திருப்புறவம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்து நயனத்தாற்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியா விழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன் றெரிசெய்த
இறைவன்அறவ னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச்சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்பநலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும்பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித்துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

மகரக்கொடியோனாகிய மன்மதனது உடலத்தைப் பொடி செய்தவரும், திரிபுரம் எரித்தவரும் ஆகிய உமாபதிநகர் புறவம் என்னும் சீகாழியாம் என்கின்றது. நறவம் - தேன். அறை - ஒலிக்கின்ற. நயந்து - விரும்பி. நயனத்தால் - கண்ணால். சுறவம் செறி வண் கொடியோன் - சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடையவனாகிய மன்மதன். நயனத்தால் விழித்தலைச் செய்தான் என்க. மதியார் - பகைவர்./n குருவருள் : நறவம் நிறை வண்டறை தார் என்ற பதிகம் ஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் மடையில் வாளை என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.`அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்/n கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்/n புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்`/n `பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி/n தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே/n இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான்என்று/n அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்`/n இப்பதிகத்துள் பாடல் தோறும் `இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே` என்பதால் இதுவே இரண்டாம் பதிகம் என்பதைச் சி.கே. சுப்பிரமணிய முதலியார் தம் பெரியபுராண உரைப்பேருரைக் குறிப்பில் அறிவித்துள்ளார். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

உரவன்புலியி னுரிதோலாடை யுடைமேற் படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்த னுகிர்தன்னாற்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலு மிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

மிக்க வலிமையை உடையவனும், புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர்செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.

குறிப்புரை :

புலித்தோல் ஆடையின்மேல் நாகத்தைக் கச்சாக உடுத்து, யானையை உரித்துப் போர்த்து, புறவம் பதியாக உமையோடு இருந்தான் என்கின்றது. உரவன் - வன்மை உடையோன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ் சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட் டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியா வமர்வெய்தி
எந்தம்பெருமா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

பூதம் பாட, சிலம்பொலிக்க, உமைகாண இடுகாட்டில் நடமாடி இந்நகரை இடமாகக் கொண்டிருந்தான் என்கின்றது. பந்தம் உடைய பூதம் - உதரபந்தம் என்னும் அணியையணிந்த பூதம். கந்தம் - மணம். கரிகாடு - இடுகாடு. அமர்வெய்தி - விரும்பியிருந்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

நினைவார்நினைய வினியான்பனியார் மலர்தூய் நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம் பதியாக
எனையாளுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப்பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

என்னை ஆளாக உடையவன் நினைத்தற்கினியனாய் விடையேறி, கங்கை முதலியவற்றைச் சூடி, புறவம்பதியாக உமையோடு இமையோர் ஏத்த இருந்தான் என்கின்றது. பனியார் மலர் தூய், நினைவார் நித்தலும் நினைய இனியான் எனக் கூட்டுக. கனை - ஒலி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

செங்கணரவு நகுவெண்டலையு முகிழ்வெண் டிங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோ வணவாடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம் பதியாக
எங்கும்பரவி யிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளையவெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கிஎழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

அரவு முதலியவற்றை அணிந்து விடையேறி, கோவணமுடுத்தி, இந்நகரை இடமாகக்கொண்டு இமையோர் ஏத்த உமையோடு இருந்தான் என்கின்றது. முகிழ் - இளைய. சரி - தொங்குகின்ற. திரை - அலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

பின்னுசடைகள் தாழக்கேழ லெயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகடோறு மழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம் பதியாக
என்னையுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப்பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

என்னையுடையான் சடைதாழ, பன்றிக்கொம்பு மார்பில் விளங்க, பெண்கள் மனைதோறும் சென்று பிச்சை எடுத்துப் புறவம் பதியாக இருந்தான் என்கின்றது. கேழல் எயிறு - பன்றிப் பல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோ ழந்தேவர்
விண்ணிற்பொலிய வமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணிற்சிறந்த விமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

நஞ்சை உண்டு முப்பத்துமுக்கோடி தேவர்கட்கு அமுது அளித்து வாழவைத்த அண்ணல் இந்நகரை இடமாகக்கொண்டிருந்தான் என்கின்றது. உண்ணற்கரிய - பிறரால் உண்ண முடியாத. ஒரு தோழம் தேவர் - ஒரு பேரெண்ணினையுடைய தேவர்கள், தோழம் பேரெண். `ஒரு தோழம் தொண்டருளன்` (திருவாசகம்) விண்ணிற் பொலிய - விண்ணுலகை இடமாகக்கொண்டு போகத்தில் மூழ்கி விளங்க. பண்ணில் அறை - பண்ணோடு ஒலிக்கின்ற. எண்ணில் சிறந்த - எண்ணிக்கையில் மிகுந்த.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

விண்டானதிர வியனார்கயிலை வேரோ டெடுத்தான்றன்
றிண்டோளுடலு முடியுநெரியச் சிறிதே யூன்றிய
புண்டானொழிய வருள்செய்பெருமான் புறவம் பதியாக
எண்டோளுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலைமலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத்தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

இராவணனை நெரித்த புண் நீங்க, அருள்செய்த பெருமான் இவன் என்கின்றது. வியன் ஆர் கயிலை - இடமகன்ற கயிலை. சிறிதே ஊன்றிய - மிகச் சிறிதாக ஊன்றிய. புண் - உடற்புண்ணும், உள்ளப்புண்ணும். எண்தோள் உடையான் - எட்டுத் திக்குகளாகிய தோள்களை உடையவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

நெடியானீடா மரைமேலயனும் நேடிக் காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோற் றிருமார்பிற்
பொடியார்கோல முடையான்கடல்சூழ் புறவம் பதியாக
இடியார்முழவா ரிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் தேடிக்காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடிக் காணமுடியாத திருமேனியை உடையவன், திருநீற்றழகன் இவன் என்கின்றது. நெடியான் - திருமால். படியாமேனி உடையான் - அடங்காத அழல் உருவாகிய மேனியை உடையவன். பொடி - விபூதி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஆலும்மயிலின் பீலியமண ரறிவில் சிறுதேரர்
கோலும்மொழிக ளொழியக்குழுவுந் தழலு மெழில்வானும்
போலும்வடிவு முடையான்கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும்வகையா லிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடையசிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறும் மொழிகளைக் கடந்து, விண்ணையும் தீயையும் ஒத்த வடிவமுடையவனாக இருப்பவன் இவன் என்கின்றது. கோலும் மொழிகள் ஒழிய - கோலிச் சொல்லும் மொழிகள் பிற்பட. குழுவும் - கூடி எரிகின்ற. ஏலும் வகையால் - பொருந்தும் வகை. ஆலும் மயில் - உயிர் உள் வழி அடை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பொன்னார்மாட நீடுஞ்செல்வப் புறவம் பதியாக
மின்னாரிடையா ளுமையாளோடு மிருந்த விமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரக னுரைத்த தமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோ கந்தானே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய உயர்ந்த மாடவீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப்பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர்.

குறிப்புரை :

புறவம்பதியாக இறைவியோடு இருக்கின்ற விமலனை அன்புசெய்து, தமிழாற்சொன்ன இப்பாடலைப் பாடியாடுவார் பரலோகம் பிரியார் எனப்பயன் கூறுகிறது. ஆர்வம் - அன்பு.
சிற்பி