பண் :
பாடல் எண் : 90
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே.
பொழிப்புரை :
இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.
குறிப்புரை :
ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை
``யானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் சிறப்புணர்த்தி நின்றது. சிறப்பு, `உறுப்பும், பண்பும்` ஆகியவற்றிற்கு முதலாய் நிற்றல். ``நெஞ்சு`` என்றது நினைப்பினை. ``யானே பொய்`` என்றதனால், `நெஞ்சும் பொய், அன்பும் பொய்` என்றவை, வலியுறுத்தல் மாத்திரை யாய் நின்றன.
`இங்ஙனமாயின் வருந்தினால் மட்டும் உன்னைப் பெறுதல் கூடுமோ? கூடாதாகலின், அடியேன் உன்னை வந்து அடையும் வழியை அருளாய்` என்பது ஏனைய அடிகளின் பொருள். ``உருகுவது உள்ளங்கொண்டு ஒர்உருச் செய்தாங்கு எனக்கு அள்ளூறாக்கை அமைத்தனன்`` (தி.8 திருவண்ட-175-177.) ``மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து...கண்ணீரரும்பி....உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்`` (தி.8 திருச்சதகம்-1) என்றாற் போல் முன்னரும் இவ்வாறே பின்னரும் அடிகள் பல விடத்தும் அருளுதலின், அவர் இறைவன் மாட்டு உள்ளம் நெக்குருகி இடையறாது கண்ணீர் பெருக்கி நின்றமை தெளிவாதலின், அவர் அந் நிலையைப் பெறாது அதனையே அவாவி நின்றாராக வைத்து, ``பெறலாமே`` என்றதற்கு, `பெறுதல் கூடும்` என உடன்பாடாகப் பொருளுரைத்தல் பொருந்தாமையறிக.
இங்ஙனமாகவே, ``என் அன்பும் பொய்`` என்றது, மெய்விதிர்த்தல், கண்ணீரரும்புதல் முதலியவை நிகழாமை பற்றிக் கூறியதாகாது, ``முனைவன் பாதநன் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்`` ``தீயில் வீழ்கிலேன் திண்வரையுருள்கிலேன்`` (தி.8 திருச்சதகம்-37,39) என்றாற் போல அருளிய நிலைபற்றியே வருந்தி அருளிச்செய்ததாதல் அறியப்படும்.
படவே, எய்தவந்திலாதார் எரியிற் பாய்ந்தமை (தி.8 கீர்த்தி-132) போல்வதொரு செயலால் இறைவன் திருவடியைப் பெறுதல் கூடு மன்றி, அதுமாட்டாது ஏங்கி அழுதலால் மட்டும் பெறுதல் கூடாது` என்பதனையே, ``அழுதால் உன்னைப் பெறலாமே`` என்று அருளினார் என்பது இனிது விளங்கும். இன்னும், `பெறுதல் கூடும்` என்பது கருத்தாயின், `ஆனாலும்` என உம்மை கொடுத்து ஓதுதல் வேண்டும் என்க.
திருச்சதகம்
பண் :
பாடல் எண் : 91
மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
பொழிப்புரை :
இறைவனே! உன் மெய்யன்பர் முந்திவந்து உன் திருவடிக்கு அன்பு செய்து உன் மெய்ந்நிலையை அடைந்தார்கள். முடிவில்லாத பெரியோனாகிய நீ ஒளியையாகி எழுந்தருளி என்னைக் கடைக்கண் நோக்கியருளியும் மனமுருகாத நான் கடைப்பட்டேன். இது என் தீவினைப் பயனேயாம்.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முன்னைப் பகுதியில், இறைவன் பிரிவினால் உயிர் விடத் தக்க ஆற்றாமையைத் தரும் பேரன்பினை வேண்டிய அடிகள், இவ் இறுதிப் பகுதியில், அவ்வன்பின் முடிந்த பயனாகிய திருவடி கூடுதலையே வேண்டுகின்றார். இது பற்றியே இதற்கு, `ஆனந்தாதீதம்` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்த அதீதம் - இன்பத்தை வேறாக உணரும் உணர்வும் அடங்கப் பெற்று, அவ்வின்பத்தில் அழுந்திநிற்கும் நிலை.
