திருப்பாதாளீச்சரம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையா ளொருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

இப்பதிகம் முழுதும் செஞ்சடைமேல், பிறை, ஊமத்தம், கொன்றை இவற்றையணிந்தவனும், கங்கையணிந்து உமையையொருபாகத் திருந்தருளச் செய்தவனும் ஆகிய இறைவன் உறைகோயில் திருப்பாதாளீச்சரம் என்கின்றது. ஒவ்வொரு பாடலிலும் தலத்தின் திருப்பெயருக்கேற்பப் பாம்பணிந்தமை பேசப்படுதல் காண்க. விளங் கும்மதி - இறைவன் திருமுடிமேல் இருத்தலின் விளக்கம்பெற்ற பிறை. `அன்னம் அனநடையாள்` அன்ன என்பது அன எனல் தொகுத்தல் விகாரம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதினல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக வனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னாலினியா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித்தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

நிரம்பாமதி - குறைப்பிறை. வெள்ளைத்தோடு - முத்துத் தோடு. குழை - காதணியாகிய குண்டலம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்றெரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயற் றூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

வான்மதி - வானிலுள்ள பிறை. சாமம் போக - உரிய காலங்கழிய. தோகை மா மயில் - ஆண்மயில்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவனும், அழகிய இனிய சொற்களைப் பேசும் உமைநங்கையை ஒரு பாகமாக உடையவனும், வேதங்களைப் பாடி மகிழ் பவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில் விளங்கும் ஒளியினால் தாமரைகள் எழுந்து மலரும் வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

செங்கயல்மீன்கள் புரளும் வயலில் தாமரை மலரும் பாதாளம் என்கின்றது, செறு - வயல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

பேய்கள் பலவும் உடன் சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

பேய்கள் உடன்விளங்க, இடுகாட்டை நாடகமேடை யாக எண்ணி, மான், மழு முதலியன தாங்கி ஆடும் பெருமான் உறைவிடம் பாதாளீச்சரம் என்கின்றது. உன்னிநின்று, திகழ்வித்து, சேர உடையான் உறைகோயில் பாதாள் எனக்கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னன்று
விண்ணியன் மாமதியும் முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக வாடும்
பண்ணியல் பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடை முடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமைமங்கை பொருந்திய திரு மேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

கண்ணமர்நெற்றி - கண்ணோடு விளங்குகின்ற நெற் றியை யுடையவன் . நன்று விண் இயல் மாமதி - நன்றாக விண்ணில் இயங்குகின்ற பெரிய பிறைச்சந்திரன் .

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன் னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை வேதநான் கும்மவை
பண்டிசை பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும், பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த வனும், நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசைமரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

விண்டு - முறுக்கவிழ்ந்து. வன்னி - வன்னியிலை. நகும் - மலரும். விண்டவர் - பகைவர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை மறுகவன்று கையால்
தொல்லை மலையெடுத்த வரக்கன்றலை தோணெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக் கணிந்தோன்
பல்லிசை பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

செறிந்த நுண்மையான இடையினை உடைய உமை யம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவ னும், குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

இராவணன் தோள் நெரித்தது; இறைவற்கு எழுந்த சீற் றம் காரணம் அன்று; உமாதேவி நடுங்க, அந்நடுக்கந்தீரவே விரலூன்றி மலையை நிலைக்கச்செய்தார்; அது இராவணற்கு இன்னலாயிற்று என்ற கருத்து ஓர்க. கொல்லைவிடை - முல்லை நிலத்து இடபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தாமரை மேலயனும் மரியுந்தம தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலா ளுமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.

குறிப்புரை :

ஆள்வினையால் - முயற்சியால். செயலற்ற தன்மை யில் சிந்திக்கவேண்டிய சிவத்தைச் செய்வினையாற் காணமுற்பட்ட அறிவீனத்தை விளக்கியவாறு. காமனை வீடுவித்தான் கழல் - காமனை எரித்த பெருமான் திருவடி. காமனும் தருக்கி வருவானாயினும் அவன் காண இருந்தமையும் அயனும் மாலும் காணாதிருந்தமைக்கும் ஏது ஒன்று உண்டு. இவர்கள் தாம் பெரியர் என்னுந் தருக்கால் முனைத்து வந்தவர்கள்; காமன் தேவகாரியம் என்றும், இந்திரன் சாபத்தால் இறப்பதைக் காட்டிலும்; சிவன் கோபத்தால் இறப்பதுமேல் என்றும் வந்தவன்; ஆதலால் இவனுக்குக் கட்புலனானார் என்பது சிந்தனைக் குரியது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்
றால விடநுகர்ந்தா னவன் றன்னடி யேபரவி
மாலையில் வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ்மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகாலவிடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில் வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக்கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

பாலை யாழ்ப் பாட்டு உகந்தான் - பாலைப்பண்ணில் விருப்புடையான் .

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே.

பொழிப்புரை :

பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தன்புகழ் உல கெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந் தன் பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.

குறிப்புரை :

இப்பதிகம் வல்லார் தேவராய் வானத்திருப்பார் என் கின்றது.
சிற்பி