திருஇடைச்சுரம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

வரிவளரவிரொளி யரவரைதாழ வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக்
கரிவளர்தருகழல் கால்வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர்தருபொழி லிளமயிலால வெண்ணிறத்தருவிக டிண்ணெனவீழும்
எரிவளரினமணி புனமணிசார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இள மயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரிபோன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறைமதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக்கழலைக் காலின்கண் வெற்றி பெறச்சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ?

குறிப்புரை :

இப்பதிகம், இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் மேவிய இவர் வண்ணம் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது. வரிவளர் அவிர் ஒளி அரவு - வரிகளோடுகூடி விளங்குகின்ற ஒளியினையுடைய பாம்பு. அரைதாழ - திருவரையில் தங்க. கரிவளர் தரு கழல் - அத்தியாளியின் உருவம் எழுதப்பெற்ற வீரக்கழல். இவர் இயல்புகளை எத்துணை அறியினும், அறிந்தவற்றிற்கும் அப்பால் பல இயல்புகள் இருத்தலின் இவர்வண்ணம் என்னே எனச் செயலறவு அருளினாராயிற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர்மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?

குறிப்புரை :

ஆறு - கங்கை. குழகு - இளமை. கயல்மீனும் இளவாளைமீனும் போர்செய்ய, அதனைப் பெண் குரங்குகள் கூர்ந்து நோக்குகின்றன. செம்முக மந்தி - பெண் குரங்கு. ஏற்றை - ஆண் குரங்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங் காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
வானமுநிலமையு மிருமையுமானர் வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும்படுவார்
நானமும்புகையொளி விரையொடுகமழ நளிர்பொழிலிளமஞ்ஞை மன்னியபாங்கர்
ஏனமும்பிணையலு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

தூவி எரிக்கும் புழுகு, சந்தனம், அகில் முதலிய வற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச்செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும், தீமை யில்லாதவரும், அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும், தீமை யில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்புயாதோ?

குறிப்புரை :

கானம் - காடு. கற்படுநிலன் - மலை. காதலர் - இவற்றை இடமாகக்கொள்ளும் விருப்பினர். வானம் - மறுமை. நிலமை - இம்மை. இருமையும் - இவ்விரண்டின் தன்மையும். நானம் - கஸ்தூரி. ஏனம் - பன்றி. பிணையல் - பெண்மான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

கடமணிமார்பினர் கடறனிலுறைவார் காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
விடமணிமிடறினர் மிளிர்வதோரரவர் வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
வடமுலையயலன கருங்குருந்தேறி வாழையின்றீங்கனி வார்ந்துதேனட்டும்
இடமுலையரிவைய ரெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும், இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திரு இடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும், அன்புடையவரும் தீமையில்லாத வரும், கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும், பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறுவேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்புயாதோ?

குறிப்புரை :

கடமணி - மலைச்சாரலில் விளைந்த மணி. சரிதை - ஒழுக்கம். வட முலை அயலன - அசையும் ஆலுக்குப் பக்கத்தனவாகிய. கருங்குருந்து - பெரிய குருந்தமரத்தில். வார்ந்து - ஒழுகி. தேன் அட்டும் - தேனை எடுக்கின்ற. இட முலை அரிவையர் - இடங் கொண்டு வளர்ந்த முலையினையுடைய பெண்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கார்கொண்டகடிகமழ் விரிமலர்க்கொன்றைக் கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கை
நீர்கொண்டசடையினர் விடையுயர்கொடியர் நிழறிகழ்மழுவின ரழறிகழ்நிறத்தர்
சீர்கொண்டமென்சிறை வண்டுபண்செய்யும் செழும்புனலனையன செங்குலை வாழை
ஏர்கொண்டபலவினொ டெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கைநீரை ஏற்ற சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும், ஒளி விளங்கும் மழுப் படையை ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ?

குறிப்புரை :

கார்கொண்ட - கார்காலத்து உண்டான. கடி - மணம். வாழைகள் பலாவினோடு அழகைச்செய்கின்ற சாரல் எனக்கூட்டுக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

தோடணிகுழையினர் சுண்ணவெண்ணீற்றர் சுடலையினாடுவர் தோலுடையாகப்
பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர் பேயுடனாடுவர் பெரியவர்பெருமான்
கோடல்களொழுகுவ முழுகுவதும்பி குரவமுமரவமு மன்னியபாங்கர்
ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப்பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க்கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங் காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப்பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

குழை - காது. பீடு - பெருமை. கோடல்கள் ஒழுகுவ - செங்காந்தட்பூக்கள் தேனைச்சொரிவன; அதில், தும்பி முழுகுகின்றன. தும்பி - வண்டு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

கழன்மல்குகாலினர் வேலினர்நூலர் கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர்
அழன்மல்குமெரியொடு மணிமழுவேந்தி யாடுவர்பாடுவ ராரணங்குடையர்
பொழின்மல்குநீடிய மரவமுமரவ மன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும்
எழின்மல்குசோலையில் வண்டிசைபாடு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக்கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசைபாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

கழல் - வீரக்கழல். வேல் - சூலம். கவர் தலை அரவு - ஐந்தலை நாகம். கண்டி - உருத்திராக்கம். அணங்கு - தெய்வத்தன்மை. மரவம் - மராமரம். கவடு - கிளை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார் திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடி
வீந்தவர்சுடலைவெண் ணீறுமெய்பூசி வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித் தவழ்கனமணியொடு மிகுபளிங்கிடறி
ஏந்துவெள்ளருவிக ளெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச்சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராணவரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

வீந்தவர் - இறந்தவர். சாந்தம் - சந்தனம். கனமணி - கூட்டமாகிய இரத்தினங்கள். ஏந்து - தாங்கிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்
மலையிலங்கருவிகண் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்
இலையிலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இள மயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

பல இலம் இடு பலி - பல வீடுகளில் இட்ட பிச்சை. தலை இலங்கு நெடு முடி எனக் கூட்டுக. இலை இலவங்கம் - இலைகளோடு கூடிய இலவங்கமரம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பெருமைகடருக்கியோர் பேதுறுகின்ற பெருங்கடல்வண்ணனும் பிரமனுமோரா
அருமையரடிநிழல் பரவிநின்றேத்து மன்புடையடியவர்க் கணியருமாவர்
கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக் கயலினம்வயலிள வாளைகளிரிய
எருமைகள்படிதர விளவனமாலு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிறவண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று பரவிப்போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளை மீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ?

குறிப்புரை :

பெருமைகள் தருக்கி - பெருமைகளால் செருக்குற்று. பேதுறுகின்ற - மயங்கிய. ஓரா அருமையர் - அறியமுடியாத அருமைப்பாட்டினை உடையவர். எருமைகள் குவளை கயலினம் இளவாளைகள் இரிய படிதர இளஅன்னம் ஆலும் இடைச்சுரம் எனக் கூட்டுக. இரிய - விலக. படிதர - தோய. ஆலும் - ஒலிக்கும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மடைச்சுரமறிவன வாளையுங்கயலு மருவியவயறனில் வருபுனற்காழிச்
சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல் சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்
புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற் புணர்மடநடையவர் புடையிடையார்ந்த
இடைச்சுரமேத்திய விசையொடுபாட லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.

பொழிப்புரை :

நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங் களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன், இடைச்சுரத்தைத் துதித்த பாடலை, இசையோடு சொல்ல வல்லவர் பிணியிலர் என்கின்றது. மடைச் சுரம் - நீர்மடைகளின் வழி. மறிவன - மடங்கித் துள்ளுவன. சடைச்சுரத்து - சடைக்காட்டில்.
சிற்பி