மாறுஇலாத - வற்றுதல் இல்லாத. ``வந்து முந்தி`` என்றதனை, உன் மெய்ம்மை மேவினார் என்றதற்கு முன்னர்க் கூட்டி ``உன்பால் வந்து, என்னின் முற்பட்டு` என உரைக்க; மலர்கொள் - மலர்தலைக் கொண்ட; எங்கும் நிறைந்த. `தாளிணையின்` என, நீக்கப் பொருட்கண் வந்த இன்னுருபு விரிக்க. வேறு இலாப் பதம் - வேறாதல் இல்லாத பக்குவம். பரிசு - தன்மை. மெய்ம்மை - நிலையான இன்பம்; ஆகுபெயர். `என் உடம்பு ஒளிசெய் மானுட மாம்படி நோக்கியும்` என உரைக்க. ஒளிசெய்தலை, ஞானத்தைத் தருதலாகக் கொண்டு இறை வற்கு ஆக்கின், `ஆக` என்றதனை, `ஆகி` என ஓதுதல் வேண்டும். கீறிலாத - கிழிக்க இயலாத; வலிய. `ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாம் அடங்காதவர், ஓதி உணராத பேதையாரினும் பெரும்பேதை யாராதல் போல, நீ எதிர்வந்து அருள்செய்யப்பெற்றும் உருகாத நெஞ் சத்தையுடைய நான், அவ்வாறு அருள்செய்யப்பெறாத கடையரினும் பெரிதும் கடையனாயினேன்` என்றதாம். `நான் பட்டகீழ்மை இது` எனப் பயனிலை வருவித்து முடிக்க. `இக்கீழ்மையை நீக்கி, உன் மெய்ம்மை அன்பர் பெற்ற நிலையை எனக்கும் அளித்தருள்` என்பது குறிப்பெச்சம்.
பண் :
பாடல் எண் : 92
மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ணம் என்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே.
பொழிப்புரை :
இறைவனே! நீயே எழுந்தருளி என்னை ஆட்கொண்ட பிறகு உன்னை எளிதாய் நினைத்ததே அன்றி அரிதாய் நினைத்தேனில்லை. ஆயினும் உன் மெய்யடியார் உன் உண்மை நிலையையடைய, நானொருவனுமே இந்தவுலகத்தில் தங்கியிருக்க விட்டு நீ போவது உனக்குத் தகுதியாமோ?
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மழ - மழவு; குழவி. ``என்று`` என்றதனை, `என` என்று திரித்து, உவம உருபாக்குக. ``மழக் கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால்`` என ஓதினாரேனும், `கையிலங்கு பொற்கிண்ணத்தை மழவு எண்ணுதல் என அல்லால்` எனப் பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தாதல் அறிக. `பொற்கிண்ணம் குழவி கையிற் கிடைத்ததாயின், அதனை அஃது ஏனைய சில பொருள்களோடொப்ப எளிய பொருளாகக் கருதுதல் போலவே, என்முன் வந்து என்னைப் பணிகொண்ட உன்னை நான் ஏனைய சிலரோடொப்ப எளியையாகக் கருதினேனன்றி அரியையாகக் கருதிற்றிலேன்` என இதனை விரித்துரைத்துக்கொள்க. `என் இயல்பு இதுவாயிற்று` என்பார் இறந்த காலத்தாற் கூறாது, நிகழ்காலத்தாற் கூறினார். `எளியனாகக் கருதினேன்` என்றது, அழைத்தபொழுது செல்லாமல், `பின்னர்ச் சென்று அடைவோம்` என்று பிற்பட்டு நின்றமையை என்க. `உன் மெய்ம்மை அன்பர் இவ்வாறின்மையால், உன்னை முன்பே வந்து அடைந்து விட்டார்கள்; யான் பிற்பட்டு நின்றது எனது அறியாமையாலே என்பர், ``பொய் இலங்கு எனை`` என்றும், `யான் எனது அறியாமை காரணமாகப் பிற்பட்டு நிற்பினும், என்னை வற்புறுத்தி உடன்கொண்டு செல்லாது மீளவும் முன்போலவே உலகியலில் புகும்படி விட்டுப் போவது, அறைகூவி ஆட்கொண்ட உனது அருளுக்குப் பொருத்தமாகுமோ? சொல்` என்பார், `புகுதவிட்டு நீ போவதோ பொருத்தமாவது சொலாய்` என்றும் அருளிச் செய்தார்.
