திருக்கோளிலி


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

வாழ்நாள் வீணாளாகக் கழியாதவண்ணம், நீலகண்ட னுக்கு ஆளாய் அன்பு செய்வோம்; நமக்கு மட்டுமன்று; நம்சுற்றமுங் கூட நன்மையடையும் உபாயத்தை அருளிச்செய்து கோள்களை நீக்குபவன் கோளிலிப் பெருமான் என்கின்றது. மட நெஞ்சே - அறியாமையையுடைய நெஞ்சமே. கேளாய் - கேட்பாயாக. கிளை கிளைக்கும் - சுற்றம் சுற்றத்திற்குச் சுற்றம் இவைகட்கும். கோள் - மாறுபாடு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

படம் எடுத்து ஆடும் இயல்புடைய பாம்பை நாணாகக் கொண்டு அதில் அழகிய ஆமை ஓட்டையும் பன்றிக் கொம்பையும் கோத்து அணிந்தவனும், தோடாகப் பாம்பையே கொண்டவனும் ஆகிய சிவபிரானது இரண்டு மலர் போன்ற சிவந்த நல்ல திருவடிகளையே பாடலால் வரும் இசையினால் பாடிப்பழகிப் பணிந்து வணங்குபவர்களின் மனக்கோணலைத் தீர்த்தருள்பவன் திருக்கோளிலி எம்பெருமானாவான்.

குறிப்புரை :

பாம்பாகிய நாணில் ஆமையோட்டையும், பன்றிக் கொம்பையும் கட்டியணிந்த இறைவன் திருவடியில், துதிப்பாக்களைச் சொல்லி எழுவார் மனத்துக் கோணலை நீக்கும் பெருமான் இவர் என்கின்றது. கேழல் - பன்றி. தோடு அரவம் - தோடாக உள்ள பாம்பு. பாடு அரவம் - பாட்டோசை. கோடரவம் - கோணல்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து வந்த இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு அன்றே என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன், பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச் சூடிய எம் திருக்கோளிலிப் பெருமானாவான்.

குறிப்புரை :

அன்றலர்ந்த புதுப்பூக்களைக்கொண்டு இருக்குவேத மந்திரங்களுடன் பூசைசெய்த மார்க்கண்டன் மேல்வந்த காலனை உதைத்து மார்க்கண்டற்கு உயிர்வழங்கிய இறைவன் இவன் என்கின்றது. நகுநாண்மலர் - மலர்ந்த புதுப்பூ. ஒன்றி - மன ஒருமைப்பாட்டுடன். கன்றி - கோபித்து. கண்டு - போகக்கண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்.

குறிப்புரை :

மண்ணியாற்றங்கரையில் மணலால் இலிங்கம் தாபித்துப் பாலபிஷேகஞ்செய்த விசாரசருமர் செயலையறிந்து பூசனைக்கு இடையூறுசெய்த தந்தை எச்சதத்தனை ஒறுத்தலும் அவருக்குச் சண்டேசப் பதவியைக் கொடுத்து, சூடியமாலையும் உண்டகலமும் அருளிச் செய்தவர் இவர் என்கின்றது. சிதைப்பான் - இடற. கொந்து அணவும் மலர் - பூங்கொத்துக்களில் உள்ள மலர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன், கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

பொறிகளையொடுக்கித் தவஞ்செய்த விஜயனுக்குப் பாசுபதம் தந்த பரமன் இவர் என்கின்றது. அஞ்சு - மெய் வாய் முதலிய பொறிகள் ஐந்து. வைகலும் - தினந்தோறும். பஞ்சவர் - பாண்டவர். பார்த்தன் - அருச்சுனன். மஞ்சு - ஆகாயம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

மூவுலகங்களையும் தாவி அளந்த திருமால் தன்னோடு உடனிருந்தும் திருவடிகளைக் காண இயலாதவாறு சிறந்து நின்ற தற்பரனாகிய சிவபிரானை, ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கருணையாளனாக உயிர்க்குயிராய்க் காதலித்து வழிபடும் நாவால் புகழத்தக்க பெரியவராகிய நமிநந்தி அடிகளுக்கு அருள்புரிந்தவன், தலைமை சான்ற மலர் மரங்களை உடைய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானாவான்.

குறிப்புரை :

உலகத்தைத் தாவியளந்த திருமாலும் காணாத தற்பரன், பொறிகளையடக்கி அன்புசெய்த நமிநந்தியடிகளுக்குப் புகழைத்தந்த பெருமான் இவர் என்கின்றது. தாவியவன் - மூவுலகத்தையும் ஈரடியால் தாவியளந்த திருமால். காணாத தற்பரனை - நாயகனாகவும், ஊர்வோனாகவும், ஆண்டானாகவும், மைத்துனனாகவும், கண்டதன்றித் தற்பரன் என்று காணப்படாதவற்றிற்கெல்லாம் மேலானவனை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்
சொன்னவிலு மாமறையான் றோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில்
கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

கற்கள் செறிந்த பெரிய கயிலாயமலையில் எழுந்தருளியிருப்பவன். கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களை அருளிச்செய்தவன். தன்னைத் தோத்திரிப்பாரின் வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறு அணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையை ஏந்தியவன். இத்தகையோனாகி விளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கு எம்பெருமானாவான்.

