சீகாழி


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.

பொழிப்புரை :

ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலிமிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.

குறிப்புரை :

கவிவாணர்க்கு ஒருநாளும் கரவாதபடி வழங்குங் கற்றவர் சேரும் காழியரசே! திரிபுரம் எரித்த செல்வா என்பவர்களே தத்துவ ஞானத்தில் தலையானவர்கள் என்கின்றது. உரவு - ஞானம். கரவா - மறைக்காத. கலி - ஒலி. அரவு ஆர் அரையா எனப்பிரிக்க. சரவா - அம்பை உடையவனே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான வடையாவே.

பொழிப்புரை :

சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும், தொங்குகின்ற வாயையும், முரண்படு தலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள் காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப்பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.

குறிப்புரை :

காழிமறையோனே ஐயா என்பவர்களுக்கு அல்லல்கள் அடையா என்கின்றது, யானையின் கையைப்போல வாழைக்குலை ஈனும் காழி எனவளம் உரைத்தவாறு. மும்மதம் - கபோலம், கரடம், கோசம் என்ற மூன்றிடத்திலும் பொருந்திய மதம். நால் வாய் - தொங்குகின்ற வாய். மை - விடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் னுதலிபங்கா வரனேயென்
றுளகப்பாடு மடியார்க்குறுநோ யடையாவே.

பொழிப்புரை :

முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப் பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.

குறிப்புரை :

காழியில் எழுந்தருளியிருக்கின்ற உமையொரு பாகனை அரனே என்று மனம் இளகப்பாடுகின்ற அடியார்கட்குத் துன்பம் சேரா என்கிறது. இளகக் கமலத்து ஈன்கள் இயங்கும் கழி - முறுக்கவிழ தாமரையிலிருந்து உண்டான கள் ஓடுகின்ற கழி. களகப்புரிசை - சுண்ணாம்புச் சாந்து பூசப்பெற்ற மதில். கவின் - அழகு. அளகம் - கூந்தல். நல்நுதலி - நல்ல நெற்றியையுடையாளாகிய பார்வதி. உள் அகப்பாடும் - மனம் பொருந்தப்பாடுகின்ற.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

எண்ணார்முத்த மீன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.

பொழிப்புரை :

அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.

குறிப்புரை :

காழியின்கண்ணுள்ள பெண்ணொரு பாகனே பித்தா என்பார்க்கு வினைகள் நண்ணா, இன்பம் நணுகும் என்கின்றது. எண்ணார் முத்தம் - எண்ணுதற்கரிய முத்தம். கமுகு முத்தம் போல அரும்பி, மரகதம்போல் காய்த்து, பவளம்போல் கனியும் காழி என வளங்கூறியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மழையார்சாரற் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா வுமையாள்கணவா வொளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.

பொழிப்புரை :

மேகங்கள் தங்கிய குடதிசை மலைச்சாரல்களி லிருந்து சிவந்த நிறமுடைய தண்ணீர் வந்து அடிகளை வருட, அதனால் மூங்கில் போன்று பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க சீகாழிப்பதியில் எழுந்தருளிய மானேந்திய கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.

குறிப்புரை :

மான் ஏந்தி, மங்கை கணவா, சங்கக் குழையா எனக் கூறவல்லவர்கள் குணமுடையராவர் என்கின்றது. மலைச் சாரலில் மழைபெய்து, செந்நீர் வந்து அடிவருட கரும்பு தூங்கும் சோலைக் காழி என வளங் கூறிற்று. கழையார் கரும்பு - கரும்பினுள் ஒரு சாதி. மூங்கிலை ஒத்த வளமான கரும்பெனினும் ஆம். உழை - மான். கரவா - கையை உடையவனே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

குறியார்திரைகள் வரைகணின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா வென்பாரை
அறியாவினைக ளருநோய்பாவம் மடையாவே.

பொழிப்புரை :

தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித்தண்டுகளின் சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம் மிக்க காழிப்பதியில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா.

குறிப்புரை :

கொன்றைச் சடையா, விடையா என்பாரை வினைகள் அறியவேமாட்டா; நோய்களும் பாவங்களும் அடையா என்கின்றது. மலைகளிலிருந்து குறித்தலை உடைய அலைகளோடு கூடிய கரையை யுடைய ஆறுகள், மிளகில் இருந்து கழிக்கப்பட்ட சம்பிரசத்தைக் கொடுக்கும் என காழிச் சிறப்பு தெரிவித்தது. வெறி - மணம். சம்பு - தண்டு இரசம் - சுவை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் றன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாவென்னத் தவமாமே.

பொழிப்புரை :

வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத் தவம் கைகூடும்.

குறிப்புரை :

இலங்கை மன்னர்க்கு அருள்செய்த அரசே! என்று சொல்லத் தவம் உண்டாம் என்கின்றது. ஓதத்தால் உந்தப்பட்டு மரக்கலங்கள் வயலைச் சாரும் காழி என்க. ஆர்கலி - கடல். கலங்கள் - தோணிகள். சலம் - கங்கை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவு மரசேயென்ன வினைபோமே.

பொழிப்புரை :

ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்து பரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் வணங்கும் அரசே என்று சொல்ல வினைபோம் என்கின்றது. பொய்கைகளிலுள்ள தாமரைகளில் அன்னம் நடமாடுகின்ற உப்பங் கழிகளைச் சுற்றிலும் மகளிர் மங்கல ஒலி நீங்காத காழி என்க. ஆவி - வாவி. காவிக் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய பெண்கள். பூவில் தோன்றும் புத்தேள் - பிரமன். மேவி - விரும்பி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

மலையார்மாட நீடுயரிஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தருமந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்று மறிவொண்ணா
நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே.

பொழிப்புரை :

மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.

குறிப்புரை :

காழித்தலைவா, புறச்சமயிகளால் அறியப்படாதவனே என்று சொல்ல, பழவினை நில்லா என்கின்றது. மலையார் மாடம் - மலையையொத்த மாடங்கள். நீடு உயர் இஞ்சி - நீண்ட உயர்ந்த மதில். மஞ்சு - மேகம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை யந்தமின்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேற் பழிபோமே.

பொழிப்புரை :

தேன் மணங்கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழுநீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக் கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப்பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞானசம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் காழி அடிகளைப் பாடிய பாடல் வல்லவர் பழி நீங்கும் என்கின்றது. தென்றல் செங்கழுநீர்ப் பூவில் அளைந்து முன்றிலில் உலாவும் காழி என்க. வடி - மா. கொங்கு - தேன். கடி கொள் - மணத்தைக் கொள்ளுகின்ற. படிகொள் பாடல் - ஒப்பினைக்கொண்ட பாடல்.
சிற்பி