பண் :

பாடல் எண் : 70

போற்றிஇப் புவனம் நீர்தீக்
காலொடு வான மானாய்
போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றிஎல் லாஉ யிர்க்கும்
ஈறாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள்நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே. 

பொழிப்புரை :

பஞ்ச பூதங்களாக இருப்பவனே! எல்லா உயிர் களுக்கும் பிறப்பிடமாய் இருப்பவனே! பிறப்பு இல்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் இறுதியும் உனக்கு இறுதி இன்மையும் ஆனவனே! ஐம்புலன்களும் தொடரப்பெறாத மாயத்தை உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``தோற்றமாகி``, ``ஈறாய்`` என்றவற்றில், `தோற்றம், ஈறு` என்றவை, `அவற்றிற்குக் காரணன்` எனப் பொருள் தந்தன.
``ஆனாய்`` எனவும், ``இல்லாய்`` எனவும் வந்தன, விளிகள். புணர்க்கை - புணர்ப்பு; சூழ்ச்சி; என்றது, வல்லமையை.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 71

புணர்ப்ப தொக்க எந்தை என்னை யாண்டு
பூண நோக்கினாய்
புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ
டென்னொ டென்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு
நின்க ழற்கணே
புணர்ப்ப தாக அங்க ணாள புங்க
மான போகமே.

பொழிப்புரை :

ஆண்டவனே! உன்னோடு மாறுபட்டுத் திரிகின்ற அடிமையை நால்வகை உபாயங்களாலும் உன்னடிமை என்று உன் னோடு கூட்டிக் கொள்வது போல, மெய்யடியார் குணங்கள் ஒன்றும் இல்லாத என்னை, ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளித் தடுத்து ஆட் கொண்டு மெய்யடியார் மீது வைக்கும் அருள் நோக்கத்தை அடியேன் உணர்வுக்கு உள்ளும் புறமுமாக வைத்தருளினை! பிரமாதிகளுக்கும் அரிய இவ்வருள் நோக்கம் அடியேனுக்குக் கிடைத்தல் அரிதென்று அதன் அருமை அறிந்தபோது எனதாயிருந்த சகசமலம் ஒன்றும் என்னை நின்னொடு இரண்டறக் கூட்டுவதாகவும், இப் பிரபஞ்சத்தின் மேல் நின்ற அன்பு உன் திருவடிக்கண் மீளாது நிற்பதாக வும் ஆயின. அழகிய கண்ணாளா! திருமால், பிரமன் அகியவருடைய உலக போகங் களையும் கடந்து இருக்கும் சிவானந்த போகமே! இந்தக் காருண்ணி யத்துக்கு நாயேனால் செய்யப்படுவதாகிய கைம்மாறும் உண்டோ?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப்பகுதியில் அடிகள் இறைவன் மாட்டு முறுகி எழும் பேரன்பினையே சிறப்பாக வேண்டிப் பாடுகின்றார். அன்பே இன்பிற்குக் காரணம் ஆதலின், இதற்கு, `ஆனந்தத்தழுந்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர்!
புணர்ப்பது ஒக்க - என்னை உன்னுடன் இரண்டறச் சேர்த்துக்கொள்வதுபோலவே. `ஒக்கவே` என்னும் தேற்றே காரம், தொகுத்தலாயிற்று. இதனால், இறைவன் மாட்டுக் குறையின்மை பெறப்பட்டது. பூண நோக்கினாய் - நிரம்பத் திருவருளை நல்கினாய். நோக்குதல் அருளுதலாதலை, `கண் பார்த்தல்` எனக் கூறும் வழக்குப் பற்றி உணர்க. ``புணர்ப்பது`` நான்கில் இடை இரண்டனுள் அது, பகுதிப்பொருள் விகுதி. இது புணர்ப்பன்று என்றபோது இது நின்னொடு என்னொடு என் ஆம் - இங்ஙனம் நல்கிய அருள் என்னை நின்னொடு ஒன்றாகச் செய்யும் உபாயம் அன்று எனப்பட்ட பொழுது. இவ்வருள் உன்னோடு என்னிடை என்ன பயனை உடையதாம்? `இஃது உபாயம் அன்று எனப்பட்டது` என்றது, அருள் புரிந்த உடனே இறைவனுடன் ஒன்றுபடாமல் உலகில் நின்று விட்டமையை யாவரும் அறிந்தமைபற்றி. இங்ஙனம் அருளியது அருளின் மாட்டாமை கூறியதன்று; தமது பக்குவம் இன்மை கூறியதாம். இது புணர்ப்பாக அன்றாக - இவ்வருள் என்னை உன்னோடு ஒன்று படுத்தும் உபாயமாகுக, அன்றாகுக; என்றது, இதற்குமேல் செயற்பாலதனை நோக்கல் வேண்டும் என்றபடி. அன்பு நின்கழற்கண் புங்கமான போகம் புணப்பதாக - இனி அன்பென்னும் உபாயமே உனது திருவடிக்கண் உண்டாகும் பேரின்ப நுகர்ச்சியில் என்னைச் சேர்ப்பதாக; `அத்தகைய அன்பினை எனக்கு அருளுதல் வேண்டும்` என்பது கருத்து. எனவே, `திருவருள் பயன்படுவது அன்புடையாரிடத் தேயாம் என்பது பெறப்பட்டது. அடிகள் அன்பில்லாதவரல்லர்; அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவரது (தி.8 கீர்த்தித் திருவகவல் - 130.) அன்பு போன்ற அன்பும், கண்ணப்பரது (தி.8 திருக்கோத்தும்பி - 4) அன்பு போன்ற அன்பும் தமக்கு இல்லை என்பதையே குறித்தருளுகின்றார். புங்கம் - உயர்ச்சி.

