சடைய நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

தம்பி ரானைத் தோழமைகொண்
டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது
செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான்
பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார்
ஞாலம் எல்லாம் குடிவாழ.

பொழிப்புரை :

தம் தலைவரான சிவபெருமானையே தமக்குத் தோழராகக் கொண்டு, அப்பெருமானையே, தம் பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போன்ற பரவையாரிடத்துத் தூதாகச் செல்லு மாறு அனுப்பிய எம்பெருமானை, சேரமான் பெருமாள் நாயனாரின் ஒப்பற்ற துணைவரான நம்பியாரூரரை, உலகத்தில் எல்லா உயிர் களும் வாழ்வடையும் பொருட்டுப் பெற்ற பேறுடையவர், சடையனார் ஆவர்.

குறிப்புரை :

`பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற\' (குறள், 61) என்பர் திருவள்ளுவர். அறிவறிந்த மக்கட் பேறுமட்டுமன்று; அருள்நலம் சான்ற மக்கட் பேறாகவும் அமையச் சடையனாரிடத்து நம்பியாரூரர் தோன்றினார். அப்பேறொன்றே சாலும் என்பதால் இவ்வொரு பாடல் வழிநின்றே சடையனாரை ஆசிரியர் போற்றியருளுவாராயினர். சடைய நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி