திருஇலம்பையங்கோட்டூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

குறிப்புரை :

சீபருப்பத முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவ னாகிய, என்னுடைய உரைகள் எல்லாவற்றையும் தனது வாக்காகக் கொண்டவிடையேறிய விமலன் இலம்பையங்கோட்டூரை இடமாகக் கொண்டு என்னலங்கொள்வதழகா? என்று பிரிவினால் வருந்துந் தலைவியின் நிலையை அநுபவித்துப் பேசுகின்றார்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையார். துருத்தி - திருத்துருத்தி. திருப்பூந்துருத்தி முதலிய தலங்கள். மாசிலாச்சீர்மறைக்காடு என்றது வேதத்தால் வழிபடப்பெற்றமையானும், கதவந்திறக்கவும் அடைக்கவுமாகப் பாடல்பெற்ற சிறப்புடைமையானும் இவ்வடைமொழி வந்தது. நிலையினான் - பிரியாதே பெயராதே உறைபவன்; நித்யவாஸம் செய்பவன் என்பர் வடநூலார். `எனதுரை தனதுரையாக` ஆன்ம போதங்கழன்று, சிவபோதத்தில் நிற்பார் சொல்லுவனயாவும் சிவத்துரையேயாதலின் இங்ஙனம் கூறினார். கலையின் ஆர் மடப்பிணை - கலைமானோடுகூடிய இளைய பெண்மான். துணை யொடு - தன் துணையாகிய முற்கூறிய ஆண் மானோடு. கானல் - சோலை. கணமயில் - கூட்டமாகிய ஆண் மயில். ஆலும் - அகவும். இருக்கை - இருப்பிடம். என் எழில் கொள்வது இயல்பே - என்னழகைக் கவர்வது இத்தகையீர்க்கு இயல்பாமோ என்றாள். மயிலும், மானும் துணையொடும் பேடையொடும்வதிய, நீர்மட்டும் தனித்திருந்து, காதலித்த அடியாளையும் தனித்திருக்கச்செய்து அழகைக் கவர்வது அழகா? என்று உரைக்கின்றாள். இதனால் சிவத்தோடு இடை யறாமல் இருத்தலாகிய அத்துவித பாவனையிற் பிரிந்து இருக்கின்ற ஆன்மா ஒன்றிய காலத்துண்டாகிய சிவானந்தாநுபவத்தாலுண்டான ஒளிகுறைய, அதனை எண்ணி, ஆன்மநாயகியை வந்தேற்றுக் கொண்ட தேவரீர் இங்ஙனம் இடையறவுபடச் செய்யலாமா என்று வருந்திக் கூறுவதாகிய பேரின்பப் பொருளும் தோன்றுதல் காண்க. இங்ஙனமே ஏனைய திருப்பாடல்கட்கும் கொள்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான் றேவர்கடலைமகன் றிருக்கழிப்பாலை
நிருமலனெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும்
இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?

குறிப்புரை :

இதுவும் அதுபோலத் தலைவி கூற்று; திருமலர் என்றது மற்றைய மலர்கட்கு இல்லாத பிரணவ வடிவம் இதற்கு இருத்தலின். கருமலர் - கருநெய்தற்பூ. குவளை இளையவர் மதிமுகத்துலவும் - குவளை போன்ற கண்கள் முழுமதிபோன்ற முகத்து உலாவுகின்ற என்பதாம். கதிர்முலை - வளர்முலை. இரு மலர் - பெரியமலர் போன்ற கண்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம் பண்டுவெங்கூற்றுதைத் தடியவர்க்கருளும்
காலனாமெனதுரை தனதுரையாகக் கனலெரியங்கையி லேந்தியகடவுள்
நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க்குவளைக டாதுவிண்டோங்கும்
ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென்னெழில் கொள்வதியல்பே.

பொழிப்புரை :

பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?

குறிப்புரை :

பாலன், விருத்தன், பசுபதி, காலகாலன், அனலேந்தி எல்லாமவன்; அவன் என் எழில் கொள்வதியல்பே என்கின்றது. வழிபடும் அடியார்கள் பரிபக்குவத்திற்கு ஏற்ப இத்தகைய வடிவங்களைத் தான் விரும்பியவாறு பெறுகின்றான் என்பதாம். வண்டுபாடக் குவளைகள் மலர்ந்து ஏல முதலியன நாறும் பொழில்சூழ் கோட்டூர் என்றது, தலைவியின் பிரிவாற்றாமைமிகுக்கும் சாதனங்கள் நிரம்பியுள்ளமை குறித்தவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

உளங்கொள்வாருச்சியார் கச்சியேகம்ப னொற்றியூருறையுமண் ணாமலையண்ணல்
விளம்புவானெனதுரை தனதுரையாக வெள்ளநீர்விரிசடைத் தாங்கியவிமலன்
குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக் கொழுங்கொடியெழுந்தெங்குங் கூவிளங்கொள்ள
இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன், கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள் வளர்ந்த வில்வமரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!

