திருச்செங்காட்டங்குடி


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம்கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணிசெய்துவழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.

குறிப்புரை :

அடியார் மணந்தரும் பூக்களைத் தூவிவழிபட இறைவன் கணபதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது. நறை - தேன். விரை - மணம். முறைகொண்டு - விதிப்படி. முட்டாமே - இடைவிடாமல். சிறை - சிறகு. அறையும் - ஒலிக்கும். கறை - விடம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

கார்காலத்தே மலரும் கொன்றை மலரை அணிந்த சிவபிரான், வாரால் இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும், சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும் நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

பலவகை வாச்சிய ஒலிகள் நீங்காததும் விழவறாதது மாகிய செங்காட்டங்குடிக் கணபதீச்சரத்தான் என்கின்றது. வார் ஏற்ற பறை - வாரால் இழுத்துக் கட்டப்பெற்ற பறை. சீர் ஏற்றம் - புகழின் மிகுதி. கார் - கார்காலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், வரந்தை, சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச்செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

வரந்தை முதலியபதிகளில் இருப்பவனும், உடுக்கை, கோவணம், கிண்கிணி, கபாலம் இவற்றையுடையவனும் கணபதீச்சரத்தான் என்கின்றது. வரந்தை, கிரந்தை, சோபுரம், என்பன ஊர்ப் பெயர்கள். மந்திரம் - வேதம். தந்திரம் - ஆகமம். கையது ஓர் சிரந்தையான் - கையின் கண்ணதாக ஓர் உடுக்கையை உடையான். சிரந்தை - உடுக்கை.( பெருந்தொகை - 54.) கரந்தை - சிவகரந்தை என்ற மணமுள்ள பூண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

தொங்கலுங் கமழ்சாந்து மகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையாற் றொழுதேத்த வருச்சனைக்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

மணம் கமழும் மாலைகளும் சந்தனமும், அகில் புகையும் கொண்டு தொண்டர்கள் தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள்செய்த பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவ பிரான், சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தொண்டர் அருச்சனைக் கருள்செய்தான் கணபதீச்சரத் தான் என்கின்றது. தொங்கல் - மாலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினான் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

தனது இடத்திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும், பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடைசூழ்ந்துள்ள திருச் செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அடியார் பாலும் நெய்யுங்கொண்டு அபிடேகித்து மணமாலைகொண்டு வழிபடக் கூற்றுதைத்தான் இவ்வூரான் என்கின்றது. பயின்று - பலகாலும் பழகி. நூலினான் - வேதவிதிப்படி. புரிந்து - விரும்பி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

நுண்ணியான் மிகப்பெரியான் நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியனயாவற்றினும் மிகநுண்ணியன். பருமையானபொருள்கள் யாவற்றிலும் மிகப்பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமது முடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.

குறிப்புரை :

நுண்மைக்கு நுண்ணியனாகவும், பருமைக்குப் பரிய னாகவும், வருந்துவார் வாயுளானாகவும், தண்ணியனாகவும் வெம்மையனாகவும், மேலும் அகத்தும் இருப்பவனாகவும் விளங்குங்கண்ணுதலான் கணபதீச்சரத்தான் என்கின்றது. `நுண்ணியான் மிகப் பெரியான்` என்றதும்,(அணோரணீயாந் மஹதோ மஹீயாந்) என்னும் உபநிடதக் கருத்தும் ஒத்தமை காண்க. தன்னடியடைந்த அடியார்கட்குத் தண்ணியான், புறச்சமயத்தார்க்குவெய்யான், கிரியாவான்களுக்குச் சகத்திரதளபத்மத்தின் மேலதாகத் தலைமேலான், ஞானி கட்கு மனத்துளான் என்க. கண்ணி - தலையில் சூடப்படும் மாலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவ மரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினா ரகன்கழனிச் செங்காட்டங் குடியதனுட்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டவன், கையில் மழுவேந்திய கணபதீச்சரத்தான் என்கின்றது. மையினார் மலர் - நீலமலர். பையரவம் - படத்தோடு கூடிய பாம்பு. மீன் பிறழ் அச்செய்யின் ஆர் அகன் கழனி - மீன்கள் துள்ளுகின்ற அந்த வயலையும், நிறைந்த அகன்ற நீர்நிலைகளையும் (உடைய). செய் - பண்படுத்தப் பெற்ற வயல். கழனி - தானே அமைந்த விளைபுலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

தோடுடையான் குழையுடையா னரக்கன்றன் றோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையா னாடுடையான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச் சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொருகாதில் குழை அணிந்தவன். கயிலையைப் பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன். பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள்புரிபவன்.

குறிப்புரை :

தோடும் குழையும் பீடும் உடையவன் என்பது முதலாக அவன் சிறப்பியல்புகள் பலவற்றைச் செப்புகிறது. தோடு சத்தி பாகத்திற்குரியது. குழை சிவத்தின் பாகத்திற்குரியது. அரக்கன் - இராவ ணன், பீடு - பெருமை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஆனூரா வுழிதருவா னன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அவன் ஏறுவதுவிடை; இடம் வான், வையகம், வாழ்த்துவார் மனம், தேனூர், கானூர் முதலியன என்கின்றது. ஆன் ஊரா ஊழி தருவான் - இடபத்தை ஏறிச் சுற்றுவான். இருவர் - அயனும் மாலும். வானூரான் - விண்ணிடமாக ஓங்கி வளர்ந்தவன். இங்ஙனம் புறத்தானே எனினும் வாழ்த்துவார் மனத்தகத்துள்ளான்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும், காவி யாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

புறச்சமயத்தார்க்கிருளாயிருப்பவன் சிறுத்தொண்ட நாயனார்க்கருள் வழங்க இந்நகரில் எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது. செடி - நாற்றம். சீவரம் - காவியாடை. படி நுகராது - பூமியின் கண் நுகரத்தகுவன நுகராதே, அயர் உழப்பார் - துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள். பொடி - விபூதி. கடி நகர் - காவல் நகரம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.

பொழிப்புரை :

கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து விளங்குவதும், மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய வேதப்பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.

குறிப்புரை :

இத்தலத்துத்தமிழில் வல்லவர்கள் வானுலகத் திருப்பவர் என்கின்றது. கறை இலங்கு மலர் - நீலமலர். நறை - தேன். சிறை - கரை. படப்பை - தோட்டம். மறை இலங்கு தமிழ் - வேதக் கருத்துக்கள் விளங்கும் தமிழ்ப்பாடல்கள். வானுலகத்து இருப்பார் - புண்ணிய லோகந்துய்க்கச் சென்ற தேவர்கள் போலாதுஅயனால் படைக்கப்பட்ட பதினெண் கணத்தவர்களில் ஒருவராக என்றும் இருப்பார்.
சிற்பி