காவிரிப்பூம்பட்டினத்துத்திருப்பல்லவனீச்சரம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அடையார்தம் புரங்கண்மூன்று மாரழலில் லழுந்த
விடையார்மேனி யராய்ச்சீறும் வித்தகர் மேயவிடங்
கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

திரிபுரங்கள் தீயிலழுந்தச் சீறும் வித்தகர் இடம் பல்லவனீச்சரம் என்கின்றது. அடையார் - பகைவர். விடையார் மேனியர் - இடபத்தில் ஆரோகணித்த திருமேனியார். கங்குல் - ஆகாயம். படை- ஆயுதம் பல அடுக்கு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

எண்ணாரெயில்கண் மூன்றுஞ்சீறு மெந்தைபிரா னிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந் தேனருந்திப்
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

முப்புரஞ்சீறிய முதல்வன் தேவர்கட்குக் கண்ணாய் உலகம்காக்கும் கண்ணுதலும் ஆவான்; அவனது இடம் இது என்கின்றது. எண்ணார் - பகைவர். கண்ணுதல் - சிவன். மண் - பூமி. மண்ணுதல் - உண்டாக்குதல். பண் ஆர் செய்யும் - பாடும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மங்கையங்கோர் பாகமாக வாணில வார்சடைமேற்
கங்கையங்கே வாழவைத்த கள்வ னிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

மங்கை ஓர்பாகத்து இருக்கவும் சடைமேற் கங்கையை யும் வைத்த கள்வனிடம் இது என்கிறது. வாள் நிலவு - ஒளி பொருந்திய நிலவு. பொங்கு அயஞ்சேர் புணரி - மிகுந்த பள்ளம் பொருந்திய கடல். அயம் - பள்ளம். `அயமிழியருவி` என்னுங்கலியிலும் இப் பொருட்டாதல் தெளிக. பங்கயம் - தாமரை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

கொன்றைசாத்திய மார்பில் நீறும் சாந்தும் சாத்திய நிமலனிடம், மாதரும் மைந்தரும் பாடலினால் பூமிக்கண் இன்பம் நுகரும் தலமாகியது இது என்கின்றது. தாரார் கொன்றை - மாலையாகவே பூக்கும் கொன்றை. போரார் வேற்கண் - போரில் பொருந்திய வேல்போலும் கண்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

மைசேர்கண்ட ரண்டவாணர் வானவ ருந்துதிப்ப
மெய்சேர்பொடிய ரடியாரேத்த மேவி யிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே
பைசேரரவா ரல்குலார்சேர் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய வரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

நீலகண்டரும், நீறு பூசியவருமாகிய சிவபெருமான் அடியார்கள் ஏத்த அமர்ந்திருந்த இடம் இத்தலம் என்கின்றது. மை - விடம். மேவி - விரும்பி. கைசேர் வளையாராகிய அல்குலார், ஆசையோடும் காதலோடும் கழலைச்சேரும் பல்லவனீச்சரம் எனக் கூட்டிப் பொருள் காண்க. விழைவு - பற்று. காதல் - பற்றுமுற்றி இன்றியமையாத் தன்மையால் எழுந்த விருப்புள்ளம். பை - படம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

குழலினோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக்
கழலினோசை யார்க்கவாடுங் கடவு ளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச்சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

குழல் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க ஆடுங்கடவுள் அமர்ந்த இடம் இத்தலம் என்கின்றது. மொந்தை என்பது ஒருவகைப் பறையாதலின் கொட்ட என்றார். பயில் புகார் - பழகுகின்ற காவிரிப் பூம்பட்டினம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி விண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குராமரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

தக்கன் யாகத்தை அழித்துத் தேவரெல்லாரும் வழிபட நின்ற இறைவனது இடம் இத்தலம் என்கின்றது. மந்தல் - மென்மை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கவவன்
றாரரக்குந் திண்முடிக ளூன்றிய சங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலா முணரப்
பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

இராவணன் முடிகள்நெரியத் தாளூன்றிய சங்கரன் ஊர் இத்தலம் என்கின்றது. தெற்றி எடுக்க - கைகளைப் பின்னி எடுக்க. தார் அரக்கும் - மாலைகள் அழுத்துகின்ற, அரக்குதல் - பதித்தல். கார் அரக்கும் - மேகங்கள் முகக்கும். பாரர் அக்கம் பயில் புகார் - மக்கள் உருத்திராக்கங்களைப் பயில்கின்ற காவிரிப்பூம்பட்டினம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அங்கமாறும் வேதநான்கு மோதுமய னெடுமால்
தங்கணாலு நேடநின்ற சங்கரன் றங்குமிடம்
வங்கமாரு முத்தமிப்பி வார்கட லூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.

குறிப்புரை :

வேதனும் நெடுமாலும் கண்ணால் தேடநின்ற பெரு மான் உறையுமிடம் இது என்கின்றது. கண்ணாலும் என்ற உம்மை கருத்தால் தேட வேண்டியதை அவர்கள் அறியாமையால் கண்ணால்தேட, அதற்கும் வெளிப்பட்டு நின்ற இறைவன் என உயர்வைச் சிறப்பித்து நின்றது. வங்கம் - கப்பல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் டீரநல்கும் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

நிறையத்தின்று ஆடையின்றியே திரியும் சமணரும், ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும் கண்டறியாத இடம் இது என்கின்றது. முன்னிரண்டடியிலுள்ள உடுக்கை என்பது ஆடை என்ற பொருளிலும், மூன்றாமடியில் உள்ள உடுக்கை என்பது வாத்தியம் என்னும் பொருளிலும் வந்துள்ளன. இடுக்கண் - துன்பம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவ னீச்சரத்தெம்
அத்தன்றன்னை யணிகொள்காழி ஞானசம் பந்தன்சொற்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த வும்பர்வானி லுயர்வினொ டோங்குவரே.

பொழிப்புரை :

பக்தர்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

குறிப்புரை :

ஒத்தமைந்த - தம் இயல்புகளுக்கு ஏற்ப அமைந்த. சம்பந்தன் பல்லவனீச்சரத்துப் பல்லவனநாதரைத் தோத்திரித்த இப்பாடல் பத்தையும் மனம் ஊன்றிச் சொல்லும் மக்கள் தீவினையும் நோயும் இலராய் வானுலகில் வாழ்வார் என்கின்றது.
சிற்பி