திருத்தூங்கானைமாடம்


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைக டோறு மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள்தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.

குறிப்புரை :

தவம் செய்யும் இடத்தைத் தேடுகின்ற மக்களே! தூங்கானைமாடம் தொழுமின்கள் என்கின்றது. நின்றீர் எல்லாம் ஆளாம்வண்ணம் தொழுமின்கள் எனக்கூட்டுக. ஒடுங்கும் பிணி - தமக்குரிய பருவம் வருந்துணையும் வெளிப்படாதே ஒடுங்கியிருக்கும் நோய். அடங்கும் இடம் - அடங்கியிருத்தற்குரிய இடம். கிடங்கு - அகழ். சுலாவி - சுற்றி. கெழு மனைகள் - கூடிய வீடுகள். கடந்தை - பெண்ணாகடம். இது தலப்பெயர். தூங்கானை மாடம் என்பது கோயிலின் பெயர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லை யானேறுடை
மணிநீல கண்ட முடையபிரான் மலைமக ளுந்தானு மகிழ்ந்துவாழும்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.

குறிப்புரை :

பிறப்பிறப்பு நீங்கிப் பேரின்பம் உற எண்ணில் இக் கோயிலைத்தொழுங்கள் என்கின்றது. பிணிநீர் - நோய்த் தன்மையையுடைய. அணிநீர - அழகிய. மணிநீல கண்டம் - அழகிய நீலகண்டத்தையுடைய. பிரான் - வள்ளன்மையுடையவன். துணிநீர் - தெளிந்த நீர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப்
பூமா ணலங்க லிலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும் குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.

குறிப்புரை :

பிறந்து, வாழ்ந்து, இறந்துவரும் இந்தவாழ்க்கையை ஒழிக்கவிரும்புவீர் இக்கோயிலைத் தொழுங்கள் என்கின்றது. சலிப்பு - ஓய்தல். தவம் ஆமாறு - தவம் சித்திக்கும் வண்ணம். அலமந்து - வருந்தி. தூமாண் கடந்தை - தூய்மையான மாட்சிமைபொருந்திய கடந்தை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலு முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

நிலையானநோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

இதுவும் அது. பிணியூன்றும் பிறவி - நோய் நிலை பெற்ற பிறப்பு. மான்று - மயங்கி. மூவாச்சிலை - மூப்படையாத வில். முகில் - மேகம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியறீர மேலுலக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள்; ஆதலால், அவற்றை நீங்கி மேலுலகம் எய்தலுறின் வேறொன்றும் தேட வேண்டாம்; இறைவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு தூங்கானைமாடத்தைத் தொழுங்கள் என்கின்றது. மயல்தீர்மை - மயக்கம் நீங்கும் உபாயம். ஆறு - வழி. வியல்தீர - பலதிறப்படுதல் நீங்க. உயர்தீர ஓங்கிய நாமம் - உயர்ந்த பெயர். ஓவாது - இடைவிடாது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கிற்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன் றுங்கால நமக்காதன்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

புலன் நுகர்ச்சிக்குரிய பல தன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன்போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த்தடங்கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

காது, கண் இவை கெட்டு, தோல் சுருங்கி, நரை தோன்றுவதற்குமுன் தொழுமின் என்கின்றது. பல் நீர்மை குன்றி - புலன் நுகர்ச்சிக்கு ஏற்ற பலதன்மைகளும் குறைந்து. படர்நோக்கின் - படலம் மூடியதால். பவளந்நிற நல்நீர்மை - செவ்வரி பரந்த நல்ல நிலைமை. திரை - திரங்கிய. பொன் நீர்மை துன்ற - பொன்போன்ற தன்மை பொருந்த; புறந்தோன்றும் - உருத்தாங்கிக் காட்சியளிக்கும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லா நீள்கழ லேநாளு நினைமின்சென்னிப்
பிறைசூ ழலங்க லிலங்குகொன்றை பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும், முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

குறிப்புரை :

புல்லிய உணவுகொண்டு வருந்தும் இழிந்த வாழ்வு ஒழியத் தவமாகிய பேருண்டியை விரும்பியிருக்கின்றவர்களே! இக்கோயிலைத் தொழுமின் என்கின்றது. இறையூண் - சிற்றுணவு. துகள் - தூளி. இடுக்கண் - துன்பம். தவம் நிறையூண் நெறி - தவமாகிய நிறைந்த உணவைப்பெறுமார்க்கம். அலங்கல் - மாலை. பிணையும் - விரும்பும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லா மிறையே பிரியா தெழுந்துபோதும்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக்கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து பழிப்பாய வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் தேடுபவர்களே! விரைந்து வாருங்கள்; இக்கோயிலைத் தொழுங்கள் என்கிறது. பழிப்பாய வாழ்க்கை - காளையரான காலத்துக் காமுற்றாரும் இந்நிலையைக் கண்டு ஏளனம் செய்யும் கிழப்பருவத்தது. இறையே - சிறிதும். போதும் - வாருங்கள். கல் - கயிலை. அரக்கன் - இராவணன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நோயும் பிணியு மருந்துயரமு நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயு மனங்கருதி நின்றீ ரெல்லா மலர்மிசைய நான்முகனு மண்ணும்விண்ணும்
தாய வடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காணமாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானைமாடப் பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

இதுவும் அது. நோய் - உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன. பிணி - மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள். அருந்துயரம் - அவற்றால் விளையும் துன்பங்கள். வாயும் - பொருந்தும். தாய - தாவிய.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன
திகடீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழையுந் தானும் பொருந்திவாழும்
துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய் மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

பிறப்பறுக்கப் புறச்சமயத்தார் பொய்ம்மொழிகளைத் தேறவேண்டா: தூங்கானைமாடம் தொழுமின்கள் என்கின்றது. பகடு ஊர் பசி - யானைப்பசி. முகடு - தலையுச்சி, திகழ் தீர்ந்த - விளக்கம் ஒழிந்த. துகள் - குற்றம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

மண்ணார் முழவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம் பந்தனல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே யாகும் வினைமாயுமே.

பொழிப்புரை :

மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.

குறிப்புரை :

சுடர்க்கொழுந்துநாதன் கழலைப்பரவும் பாடல் பத்தும் கருத்துணரக் கற்றாரும் கேட்டாரும் தேவராய் வாழ்வர்; வினைகள் மாயும் எனப் பயன் கூறுகின்றது. மண் - மார்ச்சனை.
சிற்பி