சேந்தனார் - திருவாவடுதுறை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
றருளா தொழிவது மாதிமையே.

பொழிப்புரை :

என்றும் தான் கூறுவது பொய்த்தல் இல்லாத வேதத்தை ஒதுபவராய்ச் சாத்தனூரில் வாழும் உண்மையான புகழாளராய், எண்ணிக்கையில் ஆயிரவராய் உள்ள நிலத்தேவராம் அந்தணர்கள் உள்ளம் ஒன்றித் திருத்தொண்டு செய்கின்ற, சிறப்பு மிகுகின்ற காவிரிக் கரையில் விரும்பி வீற்றிருக்கும் தலைவனே! திருவாவடுதுறையில் உகந்தருளியிருக்கும் அமுதமே! என்று என் மகள் உன்னை அழைத் தால் மைதீட்டிய பெரிய கண்களைஉடைய என்மகளுக்கு நீ ஒரு வார்த்தையும் மறுமாற்றமாகக் கூறாமல் இருப்பது உனக்குத் தகுதியோ? பெருமையோ? - என்று தாய் பெருமானிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

காவிரியாற்றில் பல புண்ணியத் துறைகள் உள்ளன; அவற்றுள் ஒருதுறையே ஆவடுதுறை. இஃது உமையம்மை பசுவாய் இருக்கவேண்டி வந்த நிலையை நீக்கினமை பற்றி வந்த காரணப் பெயர் என்பது புராணக் கொள்கை. இத்துறையைச் சார்ந்துள்ள ஊர். `சாந்தை` என்பது. எனவே, `ஆவடுதுறை` என்பது, இறைவன் திருக்கோயில் உள்ள இடமும், `சாந்தை` என்பது, சாத்தனூராகிய அதனைச் சார்ந்துள்ள ஊர்ப் பகுதியுமாதல் பெறப்படும். `துறை` எனப் பெயர் பெற்ற இடங்களில் அப்பெயர்கள் பெரும்பாலும் `அருட்டுறை` என்பது போலத் திருக்கோயிலுக்கே உரிய பெயராய்ப் பின், அஃது உள்ள ஊர்க்கும் ஆயினமை பெறப்படும். `தில்லையில் உள்ள அந்தணர் மூவாயிரவர்` என்பதுபோல, `திருவாவடுதுறையில் உள்ள அந்தணர் ஆயிரவர்` என்பது மரபாதல் இத்திருப்பாடலால் பெறப் படுகின்றது. ஒன்று - ஒருசொல். மாதிமை - பெருமை. ``மாதிமையே`` என்ற ஏகாரவினா, எதிர்மறை குறித்து வந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

மாதி மணங்கம ழும்பொழில்
மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள் பொன்னெடுந்
திண்டோள் புணர நினைக்குமே. 

பொழிப்புரை :

என் மகள் நறுமணம் கமழும் சோலைகளும், அழகிய மேல்மாடிகளை உடைய மாளிகைகளை உடைய வீதிகளும் சூழ்ந்துள்ள, ஒளிவீசும் மதில்களால் அழகு செய்யப்பட்டுள்ள சாத்தனூரில் உள்ள உண்மையான வேதநெறியில் வாழும் சான்றோர் கள் வணங்குகின்ற, ஏனைய தேவர்களுக்கு முற்பட்ட பழைமை யனாகிய, அழகிய ஆவடுதுறை என்ற கோயிலில் உகந்தருளி யிருக்கும் குணபூரணனாகிய எம்பெருமான் பெருமையை உள்ளவாறு அறியும் ஆற்றல் இலளாய் அவனுடைய பொன்நிறமுடைய நீண்ட வலிய தோள்களைத் தழுவநினைக்கின்றாள் - என்று தன்மகள் நலம் வினவிய அயலக மகளிருக்குத் தாய் கூறியவாறு.

