திருக்குற்றாலம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பானெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

பொழிப்புரை :

நம்மவர்களே! காணுந்தோறும் புதுமையைப் பயக்கும் குன்றங்களையும், நீண்டுயர்ந்த மலைச்சாரலையும், அழகிய வண்டுகள் யாழ்போல் ஒலிக்கும் வளர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் அடர்ந்த சோலைகளையும் உடைய குற்றாலம், இனிய பால் நெய் ஆகியவற்றோடு நீராடலை விரும்புபவனாய் விரிந்த கொன்றை மலர்களைச் சூடிய நம்பனாகிய சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும்.

குறிப்புரை :

திருக்குற்றாலம், பால்நெய்யாடிய பரமன் உறை கோயில் என்கின்றது. வம்பு - புதுமை. வம்பார்குன்றம் - பலமுறை கண்டார்க்கும் புதுமையையே பொருந்தும் மலை. நீடு உயர் சாரல் - காலத்தானும் இடத்தானும் நீடிக்கும் சாரல். கோல வண்டு - அழகிய வண்டு. பால் நெய்யோடு - பால் நெய் இவற்றோடு. அம் ஆடல் அமர்ந்தான் - நீராடலை விரும்பியவன். நமரங்காள் - நம்மவர்களே!

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடுந் நாள்விழமல்கு குற்றாலம்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகண்மேய நன்னகர்போலும் மடியீர்காள்.

பொழிப்புரை :

அடியவர்களே! திருநீறு பூசித் தொண்டர்கள் பின்னே வரவும், புகழ் சிறக்கவும், கொடிகளை ஏந்தியவர்களாய் அன்பர்கள் முன்னால் செல்லவும், நாள்தோறும் விழாக்கள் நிகழும் நகர் குற்றாலமாகும். இவ்வூர் மணம் கமழும் கொன்றை வில்வமாலை ஆகியவற்றை விரும்பும் அடிகளாகிய சிவபிரானார் எழுந்தருளிய நன்னகராகும்.

குறிப்புரை :

நீறணிந்து தொண்டர்கள் பின்செல்ல, நாள்விழா நிறைந்த குற்றாலம், கொன்றையையும் கூவிளத்தையும் விரும்பிய அடிகள் நகர் என்கின்றது. பொடி - விபூதி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக
நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள்.

பொழிப்புரை :

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதும் ஆகிய குற்றாலம், வில்லின் நாண் அசைய அதன்கண் தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினை மாசுகள் தீர அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

முல்லை, செண்பகம், வேங்கை இவற்றின்மீதேறி அரும்பீனும் குற்றாலமே திரிபுரம் எய்து அவர்கள் பாவம் தொலைத்து அருள்வழங்கும் இறைவன் நகர் என்கின்றது. கொல்லை - காடு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்தேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பு மாமையும்பூண்டோ ரனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

பொழிப்புரை :

மலையின் பக்கங்களில் எல்லாம் முளைத்த வாழை மரத்தின் கனிகளோடு தேன் ஒழுகும் பலாவின் பழங்களும் மாமரக் கிளைகளில் பழுத்த புத்தம் புதிய நறுங்கனிகளும் ஆய முக்கனிகளும் அவ்வம்மரங்களில் தொங்கும் குற்றால நகர், என்புமாலை, பாம்பு, ஆமை ஆகியவற்றைப் பூண்டு கையில் அனலை ஏந்தி விளங்கும் சிவபிரான் மேவிய நன்னகராகும்.

குறிப்புரை :

பக்கங்களில் வாழைக்கனியோடு பலாப்பழத்தேனும், மாம்பழமும் தொங்கும் குற்றாலம், அக்குமணிமுதலியவற்றையணிந்த நக்கன் நகர் என்கின்றது. பாய்கனி - பரவிய பழம். கொக்கு - மா. நக்கன் - நக்நன் - ஆடையில்லாதவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மலையார்சாரன் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையா னெயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.

பொழிப்புரை :

இறைவனுக்குக் கைத்தொண்டு புரியுமவர்களே! தன் குட்டிகளோடு மலையின் சாரலுக்கு வந்த மடமந்தி வாழைமரக் குலைகளில் பழுத்த இனிய கனிகளை வயிறு புடைக்கத் தின்னும் குற்றாலம், இலை வடிவமான சூலத்தை ஏந்திய கையினனும், மும் மதில்களையும் எய்து அழித்த வில்லாளனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

குட்டியுடன் வந்த தாய்க்குரங்கு வாழைப்பழத்தை உண்ணும் குற்றாலம், திரிபுரம் எரித்த சிவபெருமான் மேய நகர் என்கின்றது. மாந்தும் - தின்னும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மைம்மாநீலக் கண்ணியர்சாரன் மணிவாரிக்
கொய்ம்மாவேன லுண்கிளியோப்புங் குற்றாலம்
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.

