புருடோத்தம நம்பி - கோயில்


பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

வானவர்கள் வேண்ட
வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை
ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந்
தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே
நாடகமே யாடுவரே. 

பொழிப்புரை :

தேவர்கள் வேண்டியதனால் பெருகி வந்த விடத்தை உண்ட பெருமானார் அவர்களைக் காப்பாற்றினார். ஆனால் அடியவள் ஆதற்கு எந்தக் குறைபாடும் இல்லாத அடியேனுடைய கைகளில் இருந்த ஒளிவீசும் வளைகளைக் கைப்பற்றி எனக்கு இறந்து பாட்டை நல்கலாமா? தேனிலே பெரிய கோடுகளை உடைய வண்டு கள் ஒலிக்கும் தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலத்தில் கூத்தாடும் பெருமான், நான் அவரை நம்முடைய உறவினர் என்று சொல்ல முடியாதபடி என்துன்பத்தைப் போக்காது நாடகத்தை நடிக்கின்றார்.

குறிப்புரை :

`தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்று அவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து எனக்கு இறந்துபாடு உறுவிக்கின்றாரோ! இது வியப்பா கின்றது` என்பது, முதல் இரண்டடிகளின் பொருள். ஓகாரம், இழிவு சிறப்பு. `தேன் வண்டு` என இயையும். நமர் - நம் உறவினர். என்னாது - என்று சொல்லாதபடி; என்றது, `என் துன்பத்தைத் தவிர்க்காதுநின்று` என்றதாம். ``நாடகம்`` என்றது சிலேடை; இறைவனது அருட் கூத்தோடு, போலி வேடங்கொண்டு நடித்தலையும் குறித்தலின். தனக்கு அருளாமை பற்றி, அனைத்துயிர்க்கும் அருள்புரியும் கூத்தினை, `நாடகம்` என்றாள் என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆடிவரும் காரரவும்
ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன்
தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும்
தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே
நிற்கவுமே ஒட்டாரே. 

பொழிப்புரை :

ஆடிக்கொண்டுவரும் கரிய பாம்பினையும் அழகிய பிறையையும் பசியகொன்றைப்பூமாலையையும் எம்பெருமான் சூடிவருதலைக்கண்ட நான் அவரிடத்து மையலால் உடல்மெலிய என் தோள்வளைகள் நெகிழ அவற்றை இழந்தாலும், தேவர்கள் தேடிக் கொண்டுவந்து முன்நின்று துதிக்கும் அச்சிற்றம்பலத்துப் பெருமானார் தாம் கூத்தாடிக் கொண்டு வரும் பொழுது அவர் அருகே நின்று அவர் கூத்தினை அடியேன் காணும் வாய்ப்புப்பெறாதபடி விரட்டுகிறார்.

குறிப்புரை :

காரரவு - கரும் பாம்பு. ஐம்மதி - அழகிய சந்திரன். ``கண்டேன்`` என்றதைப் பெயராக்கி, அதனை, ``தோற்றாலும்`` என்ப தனோடு முடிக்க. ஆடிவருதல், வீதியின்கண் என்க. `நான் வளை களைத் தோற்கும் அளவிற்குக் காதல் கரைகடந்து நிற்கவும், இவர் என்னை அருகணையவும் ஒட்டாது ஓட்டுகின்றார்; இவர் தம்மைக் காதலித்தார்க்கு அருளுந்திறம் இதுதான் போலும்` என்றபடி.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

ஒட்டா வகைஅவுணர்
முப்புரங்கள் ஒர்அம்பால்
பட்டாங் கழல்விழுங்க
எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஒவாத்
தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக்
கோல்வளைகள் கொள்வாரே. 

பொழிப்புரை :

பொருந்தாத பகைமை பாராட்டிய அசுரர்களின் மும்மதில்களையும் தீப்பட்டு அவற்றை விழுங்குமாறு அம்பு எய்து மகிழ்ந்த பண்பாளராம், உயர்வு பொருந்திய வேதஒலி நீங்காத தில்லைச் சிற்றம்பலத்து எம்பெருமானார் மத்தளம் முதலியவை முழங்கப் பொருத்தமாகக் கூத்து ஆடுதலால் அதன்கண் ஈடுபட்ட அடி யேனுடைய திரண்ட வளையல்களைக் கைப்பற்றுவார் ஆயினார்.