பண் :
பாடல் எண் : 93
பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே.
பொழிப்புரை :
பொய்யனாகிய என்னை விரும்பி நோக்கவும் நோக்கின உதவியை நினைந்து நான் வருந்தி மாண்டிலேன். இறைவனே! உன் அன்பரும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி என்னை இவ்வுலகத்தில் இருத்துதல் உனக்கு முறையாமோ? என் தீவினைக்கு இறுதி இல்லையோ!
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
``பொய்ம்மை உண்மையேன்`` என்றதன்பின், `ஆயினும்` எனவும், `வஞ்சம் உண்மையேன்` என்றதன்பின், `ஆதலின்` எனவும் நின்ற சொல்லெச்சங்களை வருவித்துரைக்க. போத - போதுக; வருக. புரிந்து - விரும்பி. வஞ்சம் - வேறோர் எண்ணம்; என்றது, உலகியற் பற்றினை. ``மாண்டிலேன்`` என்றதற்கு, ``பிரிவாற்றாமையால்` என்னும் காரணம், ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``மலர்க் கமலம்`` என்பது. பின் முன்னாக நின்ற ஆறாவதன் தொகை. அரத்தம் - சிவப்பு. `அருள்செய் அன்பர்`` என்றது, செயப்படு பொருள்மேல், தொக்க வினைத்தொகை. ``அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி`` எனவும், `எனை இங்கு இருத்தினாய்` ``வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே`` எனவும் போந்த சொற்கள், அடிகளது ஆற்றாமை நனிமிக விளக்குவனவாம். முறையோ - நேர்மையோ. வம்பன் - பயனில்லாதவன்.
பண் :
பாடல் எண் : 94
இல்லை நின்கழற் கன்ப தென்கணே
ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
பொழிப்புரை :
இறைவனே! எனக்கு உன் திருவடிக் கண் அன்பு இல்லையாகவும், கல்லைக் குழைத்த வித்தையைக் கொண்டு என்னைத் திருத்தி உன் திருவடிக்கு அன்பனாக்கினாய். ஆதலால் உன் கருணைக்கு ஓர் எல்லை இல்லை.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
``அன்பது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ஏலம் - மயிர்ச்சாந்து. ஏலும் - பொருந்தும். ``நற்குழலி`` என்றதில் நன்மை - அழகு. ஆக்கும் விச்சை - ஆக்குகின்ற வித்தை போல்வ தொரு வித்தை.
``கருணை`` என்றதில் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. ``நின்கருணைக்கு எல்லை இல்லை`` என மாற்றி, `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``வல்லை`` என்றதை ``மீட்கவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக.
மறு - குற்றம். குற்றமில்லாத வானம், சிவலோகம். `என்கணே நின்கழற்கு அன்பு இல்லையாகவும், நின் கருணைக்கு எல்லை இல்லை ஆதலின், கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை முன்பு நின்கழற்கு அன்பனாக்கினாய்; அது போலவே, நான் இப்பொழுது ஏதுகொண்டு ஏது செய்யினும் இன்னும் எனக்கு உன்கழல்காட்டி மீட்கவும் வல்லையே` என்க. ``கொண்டு`` என்பது மூன்றாவதன் பொருள்தரும் இடைச் சொல்லாதலின், `எக் காரணத்தால் எதனைச் செய்யினும்` எனப் பொருள் கூறுக. ``வல்லையே`` என்றதில் உள்ள ஏகாரம் தேற்றம். எனவே, `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையேன்` என்பது பொருளாயிற்று. ``மீட்கவும்`` என்ற உம்மை, சிறப்பு.
