் ஆர நுகர்ந்தும் அந்த முத்தியையும் யாம் இழாவது பெறுதலாகிய கூறுபாடு.
என் எனின் - எங்ஙனம் எனின் `நின் நாமம் நவின்றோர் நலத்தின் வழார் ஆகலின்` என முடிக்க.
`ஆகலின்` என்பது சொல்லெச்சம் எனவே, ``வழார்`` என்றது, `வழாதவாறு` நீ அருளுகின்றாய்` என்றதாம்.
`சிவனை நினையாது பிறவற்றையெல்லாம் செய்வோர் அச்செயலுக்கு உரிய பயன்களைப் பெறுதலோடு ஒழிவதல்லது, பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறார்` என்பது கருத்து.
இதனை, பரசிவன் உணர்ச்சி யின்றிப்
பல்லுயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க் கீ றெய்தி
வீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின் தோலை
உரித்துடுப் பதற்கொப்பென்றே
பெருமறை பேசிற் றென்னில்
பின்னும்ஓர் சான்றும் உண்டோ
எனக் கந்த புராணத்திலும்
மானுடன் விசும்பைத் தோல்போற்
சுருட்டுதல் வல்ல னாயின்
ஈனமில் சிவனைக் காணாது
இடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும்
வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும்
உபாயமே யறிதல் வேண்டும்
எனக் காஞ்சிப் புராணத்திலும் 2 கூறப்பட்ட உபநிடதப் பொருள் பற்றி யறிக.

பண் :

பாடல் எண் : 20

நாமம் நவிற்றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் ஆமோ
பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாமம் நவிற்றாய்`` என்பதற்கு முன் `அவன்` என்பது வருவித்து, அத்தொடரை இறுதிக்கண் கூட்டுக.
நவிற்றாய் - சொல்லு.
``காமம்`` என்பது அதன்வழி நிகழ்வதாகிய கலவியைக் குறித்தது.
``தோய்ந்து நவிற்றி`` என்பது, `ஓடி வந்து` என்பதுபோல செய்யும் செயலை வகுத்துக் கூறியதாம்.
பொருத - போர் செய்த.
வனத்து ஆனை - காட்டு யானை.
வளைந்து - வலம் வந்து.

பண் :

பாடல் எண் : 21

வளையார் பசியின் வருந்தார்
பிணியின்மதன னம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கிநில்
லாரிப் பிறப்பினில்வந்
தளையார் நரகினுக் கென்கட
வார்பொன் னலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி
யார்அடி சார்ந்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன் அலர்ந்த`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
பொன் அலர்ந்த - பொன்போல மலர்ந்த.
தளை - தளைக்கப்பட்டது; மாலை.
வளைதல் - வலிமையிழத்தல்.
`பசியின் வளையார்; பிணியின் வருந்தார்` என மாற்றிக் கொள்க.
தனம் - மகளிர் கொங்கை.
இரங்குதல் - ஆற்றாது வருந்தல், ``பொழுதுகண்டிரங்கல்``1 என்றது காண்க.
அளைதல் - உலகியலில் ஈடுபடுதல்.
என் கடவார் - என்ன கடமையுடையாராவர்! `யாதொரு கடமையும் உடையவர் ஆகார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 22

அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம்
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத்

துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது
உறுப்பில் நின் றெழுதரும் உள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறுத் தகத்தே
தித்தித் தூறும் தெய்வத் தேறல்

துண்டத் துளையில் பண்டைவழி யன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்
தானே ஆகி நின்ற தத்துவ
தோற்றுவ எல்லாம் தன்னிடைத் தோற்றித்
தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்விரி கண்டத் தேக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க

உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத் தென்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக்

கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரெனும் சங்கிலி பூண்டுதொடர்ப்பட்டுக்
கூட்டுச் சிறைப்புழுவின் ஈட்டுமலத் தழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்துந்

தண்ட லாளர் மிண்டவந் தலைப்ப
உதர நெருப்பில் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா
திடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப்

பாவப் பகுதியில் இட்டுக் காவல்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக் குழன்றும்

பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
பரியா தொழிந்து பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவருங் கடுப்ப அவாயது கூட்டி
ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்

