திருப்பூவணம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அறையார்புனலு மாமலரு மாடரவார் சடைமேல்
குறையார்மதியுஞ் சூடிமாதோர் கூறுடையா னிடமாம்
முறையார்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம் வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

ஆரவாரித்து வரும் கங்கையும், ஆத்தி மலரும், ஆடும் பாம்பும் பொருந்திய சடையின் மேல், ஒரு கலையாய்க் குறைந்த பிறை மதியையும் சூடி மாதொர்பாகனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய இடம், நீதியோடு கூடியவராய் முடிசூடி ஆளும் பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்குவதும், வையை ஆற்றின் அலைகள் வீசுவதும், புகழோடு கூடியதும், வயல் வளம் மிக்கதுமாகிய அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

புனலும், ஆத்திமலரும், மதியும் சூடிய உமையொரு பாகன் இடம் பூவணம் என்கின்றது. அறை - பாறை. ஆ - ஆச்சா (ஆத்தி.) குறையார்மதி - பிறைமதி. தென்னர் - பாண்டியர். திறை - கப்பம். செம்மை - ஒழுங்கு. குருவருள் : `முறையார் முடிசேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திறையாரொளி சேர் செம்மை ஓங்கும் தென்திருப்பூவணமே` என்ற தொடரால் மூவேந்தரும் பூவணத்தில் ஒருங்கு வணங்கிய குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளமையை, கண்டு மகிழலாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மருவார்மதின்மூன் றொன்றவெய்து மாமலையான் மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரா னவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக் கழன்மன்னர் காத்தளித்த
திருவான்மலிந்த சேடர்வாழுந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

பகைவர்களாகிய திரிபுர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும், மலையரையன் மகளாகிய பார்வதிதேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக்கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வவளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்துத் தேவியை ஒருபாகம் வைத்தவனூர் இது என்கின்றது. மருவார் - பகைவர். உம்பர்பிரான் - தேவதேவன். கருவார் சாலி - கருக்கொண்ட நெல். ஆலை - கரும்பு. திரு - செல்வம். சேடர் - பெருமையுடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

போரார்மதமா வுரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க்
காரார்கடலி னஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

போர்ப் பயிற்சியுடைய மதம் பொருந்திய யானை யின் தோலை உரித்துப் போர்த்து, திருநீற்றுப் பொடி அணிந்த மேனியனாய், கருநிறம் பொருந்திய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனாய், நுதல்விழி உடையவனாய் விளங்கும் சிவனது ஊர், நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வையையாறு வாய்க்கால் வழியே பரப்பிப் பலவகை மணிகளையும் பொன்னையும் கொழித்து வளம் செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

யானையையுரித்துப் போர்த்து, பொடியணிந்து, நஞ்சுண்டு விளங்கும் கண்ணுதற் பெருமானூர் இது என்கின்றது. போர் ஆர் மதமா - சண்டைசெய்யும் மதயானை. உரிவை - தோல். கண் நுதல் - நெற்றிக்கண்ணை யுடையவன். பார் ஆர் - பூமியிற் பொருந்திய. வாய் - வாய்க்கால். வாரி - நீர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

கடியாரலங்கற் கொன்றைசூடிக் காதிலொர் வார்குழையன்
கொடியார்வெள்ளை யேறுகந்த கோவணவன் னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற் பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி ஒரு காதில் நீண்ட குழை அணிந்தவனாய், வெண்மையான விடைக்கொடியைத் தனக்குரியதாகக் கொண்டவனாய், கோவணம் அணிந்தவனாய் விளங்கும் சிவபிரானது இடம், நிலவுலக மக்கள் ஒருங்கு கூடி நீண்டு விரிந்த தன் புகழைக் கூறி வணங்கப் புதர்கள் நிறைந்த வைகையாறு சூழ்ந்துள்ள அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

கொன்றையணிந்து, காதில் குழைவிளங்க இடபக் கொடி ஏந்திய கோவணாண்டி இடம் இது என்கின்றது. கடி - மணம். அலங்கல் - மாலை. படியார் - பூமியிலுள்ள மக்கள். செடி ஆர் வைகை - புதர் நிறைந்த வைகை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பான்மகிழ்ந் தானிடமாம்
ஆராவன்பிற் றென்னர்சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

கூர்மை பொருந்திய அம்பை வில்லில் பூட்டி, கொடிகள் கட்டிப் பறந்த மும்மதில்களின் கூட்டுக்களையும் ஒருசேர அழித்த போர்வல்ல வில் வீரனும், மெல்லியலாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்பவனுமாகிய சிவபிரானது இடம், குன்றாத அன்போடு பாண்டியர் சேரர் சோழர் ஆகிய மூவேந்தர்கள் போற்றத் தேரோடும் திருவீதியையும் மாட வீடுகளையும் உடைய அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த வில்லாளியாய் உமையொரு பாகங் கொண்டானிடம் இது என்கின்றது, சிலை - வில். கூட்டழித்த - ஒருசேர அழித்த. ஆரா அன்பில் - போதும் என்றமையாத அன்பொடு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரா னிடமாம்
குன்றிலொன்றி யோங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

