திருக்குடந்தைக்காரோணம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

திருக்குடமூக்கில் விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய், எட்டுத் தோள்களோடு விளங்கும் எந்தையாராகிய இறைவர், கச்சணிந்த கொங்கைகளை உடைய பார்வதிதேவியை ஒருபாகமாக் கொண்டு, நீண்ட சடைமிசை நீர் மய மான கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடி, இயல்பான இருவிழிகளோடு நெற்றியில் ஒற்றைக் கண்ணுடையவராய், கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி, அழகிய தண்ணளி செய்யும் குழகராய் விளங்குகின்றார்.

குறிப்புரை :

குடந்தைக் காரோணத்தார் உமையொருபாகமாக, சடையில் கங்கையையும் திங்களையும் சூடி, மழுவேந்திய குழகன் ஆவார் என்கின்றது. வார் - கச்சு. குழகன் - இளமை உடையவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத் தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழியினை உடையமகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப்பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவராவார்.

குறிப்புரை :

இவர் முடிமன்னர், மான்விழியார், மூவுலகேத்தும் முதல்வர் என்றது. கொடியார் விடை - கொடியில் பொருந்திய இடபம். கடியார் சோலை - மணம் பொருந்திய சோலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மலையார்மங்கை பங்கரங்கை யனலர் மடலாரும்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கில்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

மட்டைகளோடும் குலைகளோடும் கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த அழகமைந்த குடமூக்கு என்னும் திருத்தலத்தில், பொன்னணிகள் விளங்கும் தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை போன்ற நெற்றியையும் இசைக்கலை சேர்ந்த மொழியையும் உடைய மகளிர் பலரால் விரும்பப்படும் காரோணத்து இறைவர் மலைமங்கைபங்கர்; அழகியகையில் அனல் ஏந்தியவர்.

குறிப்புரை :

உமையொருபாகர், மழுவேந்தியவர் பிறைமதியர் இவர் என்கின்றது. மடல் - மட்டை. முலையார் என்பது முதல் கலையார் மொழியார் என்பது வரையில் உமாதேவியைக் குறிக்குஞ் சொற்றொடர்கள். மூவா மதியினார் - இளம்பிறை போன்ற நெற்றியினை உடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ் வழகாரும்
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண் குடமூக்கில்
மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

நீர் நிலைகளில் தோன்றும் தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப் பொலிவெய்த, அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த சோலைகளாலும் எழிலார்ந்த காடுகளாலும் சூழப்பெற்றதாய் விளங்கும் அழகிய தண்மையான குட மூக்கில் விளங்கும் காரோணம் எனப்பெயர் பெறும் கோயிலில் எழுந்தருளிய இறைவர், காதல் நிறைந்த உமையம்மைபாகராக மனைகள் தோறும் பலி ஏற்பவர். காதில் குழை அணிந்தவர். காளம் என்னும் நஞ்சினைக் கண்டத்தே கொண்டவர்.

குறிப்புரை :

பலிதேர்வார், குழைக்காதர், காளகண்டர் இவர் என் கின்றது. போது - தாமரை முதலிய பூக்கள். தாது - மகரந்தம். எழில் - அழகு. புறவு - காடு. மாதர் மங்கை - காதல் நிறைந்த உமாதேவி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

பூவார்பொய்கை யலர்தாமரைசெங் கழுநீர் புறவெல்லாம்
தேவார்சிந்தை யந்தணாளர் சீராலடி போற்றக்
கூவார்குயில்க ளாலுமயில்க ளின்சொற் கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

சிவபிரான், தெய்வத்தன்மை நிறைந்த மனத் தினராகிய அந்தணர்கள் அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை நிலங்களில் பூத்த மல்லிகை முல்லை முதலிய மணமலர்களையும் கொண்டு தனது புகழைக் கூறித் திருவடிகளைப் போற்ற, கூவும் குயில்கள் ஆடும் மயில்கள், இன்சொல்பேசும் கிளிப்பிள்ளைகள் ஆகிய பறவைகளை உடையதும், பணியாளர்களால் காக்கப் பெறுவதுமாகிய பொழிலால் சூழப்பெற்ற அழகிய குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

தாமரை செங்கழுநீர் முதலிய பூக்களைக் கொண்டு தெய்வத்தன்மை கொண்ட அந்தணர்கள் அடிபோற்ற இருப்பவர் காரோணத்தார் என்கின்றது. பூவார்பொய்கை - கொட்டி அல்லி தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நிறைந்த பொய்கை. அவற்றுள் தாமரை யும், கழுநீரும் இறைவன் வழிபாட்டிற்கு ஏற்றன ஆதலின், பின்னர் விதந்து கூறப்பட்டன. புறவு - முல்லை. தே ஆர் சிந்தை - தெய்வத்தன்மை நிறைந்த மனம். சீரால் - இறைவன் புகழால். ஆலும் - அகவும். அந்தணாளர் அடிபோற்றப் பொழில் சூழ்ந்து அழகார் காரோணத்தார் என முடிக்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே யனல்வாளி
கோப்பார்பார்த்த னிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பாருடலி லடுநோயவலம் வினைகள் நலியாமைக்
காப்பார்கால னடையாவண்ணங் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

