திருவேற்காடு


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.

பொழிப்புரை :

மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

குறிப்புரை :

மிகவும் உயர்ந்ததை எண்ணின் அது நற்கதிக்கு வாயி லாம்; ஆதலால் வேற்காடு எண்ணியவர்கள் இவ்வுலகில் தேவராவர் என்கின்றது. ஒள்ளிது - உயர்ந்தபொருளை. உள்ள - எண்ண. உள்ளம் - உயிருமாம். உள்ளியார் - எண்ணியவர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

ஆட னாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.

பொழிப்புரை :

ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

குறிப்புரை :

வேற்காடு பணிந்தார் இவ்வுலகில் பெரிய செல்வராவர் என்கின்றது. சேடர் - பெருமையுடையவர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

குறிப்புரை :

வேற்காட்டுநாதரைப் பூவுஞ்சாந்தும் புகையுங் கொண்டு வழிபட்டவர்க்கு ஏதம் எய்தாது என்கின்றது. புறங்காடு - சுடுகாடு. ஆடி - ஆடுபவன்; பெயர்ச்சொல். ஏதம் - துன்பம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ் படும்மவர் பாவமே.

பொழிப்புரை :

ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித் துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

குறிப்புரை :

பணிந்த மனத்தோடு ஏத்த பாவம் அழியும் என்கின்றது. ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன் - பல மகாநதிகளைத் தன்னகத்து அடக்கிக்கொள்ளும் கடலைப்போல, கங்கையை அடக்கியவன். வீழ்சடை - விழுதுபோலும் சடை. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம். தாழ்வெனுந்தன்மை (சித்தியார்). பாவம் பாழ்படும் - பாவம் பயன் அளியாதொழியும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

காட்டி னாலு மயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை யொல்லையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.

குறிப்புரை :

இது பாடிப்பணிந்து ஏத்தவல்லவர் வினை ஓடும் என் கின்றது. காட்டினாலும் அயர்த்திடு அக்காலனை - மார்க்கண்டேயர் பூசித்து, சிவன் முழுமுதல்வன் என்பதைக் காட்டினாலும் அதனை உணராதே மயங்கிய காலனை. வீட்டினான் - அழித்தவன். ஒல்லை - விரைவு. காட்டினானும் என்ற பாடமும் உண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.

பொழிப்புரை :

தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.

குறிப்புரை :

விதிப்படி ஏத்தவல்லவர்க்கு வினைமாயும் என்கின்றது நூலினால் - ஆகம விதிப்படி. மாலினார் வினை - மயங்கிய ஆன்மாக்களினது வினை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.

பொழிப்புரை :

வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

குறிப்புரை :

இறைவனை எப்பொழுதும் பேசவல்ல குவியாமனத்து அடியவர்கள் நீடுவாழ்வர் என்கின்றது. தீர்க்கம் - நெடுங்காலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.

பொழிப்புரை :

மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர், அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

குறிப்புரை :

அன்போடு வழிபடுவார் அடி அடைவர் என்கின்றது. மூரல் - இளமை. வாரம் - அன்பு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே.

பொழிப்புரை :

பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

குறிப்புரை :

இராவணனது ஆண்மையை அடர்த்த இறைவனை நினையுங்கள் என்கின்றது. பரக்கினார் - உலகில் தன் படைப்பால் உயிர்களைத் தனு கரண புவன போகங்களோடு பரவச் செய்தவராகிய பிரமனார். விரக்கினான் - சாமர்த்தியமுடையன். விரகினான் என்பது எதுகைநோக்கி விரிந்தது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாவெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலாமொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.

குறிப்புரை :

இறைவனைப்பற்றிய மொழியே ஈறிலாமொழியாக அதனை அழகுபெறக் கூறினார்க்குக் குற்றமில்லை என்கிறது. வேறலான் - வெல்லுதலையுடையான். வேறாகாதவன் எனலுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

பொழிப்புரை :

விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

குறிப்புரை :

திருவேற்காட்டைத் தரிசித்து இறைவன் திருவடியைத் தியானித்து இப்பதிகத்தைப் பாடக் குணமாம் என்கின்றது. விண்ட - மலர்ந்த. சண்பை சீகாழிக்கு மறுபெயர்.
சிற்பி