திருவடுகூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.

பொழிப்புரை :

சுடும் தன்மை மிக்க தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.

குறிப்புரை :

தீயணிவர், சுடர்வேலர். மழுவுடையர், பசி காமம் கவலை பிணி முதலியன இல்லாதவர் வடுகூரடிகள் என்கின்றது. கூர் எரிமாலை - மிக்க தீவரிசையை. வேல் - சூலம். கொடுகுஊர் - கொடுமை மிக்க ஊர். கடுகுஊர் - விரைந்து ஊரும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

குறிப்புரை :

பால், நெய், தயிர், இவற்றை ஆடி, நீறும் எலும்பும் ஒளி நிரம்பச்சூடி, நடஞ்செய்வர் இவர் என்கின்றது. பயின்று - பலகாலும் விரும்பி. ஏலும் - பொருந்தும். கோலம் - அழகு. ஆலும் - ஒலிக்கும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய பொன்போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச்சூடி, மதம் கொண்டு தன்பால் ஓடி வந்த யானையை, உமையம்மை அஞ்சக் கொன்று, அதன் தோலைப் போர்த்து, அழகு பொருந்திய வரி வண்டுகள் இதழ்களோடுகூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடும் வடுகூரில், அடிகள் நடனம் ஆடுவர்.

குறிப்புரை :

சடையின்மேல் இளம்பிறையைச் சூடுவர்; உமையாள் அஞ்ச யானையை உரித்துப் போர்த்துக் கொண்டு ஆடுவர் வடுகூர்நாதர் என்கின்றது. மலர் ஏடு - பூவிதழ். மோந்து - முகர்ந்து, எழிலார் - அழகுமிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

செந்நிறமும், மதிலும் செறிந்த அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள் அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார், காவல் பொருந்திய முலையாராகிய பெண் கொடிகள் முல்லைநிலத்தில் கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும் வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.

குறிப்புரை :

திரிபுரம் எரியச்செய்தார் வடுகூரிலாடும் அடிகள் என்கின்றது. துவரும் புரிசையும் துதைந்த மணிமாடம் - காவியூட்டி மதில்கள் செறிந்த அழகிய மாடங்கள். ஓட்டி - பரப்பி. கடிய மதில் - காவலோடுகூடிய முப்புரங்கள். மணிகவரும் கொல்லை கடிய முலை நல்லார் பவரும் - இரத்தினங்களைக் கவரும் முல்லைநிலத்தில் உள்ள காவல் பொருந்திய முலையோடு கூடிய பெண்களாகிய கொடிகளோடு கூடிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா வழனாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.

குறிப்புரை :

கோவணமுடுத்து அதன்மேல் அழகாக நாகம் வைத் தவர், அடியார்கள் பலரும் வணங்கும் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. துணி - கிழிக்கப்பெற்ற கோவணம். துன்னி - பொருந்தி. தணியா அழல் நாகம் - தணியாத கோபத்தோடு கூடிய பாம்பு. பணி ஆர் அடியார்கள் - பணிதலைப் பொருந்திய அடியார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக்
கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே

பொழிப்புரை :

சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்ற வளாகிய உமையம்மையோடு கூடி , விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக் கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி , வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார் .

குறிப்புரை :

உமாதேவியோடு உடனாகி , அரவு பிறை இவற்றை அணிந்து வடுகூர் அடிகள் ஆடுவர் என்கின்றது . தளரும் கொடி அன் னாள் - சுமை பொறுக்காது தள்ளாடும் கொடியை ஒத்த உமாதேவி . அரவு - பாம்பு . கிளரும் - விளங்கும் . ஒளிரும் - பிரகாசிக்கும் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறைமதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.

குறிப்புரை :

நெடியர், சிறுமதிசூடும் முடியர், விடையூர்வர், கொடியர் மொழிகொள்ளாதவர், காலனையுதைத்த அடியவர் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நிரம்பா மதி - இளம்பிறை. கடிய தொழில் - கொடுந்தொழில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள், இளம்பிறை, பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

குறிப்புரை :

கங்கையும் பிறையும் பிரியா முடியாரும், வேதம் பல பாடி மயானத்துறைவாரும் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நெடுநீர் - கங்கை. பறையும் குழலும் போலப் பல வண்டு ஆங்கு அறையும் எனப்பிரிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு
கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்று மருள்செய்வார்
அந்தண் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறைமதி வெளியிடும் கிரணங்களை உடைய மாலைநேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.

குறிப்புரை :

மலர் புனைந்த சடைக்காட்டில் இருப்பதால் மணம் பெற்ற மதிசிந்துகின்ற கதிர்களோடு வந்து நயந்து எமக்கு நன்மையை அருளுவர் வடுகூரிலழகர் என்கின்றது. சந்தம் - அழகு. கதிர்மாலை - கிரணவரிசை. நயந்து - இனியன பலகூறி, நன்றும் அருள்செய்வார் - நன்றாக அருளுவர். நன்றும் மருள் செய்வார் - நன்றாக மயக்குவர் என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லாப்பெருமா னெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் றிசைவில்லா
அருமா வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் ஒளிபரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள், திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாப் பெருமான் மாலாகிய இடபமூரும் செம்மான் வடுகூர் அடிகள் என்கின்றது. செருமால் - பொருகின்ற பெரிய; திருமாலாகிய என்றுமாம். திசைவில்லா அரு மா வடுகூரில் - திசைகளில் எல்லாம் ஒளியைச் செய்கின்ற அரிய பெரிய வடுகூரில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநா ணிகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.

பொழிப்புரை :

இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும், குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும் சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார், திருவடிப்பேறு பெறுவர்.

குறிப்புரை :

இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம் ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப்பாடிய திருவடிஞானத்தால் வந்த இத்திருப்பாடல்களை வல்லார், திருவடிசேர்முத்தியை எய்துவார்கள். படி - பூமி. படியான சிந்தை - படிதலான மனம். அடி ஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் - அடிசேரும் முத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவார்கள்.
சிற்பி