கென்னையும் அடிமையாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண் டொட்டிநன் கறிவித்
திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செல்வம், சுடர், ஓசை, தேறல், நாற்றம், முளை` - என்பன உருவக வகையால் திருவிடைமருதூர் இறைவனையே குறித்தனவாய், விளியேற்று நின்றன.
``கொடுப்பினும் குறையாச் செல்வம், (திருவருள்) ஊன் கண்ணுக்கு ஒளித்து, உளக்கண்ணுக்கு விளங்கித் துளக்கற நிமிர்ந்த சுடர்.
இரு செவிக்கு எட்டாது உள்ளத்திற்குக் கேட்கும் ஓசை, நாவில்தித்தியாது மனத்தில் தித்திக்கும் தேறல், (தேன்) மூக்கிற்கு மணக்காமல் அறிவிற்கு மணக்கும் நாற்றம், அனைத்தும் தன்னினின்றும் முளைத்தலன்றித் தான் ஒன்றினின்றும் முளையாத முளை ஆகியவை அதிசய உருவகங்கள்.
அதிசய உருவகம் புறனடையாற் கொள்ளப்படும்.
1 மூலம் - முதல்.
``காலம் மூன்றையும் கடந்த கடவுள்`` என்றதனால், கால வயப்பட்டுத் தோன்றி நின்று மறையும் கடவுளரும் இருத்தல் பெறப்பட்டது.
``கடவுள்`` என்பதும் விளியே.
இகந்து - இகத்தலால்.
துளக்கற நிமிர்ந்த - அசை வில்லாது.
ஓங்கி எரிகின்ற.
`என்பு`, எற்பு` என்ற ஆய பொழுது அஃது எதுகை நோக்கி, `எருப்பு` என ஓர் உகரமும், பகர ஒற்றும் விரியப் பெற்றது.
`அங்கம்` என்னும் வடசொல்லின் மொழி பெயர்ப்பாக, உடம்பு இங்கு ``உறுப்பு`` எனப்பட்டது.
உயிரினுள்ளே எழுகின்ற ஓசையை ஒற்றுமை பற்றி உடம்பினின்றும் எழுவதாகக் கூறினார்.
உள்ளத்து ஓசை, மனத்தால் உணரப்படும் ஓசை.
வைத்த - `சுவைக்கு` என்று வைக்கப்பட்ட.
தெய்வத் தேறல் - தெய்வத்தன்மையுடைய தேன்.
துண்டம் - மூக்கு.
`வழியிலன்றி` என உருபு விரிக்க.
நறிய நாற்றம் - நறுமணம்.
ஏனைய தன்மை - ஏனைய பொருள்களின் தன்மை.
அவை மேற்கூறிய செல்வம் முதலியனபோல உள்ள பொருள்களின் தன்மை.
எய்தாது - அடையாமல்.
அடையாவிடினும் எல்லாப் பொருள்களும் தானேயாகி நின்ற.
தத்துவன் - மெய்ப் பொருளாய் உள்ளவன்.
இறைவன் சார்பு இல்லையாயின் யாதொரு பொருளும் நிலைக்கமாட்டாது.
அஃது அகர உயிர் இன்றேல் அக்கரங்கள் இல்லையாமாறு 1 போலும் அதனால் எப்பொருளும் நிலைபெறுதற் பொருட்டு அவற்றில் அவையே தானாகிக் கலந்து நிற்கின்றான்.
அங்ஙனம் அவன் கலந்து நிற்பினும் யாதொரு பொருளாலும் தாக்கப் படாமையால், ``ஏனைய தன்மையும் எய்தாது எவையும் தானேயாகி நின்ற தத்துவன்`` என்றார்.
``தானே`` என்பது வேறு முடிபு கொள்ளுதலால் இடவழுவின்று.
உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
தத்துவ - தத்துவனே.
``ஏனைய தன்மையும்.
.
.
.
தத்துவ`` என்பதைப் பின் வரும் ``முளை`` என்பதன் பின்னர்க் கூட்டி யுரைக்க.
இனி, `அவ்வாறு ஓதுதலே பாடம்` என்றலும் ஆம்.
தோற்றுவஎல்லாம் - தோன்றற் பாலன எல்லாவற்றையும் தோற்றி - தோற்றுவித்து.
``முளை`` என்பதற்கு `முளையாய் உள்ளவனே` என்பதே பொருளாகலானும், அங்ஙனமாகும் பொழுது `முளை` என்பது படர்க்கையேயாகலானும், `நின்னிடைத் தோற்றி` என்னாது ``தன்னிடைத் தோற்றி`` என்றார்.
``தோற்றம் தோற்றா`` என்பது ``உண்ணலும் உண்ணேன்`` 2 என்பது போல நின்றது.