குறிப்புரை :

தியானிப்பவர்களின் உச்சியிலுள்ள சகஸ்ரகமலத்தில் இருப்பவன் எனபது முதல் கங்கைதாங்கிய விமலன் என்பது வரை கூறப்பெற்ற சிறப்பியல்புடையவன் இவன் என்று கூறி, இத்தகையவன் என் எழில் கொள்ளலாமா என்கின்றாள். உளங்கொள்வார் - தியானிப்பவர். கலை குளம்பு உறத்துள - கலைமான் குளம்பு பதியத்துள்ள, சிலம்ப - ஒலிக்க. கூவிளங் கொள்ள - வில்வமரத்தின்மேல் படிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

தேனுமாயமுதமாய்த் தெய்வமுந்தானாய்த் தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில்
வானுமாமெனதுரை தனதுரையாக வரியராவரைக்கசைத் துழிதருமைந்தன்
கானமான்வெருவுறக் கருவிரலூகங் கடுவனோடுகளுமூர் கற்கடுஞ்சாரல்
ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே

பொழிப்புரை :

தேன் , அமுது ஆகியன போல இனிப்பவனாய் , தெய்வம் தானேயானவன் . தீ , நீர் , வாயு , வான் , மண் ஆகிய ஐம்பூத வடிவினன் . தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் . உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன் . மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறை களை யுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக் களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ ?

குறிப்புரை :

தேன் முதலிய இனிய பொருள்களாய் , ஐம்பூதமாய் , அராப்பூண்டு அலையும் மைந்தன் என் அழகைக் கொள்வது இயல்பாகுமா என்கிறாள் . தேன் , இதயத்திற்கு வலிவூட்டி உடல் வளர்க்கும் இனித்த மருந்தாவது . அமுதம் , அழியாமை நல்கும் மருந்து . இவையிரண்டும் எடுத்த பிறவிக்கு மட்டுமே இன்பம் அளிப்பன . தெய்வம் எடுத்த எடுக்கப்போகின்ற பிறவிகட்கும் , பிறவி யற்ற பேரின்ப நிலைக்கும் இன்பம் அளிப்பது ஆதலால் தேனுமாய் , அமுதமாய் என்றருளிய பிள்ளையார் அடுத்து தெய்வ முந்தானாய் என்கிறார்கள் . தீயொடு ... வானுமாம் என்றதால் பூமி யொழிந்த ஏனைய நாற்பூதங்களைக் குறித்தார்கள் . பாரிசேடத்தால் பூமியும்கொள்க . கானமான் வெருவுற - காட்டு மான் அஞ்ச . கருவிரல் ஊகம் - கரிய விரலையுடைய பெண் குரங்கு . கடுவன் - ஆண்குரங்கு . உகளும் - தாவும் . ஏனம் ஆன் உழிதரும் - பன்றியும் காட்டுப்பசுவும் திரியும் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற வகையலாற்பலிதிரிந் துண்பிலான்மற்றோர்
தனமிலானெனதுரை தனதுரையாகத் தாழ்சடையிளமதி தாங்கியதலைவன்
புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம் பொன்னொடுமணிகொழித் தீண்டிவந்தெங்கும்
இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற்பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடுபேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங் களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன்மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?

குறிப்புரை :

மனத்தின்கண் இறைவனை உலாவச்செய்கின்ற அடியவற்கு அருளும் வகையன்றி, பிச்சையேற்றுத் தான் உண்ணாதவன்; வேறு செல்வமில்லாதவன்; என்னுரையைத் தன்னுரையாகக் கொண்டு, பிறைமதி தாங்கிய சடையன்; இத்தகைய இறைவன் இந்த நகரை இருக்கையாகக்கொண்டு என் எழில் கொள்ளுவது இயல்பா என்கின்றாள். மனம் உலாம் அடியவர் - இறைவனிடம் மனத்தை உலாவச்செய்கின்ற அடியார்கள். பலி - பிச்சை. இறைவன் தான் பலி ஏற்பதும் தன்பொருட்டன்று அடியார்க்காகவே என்பதாம். இருவி - தினைகொய்ததாள். இனம் எலாம் - இடமாகிய இடங்களில் எல்லாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா னினைப்பவர்மனத்துளா னித்தமாவேத்தும்
ஊருளானெனதுரை தனதுரையாக வொற்றைவெள்ளேறுகந் தேறியவொருவன்
பாருளார்பாடலோ டாடலறாத பண்முரன்றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறிவருபவன். அத்தகையோன், மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?

