திருப்புகலி


பண் :

பாடல் எண் : 1

ஆட லரவசைத்தா னருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா டமர்ந்தபிரான்
ஏடவிழ் மாமலையா ளொருபாக மமர்ந்தடியா ரேத்த
ஆடிய வெம்மிறையூர் புகலிப் பதியாமே.

பொழிப்புரை :

படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும், அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும், கொன்றை மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும், சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவனும், இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமயமலை அரசனின் புதல்வியாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவனும் ஆகிய எம் இறைவனது ஊர் புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

அரவணிந்து, வேதம் விரித்து, கொன்றை சூடி, சுடு காட்டில் அமர்ந்த பிரான் உமையொருபாகத்திருக்க ஆடிய இறைவன் ஊர் புகலிப்பதியாம் என்கின்றது. அசைத்தான் - கட்டியவன். ஏடு - இதழ். புகலி - சீகாழி.

பண் :

பாடல் எண் : 2

ஏல மலிகுழலா ரிசைபாடி யெழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.

பொழிப்புரை :

மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய மகளிர் காலையில் எழுந்து இசை பாடிக்கொண்டு இறையருள் பெறும் வேட்கையோடு சென்று சோலையின்கண் விளங்கும் சுனையில் துளைந்து நீராடித் துதி செய்ய, கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தை மூடி நின்று காலையை நல்ல மாலைப் போதாகச் செய்வது புகலிப்பதியாம். மகளிர் நீராடித்துதி செய்ய விளங்குவது புகலிப்பதி என முடிவு காண்க.

குறிப்புரை :

மகளிர் விடியலில் இசைபாடிக்கொண்டே எழுந்து சுனையில் நீராடித் தோத்திரிக்க, ஆலைப்புகைபோய் ஆகாயத்தை மறைத்து மாலைக்காலத்தைச் செய்யும் புகலி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. அண்டர் - தேவர்.

பண் :

பாடல் எண் : 3

ஆறணி செஞ்சடையா னழகார்புர மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை யெம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி யென்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.

பொழிப்புரை :

கங்கை சூடிய செஞ்சடையினை உடையவனும், அழகமைந்த முப்புரங்களைத் தீயால் வேவச் செய்தவனும், திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாகப் பூசியவனும், மேல்நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும், பருந்து சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று வந்து நிற்பவனும் வேறுபாடு உடையனவாய்ப் புனையப் பெற்ற கோலத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம் புகலியாகும்.

குறிப்புரை :

திரிபுரம்வேவ, திருநீற்றை அணியாகப்பூசிய இறைவன் விரும்பும் இடம் புகலி என்கின்றது. அணியாக - ஆபரணமாக. பாறு - பருந்து.

பண் :

பாடல் எண் : 4

வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கண் மூன்றுங்
கொள்ள வெரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி யழகார்விரைத் தாமரைமே லன்னம்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல் கரந்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரி மடுத்தவனும் ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில், சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய மணங்கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும் புகலிப் பகுதியாகும்.

குறிப்புரை :

கங்கையைச் சடையிற்கரந்தவன் திரிபுரம் தீமடுத்தவன் உறையும்கோயில் புகலிப்பதி என்கின்றது. விரவார் - பகைவர். அள்ளல் - சேறு. தாமரைமேல் அன்னமும் பறவைக் கூட்டங்களும் தங்கி எழும் புகலி என்க.

பண் :

பாடல் எண் : 5

சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடு மமரர்பிரா னழகாருமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட வினிதுறையும் புகலிப் பதியாமே.

பொழிப்புரை :

மதி சூடிய சடையின் மீது வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர் பிரானும், அழகிய உமையம்மையோடு உடனாய் வேட்டுவக் கோலத்தோடு தோன்றி அருச்சுனற்கு அருள்புரிய நடந்த வேறுபாடுடையவனும் ஆகிய சிவபிரானின் குணங்களைப் போற்றித் தொண்டர்கள் பாட அப்பெருமான் இனிதுறையும் பதிபுகலியாகும்.

குறிப்புரை :

மதிசூடிய சடைமேல் கொன்றை நெருங்க நடனம் ஆடும் பெருமானும், உமையோடும் வேடனாகி நடந்த இறைவனும் ஆகிய இவர் புகழைத் தொண்டர்கள் புகழ்ந்துபாட இனிதுறையும் பதிபுகலியாம் என்கின்றது.