சுடர் - விளங்குகின்ற.
`வெண்மதி இருக்கவும் இருள் விரிதல் வியப்பு என்றபடி, இருவர் மாலும், அயனும்.
இது தொகைக் குறிப்பு.
மாணிக்க - மாணிக்கனே! மாணிக்கம் போல்பவனே, ஈற்றடியை, ``தனி நாயக`` என்பதன்பின் கூட்டுக.
உறு குறை - உன்பால் இரக்கின்ற குறை, மதி, முன்னிலை யசை.
இருட் சிறை - இருளுக்கு இருப்பிடம்.
தொடர்ப்பட்டு - கட்டுப்பட்டு.
கூடு, தாயது வயிறாகிய கூடு.
கூட்டுச் சிறை உருவக உருவகம்.
`சிறைக்கண் புழுவினுடனே அழுந்தி வருந்தி` என இயைக்க.
`புழுவினுடனே` என்றதனால், அங்குப் புழுக்கள் மலிந்திருத்தல் பெறப்பட்டது.
பிணிப் பெயர், `வயிற்று வலி, தலைவலி, முடக்கு வாதம்` முதலிய பெயர்கள்.
`அப்பெயர்களால் வந்துவருத்தும் தண்டனாளர்` என்க.
தண்டனாளர், தலைவன் விதித்த தண்டனையைச் செய்பவர்கள்.
``தண்டனாளர்`` என்பதும் உருவகம்.
மிண்டி - நெருங்கி, அலைப்ப - துன்புறு விக்க.
உதரம் - தாயது வயிறு `பதை பதைத்தல்` என்னும் இரட்டைக் கிளவி செய்யுள் நோக்கி மிக்குவிரிந்தது.
வாதம் - பிரசூத வாயு; குழந்தையைத் தாய் வயிற்றினின்றும் வெளியேற்றும் காற்று.
மத்திகை - குதிரையை அடித்து ஓட்டும் சவுக்கு.
இதுவும் உருவகம்.
இனி இவ்வாறு வருவன பிறவும் அவை.
`அது மோத` என்க.
கிடத்தல் முதலியவற்றிற்குப் போதிய இடம் இல்லாத இல்லம்; தாய் வயிறு.
`இடம் குறைய வாய்ந்த இல்` என்க.
துன்பத்திற்குக் காரணமாதல் பற்றிய பாவத்தையே கூறினாராயினும் புண்ணியமும் உடன் கொள்ளப்படும்.
`கருவிற்றானே பாவ புண்ணியங்களாகிய பிராரத்தங்கள் அமைக்கப்படுகின்றன` என்றபடி.
காவல் ஐவர் - திருவருளிற் செல்ல ஒட்டாமல் காத்து நிற்கின்ற ஐவர்; ஐம்புலன்கள்.
தளை - விலங்கு.
பாசப்படுத்தல் - தடைப்படுத்தல்.
பையென - மெல்ல.
`தாய் வயிற்றினின்றும் வெளியில் விட்டபின்` என்க.
தீன் - தின்னப்படுவது.
உண்ணப்படுவதனையும் இழிவு பற்றித் தின்னப் படுவனவாகக் கூறினார்.
`தீதினுக்கு` என்பது பாடம் அன்று.
`பெரியோரைப் பிழைத்தல்` என இரண்டாவது விரித்து.
அதனை நான்காவதாகத் திரிக்க.
பிழைத்தல் - தவறு இழைத்தல்.
பரியாது - இரங்காமல்.
தோற்றம் - அழகு.
புகழ்தல், விரும்புதலாகிய தன் காரணம் தோற்றி நின்றது.
புல்லினம் -புல்லர் கூட்டம்.
புல்லர் - அற்பர்.
புல்லுதல் - தழுவுதல் கடுத்தல் - சினத்தல்.
அஃது சினந்து ஏவுதலாகிய காரியத்தைக் குறித்தது.
அவாயது - விரும்பியது.
இது சாதியொருமை.
`அவாவது` என்பது பாடம் அன்று.
ஈண்டின - கிடைத்தவை, மீண்டு வருதல் உறைவிடத்திற்கு.
உறைவிடம் ஒன்றால் இல்லாமல் பல ஊரும், பல நாடுமாக அலைதலால், இன்று வைத்த இடத்தில் நாளை வையாமல், இன்று இருந்த இடத்தில் நாளை இல்லாமல் ஊர் பெயர்ந்தும், நாடு பெயர்ந்தும் உழன்று, `இந்நாள் வரை` என ஒரு சொல் வருவிக்க.
வீடு நெறி - இத்துன்பம் நீங்கும் வழி.
ஒட்டி - துணையாய் நின்று.
நன்கு - நல்லது, `நன்கை அறிவித்து` என்க.
இச்சிறை - இவ்வுடம்பாகிய சிறை.
பிழைப்பித்து - தப்புவித்து, இனி இதுபோலும் சிறையில் புகாமல் காத்து அருள்செய்ய வேண்டும்` என்க.

