திருச்சிரபுரம்


பண் :

பாடல் எண் : 1

வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே.

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமை யம்மையின் கணவனும், கங்கையை அணிந்த சடைமுடியை உடைய நிமலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்களை உடைய சிரபுரம் ஆகும்.

குறிப்புரை :

இப்பதிகம் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் பெருமான் நகரம் சிரபுரமாகிய சீகாழி என்கின்றது. வார் - கச்சு.

பண் :

பாடல் எண் : 2

அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயன் மிளிர்வயற் சிரபுரமே.

பொழிப்புரை :

ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும், திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியினனும் ஆகிய சிவபெருமான் உமைமங்கையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளி விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்.

குறிப்புரை :

அருமறை - எக்காலத்தும் உணரும் அருமைப் பாட்டினையுடைய வேதம்.

பண் :

பாடல் எண் : 3

பரிந்தவன் பன்முடி யமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

பல்வகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பரிவுடையவனாகி வானவெளியில் திரிந்த அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொல்லும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

பரிந்தவன் - அன்புகூர்ந்தவன். வரிந்த - கட்டிய. அடு சரத்தை - கொல்லும் பாணத்தை. தெரிந்தவன் - ஆராய்ந்தவன்.

பண் :

பாடல் எண் : 4

நீறணி மேனிய னீண்மதியோ
டாறணி சடையின னணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயற் சிரபுரமே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வளைவாக நீண்ட பிறைமதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான், அழகிய அணிகலன்களைப் பூண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்.

குறிப்புரை :

அணியிழை - அணிந்த இழையினையுடையாளாகிய உமை.

பண் :

பாடல் எண் : 5

அருந்திற லவுணர்க ளரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.

பொழிப்புரை :

வெல்லுதற்கரிய வலிமையினையுடைய அசுரர்களின் முப்புரங்களும் அழியுமாறு கணையைத் தொடுத்து எரித்த சங்கரனாகிய சிவபெருமானது ஊர், குருந்தமரம் கொடிகளாகப் படரும் மாதவி எனும் குருக்கத்தி ஆகியன நிறைந்த அழகிய புதர்களால் சூழப் பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.

குறிப்புரை :

அருந்திறல் - பிறரால் வெல்லுதற்கு அரிய வலிமை. சரம் துரந்து - அம்பைச் செலுத்தி. சங்கரன் - சுகத்தைச் செய்பவன். குருந்து - குருந்தமரம். மாதவி - குருக்கத்தி, புறவு - காடு.

பண் :

பாடல் எண் : 6

கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

கலைகளாக விளங்குபவனும், வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண் முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

கலையவன் - கல்வியினால் எய்தும் பயனாகிய ஞானம் ஆயவன், மதில் அழித்த கொலையவன் எனக்கூட்டுக.

பண் :

பாடல் எண் : 7

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.

பொழிப்புரை :

வானத்தில் உலவும் பிறைமதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி, அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம், காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.

குறிப்புரை :

தானவர் - அசுரர். கான் - காடு.

பண் :

பாடல் எண் : 8

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

தன்னோடு உடன்பாடு இல்லாது மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும், கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள் ஆகியவற்றை நெரித்தவனும், மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவ பிரானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

மறுத்தவர் - பகைவர். கறுத்தவன் - சினந்தவன்.

பண் :

பாடல் எண் : 9

வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே.

பொழிப்புரை :

செவ்வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தன் திருவடிகளைத் தொழுது நிற்குமாறு கனல் உருவாய் விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுறும் சிரபுர வளநகராகும்.

குறிப்புரை :

வண்ணநன்மலர் - தாமரைமலர். திண்ணநன்மதில் - உறுதியாகிய மதில்.

பண் :

பாடல் எண் : 10

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுர மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

வெற்று அரை உழல்பவர் - ஆடையில்லாத இடை யோடு திரிகின்றவர்கள். அறவுரை கற்றிலர் எனமாறுக. புறன் உரைக்க - பொருந்தாத புறம்பான உரைகளைச் சொல்ல. பற்றலர் - பகைவர்.

பண் :

பாடல் எண் : 11

அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.

பொழிப்புரை :

அரிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தன் அழகிய தண்ணளியை உடைய சிரபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர்.

குறிப்புரை :

தேசினர் - ஒளியையுடையவர்கள்.
சிற்பி