நன்மை தீமை என்பனவற்றுள் ஒன்றும் இல்லாத வனும், நான்கு வேதங்களை அருளியவனும், தேவர்களின் தலைவனுமான சிவபிரான் தன் திருவடிகளை அடைந்து அன்பர்கள் போற்றி அருள் பெறுமாறு நின்ற இடம், பொதிய மலையில் பொருந்தி அங்கு நிறைந்த ஓங்கிய குளிர் பொழில்களில் உள்ள மலர்களிற் படிந்து வந்து தென்றல் முன்றில்களில் தங்கி மகிழ்விக்கும் அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

நல்லது தீது இரண்டையுங்கடந்த பெருமான், எல்லோ ரும் ஏத்தநின்ற பெருமான் இடம் இது என்கின்றது. நன்றும் தீதும் வினையான் வருவன ஆதலின் வினையிலியாகிய பெருமானுக்கு அவ்விரண்டும் இல்லையாயிற்று. குன்றில் ஒன்றி - மலைகளிற் பொருந்தி. முன்றில் - முன்வாயிலில்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்து வரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

பாம்புடுத்துப் பூதம்போற்ற நீறுபூசி இடபமூர்ந்தவன் இடம் இது என்கின்றது. பை - படம். பாரிடம் - பூதம். கைவாழ் வளையார் - இளைய மகளிர்கள். கலவி - புணர்ச்சி. கலவிக் காலத்து நிகழ்த்தும் காதற்பாட்டு நீங்காத பூவணம் என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம்
பாடலோடு மாடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து
ஓடிநீரால் வைகைசூழு முயர்திருப் பூவணமே.

பொழிப்புரை :

மாடவீதிகள் நிலைபெற்ற இலங்கை மன்னன் இராவணன் பெருவீரன் என்று மக்கள் பாராட்டிய சிறப்பை அழித்து, அவன் பிழை உணர்ந்து பாடி வேண்டிய அளவில் உடன் வெற்றி நல்கும் வாளைக் கொடுத்து ஆளும் அருட்கொள்கையாளனாகிய சிவ பிரானுக்குரிய இடம், ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடையதும், பல்வகை மணிகளையும் பொன்னையும் அடித்து ஓடிவரும் நீரோடு வைகையாறு சூழ்ந்ததுமான உயர்ந்த திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

இராவணனை அடக்கி ஆண்டு, வாளும் அருள்செய்த மன்னர்க்கு இடம் பூவணம் என்கின்றது. மாண்பு - சிறப்பு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும்
கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணி கொழித்துச்
செய்யார்கமலந் தேனரும்புந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

என்றும் பொய்யாகாத வேதங்களை ஓதும் நாவினன் ஆகிய நான்முகனும், மலர்மகள் கணவனாகிய திருமாலும், தம் கைகளால் தன் திருவடிகளைத் தொழுது போற்ற, சிவந்த எரி உருவான சிவபிரானது ஊர், கருநிறம் பொருந்திய சோலைகளில் வண்டுகள் பாடுவதும், வைகை ஆறு மணி கொழித்து வளம் சேர்ப்பதும், சிவந்த தாமரை மலர்களில் தேன் அரும்பி நிற்பதுமான அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியொண்ணாவகை அழலுரு வானவனூர் இது என்கின்றது. பொய்யா வேதம் - எக்காலத்தும் பொய்யாகாத வேதம். வேதத்தின் நித்யத்துவம் கூறியது. பொழிலில் வண்டு பாடச் செய்களிற் கமலம் தேனரும்பும் என்றது கன்று கத்தச் சுரக்கும் கறவைபோல வண்டுபாடக் கமலம் மலர்ந்து தேன்சுரக்கும் என்பதாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்பு செய்யா
நிலையாவண்ண மாயம்வைத்த நின்மலன் றன்னிடமாம்
மலைபோற்றுன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் நீரில் நீராடாது அதனைத் துறந்த சமணரும் புத்தரும் புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திராது அவர்கட்கு மாயத்தை வைத்த குற்றமற்ற சிவபிரானுக்குரிய இடம், வெற்றி மிக்க மாளிகைகள் மலைபோல் நெருங்கி அமைய அவற்றைச் சூழ்ந்து கருங்கல்லால் ஆகிய மதில்கள் அழகு செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

புத்தர் சமணர் அன்புசெய்து நிலையாதவண்ணம் அவர்கட்கு மாயையைக்கூட்டிய நின்மலன் இடம் இது என்கின்றது. புனலை நீத்தவர் - நீராடாதே அதனை விலக்கிய சமணர். தேரர் - புத்தர். துன்னி - நெருங்கி. சிலையார் புரிசை - மலையை ஒத்த மதில். பரிசு - அழகு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்றிருப் பூவணத்துப்
பெண்ணார்மேனி யெம்மிறையைப் பேரிய லின்றமிழால்
நண்ணாருட்கக் காழிமல்கு ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய மதில்களும் மாடவீடுகளும் நிறைந்த அழகிய திருப்பூவணத்தில் பெண்ணொரு பாகனாம் திருமேனியோடு விளங்கும் எம் தலைவனாகிய சிவபிரானைப் பெருமை பொருந்திய இனிய தமிழால் பகைவராய புறச்சமயத்தவர் அஞ்சுமாறு சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லிய இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர் வாழ்வது வான் உலகமாகும்.

குறிப்புரை :

இந்தப் பண்ணார் பாடல் வல்லார் வானுலகிற் பயில் வார் என்கின்றது. திண் - வலிமை. நண்ணார் - பகைவர். உட்க - அஞ்ச.
சிற்பி