பண் :

பாடல் எண் : 23

சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
தெங்கே இருக்க இவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது முதுக்குறை வுடைமையைத் தோழி முன்னிலைப் புறமொழியால் அவளைப் பழிப்பாள் போன்று புகழ்ந்து கூறியது.
சமைந்து - அமைந்து.
புடை - பாகம், ``இவள்`` என்பதை, ``பொழிய`` என்பதன்பின் கூட்டுக.
``சங்கே, கலையே`` என்னும் ஏகாரங்கள் எண்ணுப் பொருள.
சங்கு - சங்க வளையல், கலை - உடை.
``எங்கே இருக்க`` என, `இடம் இல்லாதவனைக் காதலிக்கின் றாள்` என இகழ்வாள்போலக் கூறினாளாயினும், `எவ்விடமும் அவன் இடமேயாதலை அறிந்தே காதலிக்கின்றாள்` என உள்ளுறையாகப் புகழ்ந்தாள் என்க.

பண் :

பாடல் எண் : 24

இருக்கும் மருதினுக் குள்ளிமை
யோர்களும் நான்மறையும்
நெருக்கும் நெருக்கத்தும் நீளகத்
துச்சென்று மீளவொட்டாத்
திருக்கும் அறுத்தைவர் தீமையுந்
தீர்த்துச்செவ் வேமனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே
முளைக்கின்ற ஒண்சுடரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி ``மருதினுக்குள் இருக்கும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
`ஓட்டாது` என்னும் எதிர்மறை வினையெச்சம் துவ்வீறு கெட்டு நின்றது.
நெருக்கம் நெருக்கத்திலும் தளராது நீளச் சென்று கருவறையை அடைந்து காண் கின்றவர்கள் அன்பர்கள்.
`அவர்களை இன்புறுத்தும் வகையால் மீண்டு போக ஒட்டாது ஒண்சுடர் வீற்றிருக்கும்` என்க.
திருக்கு - நன்மைக்கு மாறான குணம்.
செவ்வே - நேராக.
ஒருக்குதல் - ஒருமுகம் ஆக்கல்.
ஒருக்கம் - ஒருங்கிய நிலை.
முளைக்கின்ற - வெளித் தோன்றுகின்ற.

பண் :

பாடல் எண் : 25

சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடையுகந் தேறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா தலமர

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணிலி கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும்
என்தன் வாயில் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லல் படுத்தா

தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எழுநிலை மாடத்து.
.
.
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் - அருள்சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்த`` என்பதை முதற்கண் கொண்டு உரைக்க.
ஒருவரைப் புகழுமிடத்து அவர் செய்த அருஞ்செயல்களைக் கூறிப் புகழினும் அச்செயல்களை அவர்க்கு அடையாக்கியும் வினைப் பெயராக்கி அவரை விளித்தும் புகழினும் அமைதல் பற்றி இங்கு மருதப் பிரானை அவ்வெல்லாவகையாலும் தாம் புகழ்தலைப் புலப்படுத்தினார்.
உண்ணா நஞ்சம் - ஒருவரும் உண்ணலாகாத நஞ்சம்.
சேவகம் - வீரம்.
உரகம் - பாம்பு.
உரவோய் - ஆற்றல் உடையவனே.
சிரம் ஏந்திய கரம் வேறாயினும் சாதி பற்றி ``சிரகரம் தழல் ஏந்தினை`` என்றார்.
வலம் - வெற்றி.
தரு - தனக்குத் தானே தந்துகொள்கின்ற.
வியந்த - தன்னைத் தான் வியந்து கொண்ட அரக்கன், இராவணன்.
உக்கிரம் - சினம்.
குறளன் - பூதமாகிய முயலகன்.
`நின்வயிற் சொல்லி` என ஒரு சொல் வருவிக்க.
சொல் அளவு - சொல் செல்லக் கூடிய அளவு.
`சொல்லளவே` எனப் பிரிநிலை ஏகாரம் விரிக்க.
`நின் பெருமை அளப்பரும் அளவதா யினும்` என மாற்றிவைத்து உரைக்க.
`ஆயினும் இயன்ற அளவு கொண்டு நின்னை நோக்குவன்` என்க.
நோக்குதல் மனத்தால்.
``கொண்டு`` என்பது ஆன் உருபின் பொருள்படுவதோர் இடைச் சொல்.
`என்னை அல்லற்படுத்தாது இடுக்கண்களையாய்` என மாற்றியுரைத்து, அதன்பின் `ஏன் எனில்` என்பது வருவித்து, `அவன் றனக்கும் நின் அருள் பிழைத்தின்றே` என முடிக்க.
`நின்` என்பதின்றி வாளா `அருள்` என்பது பாடம் அன்று.
``உறங்க`` என்பதன்பின் `அம்மாடம்` என்பது வருவிக்க.
உகைத்தல் - பெயர்த்தல்.
``சுடர்`` என்பதும் விளி.
பொல்லாமை, சிவவேடம் புனையாது புத்த வேடத்தோடேயிருந்தமை.

பண் :

பாடல் எண் : 26

இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலை மாக்கள் புகழ்வரோ வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இன்று இருந்து, நாளை இறத்தல்` என்பது பொதுப்பட நிலையாமையைக் குறித்தது.
அஃது அனைவர்க்கும் பொதுவாயினும் அதற்கிடையே நிலையாய பயனைத் தேடிக் கொள்பவர் வல்லுநராய் உயர்த்துக் கூறப்படுவர்.
அப்பயனைத் தேடிக் கொள்ளாமல் இன்று இருந்து நாளை இறத்தலை மட்டுமே உடையோர் மக்களாக மதிக்கப்படார் ஆதலின் அவர்களை, ``புன்தலைய மாக்கள்`` என்றார்.
உடம்பின் புன்மையை அதன் முதன்மை உறுப்பாகிய தலைமேல் வைத்துக் கூறினார்.
அனைவர் உடம்பும் புன்மை யுடையவேயாயினும் அவ்வுடம்பு பயனுடைய உடம்பாக மாறும் பொழுது அதன் புன்மையும் மாறிவிடுகின்றது.
`பயனை எய்தாது, இருந்து இறத்தலை மட்டுமே செய்பவர்` என்பது தோன்ற, ``இன்று இருந்து நாளை இறக்கும் தொழில் உடையர்`` என்றார்.
பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
என அப்பரும் அருளிச் செய்தார்.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
என்னும் திருக்குறளும் இங்கு நினைக்கத்தக்கது.
வாள் - படைக்கலம்.
`மாக்கள் ஆளுடையான் அடி புகழ்வாரே` என இயைத்து முடிக்க.
`ஆளுடையான் அடி புகழ்வாரே உண்மை மக்களாவார்; அது செய்யா தார் மக்களே போல் தோன்றும் 3 மாக்களே` என்பதை இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 27