பண் :
பாடல் எண் : 95
வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடருந் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே.
பொழிப்புரை :
இறைவனே! தேவர்கள், மறைகள், ஏனை நாட்டவர்கள் ஆகியோர்க்கும் அரியையான நீ, அடியேனை ஆட்கொள்ளுதல் முதலாயினவற்றை நோக்கும் இடத்தில், அஃது எனக்கு இவ்வுலக சம்பந்தமான அஞ்ஞானம் அழிதற்கேயாகும்.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இறைவனது அருமை தோன்ற, ``நீ`` என்றதனைப் பலமுறை கூறினார். மறையில் ஈறும் - வேதத்தில் முடிவாயுள்ள பகுதியும். உம்மை, சிறப்பு. ஏனை நாடர் - தேவருலகிற்கு மேற்பட்ட சத்தியலோகம் முதலியவற்றில் உள்ளவர். அவர், பிரமன் முதலியோர். `இனிதாய்` என்பது, விரித்தலாயிற்று.
``ஆண்டுகொண்டவா`` என்றது முதலிய நான்கிடத்தும், `ஆறு` என்பது கடைக்குறைந்து நின்றது. அவற்றிலெல்லாம் எண்ணும்மை விரித்து, அவற்றை, எஞ்சிநின்ற, வியப்பைத் தருவன` என்பதனோடு முடிக்க. ஊனை - உடம்பை. உடம்பை ஆடச் செய்த நாடகம், உலகியல். ஞானநாடகம், ஆனந்தக் கூத்து, எனவே, `முன்பு உடம்பை ஊன நாடகம் ஆடுவித்தவாறும், பின்பு உயிரை ஞானநாடகம் ஆடுவித்தவாறும்` என்றதாயிற்று. `ஊன நாடகம்` எனப் பாடம் ஓதி, ஆடுவித்தமை இரண்டிற்கும், `என்னை` என்பதனைச் செயப்படுபொருளாகக் கொள்ளுதலே சிறக்கும்.
பருகுதல் - அனுபவித்தல். வையகத்து உடைய விச்சை நைய - உலகின்கண் யான் கொண்டிருந்த பாச ஞானம் கெட. இதனை, ``ஞான நாடகம் ஆடுவித்தவா` என்றதற்கு முன்னே கூட்டுக.
`இச்சை` எனப் பிரித்தல், அந்தாதிக்கு ஒவ்வாமையறிக.
பண் :
பாடல் எண் : 96
விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனைஉன் கோயில் வாயிலிற்
பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்
குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர்
நச்சு மாமர மாயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.
பொழிப்புரை :
இறைவனே! எல்லா உலகங்களையும் வித்தில்லாமல் தோற்றுவிப்பாய். என்னை உன் கோயில் வாயில் பித்தனாக்கி, உன் அன்பரது திருப்பணிக்கும் உரியேனாகச் செய் தனை. உலகத்தார், தாம் வளர்த்தது ஆதலின் நச்சு மரமாயினும் வெட்டார்; அடியேனும் உனக்கு அத்தன்மையேன்.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விச்சு - வித்து. `வித்தில்லாமலே விளைவை உண்டாக்குவாய்` என்றது, `அதுபோன்ற செயல்களைச் செய்வாய்` என்றபடி. ``விச்சின்றி நாறுசெய் வானும்`` (தி.4.ப.4.பா.2.) என்று அருளிச்செய்ததும் இவ்வாறாம்.