குறிப்புரை :

ஒட்டா வகை அவுணர் - பொருந்தாத வகைமையை (பகைமைக் குணத்தை) உடைய அசுரர். `ஓர் அம்பால் எய்து` என இயையும். `அழல் பட்டு விழுங்க` என மாற்றுக. ஆங்கு, அசைநிலை. உகந்த - தேவர்களை விரும்புகின்ற. `சிட்டம்` என்பதன் ஈற்றில் அம் முக்குறைந்து நின்றது. சிட்டம் - உயர்வு: கொட்டு ஆம் நடம் - மத்தளம் முதலியவற்றின் முழக்கம் பொருந்திய நடனம். ஆட - ஆடுதலால். `ஆடி` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `கொடியோரை அழித்து நல்லோரை விரும்பிக்காக்கும் பண்புடையார், என் கோல் வளை களைக் கொள்வார்; இது தக்கதோ` என்றபடி.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

ஆரே இவைபடுவார்
ஐயம் கொளவந்து
போரேடி என்று
புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத்
தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை
ஒக்கின்றார் காணீரே. 

பொழிப்புரை :

நற்குணங்கள் உடையார் எவர்தாம் இக்குணங்கள் தோன்ற நிற்பவர் ஆவர்? பிச்சை பெறவந்து ஏடீ! என்று என்னை அழைத்துப் புருவத்தால் போரிடுகின்றார். அஃதாவது புருவங்களை நெரித்துக் காதல் குறிப்பை உணர்த்துகின்றார். தேர்கள் நிறைந்ததாய்த் திருவிழாக்கள் இடையறாது நிகழ்த்தப்படும் தில்லைநகரிலுள்ள சிற்றம்பலத்து எம்பெருமானார் நோய் மாத்திரமே செய்து அந்நோய் தீரும் பரிகாரத்தைச் செய்யாமையின் நீங்காத நோயைச் செய்யு மவரை ஒத்துள்ளார். அவரை நீங்களும் வந்து காணுங்கள்.

குறிப்புரை :

ஆரே - நற்பண்புடையார் எவர்தாம். இவை படுவார் - இக்குணங்கள் தோன்ற நிற்பார். செய்யுளாதலின் சுட்டுப் பெயர் முன்வந்தது. எனவே, ``இவை`` என்றது, பிச்சையேற்பார்போல வந்து பெண்டிரை மயங்கச்செய்வனவாய பின்வருங் குணங்களையாயிற்று. ஐயம் - பிச்சை. ``போர்`` என்றதை. ``புருவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ஏடி - பெண்பால் விளிப்பெயர். `புருவத்தால்` என உருபு விரிக்க. புருவத்தால் போரிடுதலாவது. புருவத்தை நெறித்துக் காதற் குறிப்புணர்த்துதல். இதனை, ``போர்`` என்றாள்; நோய் மாத்திரமே செய்துபோதலின். தீராநோய் செய்வார் - கெடுத்தொழியும் இயல்பினர். ஒக்கின்றார் - அவரோடு ஒரு தன்மையராய்க் காணப் படுகின்றார். ``ஒக்கின்றார்`` என்றதனால் `இவரது இயல்பு அதுவன்று` என்பது பெறப்பட்டது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

காணீரே என்னுடைய
கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத்
தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேற்
பூவம்பாற் காமவேள்
ஆணாடு கின்றவா
கண்டும் அருளாரே. 

பொழிப்புரை :

என்னுடைய கைவளையல்களைக் கவர்ந்து கொண்ட பெருமானார் ஆகிய, வானளாவிய அழகிய மாடங்களை உடைய தில்லைநகரின் சிற்றம்பலத்தில் நடனமாடுபவர், அணிகலன் களை அணிந்த அழகிய முலைகளின்மேல் பூக்களாகிய அம்புகளை எய்து மன்மதன் தன் ஆண்மையைக் காட்டி நிற்றலைக் கண்டும் எனக்கு அருள் செய்கிறார் அல்லர். அவருடைய இந்த அருளற்ற செயலை என் தோழிகளாகிய நீங்களும் காணுங்கள்.