அடியா யிரந்தொழில் ஆயின
ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரங்கண்கள் மூவா
யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோளிரண்
டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு
தாளியைப் பற்றிக்கொண்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே! மருதாளியைப் பற்றிக் கொண்டு, (அவனுக்கு) - அடி ஆயிரம், தொழிலாயின ஆயிரம், பேர் ஆயிரம் முடி ஆயிரம், கண்கள் மூவாயிரம், தோள் (வலம் ஆயிரம், இடம் ஆயிரம் ஆக) இரண்டாயிரம் - என்றும் இராப் பகல் படியாய்` என இயைத்துரைக்க.
படித்தல் - சொல்லுதல்; `இங்ஙனம் சொல்லின், அது தோத்திரமாகிப் பயன் தரும்` என்பது கருத்து.
`ஆயிரம்` என்பது பன்மை குறித்து நின்றதாகலின் ``தோள் இரண்டாயிரம்`` என்றது இழுக்கிற்றில்லை அப்பர்பெருமானும் பின்பு,
ஆயிர ஞாயிறு போலும்
ஆயிரம் நீண்முடி யானும்
எனக் கூறுகின்றவர் அதற்கு முன்னே
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரந் தோளுடை யானும்
என அருளிச் செய்தமை காண்க.
`நீறு அணிந்த தோள், தொடி கொண்ட தோள்` எனத் தனித் தனி இயைக்க.
தொடி - வீர வளை.
இதனை,
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல்தொடித் தடக்கை
என்பதனால் அறிக.

பண் :

பாடல் எண் : 28

கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்
செவ்வான் உருவிற் பையர வார்த்துச்
சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத
மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கயிலாய வாண கௌரி நாயக
நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து

பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர்த் தாங்கும் குமர வேளும்
சுரிசங் கேந்திய திருநெடு மாலும்

வான்முறை படைத்த நான்முகத் தொருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும்
ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும்

செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும்

எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத் தடியரும்

திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வம் அவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
(1) வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
(2) ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
(3) குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்

(4) வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
(5) மருத வட்டத் தொருதனிக் கிடந்த

தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்இத் தலையும்
கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்
(6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும்

(7) காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
(8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்

இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாயினும் தோன்றாக் கடையேன்
நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும்
வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல கனைத்தினும் நன்மை தீமை
ஆனவை நின்செய லாதலின்

