திருமுதுகுன்றம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்று மேத்துவீர்க் கென்று மின்பமே.

பொழிப்புரை :

இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறை வரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.

குறிப்புரை :

இன்றைக்கே முதுகுன்றை மலர்தூவி ஏத்தும் உங்க ளுக்கு என்றைக்கும் இன்பமாம் என்கின்றது. ஒருநாள் வழிபாட்டிற்கு நிலைத்த இன்பம் வரும் என்கின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

அத்தன் முதுகுன்றைப் பத்தி யாகிநீர்
நித்த மேத்துவீர்க் குய்த்தல் செல்வமே.

பொழிப்புரை :

நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.

குறிப்புரை :

உய்த்தல் செல்வமே - பொருந்துதல் செல்வமே யாகும் என்றது பொருள் பெருகும் என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வைய முமதாமே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.

குறிப்புரை :

ஐயன் - தலைவன். பொய்யில்லாதவருக்கு உலகமே உரிமையாம் என்பதை விளக்கியவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

ஈசன் முதுகுன்றை நேச மாகிநீர்
வாச மலர்தூவப் பாச வினைபோமே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.

குறிப்புரை :

நேசமாகி - அன்பாகி. பாசவினை - பாசமும் வினை யும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மணியார் முதுகுன்றைப் பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத் தணிவா ருலகிலே.

பொழிப்புரை :

அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர் கள், பிணிகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.

குறிப்புரை :

மணி - அழகு, முத்துமாம். தணிவார் - அமைதி உறுவார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மொய்யார் முதுகுன்றில் ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச் செய்யா ளணியாளே.

பொழிப்புரை :

அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.

குறிப்புரை :

மொய் - நெருக்கம். ஐயா! எனத் தோத்திரிக்க வல்ல வராய் இரவலர்க்கு இல்லை என்று பொய்யும் சொல்லாதவர்களுக்குச் செய்யவள் அணியள் ஆவாள் என்றவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

விடையான் முதுகுன்றை இடையா தேத்துவார்
படையா யினசூழ உடையா ருலகமே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை உடைய சிவ பிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர், படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவராவர்.

குறிப்புரை :

இடையாது - இடையீடுபடாது. உலகம் உடையார் - சக்கரவர்த்தியாவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைக் கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே.

பொழிப்புரை :

பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.

குறிப்புரை :

மொய்த்து - நெருங்கி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இருவ ரறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண் ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.

குறிப்புரை :

இருவர் - அயனும் மாலும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

தேர ரமணரும் சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை நீர்நின் றுள்குமே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற திருமுதுகுன்றத்தை அங்‌கு நின்று நீவீர் நினைந்து தியானிப்பீராக.

குறிப்புரை :

உள்கும் - தியானியுங்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்று முரைவல்லார் என்று முயர்வோரே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடை யவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

குறிப்புரை :

ஒன்றும் உரை - அவன் தான் என வேறின்றி ஒன்றிய உரை.
சிற்பி