திருவோத்தூர்


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.

பொழிப்புரை :

திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.

குறிப்புரை :

ஓத்தூர் மேயகூத்தரே, பூவேந்தி உம் பொன்னடி போற்றாதார் இல்லை என்கின்றது. பூதேர்ந்து - வண்டு, ஈக்கடி எச்சம், முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து. ஆயன - பூசைக்கு வேண்டிய உபகரணங்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

இடையீர் போகா விளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்
சடையீ ரேயும தாளே.

பொழிப்புரை :

திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

குறிப்புரை :

இள முலையுமையாள் பாகரே, மான்தோல் உடையீரே, உம்மை வணங்குகிறோம் என்கின்றது. இடையீர் போகா இள முலை - இரண்டு முலைகளுக்கும் இடையில் ஈர்க்கு நுழையாத இளமுலை. `ஈர்க்கிடைபோகா இளமுலை` என்ற திருவாசகமும் நோக்குக. புடையீர் - பக்கத்துடையவரே!

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 

பொழிப்புரை :

ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே, உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.

குறிப்புரை :

ஓத்தூர்க் கள்ளரே! உம்முடைய காதல் நன்றா யிருக்கிறது என்கின்றது. உள்வேர் போல - நினைப்பீர்போல. உள்வீர் என்பதும் பாடம். நொடிமையினார்திறம் - பொய்யாகப் பேசுபவருடைய தன்மையை. அல்குல் - அரை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்
நாட்டீ ரேயரு ணல்குமே.

பொழிப்புரை :

செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலைநாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.

குறிப்புரை :

உம்மை ஏத்துவோம்; அருளும் என்கின்றது. தோட்டீர் - செங்காந்தள் பூவையணிந்தவரே. துத்தி - படப்பொறி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயரு ணல்குமே.

பொழிப்புரை :

குழையணிந்த காதினை உடையவரே, கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே, திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடிநின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.

குறிப்புரை :

பாடி, ஆடும் அடியார்களுக்கு அவர்கள் அழையாமலே வந்து அருளும் என்கின்றது. உழை - பக்கம். பிழையா - தவறாதபடி. வண்ணங்கள் - தாஅவண்ணம் முதலிய வண்ணப்பாடல்கள். அழையாமே நல்கல் முதல் வள்ளல் ஆவார் கடமையென்று விண்ணப்பித்தவாறு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயரு ணல்குமே.

பொழிப்புரை :

திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலிகொள்ள வருங்காலத்து, உம்திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள் நல்குவீராக.

குறிப்புரை :

நீர் பலியேற்க வந்த காலத்து,தம் மக்களுள் உம்முன் வந்து பலியிடத்தக்கவர் யார் என்று அஞ்சாதார் உளரோ; அருள் நல்கும் என்கின்றது. இறைவன் கொண்ட விடவேடத்தில் ஈடுபட்டவர்கள் மயங்கித் தன்வசம் அழிந்தமையின் அவர் அண்மைக்கண் நடந்து வந்து பிச்சை போடத்தக்கார் யார் என்று அஞ்சாதார் உளரோ என்று கூறியதாம். நக்கீரே - மகிழ்ந்திருப்பவரே.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே.

பொழிப்புரை :

திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.

குறிப்புரை :

கொன்றை விளங்குமுடியுடைநாதா என்று ஓதார் யார்? அருள் நல்கும் என்கின்றது. தாது - மகரந்தம். ஆதீர் - முதற்பொருளாயுள்ளவரே.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.

பொழிப்புரை :

இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப்பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும்.

குறிப்புரை :

ஓத்தூர் என்றார் மேல்உள்ள வினைகெடும் என்கின்றது. என்தான் - எம்மாத்திரம். ஒன்னார் - பகைவர். என்றார் மேல்வினை ஏகும் என்றும், என்றார்மேல் வினை ஏகும் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.

பொழிப்புரை :

திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன். திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர். அவர்தம் அறிவுநிலை யாதோ?

குறிப்புரை :

அயனும் மாலும் உம்மைத் தேடித் திசையெல்லாம் சென்றார்போலும் என்று நகை செய்கின்றது. நன்றாம் நான் மறையான் என்றது நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும் அவன் அறிந்திலன் எனக் குறிப்பித்தபடி. ஒன்றாயும் - பெருஞ்சோதிப் பொருளாயும். நேரில் இருந்தும் காணாது திசையெல்லாந்தேடினர்; அவர்கள் அறிவு இருந்தபடி என்னே என்று நகைசெய்தவாறு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே.

பொழிப்புரை :

கரிய நிறத்தவராகிய சமணர்களும், கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.

குறிப்புரை :

ஓரம்பால் எயில் எய்தவன் கழல்சேருங்கள்; புத்தர், சமணர் பொய்யுரை கேளாதீர்கள் என அறிவுறுத்தவாறு. தேரர் - புத்தர். கலிங்கத்துவராடையர் - துவர் ஏற்றிய கலிங்கநாட்டு ஆடையையுடைய புத்தர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

பொழிப்புரை :

திருவோத்தூரில், ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் சொல்லிய இவை பத்தும் விரும்புவார்க்கு வினை ஒழியும் என்கின்றது. முதலிரண்டடியிலும் கூறிய கருத்து, பிள்ளையார் பாடல்களைக் கேட்டதும் இறைவனருளால் ஆண் பனைகள் பெண் பனைகளாகக் குலையீன்றன என்பதாம்.
சிற்பி