திருவீழிமிழலை


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

இரும்பொன் மலைவில்லா வெரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றா னுறைகோயில்
தெரிந்த வடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.

பொழிப்புரை :

பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக அவ்வில்நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், கற்றுணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள் வாழும் திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

மேருமலையை வில்லாகவும், அங்கியை அம்பாகவும் கொண்டு திரிபுரமெரித்த சிவன் உறையுங்கோயில் திருவீழிமிழலை என்கின்றது. தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி எதிர்கொள்வார் என்றது, ஞானசம்பந்தப்பெருமான் எழுந்தருளிய போது எதிர்கொண்டதைத்திருவுள்ளத்து எண்ணி எழுந்த உரைபோலும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடனஞ்சை யுண்டா னுறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே.

பொழிப்புரை :

துன்புறும் தேவர்களின் துயர்தீர, வெள்ள நீரொடு கூடிய கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில், இசையமைப்போடு கூடியதும் சுருதி என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேதபாராயணத்தின் ஒலி நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

துன்புறுகின்ற தேவர்கள் துயர் தீர நஞ்சுண்டநாதன் கோயில் வீழிமிழலை என்கின்றது. வாதை - துன்பம். கேள்விக் கிடை - வேதத்தை ஓதும் மாணவர் கூட்டம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பயிலும் மறையாளன் றலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதிய பிரமனின், தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்தியமான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

பிரமகபாலத்தில் பிச்சை ஏற்று, எல்லாம் துயிலும் நள்ளிரவில் நட்டமாடும் பெருமான் கோயில் வீழிமிழலை என்கின்றது. இந்நகரத்து மாதர் மயிலையும் மானையும் மதியையும் மூங்கிலையும் வெயிலையும் போல் விளங்குகின்றார்கள்; சாயலால் மயில், பார்வையால் மான், நுதலழகால் மதி, தோளால் மூங்கில், கற்பால் வெயில் எனக்கொள்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

இரவன் பகலோனு மெச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் னுறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.

பொழிப்புரை :

தக்கன் செய்தயாகத்தில் சந்திரன், சூரியன் ஏனைய தேவர்கள் ஆகியோரை, வீரபத்திரரை அனுப்பித் தண்டம் செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான் உறையும் கோயில் குரா, சுரபுன்னை, குளிர்ந்த கோங்கு, இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள் சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.

குறிப்புரை :

தக்கயாகத்தில் சூரியன் சந்திரன் முதலான தேவர்களைச் செப்பஞ்செய்து அருள்செய்த நிமலன் கோயில் இது என்கின்றது. இரவன் - சந்திரன். பகலோன் - சூரியன். எச்சத்து - யாகத்தில். நிரவிட்டு - செப்பஞ்செய்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

நெற்றி விழியில் தோன்றிய கனலால் காமனைப் பொடிசெய்து, இரதிதேவிவேண்ட அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண் ணகத்தே மழைமேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

மன்மதன் எரிய விழித்து, இரதிக்கு அருள்செய்த பெருமான் கோயில் இது என்கின்றது. பெண் - இரதி. உமையெனப் பொருள்கொண்டு இடப்பாகத்தை அருளிய எனப்பொருள் உரைப்பாரும் உளர். பூமியில் செய்யப்படும் யாகப்புகை, வானத்தில் மேகத்தை வளர்க்கும் என்ற கருத்தைப் பின்னிரண்டடிகளில் காண்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடவாழி
ஏலா வலயத்தோ டீந்தா னுறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

திருமால் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று குறையக்கண்டு, தன், மலர் போன்ற கண்ணை இடந்து சாத்திய அளவில் பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக் காணப்படும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

திருமால் ஆயிரம்பூவோடு கண்கொண்டு வழிபாடு செய்யச் சக்கரம் ஈந்த பெருமான் கோயில் இது என்கின்றது. இவ்வரலாறு இத்தலத்தில் நிகழ்ந்தது. ஏலாவலயம் - சுமக்கலாற்றாத சக்கரம். கமலங்கள் எரிகாட்டும் - செந்தாமரை தீப்பிழம்பைப் போல விளங்கும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியா னிற்கின்றார் வீழி மிழலையே.

பொழிப்புரை :

மெய்யறிவால் தன்னை வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப்படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழி மிழலையாகும்.

குறிப்புரை :

காலகாலன் கோயில் இது என்கின்றது. மதியால் வழிபட்டான் - அறிவோடு வழிபட்ட மார்க்கண்டன். கொதியா - கோபித்து. குமைத்தான் - உரு அழியச் செய்தவன். நெதியான் மிகு செல்வர் - தியானத்தால் மிக்க செல்வர். நியமங்கள் - யோக உறுப்புகள் எட்டனுள் ஒன்றாகிய நியமம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

எடுத்தான் றருக்கினை யிழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாளாளாக் கொண்டா னுறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின் அவன் பிழையுணர்ந்து வேண்ட, வாள் முதலியன கொடுத்து, அவனை அடிமையாக ஏற்றுக் கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில், வேதங்களைப் பயின்றவர்களும், வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும், பாவங்களை விட்டவர்களுமாகிய அந்தணர்கள் மிகுதியாக வாழும், திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இராவணனது தருக்கினை அழித்து வாள்கொடுத்து ஆளாகக்கொண்ட இறைவன் கோயில் இது என்கின்றது, மறை படித்தார், வேள்வி பயின்றார் என மாறிக் கூட்டுக. வேதம் ஓதி வேள்வி இடைவிடாது செய்து பாபத்தை விட்டவர்கள் வாழ்கின்ற மிழலை என்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கிடந்தா னிருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குற் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.

பொழிப்புரை :

பாம்பணையில் துயிலும் திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித் தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற சிவபிரானது கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும், பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

மாலும் அயனும் அறியாவண்ணம் அழல் உருவானான் இடம் இது என்கின்றது. கிடந்தான் - பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமால். இருந்தான் - பூமேல் இருந்த பிரமன். சுடராயவன் - தீ உருவானவன். அரவுபோன்ற அல்குலையும், வாயின் மேல் விஷத்தையும் தாங்கிய கண்ணார் என்றது பாம்பு ஓரிடமும் விடம் ஓரிடமும் இருக்கின்றதென்னும் வியப்புத் தோன்றக்கூறியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றுந் நம்பா னுறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கா ரவர்வாழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

சிக்குப் பிடித்த காவி உடையையும் சிறிய ஒலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம் செய்து சிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் புறம்பழிக்கும் நமதிறைவன் கோயில் இது என்கின்றது. சிக்கு ஆர் துவர் ஆடை - சிக்கு நாறும் காவியுடை. தட்டு உடை - ஓலைத்தடுக்காகிய உடை, நக்கு - சிரித்து. அலர் தூற்றும் - பழிதூற்றும். தக்காராய், வேதவேள்வியில் தலையானவராய், உலகுக்கே மிக்கவர்கள் வாழுகின்ற வீழிமிழலை என்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழிற்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.

பொழிப்புரை :

விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.

குறிப்புரை :

வீழிநாதனைக் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் பாடவல்லார் நல்லார் என்கின்றது. மேல்நின்று இழி கோயில் - விண்ணிழிகோயில். இது இத்தலத்துச் சிறப்புக்களுள் ஒன்று. ஏனத்து எயிற்றானை - பன்றிக்கொம்பை அணிந்தானை. வாய்மைத்து இவை - உண்மையை உடையனவாகிய இவற்றை.
சிற்பி