நானே அமையும் நலமில் வழிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண்டத்திலும், தோளிலும், உருவிலும் அரவு ஆர்த்து` ஆர்த்து - ஆர்க்க (கட்ட)ப்பட்டு.
இவ் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது.
நெறி தரல் - நெறிப்புக் காட்டுதல்.
மூவா - அழியாத.
பூசத் தீர்த்தம் - தைப் பூச நாளில் மூழ்கும் தீர்த்தம்.
இஃது இத்தலத்தின் சிறப்பு.
ஈசன் எம்பெரு மான்இடை மருதினில்
பூசம்நாம் புகுதும்புன லாடவே
என அப்பரும் அருளிச் செய்தார்.
புரக்கும் - தன்னிடத்தில் வைத்துக் காக்கின்ற `பொன்னி` என்க.
`பொன்னியது துறை` என ஆறாவது விரிக்க.
`அயிராவணத் துறை` என்பது பெயர்.
அயிராவணம், கயிலை யில் உள்ள யானை.
அஃது இரண்டாயிரம் தந்தங்களை உடையது.
இடைமருதீசர் இத்துறையில் ஆடுவது மேற் குறித்த பூச நாளில்.
``பெரும`` என்பதை, ``கௌரி நாயக`` என்பதன் பின் கூட்டுக.
சுரந்து- சுரத்தலால்.
பதம் - பதவி `வரம் பல பெற்றோர் அடி - இனைய தனமையராகிய எண்ணிலர்` என இயையும் கவுள் - கன்னம்; காது `கண்` என்பது பாடம் அன்று.
கடம் - மத நீர்.
புழைக் கை - தும்பிக்கை.
சுரி சங்கு - வளைந்த சங்கு.
`வானத்தை முறையாகச் சிருட்டித்த` என்க.
தாருகனைச் செற்ற வீரக் கன்னி காளி.
வானோர் தலைவன் - இந்திரன்.
அருக்கர் - சூரியர்.
இடையில் ஐராவதம், சூரியர், சந்திரன், சுருதி இவர் ஒழிய, இந்திரன் முதல் இருநிதிக் கிழவன் (குபேரன்) ஈறாகச் சொல்லப்பட்ட எழுவரும் திக்குப் பாலகர்கள், ஈசானன் உருத்திரர் வகையைச் சேர்ந்தவன் ஆதலின், மேல், ``கோடி உருத்திரர்`` எனப்பட்டோருள் அடங்கினான்.
முனிவர், மகலோக வாசிகள்.
வசிட்டன் முதலிய மூவரும் மண்ணுலக முனிவர்கள், தும்புரு, நாரதன் இருவரும் சிவபெருமான் அருகிலிருந்து வீணையிசைக்கும் பேறு பெற்றவர்.
``தும்புரு நாரதர்`` என்பது உம்மைத் தொகை.
`உமையவள் முதலாக, தும்புரு நாரதர் ஈறாகச் சொல்லப்பட்டோர் யாவரும் அடைந்த பெருமைகள் யாவும் சிவபெருமானை வழிபட்டுப் பெற்றனவே என்றபடி.
இவ்வாற்றால், `சிவபெருமான் அனைவராலும் வழிபடப்படுபவனே யன்றித் தான் ஒருவரையும் வழிபடுதல் இல்லாதவன்` என்பதும் இனிது விளக்கப்பட்டது.
இவை அனைத்தும் ஆகமப் பிரமாணத்தால் பெறப்பட்டன.
இனி நாட்டு வரலாறாகிய காட்சிப் பிரமாணத்தால் பெறப்பட்டோரையும் கூறுகின்றார்.
``வித்தகப் பாடல்`` என்றது தேவாரத் திருப்பதிகங்களை.
வித்தகம் - திறல்.
அது கல்லை மிதப்பித்தலும், எலும்பைப் பெண்ணாக்குதலும், முதலையுண்ட பாலனை மீட்டலும் போன்றன.
பிள்ளை - ஞான புத்திரன்.
சிவபெருமானே குருவாகிவந்து உப தேசிக்கப் பெற்றவர்.
இங்ஙனம் ஓரொரு சொல்லாலே சமயாசாரியர் களது வரலாறுகளைச் சுருங்கக் கூறினார்.
``அத்தகு`` என்பது பண்டறி சுட்டு.
அத்தகு செல்வம் - உலகர் பலரும் விரும்பும் பொருட் செல்வம்.
அதனை அவமதித்தமை கூறவே, அருட் செல்வத்தை மதித்தமை பெறப்பட்டது.
சிவ வாக்கியர் பதினெண் சித்தருள் தலையாயவராகச் சொல்லப்படுபவர்.
இவருக்குப்பின் இங்குச் சொல்லப்படுகின்ற வரகுணதேவர் பண்டை வரகுண பாண்டியன்.
இவனே மேல் ``பெருந் துறைப் பிள்ளை`` - எனக் குறிக்கப்பட்ட மாணிக்கவாசகரைத் தனக்கு அமைச்சராகக் கொண்டிருந்தவன்.
இவனும், மாணிக்க வாசகரும் காலத்தால் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவராயினும், திருமுறைகள் வகுக்கப்பட்ட காலத்திலும் திருப்பதிகங்களையே முதற்கண் கண்டெடுத்து வகுத்துப் பின்பு ஒரு சமயத்தில் பிற திருமுறைகள் வகுக்கப்பட்டமையால் மாணிக்கவாசகர் மூவருக்குப் பின் நான்காமவராக எண்ணப்பட்டு வரும் முறை பற்றி இவர்களை மூவருக்குப் பின்னர்க் கூறினார்.
அங்ஙனம் கூறுகின்றவர் வரகுணன் அரசன் ஆகலின் சித்தராகிய சிவவாக்கியரை அவனுக்கு முன் வைத்துக் கூறினார்.
`இவ்வரகுணன் பத்திப் பெருக்கால் பித்துக் கொண்டவர் செயல்போலச் சிலவற்றைச் செய்தான்` என்பது செவி வழிச் செய்தி.