குறிப்புரை :

காணீர் - காணுங்கள். ஏகாரம், அசைநிலை. சேண் ஆர் - வானத்தைப் பொருந்திய. பூண் ஆர் - ஆபரணம் நிறைந்த. வனம் - அழகு. ஆண் ஆடுதல் - தமது ஆண்மையை (வீரத்தை)க் காட்டிநிற்றல்.
சிற்றம்பலவர் என்னுடைய கைவளைகள் கொண்டார்; (ஆயினும்) காமவேள் ஆண் ஆடுகின்றவா கண்டும் தாம் அருளார் `இது காணீரே` எனக்கூட்டுக.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

ஏயிவரே வானவர்க்கும்
வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும்
தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியஞ் சூடிய
தில்லைச்சிற் றம்பலவர்
வாயின கேட்டறிவார்
வையகத்தா ராவாரே. 

பொழிப்புரை :

பிறையைச்சூடிய தில்லைச்சிற்றம்பலவர் ஆகிய பெருமானாரே தேவர்களுக்கும் மேம்பட்டவர் என்கின்றனர். இவரே எல்லோருக்கும் தாயும் தந்தையும் ஆவார் என்கின்றனர். இவர் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டு அவற்றை மெய்ம்மொழி யாக மனங்கொள்பவர் இவ்வுலகத்தில் பலகாலம் இருப்பதனை விடுத்து இறந்துபாடுற்று விரைவில் வானகத்தார் ஆவர்.

குறிப்புரை :

`ஏ` என்றது, இகழ்ச்சி குறித்தது. ``தேய்மதியஞ்சூடிய`` என்பதும் அன்னது. ``இவர்`` என்றது சிற்றம்பலவர் சொல்லைத் தலைவி தன் கூற்றிற் கூறியது. வானவர்க்கும் வானவர் - தேவர்க்கும் தேவர். ஏகாரம், தேற்றம். ``தில்லைச் சிற்றம்பலவர்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``என்பர்`` என்றாள். வாயின - வாயி னின்றும் வரும் சொற்கள். `சொல் என்னாது வாயின என்றாள். `மெய் யல்லது கூறாதவாய்` என அதனது சிறப்புக் கூறுவாள் போன்று பொய் கூறும் வாயாதலை உணர்த்தற்கு. `ஒருத்திக்கு நலம்செய்யாத இவர் அனைத்துயிர்க்கும் நலம் செய்வாராகத் தம்மைக் கூறிக்கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்` என்பது கருத்து. ``ஆவாரே`` என்றதில் உள்ள ஏகாரம், எதிர்மறைப்பொருட்டாய் நின்றது. `வையகத்தார் ஆகார்` என்றது, `வானகத்தார் ஆவர்` என்னும் பொருட்டாய், `இவர் வாய் மொழியைத் தெளிந்தோர்க்கு உளதாவது இறந்துபாடேயாம்` என்னும் குறிப்பினைத் தந்து நின்றது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

ஆவா இவர்தம் திருவடி
கொண் டந்தகன்றன்
மூவா உடல்அவியக்
கொன்றுகந்த முக்கண்ணர்
தேவாம் மறைபயிலும்
தில்லைச்சிற் றம்பலவர்
கோவாய் இனவளைகள்
கொள்வாரோ என்னையே. 

பொழிப்புரை :

தெய்வத்தன்மை பொருந்திய வேதஒலி பலகாலும் கேட்கப்படுகின்ற தில்லைச்சிற்றம்பலத்துக் கூத்தனார் ஆகிய இவர், ஐயோ! என்று கேட்டார் இரக்கப்படுமாறு தம்திருவடிகளால் காலனுடைய மூப்படையாத உடல் அழியுமாறு அவனைக்கொன்று மகிழ்ந்த முக்கண்களைஉடைய மூர்த்தியாவர். அடியவன் ஒருவனைக் காத்த அப்பெருமானார் எனக்குத் தலைவராய் வந்து யான்அணிந்த இனமான வளையல்களை என்னிடமிருந்து கைப்பற்றி அவர் அடிய வளாகிய என்னைத் துன்புறுத்துவாரோ?

