திருவாலவாய்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நீல மாமிடற் றால வாயிலான்
பால தாயினார் ஞால மாள்வரே.

பொழிப்புரை :

நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.

குறிப்புரை :

பாலது ஆயினார் - சாமீப்யம் அடைந்தவர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

ஞால மேழுமாம் ஆல வாயிலார்
சீல மேசொலீர் காலன் வீடவே.

பொழிப்புரை :

எமபயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.

குறிப்புரை :

ஞாலம் ஏழுமாம் ஆலவாயில் - உலகேழும் உளதா தற்குக் காரணமாகிய துவாதசாந்தப் பெருவெளியாகிய ஆலவாயில். சீலம் - குணங்கள். வீட - அழிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

ஆல நீழலார் ஆல வாயிலார்
கால காலனார் பால தாமினே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.

குறிப்புரை :

ஆலநீழலார் - வடவால விருட்சத்தின் நிழலில் இருப்பவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

அந்த மில்புகழ் எந்தை யாலவாய்
பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே.

பொழிப்புரை :

ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவ பெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.

குறிப்புரை :

அந்தமில்புகழ் - எல்லையற்ற புகழ். பந்தியார் - இட மாகக்கொண்டவர்; பாசங்களால் கட்டுண்ணாதவர் என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

ஆட லேற்றினான் கூட லாலவாய்
பாடி யேமனம் நாடி வாழ்மினே.

பொழிப்புரை :

வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.

குறிப்புரை :

ஆடல் ஏறு - வெற்றியோடு கூடிய இடபம். நாடி - விரும்பி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

அண்ண லாலவாய் நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத் திண்ண மின்பமே.

பொழிப்புரை :

தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.

குறிப்புரை :

எண்ணி - தியானித்து. திண்ணம் - உறுதி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அம்பொ னாலவாய் நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

பொழிப்புரை :

அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.

குறிப்புரை :

நம்பனார் கழல் நம்பி - இதுவே எமக்கு இம்மையும் மறுமையும் இன்பமும் வீடும் என்று உறுதி கொண்டு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

அரக்க னார்வலி நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க் கிரக்க முண்மையே.

பொழிப்புரை :

அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.

குறிப்புரை :

நெருக்கன் - நெருக்கியவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அருவ னாலவாய் மருவி னான்றனை
இருவ ரேத்தநின் றுருவ மோங்குமே.

பொழிப்புரை :

அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

அருவன் - அருவமானவன். இருவர் - அயனும் மாலும்

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

ஆர நாகமாம் சீர னாலவாய்த்
தேர மண்செற்ற வீர னென்பரே.

பொழிப்புரை :

பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.

குறிப்புரை :

ஆரம் - மாலை. சீரன் - புகழுடையவன். தேரர் - புத்தர். அமண் - அமணர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

அடிக ளாலவாய்ப் படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ் செடிக ணீக்குமே.

பொழிப்புரை :

ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.

குறிப்புரை :

செடிகள் - வினைகள்.
சிற்பி