பண் :

பாடல் எண் : 72

போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த
ராதி இன்பமும்
ஏக நின்க ழல்இ ணைய லாதி
லேனென் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி
அஞ்ச லிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆற
தாக ஐயனே. 

பொழிப்புரை :

ஐயனே! இந்திரன் முதலியோருடைய போகங் களையும் விரும்பிலேன். உன் திருவடியையன்றி மற்றோர் பற்று மிலேன். என்கைகள் உன்னை அஞ்சலிக்கவும் என் கண்களில் நீர் ஆறு போலப் பெருகவும் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

போகம் வேண்டி - இன்பத்தை விரும்பி. `புரந்த ராதிகளது இன்பமும் வேண்டிலேன்` என்க. புரந்தரன் - இந்திரன். ``இன்பம்`` என்றது இன்ப வாழ்க்கையை. `மக்களுள் மன்னர் முதலியோரது வாழ்வையேயன்றி` எனப் பொருள் தருதலின், ``இன்பமும்`` என்ற உம்மை, இறந்தது தழுவிற்று. ஏக - ஏகனே. ``இலேன்`` என்றதற்கு, `பற்றுக்கோடு` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. இதன்பின் `ஆதலின்` என்பதும் எஞ்சிநின்றது. ஆகம் - உடம்பு. விண்டு - உருகி. கம்பம் - நடுக்கம். வந்து - வரப்பெற்று; இதனை, `வரப்பெற` எனத் திரித்துக்கொள்க. குஞ்சி - தலைமயிர். `என் கை குஞ்சிக்கண் அஞ்சலித்தற்கண் ஆக` என்க. அஞ்சலித்தல் - கும்பிடுதல். `என்கை குஞ்சிக்கண் அஞ்சலியாக` எனினுமாம். `கண் களில் தாரை ஆறதாக` என்க. `தாரை - இடையறாது விழும் வீழ்ச்சி. `அதனையுடைய ஆறு` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. ``ஆறதாக`` என்றது பன்மை ஒருமை மயக்கம். `இந்திராதியரது இன்பங்களை உவர்த்து உனது திருவடியொன்றினையே பற்றுக் கோடாகக் கொண்டவரிடத்து இத்தகைய அன்பின் நிகழ்ச்சிகள் நிகழு மன்றே; அடியேன் அவை நிகழப் பெற்றிலேன்` என்று இரங்கி, அவற்றை வேண்டியவாறு. `கழலிணை` என, விகாரமின்றியே ஓதுதல் பாடமாகாமை யறிக.

