திருக்கழுமலம்


பண் :

பாடல் எண் : 1

அயிலுறுபடையினர் விடையினர்முடிமே லரவமுமதியமும் விரவியவழகர்
மயிலுறுசாயல வனமுலையொருபான் மகிழ்பவர்வானிடை முகில்புல்குமிடறர்
பயில்வுறுசரிதைய ரெருதுகந்தேறிப் பாடியுமாடியும் பலிகொள்வர்வலிசேர்
கயிலையும்பொதியிலு மிடமெனவுடையார் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய வரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரியமிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராணவரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை அறும்.

குறிப்புரை :

இப்பதிகம் இறைவனது கழுமலத்தை நினைய, நமது வினையின் தீமை அறும் என்கின்றது. அயில் - கூர்மை. மயில் உரு சாயல் - மயில் போன்றசாயலை உடைய. வனமுலை - இளைய முலையினையுடையாளாகிய உமாதேவி. முகில் புல்கும் மிடறர் - மேகத்தையொத்த கண்டத்தை யுடையவர். கரிசு - தீமை.

பண் :

பாடல் எண் : 2

கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர்
பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற்
கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகியமிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரைமேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

குறிப்புரை :

கொண்டல் - மேகம். மேகம் மிடற்றிற்கு உவமை யானது தேவர்களைக் காத்தமையால். நீலம் ஒப்பானது கண்ணுக்கு இனிமையாய் இருத்தலின். படுதலை - கபாலம். வண்டல் - ஒதுக்கிய மண். வங்கம் - தோணி. கண்டல் - நீர்முள்ளி. கைதை - தாழை. நெய்தல் - நெய்தற்பூ.

பண் :

பாடல் எண் : 3

எண்ணிடையொன்றின ரிரண்டினருருவ மெரியிடைமூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடையைந்தின ராறினரங்கம் வகுத்தனரேழிசை யெட்டிருங்கலைசேர்
பண்ணிடையொன்பது முணர்ந்தவர்பத்தர் பாடிநின்றடிதொழ மதனனைவெகுண்ட
கண்ணிடைக்கனலினர் கருதியகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

எண்ணத்தில் ஒன்றாயிருப்பவர், சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர். நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்து தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். எண்வகைக் கலைகளில் ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும்.

குறிப்புரை :

எண்ணிடை ஒன்றினர் - எண்ணத்தில் அருவா யிருக்கும் பொழுது ஒன்றாய் இருப்பவர். உருவம் இரண்டினர் - சிவமும் சத்தியுமாகி உருவத்திருமேனி கொள்ளுங்காலத்து இரண்டாய் இருப்பவர். எரியிடை மூன்றினர் - நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய முத்தீயாய் இருப்பவர் என்றலுமாம். மண்ணிடை ஐந்தினர் - மண்ணில் சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையாய் இருப்பவர் எனலுமாம் ஏழிசை - குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு. எட்டிருங்கலை - அஷ்டவித்தை.

பண் :

பாடல் எண் : 4

எரியொருகரத்தின ரிமையவர்க்கிறைவ ரேறுகந்தேறுவர் நீறுமெய்பூசித்
திரிதருமியல்பின ரயலவர்புரங்க டீயெழவிழித்தனர் வேய்புரைதோளி
வரிதருகண்ணிணை மடவரலஞ்ச மஞ்சுறநிமிர்ந்ததோர் வடிவொடும்வந்த
கரியுரிமருவிய வடிகளுக்கிடமாங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித்திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும், வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை நீங்கும்.

குறிப்புரை :

எரி - மழு. அயலவர் - பகைவர். தீயெழ விழித்தனர் என முப்புரங்களை விழித்தெரித்ததாகக் கூறப்படுகிறது. வேய் - மூங்கில். வரி - செவ்வரி. மடவரல் - உமாதேவி. மஞ்சு - ஆகாயம். கரியுரி - யானைத்தோல்.

பண் :

பாடல் எண் : 5

ஊரெதிர்ந்திடுபலி தலைகலனாக வுண்பவர்விண்பொலிந் திலங்கியவுருவர்
பாரெதிர்ந்தடிதொழ விரைதருமார்பிற் படவரவாமையக் கணிந்தவர்க்கிடமாம்
நீரெதிர்ந்திழிமணி நித்திலமுத்த நிரைசுரிசங்கமொ டொண்மணிவரன்றிக்
காரெதிர்ந்தோதம்வன் றிரைகரைக்கெற்றுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

ஊர்மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர். வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர். மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர் தமக்கு இடமாய் உள்ளதால், மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்துவரும் மணிகள், முத்துக்கள், ஒழுங்குற நிறைந்த வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும்.

குறிப்புரை :

ஊர் எதிர்ந்திடு பலி - ஊரவர் இடுகின்ற பிச்சை. கலன் - உண்ணும் பாத்திரம். படஅரவு, ஆமை, அக்கு அணிந்தவர்க்கு இடமாம் எனப்பிரிக்க. அக்கு - உருத்திராக்கம். அக்குமணியுமாம். வன்திரை மணி நித்திலம் முத்தம் சுரிசங்கம் ஒண்மணிவரன்றி கரைக்கு எற்றும் கழுமலம் எனக்கூட்டுக. சுரிசங்கம் - மூக்குச் சுரிந்திருக்கின்ற சங்குகள்.

