திருப்பிரமபுரம்


பண் :

பாடல் எண் : 1

எரியார்மழுவொன் றேந்தியங்கை யிடுதலை யேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம் வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரம புரத்தானே.

பொழிப்புரை :

உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேதகீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கல னாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும்பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?

குறிப்புரை :

பிரமபுரத்தானே! ஒருகையில் மழுவையும், ஒருகையில் கபாலத்தையும் ஏந்திக்கொண்டு மகளிரிடம் பிச்சை வாங்காது அவர்கள் அழகை வாங்குகிறீரே ஏன் என்று வினாவுகிறது. எரியார் மழு - எரிதலைப் பொருந்திய மழு. வரியார் வளையார் - கோடுகளோடு கூடிய வளையலையுடைய முனிபத்தினியர். ஐயம் - பிச்சை. சரியாநாவின் என்பது முதல் பிரமன் என்பதுவரை பிரமனைக் குறிக்கும் தொடர். பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனத் தலத்திற்குப் பெயர் வந்தமை விளக்கியது.

பண் :

பாடல் எண் : 2

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக் கென்றயலே
கயலார்தடங்க ணஞ்சொனல்லார் கண்டுயில் வவ்வுதியே
இயலானடாவி யின்பமெய்தி யிந்திரனாண் மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணு புரத்தானே.

பொழிப்புரை :

இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரகநோய்ப் படுத்தல் நீதியோ?

குறிப்புரை :

வேணுபுரத்தானே! சடையிற் சந்திரனையும் சூடிப் பிச்சைக்கென்று புறப்பட்டு மகளிர் துயிலை வவ்வுவதேன் என்கின்றது. பெயல் - கங்கை. திங்கள் - பிறை. கயல் ஆர் - கயல் மீனை ஒத்த. நல்லார் - பெண்கள். கண் துயில் வவ்வுதியே என்றது விரகநோயால் அவர்கள் துயில் துறந்தார்கள் எனக் குறித்தது. இயலான் நடாவி - முறைப்படி நடத்தி. இந்திரன் ஆள் மண் மேல் - இந்திரன் வந்து மறைந்திருந்தாண்ட மண்ணுலகத்தில். வியல் - அகலம். இந்திரன் மூங்கிலாய் மறைந்திருந்தமையின் வேணுவனமாயிற்று எனக்காரணங் குறித்தது.

பண் :

பாடல் எண் : 3

நகலார்தலையும் வெண்பிறையு நளிர்சடை மாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலை வவ்வுதியே
அகலாதுறையு மாநிலத்தில் அயலின்மை யாலமரர்
புகலான்மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே.

பொழிப்புரை :

இம்மாநிலத்தில் தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால் தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும், அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில் மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண் மையான பிறைமதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில் பலி ஏற்பது போல் வந்து, மகளிர்தரும் பிச்சைப் பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து, அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன, நெகிழும்படி செய்து போதல் நீதியோ?

குறிப்புரை :

இவ்வுலகத்தில் அடைக்கலத்தானம் வேறில்லாமை யால் அமரர்கள் வந்து அடைக்கலம் புகுந்த புகலிமேவிய புண்ணியனே! கலையைக்கவர்ந்ததேன் என்கின்றது. நகல் - சிரித்தல். பகலாப் பலி - நடுவற்றபிச்சை; பகற்காலத்துப்பலி என்றுமாம். ஐயம் - பிச்சை; பாய் கலை - பரந்தஆடை. அயல் இன்மையால் -(அடைக்கலம்) வேறின்மையால். புகல் - அடைக்கலம். புகலி என்பதற்குத் தேவர்களால் அடைக்கலம் புகப்பெற்ற இடம் எனக் காரணம் விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையா ரையம்வவ்வா யானலம் வவ்வுதியே
செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினை மெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே.

பொழிப்புரை :

கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித்தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?

குறிப்புரை :

வெங்குருமேயவனே! தோடும் குழையும் காதிற்பெய்த உமையொருபாதியனாகிய உருவத்தைக்கொண்டு மகளிரிடம் ஐயம் பெறாது நலங்கவர்ந்தது ஏன் என்கின்றது. சங்கோடு இலங்க - சங்க குண்டலத்தோடு விளங்க. அம் கோல் வளையார் - அழகிய திரண்ட வளையலையுடையவர்கள் . ஐயம் வவ்வாயால் - பிச்சையை ஏற்காய். நடாவி - நடத்தி. வெங்கோ தருமன் செங்கோல் நடாவிச் செய்வினை பல்லுயிர்க்கும் மெய்தெரிய மேவி ஆண்டவெங்குரு எனக் கூட்டுக. தருமன் செங்கோல் முறைப்படி பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறிய வெங்குரு எனப் பெயர் பெற்றது எனக்காரணம் விளக்கியது.

