திருக்கோகரணம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

என்றுமரி யானயல வர்க்கிய லிசைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன் முடிக்கடவு ணண்ணுமிடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடியிமை யோர்பரவு நீடரவமார்
குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப் பொழுதும் காண்டற்கு அரியவன் . இயற்றமிழும் , இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன் . பொன்போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது , ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும் , சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அயலவர்க்கு - அடியார் அல்லாதவர்க்கு . என்றும் அரியான் - எப்பொழுதும் காண்டற்கு அரியவன் . ( என்றும் ) - என் உள்ளத்தில் . இயல் இசைப்பொருள்களாகி - இயற்றமிழ் இசைத்தமிழ் நூல்களின் பயனாகி . நன்றும் ஒளியான் - சிறிதும் ஒளியாமல் நன்கு விளங்குகின்றவன் . ஒளிதந்த பொன்முடிக் கடவுள் - ஒளிபொருந்திய பொன்மயமான சடாமுடியையுடைய சிவபெருமான் , நண்ணும் இடமாம் . ஒன்றியமனத்து அடியர் - ஒருமுகப்பட்ட ( கலையாத ) மனத்தையுடைய அடியார்களோடு . இமையோர் பரவும் - தேவர்கள் துதிக்கின்ற . நீடு அரவமார் - பெரிய ஓசைமிக்க . குன்றுகள் நெருங்கி . தண்டலை - சோலைகள் . வளர் - வளர்கின்ற கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடு மாடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே.

பொழிப்புரை :

பேதைமைக் குணத்தையுடைய இளம்பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தின் மேலேறி , தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார் . அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி , சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற , சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பேதை மடமங்கையொரு பங்கு இடம் - பேதைமைக் குணத்தையுடைய இளம் பெண்ணாகிய உமாதேவியாரை ஒரு பாகமாகிய இடப்புறத்தில் . மிகுத்து - தங்கி மகிழ்ச்சி மிகச் செய்து . இடபமேறி - இடபத்தின் மேல் ஏறி . அமரர் வாதைபட - தேவர்கள் வருத்தம் நீங்க . வண்கடல் - வளம்பொருந்திய கடலில் , எழுந்தவிடம் உண்டசிவன் வாழும் இடமாம் . மாதரொடும் - பெண்களோடும் ஆடவர்கள் வந்து . அடியிறைஞ்சி - பாதங்களை வணங்கி . மாமலர்களைத் தூய் - சிறந்த மலர்களைத்தூவி . ( சாத்திய ) கோதை திருமாலைகளில் . வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள் . இசைகொள் கீதம் - இசையோடு பொருந்திய பாடல்களை . முரல்கின்ற - பாடுகின்ற . வளர்கோகரணம் - கீர்த்திமிகுந்த கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய்
மறைத்திற மறத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடம்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு சாரன்மலி கோகரணமே.

பொழிப்புரை :

கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவ பெருமான் முறையோடு உபதேசித்தார் . வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு , மூங்கில்களைத் தள்ளி , மதகுகளைச் சிதைத்து , யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும் .

குறிப்புரை :

ஆலம் நிழல்வாய் - கல்லாலின் நிழலில் . முறைத்திறம் - உபதேசிக்கும் முறையின் வகைப்படி . பொருள் தெரிந்து - பக்குவ நிலையை அறிந்து . முனிவர்க்கு - முனிவர்களுக்கு . அருளி - அருள் கூர்ந்து . மறைத்திறம் அறத்தொகுதி - வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப்பொருள்களையும் . கண்டு உபதேசித்துச் சமயங்களை வகுத்தவன் இடம் - உண்டாக்கியவரான சிவபெருமானது இடமாம் . துறைத்துறை - ஒவ்வொரு துறைகளிலும் . அருவிநீர் . தூமலர் - தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு . வரையுந்தி - மூங்கில்களைத் தள்ளி . மதகைக் குறைத்து - மதகுகளைச் சிதைத்து . கரி அறையிட - யானை பிளிற . புரிந்து - செய்து . இடறு - மோதும் படியான . சாரல் - சாரலையுடைய கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கவெரி வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தவழ கன்றனிடமாம்
மலைத்தலை வகுத்தமுழை தோறுமுழை வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய சூலப் படையை உடையவன் . எட்டுக்கரங்களை உடையவன் . நெருப்பைக் கையிலேந்தி எண்தோள் வீசி நடனம் ஆடுபவன் . தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கியவன் . அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும் , சிங்கங்களும் , பன்றிகளும் , யானைகளும் , கொம்பாற் கொல்லுதலையுடைய இளம் பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும் தலமாகும் .