குறிப்புரை :

மாதி - மாது உடையவள்; தலைவி. மாது - அழகு. ``மாதி`` என்றது ``அறிகிலள்`` என்பதனோடு இயையும். மெய்ச் சுருதி- உண்மை நூலாகிய வேதம். அதன் விதிவழியோர், அந்தணர். புராணன் - பழையோன்; என்றது, `முற்பட்டவன்` எனப் பொருள் தந்து, அமரர்களையும் தோற்றுவித்தோனாதல் குறித்தது. ``நீதி`` என்றது பெருமையை; அதனை அறியாதவளாய் அவன் திண்தோள் களைப் புல்ல நினைத்தாள்; இது கூடுவதோ` என்றபடி. இக்கூற்றால், இவ்வாசிரியருக்கு இறைவன் திருவருட்கண் உள்ள வேட்கை மிகுதி புலனாகும். ``அறிகிலள்`` என்றது முற்றெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

நினைக்கும் நிரந்தர னேயென்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
தருணேந்து சேகரன் என்னுமே. 

பொழிப்புரை :

நல்லநெற்றியை உடைய பெண்களே! என்மகள் எம்பெருமானை விருப்புற்று நினைப்பவளாய் `எக்காலத்தும் நிலை பெற்றிருப்பவனே` என்று அவனைப்பற்றிப் பேசுவாள். பிறைச் சந்திரனுடைய அழகினைக் கொண்ட சிவந்த சடையில் மறைந் திருக்கும் கங்கைநீர் ஈரமாக்குகின்ற பெருமானுடைய கொன்றைப்பூங் கண்ணியின்மீது விருப்பம் கொண்டு பேசுவாள். மனத்திற்கு இன்ப வெள்ளத்தை அருளுபவனாய், பார்வதியை மணந்த குணபூரணனாய், வளமான சாத்தனூரில் விருப்புடையவனாய் அவ்வூரிலுள்ள ஆவடு துறை என்ற கோயிலில் உகந்தருளியிருக்கும் பிறைசூடி என்று எம் பெருமானைப் பற்றிப் பேசுவாள் - என்று செவிலி தன் மகள் நிலையை வினவிய அயலக மகளிருக்கு உரைத்தவாறு.

குறிப்புரை :

``நினைக்கும்`` என்றது முற்று. நிரந்தரன் - நிலை பெற்றிருப்பவன். நிலாக் கோலம் - நிலாவினால் உண்டாகிய அழகு. நயம் - விருப்பம். பேசும் - வெளிப்படையாக எடுத்துச் சொல்வாள். ``நங்கைமீர்`` என்றது முதலியன, தலைவி கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியது. ``நங்கைமீர்`` என்றதனைச் செவிலி கூற்றெனினும் இழுக்காது. ``மனக்கு`` என்றதில் அத்துச்சாரியை தொகுத்தல். மனக்கு இன்ப வெள்ளம் - என் மனத்துக்கு இன்ப வெள்ளமாய் இருப்பவன். ``நம்பி, இன்பன், தருணேந்து சேகரன்`` என்றவை, ஒரு பொருள்மேற் பல பெயர். ``சாந்தையூர்`` என்றதில், ``ஊர்`` என்றது, அதன்கண் வாழ்வாரை. தருண இந்து சேகரன் - இளமையான சந்திரனை அணிந்த முடியை உடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தருணேந்து சேகர னேயெனுந்
தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
திலக நுதலி திறத்திலே.

பொழிப்புரை :