பண் :

பாடல் எண் : 5

தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன்
பிணிநீர்மடவா ரையம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கு மாழ்கட லாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணி புரத்தானே.

பொழிப்புரை :

மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி, அனைத்திடங் களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில், அச்சம் தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும் அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை நெடிது நாள் காத்தருளிய, தாழ்ந்து தொங்கும் சடைமுடியை உடையவனாய், காமநோயால் வருந்தும் மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின் ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா?

குறிப்புரை :

உலகம் கடலுள் ஆழ்ந்தகாலத்து மிதந்த தோணிபுரத் தானே! மகளிரிடம் ஐயம் ஏற்காது உடுத்த ஆடையை வவ்வியதேன் என்கின்றது. தணிநீர் மதியம் - கீழ்ப்படிந்த தன்மையை உடையபிறை. பிணிநீர் மடவார் - காமநோய்வாய்ப்பட்ட மாதர்கள். ஐயம் - பிச்சை. பெய்கலை - உடுத்திய ஆடை. உலகம் எங்கும் அணி நீராகிக்கடலால் அழுங்க எனக் கூட்டுக. துணி நீர் பணிய - துணிவுகொண்ட தண்ணீர் கீழ்ப்படிய. தோணிபுரம் என்ற பெயரின் காரணம் விளக்கியது.

பண் :

பாடல் எண் : 6

கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடை மாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாய வடன்மன்ன னாண்மண்மேல்
தவர்பூம்பதிக ளெங்குமெங்குந் தங்கு தராயவனே.

பொழிப்புரை :

அணிகலன்களை அணிந்த அரசர்களாகிய அவர்க் கெல்லாம் தலைவனாகிய வலிமை பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில் இரண்ய கசிபுவைக் கொன்ற பழிநீங்கப் பூசித்து ஆட்சி செய்த இம்மண்ணுலகில் உள்ளதும், தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்பினதும், ஆகிய பூந்தராயில் எழுந்தருளியவனே, இம்மண்ணுலகைக் கவரவந்த அழகிய கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச்சூடி மகளிர் அருகருகே இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியா?

குறிப்புரை :

பூந்தராய்மேவியவனே! பலி வவ்வாயாய் அவர்கள் நலம் வவ்வுதியே என்கின்றது. வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே எனப்பிரித்துப் பொருள்கொள்க. பூண் அரையர் அவர்க்கு ஆதியாய அடல் மன்னன் - மன்னர்க்கெல்லாம் முதலாகிய வலிமைமிக்க திருமால். காக்கும் மன்னர்க்கு எல்லாம் தலைவன், காத்தற்றெய்வமாகிய திருமால் என்ற ஒற்றுமைபற்றி உரைக்கப்பெற்றது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்பதும் இந்த இயைபுபற்றியே. ஆதிவராகமான திருமால் இரணியனைக் கொன்ற பழிபோகப் பூக்களைக்கொண்டு பூசித்தமையால் பூந்தராய் என அழைக்கப்பெற்றது எனத்தலப்பெயர்க்காரணம் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 7

முலையாழ்கெழுவ மொந்தைகொட்ட முன்கடை மாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம் வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதொ ராணைநடாய்ச்
சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப் பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையகமெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழைமீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன்கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?

குறிப்புரை :

சிரபுரமேயவனே! நிலையாப்பிச்சையாக ஐயம் ஏற்காது நலம் வவ்வுதியே என்கின்றது. முலை யாழ் கெழுவ - முல்லை யாழ் சுரம் ஒத்து ஒலிக்க. கெழும் என்பதும் பாடம். நிலையாப்பலி என்றது தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையடக்க ஏற்றுக் கொண்ட பிச்சையேயன்றி நிலைத்ததன்று என்பது விளக்கிற்று. தலையே வடிவாய் (உடல் முதலியன இன்றி) உலகத்தையெல்லாம் தன்னாணையின் நடக்கச்செய்யும் சிலம்பன் என்னும் அசுரன், ராகு என்ற பெயர்தாங்கி வழிபட்ட சிரபுரம் என விளக்கியவாறு. தேவர்களுடன் கலந்து கரவாக அமுதுண்ட சிலம்பன் என்னும் அசுரனை மோகினியான திருமால் சட்டுவத்தால் வெட்ட, தலை மாத்திரமான ராகு இத்தலத்தில் பூசித்தான் என்பது வரலாறு.