குறிப்புரை :

ஆவா, இரக்கக் குறிப்பு. ``இவர்`` என்றது எழுவாய். அந்தகன் - கூற்றுவன். மூவா உடல் - அழியாத உடல்; அமர தேகம். அவிய - அழியும்படி. உகந்த - தம் அடியவனை விரும்பிக் காத்த ``முக்கண்ணர்`` என்றது, `இறைவர்` என்றபடி. இதன்பின், `அவ்வாறாக` என்பது வருவிக்க. தே ஆம் - தெய்வத் தன்மை பொருந்திய. `சிற்றம்பலவராகிய இவர்` என முன்னே கூட்டுக. செய்யு ளாதலின் சுட்டுப்பெயர் முன் வந்தது. ``கோவாய்`` என்றதன்பின் `வந்து` என ஒருசொல் வருவிக்க. `கோவா வளை` என்பது பாடம் அன்று. ``கொள்வாரோ`` என்ற ஓகாரம் சிறப்பு. `இது தக்கதன்று` என்பது குறிப்பெச்சம். `என்னை வளைகள் கொள்வார்` என முன்னே கூட்டுக. `வளைகள் கொள்ளுதல்` என்பது `மெலிவித்தல்` எனப் பொருள்தந்து, ``என்னை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

என்னை வலிவார்ஆர்
என்ற இலங்கையர்கோன்
மன்னு முடிகள்
நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித்
தில்லைச்சிற் றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார்
ஒவ்வார்இம் முத்தரே. 

பொழிப்புரை :

என்னைத் தம்வலிமையால் அடக்கவல்லவர் யாவர் என்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய நிலை பெற்ற முடிகளை நசுக்கிப் பார்வதியின் அச்சத்தைப் போக்கிய மணவாளர் செந்நெல் விளையும் வயல்களால் சூழப்பட்ட தில்லைச் சிற்றம்பலவர் ஆவர். இயல்பாகவே பாசங்கள் இல்லாத இப்பெருமான் முன்பு தம்மை விரும்பியவர்களுடைய அச்சத்தைப் போக்குபவராக இருந்தமைபோல இக்காலத்தில் இருப்பவராகத் தோன்றவில்லை.

குறிப்புரை :

வலிவார் - வலிசெய்வார்; நலிகின்றவர். ``வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான்`` (தி.12 பெ.பு.திருநீலகண்ட - 32.) என்றது காண்க. மணவாளர் - அழகர். ``மணவாளர்`` என்றாள், உமையது அச்சத்தைத் தவிர்த்தமை கருதி. அதனால், இவளது காதல் மீக்கூர்தல் பெறப்படும். `மணவாளர் இச்சிற்றம்பலவர்`` எனச் சுட்டும், `ஆயினும்` என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. தான், அசைநிலை. கண்டறிவார் - சிலரால் கண்டறியப்பட்டவர்; என்றது, `சிலர் தலைப்பட்டுணர்ந்து, ``அற்றவர்க்கு அற்ற சிவன்`` (தி. 3 ப.120 பா.2.) என்றாற்போலக் கூறப்பட்டவர்` என்றபடி. அவ்வியல்பு தன்னளவில் இவர்மாட்டுக் காணப்படாமையின், ``முன்னம் கண்டறிவார் ஒவ்வார்`` என்றாள். ``அறிவார்`` என்றது காலமயக்கு.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

முத்தர் முதுபகலே
வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக
என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும்
தில்லைச்சிற் றம்பலவர்
கைத்தலங்கள் வீசிநின்
றாடுங்கால் நோக்காரே. 

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்கள் இல்லாத எம்பெருமான் நண்பகல் நேரத்தில் வந்து அடியேனுடைய வீட்டில் புகுந்து `அன்பராய் உள்ளார் பிச்சை வழங்கட்டும்` என்று வாயால் யாதும் பேசாமல் என் உருவம் முழுதும் பார்த்தவர், அத்தகைய, சான்றோர்கள் குழாம் நெருங்கிய சிற்றம்பலப் பெருமான் தம் கைகளை வீசி ஆடுங்கால் பண்டுபார்த்து அடையாளம் கண்ட அடியேனை நோக்குகின்றார் அல்லர்.

