திருத்தோணிபுரம்


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே.

பொழிப்புரை :

வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின் விளைந்ததேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு கொண்டு, ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற் சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட மார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.

குறிப்புரை :

பிரிவாற்றாமையால் பேதுறுகின்ற தலைவி, தன் நிலை மையை உணர்த்த வண்டைத் தூதாக அனுப்பக்கருதி, அதனைப் பார்த்து வேண்டுகின்றாள். வண் தரங்கம் - வளப்பமான அலை. தரங்க இசை - அலைபோல் அசைகின்ற இசையின் ஆலத்தி. அளி - வண்டு. மதியத்துண்டர் - பிறைத்துண்டை அணிந்தவர். அங்கப் பூண் - எலும்பாகிய ஆபரணம். பண்டரங்கன் - பண்டரங்கக் கூத்தை ஆடுபவன். பதினொருவகைக் கூத்தினுள் சிவபெருமான் திரிபுரத்தையழித்தபோது வெண்ணீறணிந்து ஆடியகூத்து, தான் ஏவுந்தொழிலுக்கு உடந்தையாய் இருக்க அளி அரசே எனச் சிறப்பித்து அழைத்தாள். பெடையினொடும் இசைபாடும் அளி என்றதனால், பிரிவுத்துன்பம் அறியாமையால், அழைத்து உணர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதிலும் மது மாந்தி மயங்கியவர்களுக்கு, காதல் வாழ்க்கையில் களித்து இருப்பவர்களுக்கு உணர்த்தினாலல்லது தானே உணரும் ஆற்றல் இல்லை என்பதையும் அறிவித்தவாறு. பெடையோடு இருக்கும் அளியை மூன்றாமவளாகிய தான் பார்த்தமையால் உடன் உறைவு இனிக் கூடாது; என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையையும் குறிப்பித்தாள். இசைபாடும் அளியாதலின், தோணிபுரநாதரை உன் இசை முதலில் வசப்படுத்த, என்னிலைமையை எடுத்தியம்ப உனக்கு இனியவாய்ப்புக் கிட்டுமென்று உணர்த்தினாள். காதலனோடு களித்திருக்கும் பெடைவண்டு பெண்கள்படும் பிரிவுத்துன்பத்தை நன்கு முன்னர் அறியுமாயினும், அதனைத் தனித்து மற்றொரு தலைவனிடத்து அனுப்புதல் மரபு அன்றாகலின் அளி அரசே என ஆண்வண்டை விளித்தாள். நீ செல்லினும் என்னிலைமை உணர்த்தக் கூடிய அளவிற்கு அவகாசம் இராதென்பாள் பண்டரங்கற்கு என்றாள். கூத்தில் ஈடுபட்டவர்க்குக் கேட்பதற்கு அவகாசம் ஏது? இத்தனை நயங்கள் இப்பாடலில் பொதிந்து ஆன்மாவின் பெண்மைத்தன்மையை மிகுதிப்படுத்தி, இறைவனாகிய தலைவனின் இன்றியமையாமையை உணர்ந்து இடையறாப் பேரன்பாகிற வண்டைத் தூதனுப்புகின்ற நிலை மிக அறிந்து இன்புறுதற்கு உரியது. அளி என்பது அன்பிற்கும் ஒரு பெயராதல் காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.

பொழிப்புரை :

எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீக்குதற்கரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி, பத மந்திரங்களை ஓதிப்பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும் முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக.

குறிப்புரை :

ண்டின் இன்னிசை அங்கு ஓதப்படும் வேத ஒலியில் இறைவன் காதில் வீழாது என்பதை உணர்ந்த தலைவி, தாரை போல் பெருங்குரல் இடும் குருகைத் தூதனுப்ப எண்ணி, என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் என் வினைப்பயன் தான்; ஆயினும் அவர்க்கு நீ சொல்லு என்று தூதனுப்புகின்றாள். சுறவம் - சுறாமீன். கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. குருகு - நாரை. பயலை - பிரிந்த மகளிர்க்கு உண்டாகும் ஒரு நோய். செறிசிறார் - நெருங்கிய சிறுவர்கள். பதம் - பதமந்திரங்கள். வெறி நிற ஆர் மலர் - மணமும் நிறமும் பொருந்திய மலர். நீ இளங்குருகாயிருந்தும் என் நோய் அறியாதது என் வினைப்பயன் என்றாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையே னுறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தாற் பழியாமோ மொழியாயே.

பொழிப்புரை :

பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில் முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே! சண்பக மரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின் பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக.