பண் :

பாடல் எண் : 73

ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர்
பற்று வஞ்சனேன்
பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை
யேன்என் எம்பிரான்
மைக லந்த கண்ணி பங்க வந்து
நின்க ழற்கணே
மெய்க லந்த அன்ப ரன்பெ னக்கு
மாக வேண்டுமே. 

பொழிப்புரை :

ஐயனே! உன்னையன்றி வேறொரு பற்றிலேன். நான் முழுப் பொய்யனாயினும் உன் திருவடியை அடைந்த மெய்யன்பரது அன்பு போன்ற அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பற்று - துணை. பொய் - நிலையில்லாத உலக வாழ்க்கை, `அதனைக் கலந்ததல்லது வேறு பேறில்லேன்` என்றது, திருவடிப்பேற்றினைப் பெறாமைக் கருதி. பொய்ம்மை ஏன் - `எனக்கு உலகவாழ்க்கையில் பற்றில்லை` என்று சொல்லுகின்ற பொய்ம்மையை நான் ஏன் சொல்லவேண்டும்? சொல்லமாட்டேன்; `ஆதலின் எனக்குத் துணைபுரிய வேண்டும்` என்றபடி. `நின் கழற் கணே வந்து மெய்கலந்த அன்பர்` என்க.
மெய் - நிலைபெற்ற இன்பம். ஆக வேண்டும் - உண்டாக வேண்டும். முதற்றொடரை இறுதியிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 74

வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
என்ற ருளுநீ
பூண்டு கொண் டடிய னேனும் போற்றி
போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
நின்வ ணங்கவே. 

பொழிப்புரை :

இறைவா! எனது உயிர்போதத்தை நீக்கிச்சிவ போதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குத்துன்பம் இல்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மன்ன, நின் கழற்கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே வேண்டும்; அதன்பொருட்டு நீ நாயினேனை ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு; அடியனேனும், மாண்டு மாண்டு வந்து வந்து பூண்டுகொண்டு போற்றி போற்றி என்று மென்றும் நின் வணங்க` எனக் கூட்டியுரைக்க,
இஃது, `இப்பிறப்பில் அத்தகைய பேரன்பு அடியேனுக்கு எய்தாதாயின், பல பிறப்புக்கள் பிறந்தாயினும் அதனைப் பெறு வேனாக` என்றபடி. எனவே, ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு தலும் அப்பிறவிதோறும் என்பதாயிற்று.
ஆவ என்று - ஆஆ என்று இரங்கி. பூணுதல், அத்திருவரு ளை. `என்றென்று` என்னும் அடுக்குச் சிறப்பும்மையுடன் நின்றது. வண ங்க, அகர ஈற்று வியங்கோள். இதனால், இறைவன் திருவடிக்கண் பொய்யற்ற மெய்யன்பைப் பெறுதல் எத்துணை அரும்பேறு என்பது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 75

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
நான்கும் ஓலமிட்டு
உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ
லோநி னைப்பதே. 

பொழிப்புரை :

உமாதேவி பங்கனே! மண்ணுலகும் விண்ணுலகும் உன்னை வணங்கி நிற்கும். நான்கு வேதங்களும் உன்னையறிய முயன்று அறியவொண்ணாமையால் இளைக்கும். அவ்வாறான பின்பு, யாம் உன்னை வணங்கி உன் திருவடியை விடோம் என்று சொல்ல, நீ வந்து எமக்கு அருள் செய்தற்கு உன் திருவுளம் யாதோ?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மங்கை பங்க, நின்னை மண்ணும் விண்ணும் வணங்கும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும்; இவற்றால், மற்றோர் மெய்ப்பொருள் இல்லாமை தெளியப்படுதலின், யாம் நின்னை எய்தலுற்று வணங்கி, `விடேங்கள்` என்று கூறி நிற்கவும், வந்துநின்று அருளுதற்கு நினைப்பது என்கொலோ`. `ஓலம் இடுதல்` என்பது இங்கு, `துதித்தல்` என்னும் பொருளது. உணங்கும் - இளைக்கும். `விடேம்` என்னும் தன்மைப் பன்மை முற்றுவினை,
`கள்` என்னும் விகுதிமேல் விகுதியைப் பெற்றது. `என்னவும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வந்து நின்று - மீளத் தோன்றிநின்று. அருளுதல் - பொய்ம்மை தீர்ந்த மெய்யன்பினைப் பெறச் செய்தல். இணங்கு - நெருங்கிய. நினைப்பது - நினைத்தல்; ஆராய்தல். `இனி உன்னை யாங்கள் பிரிவதில்லை என்று உறுதி கூறவும், எங்களுக்கு அருள் செய்ய ஆராய்வது என்னை` என்றபடி. இதனுள், தம்மைப் பன்மையாக அருளினார்.