பெரும்பரப்புடைய காவிரியின் தென்கரையில் அமைந்த சாத்தனூரில் மெய்ப்பொருளிலேயே ஈடுபட்டமனத்தை யுடைய அடியவர்கள் வழிபட, புகழும் செல்வமும் நிறைந்த ஆவடு துறைக் கோயிலுள் அருளை வழங்கிக் கொண்டு வீற்றிருக்கும், ஆளும் தகுதியைஉடைய தலைவனே! என்மகள் `பிறையைத் தலையில் சூடியவனே` என்று உன்னைப் பலகாலும் அழைக்கிறாள். திலகம் அணிந்த நெற்றியைஉடைய என்மகள் திறத்தில் மாத்திரம் தெளிந்த அறிவினைஉடைய உன்மனம் இரக்கம் கொள்ளாமல் கல்போல இருப் பதன் காரணம்யாது? - என்று தாய் பெருமானிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த - தெளிந்த. அருள் நேர்ந்து - அருளைத் தர இசைந்து. தெருள் நேர்ந்த சித்தம் - இவளது துன்பத்தைத் தெளிய உணர்ந்த மனம். `மனம்` என்பதை, `உனது மனம்` என உரைக்க. வலியவா - கடிதாய் இருந்தவாறு. இதனை இறுதி யில் வைத்து, `வருந்தத் தக்கது` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இதனுள், ``தருணேந்து சேகரனே`` என்பது ஒன்றும் தலைவி கூற்று. ஏனைய, செவிலி கூற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

திலக நுதல்உமை நங்கைக்கும்
திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
அணியும்வெண் ணீறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே. 

பொழிப்புரை :

வயல்வளம் பொருந்திய அழகிய குளிர்ந்த சாத்தனூர்க்கு அரசே! என்மகள் `நெற்றியில் திலகம் அணிந்த உமா தேவிக்கும் திருவாவடுதுறைக் கோயிலில் உகந்தருளியிருக்கும் குண பூரணனான எம்பெருமானுக்கும் அடிமைசெய்யும் கூட்டமான அடியவர்களுக்கு அடியேனை ஆட்படுத்து. என்னைத்தனக்கு அடிமையாகக் கொண்ட குணக்கடலாகிய எம்பெருமானை அல்லது யான்வேறு ஒருதெய்வத்தை அறியேன் என்று பலகாலும் கூறுகிறாள். வெண்ணீறு அணிதலும் திரு ஐந்தெழுத்தை ஓதுதலும் அல்லாமல் அவள் வேற்றுச் செயல் எதனையும் செய்கின்றாள் அல்லள். அவளுடைய இந்தநிலைமாறி அவள் பழைய நிலைக்கு வருதலுக்கு யான் செயற்பாலது யாது? - என்று செவிலி இறைவனிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

`குலம்` என்பது, ககரம் பெற்று, ``குலகம்`` என வந்தது; `கூட்டம்` என்பது பொருள். அம்மையை வேறு கூறியது, `அவளோடு உடனாய் நின்று காட்சி வழங்கும் அவன்` என்பது உணர்த்துதற்கு. கொடுத்து - கொடுத்தமையால். ``வெண்ணீறு`` என்றதற்கு, `அதனைப் பூசுதலும்` எனவும், ``அஞ்செழுத்து`` என்றதற்கு, `அதனைச் சொல்லு தலும்` எனவும் உரைக்க. ``வேந்தன்`` என்றது, சிவபிரானை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வேந்தன் வளைத்தது மேருவில்
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி
கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
யான்செய்கை யார்அறி கிற்பரே.

பொழிப்புரை :

`சிவபெருமானே! வானத்தில் உலாவிக்` கொண் டிருந்த மதில்களால் சூழப்பட்ட மூன்று கோட்டைகளும் சாம்பலாகு மாறு மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகியை வில் நாணாகக் கொண்டு, சிவந்தகண்களை உடைய திருமாலை அம்பாகக் கொண்டு, வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட, பிரமனைத் தேர்ப்பாகனாக உடைய தேரினைச் செலுத்திய சாத்தனூர்த் தலைவனே! உன் அருளே அடியேனுக்குக்கதி` என்று என் மகள் பலகாலும் கூறுகிறாள். அவள் திறத்துத் தண்ணீரினால் குளிர்ந்த திருவாவடுதுறை என்னும் கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் செய்யநினைத்திருக் கின்ற செயலை யாவர் அறியவல்லார்? - என்று மகள் நலம் வினவிய அயலக மங்கையருக்குத் தாய் கூறியவாறு.