பண் :

பாடல் எண் : 6

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரிவண்டினங்கள் [ வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தா லடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையின்கண் மலர்ந்த பூக்களின் தேனில் பரவிய வரி வண்டுகள் வந்து வளரும் இசையைப் பாட நடம் பயிலும் பெருமானது இடம், அந்திக் காலங்களில் செய்யும் சந்தியாவந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப் போற்றுவதற்கு நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர் விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

சோலையில் வண்டினங்கள் இசைபாட நடம்புரியும் நம்பன் இடம் புகலி என்கின்றது. மைந்து - இளமை. நந்து இசை - வளரும் இசைகளை. அந்திசெய் மந்திரம் - சந்தியா மந்திரம். பரவி - வணங்கி. அந்தி - காலை அந்தி, நண்பகல் அந்தி, மாலை அந்தி என்பன.

பண் :

பாடல் எண் : 7

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேற் றிங்கள்
கங்கை தனைக்கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னாற்றொழுவா ரவலம் மறியாரே.

பொழிப்புரை :

உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவனும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவனும், நீண்ட சடைமேல் திங்களையும் கங்கையையும் அணிந்தவனும், விடக் கறை பொருந்தியமிடற்றினனும் ஆகிய சிவபிரான் கருதி உறையும் இடமாகிய சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று தம் அழகிய கைகளைக் குவித்து வணங்குபவர் துன்பங்கள் நீங்கப்பெறுவர்.

குறிப்புரை :

உமாதேவியை ஒருபால் விரும்பிய மழுவாளனும், கங்கையைச் சடைமேல் மறைத்து வைத்த நீலகண்டனுமாகிய இறைவன் விரும்பிய புகலியைத் தொழுவார்கள் துன்பம் அறியார்கள் என்கின்றது. அவலம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 8

வில்லிய நுண்ணிடையா ளுமையாள் விருப்பனவ னண்ணும்
நல்லிட மென்றறியா னலியும் விறலரக்கன்
பல்லொடு தோணெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை யருள்புரிந்தா னுறையும் புகலியதே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையவளிடம் பெருவிருப்பினனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் என்று கருதாது கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும் தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த அளவில் அவன் தன்னைப் புகழ்ந்து பாடக்கேட்டுக் கையில் ஏந்திப் போர் செய்யும் வாளை விரைந்து அருள்புரிந்தவனாகிய சிவபிரான் உறையுமிடம் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

இறைவன் உமாதேவியோடு எழுந்தருளியிருக்கின்ற இடம் இது என்று அறியாதவனாய்த் தூக்கிய இராவணனை அடர்த்து அருள் புரிந்தான் உறையும் இடம் புகலி என்கின்றது. வில்லிய - ஒளிபொருந்திய, பாடலும் - சாமவேதத்தைப் பாடலும். ஒல்லை - விரைவு.

பண் :

பாடல் எண் : 9

தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம்
மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் புகழ்ந்தும் காண்டற்கு அரியவனாய் நின்ற உமைமணவாளனாம் சிவன் உறையுமிடம், மாதவி, வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகியன மலர்ந்து எங்கும் மணம் பரப்புமாறு பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடியும், ஓதியும் காணுதற்கரிய உமாபதி உறையும் இடம் புகலி என்கின்றது. தாது - மகரந்தம். மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ்.

பண் :

பாடல் எண் : 10

வெந்துவர் மேனியினார் விரிகோவண நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லா மவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தா னுறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

கொடிய மருதத்துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், பொருந்திய அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறும் ஞானத்தை ஒரு பொரு ளாகக்கொள்ளேல்; திரிபுரம் எரித்தான் உறையும் கோயில் புகலியாம் என்கின்றது. வெம் துவர் - கொடிய துவராடை. கோவணம் நீத்தார் - கோவணத்தையும் துறந்தவர்கள். அந்தர ஞானம் - இடையீடு உற்ற ஞானம்.

பண் :

பாடல் எண் : 11

வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்த மிகுவாசப்
போதனைப் போன்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் றமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகி லுறுநோய் களைவாரே.

பொழிப்புரை :

வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர் தொழுது ஏத்தவும், மிக்க மணமுடைய தாமரை மலர் மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும் மறையவர் போற்றவும், விளங்கும் புகலியுள் உறையும் சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய இத்தமிழ் மாலையை நாவினால் ஓதி வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.

குறிப்புரை :

வேதகீதம் உணர்ந்தவர்களாய்ப் பிரமனைப் போன்ற பிராமணர்கள் வாழ்கின்ற புகலியில் இருக்கும் சிவபெருமானைக் குறித்து, ஞானசம்பந்தன் சொன்ன மாலை ஓதவல்லார் நோய் நீங்குவார்கள் என்கின்றது. உணர்வாணர் - உணர்தலால் வாழ்பவர். வாசப் போதனை - வாசனை பொருந்திய தாமரைப் பூவில் இருக்கின்ற பிரமனை. உறுநோய் - மிக்க நோய்.
சிற்பி