திருஆப்பனூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா விளம்பிறையன்
ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருவாப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

முடியைச் சூழ்ந்துள்ள சடையின்மேல் வளராத இளம் பிறையைச் சூடியவனும், ஒருதலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியுள்ளவனும், வெறுத்தற்கியலாத புகழானும் ஆகிய திருஆப்பனூர் இறைவனைப் பற்றும் உள்ளமுடையோர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

இப்பதிகம் ஆப்பனூரானைப் பணிவார், பரவுவார், புகழ்வார், வினைப்பற்றறுப்பார் என்கின்றது. `முற்றும் சடை முதிரா இளம்பிறை` என்பதில் பொருள்முரண் உள்ளது. செற்றம் - கோபம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

குராமலர் மணம் கமழும் கூந்தலையுடைய உமை யம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள் கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

குரவம் கமழ்குழலாள் - குராமலர் மணக்கும் கூந்தலையுடைய உமாதேவி. விரவுதல் - கலந்து பணியும். வளை எயிறு - வளைந்த விஷப்பல். பரவுதல் - தோத்திரித்தல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

முருகு விரிகுழலார் மனங்கொ ளநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

மணம் கமழும் கூந்தலை உடைய மகளிரால் நினைக்கப் பெறும் காமனை, முற்காலத்தில் பெரிதும் சினந்து, பின் அவனுக்கு வாழ்வு தந்த பெருமானும், பெரிய காட்டகத்தே வாழும் அரவத்தை அணிந்தவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியவனுமாகிய இறைவனைப் பரவும் மனம் உடையவர் வினைத்தொடர்ச்சி நீங்கப்பெறுவர்.

குறிப்புரை :

முருகு விரி குழலாள் - மணம் வீசும் கூந்தலையுடைய பெண்கள். அநங்கன் - மன்மதன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை யணியாப்ப னூரானைப்
பணியு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

உடலைப் பற்றிய நோய்களையும் உயிரைப் பற்றிய பிறவி நோயையும் அறுத்தருளும் பெருமானும், சுடுகாட்டகத்தே கோவண ஆடையோடு அழலேந்தி ஆடுபவனும், கங்கையை முடியில் அணிந்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூர் இறைவனைப் பணியும் மனம் உடையவர் வினைத்தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

பிணியும் பிறப்பும் அறுப்பான் என உம்மை விரிக்க. துணியின் உடை - கீண்ட கோவண உடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

தகரம் எனப்படும் மணப்பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாக வளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடிபடச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினைமாசுகளினின்று நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது `அகரமுதல எழுத்தெல்லாம்` என்ற குறட்கருத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

ஓடுந் திரிபுரங்க ளுடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை யணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

பறந்து திரியும் முப்புரங்களையும் ஒரு நொடியில் அழித்து, பொடிபடச் செய்து, சுடுகாட்டைத் தனது இடமாகக் கொண்டு, கனல் ஏந்தி நின்று, இரவில் திருநடனம் புரிவதைத் தொழிலாகக் கொண் டவனும், அழகிய ஆப்பனூரில் விளங்குபவனுமாகிய இறைவனைப் பாடும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

உலந்து - வற்றி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

இயலும் விடையேறி யெரிகொண் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணா ளொருபாற் கலந்தாட
இயலு மிசையானை யெழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

மனம் போல் இயங்கும் விடைமிசை ஏறி, எரிதலைக் கொண்ட மழுவைச் சுழற்றிக் கொண்டு, கயல் போன்ற இரு விழிகளைக் கொண்ட உமையம்மை திருமேனியின் ஒருபால் இணைந்து மகிழ, இசைபாடி மகிழ்பவனாய் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடுவதைத் தம் இயல்பாகக் கொண்ட மனம் உடையவர், வினை மாசு தீர்வர்.

குறிப்புரை :

இயலும் விடை - மனம்போலியங்கும் இடபம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கு மடியவரை யொளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தா னணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

கரிதான நீலமணி போன்ற கண்டத்தை உடைய வனும், சினம் பொருந்திய பாம்பைக் கச்சையாக அணிந்தவனும், அடியவர்களை மனம் உருகச் செய்பவனும், ஒளிபொருந்திய வெண் பிறையைச் சூடியவனும், இராவணனின் வலிமையை அழித்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய இறைவனை, சுவைக்கும் மனம் உடையவர் வினை மாசு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கருக்கும் மணி மிடறன் - மேலும் கருக்கும் நீலமணி போலும் கழுத்தினையுடையவன். கதநாகம் - சினத்தோடுகூடிய பாம்பு. அரக்கன் - இராவணன். திறல் - வலி. பருக்கும் - பருகும் என்பதன் விரித்தல் விகாரம். குடிக்கும் என்பது பொருள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

திருமால், மணம் பொருந்திய தாமரை மலர் மேல் இனிதாய் உறையும் பிரமன் ஆகியோரால், அளத்தற்கரியவனாய் நின்றவனும், அடியவர் மேல் வரும் எண்ணற்ற வினைகள் பலவற்றையும் களைபவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனைப் பண்பொருந்த இசைபாடிப் போற்றுவார் வினை மாசு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கடிக்கமலம் - மணம் உள்ள தாமரை. அண்ணல் என்றது பிரமனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த வடியாரை
ஐய மகற்றுவா னணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

சிவந்த காவி ஆடை உடுத்த புத்தர்களும், சிறு தடுக்கை ஆடையாக உடுத்துக் கொண்டு திரியும் சமணர்களும் பொய்பேசிப் புறம்பேச, தன்னை விரும்பிய அடியவர்களின் விபரீத ஞானத்தைப் போக்கி, மெய்யுணர்வு நல்கும் அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனை மெல்ல உள்குவார்களின் வினை மாசுகள் நீங்கும்.

குறிப்புரை :

செய்ய கலிங்கத்தார் - சிவந்த காவியாடையார். சிறு தட்டு - சிறு தடுக்கு. புரிந்த - விரும்பிய. ஐயம் அகற்றுவான் - சந்தேக ஞானத்தை விலக்குபவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

அந்தண் புனல்வைகை யணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவு நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

அழகிய குளிர்ந்த நீர் நிறைந்த வைகைக் கரையில் விளங்கும் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய அழகிய கொன்றை மலர் மாலையைச் சடைமேல் அணிந்துள்ள இறைவனை, சிவன் திருவடிகளையே பரவும் நல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்த இசை யோடு கூடிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான மெய்யறிவு பெறுவார்கள்.

குறிப்புரை :

நந்தி - சிவபெருமான். சந்தம் - சந்தத்தோடுகூடிய திருப்பாடல்.
சிற்பி