குறிப்புரை :

`நாண் அரவு` எனவும், அருள் கதி` எனவும் மாறிக் கூட்டுக. போந்த மதில் அணி - வானில் திரிந்த மதில்களைக் கொண்ட. `வேதப் புரவித் தேர்ச் சாந்தை முதல் வேந்தன்` என முன்னே கூட்டி, `முப்புரம் பொடியாட` என்பதனை அதன்பின் வைத்து உரைக்க. அருள்கதி என்றதற்கு, `அவனது அருளே எனக்குப் புகல்` எனப் பொருள் கூறுக. ``தையலை``என்றது, ``செய்கை`` என்னும் தொழிற் பெயரோடு முடியும். ஆம் - நீர். `அதனால் உண்டாகிய தண்மையை உடைய திருவாவடுதுறை` என்க. செய்கை - வருந்தச் செய்தலை. `யார் அறிகிற்பர்` என்றது, `அறிந்து நீக்க வல்லார் யார்` என்றதாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
கருணால யாவந்தி டாய்என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
துறையாளி பேசா தொழிவதே. 

பொழிப்புரை :

`பாவிகளே` நாங்கள் வேள்வியை முழுமையாக நிறைவேற்றி வைப்போம் என்று சொல்லி வேள்வியை நடத்தப்புகுந்து வீரபத்திரர் வந்த அளவில் வேள்விச்சாலையிலிருந்து எழுந்து ஓடி அழிந்த அந்தத் தேவர்களின் சொற்கள் பயன்படாமல் போனதுபோல, நீங்கள் இந்த உடலால் எம்பெருமான் திருத்தொண்டினைவிடுத்து வேற்று உலகியல் செயல்களில் ஈடுபடும் செய்தி பயன்தாராது வீணாகும்` என்று இந்தத் தூய்மையான சொற்களைஉடைய என்மகள் பலகாலும் கூறுகிறாள். `எங்கள் கல் போன்றமனத்தைப் பழம்போல மென்மையுடையதாக்கிய கருணைக்கு இருப்பிடமான எம் பெருமானே! அடியேனுக்கு அருளவருவாயாக` என்று என் மகள் அழைத்தால், `மேம்பட்ட திருவாவடுதுறையை ஆள்பவனே! அவள் அழைத்தலுக்கு நீ ஒன்றும் பேசாமல் இருப்பது உனக்கு ஏற்ற தன்மையோ?` - என்று தாய் இறைவனிடம் வேண்டியவாறு.

குறிப்புரை :

கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க) வல்லோம். எடுத்து - அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று ஓடி அழிந்த. சொல் - அத்தேவர்களது புகழ். பயன் தருவது, ``பயன்`` எனப்பட்டது. முன்னர்ப் போந்த சொற்குறிப்பால், `அவர் புகழ்கள் பயன் தருவனவாகா` என்பது பெறப் பட்டது. ``பாவிகாள்`` என்றது, அவர் புகழ்களைப் பயன் தருவனவாகக் கருதிச் சொல்லு வோரை. ``எனச் சொல்லிச் சொல்லும்`` என்றது, `என்று பலகாற் சொல் கின்ற` என்னும் பொருட்டாய் நின்றது. `இத் தூமொழியாளது கற் போலும் மனத்தை` என்க. என்றால் - என்று அவள் அழைத்தால். ``பெற்போ`` என்றதை இறுதியிற் கூட்டுக. பெற்பு - பெற்றி; தன்மை. பெற்போ - உனக்கு ஏற்ற தன்மையோ.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும்
உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை யெய்திநின்
றிறுமாக்கும் என்னிள மானனே. 

