திருவாரூர்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பாடல னான்மறையன் படிபட்ட கோலத்தன் றிங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும்மெரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடல னாதிரையன் ஆரூ ரமர்ந்தானே.

பொழிப்புரை :

திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக்கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம்புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.

குறிப்புரை :

இப்பாட்டு, தியாகேசப் பெருமானது உரை, கோலம், அணி, வீரம் முதலியவற்றை விளக்கியருளுகிறது. பாடலன் நான் மறையன் - பாடப்பெறுகின்ற நான்கு வேதங்களையுடையவன். அன் தவிர் வழிவந்த சாரியை. அன்றிப் பாடலன் நான்மறையன் எனப் பிரித்துத் தோத்திரத் தமிழ் பாடல்களையும் நான்மறைகளையும் உடையன் எனலுமாம். படிபட்ட கோலத்தன். எஞ்ஞான்றும் எவ்வகையிலும் ஒப்பில்லையாம்படியுயர்ந்த திருமேனியழகினை யுடையான். சூடலன் - சூடுதலையுடையவன். கூடலர் - பகைவர்; திரிபுராரிகள். கூர் எரி - மிக்க எரி. எல்லி - இரவு. ஆதிரையன் என்பது அப்பர் அடிகள் தெரிவித்த சிறப்பு திருவுள்ளத்து நிற்றலான் எழுந்தது. ஆரூரமர்ந்தான், பாடலன் முதல் ஆதிரையன் என்பது இறுதியாகக் கூட்டி முடிவு காண்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப் பணிதல் கருமமே.

பொழிப்புரை :

சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.

குறிப்புரை :

இப்பாட்டு இறைவனை இருபோதும் வணங்கல் கடமையென்றறிவிக்கின்றது. வண்டினங்கள் சுரும்போடிசைமுரல - வண்டின்சாதி நான்கில் வண்டும் சுரும்பும் தம்மினத்தோடு மாறியொலிக்க. வண்டுஞ் சுரும்பும் இசை முரல ஆலையின் வெம்புகை வானத்து முகில்தோயும் ஆரூர் என்றது, பரமேட்டி பாதம் பணிவார் மங்கள வாத்தியம் ஒலிக்க இன்பவுலகடைவார் இது உறுதி என்ற உள்ளுறை தோன்ற நிற்கின்றது. கருமம் - கடமை. பயின்று - விரும்பி. பாலொடு நெய் தயிரும் எனப் பஞ்சகவ்வியத்துள் மூன்றே கூறினார்கள்; இறைவன் ஆடுதற்குரியன இவையேயாதலின். கோசல கோமயம் நீக்கி மோரும் வெண்ணையும் கொள்வார் இனம்பற்றி அவ்விரண்டும் கொள்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

உள்ளமோ ரிச்சையினா லுகந்தேத்தித் தொழுமின்றொண்டீர் மெய்யே
கள்ள மொழிந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற்கரந்திட்ட வெள்ளேற் றான்மேய
அள்ள லகன்கழனி ஆரூர் அடைவோமே.

பொழிப்புரை :

தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.

குறிப்புரை :

சென்ற திருப்பாட்டில் பணிதல் கருமமே எனப் படர்க்கையாக உணர்த்தியவர்கள் இத்திருப்பாட்டில் தன்மையில் வைத்து இருபொழுதும் அடைவோம் என்கின்றார்கள். உள்ளமோர் இச்சையினால் - மனத்தான் ஓர்ந்து இதுவே உறுதியெனக் கடைப்பிடிக்கப்பெற்ற இச்சையால்; அன்றி மந்ததர பக்குவர்க்காயின், ஏதோ ஒரு விருப்பத்தால் மகிழ்ந்து எனக் கொள்க. ஓர்: அசையுமாம். வெள்ளம் ஓர் வார்சடைமேல் கரந்திட்ட - வானுலகன்றித் தரணி தனக்கிடமாதல் தகாது எனத்தருக்கிவந்த கங்கையை ஒரு சடைக்கும் காணாது என்னும்படித் தருக்கடக்கி, இருக்குமிடமும் தெரியாதபடி மறைத்த. கரந்திட்ட என்றது - மறைத்தவன் வேண்டும் போது வெளிப்படுத்தும் வன்மையும் உடையவன் என்பது தோன்ற நின்றது. வெள்ளேற்றான் - அறவடிவான வெள்ளிய இடபமுடையவன். தருக்கடக்கியதோடன்றித் தண்ணருளும் வழங்க இருக்கின்றான் என்பது சிந்தை கொள்ளக் கரந்திட்ட என்பதனையடுத்து வெள்ளேற்றான் என்பதனைத் தெரித்தார்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றா னரையின்
ஐந்தலை யாடரவ மசைத்தா னணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் னடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.