பண் :

பாடல் எண் : 8

எருதேகொணர்கென் றேறியங்கை யிடுதலை யேகலனாக்
கருதேர்மடவா ரையம்வவ்வாய் கண்டுயில் வவ்வுதியே
ஒருதேர்கடாவி யாரமரு ளொருபது தேர்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே.

பொழிப்புரை :

ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத்தேர் களை அழியுமாறு சண்டையிடும் தேர்வல்லவன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?

குறிப்புரை :

இதுவும் புறவமர் புண்ணியனே மாதர் துயில் வவ் வியது ஏன் என்கின்றது. ஐயம் ஏற்பார் ஊர்தியேறிச் செல்லார் ஆகவும் எருதைக் கொணர்க, என்று ஆணையிட்டு அதில் ஏறி. கருதேர் மடவார் - கருவைத்தேரும் மடவார்; காமினிகள். கருது ஏர் மடவார் எனப்பிரித்தலுமாம். ஒருதேரைச் செலுத்தி, பத்துத்தேரை வென்ற தேர்வல்லவனாகிய சிபியாண்ட புறவம் எனப்பெயர்க்காரணத்தைக் குறிப்பாக உணர்த்தியது. சிபியின் தசை எடைக்கு எடைபெற்ற தீக்கடவுளாகிய புறா அப்பாவம் போக வழிபட்ட தலமாதலின் புறவம் என்றாயிற்று என்பது வரலாறு.

பண் :

பாடல் எண் : 9

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மை யிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகை வார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பை யமர்ந்தவனே.

பொழிப்புரை :

உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கிஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?

குறிப்புரை :

புறச்சமயிகள் மனந்தேராது உழலச்செய்ததுபோல மகளிர் நலத்தையும் கொண்டனையே என்கின்றது. கலிங்கப் போர்வை - கலிங்கநாட்டில் நெய்தபோர்வை. கவர்செய்து - மனந்திரிந்து. காரிகை - அழகு. தவர்செய் நெடுவேல் சண்டன் ஆள - துளைக்கின்ற நீண்ட வேலை ஏந்தியயமனை அடக்கி ஆள. இது மார்க்கண்டேயர்க்காக யமனை உதைத்த வரலாற்றை உட்கொண்டது.

பண் :

பாடல் எண் : 10

நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர வைந்தலை நீண்முடிய
கழனாகரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

உலகம் அழலாக வெதும்பி வருத்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக்கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப்பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச்சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?

குறிப்புரை :

காழியமர்ந்தவனே, வளைகவர்ந்தனையே என் கின்றது. கோல் - திரட்சி. அழலாய் - வெதும்பி. கவ்வை - துன்பம். ஐந்தலை நீள்முடிய கழல் நாக அரையன் - ஐந்து தலையோடும் முடியோடும் கூடிய வீரக்கழலை அணிந்த காளிதன் என்னும் பாம்பு.

பண் :

பாடல் எண் : 11

கட்டார்துழாயன் றாமரையா னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலை வவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினை யாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சை யமர்ந்தவனே.

பொழிப்புரை :

ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழிபோகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால், அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத் தையும் அளித்து அம்முனிவனை வாழச்செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?

குறிப்புரை :

திருமாலும் பிரமனும் காணுதற்கரிய சிட்டராய்ப் பலி கொள்ளாது கலைகொள்ளக் காரணம் ஏன் என்கின்றது. கட்டு ஆர் துழாயன் - கட்டுதல் பொருந்திய துளசிமாலையையுடைய திருமால். சிட்டார் - ஒழுங்கினையுடையவர். கலை - ஆடை. நட்டாறு என்பது நட்டார் என ஆயிற்று. நந்தன் - பிரமன் மகனாகிய பராசரன். ஆள - மச்சகந்தியைப் பெண்டாள. (அப்பழி போம்படி) நல்வினையால் - அவன் செய்த பூசையால். கொட்டு ஆறு உடுத்த - மயிர்ச்சாந்து போன்ற மணத்தையும், நல்லொழுக்கத்தையும் பொருந்தச்செய்த. உடுத்த கொச்சை எனக் கூட்டுக. இது கொச்சைவயம் என்றதன் காரணம் உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 12

கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.

பொழிப்புரை :

வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

குறிப்புரை :

மேற்கூறிய கழுமலநகரின் பெயராகக் கூறிய பத்தையும் வல்லார்க்கு இவ்வுலகில் தீவினைபொருந்தா; தேவர் உலகினையும் ஆள்வர் எனப் பயன்கூறுகிறது. கடை - வாயில். கவுணி - கவுணிய கோத்திரத்து உதித்தவர். பல்பெயர்ப் பத்தும் - பத்தின் மேலும் பலவாகிய பெயர். அமரர் உலகு அமருலகாயிற்று.
சிற்பி