குறிப்புரை :

இளங்குருகும் இவள் துன்பத்தை அறியாதாகவே, கோழியை விளித்துக் கூறுகிறாள். நற்பண்புடைய நாயகனுக்கு என் தன்மை உரைத்தால் உனக்குப் பழியாவந்துவிடும் என வேண்டுகிறாள். பழனம் - வயல், கோடு - கரை. சூட்டு - உச்சிக் கொண்டை. கண்பு அகத்தின் - சம்பங்கோரையின் நடுவில்.` செருந்தியொடு கண்பு அமர்ந்து ஊர்தார் `( மதுரைக் 122 ) என்பதிலும் இப்பொருளதாதல் காண்க. தன் துன்பங்கண்டும் தான் தூதுபோகாமல் இருப்பது வருத்த மறியாமையால் என்று எண்ணிய தலைவிவாட்டமில்லா வாரணமே என்கின்றாள். சம்பங்கோரையின் நடுவில் வாழ்வதால் உனக்கு வருத்தந் தெரியாது; ஆனாலும் நீ ஒரு சேவலாதலின் எம்போலியர் வேண்டுகோளை மொழியத்தான் வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அதற்குள், நான்போய்ச் சொல்லுகிறேன் அவர் கேட்பாரோ என்ற ஐயம் வாரணத்திற்கும் உண்டாவதாக எண்ணி, தன் தலைவன் பண்பன் என்று அறிவிக்கின்றாள். அதிலும் சிறப்பாக அவனியல்பு அவன் ஊருக்கும், ஊர் இயல்பு அவனுக்கும் உண்டாகையாலே செண்பகஞ் சேர் பொழில்சூழ் தோணிபுரம் என்ற குறிப்பால், வண்டுமொய்க்காத மலராகிய செண்பகம் சேர்ந்திருப்பதால் வண்டுகள் செல்ல அஞ்சுகின்றன; நீ கோரையின் நடுவில் வாழ்வதால் தோணி அணுகும்போது செல்லும் வாய்ப்பிருக்கிறது என்று எண்ணித்தான் உன்னை அனுப்புகின்றேன் என்கின்றாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய வுணர்த்தாயே.

பொழிப்புரை :

உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையே! `காதல் மிக்கூர்தலால் அணிகலன் களைப் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கப்பெற்று உன் அடியவள் வருந்துகிறாள்` என்று வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக.

குறிப்புரை :

கோழியும் பயன்படாதொழிய, நாரையைப் பார்த்து வேண்டுகிறாள். நாராய்! தோள்மெலிந்து மேனி பசந்தாள் என்று இன்றே சென்று உணர்த்து என்கின்றனள். காண்தகைய - அழகுமிக்க. பூண்தகைய - அணிகளால் அழகுபெற்ற. பொன்பயந்தாள் - பயலை பெற்றாள். சேண் - ஆகாயம். அவர் ஆண்டகையாய் இருப்பதால் அவரால் பூணத்தக்க தளராத முலையும் தளர்ந்து, மெலிந்து, மேனி பசந்தது என்று உணர்த்தினால், உடனேவந்து தலையளிசெய்வர் என்று இன்றே சென்று தூதுசொல்லவேண்டிய இன்றியமையாமையை விளக் குகிறாள். நீ சென்றால் பிறர்கண்ணில் படாமல் தங்கி, என்தூதை இரகசியமாய்ச் சொல்லுதற்கேற்ற அவகாசம் கிட்டும்வரைத் தங்குவதற்கு மணிமாடங்கள் இருக்கின்றன; அவரோ திருத்தோணிமலைச் சிகரத்தில் இருக்கிறார் என்று செவ்வி அறிதல் எளிமையும் செப்புகிறாள். இதில் நுகர்ச்சிக்குரிய முலை மெலிந்தால் இனி அவருக்குப் பயன்படுமாறு யாங்ஙனம் என்பதனையும் உணரவைத்தாள். அடி - காரணம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

பாராரே யெனையொருகாற் றொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோதகங்காள்
தேராரு நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்னிலைமை நிகழ்த்தீரே.

பொழிப்புரை :

அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழு மையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.