பொழிப்புரை :

அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.

குறிப்புரை :

கீழைத்திருப்பாட்டில் தொண்டர்க்கு உகந்தேத்தப் பணித்த பிள்ளையார், இத்திருப்பாட்டில் அடைந்தார் அல்லல்களைய ஆயுதந்தாங்கி இருக்கின்றார் என்பதையும், அடைந்தாரைப் பாதுகாத்த அடையாளமாகக் கண்டத்துக் கறையுடையர் என்பதையும் விளக்குகின்றார்கள். வெந்துறு வெண்மழு - அடியார்கள் வினை வெந்து போதற்குக் காரணமாகிய கறையற்ற மழு. மழுவும், வாளும் அடைந்தாரைக் காக்க ஏந்திய ஆயுதங்கள். மணிமிடற்றான் - நீலகண்டன்; இது கலங்கிய தேவரைக் காத்த அடையாளம். அடியார்களுடைய ஐம்பொறிகளையும் தத்தம் புலன் களில் செல்லவிடாது தடுத்தாட் கொள்ளும் தன்மையைப்போல, ஆடுந்தன்மை வாய்ந்த ஐந்தலைப் பாம்பைச் சேட்டியாதே திருவரையில் இறுகக் கட்டினான் என்பது. பாவம் நைந்தறும் - தீவினைகள் நைந்து இல்லையாம். அடிபரவுவார் சிந்தை தீவினையை மிகுவிக்காமையின் நல்லனவே வரும் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

வீடு பிறப்பெளிதா மதனை வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
ஆடு மவிர்சடையா னவன்மேய வாரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.

பொழிப்புரை :

வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.

குறிப்புரை :

முற்கூறியவாறு வினைகளும் நைந்து நல்லன வந்து அடைந்தவிடத்து வீடடைதல் எளிதாம் என்கின்றது இத்திருப்பாடல். வீடு பிறப்பு - வீட்டின்கண் பிறத்தல்; என்றது வீடடைதல் என்னுமளவிற்று. அதனை - உபாயத்தை. வெய்ய காட்டை இடமாகக் கொண்டு, வெய்யகனலைக் கையேந்தி ஆடுவானாதலின், பாடுவார் தன்மை நோக்காது, கரும நோக்கிக் கருணை செய்வான் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அங்கையி னானடியே பரவி யவன்மேய வாரூர்
தங்கையி னாற்றொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடைமுடிமேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமைமங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகிய கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.

குறிப்புரை :

இவ்வண்ணம் கடமைகளை விடாது செய்தவர் வீடு எய்துவார் ஆதலின், பிறவிக்கடலில் வினைச் சுழலில் தடுமாறார் என இப்பாடல் தெரிவிக்கின்றது. கிளி மழலை மங்கை - கிளி போன்ற மழலைச் சொல்லினையுடைய உமாதேவி. கங்கை கரந்தான், மங்கையோர் கூறுடையான் என்றது தருக்கி வந்த தாழ்குழலை மறைத்தடக்கி, அநுக்கிரக சக்தியைத் தன் இடப்பாகமாகக் கொண்டு இருக்கின்ற அருமைப்பாடு அறிவிக்கின்றது. மறையான் - விதிமுறையானும் விலக்குமுறையானும் அறிவுறுக்கும் ஆணை மொழியாகிய வேதங்களையுடையவன். பரவித் தொழுவார் தடுமாற்று - துணிவு பெறாத தொல்லை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேற் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியா னவனெம் பெருமானே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.

குறிப்புரை :