குறிப்புரை :

நீர், தீ, ஆகாயம், நினைப்பவர் மனம், ஊர் இவை இறைவன் வசிக்கும் இடங்கள்; இங்கெல்லாம் உள்ளவன் விடையேறி இவ்வூரை இருக்கையாக்கொண்டு என் எழில் கொள்வதியல்பா என்கின்றாள். அந்தரம் - ஆகாயம். நித்தமா ஏத்தும் - நித்தியவழிபாடு செய்யும். மண்ணவர் பாட்டும் ஆட்டும் இடையறாத பொழில். முரன்று வண்டினம் பாடும் பொழில் எனக்கூட்டுக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை வேந்தனதடக்கைக ளடர்த்தவனுலகில்
ஆருலாமெனதுரை தனதுரையாக வாகமோரரவணிந் துழிதருமண்ணல்
வாருலாநல்லன மாக்களுஞ்சார வாரணமுழிதரு மல்லலங்கானல்
ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?

குறிப்புரை :

இராவணனை அடர்த்தவன்; இந்த உலகில் எனதுரை தனதுரையாக, மார்பில் பாம்பணிந்து திரியும் அண்ணல் இவ்வூரை இடமாகக்கொண்டு என் நலங்கவர்தல் இயல்போ என்கிறாள். வேர் உலாம் - பூமியின் அடிவரை உலாவுகின்ற, ஆருலாம் - நிறைதல் மலிந்த. ஆகம் - மார்பு. வாரணம் - யானை. மல்லல் - வளம். ஏர் உலாம்பொழில் - எழுச்சிமிக்க சோலை. நல்லன மாக்கள் - நல்ல விலங்குகள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கிளர்மழைதாங்கினா னான்முகமுடையோன் கீழடிமேன்முடி தேர்ந்தளக்கில்லா
உளமழையெனதுரை தனதுரையாக வொள்ளழலங்கையி லேந்தியவொருவன்
வளமழையெனக்கழை வளர்துளிசோர மாசுணமுழிதரு மணியணிமாலை
இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழை போல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள்மாலை போல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?

குறிப்புரை :

மாலும் அயனும் அடிமுடியறியப்பெறாத அழலேந்திய ஒருவன், இவ்வூரை இருக்கையாகக்கொண்டு, இவ்வண்ணம் செய்வதா? என்கின்றாள். கிளர்மழை தாங்கினான் - இந்திரனால் ஏவப்பட்ட மழையைக் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கித் தடுத்தவனாகிய திருமால். உளம் அழை - மனத்தால் அழைக்கின்ற. மழையைப்போல மூங்கிலிலைமேல் துளிவிழ, மலைப்பாம்பு திரிகின்ற கோட்டூர் என்க. மாசுணம் - மலைப்பாம்பு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி யுழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப் பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான்
கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை களிமுகவண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன்போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?

குறிப்புரை :

புறச்சமயிகள் பெறுதற்கரிய பெருஞ்செல்வம் போன்ற வன், பலிக்கென்று உழல் பெரியவர் பெருமான், இவ்வூரை இருக்கையாகப்பேணி என் எழில்கொள்வதியல்பா என்கிறாள். உரிஞ்சன கூறைகள் - உரிந்தாற்போன்ற ஆடைகள். உழி தரு - திரிகின்ற. கருஞ்சினை - பெரிய அரும்போடுகூடிய. பொன் அடை வேங்கை - பொன் போன்ற பூக்களையுடைய வேங்கை. இரும்சுனை - பெரிய நீர்ச்சுனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

பொழிப்புரை :

மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

குறிப்புரை :

இலம்பையங்கோட்டூரைப்பற்றிய இப்பாடல் பத்தையும் இசையொடு ஓதவல்லவர், துன்பநீங்கித் தேவரோடும் உறைந்து, அதினின்றும் விடுதலை பெற்று வீட்டின்பத்தையும் எய்துவர் என்கின்றது. கந்தனை - மணம். நந்தியார் - சிவன். கெடுகிட - கெட.
சிற்பி