குறிப்புரை :

கயிலையையுடையவன், நீலகண்டன்; வேதங்களை யுடையவன்; தோத்திரஞ்செய்யும் வாயில் உள்ளவன்; செஞ்சடையான்; வெண்பொடியான்; சூலத்தான் இவன் என்கின்றது. கல் நவிலும் மால்வரை எனப்பிரிக்க. கார் - கருமைநிறம். கொன் - பெருமை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

அந்தரத்திற் றேரூரு மரக்கன்மலை யன்றெடுப்பச்
சுந்தரத்தன் றிருவிரலா லூன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

ஆகாய வெளியிலே தேரை ஊர்ந்து வரும் இராவணன் கயிலைமலையைப் பெயர்த்த போது அழகிய தனது கால் விரலால் சிறிதே ஊன்றிய அளவில், அவன் உடல் நெரிந்து, மந்திரமாக விளங்கும் வேதகீதங்களைப் பாடிப் போற்றச் சந்திரஹாசம் என்னும் வாளை ஈந்து அருள் செய்தவன், கொத்துப் போல இரண்டு முனைகளை உடைய பிறை மதியைச் சூடிய சடையினனாகிய திருக்கோளிலி எம்பெருமானாவான்.

குறிப்புரை :

வானவூர்தியனாகிய இராவணன் கயிலையை எடுத்த காலத்து விரலூன்றியடர்த்து அவன் சாமகானஞ்செய்ய அருள் செய்தவன் இவன் என்கின்றது. அந்தரம் - ஆகாயம். சுந்தரம் - அழகு. வாள் - சந்திரஹாசம் என்னும் வாள். உம்மை - இசைநிறை. கொன்தரத்த - கொந்த ரத்த எனத்திரிந்தது. பெருமையுடைய என்பது பொருள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணுவெனை யாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

ஐந்து தலைகளில் ஒன்றை இழந்ததால் நாணமுற்ற வேதியனாகிய பிரமனும், திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவனும் என்னை அடிமையாக உடையவனும், தன் அடியவர்கட்கு அன்பு வடிவானவனும், பாணபத்திரன் பத்திமையோடு பாடப்பரிவோடு அவனுக்கு அருள் புரிந்தவனுமான வளைந்த பிறைமதியைச் சென்னியில் சூடிய சிவபிரான், திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாத்தாணு, பாண பத்திரன் அன்போடு பாடுதலும் அருள் சுரந்து பரிசில் பல அளித்தவன் இவன் என்கின்றது. நாணம் உடை வேதியன் - அறிய முடியாமையால் வெட்கமுற்ற பிரமன். தலைபோனமையால் வெட்கிய என்றுமாம். தாணு - நிலைத்தபொருள். பாணன் - பாணபத்திரன். பரிந்து - விரும்பி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே யேத்துமின்கள்
நடுக்கமிலா வமருலகம் நண்ணலுமா மண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

தடுக்கை உடையாக விரும்பும் சமணரும், தர்க்க சாத்திரங்களில் வல்ல புத்தர்களும் கூறுகின்ற இடுக்கண் வளரும் மொழிகளைக் கேளாது ஈசனையே ஏத்துமின்கள். துளங்காது அமரர் வாழும் வானுலகத்தை அடைதலும் கூடும். அப்பெருமான் திருவடிகள், வேறுயாராலும் தர இயலாத வரங்கள் பலவற்றையும் தரும். அவ்விறைவன் திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

சமணர்களும் தார்க்கீகர்களும் கூறும் துன்பவார்த்தை களைக் கேளாமல் ஈசனையே ஏத்துங்கள்; வானுலகை அடையலாம்; அவன் கழல் அரிய வரங்களையும் கொடுக்கும் என்கின்றது. தடுக்கு அமரும் - தடுக்கை ஆசனமாக விரும்புகின்ற. தர்க்க சாஸ்திரிகளும் நாஸ்திகர்கள் ஆதலின் அவருரையும் கேளாதீர் என்றார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே.

பொழிப்புரை :

நல்ல அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாடவல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.

குறிப்புரை :

நல்ல அடியார்கள் ஒவ்வொருவரும் நம்முடைய செல்வம் என்று நம்பியிருக்கும் கோளிலிப்பெருமானை ஞானசம்பந்தன் அருளிய வண்டமிழ்கொண்டு இன்பங்கொள்ள வல்லவர்கள் ஈசனை எய்துவர் என்கின்றது. கொம்பு அனையாள் - பூங்கொம்பை ஒத்த உமாதேவி. வம்பு - மணம். இன்பு அமர - இன்பத்து இருக்க.
சிற்பி