குறிப்புரை :

இலைதலை மிகுத்தபடை - இலைபோன்ற நுனியையுடைய சூலம் முதலிய பல ஆயுதங்களையேந்தி . எண்கரம் எட்டுக்கைகளிலும் ( விளங்க ) எரி வீசி - நெருப்பை ஒளிவீச ஏந்தி . முடிமேல் - தலையில் . அலைத்து அலை தொகுத்த - மிகுந்த அலைவீசுதலைக்கொண்ட . புனல் - கங்கைநீரை , செஞ்சடையில் வைத்த அழகன்தன் இடமாம் . மலைத்தலை வகுத்த - மலையின் இடங்களில் அமைந்த . முழைதோறும் - குகைகள்தோறும் . உழை - மான்களும் . வாள் அரிகள் - ஒளிபொருந்திய சிங்கங்களும் . கேழல் - பன்றிகளும் . களிறு - யானைகளும் . கொலைத்தலை - கொம்பாற் கொல்லுதலையுடைய . மடப்பிடி - இளம் பெண்யானைகளும் . கூடி விளையாடி . நிகழ் - வசிக்கின்ற கோகரணம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தலைமாலை அணிந்தவர் . சடையில் கொன்றை , எருக்கு , அலரி , வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர் . எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும் .

குறிப்புரை :

தொடைத்தலை மலைத்து - தலைமாலையை அணிந்து . முடியின் சடைத்தலை . இதழி - கொன்றைமலரையும் . எருக்கு - எருக்க மலரையும் . அலரி - அலரிமலரையும் . வன்னி - வன்னிப் பத்திரங்களையும் . மிலைச்சிய - அணிந்த , எம்ஆதி - எமது முதல்வராகிய சிவபெருமான் . பயில்கின்ற இடமாம் - வாழ்கின்ற இடமாம் . படைத்தலைபிடித்து - ஆயுதங்களின் அடிப்பாகங்களைப்பற்றி . மறம் - வெற்றி பொருந்திய . வாளர்களொடு - வாளாயுதத்தையேந்திய வீரர்களுடனே . வேடர்கள் பயின்று . குழுமி - வேடர்கள் நண்பு கொண்டு கூடி . அலைநதி - அலைகளையுடைய நதியில் . குடைத்து - குடைந்து . பாடிய - முழுகி ( வணங்க ). நின்று - ( அவர்க்கு எதிரில் தோன்றி ) நின்று . பழி - பழிபாவம் முதலியவை . தீர - நீங்குமாறு . நல்கு - அருள்புரியும் கோகரணம் . குடைந்து எதுகை நோக்கி வலித்துக் குடைத்து ஆயிற்று.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர் . திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும் , மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும் .

குறிப்புரை :

திருமேனிமிசை , நீறு ஆடி - விபூதி பூசி . வார் கழல் சிலம்பு நிறை ஒலி செய - கச்சிறுக்கிய கழலும் சிலம்பும் நிறைந்த ஒலி செய்ய . ஏறு - இடபமானது . விளையாட விசைகொண்டு - விளையாடுவதைப் போற் செல்ல விசையாகச் செலுத்தி . இடுபலிக்கு வரும் - மாதர் இடும் பிச்சைக்கு வருகின்ற , ஈசன் இடமாம் . ஆறு சமயங்களும் - ஆறுசமயத்தவர்களும் , விரும்பி , அடிபேணி - திருவடியைக்கருதி . அரன் ஆகமம் மிகக்கூறு - சிவபெருமானது ஆகம நெறிகளைப் பயன் மிகும்படி சொல்லுகின்ற கோகரணம் . ( மனம் ) வேறு இரதி வந்து - உலக இன்பத்தின் வேறான சிவானந்தம் விளைய . அடியர் - அடியார்கள் . கம்பம் வரு - அவ்வானந்தம் மேலீட்டால் உடல் நடுக்கம் வரப்பெறுகின்ற கோகரணம் - திருக்கோகரணமே . ` ஆகம் விண்டு கம்பம் வந்து ` ( தி .8 திருச்சதகம் . 72)

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கல்லவட மொந்தைகுழ றாளமலி கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவ ராளுநக ரென்பரயலே
நல்லமட மாதரர னாமமு நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே.