இவனது பத்தி மிகுதி விளங்குதற் பொருட்டு அச்செய்தி களை இவ்வாசிரியர் தம் பாடலிற் பொறித்தார் அவை வருமாறு: (1) உண்மையாகவே களவு செய்த ஒருவனைக் காவலர் கண்டு பிடித்துக் கையில் விலங்கு பூட்டிக் கொணர்ந்த பொழுது அரசனது பத்தியை அறிந்து அவன் வழியில் இருந்த ஒரு சுடுகாட்டில் கீழே விழுந்து புரண்டு உடம்பெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டவனாய்ச் சிரித்து `அரஹர` என்று சொல்லிச் செல்ல அதனைக் கண்டு இவ்வரசன், ``இவ் அடியவரைக் `கள்வன்` என்றல் தகாது`` என்று சொல்லி விடுவித்துவிட்டான்.
(2) எப்பொழுதும், `சம்போ, சங்கர, மகாதேவ` என்று சொல்கின்ற இவன் காதில் ஒரு நாள் நள்ளிரவில் காட்டில் குறுநரிகள் ஊளையிட்ட சத்தம் கேட்க.
`சம்பு` என்றும், `சம்புகம்` என்றும் பெயர் பெற்ற அவைகள் சம்புவைப் பாடித் தோத்திரிக்கின்றன - எனக் கருதி, அவைகள் பனியின் குளிரால் வருந்தாதபடி ஏவலரை ஏவிப் போர்வைகள் போர்க்கக் கட்டளையிட்டான்.
(3) ஒரு சமயம் பெருமழை பெய்து ஒய்ந்தபின் தவளைகள் பல ஒருங்கே கத்த, அந்த ஓசையை அவை `அரஹர, அரஹர!` எனச் சிவபெருமானைத் துதிப்பதாகக் கருதி அவைகளுக்குப் பரிசாக இரத்தினங்களையும், பொன்னையும் நீர் நிலைகளில் சென்று இறைக்கும்படி ஏவலர்களைக் கொண்டு செய்வித்தான்.
(4) ஒரு சமயம் சிவாலயத்தில் உள்ள சிவபெருமானது திருமஞ்சனத்திற்கு வேண்டிய எண்ணெயின் பொருட்டு அர்ச்சகன் ஒருவனிடம் செக்கில் இடும்படி அரசனது பண்ட சாலையிலிருந்து கொடுத்தனுப்பிய எள்ளில் அவ்வர்ச்சகன் சிறிது எடுத்துத் தின்னு வதைக் கண்டு சிலர் அவனைப் பிடித்துக் கொண்டுபோய் இவ்வரச னுக்குக் காட்ட, இவன் அவனை விசாரித்த பொழுது அவன், `திரு மஞ்சன எண்ணெய்க்கு வைத்த எள்ளைத் தின்றவர் அடுத்த பிறப்பில் திருமஞ்சன எண்ணெய் ஆட்டும் செக்கினை இழுக்கும் எருதுகளாகப் பிறப்பர்` என்பது சாத்திரம்.
அப்பிறப்பை நான் அடைய விரும்பி இந்த எள்ளைத் தின்றேன் - என்று சொல்ல, இவன், `நானும் அப்பிறப்பை அடைய வேண்டும்` என்று சொல்லி அவன் வாயிலிருந்து சிறிது எள்ளை எடுத்துத் தின்றான்.
(5) திருவிடைமருதூர் வீதியில் கிடந்த ஒரு தலையோட்டினை இவன் கண்டு, `இஃது இங்ஙனம் இங்குக் கிடத்தலால் இத்தலையைப் பெற்றிருந்தவர் சிவலோகத்தை அடைந்திருத்தல் திண்ணம் என்று கருதி, அத்தலையோட்டினிடம் சென்று, ``எனது தலையோடும் இவ்வாறு கிடக்க அருள்செய்வீர்` எனக் குறையிரந்தான்.
(6) சிவாலயத்தின் முன் ஓரிடத்தில் நாயின் மலம் இருக்கக் கண்டு அதனைத் தானே சென்று எடுத்து அப்புறப்படுத்தி ஆலயத்தைத் தூய்மை செய்தான்.
(7) வேப்ப மரம் ஒன்றின்கீழ் அதன் கனிகள் உதிர்ந்து கிடக்க அவை சிவலிங்கம் போலக் காணப்படுதலைக் கண்டு, `இனி வேப்பமரங்களில் எதுவும் வெயிலில் உலர்தலும், மழையில் நனை தலும் கூடா` என்று அவைகட்கெல்லாம் நல்ல பந்தல்கள் இடச் செய்தான்.
(8) திருவிடைமருதூரில் இவன் மணந்துகொண்ட பெண்ணை அவள் அழகு மிகுந்திருத்தலை நோக்கி, `இவள் மருத வாணருக்கு ஆகட்டும்` என்று சொல்லி இரவிலே திருவிடை மருதூர்க் கோயிலிலே கொண்டு போய் விட்டான்.
பெருமான் அவளைச் சிவலிங்கத்தில் மறையும்படிச் செய்து, அவன் செயலை ஊரார் அறிதற் பொருட்டு அவளது வலக்கை மட்டும்.
இலிங்கத்தில் வெளியில் காண வைத்தான்.
அதனால் இச்செய்தி ஊரெங்கும் பரவ இவன் கோயிலில் சென்று, இக் கை நான் பற்றிய கை` என்று ஏற்கவில்லையோ என்றான்.
அதனால் பெருமான் அக்கையையும் மறைத்துவிட்டான்.
இச்செவிவழிச் செய்திகள் பழைய திருவிளையாடற் புராணத்து, `வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடல்` கூறுமிடத்தில் சிறிது வேறுபாடுகளுடன் கூறப்பட்டன.
இப்பாண்டிய னது வரலாறு இத்திருவிடை மருதூர்த் தலத்தோடு தொடர்புடையதாய் இருத்தலால் ஆசிரியர் இவற்றையெல்லாம் இங்கு எடுத்தோதினார்.