குடமூக்கிலுள்ள காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்துவந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய் நின்று நம்மைக்காப்பவர். முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோத்து முப்புரங்களை அழித்தவர். அருச்சுனன் செய்ததவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதக்கணை வழங்கியருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையாவண்ணம் காப்பவர்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்தகாலத்து அம்பைக்கோப்பவரும் விசயன் நிலைகண்டு அருள் செய்தவருமாகிய குழகரது குடமூக்கில் அடியார்களைக் காலன்குறுகாதவாறு காப்பவர் காரோணத்தார் என்கின்றது. மூப்பு ஊர் நலிய - முதுமை ஊர்ந்து வருத்த. நெதியார் விதி யாய் - நியதியின்வழியே நடக்கும் நெறியாய். பார்த்தன் - அருச்சுனன். அடுநோய் - வருத்துகின்ற நோய்கள். அவலம் - துன்பம். மூப்பு ஊர் நலிய, நெதியார் விதியாய் முன்னே கோப்பார், குழகர் குடமூக்கில், வினைகள் நலியாமை உடலில் அடுநோய் அவலம் தீர்ப்பார், காலன் அடையாவண்ணங் காப்பார் காரோணத்தார் எனக் கூட்டுக.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியினுடையார் கரியின் னுரிபோர்வை
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கில்
கானார்நட்ட முடையார்செல்வக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில் நடனம் புரிபவர்.

குறிப்புரை :

கபாலம் ஏந்திப் பலி ஏற்று உழலும் இறைவன் காரோ ணத்தார் என்கின்றது. மானார் தோலார் - மான்தோலை உடையவர். கரியின் உரிபோர்வை - யானைத்தோலால் ஆகிய போர்வையை உடையவர். திளைத்து - கூடி. தேனார் மொழியாள்என்பது இத்தலத்து அம்மையின் திருநாமம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

வரையார்திரடோண் மதவாளரக்க னெடுப்ப மலைசேரும்
விரையார்பாத நுதியாலூன்ற நெரிந்து சிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க, அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாமகானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.

குறிப்புரை :

இராவணன் கயிலையை எடுக்க, பெருவிரலை ஊன்றி நெரித்த சிரங்கள் பத்திலிருந்தும், சாமகானங்கேட்டு அருள்செய்தவர் இவர் என்கின்றது. சீபாதந்தாங்குவார் இறைவனை இருகையில் அன்போடு கூப்பிடுகிறார்கள்; இவன் மதத்தால் இருக்கிறான்; ஆதலால் அடக்குண்டான் என்பார். மதவாள் அரக்கன் என்று உரைத்தார். விரை - மணம். உரையார்கீதம் - புகழ் நிறைந்த சாமகீதம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

கரியமாலுஞ் செய்யபூமே லயனுங் கழறிப்போய்
அரியவண்டந் தேடிப்புக்கு மளக்க வொண்கிலார்
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கில்
கரியகண்டர் காலகாலர் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாத காலகாலர் குடமூக்கின் காரோணத்தார் என்கின்றது. கழறி - ஒருவருக்கொருவர் இடித்துப்பேசி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

நாணாரமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசே லவரோடும்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறி யாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாடவீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

கோணமாகிய இருப்பிடத்தை உடையவர் இவர் என் கின்றது. குரத்திகள் - பெண்பால் துறவிகள் ஆரியாங்கனைகள். தூய்மை பேணார் - பரிசுத்தத்தைப் போற்றாதவர்கள். சேண் - ஆகாயம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோ ணத்தாரைத்
திருவார்செல்வ மல்குசண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார்செஞ்சொன் மாலையிவைபத் துரைப்பா ருலகத்துக்
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலை கழிவாரே.

பொழிப்புரை :

அடர்த்தியால் கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய செல்வக்காரோணத்து இறைவரைத் தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக்கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

குடந்தைக் காரோணத்தாரைச் சண்பை ஞானசம்பந்தன் சொன்ன இம்மாலையைச் சொல்பவர்கள் பிறப்பறுத்துக் கவலையிலிருந்து நீங்குவார்கள் என்கின்றது. கருவார் பொழில் - கரியசோலை. கரு ஆர் இடும்பைப் பிறப்பு - கருப்பையில் படும் துன்பம் நிறைந்த பிறப்பு.
சிற்பி