திருஅச்சிறுபாக்கம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரிநூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத்தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

குறிப்புரை :

அச்சிறுபாக்கத்தை ஆட்சிகொண்ட சிவன், சடை, பவளக்கொடியையும் தீவண்ணத்தையும் ஒத்துப்புரள, மலை திரண்டால் ஒத்த மார்பில், பூணூலும் பொடியும் அணிந்து, உமாதேவியை ஒரு பாகத்துக்கொண்டு, ஆணுருவும் பெண்ணுருவும் வேறாயுள்ள அடிகள் ஆவார் என்கின்றது. குன்று இரண்டு அன்ன தோள் எனவும், அன்று இரண்டுருவம் ஆய எனவும் பிரிக்க. கொழும் பொடி - வளப்பமான விபூதி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

தேனினுமினியர் பாலனநீற்றர் தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார்
ஊனயந்துருக வுவகைகடருவா ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார்
வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார்
ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.

குறிப்புரை :

அவர் திருவடி தொழுவார்க்குத் தேனினும் இனியர், கரும்பனையர், உவகைகள் தருவார், விண்ணுலகினைக் கடந்தும், வையகம் வணங்க நிற்பவர் என்கின்றது. தேனினும் இனியர் - எக்காலத்தும் அள்ளூறிநின்று இனிக்கும் பொருளாக இருத்தலின் நாப்புலனோடு ஒன்றியகணத்து இனித்துப் பின் புளிப்பதாய தேனினும் இனியராயினர். பால் அன்ன நீறு - பால் உண்டார்க்குப் பித்தநோய் தணிக்கும்போல நீறு கண்டார்க்கும், பூசினார்க்கும் மலமயக்கம் போக்கலின் இங்ஙனம் கூறினார். தீங்கரும்பனையர் - கரும்பு பருவத்திற்கும் முயற்சிக்கும் ஏற்பநுகரும் முறையில் இனிப்பைக் கொடுக்கும்; இவரும் ஆன்மாக்களின் பரிபக்குவநிலைக்கு ஏற்பஇனிப்பர். ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் - சடமாகிய மாயாகாரியமாகிய உடல், உயிர் பெறும் இவ்வின்பத்தைப் பெற்றிலமே என்று விரும்பி உருக ஆன்மாவிற்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர். ஒன்று - இடபம். வானகம் இறந்து - போகபூமியாகிய வானகத்துப் பொருந்தலாகாமையின் அவர்களும் போகிகளாயிருத்தலின் பொருந்தமாட்டாமையின் அதனைக்கடந்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

காரிருளுருவ மால்வரைபுரையக் களிற்றினதுருவுகொண் டரிவைமேலோடி
நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி நீறணிந்தேறுகந் தேறியநிமலர்
பேரருளாளர் பிறவியிற்சேரார் பிணியிலர்கேடிலர் பேய்க்கணஞ்சூழ
ஆரிருண்மாலை யாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத்தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.

குறிப்புரை :

அவர், உமை பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண்யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது. கார் இருள் உருவம் மால்வரை புரைய - கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரியமலையையும் ஒத்த. அரிவை - பெண்யானையாகிய உமாதேவி. இது `பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு` நடந்தமையைக் காட்டுவது. நீர் உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தான் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த இருட்கூட்டம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர், அடியவர்கள் மாலை மார்பர் எனவும், மலை மகளை மருவினர் எனவும் கங்கையும் பிறையும் சூடிய சென்னியர் எனவும், எம் சென்னிமேல் உறைவார் எனவும் தோத்திரிக்க, தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தம் திருவடியைச்சார இருக்கும் அடிகளாவர் என்கின்றது. மை மலர் - நீல மலர். கோதை - மாலை. செம்மலர்ப் பிறை - சிவந்த மலர்போலும் பிறை. தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தாள் நிழல்சேர என்றது ஒலிவடிவாய சொற்கள்யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியனவாதலின் அடையுமிடமும் அவனடியேயாயிற்று என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

