திருநாகைக்காரோணம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலைமாலையைச் சூடி, வினைநீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

வினைநீங்கிய அடியார்கள் விதிப்படி வழிபட்டுச் செறியும் கடனாகைக் காரோணத்தானே சிரமாலையணிந்தவன் என்கின்றது. புனையும் - அழகுசெய்யும். கடவுள்புனல் - தேவ கங்கை. வினையில் அடியார்கள் - வினை ஓய்ந்த அடியார்கள். கனையும் - செறியும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

சிவமும் சத்தியுமாக நின்றவன், அண்ணாமலையான், ஆரூருறைவான் காரோணத்தானே என்கின்றது. திருமாலின் தருக்கொழித்த தலங்கள் மூன்றினையும் சேர்த்துக்கூறியருளினார். திருவாரூரில் வில்நாணைச் செல்லாக அரித்து நிமிர்த்தித் திருமால் சிரத்தை யிடறினார்; திருவண்ணாமலையில் தீமலையாய் நின்று செருக்கடக்கினார்; நாகையிலும் தியாகர் திருவுருவில் இருந்து திருமாலின் தியானவஸ்துவானார் என்பதுமாம். மண் - மார்ச்சனை என்னும் மண். கண் - இடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதின்மூன்றும்
ஆரா ரழலூட்டி யடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் றிரைசூழ்ந்த
காரார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த செயல் விண்ணவர் மண்ணவர் அடியார் எல்லாரும் மகிழுஞ் செயலாயிற்று என்பது உணர்த்துகின்றது. ஆரார் - பகைவர். காரார்கடல் - கரியகடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற வண்ணல் லணியாய
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகைஅழிக்க எண்ணிவந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதா தவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

பழியொடு பொருந்தாத பத்தர்தொழும் நாகை என் கின்றது. மொழிசூழ்மறை - மந்திரமொழியாகச் சூழும் வேதம். அழி சூழ்புனல் - அழித்தலையெண்ணி மிடுக்கொடு வந்த கங்கை. பழி சூழ்வு இலராய - பழிசூழாத. பழியும்சூழ்ச்சியும் இலராய என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

ஆணும் பெண்ணுமா யடியார்க் கருணல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான் அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அடியார்க்கு அருள்செய்து, விலகிநின்றவருக்கும் திருவுளம் பாலித்துத் தியானிக்கும் செம்மனச் செல்வர் தரிசிக்க நின்றவன் இவன் என்கின்றது. சிவம் சத்தியாக நின்றாலல்லது அருளல் நிகழாமையின் `ஆணும் பெண்ணுமாய் அருள் நல்கி` என்றார். சேண் நின்றவர் - தூரத்தே நின்றவர்; தேவருமாம். இன்னம் சிந்தைசெய வல்லான் - மேலும் திருவருள் உள்ளத்தைப் புரியவல்லவன். காணும் - அநவரததரிசனம் செய்யும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

ஞானிகள் பணிய இருப்பான் இவன் என்கின்றது. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. அரவம் - பாம்பு. ஞானத்து உரைவல்லார் - சிவஞானத்தோடு செறிந்து இறைவன் புகழையே பேசவல்லவர்கள். கானல் - கடற்கரைச் சோலை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அரையா ரழனாக மக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

இடையில் அழல்போலும் கொடியநாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக்கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

சங்குமணியைச் சர்ப்பத்தோடு அணிந்தவன் இவன் என்கின்றது. அரை ஆர் அழல் நாகம் - இடுப்பில் பொருந்திய தீயைப்போல் கொடிய விடப்பாம்பு. அக்கோடு - சங்குமணியோடு. அசைத்திட்டு - கட்டி. விரை - மணம். வரை ஆர்வன போல - மலைகள் நிறைந்திருப்பனபோல. வங்கங்கள் - தோணிகள். வங்கங்கள் வரையார்வனபோல வளரும் கரை எனக் கூட்டுக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோள்
இலங்கைக் கிறைவாட வடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தன் புகழை நம்பி வளர்ந்த தோளையுடைய இரா வணன் வாட அடர்த்து, அருள் செய்தவர் இவர் என்கின்றது. வலங்கொள்புகழ் என்றது கொடை முதலியவற்றாலும் புகழ் வருமாதலின் அவற்றினின்றும் பிரிக்க. கலம் - மரக்கலம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் றிரைசூழ்ந்த
கருமால் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறைமதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அயன் மால் இவர்கள் பெருமானே என ஏத்தநின்றவர், விடையூருஞ்செல்வர், இவர் என்கின்றது. செரு மால் விடை - சண்டைசெய்யும் பெரிய இடபம். கரு மால் கடல் - கரிய பெரிய கடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழிதூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

நல்லவர்கள் அறம் சொல்ல, தீயோர் புறங்கூற, அயலார் பழிசொல்ல, அடியார்க்கு அருள்செய்பவன் காரோணத்தான் என்கின்றது. பல் ஆர் தலை - பல்லோடுகூடிய தலை. கல் ஆர் கடல் - கல் என்னும் ஒலியோடு கூடிய கடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கரையார் கடனாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்
கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே.

பொழிப்புரை :

இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப்பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்கவானுலகை அடைவார்கள்.

குறிப்புரை :

காரோணநாதனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் மாலையாகிய இவற்றைப் பாடுவார் அழியாவடிவோடு வான் அடைவார்கள் என்கின்றது. கரையார் கடல் - ஒலிக்கின்ற கடல். நரை - வெண்மை. உரை - புகழ். கரையா உருவாகி - அழியாத வடிவத்தோடு. கலி - ஒசை.
சிற்பி