பண் :

பாடல் எண் : 76

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.

பொழிப்புரை :

பரமனே! உலகனைத்தும் ஆகியிருக்கிறான். எனினும் அவனை அநுபூதியில் அடைவதற்கு மனம் உதவாது; வாக்கு உதவாது; ஐம்பொறிகளும் உதவமாட்டா. அந்தக் கரணங்கள் யாவும் பிரபஞ்சத்தை நுகர்வதற்கே உதவுகின்றன. பஞ்சபூதப் பொருளாகிய பரமனை வழிபடுதற்குச் சிறிதேனும் அவைகள் பயன்படா.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``நினைப்பதாக`` என்றதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. ஏய - பொருந்த. ``சொல்லல்`` என்றது, சொல்லப்படும் பொருள்களைக் குறித்தது. `ஆவன` என்பது, அன்பெறாது நின்றது. கேட்பவே - அறிந்தார் சொல்லக் கேட்பனவே; சொல்வோர் கேள்வியுணர்வே உடையவர் என்க.
காண்கிலா - காணமாட்டா; இதன்பின், `இங்ஙனமாகலின்` என்பது வருவிக்க. `எந்தை பாதம் எய்த எனைத்தெனைத்தது, எப்புறத்தது` எனக் கூட்டுக.
நினைப்பு அது ஆக - இவ்வாறாயினும், என் எண்ணம் நின்பாதத்தை எய்துதலாகிய அதுவேயாகுக. `நினைபஃதாக` எனப் பாடம் ஓதினும் அமையும். `மனம் செல்லும் அளவில், வாக்குச் செல்லாது. மற்று, அஃது உன்னைப்பற்றிப் பலவற்றைச் சொல்லுகின்றதே என்றால், அவையனைத்தும் பிறர் சொல்லியவற்றைக் கேட்டு அங்ஙனமே சொல்வனவன்றி வேறில்லை. ஐம்புலன்கள் அடியோடு உன்னை அணுகவே மாட்டாது நிற்கும் என்றால், உனது பாதத்தை உயிர்கள் அடைதல் என்பது எந்த அளவில் இயல்வது! எத்துணைச் சேய்மையில் உள்ளது! ஆயினும், எண்ணம் மாறாதிருப்பின் என்றேனும் எய்தலாம்` என்றபடி. ``வைத்த உள்ளம் மாற்ற வேண்டா, வம்மின்மனத் தீரே`` என ஆளுடைய நம்பிகளும் அருளிச்செய்தார் (தி.7.ப.7.பா.1).
``புலன்கள்`` என்றது பொறிகளை. அவை இறைவனை அணுக மாட்டாமைக்கு ஏதுக்கூறுவார், ``அனைத்துலகுமாய நின்னை`` என்றார். `அனைத்துலஃகும்` என்பதே பாடமாதல் வேண்டும்.
``எய்த`` என்ற வினையெச்சம் தொழிற் பெயர்ப் பொருள் தந்தது; `எய்தலே` என்பதே பாடம் எனினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 77

எய்த லாவ தென்று நின்னை எம்பி
ரான்இவ் வஞ்சனேற்கு
உய்த லாவ துன்க ணன்றி மற்றொ
ருண்மை யின்மையின்
பைத லாவ தென்று பாது காத்தி
ரங்கு பாவியேற்கு
ஈத லாது நின்க ணொன்றும் வண்ண
மில்லை யீசனே. 

