திருக்கடைமுடி


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

அருத்தனை யறவனை யமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவின னும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெரு மான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.

குறிப்புரை :

நீர் பொருளாயுள்ளவனும், அறவடிவானவனும், அமு தனுமாகிய இறைவன் இடம் வினவுவீராயின், அது கடைமுடி என்கின்றது. அருத்தன் - பொருள்வடிவானவன். விருத்தன் - மூத்தவன். அருத் தனை...... உலகம் ஏத்தும் ஒருத்தனை வினவுதிரேல் கருத்தவன் அல்லது வளநகர் கடைமுடியே எனக் கூட்டுக. இதன் கருத்து அத்தகைய ஒருவனை வினவுதிராயின் அவன் தியானிப்பார் கருத்தினை இடமாகக் கொண்டவன். அன்றியும், கடைமுடியும் இடமாக்கியவன் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியத ளடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந் திய தெளிந்த சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.

குறிப்புரை :

கங்கையையும் பிறையையும் அணிந்த திருமுடியை யும், புலித்தோலை உடுத்த அரையையும் உடைய அடிகளிடம் கடை முடி என்கின்றது. திரை - அலை. ஆகுபெயரால் கங்கையை உணர்த்தியது. அதள் - தோல்.

பண் :

பாடல் எண் : 3

ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.

குறிப்புரை :

இளம்பிறை முதலியவற்றையுடைய இறைவனைத் தொழ, மலர்மணங்கமழும் திருவடியையுடையவன் நகர் கடைமுடி (அடைவோம்) என்கின்றது. இறைஞ்சி என்ற செய்து என் வினையெச்சத்தைச் செயவென் எச்சமாக மாற்றுக. இறைஞ்சக் கமழும் காலன நகர் எனமுடிக்க.

பண் :

பாடல் எண் : 4

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே.

பொழிப்புரை :

கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம்பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

கொன்றையையணிந்த நீலகண்டனும், அரவையும், மானையும், மழுவையும் கையில் அணிந்தவனும் ஆகிய இறைவன் இடம் கடைமுடி என்கின்றது. கொய் - கொய்யப்பெற்ற. மை - விடம். பை - படம்.

பண் :

பாடல் எண் : 5

மறையவ னுலகவன் மாயமவன்
பிறையவன் புனலவ னனலுமவன்
இறையவ னெனவுல கேத்துங்கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

`எல்லாமாயிருப்பவன் இறையவன்` என உலகேத்துங் கண்டங்கரியவன் இடம் கடைமுடி என்கின்றது. மறையவன் - ஒலி வடிவானவன். உலகவன் - பொருட் பிரபஞ்சவடிவானவன். மாயம் அவன் - இவையிரண்டிற்கும் அடியாகிய சுத்தமும் அசுத்தமும் ஆனமாயையும் அவன். இறையவன் - எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுந்தங்குதலையுடையவன். கறை - விடம்.

பண் :

பாடல் எண் : 6

படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறைமதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

உமாதேவியையொருபாகம் வைத்து, பிறையைச் சூடும் முடியையுடைய கடவுள்நகர் இது என்கின்றது. பட அரவு ஏர் - அரவின் படத்தையொத்த. மடவரலாள் - உமாதேவி. குட திசைமதி - இளம்பிறை. பிறை மேற்கின்கண்ணே தோன்றுமாதலின் இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழ லடிகளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.

குறிப்புரை :

மார்பிற்பூணூலையும், திருவடியிற்கழலையும் பூண்ட அடிகளிடம் இது என்கின்றது. பொடி - விபூதி. கொடிபுல்கு மலர் - முல்லைக்கொடியில் பொருந்தியுள்ள மலர். கடி - காவல்.

பண் :

பாடல் எண் : 8

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த வடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

இராவணன் வலியடக்கியாட்கொண்ட இறைவன் இடம் இது என்கின்றது. நோதல்செய்து - வருத்தி. நோக்கு அழிய - திருவருட்பார்வைகெட, சாதல்செய்தவன் - அழிந்துபட்டவனாகிய இராவணன்.

பண் :

பாடல் எண் : 9

அடிமுடி காண்கில ரோரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரனிடம்
கடைமுடியதனயல் காவிரியே.

பொழிப்புரை :

அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப்போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.

குறிப்புரை :

அடிமுடியறியாத அயனும் மாலும் அருள் என்று போற்றிசைப்ப, கங்கைசூடிய பெருமானிடம் இது என்கின்றது. புடைபுல்கி - அணுகி.

பண் :

பாடல் எண் : 10

மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடி யாகும்.

குறிப்புரை :

முழுகுதலும், மயிர்பறித்தலும் ஆகிய இந்த விரத ஒழுக்கங்கள் யாவும் வெறும் மாயம்; எண்ணும்பொழுது இவை இன்பமாகா; உமாதேவியைப் பாகம்வைத்த பெருமானது இடம் இது என்கின்றது. ஒள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றி.

பண் :

பாடல் எண் : 11

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல வின்பமாமே.

பொழிப்புரை :

பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

குறிப்புரை :

காவிரியின் நீர்வளம்மிகுந்த கடைமுடியின்கண் எழுந் தருளியுள்ள சிவனடியைப்பற்றித் திருஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழைச்சொல்ல இன்பமாம் என்கின்றது. பொருபுனல் - கரையை மோதுகின்ற நீர். பொன்திகழ் காவிரி - பொன்னியெனப் பெயர் தாங்கித் திகழ்கின்ற காவிரி. பொன் - அழகுமாம். சீர் சென்றடை சிவன் எனக் கூட்டுக. உரைப்பார் உரைக்கும் புகழ்களை உடையான் இவனென உணராதே உரைப்பினும், சென்றடைவது சிவனையே என்பதாம். சீர் சென்றடை கடைமுடி எனலுமாம்.
சிற்பி