குறிப்புரை :

இங்ஙனம் நாரை முதலானவற்றை இவள் வேண்ட, அவை இவளைத் திரும்பியும் பாராமல் ஒழிய, இன்னது செய்வது என்று தோன்றாத நிலையில், மாடப்புறாக்களை அழைத்துக் கூறுகிறாள். கபோதகங்காள்! உங்களைத் தொழுகின்றேன்; என் தலைவருக்கு என் நிலையை உணர்த்துங்கள் என்கின்றாள். எனை ஒருகால் பாராரே - யான் அழைத்த அளி குருகு முதலியவர்கள் என்னை ஒருமுறையும் பாராரே. அளி முதலியவற்றைப் பாரார் என உயர்திணையாற் கூறியது, பிரிவால் விளைந்த பேதைமையால் ஆகும். பாங்கு - பக்கத்தில். கார் ஆரும் - கருமைநிறைந்த. கபோதகம் - மாடப்புறா. நீர் - கங்கை. கபோதகங்காள் எனப் பன்மைவாய்பாட்டால் அழைத்தது புறாக்கள் என்றும் இணைபிரியாமல் இருத்தலின். அன்றி, இணைந்து வாழுகின்ற இவைகளும் என் வேண்டுகோளிற்காகப் பிரிந்து, யான் அடையும் துன்பத்தை இவைகள் எய்தல் ஆகாது என்ற இரக்கத்தாலும்ஆம். தலைவனை `நீர் ஆரும்சடையார்` என்றதுகங்கையாகிய ஒருத்தி எஞ் ஞான்றும் உடன் உறைவதால் அவருக்குப் பிரிவுத் துன்பம் தெரியாது; நிழலில் இருப்பவனுக்கு வெயிலின் கொடுமை தெரியாதவாறுபோல, என்னிலையைக் கண்டநீங்களே சொல்லும்வன்மையால் அவரைச் செவிமடுக்கச் செய்யவேண்டும் என்று குறிப்பித்தவாறு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த வன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் றுளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.

பொழிப்புரை :

வளமான சேற்றிடை முளைத்து மலர்ந்த தாமரை மலர்மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரையாக வீச, அரச போகத்தில் வீற்றிருக்கும் அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களாக.

குறிப்புரை :

புறாக்களும் இன்பத்தில் மூழ்கி அசையாதிருக்க, தாமரை ஆசனத்தில் இருபுறமும் செந்நெற்கதிர்களாகிய சாமரைவீச அரசபோகத்தில் இருக்கும் அன்னங்கள் இவள் கண்ணில்பட்டன. இரங்கும் பெருந்தன்மை அற்ற அவைகள் கிடக்கட்டும்; இந்த அரச அன்னமாவது என் குறையை நிறைவேற்றும் என்று எண்ணி அதனை அழைத்தாள். தனக்குப் பிரிவே பெருங்காலனாக இருந்து உயிர்கொள்வதை உணர்த்தினாள். காலகாலன் திருவடியைக் கூடினால் கலக்கமில்லை என்று தெரிவித்துக்கொள்கின்றாள். விண்ணும் மண்ணும் தோற்று வித்தல் - பொருட் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல். மறையைத் தோற்றுவித்தல் - சொற்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறுநோ யறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.

பொழிப்புரை :

வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத்துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக.

குறிப்புரை :

அன்னங்களாலும் பயன்பெறாது மயங்கிய தலைவி, பனை மடலில் வாழும் அன்றிலைப் பார்த்துக்கூறுகிறாள். அவள் பார்த்த காலம் பகல் ஆதலின் அன்றில்கள் கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. ஆதலால் அவற்றை அழைக்கின்ற அவள் உங்களுக்குப் பிரிவுத்துன்பமே தெரியாது; ஆனாலும் மிக வல்லவர்கள்; என் பயலை நோயைக் கூறுங்கள் என்கின்றாள். மேலும் `தென்றலார் புகுந்துலவு` என இளவேனிற்காலம் வந்தமைகாரணத்தால் தான்படும் துன்பத்தை மிகுத்துக் காட்டுகின்றாள். `கொன்றைவார் சடையார்க்கு` என்ற குறிப்பால் என்நோயைக் கூறுகின்ற நீங்கள், அவர்சடைக்கண்ணதாகிய கொன்றை மாலையைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தால், அது பெற்றாயினும் உய்வேன் என்று, உபாயம் அறிவித்தாள். முன்றில் - வாயில். மடற் பெண்ணை - மட்டைகளோடு கூடியபனை. குரம்பை - கூடு. முயங்கு சிறை - தழுவியிருக்கின்ற சிறகுகள். கூர் பயலை - மிக்க பசலைநோய்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை யென்னிடைக்கே வரவொருகாற் கூவாயே.

பொழிப்புரை :

பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக.