பொழிப்புரை :

அழிதல் சிறிதும் இல்லாத செல்வன் கழல்ஏத்தும் செல்வத்தை உடைய சாத்தனூரில் உள்ள அழகிய ஆவடுதுறைக் கோயிலில் இன்பவெள்ளத்தில் மூழ்கிய, எனக்கு அன்னைபோன்று இனிய என் இளமான் போன்ற மகள் நீங்குதல் சிறிதும் இல்லாது ஆவடு துறைப் பெருமானுடைய உண்மை இயல்புகளைவிடாது சொல்லிக் கொண்டிருப்பாளாய்,ஊறிக்கொண்டிருக்கும் பேரின்ப வெள்ளத்தை யும், வற்றுதல் சிறிதும் இல்லாத காவிரித் தீர்த்தத்தையும் கோடிக்கணக் கான முனிவர்களையும், கணக்கற்ற இறைவனுடைய திருவுரு வங்களையும் குறைபாடு இல்லாத வகையில் அடைந்துநின்று அன் பால் எங்கள் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காத வகையில் பெரு மிதம் கொண்டுள்ளாள் - என்று தாய் தன்மகள் நிலைபற்றி அயலக மகளிரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

ஒழிவு ஒன்று இல்லா - நீங்குதல் சிறிதும் இல்லாத. உண்மை வண்ணம் - (ஆவடுதுறைப்பெருமானது) உண்மை இயல்புகள். உலப்பிலள் - விடாது சொல்வாளாகிய இவள்; இஃது ``ஆடினாள்`` என்பதனோடு இயையும். இன்பவெள்ளம் - இன்பப் பெருக்கு. மொழிவு ஒன்று இலாப் பொன்னி - சொல்லப்படுதல் சிறிதும் இல்லாத மிக்க பெருமையையுடைய காவிரி. ``முனி`` என்றது, அஃறிணை வாய்பாடாய்ப் பன்மை குறித்து நின்றது. `முனிகளது மூர்த்தி` என்க. மூர்த்தி - வடிவம். `முனிகள் கோடி கோடி` என்னாது. அவர்களது `வடிவு கோடி கோடி` என்றார், அவர்கள் இருந்து தவம் புரியும் காட்சியது சிறப்புணர்த்தற்கு. `திருவாவடுதுறை நவகோடி சித்தபுரம்` எனக் கூறப்படுதல். இங்கு நினைக்கத்தக்கது. `வெள்ளமும், தீர்த்தமும், மூர்த்தியும் அழிவில்லாத சாந்தையூர்` என்க. சாந்தையூர் அணி ஆவடுதுறை - சாந்தையூரால் அழகுபடுத்தப்படும் திருவாவடு துறை. இங்கு, `துறை` என்றது, துறைக்கண் உள்ள நீரை. `ஆடினாள்; அதனால், இழிவொன்றிலாவகை (மேன்மையானநிலை) எய்தி இறுமாக்கின்றாள்` என உரைக்க. ஈற்றில். `அன்னையே` என்பது, `அனே` எனக் குறைந்து நின்றது, மகளை, `அன்னை` எனக் கூறும் மரபு வழுவமைதி, அகப்பாட்டுக்களில் பயின்று வரும். `இளமானளே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

மானேர் கலைவளை யுங்கவர்ந்
துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
கருத்தை முடித்திடுங் குன்றமே. 

பொழிப்புரை :

தேன்போன்ற இனியவனே! அமுதம்போலப் புத்துயிர் அளிப்பவனே! என் உள்ளமே உறையுளாகக் கொண்டவனே! சிவலோகத் தலைவனாகிய என் செல்வமே! பசுக்கள் ஒலித்துக் கொண்டு மூழ்கும் நீரை உடைய காவிரியாற்றங் கரையிலமைந்த அழகிய ஆவடுதுறையில் உகந்து குடியிருக்கும் அடியார் தலைவனே! உன்னுடைய உண்மை அடியவர்களுடைய உள்ளங்களின் விருப் பங்களை நிறைவேற்றிவைக்கும் அருட்குன்றே! இத்தகைய இனிய பண்புகளையும் செயல்களையும் உடைய நீ மான்போன்ற என்மகளுடைய அழகிய உடையையும் கவர்ந்து அவள் உள்ளத்தையும் உன்வசப் படுத்துவதற்கு என்னநீதி உள்ளது? - என்று செவிலி இறைவனிடம் முறையிட்டவாறு.