இறைவன் இங்ஙனம் செய்தல் என்பது, சில காரியங்களை அவற்றிற்குரிய நியத காரணம் இல்லையாகவும், பிற காரணமே காரணமாய் அமைய அவற்றை நிகழச் செய்தலாம். அது, நாவுக்கரசர்க்குக் கல்லே தெப்பமாய் அமையக் கடலைக் கடந்து கரையேறச் செய்தமை, ஞானசம்பந்தருக்கு ஆண்பனைகளே பெண் பனைகளாய்க் காய்தரச் செய்தமை, சுந்தரருக்குச் செங்கல்லே பொன் னாகிப் பயன்படச் செய்தமை போல்வனவாம்.
இவைபோலும் செயல்கள் பிறவும் கேட்கப்படுதலின், அவை பற்றியே அடிகள் இவ்வாறு அருளிச்செய்தாராவர். எனினும், தமக்கு இறைவனைக் காணும் முயற்சியின்றியும் அவன் தானே வந்து தம்மைத் தலையளித்தாட் கொண்டமையைக் குறிப்பிடுதலே கருத்தென்க. இனி இப்பகுதி, உயிர்களின் முதற்பிறப்பிற்கு வினையாகிய காரணம் இல்லையாகவும், அவைகட்கு முதற்கண் நுண்ணுடம்பைக் கொடுத்துப் பின் அதன்வழித் தோன்றிய வினைக்கீடான பிறவியைத் தருதலைக் குறிப்பதாகச் சிவஞானபோத மாபாடியத்துள் உரைக்கப்பட்ட வாற்றையும் அறிக. வைச்சு - வைத்து. வைப்பது உயிர்களிடம் என்க. கோயில், திருப்பெருந்துறையில் உள்ளது. ``திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி`` (தி.8. திருப்பள்ளி. 8) எனப் பின்னரும் அருளிச் செய்வர்.
பிச்சன் - பித்தன். உரியன் - அடியவன். ``தாம்`` என்றது மக்களை என்பது, பின்னர் வருவனவற்றால் விளங்கிக் கிடந்தது. ஓர்- ஒரு. இது சிறப்பின்மை குறித்தது. மா - பெரிய. `மா நச்சு மரம்` என மாற்றிக்கொள்க. `மிக்க நஞ்சாய மரம்` என்றது, காய் கனி முதலிய வற்றை உண்டாரை அப்பொழுதே கொல்லும் எட்டி மரம் போலும் மரங்களை. `அம்மரங்களால் தீங்கு உண்டாதல் அறிந்திருந்தாலும், வளர்த்தவர் வெட்டமாட்டார்கள்` என்றபடி. ``வளர்த்தது`` என்றதற்கு, `அறியாது வளர்த்தது` எனவும், ``ஆயினும்`` என்றதற்கு, `ஆதல்` அறியப்படினும்` எனவும் உரைப்பினும் அமையும். ``நானும் அங்ஙனே`` என்றது, `நானும் உனக்கு அத்தன்மையனே` என்றபடி. உவமைக்கண், வளர்த்தது, கொல்லுதல் என்றவற்றிற்கு ஏற்பப் பொருட்கண் கருதப்பட்டன, கோயில் வாயிலில் பிச்சனாக்கி அன்பருக்கு உரியனாக்கினமையையும், பின் கைவிடுதலையுமாம்.
பண் :
பாடல் எண் : 97
உடைய நாதனே போற்றி நின்னலால்
பற்று மற்றெனக் காவ தொன்றினி
உடைய னோபணி போற்றி உம்பரார்
தம்ப ராபரா போற்றி யாரினுங்
கடைய னாயினேன் போற்றி என்பெருங்
கருணை யாளனே போற்றி என்னைநின்
அடிய னாக்கினாய் போற்றி ஆதியும்
அந்த மாயினாய் போற்றி அப்பனே.