குறிப்புரை :

முத்தர் - இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். முதுபகல் - முற்றிய பகல்; நண்பகல். பத்தர் பலி இடுக - அன்பராய் உள்ளார் பிச்சை இடுவார்களாக. எங்கும் - எனது உருவம் முழுதும். `இல்லில் வந்து என்னை முழுதும் நோக்குதல் பற்றி இவர் நமக்கு அருளுவார் என்று கருதி யான் இவர் தம் மன்றிற்குச் சென்றால், என்னைச் சிறிதும் கடைக்கணிக்கின்றிலர்` என்பாள், ``இல்புகுந்து பார்க்கின்றார்; ஆடுங்கால் நோக்கார்`` என்றாள். `இஃது இவர் வஞ்சகச் செயல்போலும்` என்றவாறு. இறைவனது திருவருளைப்பெற விரைவார் இறைவனை இங்ஙனம் கூறுதல் இயல்பு என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

நோக்காத தன்மையால்
நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து
மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந்
தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள்
கொள்வாரோ ஒண்ணுதலீர். 

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நெற்றியை உடைய என் தோழிமீர்! காளைவாகனத்தை விரும்பி இவரும் தில்லைச்சிற்றம் பலவர் தம்மை முழுமுதற்கடவுளாக மதித்த திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கி, அவ்வாறு மதிக்காத தன்மையால் நாம் உனக்கு அருள் செய்யக்கருதேம் என்று பிரமனைப் பழித்து அவன் நடுத்தலையைக் கைந்நகத்தால் கிள்ளி எடுத்தவராவார். அப்பெருமான் என் ஊர்க்கண் வந்து தன்னையே பரம் பொருளாக வழிபடும் என்னுடைய வளை களைக் கவர்ந்து என்னை வருத்துவாரோ?

குறிப்புரை :

``மாற்கு ஆழி ஈந்து`` என்பதை, ``நிந்தித்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நோக்காத தன்மையால் - நீ எம்மை முதற்கடவுள் என்று மதித்தலைச் செய்யாத காரணத்தால். யாம் நோக்கிலோம் என்று-நாம் உன்னை நம் அடியவருள் ஒருவனாகக் கருதி இரங்கி லோம் என்று சொல்லி. மலரோன் - பிரமன். அவனை நிந்தித்தமை. அவனது நடுத்தலையை உகிரால் அறுத்தமை. `திருமாலுக்கு ஆழி (சக்கரம்) ஈந்ததும், அறக் கடவுளை ஊர்தியாகக் கொண்டதும் அவர் களது வழிபாட்டினால்` என்பது பிரமனுக்குக் கூறிய குறிப்புப்பற்றி வருவித்துகொள்ளப்படும். ஊர்க்கே வந்து - ஊரினுள் தாமே வந்து. `வழிபடுபவர்க்கு அளியும், வழிபாடாதோர்க்குத் தெறலும் செய்கின்ற இவர் வழிபாடுடைய என்மாட்டுத் தெறலைச் செய்கின்றது என்னோ` என்பதாம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 11

ஒண்ணுதலி காரணமா
உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் றன்னைப்
புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப் பத்தும்
பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்
கினிதா இருப்பாரே. 

பொழிப்புரை :

தேவர்கள் தொழுது புகழும் நெற்றிக்கண்ண னாகிய சிவபெருமானைப் பற்றித் தலைவி கூற்றாகப் புருடோத்தமன் பாடிய, யாழை எழுவிப்பாடுதற்கு உற்ற தலையாய இப்பத்துப் பாடல்களையும் நன்கு உணர்ந்து ஆடிக் கொண்டு பாடுபவர், இவ் வுலகில் எல்லோராலும் மதிக்கப்படுதலைப் பொருந்தி மறுமையில் சிவலோகத்தில் மகிழ்வாக இருப்பார்கள்.

குறிப்புரை :

ஒண்ணுதலி, இதனுள்கூற்று நிகழ்த்திய தலைவி. `காரணமாச் சொன்ன` என இயையும். `பண்ணு பத்து` என இயைத்து வினைத்தொகையாக்குக. பண்ணுதல் - யாழைப் பண்ணுக்கு ஏற்ப அமைத்தல். `அங்ஙனம் அமைத்துப் பாடுதற் குரிய பத்துப் பாடல்கள்` என்றவாறு. தலைப் பத்து - தலையாய பத்துப் பாடல்கள். பயின்று - கற்று. எண்ணுதலைப் பட்டு - யாவராலும் மதிக்கப் படுதலைப் பொருந்தி. அங்கு - சிவலோகத்தில்.
சிற்பி