திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே.

பொழிப்புரை :

சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்ற வர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.

குறிப்புரை :

திருவிருக்குக்குறள் என்பது, வீடு காதலிப்பவரால் விரும்பப்பெறும் பாடல். இரண்டு சீர்களான் யாக்கப்பெற்ற இருக்கு மந்திரம் போன்ற பாடல். வேதங்களுள் இருக்கு, மந்திரவடிவாக உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திரவடிவாக உள்ளது எனலும் ஆம். மந்திரம் சொற்சுருக்கமுடையது; எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இதுவும் அமைந்திருப்பது காண்க. அநாதியே ஆன்மாவைப்பற்றி நிற்கும் பாசத்தால் இருவினைக் கீடாகக் கருவயிற்பிண்டமாய் வளர்ந்து பிறந்து, பரிபாகமுற்ற வினைகள் துன்ப இன்பங்களையூட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, அலைகின்ற ஒழியாத் துன்பத்தினின்றும் உய்திவேண்டும் உத்தமர்களையழைத்து, அன்போடு மலர் தூவுங்கள்; கைகளால் தொழுங்கள்; எடுத்து வாழ்த்துங்கள்; உங்களுடைய பற்றறும், வினைகள் விண்டுபோம்; இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும், வழியும் வகுப்பன இப்பத்துப்பாடல்களும். இம் முதற்பாட்டு முத்தி எய்தலாம் என்பதனைத் தெரிவித்து, அதற்கு உபாயம் உணர்த்துகின்றது. சித்தம் தெளிவீர்காள் - மலமறைப்பாற் கலக்குண்ட சித்தந் தெளியவிரும்புபவர்களே. அத்தன் - அனைவர்க்குந் தலைவன். தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆரூரைப் பத்தியோடு மலர் தூவி வழிபடுங்கள் முத்தியாகும் என்பது போந்தபொருள். தெளிவீர்காள் என்று எதிர்காலத்தாற் கூறியது மலர் தூவல் முதலிய கிரியைத் தொண்டுகள் சித்தந்தெளிதற்கு ஏதுவென்பது தெரித்தற்கு; `கிரியையென மருவும் யாவையும் ஞானங் கிடைத்தற்கு நிமித்தம்` என்பது ஞானசாத்திரமாகலின். மலர்தூவ என்றது இறைவனும், ஞானாசாரியனும் எழுந்தருளியுள்ள இடங்களை மலர்தூவி வழிபடல் மரபு என்பதை விளக்கி நிற்கின்றது. முத்தியாகும் என முத்தியை வினை முதலாகக் கூறியருளியது திருவருட்பதிவு உற்றகாலத்துத் தாமே வந்தெய்துவதோர் சிவானந்தமாதலின்.

பண் :

பாடல் எண் : 2

பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.

பொழிப்புரை :

பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.

குறிப்புரை :

முத்தியாதற்குப் பிறவி இடையூறாதலின் அப்பிறப்பு, பாவத்தைப் பற்றி வருவதொன்றாதலின், பாவமோ பற்றுள்ளங்காரணமாக எழுவதாகலின், காரியமாகிய பிறப்பினையறுக்க விரும்புவார்க்குத் துறவியாதலே சிறந்த உபாயம் என்பதை உணர்த்துகின்றது இப்பாட்டு. அறவன் - தருமவடிவன். மறவாது ஏத்துமின் - நினைப்பின்றி நினைத்து வழிபடுங்கள். நெஞ்சொடு படாத செயலும் உண்டன்றே! அங்ஙனன்றிப் புத்திபூர்வமாக வழிபடுங்கள். துறவியாகும் - பிறவிக்கு ஏதுவாகிய பற்றுள்ளங்கழியும் என்பதாம். மறங்கடிய அறவனாலன்றியாகாது என்பது உணரக்கிடக்கின்றது. துறவி - துறவு. வி, தொழில் விகுதி.

பண் :

பாடல் எண் : 3

துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே.

பொழிப்புரை :

துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத்தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.

