திருஎருக்கத்தம்புலியூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை
உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச்
சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையா னடியேத்த மேவா வினைதானே.

பொழிப்புரை :

படைகளாக அமைந்த பூதகணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.

குறிப்புரை :

பகடு ஆர் உரி - யானையின் தோல். மேவா - தம் வலிமையைக்காட்டா.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதின்மூன்று நீறாய் விழவெய்த
சிலையா னெருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையா னடியேத்தக் கருதா வினைதானே.

பொழிப்புரை :

இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும், எம்பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.

குறிப்புரை :

இலையார்தரு சூலப்படை - இலை வடிவாகச் செய்யப் பெற்ற சூலப்படை. நிலையார் - அழிந்துபடுந் தன்மையரான திரிபுராதிகள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே.

பொழிப்புரை :

விண்ணவர் தலைவனே, வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.

குறிப்புரை :

பெண் ஆண் அலியாகும் - பால் பாகுபாட்டையும் திணைப் பாகுபாட்டையும் கடந்தவன் என்பது கருத்து. `பித்தா பிறை சூடீ` இத்தொடரே சுந்தரர் வாக்கில் தோன்றுவது. எண் ஆர் - எண்ணுதல் பொருந்திய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

அரையார் தருநாக மணிவா னலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.

பொழிப்புரை :

இடையிலே பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவனும், விடைமீது ஏறி வருபவனும், கயிலை மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை, சடைமிசைத்தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.

குறிப்புரை :

விரை - மணம். வரையான் - கயிலைமலையை யுடையவன். திரையார் சடையான் - கங்கையணிந்த சடையான். திரை ஆகு பெயராய்க் கங்கையை உணர்த்திற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

வீறார் முலையாளைப் பாக மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறா னெருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.

பொழிப்புரை :

வேறொன்றற்கில்லா அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப் பாகமாகச் சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த காலனின் சினம் அடங்கச் செய்தவனும், இடப ஊர்தியை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள் விரும்பா.

குறிப்புரை :

வீறு - தனிப்பெருமை. வேறொன்றற்கு இல்லாத அழகு என்பர் நச்சினார்க்கினியர். அழித்தான் என்னாது அழிவித்தான் என்றது காலன் தானேயுணர்ந்து அடங்கச்செய்த தன்மையால். வேறா நினைவாரை - தனியேயிருந்து தியானிப்பவர்களை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவா னெருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.

பொழிப்புரை :

சிரிக்கும் வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக்கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதி வாய்ந்தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.

குறிப்புரை :

நானாவிதம் பாடி - பலவகையான பண்களைப் பாடி. அயம் பெய்யப் புகுவான் - பிச்சையை மகளிர் பெய்யப் புகுவான். ஐயம் அயம் எனப் போலியாயிற்று. பியற்கு - பிடரிக்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே.

பொழிப்புரை :

ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

குறிப்புரை :

ஆ ஆ - இரக்கக்குறிப்பு. தேவா என - அவனே, தேவா என்று வேண்ட.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

குறிப்புரை :

மறையான் - பிரமன். நிறையாமதி - இளம்பிறை. முத்தின் தொத்தே - முத்தின் கொத்தே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

புத்த ரருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்த னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்த னறவன்றன் னடியே யடைவோமே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.

குறிப்புரை :

சுத்தி தரித்து - தூய்மையைப் பொருந்தி. அத்தன் - தலைவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

ஏரா ரெருக்கத்தம் புலியூ ருறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா வருந்தமிழ் மாலையிவை வல்லார்
பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே.

பொழிப்புரை :

அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார்சம்பந்தன் அருளிய சுவைகுன்றாத அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.

குறிப்புரை :

ஏர் - எழுச்சி. ஆரா அருந்தமிழ் - உணர்ந்தது போதும் என்றமையாத மிக இனியதமிழ்.
சிற்பி