திருவல்லம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

முப்புரம் எரித்தவன். சடையிற் கங்கையைத் தரித்தவன். வேதங்களை விரித்தவன். வேறு வேறு தெரித்தவன் இடம் திருவல்லம் என்கின்றது. விரித்தவன் - பரப்பியவன். தெரித்தவன் - பொருளுணர்த்தியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் றூமதி சூடியெல்லாம்
ஆயவ னமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக ஆனவனும், போகிகள் ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

உலகுக்குத் தாயானவன், ஒப்பில்லாத் தூயவன், தேவர் கட்கும் முனிவர்கட்கும் சேயவன் திருத்தலம் திருவல்லம் என்கின்றது. அமரர் முனிவர் இருவரும் போகிகளாயும், மனன சீலர்களாயும் இருத்தலின் அவர்களுக்குச் சேயவனானான் என்று அருளினர். இவர்களுக்குச் சேயவன் எனவே ஞானிகட்கு மிக அண்ணியன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் றலையையன்று
சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண் கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

காமனையெரித்தவன், யானையையுரித்தவன், பிரமனைச் சிரங்கொய்தவன் இடம் இது என்கின்றது. பண்பு - அழகு. போதகம் - யானைக் கன்று. உரிவை - தோல். ஆர்த்தவன் - ஆரவாரம் செய்த பிரமன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

தம் அடியை வணங்குவாரைத் திருமகள் வணங்க வைத்து, உலகம் உய்யப் பெருமழை பெய்யச் செய்தவன் உறைவிடம் வல்லம் என்கின்றது. கொய்த அம் மலரடி - கொய்த அழகிய மலரையணிந்த திருவடி. கூடுவார்தம்மை - தியானிப்பவர்களை. தவழ் திரு மகள் - நிலையாமல் தவழ்ந்துகொண்டே யிருக்கின்ற இலட்சுமியை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவ னேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

சார்ந்தவர்க்கு இன்ப நல்கி, பார்வதியோடும் இருப்பவனும், தெளிந்தாரும் தேடுவாரும் தேடச்செய்தே அவர்களிடம் சேர்ந்திருப்பவனும் ஆகிய சிவன் இடம் இது என்கின்றது. சார்ந்தவர்க்கு - திருவடியே சரண் என்று சார்ந்த ஞானிகட்கு. நேர்ந்தவன் - திருவுளம் பற்றியவன்; தேர்ந்த ஞானியரையும் தேடச்செய்து அவர்கட்குப் பாலினெய்போலவும் தேடுவாரைத் தேடச்செய்து விறகின் தீப்போலவும் தோன்றி நிற்பவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும், விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

காலனை உதைத்தும், மார்க்கண்டர்க்கு உண்மைப் பொருளாய் எதிர் நின்றும், தக்கன் யாகத்தினைத் தகர்த்தும் நின்ற இறைவன் இடம் இது என்கின்றது. மாமுனி - மார்க்கண்டர். விதிர்த்து - நடுங்கி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும், அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

இராவணன் வலியடக்கிய பாதத்தைத் தேடுவார் தேடச் செய்தே எமக்கு எளிமையாகத் திகழ்ந்தவன் நகர் இது என்கின்றது. இகழ்ந்து அருவரையினை - இது என் வலிக்கு எம் மாத்திரம் என்று இகழ்ந்து அரிய கயிலையை. நிகழ்ந்தவர் - பாதத்தை நிகழ்பொருளாகக் கண்டவர்கள். நேடுவார் - தேடுபவர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும், அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.

குறிப்புரை :

பெரியவன், சிறியவர்கள் தியானித்தற்கு அரியவன், வேதமும் அங்கமும் ஆனான், அயனும் மாலுங்காண ஒண்ணாத தெரியவன் நகர் இது என்கின்றது. தெரியவன் - தெரிய நிற்பவன். முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி நிற்பவன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய வறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன் களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

சமணரும், புத்தரும் அறமிலா உரை பேசாவண்ணம் ஐம்புலன்களையும் வென்றவன் நகர் வல்லம் என்கின்றது. அன்றிய - மாறுபட்ட. அறம் குன்றிய உரை எனமாறுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவ ரீசன்பொற் பாதங்களே.

பொழிப்புரை :

கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமான் திருவல்லத்தைக் கண்டு சொன்ன குற்றம்இல் செந்தமிழ்ப் பாடலாகிய இவற்றைக் கூறவல்லவர் ஈசன் பாதங்களைப் பற்றுவர் என்கின்றது. கண்டு சென்று சொன்ன என்பதால் இப்பதிகம் திருவல்லத்தை வழிபட்டுப்போன பின்பு சிவானந்தாநுபவம் சிந்தையில் நிறைய ஆக்கப்பெற்றதாகும் என்பது அறியப்பெறும்.
சிற்பி