குறிப்புரை :

பிறந்தார் உறுவது பெருகிய துன்பமாதலின் அதனைத் துடைக்க வேண்டும் என்பதும், அதற்கு உபாயம் மலர் தூவலே என்பதும் உணர்த்துகின்றது இப்பாடல். அன்பன் - சிவன். அன்பனணி யாரூர் - அன்பனால் அழகு பெறும் ஆரூர். பொன்மலர்தூவ என்பது செம்பொன்னும் வெண்பொன்னுமாகிய இரண்டாலும் பூக்கள் செய்து அவற்றை முல்லைமலரோடு கலந்து தூவுதல் மரபு. இன்பம் ஆகும் - துன்பநீக்கத்திற்குத் தொழுத உங்கட்கு இன்பமும் ஆகும் என்பதாம். இன்பம் என்றது இம்மையின்பத்தையும் நிரதிசயா நந்தப் பேரின்பத்தையும்.

பண் :

பாடல் எண் : 4

உய்ய லுறுவீர்காள் , ஐய னாரூரைக்
கையி னாற்றொழ , நையும் வினைதானே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.

குறிப்புரை :

இப்பாடல், துன்பந்துடைத்து உய்தியை விரும்புவீரா யின் கைகளால் தொழுங்கள் என்றருளிச் செய்கின்றது. ஐயன் - தலைவன். வினை தானே நையும் என்றது தொழுவாரிடம் இருப்புக்கொள்ள இடமின்மையால் வல்வினைகள் மெலிந்துபோம் என்பதாம். வினை உண்டாலன்றிக் கழியாதாகலின் நையும் என்றார்.

பண் :

பாடல் எண் : 5

பிண்ட மறுப்பீர்காள் , அண்ட னாரூரைக்
கண்டு மலர்தூவ , விண்டு வினைபோமே.

பொழிப்புரை :

மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவாநிலை எய்தலாம்.

குறிப்புரை :

கீழைத்திருப்பாட்டு பிராரத்தவினை நைந்துபோம் என்றது; இத்திருப்பாட்டு வரக்கடவ வினைகளும் விண்டுபோம் என்கின்றது. பிண்டம் - கருவில் உறுப்பு நிரம்பாதிருக்கும் தசைத்திரள். `சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்` என்பது புறநானூறு. பிண்டம் அறுப்பீர்காள் - மீண்டும் விளையும் கருவிடைப் பிண்ட நிலையை அறுப்பவர்களே! அண்டன் ஆரூர் என்றது தேவலோகத்தில் எழுந்தருளியிருந்ததை மனங்கொண்டு கூறியது. அண்டன் - தேவன். வினை விண்டுபோம் - வினைகள் மீண்டும் அங்குரியாதவாறு கெடும். நெல் வாய்விண்டது என்பதுபோல.

பண் :

பாடல் எண் : 6

பாச மறுப்பீர்காள் , ஈச னணியாரூர்
வாச மலர்தூவ நேச மாகுமே.

பொழிப்புரை :

உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.

குறிப்புரை :

கீழைத்திருப்பாட்டு வினை நீக்கங் கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய், அநாதியே பந்தித்துள்ள பாசமுங்கெடும்; இறைவன் நேசமாகும் என்று சொல்கிறது இப்பாட்டு. பாசம் - ஆணவம். கட்டி நிற்பதாகலின் அதனையறுக்கவேண்டு மாயிற்று. ஆன்ம அறிவைப் பந்தித்து அடக்கி நிற்றலின் பாசம் எனப்பெற்றது. நேசமாகுமே என்பதையுற்று நோக்குகின்ற எம்போலியர்க்கு, பாசமறுத்த நம்பியாரூரர்க்குத் தோழரானதுபோல நமக்கும் நேசமாவர் என்ற நினைப்பு உண்டாகும். அன்பு முதிரும் என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 7

வெய்ய வினைதீர , ஐய னணியாரூர்
செய்ய மலர்தூவ , வைய முமதாமே.

பொழிப்புரை :

கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத்தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.

குறிப்புரை :

இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகமுழுதும் உடைமையாம் என்றும் உணர்த்துகிறது இப்பாடல். வெய்ய வினை - விரும்பத்தக்க நல்வினையும் கொடிய தீவினையும். இரண்டும் பொன்விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தளைத்து நிற்பவாகலின் நல்வினையும் தீரவேண்டுவதாயிற்று. செய்ய மலர் - சிவந்த மலர். வையம் உமதாம் - எலிமாவலியாகி வையமுழுதாண்டாற்போல உமதாம் என்பதாம். விளி முதற்பாட்டிலிருந்து கொள்ளப் பெறும்.