பொழிப்புரை :

ஓசைமிகுந்த கல்லவடம் , மொந்தை , குழல் , தாளம் , வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவபெருமான் நடன மாடுவார் . அக்குப்பாசி அணிந்த இடுப்பில் , நச்சுப்பற்களும் , படமும் உடைய பாம்பை அணிந்து கோவணஆடை உடுத்தவர் . அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண , நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக , கொல்லும் விடநோய் போன்ற வினைகளைத் தீர்த்து , காரியம் யாவினும் வெற்றி கொடுத்தருளும் திருக்கோகரணமாகும் .

குறிப்புரை :

மலி - ஓசை மிகுந்த . கல்லவடம் மொந்தை குழல் தாளம் கொக்கரையர் - கல்லவடம் முதலாகவுள்ள இவ்வாத்தியங்களுக்கேற்ப நடிப்பவர் . அக்கு அரைமிசை - அக்குப்பாசி அணிந்த இடுப்பில் , பல்லபட நாகம் - விடப்பல்லையும் படத்தையும் உடைய பாம்பை . விரி கோவணவர் - விரித்துப் புனையும் கோவணமாக உடையவர் ஆகிய சிவபெருமான் ஆளும் நகர் என்பர் . அயலே - அருகில் . நல்ல மடமாதர் - நற்குண நற்செய்கையுடையவர்களாகிய பெண்கள் . அரன் நாமம் - சிவபெருமானது திருப்பெயரை . நவிற்றிய - சொல்லும் . திருத்தமும் முழுக - தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்ய . தீர்த்தத்தின் பெயர் கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வரைத்தல நெருக்கிய முருட்டிரு ணிறத்தவன வாய்களலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரவதன்மேல்
குரைத்தலை கழற்பணிய வோமம்வில கும்புகைசெய் கோகரணமே.

பொழிப்புரை :

முரட்டுத்தனமும் , இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி , தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக் கயிலைமலையின்கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , முனிவர்களும் , வேத வல்லுநர்களும் வினைதீர , ஒலிக்கின்ற கழலணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து , அரநாமத்தினை ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும் .

குறிப்புரை :

வரைத்தலம் - கயிலை மலையில் . முருடு - கடின இயல்பையுடைய . இருள் நிறத்தவன் - இருண்ட நிறத்தையுடைய இராவணனின் . வாய்கள் - பத்து வாய்களும் . அலற - அலறும்படி . நெருக்கிய - ( அவனை ) அடர்க்கும் பொருட்டு . விரல்தலை - விரலின் நுனியின் . உகிர் - நகத்தை . சிறிது வைத்த - சிறிதே வைத்த , பெருமான் இனிதுமேவும் இடமாம் . புரைத்தலை கெடுத்த - குற்றப்படும் இடத்தை ஒழித்த . முனிவாணர் பொலிவாகி - முனிவர்கள் விளங்கி . வினைதீர - கன்மங்கள் ஒழிய . அதன்மேல் - அதன்பயனாக . குரைத்து அலை - ஒலித்து அசையும் - கழல் . பணிய - வணங்க . ஓமம் - வேள்வி . விலகும் - மேலே கிளம்பும் . புகைசெய் - புகைபரவுகின்ற கோகரணமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வில்லிமையி னால்விற லரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடவெரி யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமு மிறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையி லிளங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே.

பொழிப்புரை :

வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும் , வேதத்தை ஓதும் பிரமனும் , தம்முள் மாறுபட்டு இல்லையென்றும் , உள்ளது என்றும் அறியமுடியாதவாறு தேட , நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ பெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , எல்லையாக அளவுபடுத்திய கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும் , தேவலோகத்தவரும் வணங்க , தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும் .