விண்ணுலாமதியஞ் சூடினரெனவும் விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும்
பண்ணுலாமறைகள் பாடினரெனவும் பலபுகழல்லது பழியிலரெனவும்
எண்ணலாகாத விமையவர்நாளு மேத்தரவங்களோ டெழில்பெறநின்ற
அண்ணலானூர்தி யேறுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர் பிறைசூடினர் எனவும், கங்கை அவர் சடைக் கண்ணதெனவும், மறைபாடினர் எனவும், பழியிலர் எனவும் தேவர்கள் நாளும் ஏத்த இருப்பவர் என்கின்றது. எண்ணலாகாத இமையவர் - தாம் நுகரும் போக உள்ளத்தில் மயங்கி இறைவனைத் தியானிக்காத தேவர்கள். கணக்கற்ற தேவர்கள் என்பாரும் உளர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுலங்க நிழறிகழ்மழுவொடு நீறுமெய்பூசித்
தோடொருகாதினிற் பெய்துவெய்தாய சுடலையிலாடுவர் தோலுடையாகக்
காடரங்காகக் கங்குலும்பகலுங் கழுதொடுபாரிடங் கைதொழுதேத்த
ஆடரவாட வாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கதில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர் சடைமேல் பிறைவிளங்க, நீறுபூசி ஒருகாதில் தோடணிந்து, பேயும் பூதமும் கைதொழுதேத்த, சுடலையில் ஆடுவர் என்கின்றது. நீடு இரும் சடை - நீண்ட பெரிய சடை. அரங்கு - கூத்தாடுமிடம். கங்குல் - இரவு. கழுது - பேய். பாரிடம் - பூதம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி யிளங்கிளையரிவையொ டொருங்குடனாகிக்
கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங் குளிரிளமதியமுங் கூவிளமலரும்
நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு மகிழிளவன்னியு மிவைநலம்பகர
ஆறுமோர்சடைமே லணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர் எருதேறி, நீறுபூசி, பசுங்கிளி ஏந்திய பாவையோடு, கொன்றை, மதியம், வில்வம், மல்லிகை முதலியவற்றைப் புனைந்தவர் என்கின்றது. இளங்கிளை அரிவை - இளைய கிளியையேந்திய உமாதேவி. கூவிள மலர் - வில்வப்பூ. பத்திரமேயன்றிப் பூவும் சூடப்பெறும் என்பதறிவிக்கப்பட்டது. மகிழ் - மகிழம்பூ.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர், இராவணனுக்கு அச்சமும் அருளும் அளித்தவர் என்கின்றது. இராவணனுக்கு வந்த ஏற்றமெல்லாம் கச்சையும் வாளையுங்கட்டி, கவரி குடை பிச்சம் முதலியவற்றைத் தாங்கிய பெண்கள் இவனைப் பெரியவன் என்று பேணியதேயாகும். அதனால் இவனுக்கு அன்பும் வலிமையும் உண்டாயின என்ற கருத்து விளக்கப்படுதல் காண்க. அதனாலேயே ஏமாந்து இறைவன் கயிலையை எடுக்கத் தொடங்கினான் என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.

குறிப்புரை :

அவர் தவஞ்செய்யாராயினும் சாந்தும் மாலையுங் கொண்டு தொழாராயினும், என்றைக்கும் இப்படி அடையலாமென்று முயன்றும் அடையமுடியாத தன்மையையுடையவர் இவர் என்கின்றது. நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள். புகர் - உணவு. ஈண்டு - நைவேத்தியம். தோற்றலார் மால் - பிறத்தலையுடைய திருமால்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர்
ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.

குறிப்புரை :

அவர் புறச்சமயிகளுடைய நல்வினையைப் போக்கிய வர், படித்துங் கேட்டும் உணர்ச்சியற்றவர்களால் தியானிக்கப்படாதவர், வேதமும் அவைகூறும் நெறிகளுமாகி, மலரகிதரான வேடத்தோடு, ஆதியும் ஈறுமாய அடிகள் இவர் என்கின்றது. வாது செய் சமண் - விதண்டாவாதமே செய்து பொழுதுபோக்கும் சமணர். அவர்களுக்குத் துணை இருப்பது உலகபோகத்திற்குரிய நல்வினையாதலின் உண்மை உணராது வாதமே செய்து காலம் கழிக்கின்றனர் என்பதாம். ஆதலால் அவர்களுடைய நல்வினையை நீக்கவேண்டியது இவர் அருளித்திறமாயிற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப்
பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப் பதியவரதிபதி கவுணியர்பெருமான்
கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண்
டச்சிறுபாக்கத் தடிகளையேத்து மன்புடையடியவ ரருவினையிலரே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.

குறிப்புரை :

இது, இறைவன்திருவடியன்றி வேறொன்றையும் பேணாத ஞானசம்பந்தர் தமிழைக் கொண்டது. இத்தலத்து இறைவனை ஏத்தும் அடியார்கள் வினையிலர் என்கின்றது. குவளைப் பூக்கள் தவளையினுடைய வாய்நிரம்ப மதுவைப் பொழிகின்ற பொய்கை என்க. பச்சு இறவு புதுமலர் கிழிய எறி வயல் - பசிய இறால்மீன் புதுமலர் கிழியத் துள்ளும் வயல். மறி - மான்.
சிற்பி