`இவற்றால் எல்லாம் அறியப்படுவது வரகுண பாண்டியன் பெரிய சிவபத்தன்` என்பது என்பார்.
`பெரிய அன்பின் வரகுண தேவர்` என்றார்.
இம்மன்னனை இவனது பத்தியைக் கருத்துட் கொண்டு மாணிக்கவாசகர் தமது திருக் கோவையாரில் குறித்திருக்கின்றார்.
திருமுறைகளை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பிகளும் தமது கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்துள் குறித்தார்.
மிகப் பிற்காலத்தில் கல்வெட்டுக்களில் `வரகுணன்` என்னும் பெயருடைய இருவர் பாண்டியர் குறிக்கப்பட்டுள்ளனர்.
அவருள் எவனையும் இப்பெரிய அன்பின் வரகுண தேவராகத் துணிதற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை.
ஆயினும் இக்கால ஆராய்ச்சியாளருள் ஒரு சிலர்.
பெயர் ஒன்றே பற்றி, `அவ் இருவருள் ஒருவனே இப் பெரிய அன்பின் வரகுண தேவர்` எனக் கூறுகின்றார்கள்.
அங்ஙனம் கூறு வோருள் ஒரு சாரார்.
`முதல் வரகுணனே இங்குக் குறிக்கப்பட்டான்` என்றும், மற்றொருசாரார், `இரண்டாம் வரகுணனே இங்குக் குறிக்கப் பட்டான்` என்றும் கூறித் தம்முள் மாறுபடுவர்.
அம்மாறுபாடுதானே, `அவ்இருவருள் எந்த ஒருவனையும், இங்குக் குறிக்கப்பட்ட வரகுண தேவர்` எனத் துணிதற்கு ஆதாரம் இன்மையைக் காட்டுவதாகும்.
`அனையவர் ஒருபால் நிற்க` என்க.
பாடு - பெருமை, ``ஓர் பாடும் இன்றி`` என்பதை, `பாடு ஒன்றும் இன்றி` என மாற்றிக் கொள்க.
ஒன்று - சிறிது.
இன்றி - இன்மையல்ல.
சுத்தன் - பரிசுத்தன்.
ஆணவமலம் நீங்கப் பெற்றவன்.
இன்னும் - அநாதி தொட்டு இன்றுகாறும்.
`இன்றும் சுத்தனாய்த் தோன்றாத கடையேனாய் உள்ளேன்` என்க.
தோன்றாத - பிறவாத, ``சுத்தனாய்த் தோன்றாத`` எனவே, அசுத்தனாய்த் தோன்றினமை பெறப்பட்டது.
படவே, `அவர் போலப் பெரும் பதம் பிழைய வரம் பெறல் கூடாதவனா கின்றேன்` என்பதாம்.
இவ்வாற்றால் யான் நின்னை இறைஞ்சுதல் முதலிய வற்றைச் செய்யேனாயினும் அவற்றைச் செய்ய விரும்பும் அளவில் உள்ளேன் என்க.
கண்டாய், முன்னிலை யசை.
உலகனைத்தும் அவனுடையன என்பது கூறுவார் ``நின் உலகனைத்தும்` என்றா ராயினும்.
`உலகனைத்தும்` என வாளா கூறிப் போதலே கருத்து.
``நன்மை தீமை`` என்னும் பண்புகள் அவற்றையுடைய பொருள்மேல் நின்றன.
``ஆனவை`` என்பது எழுவாய் உருபு.
``ஆனவை`` என்றாராயினும்.
`ஆனவை உறவாதல்` என்றலே கருத்து.
`நற்பொருளோடு தீப் பொருளையும் உண்டாக்குதல் உனது கருத்தாகின்ற நிலைமையில் தீமைக்கு இடம் நான் ஒருவனே போதும் (பிறரோ, பிறிதோ வேண்டா) என முடிக்க.
என்னை வகுத்திலையேல் இடும்பைக் கிடம்
யாது சொல்லே
என அப்பரும் அருளிச் செய்தார்.
எனது இயல்பு இதுவாயினும்.
கருதியிருத்தல் ஒன்றே பற்றி எனக்கும் அருள்புரிதல் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாமெல்லாம்`` என்பதை முதலிற் கொள்க.
வழி - நல்வழி.
பிழைத்து - தவறி.
வந்தவா - தாமாக எதிர்வந்த செயல்களை.
செய்து - நன்று தீது ஆராயாமலே செய்து, `பழியாகப் பிழைத்த` என்க.
பிழைத்த - தவறாக ஒழுகிய.
மருது - திருவிடை மருதூர்.
``கருதிடத் தான்`` என்பதில் தான் அசை.
கரந்து - மறைந்து.
`மறைந்து அருவ மாயும் நில்லாது போம்` என்க.

பண் :

பாடல் எண் : 30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
யாந்தெய்வத் தாமரையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலவன் கண்கரத்தினில் கொண்டு` என்க.
`கண்ணைப் பறித்தெடுத்து` என்றபடி.
`மதி ஒன்றும் இல்லேனது` என ஆறாவது விரிக்க.
ஒன்றும் - சிறிதும்.
தாம் - மேன்மை; என்றது புகழை.
`மருத அப்பா, நின் அடியாம் தாமரை சிரத்தினும் ஆய், சிந்தை யுளாகித் தரத்தினும் ஆயது` என இயைத்து முடிக்க.
`இது நின் கருணை இருந்தவாறு` என்பது குறிப்பெச்சம்.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றிற்று.
சிற்பி