இங்ஙனம், ஆன்மாக்களின் தடுமாற்றறுப்பவரே தலைவர்; அவருடைய திருமேனியமைப்பும் இடமும் இத்தகைய என்பன முதலியவற்றை இப்பாடலில் அறிவிக்கின்றார். நிரம்பாமதி - இறைவன் முடியிலிருந்தும் நிரம்பாத பிள்ளைமதி. நிரம்பா மதிசூடி, நீண்ட ஆறு அணிசடையன் என்றது குறைப் பொருளையும், நிறைப்பொருளையும் ஒப்ப நோக்குவான் என்பது விளக்கிற்று. சேறணி மாமலர் - சேற்றிற் பிறந்து அழகு செய்யும் தாமரை. சேறணி மாமலர்மேற் பிரமன் என, பிரமன் உந்தியந் தாமரையிலிருந்தும் கூறியது, தாமரை என்ற பொதுமை நோக்கி. `புற்றில்வாளரவன்` (திருக்கோவை) என்று மணிவாசகர் கூறியருளியது போல. பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் என்றது மகன்றலையறுக்கவும் ஒரு கரத்துக் கொடியாக இருந்த இடபவடிவினனாகிய திருமால், பார்த்துக்கொண்டேயிருப்பதைத் தவிரத் தவிர்க்க முடியாத வண்ணம் தலைமைபடைத்தவன்; அவனே எம் தலைவன் எனத் தலைவனின் தனிச்சிறப்பினை விளக்கியவாறு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த
நல்லிய னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

பொழிப்புரை :

வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற் குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.

குறிப்புரை :

அத்தலைவன், அடைவார் எளிதில் அடைந்துய்ய அல்லியங்கோதையுடன் அருள்மூர்த்தியாய் ஆரூரில் அமர்ந்திருக்கின்றான் என இப்பாடலில் இடம் குறிக்கின்றார். வல்லியம் - புலி. நல்லியல் வாய்த்த நான்முகத்தோன் - தான் பிரமம் என்ற தன்மை யொழிந்து தலைவனையுணர்தலாகிய நல்லியல்பு வாய்க்கப் பெற்ற பிரமன். நல்லியல் வாய்க்கப்பெற்றமையாலேயே கபாலம் இறைவன் கரத்து ஏற்குங்கலமாக விளங்கிற்று. நறவு - அமுதம். விஷ்ணு மார்பிலுள்ளது. அல்லியங்கோதை - பூங்கோயில் பக்கத்துக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் நீலோத்பலாம்பிகை. ஆகம் - திருமேனி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

செந்துவ ராடையினா ருடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம் மெரியூட்டி யாரூர்த்
தந்திர மாவுடையா னவனெந் தலைமையனே.

பொழிப்புரை :

செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப்பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

புண்ணியனைத் தொழும் புண்ணியம் பெற்ற நீங்கள், புறச்சமயிகள் கூறும் இந்திரஞாலம் நீங்கி, இன்பம் பெற வேண்டின், ஆரூருடையானைத் தலைவனாக அறியுங்கள் என்று அறிவித்தருள்கின்றார். செந்துவர் ஆடை - காவியாடை. சைன சந்நியாசிகளில் காவியாடையுடுத்தியவரும், திகம்பர சந்நியாசிகளும் என இருவகையார். இந்திரஞாலம் - இந்திரஞாலமான மாயப்பேச்சுக்கள். அந்தரம் - ஆகாயம். அரணம் - கோட்டை. ஆரூர் தம் திரமாவுடையான் - ஆரூரைத் தமது நிலைக்களனாகக் கொண்டவன். திரம் ஸ்திரம் என்பதன் திரிபு. சிவபூஜா துரந்தரர்களாகிய திரிபுராதிகள் தம் நிலை கெட்டது புத்தாவதாரங்கொண்ட திருமாலின் இந்திர ஜாலப் பேச்சால். திருமால் உபதேசம் மனத்தைக் கெடுத்தமையும், அதனால் அசுரர்கள் அழிந்தமையும் ஆகிய வரலாற்றை நினைப்பூட்டுவது இப்பகுதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.

பொழிப்புரை :

தூயதான நீர்வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.

குறிப்புரை :

அத்தகைய தலைவனாகிய ஆரூரமர்ந்தானை மனங் கொண்ட மகிழ்ச்சியால் எழுந்த பாடல்கள் பத்தினையும் பாடுவாரும் கேட்பாரும் துன்ப நீக்கம் பெறுவர் என்றுணர்த்துகிறது திருக்கடைக்காப்பாகிய இறுதிப் பாடல். நல்லபுனல் - கழுமலவள நதி. வழிபாடு பத்தும் - இப்பத்துப் பாடல்களுமே வழிபாடு ஆகும் என்பதாம். வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் - சொல்லும் வாயும், கேட்கும் செவியும், இவற்றை இயக்கும் உள்ளமும் பிறவழி போகாது பொருந்தச் சொல்லுதலும், கேட்டலும். துன்பந்துடைப்பார் - ஈரந் துடைத்தார் என்பது போலத் துன்பம் இருந்த சுவடுந் தெரியாதபடித் துடைப்பார் என்பதாம்.
சிற்பி