பண் :

பாடல் எண் : 8

அரக்க னாண்மையை , நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத் , திருத்த மாகுமே.

பொழிப்புரை :

அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.

குறிப்புரை :

செய்யமலர் தூவி வையந்தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து திருத்தம் நல்குவர் தியாகேசராதலின் அவர்தலத்தைக் கையினாற்றொழ வேண்டும் என்கின்றது இப்பாடல். அரக்கன் - சிவபூசையை விதிமுறையியற்றி ஆட்சியும் படையும் பெற்ற இராவணன். ஆண்மை - திருவருட்பதிவு இன்மையால் தன்முனைப்பால் எழுந்த வன்மை. நெருக்கினான் - அடர்த்தவன். திருத்தம் - தூய்மை. திருத்தமாகும் - கோணல் நீங்கும் என்றுமாம். அரக்கன் தருக்கழித்த இறைவனது ஆரூர் தொழத்திருத்தமாம் என்க.

பண் :

பாடல் எண் : 9

துள்ளு மிருவர்க்கும் , வள்ள லாரூரை
உள்ளு மவர்தம்மேல் , விள்ளும் வினைதானே.

பொழிப்புரை :

செருக்குற்றுத் துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள்செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

அருள்பெற்றுச் சிறிது திருந்திப் பதவிகளின் நிற்பாரும், பதவிமோகத்தான் மயங்குவாராயினும், அவர்கள் மிகைநோக்காதே, அதுதான் ஆன்மவியல்பு என்று திருவுளங்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் அழியும் என்றும் அறிவிக்கின்றது இப்பாடல். துள்ளும் இருவர் - அதிகாரம்பெற்ற சகலான்மாக்களாதலின் மலமுனைப்பால் தாம் பெரியர் எனத் துள்ளுகின்ற பிரம விஷ்ணுக்கள். வள்ளல் - அவர்களுடைய மிகுதி கண்டும் நகையாது வழங்குபவர். உள்ளுதல் - தியானித்தல். மேல் வினை விள்ளும் எனவும் கூட்டலாம்.

பண் :

பாடல் எண் : 10

கடுக்கொள் சீவரை , அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார் , விடுப்பர் வேட்கையே.

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.

குறிப்புரை :

அதிகாரமலத்தான் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கியாளுவர் என்ற கருணையின் மேன்மையைக் காட்டுகின்றது இச்செய்யுள். கடுக்கொள் சீவர் - கடுப்பொடியைக் கொள்ளும் சமணராகிய ஆன்மாக்கள். அடக்கினார் - அத்தன்மை கெடுமாறு அடக்கியவர். எடுத்து வாழ்த்துவார் - உள்ளத்துட்கிடந்த உணர்ச்சி வெள்ளம் உரையிறந்து வருதலின் கேட்டாரும் தம்போலுய்ய உரக்க வாழ்த்துபவர். வேட்கை விடுப்பர் - உரையினைச் செவிகேட்க, கேட்டதனைச் சித்தம் தியானிக்க, அதனால் மனம் ஒடுங்குதலின் பற்றுள்ளத்தைவிடுவர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 11

சீரூர் சம்பந்தன் , ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார் , பேரா ரின்பமே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.

குறிப்புரை :

முத்தியாகுமே என முதற்பாட்டில் அருளியவர்கள் அதற்கிடையூறான பிறவிவினை பாசம் இவைகளையும், இவைகளை நீக்கும் உபாயங்களையும், நீங்கியார் எய்தும் பயனையும் முறையே கூறினார்கள். இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துவர்; பேரார்; நிலையாவரெனத் திருக்கடைக்காப்புச் செய்தருள்கின்றார்கள். சீர் ஊர் - சீகாழி. பாரூர் பாடல் - உலகமுழுதும் பரவிப் பண்படுத்தும் பாடல். இன்பம் பேரார் - பெற்ற இன்பத்தினின்றும் மீளார். பேராவின்பப் பெருவாழ்வெய்துவர் என்பதாம். கீழ்ப்பாடல்களும் ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்துபாடல்களும், தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், பாடற்பயனை ஒருபாடலும் உணர்த்துகின்றன.
சிற்பி