பொழிப்புரை :

பெரியீரே! மிகக் கரிய பெரிய நீலமலர் போன்ற கண்களை உடைய குறமகளிர், மலைச்சாரல்களில் விளைந்த தினைப் புனங்களில் கொய்யத்தக்க பருவத்திலுள்ள பெரிய தினைக்கதிர்களை உண்ண வரும் கிளிகளை அங்குள்ள மணிகளை வாரி வீசியோட்டும் குற்றாலம், கைம்மா எனப்பெறும் யானையின் தோலைப் போர்த்த கடவுளும் எம் தலைவனுமாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

நீலமலர் போலுங் கண்ணையுடைய குறத்தியர் மாணிக்கத்தைக் கொண்டு கிளியோட்டுங் குற்றாலம், யானையுரி போர்த்த நாதன் நகர் என்கின்றது. மை மா நீலம் - மிகக்கரிய நீலமலர். கொய் மா ஏனல் - கொய்யும் பருவத்திலுள்ள பெரிய தினை. ஓப்பும் - ஓட்டும். கைம்மாவேழம் - கையையுடைய விலங்காகிய யானை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலம்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெம்
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.

பொழிப்புரை :

தொழுது வணங்கும் அடியவர்களே! நீலமலரும் நெய்தல் மலரும் பூத்த தண்ணியவான சுனைகள் சூழ்ந்ததும், நீண்டு வளர்ந்துள்ள சோலைகளில் அழகிய ஆண் மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு களித்தாடுவதுமாகிய குற்றாலம், காலனைக் காலால் கடிந்த கடவுளும் சூலத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய எம் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

சுனைசூழ்ந்த சோலையிலே மயில் பெடையோடு விளையாடும் குற்றாலம், காலகாலனாகிய சூலபாணியின் நகர் என்கின்றது. கோல மஞ்ஞை - அழகிய மயில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

போதும்பொன்னு முந்தியருவி புடைசூழக்
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலுந் நமரங்காள்.

பொழிப்புரை :

நம்மவர்களே! அருவிகள் மலர்களையும் பொன் னையும் உந்திவந்து இருபுறங்களிலும் குளிர்ந்த மழை போல் நுண்மையான துளிகளை உதிர்க்கும் குற்றாலம், தன் தகுதிக்கு மேலே செயற்பட்ட இலங்கை நகரின் புகழ் பெருக்கி ஆளும் அரசனாகிய இராவணனைத் தண்டித்த சிவபிரான் எழுந்தருளிய நல்ல நகராகும்.

குறிப்புரை :

பூக்களையும் பொன்னையும் உந்தி அருவி புடைசூழ நுண்துளி வீசுங்குற்றாலம், இலங்கைநாதனையடக்கிய இறைவன் நகர் என்கின்றது. மீதூர் எனவும் பாடம். கூதல் மாரி - குளிர்ந்த மழை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப வரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.

பொழிப்புரை :

பணியும் தொண்டர்களே! பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம், பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன் மேவியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

குரவம்பாவை பாம்பின் பல்லைப்போல் அரும்பீன்று மணங்கமழும் சோலை சூழ்ந்த குற்றாலம், அயனும் மாலும் அறியாத பரமன் நகர் என்கின்றது. முள் எயிறு - முள்போன்ற பல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்டேரு நின்றுண்சமணு மெடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலு மடியீர்காள்.

பொழிப்புரை :

அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.

குறிப்புரை :

வண்டு பெண் வண்டைப் புணர்ந்து செவ்வழிப் பண்ணைப் பாடும் குற்றாலம், தண்ணிய இறைவன் மேய நகர் என்கின்றது. எடுத்து ஆர்ப்ப அருந்தண்மேய - சமணர் புத்தர்கள் எடுத்து நுகர்தற்கரிய தண்மையான இறைவன் மேவிய. தண் - தண்மை; பண்பு தண்மையையுடைய இறைவனைக் காட்டி நின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.

பொழிப்புரை :

மாடவீதிகளையுடையதும் ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப்பதிக்கு மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ் ஞானசம்பந்தன் செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும் குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடப் பாவம் நீங்கும்.

குறிப்புரை :

குற்றாலத்தைப்பற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் வல்லார் பாவம் பறையும் என்கின்றது. கோடல் - செங்காந்தள். கொழுமுனை கூம்பும் - கொழுமையான சிகரம் கூம்பியுள்ள.
சிற்பி