பொழிப்புரை :

சிவனே! நான் உன்னை அடைய இருப்பது எப்பொழுதோ? எனக்கு உன்னையன்றி வேறு புகலிடம் இல்லாமை யால், என் துன்பத்தை நோக்கி இரங்கிக் காத்தருளல் வேண்டும். இவ்வாறு நீயே ஆட்கொண்டருளினாலன்றி, நான் உன்னை அடையும் வகையில்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `எம்பிரான், ஈசனே, நின்னை யான் எய்தலாவது என்று? வஞ்சனேற்கு உய்தலாவது நின்கண் (ஒன்றுதலாகிய உண்மை) யன்றி மற்றொர் உண்மை இன்மையின் (நீ என்னைப் புறக்கணித்துவிட்டால்) ஆவது பைதல் என்று நினைந்து பாவியேற்கு இரங்கிப் பாதுகாத்தருள்; ஈதலாது (யான்) நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை`.
``ஆவது`` மூன்றில் முதலது, உண்டாவது; இடையது, இடைச்சொல், இறுதியது, விளைதல். பைதல் - துன்பம். ``பாதுகாத்து இரங்கு`` என்றதனை, `இரங்கிப் பாதுகா` எனப் பின் முன்னாக்கி உரைக்க. ``ஈது`` என்றது, இதனையே சுட்டிற்று.
ஒன்றும் வண்ணம் - ஒன்றாதற்கு வழி; அன்றி, `வண்ணம் ஒன்றும் இல்லை` என மாற்றி, `இதுவல்லது உன்னிடம் நான் வேண்டு வது ஒன்றும் இல்லை` என்று உரைத்தலுமாம். மூன்றாம் அடியில் ``பைதல்`` என்றதன் முதலெழுத்து ஒன்றரை மாத்திரையாய் நின்று எதுகையாயினமையின், நான்காம் அடியின் முதலெழுத்து இரண்டு மாத்திரையாய் நின்று எதுகையாயிற்று. மூன்றாமடியில், `பய்தல்` என்று பாடம் ஓதுதலும், அவ்விடத்து, `நான்காம் அடியின் முதலெழுத்து ஓசையொப்புமையான் எதுகையாயிற்று; இன்னோரன்னவை உயர்ந்தோர் செய்யுட் கண்வரும் ஒப்பியல் என்று உரைத்தலுமே சிறப்புடைய வாம். இவ்வொப்பியலை, `ஆரிடப் போலி` என்பர்.

பண் :

பாடல் எண் : 78

ஈச னேநீ அல்ல தில்லை இங்கும்
அங்கும் என்பதும்
பேசி னேனொர் பேத மின்மை பேதை
யேனென் எம்பிரான்
நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம
லாஓர் நின்னலால்
தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி
யாது சிந்தையே.

பொழிப்புரை :

இறைவா! இவ்வுலகம் அவ்வுலகம் ஆகிய எல்லாம் நீயே ஆகியிருப்பதால், உனக்கு வேறான பொருள் ஒன்றும் இல்லை என்று என் அறிவுக்கு எட்டியவாறு நான் கருதுவேன். அங்ஙனம் எண்ணவில்லையேல் நான் நீசன் ஆவேன். உனக்குப் புறம்பாக வேறு ஒரு பொருள் இல்லாததால் நீ பரம்பொருள். எங்கும் ஒரே ஒளிப்பிழம்பாக நீ இருப்பதால் நான் சிந்திப்பதற்கு மற்றோர் ஒளி வடிவம் ஏதும் இல்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `ஈசனே, எம்பிரான், நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா, தேசனே, இங்கும் அங்கும் நீயல்லது இல்லை என்பதும், ஓர் பேதம் இன்மையும் பேதையேன் பேசினேன்; என் சிந்தை, ஓர் நின்னலால் ஓர் தேவர் உண்மை சிந்தியாது` எனக் கூட்டி, `ஆதலின் எனக்கு இரங்கியருள்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
இங்கும் - உலக நிலையிலும். அங்கும் - வீட்டு நிலையிலும். இல்லை - வேறு துணை இல்லை. ஓர் பேதம் - சிறிது வேற்றுமை; என்றது, எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்றல்.
`ஓர் பேதமும்` என்னும் இழிவு சிறப்பும்மையும், `இன்மை யும்` என்னும் எண்ணும்மையும் தொகுத்தலாயின.
ஓர் நின்னலால் - ஒப்பற்ற உன்னையன்றி. `பேதமின்மையை எடுத்தோதியது` எல்லாவற்றையும் சிவமாகக் காணும் உணர்வு பெற்றமையைக் குறித்தற்கு.

