திருஅம்பர்மாகாளம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

பொழிப்புரை :

பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணைஎய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.

குறிப்புரை :

இப்பதிகத்தால் அம்பர்மாகாளத்தெழுந்தருளிய இறை வனுடைய திருவடியை ஏத்தவல்லவர்க்கு வினை சாரா, தவம் சாரும், இன்பம் எய்தும் என்பது அறிவிக்கப்படுகின்றது. அடையார் - பகைவர். என்றது திரிபுராதிகள். மடை - வாய்க்கால் மடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த வல்ல லடையாவே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம் மலர், பிறைமதி, கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, வானளாவிய பொழில்சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.

குறிப்புரை :

ஊனார் தலை - பிரமகபாலம். ஆனான் - இடபத்தை யுடையவன். அல்லல் - துன்பம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரு நம்பான் கழனாளும்
உரையா தவர்கண்மே லொழியா வூனம்மே.

பொழிப்புரை :

அலைகள் பொருந்திய கங்கை நதியோடு, கண்டாரை மகிழ்விக்கும் சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி, மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப்புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.

குறிப்புரை :

திரை - அலை. மேனி குறைதலாகிய வறுமையும் இறைவனைச் சார்ந்து கழிந்தமையின் செல்வமதியாயிற்று. விரை - மணம். நரை - வெண்மை. ஊனம் - பழி. இப்பாடல் எதிர்மறை முகத்தான் வற்புறுத்தியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன்சடை வைத்த
எந்தை கழலேத்த விடர்வந் தடையாவே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரிவண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசைவைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடையமாட்டா.

குறிப்புரை :

கொந்து அண் பொழில் - கொத்துக்கள் நிறைந்த நந்தவனம். கோலம் - அழகு. மந்தம் - தென்றற்காற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

அணியார் மலைமங்கை யாகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் றுதைபொற் கழனாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, துணிக்கப்பட்ட கோவணஉடையினன் ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம் நீங்கா.

குறிப்புரை :

அணி - அழகு. ஆகம் - உடல், மணியார் புனல் - முத்துக்களோடு கூடிய தண்ணீர். துணி ஆர் உடை - துணிக்கப்பெற்ற கோவணஉடை. பணியாதவர்மேல் பாவம் பறையா என இதுவும் எதிர்மறை முகத்தான் விளக்கியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

பண்டாழ் கடனஞ்சை யுண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.

பொழிப்புரை :

முற்காலத்தில் ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு, களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான், திருவடிகளைப் போற்ற, குற்றங்கள் நம்மைக் குறுகா.

குறிப்புரை :

பண்டு ஆழ் கடல் நஞ்சை எனப்பிரிக்க. அமுதமுண்டு களிப்பது இயல்பாயினும், இவர், நஞ்சையுண்டு களித்தார் என்றது மிகநயமான பகுதி. அமுதுண்டு களிப்பார் அறிவு மயங்குவார். நஞ்சை உண்டு இவர் களித்தகளிப்பு இத்துணைத் தேவர்க்கும் இன்பம் செய்தோமே என்றதால் விளைந்தது. களிமாந்தி - களிப்பையடைந்து. விண்டார் - பகைவர். இது இத்தலவரலாறு. இத்தலத்திறைவன் பெயர் காளகண்டேசுவரர் என்பதுங்காண்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.

பொழிப்புரை :

விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி, வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால், மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.

குறிப்புரை :

மிளிரும் அரவு - விளங்குகின்ற பாம்பு. அரவுக்கு விளக்கம் அடியார்கள் அன்போடு அடைக்கலமாக நோக்கும் இறைவனுடைய திருவடி, கரம், கழுத்து, முடி, செவி, இவற்றிலெல்லாம் அணியாக இருந்து அடியார்கள் மனத்தைக் கவர்தல், கேடில்கழல் - அழிந்துபடாத்திருவடி. உறுநோய்கள் தளரும், தவம் சாரும் என முடிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழனாளும்
நிலையா நினைவார்மே னில்லா வினைதானே.

பொழிப்புரை :

கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில் ஏந்தி, கரையோடு மோதும் நீர்நிரம்பிய அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், இலைவடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.

குறிப்புரை :

கொலை ஆர்மழு என்றது படைக்கலம் என்ற பொதுமை பற்றி வந்த அடை; இறைவன் மழு யாரையும் கொலை செய்தல் இல்லையாதலின். கோலச் சிலை - அழகுக்காகத் தரிக்கப்பட்டவில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலும் காண்பொண்ணா
இறையான் கழலேத்த வெய்தும் மின்பம்மே.

பொழிப்புரை :

சிறகுகளை உடைய வரிவண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காணஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.

குறிப்புரை :

மறையார் - அந்தணர். நறை - தேன். இறையான் சிவபெருமான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா வென்பார்கட் கில்லை யிடர்தானே.

பொழிப்புரை :

அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி, மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும், சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர்வாராது.

குறிப்புரை :

மாசூர்வடிவு - அழுக்கடைந்த மேனி. இன்னார் - துன்பமுடையவர்கள். மண்டை - வாயகன்ற உண்ணும் பாத்திரம். கூசாது உரைக்கும் சொல் - பொய் என்றறிந்தும் மனமும் வாயும் கூசாமல் உரைக்குஞ்சொல். வாசு ஆர் பொழில் - நீர் நிறைந்த பொழில்; வெட்டி வேரும் ஆம். வாசு - நீர் (பெருங்கதை. 1. 53. 77).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

வெரிநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே.

பொழிப்புரை :

அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

வெரி நீர் - தேனாகிய நீர். வேரி என்பது வெரி எனத் திரிந்து நின்றது. சேணார் பெருமான் - விண்ணவர் தலைவனாகிய சிவபெருமான்.
சிற்பி