பண் :

பாடல் எண் : 6

முன்னுயிர்த்தோற்றமு மிறுதியுமாகி முடியுடையமரர்க ளடிபணிந்தேத்தப்
பின்னியசடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாளனார் பேணியகோயில்
பொன்னியனறுமலர் புனலொடுதூபஞ் சாந்தமுமேந்திய கையினராகிக்
கன்னியர் நாடொறும் வேடமேபரவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராய், முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற, வட்டமாக, முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங்கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும், பொன்போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங் களைப் போற்றி வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும்.

குறிப்புரை :

முன் - சர்வ சங்காரகாலத்து. உயிர்த்தோற்றமும் இறுதியும் ஆகி - உயிர்களை உடம்போடு புணர்த்துகின்ற பிறப்பும் அவற்றைப்பிரிக்கின்ற இறுதியும் ஆகிய இரண்டிற்கும் காரணமாகி, கன்னியர் மலர் தூபம் சாந்தம் ஏந்திய கையினராகிப் பரவும் கழுமலம் எனக்கூட்டுக.

பண் :

பாடல் எண் : 7

கொலைக்கணித்தாவரு கூற்றுதைசெய்தார் குரைகழல்பணிந்தவர்க் கருளியபொருளின்
நிலைக்கணித்தாவர நினையவல்லார்தந் நெடுந்துயர்தவிர்த்தவெந் நிமலருக்கிடமாம்
மலைக்கணித்தாவர வன்றிரைமுரல மதுவிரிபுன்னைகண் முத்தெனவரும்பக்
கலைக்கணங்கானலி னீழலில்வாழுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும், தோணி மலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும், தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்.

குறிப்புரை :

கொலைக்கு அணித்தாவரு கூற்று - கொலையை அணியதாக்க வருகின்ற யமன். குரை கழல் - ஒலிக்குங் கழல். பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு - வணங்கிய அடியார்களுக்கு அருளிச்செய்த வீட்டின்பமாகிய நிலைக்கு. அணித்தாவர - அணுகி வர. மலைக்கு - தோணிமலைக்கு. வன்திரை அணித் தாவர முரல - வலிய அலைகள் அணுகி வரவும் ஒலிக்கவும். மது - தேன். கலைக் கணம் - மான் கூட்டம். கானல் - கடற்கரைச் சோலை.

பண் :

பாடல் எண் : 8

புயம்பலவுடையதென் னிலங்கையர்வேந்தன் பொருவரையெடுத்தவன் பொன்முடிதிண்டோள்
பயம்பலபடவடர்த் தருளியபெருமான் பரிவொடுமினிதுறை கோயிலதாகும்
வியன்பலவிண்ணினு மண்ணினுமெங்கும் வேறுவேறுகங்களிற் பெயருளதென்னக்
கயம்பலபடக்கடற் றிரைகரைக்கெற்றுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன்முடிகளையும், வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்கு வதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

குறிப்புரை :

புயம் பல உடைய - இருபது தோள்களை உடைய. பயம் பலபட - பல வகையில் அச்சப்பட. பரிவொடும் - விருப்பத்தோடும். வியன் பல விண்ணினும் - அகன்ற பலவாகிய ஆகாயத்தி னும். வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன - ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரை உடையதென்று. கயம் - யானை. நீர் எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 9

விலங்கலொன்றேந்திவன் மழைதடுத்தோனும் வெறிகமழ்தாமரை யோனுமென்றிவர்தம்
பலங்களானேடியு மறிவரிதாய பரிசினன்மருவிநின் றினிதுறைகோயில்
மலங்கிவன்றிரைவரை யெனப்பரந்தெங்கு மறிகடலோங்கிவெள் ளிப்பியுஞ்சுமந்து
கலங்கடன்சரக்கொடு நிரக்கவந்தேறுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும், மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான், விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில், வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும்.

குறிப்புரை :

விலங்கல் - கோவர்த்தன கிரி. தம் பலங்களால் - தமது உடற்பலத்தால். மலங்கி - கலங்கி. வரையென - மலையைப் போல. கலங்கள் தன்சரக்கொடு நிரக்க - கப்பல்கள் தன்னிடத்து ஏற்றப் பட்டுள்ள சரக்கோடு வரிசையாக.

பண் :

பாடல் எண் : 10

ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர்
நோம்பலதவமறி யாதவர்நொடிந்த மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச்
சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத் தையலாரிடுபலி வையகத்தேற்றுக்
காம்பனதோளியொ டினிதுறைகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும்.

குறிப்புரை :

ஆம்பலதவம் முயன்று - ஆகிய பலவிதமான தவங் களைச் செய்து. தேரர் - புத்தர். கணிசேர் - எண்ணத் தக்க. நோம் பல தவம் - துன்பத்தைத் தரும் பல தவங்களை. அறியாதவர் - அறியாதவர்களாய். நொடிந்த - சொன்ன. தையலார் - பெண்கள். காம்பு அன தோளியொடு - மூங்கிலையொத்த தோளையுடைய உமாதேவியொடு.

பண் :

பாடல் எண் : 11

கலிகெழுபாரிடை யூரெனவுளதாங் கழுமலம்விரும்பிய கோயில்கொண்டவர்மேல்
வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர் வருங்கலைஞானசம் பந்தனதமிழின்
ஒலிகெழுமாலையென் றுரைசெய்தபத்து முண்மையினானினைந் தேத்தவல்லார்மேல்
மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும் விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம், உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத்தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.

குறிப்புரை :

கலி கெழு பார் - ஒலிமிக்க உலகம். வலி கெழு மனம் - உறுதியான மனம். ஒலிகெழு மாலை - இசையோடு கூடிய மாலை. மெலி கெழு துயர் - மெலிவைச் சேர்க்கும் துன்பம்.
சிற்பி