பண் :

பாடல் எண் : 79

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில்
ஐம்பு லன்களான்
முந்தை யான காலம் நின்னை எய்தி
டாத மூர்க்கனேன்
வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம்
வெள்கி விண்டிலேன்
எந்தை யாய நின்னை இன்னம் எய்த
லுற்றி ருப்பனே. 

பொழிப்புரை :

மனம் முதலியவற்றால் முற்காலத்தில் உன்னை அடையாத மூர்க்கனாகிய நான், வெந்தொழிந்தேனில்லை. என் மனம் குன்றி, வாய் விட்டலறினேனில்லை. இன்னும் உன்னையடைய நினைத்திருக்கிறேன்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், ``செய்கை`` என்றது, அதற்குக் கருவியாகிய கன்மேந்திரியங்களைக் குறித்தன. இசை யோசையைக் கேட்கும் வழியன்றி எழுத்தோசையைக் கேட்கும் வழிச் செவி ஐம்பொறிகளின் வேறு வைத்து எண்ணப்படுமாகலின், அதனை, `கேள்வி` என வேறாக ஓதினார். சீர் இல் - சிறப்பில்லாத. இது தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். ``புலன்கள்`` என்றது பொறிகளை. மெய்ந்நெறியில் தொழிற்படும் கருவி கரணங்கள் சிறப்புடையன (வீட்டுநிலையின) ஆகலின், உலகியலிற் செல்லும் அவற்றை, `சிறப்பில்லன` என்றார். `சிறப்பில்லன` என்றது, `இழிவுடையன` என்னும் பொருட்டு. இழிவு, பிறவியில் வீழ்த்தல். இம் முதலடியில், அடிகள் இறைவனை அடைதற்குத் தடைசெய்தவற்றை விதந்தோதியருளினார், முந்தை யான காலம் - முதலாய் நின்ற காலம்; அஃது இறைவனால் ஆட் கொள்ளப்பட்ட காலமாம். இதற்கு, `ஆட்கொள்ளப்படுதற்கு முற்பட்ட காலம்` என உரைப்பாரும் உளர். அப்பொழுது எய்தாதொழிந் தமைக்கு அடிகள் இத்துணை இரங்குதற்கு ஓர் இயைபின்மையின், அஃது உரையாகாமை அறிக. விழுந்திலேன் - அழிந்திலேன். இனி, ``வெந்து விழுந்திலேன்`` என்றதனை, `விழுந்து வெந்திலேன்` எனப் பின் முன்னாக்கி, `தீயின்கண்` என்பதனை வருவித்து உரைப்பாரும் உளர். உள்ளம் வெள்கி விண்டிலேன் - நெஞ்சம் வெள்கிப் பிளந்திலேன். `நின்னை எய்தலுற்று இன்னம் இருப்பன்` என்க. எய்தலுற்று - எய்த விரும்பி. இருப்பன் - உயிர்வாழ்வேன். `அன்று நீ அழைத்த காலத்தில் அடையாது, இன்று அடைவதற்கு அவாவு கின்றேன்; இஃது என் அறியாமை இருந்தபடி` என்பதாம். முன்னர் இறைவனது குறிப்பின்வழிச் செல்லாது தம் குறிப்பின்படியே நின்றமை குறித்து, `மூர்க்கனேன்`` என்று அருளிச்செய்தார். `அம் மூர்க்கத் தன்மையின் பயனை இப்போது அடைகின்றேன்` என வருந்தியவாறு. இத் திருப்பாட்டு, அடிகளது உண்மையுள்ளத்தை எத்துணைத் தெளிவாகக் காட்டுகின்றது!
சிற்பி