திருக்கரவீரம்


பண் :

பாடல் எண் : 1

அரியு நம்வினை யுள்ளன வாசற
வரிகொண் மாமணி போற்கண்டம்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.

பொழிப்புரை :

வரிகள் அமைந்த சிறந்தநீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.

குறிப்புரை :

கரவீரத்து இறைவன்கழல் பேண வினையுள்ளன எல்லாம் அரியும் என்கின்றது. கழல்பேண நம்வினையுள்ளன அரியும் எனக்கூட்டுக. வரிகொள் மாமணி - நிறங்கொண்ட நீலமணி.

பண் :

பாடல் எண் : 2

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.

பொழிப்புரை :

தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.

குறிப்புரை :

சங்கரன் கழல்சார வினை தங்குமோ என வினாவுகிறது. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

பண் :

பாடல் எண் : 3

ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்றிக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாத நணுகவே.

பொழிப்புரை :

நல்லனவாகிய பூதகணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.

குறிப்புரை :

கரவீரநாதன் பாதம் நணுக ஏதம் அடையா என்கின்றது. ஏதம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 4

பறையு நம்வினை யுள்ளன பாழ்பட
மறையு மாமணி போற்கண்டம்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழ லேத்தவே.

பொழிப்புரை :

நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.

குறிப்புரை :

கழல் ஏத்த வினைபறையும் என்கின்றது. பறையும் என்றதோடமையாது பாழ்பட பறையும் என்றது அதன் வாசனையும் கெடும் என்பதை விளக்க.

பண் :

பாடல் எண் : 5

பண்ணி னார்மறை பாடல னாடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.

பொழிப்புரை :

சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில்களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.

குறிப்புரை :

கரவீரத்தை நண்ணுவார்வினை நாசமாம் என்கின்றது. பண்ணின் ஆர் மறை - சத்தத்தோடுகூடிய வேதம்.

பண் :

பாடல் எண் : 6

நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.

குறிப்புரை :

இத்தலத்தைத் தொழுவார்க்குத் துக்கம் இல்லை என்கின்றது. நிழலின் ஆர் மதி - ஒளி நிறைந்த பிறை.

பண் :

பாடல் எண் : 7

வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன்
அண்ட னாரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே.

பொழிப்புரை :

தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூரவிலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.

குறிப்புரை :

அடியார்மேல் துயரம் தூரமாம் என்கின்றது. வண்டர் - தீயோர்களாகிய முப்புராதிகள். அழல்போல் ஒளிர் கண்டனார் - விடத்தைப் போல் ஒளிவிடுகின்ற கழுத்தையுடையவர். துயர் தூரமே - துன்பம் தூரவிலகும்.

பண் :

பாடல் எண் : 8

புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவ னாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.

குறிப்புரை :

கரவீரம் என்பார்க்கு இடர் இல்லை என்கின்றது. புனல் இலங்கை - கடல்சூழ்ந்த இலங்கை. சின வல் ஆண்மை - கோபத்தோடு கூடிய வலிய ஆண்மை. செகுத்தவன் - அழித்தவன்.

பண் :

பாடல் எண் : 9

வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை யோயுமே.

பொழிப்புரை :

நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப்பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

கரவீரத்தைத் தியானிக்க வினைவலி குன்றும் என் கின்றது. வெள்ளத்தாமரையான் - நீரில் இருக்கும் தாமரையானாகிய பிரமன். வெள்ளத்தாமரை என்றது சாதியடை. பிரமனிருக்கும் தாமரை உந்தித்தாமரையாயினும் தாமரையென்ற பொதுமை நோக்கிக் கூறப்பட்டது. தான்; அசை.

பண் :

பாடல் எண் : 10

செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

முடைநாற்றம் வீசும் அமணர்களோடு காவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர்தம் கொடிய வெம்மையான உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள்கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

கரவீரத்தடியவர்க்கு அல்லல் இல்லை என்கின்றது. செடி - நாற்றம். அமணொடு என்பது அமண்ணொடு என விரித்தல் விகாரம்பெற்றது. சீவரம் - காவியாடை. கொடிய வெவ்வுரை - நெறியல்லா நெறிக்கண் செலுத்தலின் கொடிய வெம்மையான உரையாயிற்று. கடியவன் - காத்தலையுடையவன்.

பண் :

பாடல் எண் : 11

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

இது பாடுவார்க்குப் பாவமே இல்லை என்று கீழ்ப்போன திருப்பாடல்களில் தனித்தனியாகக் கூறியவற்றைத் தொகுத்துப் பயனாகக் கூறியது. சேடன் - பெருமையையுடையவன். வீடிலான் - அழிவில்லாதான். கட்டுடையார்க்கே வீடும் உண்டு ஆதலின் இயற்கையிலேயே கட்டிலாத இறைவன் வீடிலாதான் எனப்பட்டான். அழிவில்லாதவன் எனலுமாம்.
சிற்பி