பொழிப்புரை :
நீ என்னை உடையவன் ஆதலால் எனக்கு உன்னை அல்லது வேறு புகலிடம் ஏதேனும் உளதோ? பகர்ந்தருள் வாயாக. தேவர்களுக்கெல்லாம். மேலாகிய மேலோனே! உன்னை வணங்குகிறேன். இனி யானோ எவர்க்கும் கீழ்ப்பட்டவன். அத்தகைய என்னை உன் கருணையினால் உனக்கு அடிமை யாக்கினாய். எனக்குத் தொடக்கமும் முடிவும் நீயே. அத்தகைய அப்பனே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆவது - நன்மை தருவது. `எனக்கு ஆவது பற்று மற்று இனி ஒன்று உடையனோ` என்க.
பணி - சொல்லு. உம்பரார் - தேவர். பராபரன் - முன்னும் பின்னும் உள்ளவன். இத் திருப்பாட்டில் வணக்கமே கூறினார்.
பண் :
பாடல் எண் : 98
அப்ப னேயெனக் கமுத னேஆ
னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேஉனக் குரிய அன்பரில்
உரிய னாய்உனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை
யாள னேதொழும் பாள ரெய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய்
நைய வையகத் தெங்கள் மன்னனே.
பொழிப்புரை :
எனக்குத் தந்தையே! அமிர்தமே! ஆனந்தமே! உள்ளம் உருகுதற்கும் வாய் ஊறுதற்கும் ஏதுவாயுள்ள தேன் போன்றவனே! உனக்கு உரிமையுடைய மெய்யன்பரைப் போல நானும் உரிமையாளனாகி உன்னைப் புசித்து உயிர் வாழ்வதற்கான ஒப்பற்ற உணவே! ஒளி விளங்கும் திருமுடியை உடையவனே! மாறாத் துணையாய் இருப்பவனே! தொண்டர் தளர்வுற்று இருக்கும்பொழுது உதவும் செல்வமே! இப்பொய் உலக வாழ்க்கையில் நான் துன்புற்று இருக்கும்படி வைப்பது முறையாகுமோ? எங்கள் அரசே! கூறுவாயாக.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அள் ஊறு - உள்ளே சுரக்கின்ற. அன்பரில் - அன்பரைப்போல. துப்பன் - பற்றுக்கோடானவன். `என்னை வையகத்து நைய வைப்பதோ` என மாற்றி, `வைப்பதோ பொருத்தம்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
பண் :
பாடல் எண் : 99
மன்ன எம்பிரான் வருக என்னெனை
மாலும் நான்முகத் தொருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்னெனை
முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள்
பின்ன எம்பிரான் வருக என்னெனைப்
பெய்க ழற்கண்அன் பாயென் நாவினாற்
பன்ன எம்பிரான் வருக என்னெனைப்
பாவ நாசநின் சீர்கள் பாடவே.
பொழிப்புரை :
என்றும் நிலை பேறுடைய எங்கள் தலைவனே! அடியேனை வருக என்று கட்டளை இடுவாயாக. திருமாலுக்கும் நான்முகனுக்கும் மூலப் பொருளே! என்னை வருக என்று ஏற்றுக் கொள்வாயாக. சம்கார காலத்தில், எல்லாம் ஒடுங்கி இருக்கும் போது எஞ்சித்தன்மயமாயிருக்கும் எம் தலைவ, என்னை வருக என்று அழைப்பாயாக. உன்னை வந்து அடைந்தவர்களது பாவத்தைப் போக்குபவனே! நான் உன்னைப் புகழவும் உனது சிறப்பினைப் பாடவும் என்னை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக.
குறிப்புரை :
ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
`மன்ன, முன்ன, பின்ன, பன்ன` எனவும், ``எம்பிரான்`` எனவும் வந்தன விளிகள். பன்னன் - துதிக்கப்பட்டவன். இத் திருப் பாட்டில், `நின் சீர்கள் பாட என்னை வருக என்று அழை` என்பதே அருளிச் செய்தார். பாடுதல், சிவலோகத்தில் என்க.