குறிப்புரை :

மான் - மான்போன்றவளாகிய என்மகளது. ஏர் கலை - அழகிய உடை. வழக்கு உண்டே - நீதி உண்டோ. ஆனே அலம்பு - ஆக்களே, ஒலிக்கின்ற; ஆவடுதுறை என்க. ``ஆனே`` என்றதனை இறைவனுக்கு ஏற்றி உரைப்பாரும், `அவ்விடத்தே` என உரைப்பாரும் உளர். `ஆவடு துறைக் குன்றமே` என இயைக்க. இப்பாட்டு முழுதும் செவிலி கூற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

குன்றேந்தி கோகன கத்தயன்
அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்பு புனற்பொன்னி
அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
நவலோக நாயகன் பாலளே. 

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகப்பிடித்த திருமாலும், தாமரையில் தங்கும்பிரமனும் உணர முடியாத உன் திருவருள் நெறியிலே என்னையும் சேர்த்து விட்டாயே என்று மனம் பலவாறு வருந்திப் பெருமானை அழைக்கிறாள். இளங்கொடி போல்வாளாகிய என் மகள் என் கட்டுப்பாட்டைக் கடந்துவிட்டாள். ஒலிக்கும் நீரை உடைய காவிரிக்கரையில் அமைந்த அழகிய ஆவடு துறையை அடைந்து விட்டாள். இவள் நம் கட்டுப்பாட்டுக்கு அடங்கிய வள் அல்லள். புதிய உலகங்களுக்கும் தலைவனாகிய எம் பெரு மானைச் சார்ந்தவள் ஆயினாள். இவள் செயல் நமக்கு நன்றாக இருக் கிறதா? - என்று தாய் தன்னைச் சேர்ந்தவரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

குன்றேந்தி - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்; திருமால். கோகனகத்து அயன் - தாமரை மலரில் இருக்கும் பிரமன். இவ்விருவரும் அறியா நெறி, சிவஞானநெறி. எல்லை - உலக முறைமை. `பொன்னியை ஆவடுதுறைக்கண் ஆடினாள்` என்க. `ஆடினாள்; அன்றே இவள் நம்பரம் அல்லள்: நன்றே நவலோக நாயகன் பாலளே` எனக் கூட்டுக. பரம் - சார்பு. நவம் - புதுமை; இங்கு வியப்பைக் குறித்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.

பொழிப்புரை :

`பாலும் அமுதும் தேனுமாக எனக்கு ஆனந்தம் தந்து என் மனத்தினுள்ளே நின்று இன்பம் கொடுத்தருளி என் அருமையான உயிரிடத்து இன்பத்தை விளைவிப்பவனாய்த் திரிபுரம், இயமனுடைய உடல், மன்மதனுடைய உடல் இவற்றை அழித்த வனாய், சேல்மீனும் கயல்மீனும் விளையாடும் காவிரிநீரை உடைய திருவாவடுதுறை மன்னனாகிய எம் பெருமானோடு விளையாடு வதற்கே என் மகள் முற்படுகிறாள். இதுவே உண்மையான செய்தி. இந்தப்பெண் தான் வகுத்துக்கொண்ட இந்த வழியிலிருந்து விலக மாட்டாள் என்பதனை அறிந்தோம்` என்று தாய் தமரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

``தேனுமாய்`` என்ற ஆக்கம், உவமை குறித்து நின்றது. ``உள்ளே`` என்றதன்பின், `நின்று` என ஒரு சொல் வருவிக்க. `என் ஆருயிர்க்குப் போகமாம் புரன்` என்க. போகம் - சிவபோகம்; அதனையுடைய புரம், சிவலோகம். காலன், காமன், புரம் இவர்கட்கு அந்தகன் என்க. அந்தகன் - முடிவைச் செய்பவன். ஆலும் அதற்கே முதலும் - விளையாடுகின்ற அதற்கே முந்துவாள். போலும், ஆம் அசை நிலைகள். பொய்யாதது - மெய்யாகக் கூறிய சொல். ``பொய் யாதது`` என்ற சொல். முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் காண்க.
சிற்பி