குறிப்புரை :

பிரிவுநோய் அறியாமையினாலே அன்னங்களும் பேசாமல் இருக்க, குரல் நயம் இன்மையால் அவரும் கேளார் என்ற எண்ணத்தால், அவரை மீட்டும் வற்புறுத்தாது குயிலைப் பார்த்துத் தலைவன்வரக் கூவாய்! என வேண்டுகின்றாள். குயில் மாந்தளிரை உண்டு மிக இனிமையாகக்கூவும் தன்மையது என்று குறிக்கின்றாள். அது அங்குச் சென்று கூவினாலே போதும் அவர் மனம் மாறும் என்று எதிர்நோக்கினளாக, அளிமுதலியவற்றைப் பார்த்துப் பகராய், விளம்பாய் என வேண்டிய அவள், இதனைக் கூவாய் என்று மட்டும் வேண்டுகிறாள். தோணிபுரத்தைப் பொழில்சூழ் தோணிபுரம் என்றது தூது போகின்ற குயிலுக்குத் தங்குமிடம் வசதியாய் உள்ளது என்பதை அறிவிக்க. என் இடைக்கே என்பதில், ஏகாரம் வந்தால் பிரியவிடாது காப்பாற்றும் பொறுப்பும் உன்னுடையதே என்று குறிப்பித்து நிற்கின்றது. சூதப் பல்லவம் - மாந்தளிர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நற்பதங்கண் மிகவறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகிற் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.

பொழிப்புரை :

அழகமைந்த வாயாகியஅலகினை உடைய நாகண வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால், இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில்வல்ல மறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற் பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.

குறிப்புரை :

குயிலும் வேனிற்காலத்தன்றி, பொழிலிடைத் தலைவர் வரினன்றித் தூதுசெல்லும் தரத்தன அல்ல என்பதை உட்கொண்ட தலைவி, நாகணவாய்ப்புள்ளை வேண்டுகின்றாள். நற்பதங்கள் மிக அறிவாய் - நல்ல சந்தர்ப்பத்தை நன்றாக அறிவாய். பொற்பு - அழகு. சொற்பதம் - சொல்லப்படுகின்ற பதம் என்னும் ஓதும்முறை. தலைவன் தோளும் சாமர்த்தியமுமே தம்மை வசீகரித்தன என்பாள், `தோள் விகிர்தனுக்கு` என்றாள். தன்னுடைய உள்ளக் காதலை, மெய்ப்பயலை பலர் அறியப் பரப்புதலின், அதனை நீக்கவேண்டியதன் இன்றியமையாமையை எடுத்து இயம்புக என்று குறிப்பித்தாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

பொழிப்புரை :

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என் பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக.

குறிப்புரை :

இங்ஙனம் சேய்மையிலும் அண்மையிலும் இருக்கின்ற பொருள்களை வேண்டிக்கொள்ள, அவை பயன்படாதொழியவே, தான்வளர்த்த கிளியையே நோக்கி,` ஒருகால் அவர் பெயரைச் சொல்` என்று வேண்டுகின்றாள். இதுவரை தூதுவேண்டிய அவள் இப்போது கிளியிடம் பெயரை வேண்டுவது, கிளி சென்று தூதுரைத்துத் தலைவரை உடன்படுத்தி அழைத்துவரும் வரையில் பிரிவுத்துன்பம் பொறுக்கமுடியாத அளவு பெரிதாம் என்பதை எண்ணி, தலைவனுடைய பெயரைக் கேட்கின்ற அளவிலாவது துன்பந் தோன்றாது என்ற குறிப்பினளாக இங்ஙனம் வேண்டுகின்றாள். அங்ஙனம் சொல்வதற்குக் கைக்கூலியும் தருவதாக தேனொடுபால் முறையாக உண்ணத் தருவேன் என்கின்றாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்த னுரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை, வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலை போன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினையவல்லவர் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை :

கழுமலநாதனைப்பற்றிச் சம்பந்தர் அருளிச்செய்த சிறப்பமைந்த இத்தமிழ்வல்லவர்கள் சிவலோகம் சார்வர் எனத் திருக்கடைக்காப்பு அருளுகின்றது. போர் - வைக்கோற்போர். கார் - கருமை. கமலத்தார் மிகுத்த வரை மார்பன் - தாமரை மலர் மாலையணிந்த மார்பையுடையவன். அந்தணர்க்கு அடையாள மாலை தாமரையாதலின் இங்ஙனம் கூறினார். பதிகங்கள்தோறும் கூறப்பெறும் இராவணனை அடர்த்த வரலாறு, புத்தர் சமணர்களைப் பற்றிய குறிப்பு இவைகள் இத்திருப்பதிகத்து இல்லாமை ஊன்றி இன்புறுதற் குரியது. சன்மார்க்க நெறியில் தலைவனும் தலைவியுமாக இறைவனும் ஆன்மாவும் ஈடுபடுகிறபோது காதல்வெள்ளத்து ஆழங்காற்படுகின்ற போது, இறைவனுடைய இன்றியமையாத் தன்மை உள்ளத்தைக் கவர்ந்துநின்றபோது இன்ப உணர்ச்சியன்றி வேறு எதுவும் தோன்றாது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
சிற்பி