குறிப்புரை :

வில்லிமையினால் - வில்தொழிலால் , விறல் அரக்கன் . உயிர் செற்றவனும் - வெற்றியையுடைய இராவணனது உயிரை அழித்த திருமாலும் . வேத முதலோன் ( உம் ) - பிரமனும் . இகலி இல்லையுளது என்று நேட - தம்முள் மாறுபட்டு இல்லை என்றும் உள்ளது என்றும் அறிய முடியாதவாறு தேட . எரியாகி - நெருப்பு வடிவமாகி . உயர்கின்ற - ஓங்கிய . பரன் - மேலான கடவுளின் . ஊர் - ஊராகும் . எல்லையில் வரைத்த கடல் வட்டமும் - எல்லையாக அளவு படுத்திய கடலாற் சூழப்பட்ட பூமியும் , ( தேவலோகமும் ) இறைஞ்சி - வணங்கி . நிறை - நிறைகின்ற ( கோகரணம் ) வாசம்உருவ - வாசனை ( கூந்தலில் இருந்து ) திக்குகளிற் சென்று பாய்ந்து உருவ . கொல்லையில் - தினைப்புனங்களில் . இளம்குறவர் . தம் மயிர் புலர்த்தி - தமது கூந்தலைக் காயவைத்து . வளர் - பெருகுகின்ற கோகரணமே . குறவர் என்பது மயிர் புலர்த்தல் என்னுந் தொழிலினால் ஆண்பாலை யொழித்தது . இது , தொழிலிற் பிரிந்த ஆண் ஒழிமிகுசொல் . இவர் வாழ்க்கைப்பட்டாரென்பது போல . ` பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல்கூடா வழக்கு வழிப்பட்டன `. ( தொல் . சொல் . 50.)

பண் :சாதாரி

பாடல் எண் : 10

நேசமின் மனச்சமணர் தேரர்க ணிரந்தமொழி பொய்களகல்வித்
தாசைகொண் மனத்தையடி யாரவர் தமக்கருளு மங்கணனிடம்
பாசம தறுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னனவனைக்
கூசவகை கண்டுபி னவற்கருள்க ணல்கவல கோகரணமே.

பொழிப்புரை :

உள்ளன்பில்லாத சமணர்களும் , புத்தர்களும் கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி , தன்னிடத்து ஆசைகொள்ளும் படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி , அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும் .

குறிப்புரை :

நேசம் இல் - உள்ளன்பில்லாத . மனத்து அமணர் - மனத்தையுடைய சமணர்களும் . தேரர்கள் - புத்தர்களும் . நிரந்த மொழி - ஒழுங்குடையதுபோற்கூறும் சொற்கள் . பொய்ச்சொற்களாம் . அகல்வித்து - நீக்கி . ஆசைகொள் மனத்து - தன்னிடத்தில் ஆசை கொள்ளும்படியான மனத்தையுடைய , அடியாரவர் தமக்கு அருளும் , அங்கணன் சிவபெருமானது இடம் . அவனியில் - பூமியில் . பெயர்கள் பத்துடைய அரசனான அர்ச்சுனனைப் பாசமது அறுத்து , கூச - நாண வகைகண்டுபின் . அவற்கு . அருள்கள் நல்க வல - அவருக்கு வரங்கள் கொடுக்க வல்லதாகிய கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கோடலர வீனும்விரி சாரன்மு னெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவ ரெத்திசையு மாள்வர்பர லோகமெளிதே.

பொழிப்புரை :

காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , ஆராய்ந்த தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகி எல்லாத் திசையும் ஆள்வர் . பின் சிவலோகமும் எளிதில் அடைவர் .

குறிப்புரை :

கோடல் அரவீனும் - காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற . விரி - அகன்ற . சாரல் - மலைச்சாரல் . முன் நெருங்கி - முன் அணித்தாய் ( தோன்ற ) வளர் - வளம் பெருகும் கோகரணமே , ஈடம் ஆக - இடமாக இனிது தங்குவான் . அடிகள் பேணி - திருவடிகளைக் கருதி . நாடிய தமிழ்க் கிளவியின் இசை செய் - ஆராய்ந்த தமிழ்ச் சொற்களால் இனிய இசைப்பாடல்களாகப்பாடிய . ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்ல பத்தர்கள் , அதன் பயனாக எத்திசையும் ஆள்வர் - ( அரசராகி ) எல்லாத் திசையும் ஆளுபவராவர் . ( பின் ) பரலோகம் ( உம் ) - மேலான முத்தியுலகமும் . எளிதில் அடையத் தகுவது ஆகும் . ஈடம் - நீட்டல் விகாரம் .
சிற்பி